privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைமாணவர் - இளைஞர்டாஸ்மாக்குக்கு எதிரான பு.மா.இ.மு போராட்டம் தொடர்கிறது !

டாஸ்மாக்குக்கு எதிரான பு.மா.இ.மு போராட்டம் தொடர்கிறது !

-

அழிவிடைதாங்கி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி பு.மா.இ.மு தொடர்ந்து பிரச்சாரம்!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் அழிவிடைதாங்கி கிராமத்தில் பள்ளிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சுற்றுவட்டார மக்கள் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களின் போராட்டத்தால் நொறுங்கியது டாஸ்மாக். அதனைத் தொடர்ந்து பிரம்மதேசம் போலீசார் பு.மா.இ.மு தோழர்கள் 9 பேர், குத்தனூர் பகுதி பொதுமக்களில் ஒரு பெண்மணி என மொத்தம் 10 பேரை கைது செய்து பொய் வழக்கு ஜோடித்து சிறையிலடைத்தது; இதைக்காட்டி அழிவிடைதாங்கி சுற்றுவட்டார கிராம மக்களை பீதியூட்ட முயன்றது.

டாஸ்மாக் உடைப்பு
அடித்து நொறுக்கப்பட்ட அழிவிடைதாங்கி டாஸ்மாக் கடை (கோப்புப் படம்)

இதனை அம்பலப்படுத்தியும், அக்கிராம மக்களை திரட்டி அழிவிடைதாங்கியிலுள்ள சாராயக்கடையை நிரந்தரமாக மூடக்கோரியும் பு.மா.இ.மு தொடர்ந்து கிராமப் பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறது.

  • மக்கள் போராட்டங்களை கட்டியமைப்போம்!
  • சாராயக் கடைகளை ஒழித்துக்கட்டுவோம்!

சாராயம் விற்பது சமூக விரோத செயல். அதாவது கிரிமினல் குற்றம். இதைச் செய்வதோ தமிழக அரசு. இந்த சமூகவிரோத செயலால் பாதிக்கப்பட்ட மக்களோ, உள்ளுக்குள் குமுறும் எரிமலையை போலக் கொதித்துக் கொண்டிருந்தார்கள். அதிலிருந்து வெடித்த ஒரு தீப்பொறிதான் அழிவிடைதாங்கி சுற்றுவட்டார கிராமத்து மக்கள் நடத்திய டாஸ்மாக் சாராயக் கடை இழுத்து மூடும் போராட்டம்.

சாரயம் விற்பது சமூக விரோத செயலா? அரசின் சட்டபூர்வத் தொழிலா?

முன்பெல்லாம், ஊருக்கு ஒதுக்குப்புறமாக சாரயம் காய்ச்சி, விற்பவனை சமூக விரோதியென, குடிகெடுப்பவன் என ஊரே காறித்துப்பும். சட்டவிரோதமென்று போலீசும் ஓடி, ஓடிப் பிடிப்பதாக சீன்போடும். ஆனால் இன்று என்ன நடக்கிறது? சாராயம் காய்ச்சுவதை மந்திரிகளின் பினாமிகளும், கடைபோட்டு விற்பதை அரசாங்கமும் செய்கின்றனர். போலீசோ பந்தோபஸ்து கொடுக்கிறது. மக்களுக்கு ஊத்திக்கொடுத்து உயிரைக்குடித்து பணம் பறிப்பது வழிப்பறி இல்லையா? சமூக விரோதச் செயல் இல்லையா? இதுதான் அரசின் தொழிலா?

தாலியறுக்கும் தமிழக அரசு

முள்ளுத்தோப்பில் சாராயம் விற்கப்பட்ட போது கூட, ஊருக்கு நாலுபேர் தான் குடித்தார்கள். இப்போதோ, பள்ளிக்கூடம் செல்லும் மாணவன் முதல், வயதான கிழவன் வரை வயது, சாதி வித்தியாசம் இல்லாமல் குடித்துச் சீரழிகிறார்கள். போதை தலைக்கேறி, அம்மணமாக நடுத்தெருவில் தாறுமாறாகக் கிடக்கிறார்கள். இவர்கள் யார்? நம்முடைய கணவராக, சகோதரனாக, மகனாகத்தான் இருப்பார்கள்.

முன்பு சாராயம் விற்றவனைக் காறித்துப்பியவர்கள், இன்று நம் அண்ணன் – தம்பிகளையே காறித்துப்பும் கேவலமான நிலைமைக்கு தள்ளியது யார்? அரசு சாராயம்.

குடித்துக் குடித்தே குடல் வெந்து செத்தவர்கள், அதனால் அழிந்த குடும்பங்கள் எத்தனை எத்தனை!

இப்படி சிறுவயது பிள்ளைகள் சீரழிவதைக் கண்கொண்டு பார்க்க முடியாமல் கொதித்துக் கொண்டிருந்தார்கள், அழிவிடைதாங்கி சுற்றுவட்டார மக்கள்.

போராடிக் களைத்த மக்களுடன் பு.மா.இ.மு

மனு கொடுப்பது தொடங்கி எல்லா சட்டப்பூர்வ வழிகளிலும் போராடி ஓய்ந்து நின்றனர் மக்கள். தேங்கிய குட்டையில் படுத்துப் புரளும் எருமையைப் போன்ற சொரணையற்ற அரசோ எதற்கும் அசையவில்லை. மனம் வெறுத்துப்போய் நிர்க்கதியாய் நின்ற மக்களுக்குத் தோள்கொடுத்தனர் பகத்சிங்கின் வாரிசுகளான பு.மா.இ.மு. தோழர்கள்.

“மனு கொடுப்பதாலோ, மனதுக்குள் புலம்புவதாலோ சாரயக்கடையை மூட முடியாது; அரசும் இதைச் செய்யாது. நம்வீட்டு ஆண்கள் குடல் வெந்து சாவதைத் தடுக்கவும் முடியாது” என்பதையும் உணர்த்தினர். இத்தனை நாட்களாக, குடும்பம் குடும்பமாக காவுவாங்கிய கடையைக் கண்ட மக்களின் கோபம் எல்லைமீறியது. சமூகவிரோத கிரிமினல் அரசின் சாரயக்கடையோ உடைந்து நொறுங்கியது. கடையைப் பாதுகாத்து நின்ற போலீசோ, சட்ட ஒழுங்கை மீறியதாகப் போராடியவர்களைக் கைது செய்தது.

டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்

சட்டத்தை மீறுவது அரசா? மக்களா?

“மது நாட்டுக்கு,வீட்டுக்கு, உயிருக்குக் கேடு” என சாரய பாட்டிலிலேயே அச்சடித்து வைத்து விற்பது யார்?

கள்ளச்சாராயம் விற்பது தவறு, சட்ட விரோதம் என்றால், அந்த வேலையை சட்டப்பூர்வமாகவே செய்வது யார்? தமிழக அரசுதானே!

தான் சொல்லும் சட்டத்தைத் தானே காலில் போட்டு மிதிப்பதும், “சட்டப்படி நட, சாரயக்கடையை மூடு” என்று மனுகொடுத்த மக்களை மிதிப்பதும் யார்? தமிழக அரசுதானே!

இந்தக் கேடுகெட்ட அரசுதான், போராடிய மக்கள் மீதும், தோழர்கள் மீதும் 11 பிரிவுகளின் கீழ் பொய்வழக்குகளைப் போட்டு சிறையில் அடைத்திருக்கிறது.

அரசாங்கச் சொத்தை நாசம் செய்து விட்டார்கள் என்பதுதான் முக்கியமான குற்றச்சாட்டு. சாராயக்கடையை அரசாங்கச் சொத்து என்று சொல்லும் கேவலத்தை இதுவரை எங்காவது கண்டிருக்கிறோமா?

இபோது சொல்லுங்கள், சட்டவிரோதமாக நடப்பது யார்? சாராயம் விற்பது சட்டவிரோதம் என்று சொல்லிக்கொண்டே சாராயம் விற்கும் அரசாங்கமா? சாராயம் விற்காதே எனறு போராடும் மக்களா?

நம்மைத் தண்டிக்கும் தகுதி அரசுக்கு உண்டா?

தோழர்கள் மீதும், மக்கள் மீதும் போடப்பட்ட பொய்வழக்குகளைக் கண்டு நாம் பயப்படவும் இல்லை, சிறைக்கும், சித்திரவதைக்கும், கைதுக்கும் அஞ்சவும் இல்லை. வெட்கப்படவும் இல்லை.

நாம் என்ன ஊர்ச்சொத்தைக் கொள்ளையடித்தோமா? இல்லை. ஊழல் செய்தோமா?

மக்களைக் காப்பற்ற, சாராயக்கடையை மூடு என்று போராடினோம். நல்ல விசயம் செய்தோம் என்று மகிழ்ச்சியாக இருப்போம்.

ஆனால், நம்மீது பொய்வழக்கு போடவும், தண்டனை கொடுக்கவும் போலீசுக்கும், நீதிமன்றத்துக்கும் அருகதை உண்டா? என்பதுதான் நமது கேள்வி?

இவர்கள் செய்ய மறுத்த வேலையைத்தான், மக்கள் பொறுப்பெடுத்துக் கொண்டு செய்தார்கள், சட்ட ஒழுங்கை நிலைநாட்டினார்கள் இது தவறா? இவர்கள் சொல்லும் சட்டப்படியே கூட இவர்களால் நடக்க முடியாதபோது, இவர்கள் சொன்ன சட்டப்படி நடந்த நமக்கு தண்டனை கொடுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் சட்டப்படி தண்டனை கொடுத்தார் நீதிபதி குன்ஹா. ஆனால், அதே உச்சநீதிமன்றம், தான்கொடுத்த தீர்ப்புகளுக்கு எதிராக, ஜெயாவுக்கு ஜாமீன் கொடுத்ததோடு, “சீக்கிரம் கேசை முடி” என உத்தரவும் போடுகிறது. இப்போது சொல்லுங்கள், இந்த நீதிமன்றங்களுக்கு போராடும் மக்களைத் தண்டிக்க என்ன தகுதி இருக்கிறது?

அழிவிடைதாங்கி சுற்றுவட்டார மக்கள் நடத்திய சாராயக்கடை மூடும் போராட்டத்தை வாழ்த்துவோம்! பின்பற்றுவோம்!

திருடன் கையில் சாவியைக் கொடுப்பது எந்தளவுக்கு முட்டாள்தனமோ, அதைப் போன்றதுதான் சாராயம் விற்கும் அரசிடமே, “கடையை மூடு” என மனுகொடுப்பதும், மன்றாடுவதும். இனியும் இதனால் தீர்வில்லை என்பதை உணர்ந்தனர் அழிவிடைதாங்கி சுற்று வட்டார மக்கள். அவர்களுடன் இணைந்தனர் பு.மா.இ.மு தோழர்கள். இழுத்து மூடினர் டாஸ்மாக் சாராயக் கடையை. தமிழ் நாட்டிற்கே முன்னுதாரணமாக இருந்து சாதித்து வழிகாட்டிய அழிவிடைதாங்கி சுற்று வட்டார மக்களையும் – பு.மா.இ.மு தோழர்களையும் வாழ்த்தி வரவேற்போம். அவர்கள் வழிநடப்போம்.

உழைக்கும் மக்களே, உங்களை மரணக்குழியில் தள்ளும் சாராயக்கடைகளை அகற்ற முன்வாருங்கள். அதற்கு உங்களோடு சேர்ந்து போராடவும், தோள்கொடுக்கவும் நாங்கள் தயார். இணைந்து போராடுவோம். மக்களின் உயிரைக்குடிக்கும் டாஸ்மாக் சாராயக்கடைகளை இழுத்து மூடுவோம்.

அழிவிடை தாங்கி டாஸ்மாக் கடையை மூடு

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை – காஞ்சிபுரம்