privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மணலி SRF சங்க தேர்தலில் 5 - வது முறையாக பு.ஜ.தொ.மு வெற்றி

மணலி SRF சங்க தேர்தலில் 5 – வது முறையாக பு.ஜ.தொ.மு வெற்றி

-

மணலி SRF – ல் நடந்த சங்க தேர்தலில் தொடர்ந்து 5 – வது முறையாக பு..தொ.மு அபார வெற்றி

சென்னையில் மணலி பகுதியில் உள்ளது SRF தொழிற்சாலை. இங்கு 566 நிரந்தர தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இங்கு NYLON TYRE CORD FABRIC உற்பத்தி செய்யப்படுகிறது.

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளர்களின் போராட்டத்தால் பொது தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது. விபி. சிந்தன், குசேலர் முதல் சௌந்திரபாண்டியன் வரை பல தொழிற்சங்க தலைவர்களை கண்டுள்ளது இந்த சங்கம். இந்த ஆலையில் முதலில் 32 இளந்தொழிலாளர்களை கொண்டு தனது கிளையை தொடங்கியது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

கூட்டு பேரம்
அன்று முதல் இன்று வரை தொழிலாளர்களுக்கு நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடந்து தொழிலாளர்களை தங்களுடைய எஜமானர்களாக கொண்டு சங்கம் நடத்தி 2012–ல் சிறப்பானதொரு ஊதிய உயர்வு ஒப்பந்தமும் போட்டுள்ளது பு.ஜ.தொ.மு.

அந்த 32 பேரையும் நிர்வாகம் STAFF என்ற நிலையில் வைத்து வேலை வாங்கிக் கொண்டிருந்தது. இந்த 32 தொழிலாளர்களையும் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு குசேலர் தலைமையிலான சங்க நிர்வாகிகளுடன் பல போராட்டங்கள் நடத்தினோம். ஆனால் அந்தத் தொழிலாளர்களைப் பற்றி குசேலர் தலைமையிலான சங்க நிர்வாகிகள் கண்டு கொள்ளவே இல்லை.

அதன் பின்பு தொழிலாளர்களின் அனுமதியின்றி 10,000 அகவிலைப் படி புள்ளிகளை நிர்வாகத்திடம் விட்டுக்கொடுத்து குசேலர் போட்ட துரோக ஒப்பந்தத்தின் காரணமாக அடுத்த நடந்த தேர்தலில் குசேலரைத் தோற்கடித்து விட்டு வாய்தா வக்கீல் பிரகாஷின் தலைமையை (ULF) தேர்ந்தெடுத்தனர் தொழிலாளர்கள். அதன் பின்பு பு.ஜ.தொ.மு-வின் விடா முயற்சியின் காரணமாக அந்த 32 தொழிலாளர்களும் சங்கத்தில் சேர்க்கப்பட்டனர்.

அதிலிருந்து 2009 வரை ULF உடன் கூட்டணி வைத்து செயல்பட்டது பு.ஜ.தொ.மு. அவர்களுடன் கூட்டணியாக செயல்பட்ட காலங்களில் அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டியது மட்டுமல்லாமல், தொழிற்சங்கம் எப்படி நடத்த வேண்டும் என்பதையும் அவர்களுக்கு (ULF) கற்றுக் கொடுத்தது பு.ஜ.தொ.மு. அதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக ULF + NDLF கூட்டணி ஜெயித்து பிரகாஷ் தலைவராக வந்து கொண்டிருந்தார்.

பின்பு 2009–ல் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் தொழிலாளிகளுடைய கருத்து எதையும் கேட்காமல், தொழிலாளிகளுடைய ஒப்புதல் பெறாமல் CTC முறையில் ஒப்பந்தம் போட்டார் வக்கீல் பிரகாஷ். அது மட்டுமல்லாமல் இளந்தொழிலாளிகளுடைய இன்சூரன்ஸ் பணமாக இருந்த 7.5 லட்சம் ரூபாயை வெறும் 3 லட்சமாக மாற்றினார். தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பல சலுகைகளை குறைத்து விட்டு அந்த பணத்தையே ஊதிய உயர்வு என்று சொல்லி ஏமாற்றினார்.

அனைத்து விசயங்களையும் தொழிலாளிகளை கேட்காமலேயே பேசி முடித்து விட்டு ஒப்பந்தம் கையெழுத்திடும் முன்பு சடங்குத்தனமாக பொதுக்குழு கூட்டினார்கள். அந்த பொதுக்குழுவில் ஏன் CTC முறையில் ஒப்பந்தம் போட்டீர்கள் என தொழிலாளர்கள் கேள்வி எழுப்பிய போது எனக்குத் தெரியாது எனவும், வேறு தலைவரை வைத்து சரி செய்து கொள்ளுங்கள் என்றும் திமிர்த்தனமாக பதிலளித்தார் பிரகாஷ். இறுதியாக தொழிலாளிகளுக்கு விரோதமாக 2009 ஊதிய உயர்வு ஒப்பந்தம் பிரகாஷ் தலைமையில் கையெழுத்தானது.

2009 ஒப்பந்தத்தை அடுத்து 2011-ல் நடந்த தேர்தலில், இனிமேலும் இந்த பிழைப்புவாத சங்கத்தை அனுமதிக்க முடியாது, தொழிலாளிகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று முடிவெடுத்து 2011 தேர்தலில் ULF மற்றும் குசேலர் தலைமையிலான நலமன்றம் ஆகிய அணிகளை எதிர்த்து பு.ஜ.தொ.மு தனி அணியாக களம் கண்டது. அந்தத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையாக பு.ஜ.தொ.மு வெற்றி பெற்றது. அன்று முதல் இன்று வரை தொழிலாளர்களுக்கு நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடந்து தொழிலாளர்களை தங்களுடைய எஜமானர்களாக கொண்டு சங்கம் நடத்தி 2012–ல் சிறப்பானதொரு ஊதிய உயர்வு ஒப்பந்தமும் போட்டுள்ளது பு.ஜ.தொ.மு.

கடந்த நான்கு ஆண்டுகளில் பு.ஜ.தொ.மு-வின் செயல்பாடுகள்

  • SRF ஆர்ப்பாட்டம்
    “தொழிற்சங்க உரிமைக்காக போராடிய 13 தொழிலாளர்களை கிரிமினல்களாக சித்தரிக்கும் SRF மற்றும் போலீசின் கூட்டுச் சதியினை முறியடிப்போம்” 2014 மார்ச் மாதம் SRF கும்மிடிப்பூண்டி ஆலை வாயிலில் நடந்த ஆர்ப்பாட்டம்

    சங்க செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்துடன் நடக்கும் பேச்சுவார்த்தை பற்றிய விசயங்களை அனைத்து தொழிலாளர்களும் அறிந்து கொள்ளும் வகையில் உடனுக்குடன் சங்க அறிவிப்பு பலகையில் எழுதி ஒட்டுவது.

  • எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற நடைமுறையை மாற்றி வருடந்தோறும் ஜனவரி மாதம் தேர்தல் நடத்த வேண்டும் என்று தொழிலாளிகளுக்கு ஜனநாயக முறையை கற்றுக்கொடுத்தது
  • எந்த பிரச்சனையாக இருந்தாலும் தொழிலாளர்களிடம் கருத்துக்கேட்டு முடிவெடுப்பது.
  • தொழிலாளிகளை  கேள்வி கேட்க விடாமல் வெறும் 5 நிமிடம் மட்டுமே நடந்து வந்த பொதுக்குழுவை மாற்றி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பொதுக்குழுவை நடத்தி மாபெரும் வரலாற்று சாதனை படைத்தது.
  • வருடந்தோறும் போனஸாக சென்ற வருடம் வாங்கிய தொகையை விட ரூ 500 மட்டுமே உயர்வாக வாங்கிக் கொண்டிருந்ததை மாற்றி தற்போது ரூ 800 ஆக உயர்த்தியது.
  • இளந்தொழிலாளர்களுக்கு வேலைக்குச் சேர்ந்த முதல் வருடத்திலேயே குறைந்த பட்சம் ரூ6000 போனஸ் வாங்கிக் கொடுத்தது.

மேற்கண்ட இந்த வெளிப்படையான சங்க செயல்பாட்டின் காரணமாக தொழிலாளர் பாதுகாப்பு பேரவை என்ற பெயரில் இயங்கி வந்த 50-க்கும் மேற்பட்ட மூத்த தொழிலாளர்கள் புஜதொமு தான் சரியான அமைப்பு என்று உணர்ந்து, அவர்களின் அமைப்பை கலைத்து விட்டு பு.ஜ.தொ.மு வில் இணைந்தனர்.

தன் பிரச்சனை, தன்னுடைய ஆலை பிரச்சனை என்று சிந்தித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை சமூகத்தைப் பற்றி சிந்திக்க தூண்டியது பு..தொ.மு.

தன்னுடைய ஆலையில் நமக்கு நடக்கும் பிரச்சனைகளைப் போலவே இந்த சமூகத்தில் இருக்கிற அனைத்து தொழிலாளர்களுக்கும் பிரச்சனை இருக்கிறது, இதற்கு தொழிலாளிகள் வர்க்கமாக திரள வேண்டும் என்ற அடிப்படையில் மாதந்தோறும் ஷிப்ட் கூட்டங்கள் மற்றும் பொதுக்குழு நடத்தி வர்க்க உணர்வூட்டுவது.

இதன் விளைவாக தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மணலியைச் சுற்றி இருக்கக்கூடிய ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக போராடுவது, அவர்களுடைய போராட்டத்தில் கலந்து கொள்வது என்று மாறியிருக்கிறார்கள். இதில் குறிப்பாக,

  • விம்கோ நகரில் உள்ள ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் தொழிலாளர்கள் பணி நிரந்தரத்திற்காக போராடிய போது தினந்தோறும் சென்று அந்த தொழிலாளிகளின் போராட்டத்தில் தோளோடு தோள் நின்றது.
  • காட்டுப்பள்ளியில் மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து எல்&டி நிறுவனத்துக்கு எதிராக போராடிய போது அவர்களோடு அந்த ஊரிலேயே தங்கி அவர்களோடு போராடியது.
  • மணலிக்கு அருகிலுள்ள சாத்தாங்காடு விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளாண்ட் தொழிலாளர்கள் தங்களுடைய வேலையை இழந்து வீதியில் நின்ற போது அவர்களுக்காக போராடியது.
  • ஸ்ரீபெரும்புதுர் இருங்காட்டுக் கோட்டையில் உள்ள GSH என்ற பன்னாட்டுக் கம்பெனி தொழிலாளர்கள் தங்களுடைய உரிமை பறிப்புக்கு எதிராக போராடிய போது அவர்களுடைய போராட்டத்தில் SRF- ல் இருந்து 11 தொழிலாளர்கள் கலந்து கொண்டு சிறை சென்றது.
  • அதுமட்டுமல்லாமல் அன்றாடம் சமூகத்தில் உழைக்கும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீக்கு எதிராக பு.ஜ.தொ.மு சார்பில் நடத்தப்படும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் SRF தொழிலாளிகள் கலந்து கொண்டது.
  • தற்போது MRF தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டத்துக்கு ஆதரவளிப்பது.

இப்படி பொருளாதார பிரச்சனை, தன்னுடைய பிரச்சனை என்பது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தொழிலாளி வர்க்கத்துக்காகவும் போராட வேண்டும் என்றும், தொழிலாளிகளே ஆலைகளை நடத்த வேண்டும் என்றும், அதற்கு தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற கண்ணோட்டத்தையும் SRF தொழிலாளிகள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது பு.ஜ.தொ.மு. இதன் காரணமாகவே கடந்த நான்கு வருடங்களாக பு.ஜ.தொ.மு தலைமையை தொழிலாளிகள் தேர்ந்தெடுத்தனர்.

2015 ம் ஆண்டு நடந்த தேர்தல்

இந்த நிலையில் தான் இந்த ஆண்டு தேர்தல் 31.01.15 அன்று நடைபெற்றது. இதில் பு.ஜ.தொ.மு வை எதிர்த்து ULF தலைமையில் ஓர் அணியும், ஏற்கனவே குசேலர் தலைமையில் நலமன்றம் என்ற பெயரில் செயல்பட்டு வந்தவர்கள் தற்போது குசேலரை நீக்கிவிட்டு, திமுகவின் அமைப்பு செயலாளார் RS பாரதியை தலைவராக ஏற்றுக்கொண்டு ஜனநாயக முற்போக்கு மன்றம் என்ற பெயரில் ஓர் அணியும் போட்டியிட்டனர். தற்போது நடைமுறையில் உள்ள தொழிற்சங்க ஜனநாயகத்தை வீழ்த்தி விட்டு தனிநபர் துதிபாடலை கொண்டு வருவதற்காகவும், பதவி வெறிக்காகவும் தொழிலாளிகளை சாதி ரீதியாக அணிதிரட்டுவது, தொழிலாளிகளுக்கு டோக்கன் கொடுத்து சாராயம் விநியோகிப்பது போன்ற வேலைகளை செய்தனர் இரு அணிகளும்.

வர்க்க உணர்வு ஊட்டப்பட்டு வரும் தொழிலாளிகளுக்கு சாராயம் ஊற்றி ஜெயித்து விட நினைத்து ஏமாந்தனர் எதிரணியினர். தொழிலாளி வர்க்க உரிமைக்காக போராடும் ஒரே அமைப்பு புஜதொமு தான் என்பதை பல்வேறு செயல்பாடுகளின் மூலம் தொழிலாளிகளிடம் புஜதொமு பதிய வந்ததன் விளைவாக, சங்கப் பொதுச்செயலாளர் தவிர்த்த அனைவரையும் ஒரே அணியாக தேர்ந்தெடுத்தனர் தொழிலாளர்கள். ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடித்த பின்னர் அதே தலைமையை SRF தொழிலாளிகள் தேர்வு செய்ததில்லை. SRF தொழிற்சங்க வரலாற்றில் முதல் முறையாக ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடித்து வெற்றி பெற்றுள்ளது புஜதொமு.

ஊதியம் அதிகம் வாங்கிக் கொடுக்கும் தலைவரை தேர்ந்தெடுப்பது என்ற காரியவாத கண்ணோட்டத்தை தொழிலாளர்களிடம் மாற்றுவதற்கு புஜதொமு நான்காண்டுகளாக போராடியதைப் போலவே தொடர்ந்து போராடுவதற்கு உந்துதலாக இந்த வெற்றி அமைந்துள்ளது.

05.02.15 பொதுக்குழுவில் வெற்றி பெற்ற சங்க நிர்வாகிகளை அறிமுகம் செய்யும் கூட்டம் நடந்தது. “பொதுக்குழுவில்  கலந்து கொண்டால் உற்பத்தி பாதிக்கும். அதனால் பொதுக்குழுவுக்கு போகக்கூடாது” என்று பதவியேற்கும் நாளன்றே அறிவிப்பை வெளியிட்டு நிர்வாகம் கலகம் செய்ய எத்தனித்தது. ஆனால் திட்டமிட்டபடி பெரும்பான்மையான தொழிலாளர்கள் முன்னிலையில் வெற்றி பெற்ற சங்க நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.

தகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
திருவள்ளூர் மாவட்டம் – 9444213318