privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்ஊசிப்போன சாம்பாரை அமிர்தமாக்கும் வைரமுத்து

ஊசிப்போன சாம்பாரை அமிர்தமாக்கும் வைரமுத்து

-

புதிதாக வெள்ளை அடித்த சுவருக்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் இன்னொரு ஜென்மம் வைரமுத்து.

வைரமுத்து சிறுகதைகள்
சிட்டுக்குருவி லேகிய போஸ்டர்களை விஞ்சும்படி குட்டிச்சுவரெங்கும் வைரமுத்து சிறுகதைகள் என்ற விளம்பரத்தை இறக்கிவிட்டது குமுதம்.

சிட்டுக்குருவி லேகிய போஸ்டர்களை விஞ்சும்படி குட்டிச்சுவரெங்கும் வைரமுத்து சிறுகதைகள் என்ற விளம்பரத்தை இறக்கிவிட்டது குமுதம். பதிலுக்கு வைரமுத்து “குமுதம் கோட்டைக்குள் ஒரு ஊழியன் நுழைவதற்குப் பெருந்தகுதி வேண்டும்” என்று குமுதம் குடும்பவிழாவில் தனது தகுதியை காண்பித்தார். நடுப்பக்கத்தில் ஏதாவது ஒரு நடிகையின் தொப்புளைக்காட்டி காசு சம்பாதிக்கும் பயலுக்கு என்னடா தகுதி? என்று வாசலில் நிற்கும் வாட்ச்மேன் கேட்கவா போகிறார்! தமிழ் ‘சொரியும்’ வைரமுத்து தாராளமாய் அவிழ்த்து விடலாம்தான்!

இந்த இலக்கிய வைரஸ் இத்தோடு முடியவில்லை. “பிராமணப் பின்னணியில் பிராமண மொழியில் கவிப்பேரரசு எழுதிய முதல் சிறுகதை” என்ற அதிரடி விளம்பரம் அடுத்தடுத்து! ஏற்கனவே குமுதத்தில் “காயத்ரி மந்திரம்” என்று மடிசார் மாமிகள் மாடலிங் படங்களைப் போட்டு அலமு சொன்னாளா! சாஸ்த்திரோத்தமான குடும்பம் என்று வடித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் தேவிபாலாவுக்கே திடுக்கிட்டிருக்கும் நம்ம மடப்பள்ளியில் இது ஏதுடா புது பெருச்சாளின்னு!

இலக்கிய உலகின் பாப்பாரத்தனம் ஒன்றும் புதிதல்ல, ஏற்கனவே அக்கிரகாரத்து பெருங்காயத்தில் கரைந்துபோன வாயுக்கள் நிறைய உண்டு, இதில் புதுசு கண்ணா புதுசு இந்தப் பேரரசு! பார்ப்பன பின்னணியைக் கையாண்டு, பார்ப்பன மொழியைக் கையாண்டு அதன் பஞ்சமாபாதகங்களை அடையாளப்படுத்தியிருந்தால் வைரமுத்துவை நாமும் வரவேற்கலாம். “வேதங்கள் சொல்லாதது” என்று குமுதத்தில் அவர் எழுதியிருக்கும் கதையில் நடேசய்யர் என்ற கதாபாத்திரத்தின் வழி பார்ப்பன சாதி பிடிமானத்தை, சாதி ஆச்சாரத்தை இடித்துரைப்பதுபோல கதையைப் பின்னிக்கொண்டே போய் கடைசியில் சாதிவெறிக்கென்றே உருவான சங்கரமடத்தின் மகா சாதிவெறியரை மகா பெரியவா நல்லவா என்றொரு மகா பொய்யை இன்றைய தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டுவது பார்ப்பன நரித்தனம், பச்சை பொய்யும் கூட.

கதையை நீங்களே படித்துப்பாருங்கள், கதையின் சுருக்கம் இதுதான்:

“பிறப்பு முதல் இறப்பு வரை நான் பிராமணன் என்று உள்ளும், புறமும் உறுதிபட வாழும் உடும்புப் பிராமணர் வகையைச் சேர்ந்த நடேச அய்யர் என்பவர் மூன்று தலைமுறையாய் வைத்திருந்த தென்னந்தோப்பை ஒரு சூத்திரர் வாங்குகிறார், (வண்டு முருகன் கதை சொல்வது போல இருப்பதால் அநேகமாக அதை வாங்குபவர் வைரமுத்து உருவில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை) விற்கும் அய்யரின் நிபந்தனை, அந்த தோப்புக்குள் பாதயாத்திரையின் போது பரமாச்சாரியார் தங்கிப் போன ஒரு சிறு காரை வீட்டை தெய்வ சன்னிதியாக அவர் வழிபடுவதால், அதை கோயிலா பாதுகாக்கணும், பரமாச்சாரியாருக்கு விரோதமான எதுவும் பொழங்கக் கூடாது!” என்பது.

சங்கராச்சாரி
“லோகமே அழியப் போறது ஓய்! அழியப் போறது… ஸ்த்ரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுத்தா என்ன ஆகும்? இஷ்ட்டப்பட்டவா கூட ஸ்திரிகள் ஓடிப்போவா, அபாண்டமா, அபச்சாரமா போயிடும்! K

தோப்பை பராமரிக்க கூலிக்கு குடிவைக்கப்படும், (குடிசையில்தான்! பாப்பார நிபந்தனைக்கு கட்டுப்படும் அருவா மீச ஜாதி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு தான் வச்சதுதான் சட்டம், தான் கை காட்டுன ஓலதான் வீடு!) தாழ்த்தப்பட்ட கணவனும் மனைவியும், பூஜைக்கு வைத்த குருக்கள் ஊருக்குப் போனதால் தாமே பரமாச்சாரியார் சன்னதிக்கு விளக்குப்போட, “அபச்சாரம்” என நடேச அய்யர் கத்துகிறார், “மிலேச்சர்களை உள்ளே விட்டது தப்பு!” என்று அய்யர் கத்தி தீர்க்க, அவரது மனுதர்மம், மனுச தர்மம் பற்றி வாதாடி விளக்கம் தரும் தோப்புக்காரர், பின் வாக்கு மீறிவிட்டேனோ என்று தனக்குத்தானே சங்கராச்சாரி, அத்வைதத்தை துணைக்கு அழைத்து மனதுக்குள் சரிபார்த்துக் கொள்கிறார் (நடேச அய்யருக்கு எதிராக முற்போக்காக பேசிவிட்டு, தோப்புக்காரரை விறைப்பாக விட்டால், வைரமுத்து கதை என்னாவது? பயப்படாதிங்க நான் உங்க ஆள் தான் என்று பம்மிக்காட்டுவதற்காக அடுத்த நொடியே ஆச்சாரியார், அத்வைதம் இதெல்லாம் என் பார்வைக்கு விரோதமில்லை என்று தோப்புக்கரணம்!)

இந்தச் சூழலில் சூறைக்காற்று வந்து தோப்பில் தாழ்த்தப்பட்ட இருளாயி, காளியப்பா ஓலை வீடு பிய்த்துக் கொண்டுபோக நள்ளிரவில் நடுங்கித் தவித்து அழைக்க, சாமி சன்னிதியான காரை வீட்டில் போய் குடியிருங்க என்கிறார் தோப்புக்காரர். அட கதை புரட்சிகரமான முடிவா இருக்கே என்று, அடுத்த வரியைப் பார்த்தால், வைரமுத்து தோப்புக்காரராகி மட்டைக்கு ரெண்டாய் இப்படி கிழிக்கிறார். “என் முடிவை மகா பெரியவர் ஏற்றுக்கொள்வார்! நடேச அய்யர் போகப்போக புரிந்து கொள்வார்!” இதுதான் கதை.

பரமாச்சாரியார் படுத்து எழுந்த இடத்தில் பண்ணையாள் புழங்கியது அபச்சாரம் என்று புழுங்கியது நடேச அய்யரின் சாதி வெறி என்றால், பண்ணையாள்கள் புழங்குமிடத்தை காரை வீட்டு சன்னிதானத்திற்கு எதிராக ஒரு காற்றுக்கு பிய்த்துக்கொண்டு போகும் அளவுக்கு அவர்களை ஒரு ஓலை குடிசையில் தள்ளிய (வைரமுத்து) பண்ணையாரின் தன்மை என்ன வெறி? இப்படி பண்ணையாரின் கண்ணியமான உருவம் தென்படும் இடமெங்கும் கதைக்களன் எழுப்பும் கேள்விகள் பல உண்டு.

கதைப்படி இதையெல்லாம் கேட்ககூடாது? என்றால் சங்கராச்சாரிக்கு மட்டும் என்ன சலுகை வேண்டி கிடக்கு? பண்ணையாட்களின் அதாவது, தாழ்த்தப்பட்டவர்களின் நடத்தையை வாழ்க்கையில் இருந்து விவரிக்கும் கதை பரமாச்சாரியாரின் யோக்கியதையை மட்டும் தத்துவ வழியில் விளக்குவது என்ன இலக்கிய நியாயம்? பார்ப்பன சாதி வெறியை எதிர்ப்பது போலவும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் பரமாச்சாரியாரை எதிர்க்கவில்லை என்பதையும் காட்டவேண்டும். இன்னும் விளக்கமாகச் சொன்னால் அடக்கப்பட்டவர்களின் உணர்ச்சியையும் அறுவடை செய்ய வேண்டும், அவர்களை அடக்கியவர்களின் ஆதரவையும் பெறவேண்டும் என்பது இலக்கியமா? அயோக்கியத்தனமா? எழுதப்பட்டதை விட மறைக்கப்பட்டதில் இருக்கிறது கதையின் கரு. இதைப் புரிந்துகொள்ள வாசகனுக்கு வெறும் வாசிப்பு அனுபவம் மட்டும் போதாது, சமூக வாழ்க்கையின் அனுபவங்களும் வேண்டும்.

 "அழுக்கு சட்டிக்கு பொன் குளியலா?!"
“அழுக்கு சட்டிக்கு பொன் குளியலா?!”

“பரமாச்சாரியார் சொல்லாதது” என்று தலைப்பு வைக்க வேண்டிய கதையை பார்ப்பனியத்திற்கு ஏற்றமாதிரி “வேதங்கள் சொல்லாதது” என்று உடும்புப் பார்ப்பனர்களை சிந்திக்க வைக்கிறாராம்! வைரமுத்து உடும்பு பிடிப்பதைப் பற்றி நமக்கு கவலையில்லை, கதைக் களன் படியும், பார்ப்பன சாதிவெறியை, அதன் பயங்கரத்தை விண்டு வைப்பதை விடவும், தனது ‘சூத்திர’ அடக்கத்தை, அவாள் ஆத்திரம் கொள்ளாத அளவுக்கு, அவாள் வேதம், ஆச்சார்யாள் படியே தான் பேச நேர்ந்தது என்று தன்னிலை விளக்கமாகவே கதையின் ‘ஆன்மா’ ஒலிப்பதை சகித்துக் கொண்டாலும், மத்தவாதான் சாதி பாக்குறவா, மகா பெரியவா நல்லவா, என்பது மாதிரி கதை விடுவதுதான் சகிக்கமுடியாத துர்நாற்றம்!

தருண் விஜய்க்கு பாராட்டு விழா நடத்தி தன்னை விலை பேசிக்கொண்டவர், ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரி சாமிகளை கதாநாயகராக காட்டுவதன் மூலம் மோடியின் கையால் ஒரு விருது வாங்க முத்தமிழையும் ‘நூலில்’ கட்டி இழுக்க ஆழ்வார் வைரமுத்து அணியமாகிவிட்டார்.

பிராமணப் பின்னணியையும், பிராமண மொழி நடையையும் ஒரு பிராண்ட் வேல்யூவாகவே ஊடகங்கள் உருவாக்கி இருக்கின்றன. சூத்திர சூரியன் எஃப்.எம் கூட கிட்டு மாமா சுசி மாமியைத்தான் ஏவி விடுகிறது. பார்ப்பனியத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும், அய்க்கியப்படுத்திக் கொள்ளவும் நாலுகாசு பார்த்தவுடன் நாயாய் அலையும் கருப்பு பார்ப்பனர்களின் கேவல மனநிலை, இயல், இசை, இலக்கியம் அனைத்திலும் விசமாய் பரவிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த விசத்தில் ஒன்றுதான் வைரமுத்துவின் குமுதம் கதை.

திருவரங்கத்தில் கோயில் நுழைவு போராட்டம் நடத்திய மக்கள் மீது மிளகாய் பொடி தூவி கண்களை எரிய வைத்த அக்கிரகாரத்து மாமிகளை போலீசு விசாரித்ததற்காக “என்னவால்லாம் நம்மவா கஷ்ட்டப்படுறா என்று கண்ணீர் சிந்திய” (ஆதாரம்: அக்னி கோத்திரம் தாத்தாச்சாரியாரின் இந்துமதம் எங்கே போகிறது!) பெரியவா, சாதி சமத்துவத்தை ஏற்கும் மகா பெரியவராம் வைரமுத்துவுக்கு! பெரிய சங்கராச்சாரியின் சாதி, மத, ஆணாதிக்க வெறியைத் தெரிந்துகொள்ள மஞ்சை வசந்தனின் “தெய்வத்தின் குரலா? தில்லுமுல்லு பேச்சா!” நூலைப் பார்த்தால் உண்மை முகம் தெரியும். பழைய புதிய கலாச்சாரம் இதழின் “அழுக்கு சட்டிக்கு பொன் குளியலா?!” என்ற சங்கராச்சாரியாரின் கனகாபிஷேகம் பற்றிய கட்டுரையை படித்தால் மகா பெரியவாளின் மகா கேடுகள் விளங்கும்.

வைரமுத்து
பல் எல்லாம் தெரியக்காட்டி, பைந்தமிழ் தெரியக்காட்டி பார்ப்பனியத்திற்கு ஆள்பிடிக்கும் தமிழக இலக்கியவாதிகள் வரிசை புதிதல்ல

அவாளாகப் பிறந்தாலும் அவாளுக்கே சவாலாக சில உண்மைகளை அக்னிகோத்திரம் போட்டு உடைக்கிறார், ஆழ்வார் வைரமுத்துவோ பெரிய சங்கராச்சாரியார் பித்தலாட்டங்களை மறைக்கிறார். அக்னிகோத்திரம் அடையாளம் காட்டும் சந்திரசேகர சாமிகளின் யோக்கியதையைப் பாருங்கள்.

பெண்களுக்கு சொத்துரிமை என்ற செய்தி வந்தவுடனேயே மகா பெரியவர், “லோகமே அழியப் போறது ஓய்! அழியப் போறது… ஸ்த்ரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுத்தா என்ன ஆகும்? இஷ்ட்டப்பட்டவா கூட ஸ்திரிகள் ஓடிப்போவா, அபாண்டமா, அபச்சாரமா போயிடும்! ஸ்திரிகளுக்கு பாத்யமோ, சம்பாத்யமோ இருக்கப்படாதுன்னு, மனுஸ்மிருதி சொல்லிருக்கு! ஸ்த்ரீ தர்மத்தை பாதுகாக்க இந்த ‘பில்லை’ எதிர்த்து ஊரெல்லாம் கூட்டம் போடணும், இதுக்கு நிறைய ஸ்த்ரீகளை திரட்டனும்…” என்றெல்லாம் அவசர ஆணைகளை பிறப்பித்தார் மகா பெரியவர் (இந்துமதம் எங்கே போகிறது நூல் பக். 108-109).

இந்த மகா வில்லன்தான் வைரமுத்துவுக்கு மகா கதாநாயகர். ஊசிப்போன சாம்பாரை ஆகா! அமிழ்தம் என்று வைரமுத்து அருந்துவது அவரது தனிப்பட்ட அடிமை உரிமை, அதை ஊர் தலையில் கட்டுவதைத்தான் நாம் விமர்சிக்கிறோம், கண்டிக்கிறோம்.

நாட்டுக்கோட்டையைச் சேர்ந்த அருணாச்சலம் ஒருமுறை பெரியவாளைப் பார்க்க மடத்துக்கு வர, ‘மடி’ யாய் இருந்த நேரம் அதாவது ஆச்சாரமான நேரத்தில் அவரிடம் தமிழில் பேசினால் தீட்டாகிவிடும் என்று, பார்க்காமலேயே அவரை அனுப்பி ‘தமிழை நீச மொழி’ என்று இழிவுபடுத்திய இந்த சாதி, சமஸ்கிருத வெறியர்தான் குமுதம் செட்டியாருக்கும், தேவர் வைரமுத்துவுக்கும் குலத்தையே இழிவுபடுத்தினாலும் குல தெய்வமாம். சமத்துவம் ஏற்கும் சான்றோராம்!

இப்படி ஒன்று இரண்டல்ல, விதவைகளை இழிவுபடுத்தியது, தாழ்த்தப்பட்டவர்களை இழிவுபடுத்துவது என்ற மகா அயோக்கியத்தனங்களை எல்லாம் இந்து தர்மமாக இஞ்சு பிசகாமல் கடைபிடித்த மகா சாதிவெறியரை கருணையின் வடிவாக கதை விடுவதும், சமஸ்கிருத மொழி வெறி, சனாதன குல வெறியை பரப்பும் பார்ப்பன – பா.ஜ.க. தருண்விஜயை தமிழை வாழவைக்க வந்தவராக பசை தடவுவதும் வைரமுத்து வயிறு வளர்க்கும் கேவலங்கள்! இதற்காகத்தானே ஆசைப்படுகிறாய் வைரமுத்து என்று ஆர்.எஸ்.எஸ். கும்பலே ரத்தம் வர சொரிவது தாங்காமல் அவசரமாக மோடி கையால் ஒரு புத்தம் புது விருதை வழங்கும்படி விரிகிறது வைரமுத்துவின் கலைச்சேவை.

“ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! என்று மடத்தை கழுவிவிட்டு, அக்கிரஹாரமே தொட்டு கண்ணில் ஒத்திக்கொள்ளும் படி புனிதப் பசுவாய் திரிந்தார் ஜெயகாந்தன், மகா பெரியவாளையே மடக்கியதன் மூலம் மாமாங்குள திவசப் பார்ப்பனர்களையே திடுக்கிட வைத்துவிட்டார் வைரமுத்து!

பெரியார்
பெரியவாளுக்கு மாற்று முகம் கற்பிக்கும் – பிழைக்கப்பார்க்கும் வைரமுத்து போன்ற ஆரிய அடிமைகளை அன்றே அடையாளம் காட்டினார் பெரியார்

பெரியவாளுக்கு மாற்று முகம் கற்பிக்கும் – பிழைக்கப்பார்க்கும் வைரமுத்து போன்ற ஆரிய அடிமைகளை அன்றே அடையாளம் காட்டினார் பெரியார்: “நமது புலவர்கள் படித்துப்போட்டு அளப்பார்கள் தோழர்களே! சாதாரணமாகப் படிக்காதவரிடமாவது பகுத்தறிவு வாசனையினைக் காணலாம், இந்தப் புராணக் குப்பைகளைப் படித்து அதனை தமது வாழ்வுக்கு கருவியாக அமைத்துக் கொண்டவர்களிடம் மருந்துக்கும் கூட பகுத்தறிவு தோன்றாது…. மிருகங்கள் மட்டும்தான் தாம் பிழைப்பதற்காக மட்டும் வாழ்கின்றன. மனிதன் அப்படியல்ல பிறருக்காக வாழவேண்டும். நம் இனத்திற்கு மரியாதை உண்டாக்க வேண்டும்…” (திருச்சி பெரியார் பயிற்சி பள்ளி இலக்கியமன்ற திறப்புவிழா, சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆகியவற்றில் பெரியார் ஆற்றிய உரை, 23-8-1963 & 30-10-1967).

“மேலோட்டமாகப் பார்த்தால் முற்போக்கு உள்ளே கிளறினால் பாப்பார சீக்கு!” என்ற போலிப் புலவர்களை சரியாகவே தோலுரித்தார் பெரியார். பெரியவாளை தூக்கிக் கொண்டு பரப்புரை செய்ய வந்தால், கட்டாயம் பெரியார் எதிரே வருவார்!

பல் எல்லாம் தெரியக்காட்டி, பைந்தமிழ் தெரியக்காட்டி பார்ப்பனியத்திற்கு ஆள்பிடிக்கும் தமிழக இலக்கியவாதிகள் வரிசை புதிதல்ல, இருந்தாலும் இந்த செய் நேர்த்திக்கு வைரமுத்து தென்னந்தோப்பு பக்கம் போனதுக்கு, ஜெயமோகன் பக்கம் போயிருக்கலாம். பார்ப்பனியத்திற்கான ‘ஹோம் ஒர்க்’ செலவு மிச்சமாகியிருக்கும், மதிப்பீடு தவறுதான் பார்ப்பனியமே ஹோம் ஆனவர்களுக்கு தனியே ஒர்க் என்ன வேண்டிகிடக்கு!

உலகமயத்தின் புதுப்பார்ப்பனர்கள் ‘குந்த ஒரு குச்சி வாங்கி’ அவாளை வைத்து கணபதி ஹோமம் பண்ணுவதும், வைரமுத்து குமுதத்தில் அவாளை வைத்து ஒரு கதை எழுதுவதும் வேறுவேறு அல்ல! பார்ப்பன மயமாக்கலின் பரிணாமங்கள்தான். என்னங்க, கதையப் பாத்தா மனிதாபிமானம், சாதி ஒழிப்பு, சமத்துவம், பார்ப்பன எதிர்ப்பு எல்லாம் கொட்டிக்கிடக்குற மாதிரி இருக்கு இப்படி சொல்றீங்களே என்பவரா நீங்கள்? மீண்டும் கதைக்கு வெளியே வந்து ‘மகா பெரியவாளின்’ நடத்தையை பாருங்கள்! இப்போது, வைரமுத்துவின் விசமத்தனத்திற்கு நடேச அய்யரின் விசமே மேல் என்பீர்கள்!

– துரை.சண்முகம்

  1. வைரமுத்துவே குருட்டு அதிஸ்டத்தில் வண்டி ஓட்டும் ஒரு ஆள். வைரமுத்துவை விடநூறுமடங்கு சிறந்த கவிஞர் வாலி அவர்கள். ஆனால் கவிப்பேரரசு என்பதற்கு அர்த்தமறியா மண்டுகள் வைரமுத்துவுக்கு பொருத்தமில்லா பட்டத்தை கொடுத்துள்ளனர். அருவருப்பான வரிகள், உளறல்களை அர்த்தமில்லா வரிகளை அதிகம் பாடலாக எழுதியது வைரமுத்து என்பது நல்ல தமிழ் ரசிகர்களுக்கு தெரியும். கண்ணதாசன் பட்டுக்கோட்டை, தஞ்சை ராமையாதாஸ் இவர்கள் கால்தூசுக்குக்கூட பெறாத ஆள் வைரமுத்து.

    • Kavignaar Vaali is a brahmin hence he was not given the title like Kaviperarasu (and he is least bothered) though he is a better poet than Vairamuthu just like how Bharathiaar’s songs were overlooked for thamizh thaai vaazthu.. (The funny part is those who made thiru.vi.ka’s song as thamizh thaai vaazhthu did not realize that this song has three sanskrit words.. Ignorant morons).

      Anyway the point is vairamuthu knows whom to pacify under what circumstances

  2. பார்ப்பான் காலில் விழுந்து சேவை செய்வதில், வைரமுத்து நிச்சயம் ஜெய காந்தனிடம் தோல்வி அடைவார் ..
    திராவிட கருத்து சிறப்பாக இருந்த போதே தன் இனம் எக்கேடு அடைந்தால் என்ன என்று நால் வர்ணத்தை ஆதரித்து பேசி பெருமைகள் பல அடைந்தவர் ஜெயகாந்தன்.

  3. வைரமுத்துவைக் ‘கவிப்பேரரசு’ என்று கலைஞர் கருணாநிதி அழைக்கச்சொன்னது ஒரு மிகப்பெரிய மோசடி. இது ஏதோ வைரமுத்துவின் மீதுள்ள அன்பினாலோ அல்லது வைரமுத்துவின் திறமை மீதுள்ள வியப்பினாலோ கலைஞர் சூட்டிய பட்டம் அல்ல.
    கலைஞர் மீதுள்ள கோபத்தால் மக்கள் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுப்பதுபோல கவியரசர் கண்ணதாசன் மீதுள்ள கோபத்தால் கண்ணதாசனுக்கு கவியரசர் என்ற பெயரை மறக்கடிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக வைரமுத்துவைக் கவியரசர் என்று அழைக்கவேண்டும் என்று பணித்தார் கருணாநிதி. கவியரசர் என்று வைரமுத்துவுக்குப் ‘பட்டம் சூட்டியவுடன்’ மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. அதனால் வைரமுத்துவே “அந்தப் பட்டம் எனக்கு வேண்டாம் இனி” என்று அறிவித்தார். உடனே, “கவியரசு என்றால்தானே உனக்கு எதிர்ப்பு? உன்னைக் கவிப்பேரரசு என்று அழைக்கப்போகிறேன்” என்றார் கலைஞர்.
    கலைஞர் என்றால் கருணாநிதி என்பது தமிழுலகம் ஒப்புக்கொண்டுவிட்ட ஒரு பெயர். அவர்மீது இருக்கும் கோபத்தில் வேறு யாருக்காவது ‘பெருங்கலைஞர்’ என்று பெயர் சூட்டலாமா?
    அறிஞர் என்பதும், பேரறிஞர் என்பதும் அண்ணாவுக்கு இருக்கும் புகழாரம். அதைச் சிதைக்கவேண்டுமென்பதற்காக வேறு யாருக்காவது ‘பெரும்பேரறிஞர்’ என்று பட்டம் சூட்டலாமா? கலைஞரே இதனை ஒப்புக்கொள்வாரா? என்ற கேள்விகளை நான் வெகு காலமாகவே இலக்கியக் கூட்டங்களில் எழுப்பி வருகிறேன்.

  4. *******இலக்கிய உலகின் பாப்பாரத்தனம் ஒன்றும் புதிதல்ல****

    I completely agree with this. The greatest contribution to Tamil literature in the last century came from Brahmins whether it may be Bharathiyaar’s poems (or) Kalki’s novels (or) Sujatha’s short stories. These contributions to tamil literature couldn’t be matched by any other community in terms of quality or passion. That’s the plain truth. (Not to mention U.VE.SA iyer’s contributions here).

Leave a Reply to saudi indian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க