privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்மதச்சார்பற்ற அறிஞர்களின் நரியை பரியாக்கும் முயற்சி

மதச்சார்பற்ற அறிஞர்களின் நரியை பரியாக்கும் முயற்சி

-

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 5

“ஒரு நாடு, ஒரு மக்கள் ,ஒரு சட்டம்” என்ற முழக்கத்தின் கீழ் இந்துச் சட்டத்தையே அனைவருக்குமான சிவில் சட்டமாகத் திணிக்க பாரதீய ஜனதா முயற்சிக்கின்றது. காங்கிரசு மற்றும் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த கட்சிகள் அனைத்தும் இந்திய மதச் சார்பின்மையின் பெயரால் பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கின்றன.

இவர்கள் ஒருபுறம் இருக்க, வலது இடது போலி கம்யூனிஸ்டுகள், இசுலாமியப் பழமைவாதத்தை எதிர்க்கும் சீர்திருத்தவாதிகள், பெண்ணுரிமை இயக்கங்கள், சில புரட்சிகர இயக்கங்கள் மற்றும் பல அறிவு ஜீவி்கள் போன்றோர், பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தில் தெரிவிக்கும் கருத்துகள் நமது பரிசீலனைக்கு உரியவை.

  • சென்ற டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (மார்க்சிஸ்டு கட்சியுடன் இணைந்தது ) மாநாடு, பொது சிவில் சட்டம் குறித்த தனது கருத்தைத் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. அதற்கு நம்பூதிரிபாடு ஒரு பொழிப்புரை எழுதியுள்ளார்.
    “ஒரு பொது சிவில் சட்டத்தை உடனே நிறைவேற்றுவதோ அல்லது ஷரியத் சட்டத்தை அப்படியே பாதுகாப்பதோ இரண்டுமே இந்தியப் பெண்களின் உடனடித் தேவை அல்ல; மாறாக, ஒவ்வொரு மதத்தின் தனிநபர் சட்டமும், ‘ஜனநாயகம், சமூக நீதி, ஆண்- பெண் சமத்துவம்’ போன்ற நவீனக் கொள்கைகளுக்கு எதிராகப் பெண்களின் உரிமையில் எந்த அளவுக்குக் குறிக்கிடுகின்றன என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும். ஏதேனும் ஒரு மதத்தின் தனிநபர் சட்டம் அவ்வாறு இந்தியப் பெண்ணின் உரிமையில் குறுக்கிட்டால் அது பொருத்தமான வகையில் திருத்தப்படவேண்டும்.”
    அதாவது மதச்சார்பற்ற உரிமையியல் சட்டம் இப்போது தேவையில்லை. மதச்சட்டங்களையே சீர்திருத்தி ஜனநாயகத்தன்மை கொண்டவையாக மாற்றினால் போதும் என்கிறார் நம்பூதிரிபாடு.
  • மா.லெ (செங்கொடி) குழுவின் பத்திரிகையான ‘ரெட் ஸ்டார்’ நம்பூதிரியின் நிலைப்பாட்டை வேறு வார்த்தைகளில் கூறுகிறது.
    “ஒருபடித்தான உரிமையியல் சட்டம் மொத்த சமூக மாற்ற நிகழ்வுப் போக்குடன் உருவாக்கப்பட வேண்டிய ஒன்று. அதை மட்டும் தனியாக உருவாக்குவதோ மேலிருந்து திணிப்பதோ முடியாது. ஒவ்வொரு மதத்தின் தனிநபர் சட்டங்களுக்குள்ளும் ஏற்படுகின்ற மாற்றத்தினூடாகவும், சமூகத்தில் நடைபெறும் முற்போக்கான போராட்டங்களின் விளைவாகத் தோன்றும் அந்தந்த மதத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் போராட்டங்களினூடாகவும் அது உருவாகி நடை முறைக்கு வருகிறது.”
  • இசுலாமியப் பழமைவாதிகளுக்கெதிராகப் போராடி வரும் அஸ்கார் அலி எஞ்சினியர் என்ற அறிஞரும் எந்தவொரு சிவில் சட்டமும் மேலிருந்து திணிக்கப்படுவதை எதிர்க்கிறார். ஒவ்வொரு மதத்தின் தனிநபர் சட்டமும் அம்மதத்தைச் சேர்ந்தவர்களது போராட்டத்தால் ஜனநாயகப் படுத்தப்படவேண்டும் என்ற கருத்தையே முன் வைக்கிறார். சிவில் வாழ்க்கையின் மீது மதம் செலுத்தும் அதிகாரத்தை மறுக்காமல் மதக் கோட்பாடுகளின் துணைகொண்டே அவற்றை ஜனநாயகப்படுத்த இயலும் என்று கருதுகிறார்.
    மேற்குலகின் கோட்பாடான மதச்சார்பின்மையை நமது நாட்டுக்கு அப்படியே பொருத்தவியலாது என்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நமது மதச் சார்பின்மையின் ரகசியம் என்றும் “பின் – நவீனத்துவ காலத்தில், இன்று மேற்குலகம் புரிந்து கொண்டுள்ள உண்மையை இந்தியர்களாகிய நாம் பல நூற்றாண்டுகளாகவே அறிந்திருக்கிறோம்” என்றும் கூறுகிறார். (இந்து 11.6.96)
  • மது கிஷ்வர்
    பெண்ணியவாதி மது கிஷ்வர்

    எந்தவொரு சமூகமும் கட்டாயத்தின் கீழ் தங்கள் மரபுகளைச் சீர்திருத்துமாறு செய்யக் கூடாது; மதத் தனிநபர் சட்டமும் இருக்கட்டும், மதச்சார்பற்ற சிவில் சட்டமும் இருக்கட்டும்- தனக்கு எது தேவை என்பதைப் பெண் தீர்மானிக்கட்டும் என்கிறார் பெண்ணியவாதி மதுகீஷ்வர்.

  • தமது மரபுகளை உயர்த்திப் பிடிக்கும் உரிமை ஒவ்வொரு சமூகத்திற்கும் உண்டு என்றும், எந்தவொரு அரசு உருவாக்குகின்ற சட்டத் தொகுப்பும் அதிகாரமயமாக்கலும் மட்டுமே பயன்படும் என்றும், அது பன்முகத்தன்மைக்கு எதிரானது என்றும் வாதிடுகிறார்கள் பின் நவீனத்துவ அறிஞர்கள்.
  • சிவில் சட்டம் குறித்த விவாதமெல்லாம் வெட்டிப் பேச்சு என்றும், இந்தச் சட்டங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கிராமப் பஞ்சாயத்துகள் பல பிரச்சினைகளில் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் சிலர் கூறுகின்றனர்.
  • மதச்சார்பற்ற, ஜனநாயகரீதியிலான சிவில் சட்டமொன்று தேவை என்று கருத்தளவில் ஏற்றுக் கொள்பவர்கள் பலரும், இந்து மதவெறிச் சக்திகள் மேலோங்கியிருக்கும் இன்றைய தருணத்தில் அதை நடைமுறைப்படுத்தவியலாது என்றும், காலம் கனியும் வரை காத்திருக்க வேண்டுமென்றும் கூறுகின்றனர்.
  • “மதச்சார்பற்ற சிவில் சட்டத்திற்காகப் போராடுவதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் இசுலாமியப் பெண்கள் உள்ளிட்ட யாருமே இன்று அந்தக் கோரிக்கையை ஆதரிக்க மாட்டார்கள் என்பதுதான்” – இது மார்க்சிஸ்டு கட்சி சார்ந்த அறிவு ஜீவிகள் சிலரின் வாதம்.
  • “சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை ஆகய எதையும் தனியே உருவாக்க முடியாது. அவை ஒட்டு மொத்தச் சமூக மாற்றத்தின் அங்கமாகும். எனவே இன்றைய சமூக எதார்த்தங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட முறையிலான எந்தவொரு விவாதத்தையும் நாம் எதிர்க்க வேண்டும்” எனகிறது ‘ரெட் ஸ்டார்’ பத்திரிக்கை.
  • ஒரு சீரான சிவில் சட்டம் என்ற பெயரில் சிறுபான்மை மக்கள் மீது இந்துச் சட்டத்தைத் திணிக்கும் முயற்சியைக் கண்டிப்பதாகக் கூறுவதுடன் தமது பணி முடிந்தது என்று சிலர் பொருள் செறிந்த முறையில் மவுனம் சாதிக்கின்றனர்.

மேற்கூறிய நிலைப்பாடுகள் மற்றும் நிலைப்பாடற்ற குழப்பங்கள் பற்றிப் பரிசீலிப்போம்.

மதத்தை ஜனநாயகப்படுத்தும் முயற்சி

மனிதனின் சிவில் வாழ்க்கையின் மீது மதம் செலுத்துகின்ற அதிகாரத்தைப் பறித்து விஞ்ஞானபூர்வமான, ஜனநாயக பூர்வமான முறையில் சமூகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் மதச்சார்பின்மையின் சாரம்.

அஸ்கர் அலி எஞ்சினியர்
மதச்சார்பற்ற இஸ்லாமிய அறிஞர் அஸ்கர் அலி எஞ்சினியர்

சிவில் வாழ்க்கையின் மீது மதம் செலுத்தும் அதிகாரத்தை எற்றுக் கொண்டு, அந்தந்த மதக்கோட்பாடுகளில் உள்ள ஒரளவு முற்போக்கான அம்சங்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றின் துணைகொண்டு மதச்சட்டத்தை ஜனநாயகப்படுத்தலாம் என்பது அஸ்கர் அலி எஞ்சினியர் நிலைப்பாடு.

இந்த வழிமுறையைப் பின்பற்றி ஒருதார மணமுறைக்கு ஆதரவாகவும், முத்தலாக்கிற்கு எதிராகவும் பல ஆதாரங்களை குர்ஆன் மற்றும் நபிகள் வழங்கிய தீர்ப்புகளிலிருந்து எடுத்து எழுதுகிறார் எஞ்சினியர். வேறு பல இசுலாமியச் சீர்திருத்தவாதிகளும் இவ்வாறே செய்கிறார்கள்.

அதே நூல்களிலிருந்து வேறு சில ஆதாரங்களைக் காட்டியோ, அல்லது ஒரு சொல்லுக்கு வேறு விதமாகப் பொருள் கூறியோ இவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள் இசுலாமியப் பழமைவாதிகள். தொடர்ந்து இவர்களுக்கிடையே நடக்கின்ற அடுத்தடுத்த சுற்று விவாதங்கள் மதநூல்களின் பொருள் விளக்க ஆய்வாக வீழ்ச்சி அடைகின்றனவேயன்றி, சமூகத்தின் தேவை குறித்த அல்லது பிரச்சினை குறித்த அறிவுபூர்வமான விவாதமாக வளர்ச்சி அடைவதில்லை.

எனவே, நவீன யுகத்தின் தேவைகளுக்கு 1000, 2000ஆண்டுகளுக்கு முற்பட்ட குர்ஆனிலோ, பைபிளிலோ, ஸ்மிருதிகளிலோ விடை இருக்கிறதா என்று தேடுவதும், அவ்வாறு இருப்பதாகக் கூறுவதும் மதத்திற்கு முற்போக்கு முலாம் பூசுவதற்கு மட்டுமே பயன்படுகிறது. இந்த முயற்சி, வரலாற்று ரீதியில் மோசடியாகவும், நடைமுறையில் கோமாளித்தனமாகவும் முடிகிறது.

இந்து மதத்தின் ‘நல்ல’ கோட்பாடுகளின் துணைகொண்டே அதனைச் சீர்திருத்திவிட முடியும் என்று வாதிட்ட காந்திக்கு பெரியார் அளித்த மறுப்புரை இங்கே நினைவு கூறத்தக்கது.

மார்க்சிஸ்டுகளின் மோசடி!

அடுத்து நம்பூதிரிபாடு முன்வைக்கும் தீர்வுக்கு வருவோம். “ஜனநாயகம், சமூக நீதீ, -ஆண் –பெண் சமத்துவம் போன்ற நவீனக் கொள்கைகளுக்கு எதிராக ஒவ்வொரு மதமும் எந்த அளவு குறுக்கிடுகிறதோ அந்த அளவுக்கு அந்தந்த மதத்தனிநபர் சட்டங்கள் திருத்தப்படவேண்டும்” என்கிறார் நம்பூதிரிபாடு.

ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாடு
ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாடுவின் ஆலோசனை தெரிந்தே செய்யப்படும் மோசடி

அதாவது சிவில் வாழ்க்கை மீது மதம் செலுத்தும் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்காமலேயே, தனிநபர் சட்டம் என்ற பெயரில் இந்தியக் குடிமக்களின், குறிப்பாகப் பெண்களின் முதுகில் சவாரி செய்ய இந்திய அரசியல் சட்டம் மதங்களுக்கு அளித்துள்ள உரிமையைக் கேள்விக்குள்ளாக்காமலேயே, ‘சர்வதர்ம சம்பாவ’ என்ற இந்திய மதச்சார்த்தபின்மைக் கோட்பாட்டின் எல்லைக்குள் நின்றபடியே மதச்சட்டங்கள் ஜனநாயகப்படுத்த வழி சொல்கிறார் ஈ.எம்.எஸ்.

ஆனால் மதக்கோட்பாடுகளை அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்த எந்த மதவாதி ஒப்புக் கொள்வான்? மதவாதி ஒப்புக் கொள்வது இருக்கட்டும். நமது அரசியல் சட்டமே அதை ஒப்புக் கொள்ளவில்லையே. அவ்வாறு ஒப்புக் கொள்வதாக இருந்தால், “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று கூறும் 14-வது பிரிவையும், பால் வேறுபாடுகளுக்காக யாரிடமும் அரசு வேற்றுமை பாராட்டக்கூடாது” என்று கூறும் 15- வது பிரிவையும் பயன்படுத்தி மதத் தனிநபர் சட்டங்கள் அனைத்தையும் ஒழித்திருக்க முடியும்; அல்லது திருத்தியிருக்க முடியும்.

பொது ஒழுங்கு, நலவாழ்வு மற்றும் ஒழுக்க நெறி ஆகியவற்றின் அடிப்படையில் மதச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் உரிமையை சட்டப்பிரிவு 25(1) அரசுக்கு அளிக்கிறது. இருந்தபோதிலும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மதங்களின் தீயொழுக்கங்களை ஒழிப்பதற்கு அரசு முயலவில்லை.

இந்து தனிநபர் சட்டத்தில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள தேவதாசி ஒழிப்பு போன்ற சீர்திருத்தங்களும் கூட எப்படிச் செய்யப்பட்டன? இந்து மதத்தில் நிலவும் தேவதாசி முறை என்ற ஒழுக்கக் கேட்டை சட்டப்பிரிவு 25(1) அளிக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு ஒழிக்கவில்லை. மாறாக “தேவதாசி முறை இந்துமதத்தின் அத்தியாவசியமான நம்பிக்கை அல்ல” என்ற மதவாதிகளின் கூற்றின் அடிப்படையில்தான் திருத்தப்பட்டது.

ஜனநாயகம், சமூகநீதி, பெண்ணுரிமை ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் மதச்சட்டங்களைத் திருத்தியமைக்கலாம் என்று நம்பூதிரிபாடு முன்வைக்கும் ஆலோசனை தெரிந்தே செய்யப்படும் மோசடியாகும். இத்தகைய சட்டத்திருத்தம் எதையும் மார்க்சிஸ்டு கட்சி எம்.பி.க்கள் யாரும் இன்றுவரை பாராளுமன்றத்தில் முன்மொழிந்ததில்லை என்ற உண்மை இந்தப் பித்தலாட்டத்தை மேலும் அம்பலப்படுத்துகிறது.

இது ஒருபுறமிருக்க, சிவில் வாழ்க்கை மீது மதம் செலுத்தும் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு, அதில் சீர்திருத்தங்கள் கோருவதன் வாயிலாக மதச் சீர்திருத்தவாதியாக அவதாரம் எடுக்கிறாரல் நம்பூதிரிபாடு.

மதத்திற்குள்ளிருந்தே அதை ஜனநாயகப்படுத்த முடியுமா?

அம்பேத்கர்
இந்து சட்டத்தை சீர்திருத்த முயன்று தோற்கடிக்கப்பட்டார் அம்பேத்கர்

மதச்சார்பற்ற மதிப்பீடுகளை அளவுகோலாகக் கொண்டு மதக் கோட்பாடுகளை ஆய்வு செய்யக்கூடாது என்பதுதான் மதவாதிகளின் நிலைப்பாடு. இதன்படி ஷரியத்தின் ஆணாதிக்கம் பற்றி ஒரு நாத்திகனோ, அல்லது பிற மதத்தவனோ பேசக்கூடாது.

“கருவறைக்குள் யாரை விடலாம், யாரை விடக்கூடாது என்பதை இந்துக்களாகிய நாங்கள் எங்கள் மதத்திற்குள் பேசிக் கொள்கிறோம். நாத்திகர்களான நக்சலைட்டுகளுக்கு இதில் தலையிடுவதற்கு உரிமை கிடையாது” என்பது கருவறை நுழைவுப் போராட்டத்திற்கெதிராக இந்து முன்னணி முன்வைத்த வாதங்களில் மிக முக்கியமானதொன்று ஆகும்.

இனம், பால், வர்க்கம் என்ற முறையில் எந்த மதத்தைதச் சேர்ந்த மக்களையும் அணுகவும், மதத்தின் பெயரால் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நுகத்தடிகளை அகற்றவும் மதச்சார்பற்றவர்களுக்கும் ஜனநாயகவாதிகளுக்கும் உரிமை உண்டு. இத்தகைய போராட்டத்தின் மூலம்தான் மதச்சார்பின்மை நிலைநாட்டப்படுகிறது.

மாறாக, மதச்சார்பான முறைகள் மூலம் மதச்சார்பற்ற சட்டத்தை உருவாக்க முயலும் அணுகுமுறை, இலக்கிற்கும் அதை அடைவதற்கான வழிமுறைக்கும் இடையில் உள்ள இயங்கியல் உறவை மறுதலிக்கிறது.

ரெட் ஸ்டாரின்’ அணுகுமுறையில் இது பிரதிபலிப்பதைக் காணலாம். “ஒவ்வொரு மதத்தின் தனிநபர் சட்டங்களுக்குள்ளும் ஏற்படும் மாற்றம்” என்பதை மதச்சார்பின்மையை நோக்கிய முன்னேற்றமாகச் சித்தரிக்கிறது ‘ரெட்ஸ்டார்’.

உண்மை அதுவல்ல; உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, நாகரிகத்தின் வளர்ச்சி, முற்போக்கான சக்திகளின் போராட்டங்கள் ஆகியவற்றின் தாக்குதலால் நிலைகுலைந்து வரும் மதம், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கடைப்பிடிக்கும் தந்திரம்தான் சீர்திருத்தம்.

எல்லா சீர்திருத்தங்களையும் போலவே இவையும் அந்தந்த மதத்தைச் சார்ந்த மக்களுக்குச் சில புதிய நிவாரணங்களை வழங்கத்தான் செய்யும். இது சீர்திருத்ததின் விளைவு, நோக்கம் என்ன என்பதுதான் பிரச்சினை.

பலதார மணம், தேவதாசி முறை, கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைவதற்கான தடை போன்றவற்றை இந்து சனாதனிகள் மனமுவந்து விலக்கிக் கொள்ளவில்லை; ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு இவை எதிராக இருக்கின்றன என்ற காரணத்தால் சட்டத்திருத்தம் செய்யவுமில்லை.

அம்பேத்கருக்கு எதிராக இந்து – முசுலீம் கூட்டணி!

மாறாக, சிவில் வாழ்க்கை மீது மதம் செலுத்தும் அதிகாரத்தை முற்றிலுமாகப் பிடுங்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறியபோது மதப் பகைமைகளை மறந்து இந்து சனாதனிகளும், இசுலாமியப் பழமைவாதிகளும் அம்பேத்கருக்கு எதிராக ஓரணியில் திரண்டார்கள்.

பாகிஸ்தான் மதவாதம்
அம்பேத்கர், பெரியார், ஜின்னா (1940-ல்) – பாகிஸ்தானில் முத்தலாக் மணவிலக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

கடவுளர்கள், வழிபாட்டு முறைகள், பண்பாடுகள் ஆகியவற்றால் ஒன்றுக்கெதிராக நின்று கொண்டிருந்த கூட்டத்தை ‘இந்துச் சட்டம்’ என்ற பட்டியில் அடைப்பதன் வாயிலாகத்தான் சனாதன தருமத்தைக் காப்பாற்றவியலும் என்ற நிலைமை இருந்ததால் அந்த லட்சியத்தை அடைவதற்காகச் சில சில்லறைச் சீர்திருத்தங்களுக்கு உடன்பட்டார்கள்.

இதன் துணை விளைவாக ‘முசுலீம் தனிநபர் சட்டம்’ என்பதையும் ஏற்க வேண்டியிருக்கும் என்று தெரிந்தும் கூட, மேற்படி சீர்திருத்தங்களுக்கு இந்து சனாதனிகள் உடன்படக் காரணம் ஒன்றுதான். மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்ற பேயிடமிருந்து இந்து மதத்தைக் காப்பாற்றுவது தான் அது.

இனி பாகிஸ்தானின் உதாரணத்தைக் காண்போம். ‘மதச்சார்பற்ற’ இந்தியாவின் முசுலீம் தனிநபர் சட்டம் ‘முத்தலாக்’ முறையிலான மணவிலக்கை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இசுலாமியக் குடியரசான பாகிஸ்தானிலோ முத்தலாக் மணவிலக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இசுலாமியப் பெண்களுக்கு ஆதரவான இந்த நிலை மதச்சார்பற்ற ஜனநாயக மதிப்பீடுகளின் பால் பாகிஸ்தான் அரசுக்கும் மதவாதிகளுக்கும் உள்ள காதலைக் காட்டுகிறதா, அல்லது மதச்சார்பற்ற அரசாக மாறிவிடாமல் தடுப்பதற்கு அவர்கள் கொண்டிருக்கும் எச்சரிக்கையுணர்வைக் காட்டுகிறதா?

ஆளும் வர்க்கங்கள் மற்றும் பிற்போக்கு மதவாத சக்திகளின் இத்தகைய சூழ்ச்சிகளைக் கண்டு புரட்சியாளர்களுக்குரிய எச்சரிக்கையுணர்வைப் பெறுவதற்குப் பதிலாக சீர்திருத்தவாதிகளைப் போல மகிழ்ச்சி அடைகிறது, ‘ரெட் ஸ்டார்’.

மதச் சட்டங்களைச் சீர்திருத்தி ஜனநாயகப்படுத்தும் வித்தையும், நரியைப் பரியாக்கும் வித்தையும் ஒன்றே. நரியைப் பரியாக்குவதாக நம்பூதிரி கூறுவதில் வியப்பில்லை; நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலரும் அதே நம்பிக்கையைக் கொண்டிருப்பதுதான் வேடிக்கை!

(தொடரும்…)

  1. பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்
  2. பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது
  3. ‘ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி’ – இந்திய அரசின் மதச்சார்பின்மை
  4. மரத்தில் மறைந்தது மா மத யானை

சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தக் கட்டுரை இடம் பெற்றுள்ள நூல் கிடைக்கும்

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா?

பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள்

வெளியீடு :
கீழைக்காற்று
சென்னை – 600 002
044-28412367

விலை : ரூ 40
பக்கங்கள் : 64

  1. //மதச்சார்பற்ற இஸ்லாமிய அறிஞர் அஸ்கர் அலி எஞ்சினியர்//

    “மதச்சார்பற்ற”, “இஸ்லாமிய” அறிஞர் 🙂

  2. உயர் மட்ட குழு கூடி ஜோசப் என்பரின் கமென்டுகளை நீக்க முடிவெடுத்து நீக்கி விட்டது நான் எழுதின கமென்ட் ஆபத்தா அபத்தமா தெரியலயே …

Leave a Reply to p.joseph பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க