privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமெட்ரிக்குலேஷன் – பள்ளிகள் மெக்காலேயின் வாரிசுகள்

மெட்ரிக்குலேஷன் – பள்ளிகள் மெக்காலேயின் வாரிசுகள்

-

மெட்ரிக்குலேஷன் – மழலையர் பள்ளிகள் மெக்காலேயின் உண்மையான வாரிசுகள்

(தமிழ்நாட்டை பீடித்திருக்கும் ஆங்கில வழி மெட்ரிகுலேசன் பள்ளிகள் குறித்து 1997-ம் ஆண்டு புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை. கடந்த 18 ஆண்டுகளில் பள்ளிகளின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, கட்டணம் ஒவ்வொன்றும் பல மடங்கு அதிகரித்து இந்த தனியார் கல்விக் கொள்ளையர்களின் சுரண்டல் விரிவடைந்திருக்கிறது.  மறுபக்கம், அரசுப் பள்ளிகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றன.

மக்களின் அடிப்படை உரிமையான கல்வித் துறையில் தனியார் சுரண்டலை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் கட்டுரை.)

ரு தேசிய இனத்தை முற்றாக அழிக்க வேண்டுமெனில் ‘’அவர்களின் மொழியை முதலில் அழி’’ என்பது தேசிய இன ஒடுக்குமுறையாளர்களின் பாதை.

“சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்!” என்ற வரிகளின் பொருள் என்னவாகி விட்டது? சொந்த மண்ணில் பிழைக்க வழி இல்லை, பிழைப்பு தேடி எட்டுத்திக்கும் ஓடி பிறந்த மண் பக்கம் திரும்பிக்கூட பார்க்க வேண்டாம் என்கிற நிலைதானே நிலவுகிறது!

மெக்காலே கல்வி முறை
தமிழன் பிறப்பால் மட்டும் தமிழனாக இருந்து கொண்டு சமூகத்தின் அனைத்து அடையாளங்களையும் இழந்து வருகிறான்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே மா.பொ.சி.அவர்களும், சி.சுப்பிரமணியம் அவர்களும் “தமிழால் முடியும்” “தமிழால் முடியாதது?” எது என்று தமிழின் வலிமையை உணர்த்திடும் வகையில் எடுத்துக் கூறினர். மறைமலையடிகள், பெருஞ்சித்திரனார் போன்ற தமிழ் மொழிப் போராட்ட தியாகிகள் சாகும்வரை தமிழை ஆட்சி மொழி, பயிற்றுமொழி, வழிபாட்டு மொழி என சகல துறைகளிலும் தமிழை அரியணை ஏற்றிட அரும்பாடுபட்டனர். திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் சமஸ்கிருதமயமான பார்ப்பனத் தமிழும், ஆங்கில மோகமும் கொஞ்சம் மறைந்து தூய தமிழ் வளரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் இவ்வளர்ச்சி தேக்கமடைந்ததோடு நில்லாமல் ‘’மெல்லத் தமிழினிச் சாகும்; அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஒங்கும்!’’ என்ற நிலையை இன்று கண்கூடாகக் கண்டு வருகிறோம். தமிழ்மொழியோடு தமிழ் இனமும் அழிந்து அதன் சொந்த அடையாளங்களை மெல்லமெல்ல இழந்து வருகிறது. அதற்கு இந்த மெட்ரிக்குலேசன் வணிக நிறுவனங்கள் பிரதான பங்காற்றி வருகின்றன.

கலை, இலக்கியம், தொலைக்காட்சி, திரைப்படம், வழக்குமொழி, விளையாட்டு, பயிற்று மொழி, பொழுது போக்கு என்று எல்லாத் துறைகளிலும் தமிழ் ‘’தமிங்கிலமாக’’ (தமிழும் ஆங்கிலமும் கலந்ததாக) மாறி அழிவை நோக்கிக் சென்று கொண்டிருக்கிறது. தமிழன் பிறப்பால் மட்டும் தமிழனாக இருந்து கொண்டு, பேச்சு, நடை உடை, பண்பாடு, வாழ்க்கை முறை, சிந்தனை போன்ற ஒரு சமூகத்தின் அனைத்து அடையாளங்களையும் இழந்து வருகிறான்.

நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு பேராசிரியர் தமிழ்க் குடிமகன், பேராசியர் அன்பழகன் போன்றோரின் விடாமுயற்சியால் தி.மு.க அரசு மருத்துவம், பொறியியல் கல்வியை இந்தக் கல்வி ஆண்டு 1996-97 முதல் தமிழில் கொண்டு வந்திருக்கிறது.

நர்சரி பள்ளி
பட்டிதொட்டி தோறும் பால்மணம் மாறாத பிஞ்சுகளுக்கு ஆடுகளுக்கு மாட்டியிருக்கிற வேலித்தடுப்பு போன்று ஒரு டை, காலணி, (ஷூ).

ஆனால் தமிழினத்தின் தனித்தன்மையை சகல துறைகளிலும அழிக்க, குழி தோண்டி புதைக்க தமிங்கில இனப் பிரிவினர் முயற்சி எடுத்து வருகின்றனர். கடந்த ஐம்பதாண்டுகளில் கடின உழைப்பால் பெற்ற பலனை ஒரு சில நொடிகளில் அழித்துவிடக் கூடிய அசுர வேகத்தில் இந்த மெட்ரிக்குலேசன், மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

கல்வித் துறையில் இந்த மழலையர் பள்ளிகளும், மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் தமிழினத்தின் அடையாளங்கூடத் தெரியாத அளவிற்கு, எதிர்கால தலைமுறையினரை உருத்தெரியாமல் சிதைக்கும் ஒரு பெரிய இன விரோத யுத்தத்தை மிக அமைதியாக நடத்தி வருகின்றன.

புற்றீசலாகப் பெருகிவரும் மழலையர் – மெட்ரிக் பள்ளிகள்

கடந்த சில ஆண்டுகளில் மழலையர் பள்ளிகள் புற்றீசலாகப் பெருகி எண்பத்தி ஐந்தாயிரத்தை எட்டிவிட்டது. பட்டிதொட்டி தோறும் பால்மணம் மாறாத பிஞ்சுகளுக்கு ஆடுகளுக்கு மாட்டியிருக்கிற வேலித்தடுப்பு போன்று ஒரு டை, காலணி,(ஷூ). நடை உடையில் மட்டுமல்ல, சிந்தனையை இழக்கச் செய்யும் மிகக்கொடிய, அறிவுபூர்வமற்ற, இயற்கைக்கு விரோத அமைதித் தாக்குதல் ஏறத்தாழ ஒரு கோடி சிறார்கள் மீது தொடுக்கப்பட்டு வருகிறது.

ஆங்கில வழிக்கல்வி
இளம் தலைமுறையினர் தமிழே தெரியாமல் ஆங்கிலம், இந்தியில் கல்வியூட்டி வளர்க்கப்படுகிறார்கள்.

இந்த மம்மி,டாடி கலாச்சாரம் சிறுவயதிலேயே எதிர்காலத் தலைமுறையினரை பிறந்த மண்ணிலேயே தாய் மொழி, தமிழ் பண்பாடு, சொந்த அடையாளங்களை இழக்கச் செய்து தமிழினத்திற்கு எதிராக உருவாக்கும் விசச் செயலாகும். வேறு வழி இல்லை என்று விபரம் அறியாத பெற்றோர்களும், படித்த மக்களில் ஒரு பிரிவினரும் இதை ஏற்கவேண்டிய நிலை உருவாகி விட்டது.

தமிழகத்தில் ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் உள்ளன. 1980-க்கு பிறகு எண்ணிக்கை பதினைந்து மடங்காக அதிகரித்து இருக்கிறது. இந்த 1500 மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் குறைந்தது ஐநூறு மாணவர்கள் எனில், ஏழரை லட்சம் இளம் தலைமுறையினர் தமிழே தெரியாமல் ஆங்கிலம், இந்தியில் கல்வியூட்டி வளர்க்கப்படுகிறார்கள்.

மதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்பதால் பயிற்று மொழி ஆங்கிலம். அதோடு மொழிப் பாடப் பிரிவு ஒன்று மற்றும் இரண்டில் ஆங்கிலம் மற்றும் இந்திக்கே அதிக முக்கியத்துவம் தர்ப்படுகிறது. பெயரளவில் பத்தாம் வகுப்பு அரசு தேர்வுக்காக தமிழ் ஒரு பாடமாக இருந்து வருகிறது.

இத்தகைய மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் தமிழ் மட்டுமல்ல, தமிழாசிரியர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள். கல்வித் தகுதியும், இருபதாண்டுகள் ஆசிரியர் அனுபவமும் அதே பள்ளியில் பத்தாண்டுகள் துணை முதல்வர் என்ற அனுபவமும் இருந்த போதிலும் தமிழாசிரியரை ஆங்கில வழிப் பள்ளிக்குத் தலைமையாசிரியராக போடுவது எப்படி என்று புறக்கணிக்கிறார்கள்.

கேட்டால் ‘’இது என்ன அரசு உதவி பெறும் தமிழ்வழிப் பள்ளியா, அரசு விதிகளை ஏற்க? மெட்ரிகுலேசன் பள்ளிகள் சுயநிதிப் பள்ளிகள். அரசு ஒரு நயா பைசாகூட தருவதில்லை. இதில் அரசு தலையிட என்ன இருக்கிறது’’ என்கிறது மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் நிர்வாகம்.

மெட்ரிக் பள்ளிகளின் சுரண்டல் கொள்ளை

மெட்ரிக் சுரண்டல்
சுயநிதியைக் கொண்டு கல்விக்காக செய்துவரும் சேவை என்று சொல்லிக் கொண்டு, லட்சம் லட்சமாக பணம் சம்பாதிக்க மிகவும் லாபகரமான தொழில் வணிக நிறுவனமாக தமிழக மெட்ரிக்குலேசன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மெட்ரிக்குலேசன் வணிக நிறுவனங்கள் ஆங்கில மோகம் கொண்ட, நல்ல வருவாய்கொண்ட நடுத்தர பிரிவினரின் பிள்ளைகளுக்காகவே பள்ளியை நடத்தி வருகின்றன. சுயநிதியைக் கொண்டு கல்விக்காக செய்துவரும் சேவை என்று சொல்லிக் கொண்டு, லட்சம் லட்சமாக பணம் சம்பாதிக்க மிகவும் லாபகரமான தொழில் வணிக நிறுவனமாக தமிழக மெட்ரிக்குலேசன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

நடுத்தர மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஒரு பையனுக்கு ஆண்டுக்கு பத்து முதல் பதினைந்தாயிரத்தை கறந்து விடுகின்றன. இப்பள்ளிகளை கிராமப்புற, நகர்ப்புற ஏழை எளிய மக்கள் திரும்பிக்கூடப் பார்க்க இயலாது.

வர்க்க பிரிவினை
மிக உயர் வருவாய் பிரிவினருக்கு ஊட்டி, கொடைக்கானல், டூன் போன்ற இடங்களில் சி.பி.எஸ்.சி பள்ளிகள். நடுத்தர வருவாய் பிரிவினருக்கு இந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகள். ஏழை எளிய மக்களுக்கு அரசு மற்றும் கார்ப்பரேஷன் பள்ளிகள்.

திட்டமிட்டே மிக உயர் வருவாய் பிரிவினருக்கு ஊட்டி, கொடைக்கானல், டூன் போன்ற இடங்களில் சி.பி.எஸ்.சி பள்ளிகள். நடுத்தர வருவாய் பிரிவினருக்கு இந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகள். ஏழை எளிய மக்களுக்கு அரசு மற்றும் கார்ப்பரேஷன் பள்ளிகள் என்ற நிலை எழுதப்படாத விதியாகி விட்டது.

இத்தகைய மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் கலை, அறிவியலைப் படித்த வேலையற்ற பட்டதாரிகள், பெண்கள் மிகக் கீழ்த்தரமான முறையில், எந்தவித விதிமுறைகளும் இன்றி மிகக் குறைந்த சம்பளத்திற்கு மூளை உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். ஏறத்தாழ தமிழகத்தில் இருபது முதல் முப்பதாயிரம் பட்டதாரிகள் இத்தகைய பள்ளிகளில் கொத்தடிமைப் பட்டதாரி ஆசிரியர்ளாக இருந்து வருகின்றனர்.

+2 முடித்துவிட்டு இரண்டாண்டுகள் பட்டய (டிப்ளமோ) ஆசிரியர் கல்வி படித்தவர்கள் அரசு பள்ளிகளில் வேலைக்குச் சேர்ந்த இரண்டாண்டுகளில் நாலாயிரத்து ஐநூறு ஊதியமாகப் பெறுகிறார்கள். ஆனால் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில், எம்.ஏ, எம்.எஸ்.சி, பி.எட், எம்.எட், எம்.பில் என்று ஒரு மைல் நீளத்திற்குப் படித்தவருகளும் பத்தாண்டுகள் பணிபுரிந்தாலும் பெரும்பான்மையான பள்ளிகளில், ஆயிரம் அல்லது இரண்டாயிரம் மட்டுமே ஊதியமாகப் பெறுகிறார்கள்.

எந்தவித படிப்புமே இல்லாமல் ஒரு ஆசாரி, ஒரு கொத்தனார், ஒரு மெக்கானிக் மாதம் மூவாயிரம் –ஐந்தாயிரம் சம்பாதிக்கும்போது, இந்த பட்டதாரிகள் கூட்டம் மட்டும் கோட், சூட், டை என்று வேடமிட்டும், சம்பளமோ ஆயிரம் இரண்டாயிரத்தை தாண்டாத நிலை நிலவுகிறது.

அரசு தொடக்கப்பள்ளி
அரசு தொடக்கப்பள்ளி ஒன்றின் அவலம். இதில் பயிலும் சிறுவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை.

மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஒரு மாணவனிடம் ஓராண்டுக்கு பத்து முதல் பதினைந்தாயிரத்தை வசூல் செய்கிறது. ஆசிரியர் மாணவர் விகிதமோ ஒன்றுக்கு நாற்பது, ஐம்பது என்ற அளவில் உள்ளது. குறைந்தது ஐநூறு மாணவர்கள் எனில் நிறுவன வருவாயோ ஐம்பது லட்சம், ஆசிரியர்களுக்கான ஊதியமோ 750 -1500 வரைதான். பத்து, பதினைந்து ஆசிரியர்கள் என்றாலும் ஊதியச் செலவு ஒன்றரை முதல் இரண்டரை லட்சம்தான். இதர செலவு பத்து லட்சம் என்றாலும் நிறுவனத்திற்கு முப்பது லட்சத்திற்குக் குறையாமல் லாபம் கொட்டுகிறது.

இந்த லாபத்தைக் கொண்டு ஆண்டுக்காண்டு புதிய கிளைகள், பேருந்துகள், கட்டிடங்கள், வேன்கள், நிலம் ரியல் எஸ்டேட் வீடு என்று சொத்து சேர்த்து பகற் கொள்ளையடிக்கிறார்கள்.

ஆனால் இந்த லாபத்திற்கான பிரதான உழைப்பாளர்களான ஆசிரியர்களுக்கு எந்தவித வேலை உத்திரவாதமோ, உரிய ஊதியமோ, அரசு ஊழியரைப் போன்ற சலுகையோ எதுவுமின்றி முப்பதாயிரம் ஆசிரியர்கள் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

வேலை உத்திரவாதம், ஊதியம், இதர சலுகைகள் என்ற பிரச்சனை வரும் என்பதால் பல மெட்ரிக்குலேசன் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஆசிரியர்களை எடுப்பார்கள். இறுதியில் போகச் சொல்லி வடுவார்கள். கோடை விடுப்புகால ஊதியம் கிடையாது. மீறிப் பேச,கேட்க அவர்களுக்கான சங்கமோ, அமைப்போ கிடையாது. அப்படி அவர்கள் யோசித்தாலே வேலை கிடையாது என்ற கொடுமை நிலவுகிறது, இந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகளில்.

சில மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் வேலைக்கான புது உத்தரவும், மே மாதத்தில் வேலையிலிருந்து விடுவித்ததற்கான கடிதமும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பூர்த்தி செய்யப்படாத ஊதிய கணக்கு நோட்டில் கையெழுத்து வாங்கி விடுவர். கையிலோ குறைந்த ஊதியம் கொடுக்கப்படும். கணக்கில் வேறொன்று இருக்கும். சில ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் பெற்ற வேலைக்கான கடிதங்கள் பத்து, பதினைந்து வைத்திருக்கிறார்கள்.

மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படித்த வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பாகப் பெண்கள், அதே ஊரைச்சார்ந்தவர்கள், அழகான, திறமையும் அனுபவமும் திறமையும் கொண்டவர்களை அதிகமாக ஆசிரியர்களாக அமர்த்தி கொள்கிறார்கள். காரணம், பெண்கள் சொன்னபடி செய்வார்கள். எதிர்த்து ஏன், எதற்கு என்று கேட்க மாட்டார்கள். கொடுக்கிற சம்பளத்தைப் பெற்றுக் கொள்வார்கள். உரிமை, போராட்டம் சங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மீறி யாரேனும் பேசினால் அவர்களின் நடத்தை சரியில்லை என்று எளிதில் வெளியேற்றி விடலாம். மேலும் பாலியல் அயோக்கியத்தனத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கருதுகிற மோசமான நிறுவனங்களும் நிறைய இருக்கின்றன.

புதிய ஜனநாயகம், மே 1997

படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.