privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மணல் கொள்ளை : ஆற்றில் இறங்கு ! அதிகாரத்தைக் கையிலெடு !!

மணல் கொள்ளை : ஆற்றில் இறங்கு ! அதிகாரத்தைக் கையிலெடு !!

-

ணற்கொள்ளை தோற்றுவிக்கும் பேரழிவு என்ன என்று தெரிந்த போதிலும், குடிநீரின்றி விவசாயமின்றி நாடே பாலைவனமாகிவிடும் என்ற அபாய எச்சரிக்கை  கண் முன்னே உண்மையாகி வந்தபோதிலும், எதைப்பற்றியும் அக்கறையோ கவலையோ இல்லாமல், இந்தக் கொள்ளை தொடர்கிறதே ஏன்?

கொள்ளையடிப்பதற்காகவே பதவிக்கு வருகின்ற அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட ஓட்டுக்கட்சி தலைவர்கள், ஆறுமுகசாமி, படிக்காசு, கே.சி.பி., பி.ஆர்.பி., வைகுந்தராசன் போன்ற கிரிமினல்கள், காசுக்காக எதையும் விற்கத் தயாராக இருக்கும் ஐ.ஏ.எஸ். முதல் வி.ஏ.ஓ. வரையிலான அதிகாரிகள், மணல் கொள்ளையர்களுக்கு அடியாள் வேலை பார்க்கும் போலீசு, பெட்டி வாங்கிக்கொண்டு தீர்ப்பு எழுதும் நீதிபதிகள்  போன்ற நேர்மையற்ற பலரின் நடவடிக்கைகள்தான் மணற்கொள்ளை தொடர்வதற்குக் காரணம் என்று பலர் எண்ணுகிறார்கள்.

இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், தண்ணீரை விற்பதும், மணலை விற்பதும், மலைகளை விற்பதும் கண்ணில் பட்ட இயற்கை வளங்களையெல்லாம் வெட்டி விற்பதும் முன்னெந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் நடப்பது ஏன்? ஏனென்றால், இந்தக் கொள்ளையைத்தான் வளர்ச்சிக்கான கொள்கை என்று மத்திய, மாநில அரசுகள் அமல் படுத்துகின்றன. எந்த விதமான ஆக்கபூர்வமான உற்பத்தி நடவடிக்கையும் இல்லாமல், இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து விற்பதே ஒரு தொழிலாகவும், அதுவே முன்னேற்றத்துக்கு வழியாகவும் அரசால் சித்தரிக்கப்படுகிறது.

மணல் கொள்ளையை எதிர்த்து கொல்லப்பட்டவர்கள்
மணற்கொள்ளையை எதிர்த்துப் போராடியதற்காக வெட்டிக் கொல்லப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் – மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கார்த்திக் மற்றும் ராஜேஷ். நம்பியாற்றில் நடந்து வரும் மணற்கொள்ளையை அம்பலப்படுத்திப் போராடியதால் கொல்லப்பட்ட திசையன்விளையைச் சேர்ந்த சதீஷ்குமார் (கோப்புப் படங்கள்)

தண்ணீரைப் பாட்டிலில் அடைத்து விற்றால் அது தொழில் வளர்ச்சி, ஏரி குளங்களை அழித்துப் பல மாடி கட்டிடங்கள் கட்டினால் அது ரியல் எஸ்டேட் வளர்ச்சி, இரும்பையும் பாக்சைட்டையும் ஏற்றுமதி செய்தால் அது அந்நியச் செலாவணி ஈட்டும் நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்றால் அது பொருளாதார முன்னேற்றம் – இப்படிப் பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் டாடா, அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகளுக்கு காடுகளையும் மலைகளையும் சொந்தமாக்கி விட்டு, அவற்றை வெட்டும் “வேலைவாய்ப்பு” மக்களுக்குக் கிடைப்பதைக் காட்டி இதுதான் நாட்டின் வளர்ச்சி என்கின்றன மத்திய, மாநில அரசுகள்.

இந்த அநீதியை விவசாயிகளும் மீனவர்களும் பழங்குடி மக்களும் நாடு முழுவதும் எதிர்ப்பதால், மக்களைக் கட்டாயமாக அவர்களுடைய நிலங்களிலிருந்து வெளியேற்றுவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு. எனவே, நாட்டின் முன்னேற்றத்துக்காக என்ற பெயரில் ஆளும் வர்க்கம் வகுத்திருக்கின்ற இந்தக் கொள்கைதான் கொள்ளையர்களை உருவாக்குகிறது. வளர்ச்சி என்ற பெயரில் அரசு முன்தள்ளும் இந்தக் கொள்கையைத் தடுத்து நிறுத்தாதவரை இத்தகைய கொள்ளையர்கள் உருவாவதைத் தடுக்கவியலாது என்பதைப் புரிந்து கொள்ள வேண் டும்.

மணற்கொள்ளையார்கள் கொன்ற கனகராஜ்
மணல் கடத்தப்படுவதைத் தடுக்க முயன்றபொழுது, மணற் கொள்ளையர்களால் டிராக்டரை ஏற்றிக் கொல்லப்பட்ட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த போலீசு கான்ஸ்டபிள் கனகராஜ் (கோப்புப் படம்)

இயற்கை வளக்கொள்ளை என்பது அரசே நடத்தும் கொள்ளை. நிலக்கரி, இரும்பு, பாக்சைட் சுரங்கங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டு, மத்திய-மாநில அமைச்சர்கள் இலஞ்சம் வாங்கிக் கொள்கின்றனர். தமிழகத்தின் மணற்கொள்ளையோ நேரடியாக அரசாங்கத்தாலும், அதிகார வர்க்கத்தாலும் நடத்தப்படுகிறது.
மாநில முதல்வர் தான் இந்த மணல் மாஃபியாவின் தலைவர். அதற்கு கீழே உள்ளவர்கள் ஏஜென்டுகள். அமைச்சர், எம்.எல்.ஏ., எதிர்க்கட்சிகள், கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசு, ஊடகங்கள், சாதிக்கட்சித் தலைவர்கள், உள்ளூர் கையாட்படையினர் என இந்தக் கொள்ளைப் பணம் எல்லா மட்டங்களிலும் பாந்து பரவுகிறது. பணம் வாங்க மறுப்பவர்கள், மணற்கொள்ளையை எதிர்ப்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள்.

ஓட்டுக்கட்சிகளைப் பொருத்தவரை, எதைச் சொல்லியாவது ஓட்டு வாங்கி பதவியில் அமர்ந்து விட்டால், 5 ஆண்டுகளுக்கு இந்த நாடே தங்களுக்குச் சொந்தம் என்றும், எந்த பொதுச்சொத்தையும் தமது விருப்பப்படி விற்க உரிமை உண்டென்றும் அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சட்டவிரோதமாக இதைச் செய்கிறார்கள். அல்லது இதற்குத் தோதான சட்டத்திருத்தங்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் செய்து கொடுக்கிறார்கள்

அவர்கள் தாங்களே இயற்றிய சட்டங்களை மீறுகிறார்கள். 35 அடி தோண்டி மணலை அள்ளிவிட்டு, 3 அடிதான் தோண்டியிருக்கிறோம் என்று சாதிக்கிறார்கள். இதனைக் கேள்விக்குள்ளாக்கினால், இது மூன்றடியா முப்பதடியா என்று முடிவு செய்யும் அதிகாரம் மக்களுக்கு இல்லை, அதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள்தான் முடிவு செய்ய முடியும் என்று கூறி போலீசை வைத்து மிரட்டுகிறார்கள். சம்மந்தப்பட்ட அதிகாரிகளோ, எந்த தவறும் நடக்கவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்கிறார்கள்.

பொதுச்சொத்தை திருடுவது மட்டுமல்ல, அதைத் தட்டிக் கேட்கும் மக்களிடம் “அப்படித்தான் செய்வோம், உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று இவர்கள் சவால் விடுகிறார்கள். கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் அனைத்து விவகாரங்களிலும் நடப்பது இதுதான். இவர்களிடமே மனுக்கொடுத்து மணற்கொள்ளையைத் தடுக்கவியலுமா? ஒருக்காலும் முடியாது.

“பொதுச்சொத்துக்கு நீ உரிமையாளன் அல்ல, மக்களின் சொத்தை விற்கும் அதிகாரம் உனக்கு கிடையாது. இது மக்கள் சொத்து. சட்டம் சோல்கின்றபடியே கூட அரசும் அரசாங்கமும் இதன் காப்பாளர்களேயன்றி உரிமையாளர்கள் அல்ல. உரிமையாளர்கள் மக்கள்தான்” என்று அரசாங்கம் மற்றும் அதிகார வர்க்கத்தின் அதிகாரத்தை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

நமது நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்துச் சென்ற பிரிட்டிஷ்காரனிடம் கொள்ளையை நிறுத்துமாறு நாம் மனு கொடுக்கவில்லை. அவனை வெளியேற்றவேண்டும் என்று விடுதலைப் போராட்டம் நடத்தினோம். இப்போது சுதந்திர நாடு என்கிறார்கள். ஜனநாயகம் என்கிறார்கள். அரசு ஊழியர்கள், அதிகாரிகள் எனப்படுவோர் மக்கள் ஊழியர்கள் என்கிறார்கள். நடப்பது என்ன? மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் கொடுத்து வைக்கப்பட்டுள்ள வேலைக்காரர்களான இவர்கள், மக்களை ஏறி மிதிக்கிறார்கள். அதிகாரம் செய்கிறார்கள். மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்கிறார்கள்.

வேலூர் பாலாறு மணல் கொள்ளை எதிர்ப்பு
களத்தூர் கிராமப் பகுதியில் ஓடும் பாலாற்றில் நடந்து வரும் மணற்கொள்ளையைத் தடுக்கக் கோரி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஆட்சியரின் காரை முற்றுகையிட்டு முழக்கமிடும் பொதுமக்கள் (கோப்புப் படம்)

பொதுச்சொத்துகளையும் பாதுகாப்பவர்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் அமைச்சர்களும் அதிகாரிகளும்தான் அவற்றை விற்பதில் முன் நிற்கிறார்கள். கட்டிய மனைவியையே விபச்சாரத்தில் ஈடுபடச் சொல்லி கட்டாயப்படுத்தும் கணவனின் அதிகாரத்துக்கு மனைவி கட்டுப்பட்டு நடக்க முடியுமா? நாட்டின் வளங்களைக் கூட்டிக்கொடுக்கும் இவர்களின் ஆணைக்கு மக்கள் அடிபணிய முடியுமா?

மணற்கொள்ளைக்கு எதிராகப் போராடும் மக்கள் இவர்களிடம் மன்றாடுவதை தவிர வேறு வழியில்லை என்று எண்ணுகிறார்கள். எல்லோரும் திருடர்கள் என்பது உண்மைதான் என்றாலும், தப்பித்தவறி யாராவது ஒரு நேர்மையான அதிகாரி இருந்து மணல் கொள்ளையைத் தடுத்துவிட மாட்டாரா என்று ஏங்குகிறார்கள்.

அப்படி அரிதினும் அரிதாக மிச்சமிருக்கும் ஒரு சிலர்தான் லாரி ஏற்றிக் கொல்லப்படுகிறார்கள். தாசில்தார் முதல் போலீசு ஏட்டு வரை பலர் மணற்கொள்ளையர்களால் கொல்லப்படவில்லையா? நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்ற சகாயம் கிரானைட் கொள்ளையை விசாரிக்கிறார். அவருடைய அறையிலேயே உளவுக்கருவியைப் பொருத்தி வேவு பார்க்கிறது அரசு. சகாயத்துக்கு அருகிலேயே நிற்கும் உளவுத்துறை அதிகாரிகளும், கனிமவளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் சகாயத்திடம் புகார் கொடுப்பவர்கள் பெயரைக் குறித்துக் கொண்டு பி.ஆர்.பி.க்கும் அமைச்சர்களுக்கும் உளவு சோல்கிறார்கள்.

மலைக்குன்றுகளைக் காணவில்லை, கண்மாய்கள், குளங்கள், விளைநிலங்களைக் காணவில்லை. இவற்றை காணாமல் போகச் செய்ததில் கலெக்டர் முதல் தலையாரி வரை, முதல்வர் முதல் ஊராட்சி தலைவர் வரை அனைவருக்கும் பங்கு உண்டு. சகாயத்தின் அறிக்கை இவர்களை என்ன செய்து விடும்? தாதுமணல் கொள்ளை குறித்த ககன்தீப் சிங் பேடி அறிக்கை என்ன ஆனது? மொத்த அரசுமே ஒரு கிரிமினல் கொள்ளைக் கூட்டமாக இருக்கும்போது சகாயத்தின் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்போவது யார்? நீதிமன்றமா?

முதலில் கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் கொள்ளை அனைத்தையும் விசாரிக்குமாறு கூறிய சென்னை உயர் நீதிமன்றம், கிரானைட் விவகாரத்தை மட்டும் விசாரித்தால் போதும் என்று மற்றவற்றை மர்மமான முறையில் கைவிட்டு விட்டது. அரசாங்கமோ சகாயத்துக்கு அலுவலகம் ஒதுக்கவே மறுக்கிறது. நீதிமன்றத்தின் அதிகாரத்தை எள்ளி நகையாடுகிறது. பெரும் சவடால் அடித்த நீதிமன்றமோ அரசின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில் பின்வாங்குகிறது.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தலைமையில் கார்மாங்குடி மணல் குவாரிக்கு எதிராகப் போராடிய மக்களிடம், “போராட்டத்தைக் கைவிடுங்கள், நீதிமன்றத்துக்கு செல்லுங்கள்” என்று போலீசு – வருவாய்த்துறை அதிகாரிகள் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள். நீதிமன்றத்தின் மீது மணல் கொள்ளையர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. பொக்லைன் வைத்து மணல் அள்ளுவதை அனுமதிக்கும் தீர்ப்புகளை உயர்நீதி மன்றமும், உச்ச நீதிமன்றமும் வழங்கியுள்ளன. தடையில்லாமல் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் நோக்கத்துக்காகவே பசுமைத் தீர்ப்பாயம் என்ற சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்துக்குப் போனால் என்ன நடக்கும் என்பது ம.உ.பா.மைய வழக்குரைஞர்களுக்கு தெரியுமாதலால், அதிகாரிகள் பின்னிய சதிவலையில் அவர்கள் சிக்கவில்லை.

விவசாயி ராஜா
கிரானைட் குவாரிக்கு நிலத்தைத் தர மறுத்ததால், கிரானைட் கொள்ளையர்களால் தனது கை வெட்டப்பட்டதை ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திடம் சாட்சியமாக அளிக்கும் இ.மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா.

நீதித்துறை, கட்சிகள், அதிகாரிகள் உள்ளிட்ட இந்த மொத்த அரசமைப்பும் ஆட்சி செய்யும் அருகதையை இழந்து விட்டது. இந்த அரசமைப்பு தோற்றுவிட்டது. இது ஜனநாயகம் என்பது பொய். இது ஊடகங்களும் அறிவுத்துறையினரும் திட்டமிட்டே உருவாக்கும் ஒரு மாயை. இந்த நாட்டின் விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இந்த அரசமைப்பு எதையும் வழங்கவில்லை என்பது மட்டுமல்ல, காடுகள் மீதும் கடலின் மீதும் நீர்நிலைகளின் மீதும் மேய்ச்சல் நிலங்களின் மீதும் அவர்களுக்கு இருந்த பாரம்பரிய உரிமையையும் சூறையாடுகிறது, திருடுகிறது. எதிர்த்துக் கேட்பவர்களைக் கொன்று போடுகிறது. இதுதான் மன்மோகன் சிங்கும், மோடியும், ஜெயலலிதாவும் முன்வைக்கின்ற வளர்ச்சிப்பாதை. மக்கள் சொத்தைக் கொள்ளையிடுவதென்பது இதன் வழிமுறை.

இப்படிப்பட்ட ஒரு அரசமைப்பை ஜனநாயகம் என்று அழைப்பது அயோக்கியத்தனமில்லையா? இந்த அமைப்பின் அதிகாரத்தின் கீழ் மக்கள் தமக்கான நீதியைப் பெற முடியும் என்று நம்புவது மடமையில்லையா?

மக்கள் தமது வாழ்வாதாரத்தையும், இயற்கை வளங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றாலே, தங்களது சொந்த அதிகாரத்தை நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆற்று மணலாகட்டும் தாது மணலாகட்டும் அவை மக்களின் உடைமைகள். ஆறுகள், மலைகள், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளே மேற்கொள்வது ஒன்றுதான் இந்தப் பேரழிவைப் தடுப்பதற்கான ஒரே வழி. அந்தந்த வட்டாரத்து விவசாயிகள் தமக்கான பேராயம் ஒன்றை நிறுவிக்கொண்டு தமது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும்.

மணல் எடுக்கலாம் என்று பொதுப்பணித்துறை ஒரு உத்தரவு பிறப்பித்தால், அதனை ரத்து செய்யுமாறு மணற்கொள்ளையர்களின் கூட்டாளிகளான அதிகாரிகளிடம் மன்றாடுவது தவறு. மனுக்கொடுப்பதும், உண்ணாவிரதம் இருப்பதும் பயனற்ற நடவடிக்கைகள். அவர்களுடைய அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

மணல் குவாரிக்குத் தடை விதித்து விவசாயிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தங்களது உத்தரவை அமல்படுத்தவும், மணல் மாஃபியாவுக்கு அவர்களுடைய மொழியிலேயே பதிலடி கொடுக்கவும் பாதுகாப்புக் குழுக்களை கிராமம் தோறும் கட்டவேண்டும். தமிழகம் முழுவதும் மணற்கொள்ளைக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் தமக்குள் ஓர் ஒருங்கிணைவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது நடக்க முடியாத கனவல்ல. மக்கள் போராட்டத்தின் வலிமையால் சுமார் ஒரு மாத காலமாக கார்மாங்குடி மணல் குவாரி மூடப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒவ்வொரு மணல் குவாரியையும் நாம் மூட முடியும். இந்தப் போராட்ட முறை எந்த அளவுக்கு எல்லா இடங்களுக்கும் பரவுகிறதோ அந்த அளவுக்கு வெற்றிகளையும் ஈட்ட முடியும்.

– சூரியன்
__________________________________
புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
__________________________________