privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மணல் கொள்ளையும், ஏரிகளின் அழிவும்

மணல் கொள்ளையும், ஏரிகளின் அழிவும்

-

தமிழகத்தின் நீர்வளமும், பாசன கட்டமைப்பும் அரசின் புறக்கணிப்பாலும், அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நடக்கும் மணல் கொள்ளையாலும்,  நீதிமன்றங்களின் பாராமுகத்தாலும் எப்படி அழிக்கப்பட்டு வருகின்றது என்றும் இது குறித்து நாம் செய்ய வேண்டியது என்ன  என்பதையும் விளக்கும் கட்டுரைத் தொடரின் முதல் பகுதி.

மணல் கொள்ளையும் ஏரிகளின் அழிவும்

ற்று மணல் முறையற்ற வழிகளில் தோண்டி எடுக்கப்படுவதால் தமிழ் நாட்டின் ஏரிகளுக்கு ஏற்படும் பாதிப்பை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

ஆற்றின் மட்டத்தை சரியாக வைத்திருப்பது மணல்

மணல் என்பது புவியியல் மாறுபாட்டின் ஒரு பகுதியாக பாறைகள் சிதைந்து உருவாகும் ஒரு கனிமம் என்பதை பலரும் அறிந்திருப்பார்கள். அது உருவாக இயற்கை ஏராளமான ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும். இன்று நாம் பயன்படுத்தும் ஆற்று மணல் உருவாவதை எக்காரணம் கொண்டும் விரைவாக்க முடியாது. எனவே, நாம் ஆற்றிலிருந்து எடுக்கும் மணலும், இயற்கையில் உருவாகும் மணலும் ஒரே விகிதத்தில் இருந்தால் மட்டுமே சமநிலையைப் பேண முடியும். மணலை ஆழமாகத் தோண்டி எடுப்பதன் மூலம் ஆறுகளைப் பள்ளமாக்கி அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கால்வாய்களுக்கு தண்ணீர் செல்லாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் எதிர் விளைவுகள் குளங்கள் வறண்டு போய் தமிழ் நாட்டின் நீர்வளம் குன்றி விடும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நாம் இந்த தொடர் மூலம் விளக்க இருக்கிறோம்.

குளங்கள் இல்லாத ஊர்களைத் தமிழ்நாட்டில் காண்பது அரிதினும் அரிது. இந்தக் குளங்கள் ஆங்காங்கு பெய்யும் மழை நீரை மட்டும் சேமிப்பது இல்லை. பல மைல் தொலைவில் உள்ள ஆற்றில் இருந்து பெரும் நீரையும் பெற்று சேமிக்கின்றன. இப்படி சிறுதும் பெரிதுமான நீர்நிலைகள் அனைத்தும் பல கோடிக்கணக்கான மைல்கள் நீளமுடைய கால்வாய்களால் ஆறுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. சுருங்கச் சொன்னால், இந்தக் கால்வாய்கள் அனைத்தும் ஆற்றில் தொடங்கி குளங்களில் இணைந்து, பின்னர் மீண்டும் ஆற்றில் வந்து முடிகின்றன. வெகு சொற்பமான அளவு தண்ணீரே கடலுக்கு சென்று சேர்கிறது. எனவே, ஆறுகள் சீருடன் இருந்தால் மட்டுமே தமிழ் நாட்டில் உள்ள குளங்கள் சீருடன் இருக்கும்.

மதுரை மாவட்டத்தில் குளங்கள், கால்வாய்கள், கிராமங்களைக் காட்டும் வரைபடத்தின் ஒரு பகுதி
மதுரை மாவட்டத்தில் குளங்கள், கால்வாய்கள், கிராமங்களைக் காட்டும் வரைபடத்தின் ஒரு பகுதி (படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மீது சொடுக்கவும்)

இங்கே இணைக்கப்பட்ட படத்தை பார்க்கவும். சுமார் 140 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குட்பட்ட ஒரு சிறிய பகுதியில் 40 ஏரிகளை நீங்கள் பார்க்கலாம். வைகை ஆறு வட பகுதியில் ஓடுவதை பார்ப்பீர்கள். எண்ணற்ற சிற்றோடைகள் மலைகளில் தொடங்கி ஏரிகளில் முடிவதையும் அவை மீண்டும் இணைந்து பெரிய ஓடைகளாகி பின்னர் மீண்டும் ஆற்றில் இணைகின்றன. இவை அனைத்தும் பல நூறு ஆண்டு கால மனித உழைப்பு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்தச் சிற்றோடைகளை நம்பியே ஏரிகள் இருக்கின்றன. இந்த ஓடைகள் அனைத்திலும் அடியில் தேங்கும் மணலை அள்ளிவிட்டால் இந்தக் குளங்களின் நிலை என்னவாகும். ஓடைகளிலிருந்து வரும் தண்ணீர் குளங்களுக்கு செல்லாமல் வீணாகி எங்கோ சென்று சேரும். இது தவிர்த்து ஆற்றுடன் நேரடியாக இணைக்கப்பட்ட குளங்களை கீழ் வைகைப் பகுதியின் வரைபடத்தில் பார்க்கலாம்.

மனித உழைப்பின் மாண்புறு படைப்புகளில் மகத்தானது அவன் உருவாக்கிய ஏரிகளும் குளங்களும். அதனினும் மகத்தானது அவன் இயற்கையை மனிதநேயமாக்கியது. செயற்கையான குளங்களை இயற்கையான ஆறுகளுடன், இணைத்த நல்வினைப் பயன்தான் இன்று நாம் பயன்படுத்தும் நீர். பல நூறு ஆண்டுகளாகப் பெற்ற அறிவின் பலன் இது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் நாற்பது ஆயிரம் பாசனக் குளங்கள் இருப்பதாகவும், இதைப்போல ஐந்து மடங்கு எண்ணிக்கையிலான சிறிய குளங்கள், ஊரணிகள், குட்டைகள் இருக்கின்றனவென்றும் புள்ளிவிபரங்களும் மதிப்பீடுகளும் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள மிகப் பெரும் ஏரிகள் காலத்தால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை. எடுத்துக்காட்டாக, 3 மில்லியன் கன மீட்டருக்கு மேல் கொள்ளளவு கொண்ட ஏரிகள் மொத்தம் 116. இவற்றில் 6 ஏரிகள் மட்டுமே கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் கட்டப்பட்டவை. மீதியுள்ள 110 ஏரிகள் அதற்கும் வெகு காலத்திற்கும் முன்பே கட்டப்பட்டவை.

ஆற்றின் தரை மட்டத்தை அளவிட்டு அந்த அளவினை நம்பியே ஏரிகளுக்கு நீரை இட்டுச்செல்லும் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றில் மணல் அள்ளும்பொழுது அதன் ஆழம் அதிகரித்து விடுவதால் ஆற்றில் வரும் நீர் மேல் ஏறி கால்வாய்கள் வழியாக குளங்களுக்குச் செல்லாது. ஒரு பேச்சுக்காக கால்வாய்களையும் சேர்த்து ஆழமாகத் தோண்டினாலும் குளங்களின் தரை மட்டத்தை தாழ்த்த முடியாது. ஒரு வேளை குளங்களைத் தோண்டி ஆழமாக்கினாலும் பாசனம் பெறும் நிலங்களை ஆழமாக்கிட முடியாது. இதனால் ஆற்றில் நீர் வந்தாலும் குளங்கள் நிரம்பாமல் வீணாகி கடலுக்குச் சென்று சேரும். பன்னெடுங்காலம் நீர் வழங்கி நம் சமூகத்தைக் காத்து வந்த இந்தக் குளங்கள் பாழ்பட்டு அழிந்து படுவதில் இந்த மணல் கொள்ளையர்களுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஏரிகளைக் காப்பது முதல் பணி

ஆற்றில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் சேமிக்க வழியில்லாமல் போய் விடும் என்பதைப் பற்றிப் பலரும் பேசி வருகிறார்கள். ஆனால், அதை விட மிக முக்கியமானது ஆறுகளை நம்பி இருக்கும் ஏரிகள், குளங்கள் நாசமாவது தான். தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் பெரும்பகுதி கடினப் பாறைகளால் ஆனது. இந்தப் பாறைகளில் தண்ணீர் சுலபமாக இறங்கி சென்று சேராது. அது ஒரு நீண்ட செயல். இயற்கையாகவே, தமிழகத்தின் புவியியல் அமைப்பின்படி நிலத்தடியில் நீர் இருப்பது மிகவும் குறைவு. இப்போது நாம் உறிஞ்சும் நிலத்தடி நீர் பல ஆயிரம் ஆண்டுகாலத்தில் உள்ளிறங்கி பாறைகளின் இடுக்குகளில் தேங்கியது. ஆறுகளில் ஓடும் நீரால் மட்டுமே நிலத்தடி நீர் பெரும் அளவில் சேமிக்கப் படுவதில்லை. ஆற்றின் ஓரங்களில் உள்ள ஊர்களில் மட்டும் கிணற்றைக் கொண்டுள்ள விவசாயிகள் இதுபற்றி கவலை கொண்டிருப்பது உண்மை தான். ஆனால், தமிழ் நாட்டின் பெரும் பகுதி கிராமங்கள் ஆற்றிலிருந்து வெகு தொலைவில்தான் உள்ளன. அவர்கள் வைகை போன்ற ஆறுகள் நாசமாவதை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாமல் குமுறி வருகின்றனர். அத்தகைய கிராம மக்கள் பெருகி வரும் மணல் கொள்ளையினால் ஆற்றில் இருந்து தொலைவில் உள்ள தமது குளங்களுக்கு நீர் வருவதில்லை என்பது பற்றிய கவலையில் ஆண்டு தோறும் மூழ்கி வருகிறார்கள். எனவே, ஆற்று மணல் கொள்ளையிடப்படுவதன் முதல் சேதம் ஏரிகளுக்கும் கால்வாய்களுக்கும்தான். அதிலும் பெரும் ஏரிகளுக்கு ஏற்படும் சேதம் மிகவும் தீவிரமானது. பல நூறு ஆண்டுகள் பணி செய்த இத்தகைய ஏரிகளை அழிக்கும் மணல் கொள்ளையை நிறுத்துவது மட்டுமே எதிர் வரும் பேரிழப்பை தடுக்கும்.

வைகை ஆறும் குளங்களும்

தமிழ் நாட்டின் முக்கியமான ஆறுகளில் வைகையும் ஒன்று. தமிழ் நாட்டில் குறைவான மழை பெறும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம்பியிருந்த இந்த வைகை ஆறுதான் தமிழ்நாட்டில் முதன் முதலில் சீரழிக்கப்பட்டது. ஆற்று மணல் அள்ளப்படுவதால் அதனை அண்டியிருக்கும் குளங்கள் அடையும் சேதத்தை வைகைப் பாசனப் பகுதி முழுவதும் காணலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மதுரை நாட்டு அரசிதழ் நூல் (Mathura Country Manual) வைகையை நம்பி சுமார் மூவாயிரத்திற்கும் மேலான ஏரிகள் இருந்ததாக குறிப்பிடுகிறது.

கீழ்வைகை என்று அழைக்கப்படும் மதுரைக்கு கிழக்கே உள்ள பகுதியில் மட்டும் சுமார் 96 கால்வாய்கள் நானூறு ஏரிகளுக்கு நேரடியாகவும் சுமார் ஆயிரம் ஏரிகளுக்கு அதன் நீட்சியாகவும் தண்ணீரை இட்டுச் செல்கின்றன. கீழ் வைகையின் ஒரு சிறிய பகுதியில் அமைந்துள்ள ஆற்றுடன் கூடிய கால்வாய் கட்டமைப்பை இப்படத்தில் காண்க.

கீழைவைகையின் ஒரு சிறிய பகுதியில் ஆற்றுடன் கூடிய கால்வாய் கட்டமைப்பு
கீழைவைகையின் ஒரு சிறிய பகுதியில் ஆற்றுடன் கூடிய கால்வாய் கட்டமைப்பு

கீழ் வைகைப் பகுதிகளில், மட்டும் இவ்வாறு ஆற்று நீரை கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்குப் பெற்று பயன் அடையும் மொத்தப் பாசனப் பரப்பு சுமார் இரண்டு லட்சம் ஏக்கர். இந்த நிலங்கள் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருக்கின்றன. இப்படி காலத்தால் பழமையான பாசன முறைகளை கொண்டது வைகை. தமிழ் நாட்டில் கடலில் கலக்காத ஆறு என்ற புகழைப் பெற்ற பெரும் ஆறு வைகை. வைகை கடைசியாக ராமநாதபுரம் பெரிய ஏரியில் சென்று கலக்கிறது. சொட்டுத் தண்ணீர் கூட வீணாக்காமல் பயன்படுத்தி வாழ்ந்த ஒரு சமூகம் இன்றோ சீரழிந்து சின்னாபின்னமாகி கிடக்கிறது. இங்கு குறிப்பிடும் ஏரிகளுக்கும் பெரியாறு பாசனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதை வேறொரு சமயம் விளக்கலாம்.

பிரடெரிக் காட்டன் என்ற பொறியாளர் ஒரு சிறப்புரையில் வைகையைப் பற்றி 1901 ம் ஆண்டு எழுதினார், “நீர்பாசனத்தை பெருக்குவதென்றால் வைகையைப் போல செய்திட வேண்டும்”. ஆண்டுக்கு இருபது நாட்களுக்கும் குறைவாக மட்டுமே நீர் ஓடும் வறண்ட வைகையில் அப்படியென்ன சிறப்பான முறையிருந்திருக்க முடியும்?

அவர் இவ்வாறு எழுதினார்,

“எனது நினைவு சரியாக இருக்குமானால், இந்திய தீபகற்பத்தின் கடைகோடியில் ஓடும் வைகை ஆற்றின் நீர் எப்போதோ ஒருமுறை மட்டுமே கடலில் சென்று சேர்கிறது; நாம் வியப்புறும் வண்ணம் அந்த ஆற்று நீரின் ஒவ்வொரு சொட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளம் ஓடும் பொழுது ஆற்றின் குறுக்கே அங்கும் இங்குமாக அணைகள் போடப்பட்டு, தண்ணீர் திருப்பி விடப்பட்டு பயிர்க் காலம் முழுதுக்குமான தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் குளங்களில் ஆங்காங்கு சேமிக்கப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை, இதுதான், மிகப் பெரும் ஆறுகளை நாம் நடத்தும் நெறி முறையாக இருக்க வேண்டும். தற்காலத்தில் மிகப் பெரும் நீர்த்தேக்கங்களை உருவாக்குவதற்கான இடங்களைத் தேடியலைவது என்பது பெருமைக்குரிய விசயமாக கருதப்படுகிறது. நீர்த்தேக்கங்களின் அளவு பெரிதாக ஆக அதை நிர்மாணிக்கும் செலவுகள் குறையக் கூடும் என்பது உண்மையே. ஆனாலும், தண்ணீரின் உண்மையான மதிப்பை அறிய வேண்டுமானால், அதற்காகும் செலவுகள் முதன்மையான காரணமாக இருக்கக் கூடாது மாறாக, அது எங்கே எப்படி தேக்கப்படுகிறது என்பதே முக்கியமானதாகும்.

நீர்தேக்கங்கள் அமைக்க புதிய இடங்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என விரும்பும் மாணவர்கள் தீபகற்ப இந்தியாவின் புவியியல் வரைபடங்களை முதலில் தெளிவாக ஆராயவேண்டும். அங்கே தான், ஒவ்வொரும் பள்ளமும் மேடும் ஒரு ஏரியாக உருப்பெற்றிருப்பதைக் காண முடியும். ஏரிகள் என்று அழைக்கப்படும் இந்த நீர்த்தேக்கங்கள் பெரும் பஞ்ச காலத்தில் பேருதவியாக இல்லாவிட்டாலும் வறண்ட காலங்களில் மதிப்பிட முடியாத தண்ணீரை தேக்கி வைக்கும். கூடவே, இந்த ஏரிகளை அருகில் இருக்கும் பெரிய ஓடைகள் அல்லது வற்றாத ஆற்றுடன் இணைத்துவிட்டால் பஞ்ச காலத்திலும் கூட தண்ணீரை ஆங்காங்கே தேக்கி வைத்துக் கொள்ள முடியும். நமது மாபெரும் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன் (Sir Arthur Cotton) இப்படி வற்றாத ஆறுகளை இணைத்து ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள பழமையான ஏரிகளுக்கு நீரை வழங்க ஒரு திட்டம் தீட்டியுள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனாலும், நான் உங்களனைவரையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால் பல பள்ளத்தாக்குகளைக் கொண்டிருக்கும் இந்தியா முழுவதும், வைகையில் அமைக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு பாசன கட்டமைப்பை ஏன் ஏற்படுத்தக் கூடாது என்பதுதான்.”

என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவரே சொன்னார்.

கீழ் வைகை பகுதியின் குளங்கள்
கீழ் வைகை பகுதியின் குளங்கள்

நீரை மிகவும் சிக்கனமாகவும் சீரிய முறையிலும் தேக்கி வைக்கும் வழிமுறைகளுக்கு ஒரு மிகப் பெரிய சான்று உண்டென்றால் அது இங்கே தான். உயர்ந்த அதிகாரத்தையும் அறிவாற்றலையும் கொண்டிருக்கும் நாம் காலத்தால் பழமையான இந்த முறையை பின்பற்ற வெட்கப்பட வேண்டியதில்லை.

பிரெடெரிக் காட்டன் 1901 -ம் ஆண்டு எழுதிய “இந்தியாவின் மாபெரும் ஆறுகளை பற்றிய ஒரு கடிதமும் இரண்டு கட்டுரைகளும்: நாட்டை வளமாக்கவும் பெரும் பஞ்சங்களை தடுக்கவும் செய்யத்தகுந்தது என்ன ? எனது எழுபது ஆண்டு கால ஆய்வுப் பணிக்குப் பின் எழுதியது” என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்.

பிரெடெரிக் காட்டன், ஒரு ஆங்கிலேயர், ஏகாதிபத்திய மனப் பாங்குடையவர். இந்தக் கட்டுரையை அவர் எழுதிய போது அவர் வயது தொண்ணூற்று நான்கு. எழுபது ஆண்டுகள் பொறியியல் பணியும் ஆய்வும் செய்த அனுபவம் மிக்கவர். இந்தியா மட்டுமின்றி பல நாடுகளைச் சுற்றியவர். இங்கிலாந்து நாட்டின் பிரபலமான ஒரு பொறியியல் கல்லூரியில் பயிற்சி முடிந்து செல்லும் இளம் பொறியாளர்களுக்கு என அவர் இதனை எழுதினார். வைகையின் பாசனத்தைப்பற்றி தலை சிறந்த பொறியாளர்கள் மட்டுமின்றி கிறித்தவப் பாதிரிகள், வரலாற்று ஆய்வாளர்கள், ஆங்கிலேய அதிகாரிகள், நிலவியல் வல்லுனர்கள் என்று பலரும் வியந்து எழுதியுள்ளனர். ஆறுகளையும் குளங்களையும் வன்முறையின்றி ஒரு சேர இணைக்கும் இந்த தொழில் நுட்பத்தை வைகையில் கண்டவர்கள் பலர்.

வைகை ஆற்றின் நீர் சுமார் ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று சேரும் வண்ணம் ஒரு வலைப் பின்னல் போன்ற கால்வாய்களும் ஏரிகளும் அடங்கிய ஒரு கட்டமைப்பை பழந்தமிழர்கள் பல நூறு ஆண்டுகளாக செய்து வைத்திருந்தனர். ஆனால், வைகையின் இன்றைய நிலை என்ன?

இதோ, தமிழ்நாட்டு அரசின் வைகை குறித்த 2004-ம் ஆண்டு வெளியான மிக விரிவான ஒரு சுற்றுப்புற சூழல் அறிக்கை, விரகனூர் அருகில் உள்ள கீழ் வைகைக் கால்வாய்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறது:

“இந்த இடத்தில், மிக ஆழமாக மணல் அள்ளப்பட்டுள்ளது. மணல் தோண்டப்பட்டதாலும், அதனை அடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும் கால்வாய்கள் எதுவும் செயல்படவில்லை. கட்டனூர் கால்வாய் இருந்த இடம் தெரியாமலே போய்விட்டது. இது தவிர்த்த இரண்டு கால்வாய்கள் அவை தொடங்கும் இடத்திலேயே காணவில்லை, சிறிது தூரம் சென்ற பின்னர் மட்டுமே தென்படுகின்றன. ஆனாலும் கூட, வைகை ஆற்றிலிருந்து இந்தக் கால்வாய்களுக்கு தண்ணீர் செல்லும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை”.

இதே அறிக்கை, வைகையாற்றின் பாசனம் பெறும் பகுதி நெடுகிலும் என்னென்ன சூழல் மாசுகள் உள்ளன, அதனால் ஆறும், பாசனக் குளங்களும் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்று தெரிவிக்கிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகப் பெரும் பொறியாளர்கள் வியக்கும் வண்ணம் செயல் பட்டு வந்த ஆறும் கால்வாயும் இன்று எப்படி அழிந்து ஒழிந்து வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆறு பள்ளமானால் கால்வாய் மேடிட்டுப் போகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஒரு எடுத்துக் காட்டாக, மதுரை நகரத்திற்கு மேற்கிலும் கிழக்கிலும் ஒரு பத்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எட்டுக் கால்வாய்களின் நிலையை கீழ்க்கண்ட அட்டவணையில் காணலாம்.

ஆற்றுக் கால்வாய்களின் நிலைமை

அட்டவணை-1 மதுரை நகருக்கு அருகில் உள்ள கால்வாய்களின் நிலை

வரிசை எண் கால்வாயின் பெயர் கால்வாய்க்கும் ஆற்றுக்கும் இடையே தோண்டப்பட்ட மணல் பள்ளம் (அடிகளில்) கால்வாயின் நிலைமை
1 மாடக்குளம் கால்வாய் 20 பாசனப் பரப்பு 3400 ஏக்கரில் இருந்து 400 ஏக்கர் ஆக குறைந்து விட்டது. மிகுந்த சிரமங்களுக்கு இடையே வேறு ஒரு பகுதியில் இருந்து நீர் வழங்கப் பட்டு வருகிறது.
2 கீழமாத்தூர் வரத்துக் கால்வாய் 15 பயன்பாட்டில் இல்லை.
3 துவரிமான் வரத்துக் கால்வாய் 15 பயன்பாட்டில் இல்லை. சுமார் 440 ஏக்கரில் பாசனம் இல்லை
4 கோச்சடை கால்வாய் 30 பயன்பாட்டில் இல்லை. சுமார் 500 ஏக்கரில் பாசனம் இல்லை.
5 அச்சம்பத்து ஊற்றுக் கால்வாய் 25 பயன்பாட்டில் இல்லை
6 அவனியாபுரம் வரத்துக் கால்வாய் 40 பயன்பாட்டில் இல்லை. 1250 ஏக்கரில் பாசனம் இல்லை. மதுரை நகரின் சாக்கடை நீர் தேக்கப் படுகிறது.
7 சிந்தாமணி கால்வாய் 15 பயன்பாட்டில் இல்லை. 482 ஏக்கரில் பாசனம் இல்லை.
8 அனுப்பானடி வரத்துக் கால்வாய் 10 பயன்பாட்டில் இல்லை. 996 ஏக்கரில் பாசனம் இல்லை

இந்தக் கால்வாய்கள் அனைத்தும் மிகவும் புராதனமானவை என்பதை மீண்டும் சொல்லவேண்டியதில்லை. கி.பி. எட்டு முதல் பனிரெண்டாம் நூற்றாண்டு வரையிலான பல கல்வெட்டுகள் வைகையில் வெட்டப்பட்ட கால்வாய்கள் குறித்த ஏராளமான தகவல்களைக் கொண்டிருக்கின்றன. மேலே கண்ட குளங்கள் அனைத்தும் குறைந்தது பத்து நூற்றாண்டுளுக்கும் முந்தியவை. அவற்றில் சில சங்க காலத்தில் இருந்தே இருப்பதாகவும் சில அறிஞர்கள் கூறி வருகிறார்கள். எப்படிப் பார்த்தாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலே பணி செய்து வந்த இந்தக் கட்டுமானங்கள் இன்று செயலில் இல்லை.

தண்ணீர் வராத இந்தக் குளங்களில் பல அழியும் நிலையில் இருக்கின்றன. மதுரை நகரைப் பற்றிய ஒரு இடைக்காலக் கல்வெட்டு “மாடக்குளக் கீழ் மதுரை” என்று அழைக்கிறது. இதன் பொருள் மாடக்குளத்தினால் பயன் பெற்ற மதுரை நகரம் என்பது. மதுரைக்கு முகவரி தந்த இந்தக் குளம் இன்று அழியும் நிலையில் இருக்கிறது. ஆண்டு தோறும் வைகையில் இருந்து தண்ணீர் பெற மிகுந்த சிரமம் அடைகிறது. பல நூறு ஆண்டுகள் செயல் பட்ட இந்தக் கால்வாய் கடந்த நாற்பது ஆண்டுகளுக்குள் செயல் படாமல் போய் தற்சமயம் வேறு ஒரு இடத்தில் ஆற்றை மடக்கி, நீரைத் தேக்கி, மடைமாற்றி சுற்றி வளைத்து தண்ணீரை கொண்டு வருகிறார்கள் பொதுப் பணித்துறையினர். வெகு விரைவில் இதுவும் சாத்தியமில்லாமல் போகும்.

ஆற்றிலே மணலைத் தோண்டி, தமிழ்நாட்டின் வரலாற்றுக்கும் புவியியலுக்கும் மணல் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற அடையாளம் இது தான்.

வைகை ஆற்றுக்கும் ஏரிகளுக்குமான நீண்ட நெடிய தொடர்பை இன்னமும் விரிவாக இனி வரும் கட்டுரையில் பார்க்கலாம்.

– கிருஷ்ணராஜ்