privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்பட்ஜெட் 2015 : மக்களுக்கான மரண அறிவிப்பு

பட்ஜெட் 2015 : மக்களுக்கான மரண அறிவிப்பு

-

ந்தக் காலத்தில் குடுகுடுப்பைக்காரர்களின் தொல்லைகள் அதிகமிருக்கும். நள்ளிரவில் ’ஜக்கம்மாவோடும்’ கிழிந்த கோட்டு, அழுக்கு டர்பன் சகிதம் “நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது” என்று தங்கள் அருள் வாக்கைத் துவங்குவார்கள். “இந்த வீட்டம்மா தாலியறுக்கப் போறா.. ” என்று கொளுத்திப் போடுவதற்கு முன்பும் கூட ‘நல்ல காலம் பொறக்குது’ என்று கூவ மறக்க மாட்டார்கள்.

அச்சே தின்
குடுகுடுப்பைக் காரன் மோடி எழுதிக் காட்டும் “அச்சே தின்”

சம்பந்தப்பட்ட ‘அருள்வாக்கை’ கேட்டவர்கள் விடியும் வரை திக்குதிக்கென்று இதயம் துடிக்க விழித்தே கிடப்பார்கள். ராத்திரி கொளுத்திப் போட்ட பிட்டுக்கு சன்மானத்தை வாங்க மறுநாள் ஜக்கம்மாவின் மகன் வந்தே ஆக வேண்டும். காலை சாவகாசமாய் வந்து பரிகாரம் சொல்லி அரிசியோ காசோ பிடுங்கிப் போவார்கள். இப்போது காலம் மாறி விட்டது. குடுகுடுப்பைக்காரர்களுக்கு கிழிந்த கோட்டு கிடைப்பதில் தட்டுப்பாடு வந்ததோ, தெருநாய்களின் தொல்லையோ தெரியவில்லை; குடுகுடுப்பைக்காரர்களின் நடமாட்டம் குறைந்து விட்டது.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் 10 லட்சம் ரூபாய் கோட்டு, “அச்சே தின் (நல்ல காலம்)” என்ற அருள் வாக்கு இவற்றோடு நவீன குடுகுடுப்பைக்காரனாக அவதரித்தார் மோடி. தேர்தல் முடிந்த உடன் இரயில் கட்டணத்தை பாரதிய ஜனதா அரசு உயர்த்திய போதே மக்களின் தாலியறுக்கும் காலம் மலரத் துவங்கியது. தற்போது நில அபகரிப்புச் சட்டத்தில் ஓங்கி வீசும் ‘நல்ல காலத்தின்’ நறுமணம், 2015-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் ஊரெங்கும் நாற்றமெடுக்கத் துவங்கியுள்ளது.

“இது கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட்” என்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம். “இந்த நிதி நிலை அறிக்கையின் படி முதல் ஆண்டில் ரூ 20 ஆயிரம் கோடி, இரண்டாம் ஆண்டில் ரூ 40 ஆயிரம் கோடி, மூன்றாம் ஆண்டு ரூ 60 ஆயிரம் கோடி, நான்காம் ஆண்டு 80 ஆயிரம் கோடி கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ள சிதம்பரம், “ஆக மொத்தம் ரூ 2 லட்சம் கோடி சலுகைகளை கார்ப்பரேட்டுகளுக்கு இந்த நிதி நிலை அறிக்கை அறிவித்துள்ளது. இதே காலகட்டத்தில், பெரும்பான்மை மக்களுக்கான திட்டங்களுக்கான ஒதுக்கீடு பெருமளவு வெட்டப்பட்டுள்ளது. இதிலிருந்தே இந்த அரசு ஏழைகளுக்கானதில்லை என்று தெரிகிறது” என்கிறார்.

கார்ப்பரேட்டுகளுக்கு கொடைகள்
பத்திரிகையாளர் சாய்நாத் தயாரித்துள்ள கார்ப்பரேட் வரிச்சலுகைகள் பற்றிய வரைபடம்

ச்சே.. சத்ய சோதனை. கரடியே காறித் துப்பி விட்டதய்யா..!

மோடி வித்தை
“பணக்கார முதலைகள் முட்டை போடும்” என்று மோடி-ஜெட்லி காட்டும் வித்தை.

கார்ப்பரேட்டுகளின் வருமான வரியை 4 ஆண்டுகளில் 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைப்பதாக அறிவித்துள்ள மோடி அரசு,  இணையத்தில் தனக்காக களமாடி வரும் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கும் தனிநபர் வருமான வரிக்கான தற்போதுள்ள வரிவிலக்கு உச்சவரம்பை அதிகரிக்கவில்லை.

மாறாக, தனியார் காப்பீடு, மருத்துவ, இதர வகைகளில் பாலிசி எடுத்தால் ரூ 4.4 லட்சம் அளவுக்கு சலுகை கிடைக்கும் என்று ஃபிலிம் காட்டுகிறார்கள். இதில் ஆதாயம் முதலாளிகளுக்கு, பீதி நமக்கு என்பதை நடுத்தர வர்க்கம் உணர்வதில்லை.

என்றாலும், சமூக வலைத்தளங்களில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னும் பின்னும் மோடி என்னவெல்லாம் பேசினார் என்பதைப் பீராய்ந்து திரைச்சொட்டுகளாக (Screen shots) வெளியிட்டு வருகின்றனர் நம்பிக் கெட்ட நடுத்தர வர்க்கத்தினர்.

கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்’சுமை’யை குறைத்த கையோடு, ஒட்டு மொத்த மக்களையும் பாதிக்கும் வகையில் சேவை வரியை 12.36%-லிருந்து 14% ஆக உயர்த்தியிருக்கிறார், ஜெட்லி. மேலும், மோடியும் அவரது மேட்டுக்குடி பாதந்தாங்கிகளும் துடைப்பம் எடுத்து தெருக்களை பெருக்குவதாக போஸ் கொடுக்கும் ஸ்வச்ச பாரத் (தூய்மை இந்தியா) திட்டத்துக்கு வாய்க்கரிசி போட, தேவைப்படும் போது சேவை வரியை 2% கூட்டவும்  வசதி செய்திருக்கிறார் அவர்; மோடி தான் போடும் நாடகங்களுக்கான விளம்பரக் கட்டணமாக கார்ப்பரேட்டுகளுக்கு படியளக்கும் பில்லை மக்கள் தலையில் கட்டியிருக்கிறார். கேட்டால் நாடெங்கும் கழிப்பறைகள் கட்டுவதாக உதார் விடுகிறார்கள். எனில், ஸ்வச்ச பாரத் திட்டத்தின் விளம்பரச் செலவு எவ்வளவு, கழிப்பறை கட்டிய செலவு எவ்வளவு என்று வெள்ளை அறிக்கை விட்டால் இதன் மோசடியை உணர முடியும்.

பாபா ராம்தேவ்
யோகாவுக்கு செலவுக செய்யும் பணத்துக்கு வரிவிலக்கு.

அதோடு கூடவே, தூய்மை இந்தியா திட்டத்துக்கு கார்ப்பரேட்டுகள் ஒதுக்கும் நன்கொடைகளுக்கு 100% வரிவிலக்கு என்று முதலாளிகள் வரி ஏய்க்க இன்னொரு  ஓட்டையை திறந்து விட்டிருக்கிறார் ஜெட்லி.

மேட்டுக்குடியினர் வரிவிலக்கு பெறும் தர்ம காரியங்களில், யோகாவுக்கு செலவு செய்யும் பணத்தையும் சேர்த்து பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்ற சாமியார் கம்பெனிகளுக்கும் நன்றிக் கடன் செலுத்தியிருக்கிறார் மோடியின் நிதி அமைச்சர்.

உயர்குடியினரின் முக்கிய புனித தளங்களான “ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்கள் புதிதாக துவங்கப்படும்” என்று நிதி நிலை அறிக்கையில் அறிவித்துள்ள அதே வேளை, கல்விக்கான ஒதுக்கீடு கடந்தாண்டை விட 2 சதவீதம் குறைந்துள்ளது. இந்த வெட்டு, சாதாரண மக்களுக்கான அரசு பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டில்தான் நடக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.

மேலும், 2 சதவீதம் குறைவு என்ற இந்தக் கணக்கு என்பது கடந்த நிதியாண்டில் செலவிடப்பட்ட தொகையில் இருந்து கணக்கிடப்பட்டதாகும். உண்மையில் கடந்தாண்டு நிதி நிலை அறிக்கையில் செலவிடப்போவதாக பீற்றிக் கொண்ட தொகையில் இருந்து கணக்கிட்டால் 16.54 சதவீதம் இந்தாண்டு நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது. அதாவது, சென்ற நிதி ஆண்டிலேயே அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து சுமார் 85.5 சதவீதம் தான் உண்மையில் செலவிடப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டம்
தூய்மை இந்தியா திட்டத்துக்கு செலவழிக்க மக்கள் தலையில் சுமை.

பொதுப்பணித் துறையில் சுமார் ரூ 1.25 லட்சம் கோடி செலவிடப்படும் என்ற நிதி நிலை அறிக்கையின் வாசகங்களை ஜெட்லி வாசித்துக் கொண்டிருக்கும் போதே, சிமெண்டு, எஃகு மற்றும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயரத் துவங்கியது. ஜெட்லி கார்ப்பரேட்டுகளுக்கு எழுதப் போகும் மொய்தான் அந்த ரூ 1.25 லட்சம் கோடி என்பதை அவர்களது புனிதத் தலமான பங்குச் சந்தையின் பக்தர்கள் முதலில் உணர்ந்து விட்டார்கள்.

ஒரு பக்கம் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள பாரதிய ஜனதா, விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என்று சகல பிரிவினரின் மேலும் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.

2013-ம் ஆண்டு ரூ 17,778 கோடியாக இருந்த விவசாயத் துறைக்கான நிதி ஒதுக்கீடு, தற்போதைய 2015-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ரூ 11,657 கோடியாக வெட்டிக் குறுக்கப்பட்டுள்ளது. இதில் பாசன வசதிகளுக்காக கடந்தாண்டு ரூ 1,797 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போதைய நிதி நிலை அறிக்கையில் ரூ 772 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசுகளின் சார்பாக செயல்பட்டு வந்த விவசாய பொருட்களுக்கான சந்தைக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (APMC – Agricultural produce marketing committee) கட்டுப்பாட்டிலிருந்து பழங்கள் மற்றும் அத்தியாவசிய காய்கறிகள் விடுவிக்கப்பட்டு ஏற்கனவே விளைச்சலுக்கு போதிய விலையில்லாமல் அவதிப்பட்டு வந்த விவசாயிகளை லாபவெறி கொண்ட கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்புக் கொடுத்துள்ளது மத்திய அரசு.

விவசாயத் துறைக்கு வெட்டு
பாசன வசதிகளுக்காக கடந்தாண்டு ரூ 1,797 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போதைய நிதி நிலை அறிக்கையில் ரூ 772 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது

மோடி பதவியேற்ற பின் விவசாயிகள் தற்கொலை 26 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எஞ்சிய விவசாயிகளின் தலையில் திணித்து அவர்களை உயிரோடு குழியில் தள்ளி தற்போதைய பட்ஜெட்டின் மூலம் மண்ணைப் போட்டு மூடியுள்ளது மத்திய அரசு.

தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தம், தொழிற்சாலை பாதுகாப்பு விதி முறைகளை தளர்த்தியது, விவசாயிகள் வாழ்க்கையை அழித்தது, கல்விக்கான ஒதுக்கீட்டை குறைத்து மாணவர்களுக்கு துரோகம் செய்தது, சமையல் வாயு மானியத்தை டி.பி.டி.எல் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து நடுத்தர வர்க்க குடும்பப் பெண்களை அல்லாடவிட்டது என்று எந்தப் பாரபட்சமும் இல்லாமல் சகல தரப்பினரையும் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது குடுகுடுப்பைக்கார அரசு.

அரசின் தாக்குதலில் ஓய்ந்து வீழும் மக்களுக்கு போதிய மருத்துவம் கூட கிடைக்காது என்பதாக மருத்துவத் துறைக்கான ஒதுக்கீட்டையும் 15 சதவீத அளவுக்கு குறைத்துள்ளது, மோடி அரசு. ஏற்கனவே உள்ள நிதி ஒதுக்கீடு போதாமல் அரசு மருத்துவமனைகள் நாற்றமெடுக்கும் பாழடைந்த குடோன்களைப் போல காட்சியளித்து வரும் நிலையில் இனி வரும் காலங்களில் ஏழை மக்களின் வாழ்க்கையை தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளிடம் சமர்ப்பித்துள்ளார் மோடி.

இராணுவச் செலவு
இந்திய இராணுவம் என்ற தின்னிமடக் கூட்டத்திற்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாயில் மோடி வைத்திருக்கும் மொய் விருந்தைப் பொருத்தவரை தீனி இராணுவத்திற்கு – மொய் பன்னாட்டு ஆயுத தளவாட தயாரிப்பு நிறுவனங்களுக்கு.

ஒருபக்கம் மக்களின் தலையில் கொள்ளியை வைத்துள்ள இதே பட்ஜெட்டில் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கப்பட்டுள்ள சலுகைகள் தவிர இராணுவத்திற்கு ரூ 2.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கி அறிவித்துளார் நிதியமைச்சர். வெள்ளைக்காரன் இந்தியாவுக்கென்று எப்போது இராணுவத்தையும் போலீசையும் ஏற்படுத்தினானோ அன்றிலிருந்து இன்று வரை ஒட்டுமொத்த நாட்டையும் உறிஞ்சிக் கொழுக்கும் பிரம்மாண்டமான தின்னிப் பண்டாரமாக உருவெடுத்துள்ளது இராணுவம்.

இது பாசிசவாதிகளின் காலம் என்பதால், அவர்கள் தங்கள் குண்டாந்தடிகளுக்கு வெண்ணை தடவி பளபளப்பாக வைப்பதில் பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்திய இராணுவம் என்ற தின்னிமடக் கூட்டத்திற்கு இரண்டரை லட்ச ரூபாயில் மோடி வைத்திருக்கும் மொய் விருந்தைப் பொருத்தவரை தீனி இராணுவத்திற்கு – மொய் பன்னாட்டு ஆயுத தளவாட தயாரிப்பு நிறுவனங்களுக்கு.

பெட்ரோல் விலை
பெட்ரோல் விலையால் கடிக்க வைக்கும் மோடி மஸ்தான்.

இந்த விருந்தில் தனக்கும் ஒரு இடம் வேண்டும் என்று ஒண்டிக் கொள்வதற்காக தி ஹிந்து நாளிதழில் மோடியை விதந்தோதி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார், சின்ன அம்பானி அனில்.

சின்ன அம்பானி ஒரு முறை மோடியை சந்தித்த போது, “அனில், நம்ம நாட்டில் விடப்படும் கண்ணீர் கூட நம்மோடது இல்லை தெரியுமா? நம்மோட பாதுகாப்பு படைகள் பயன்படுத்தும் ஒவ்வொரு கண்ணீர் புகை குண்டும் இறக்குமதியாகிறது” என்று கண்ணீர் விட்டாராம், மோடி. அதனால், நாட்டு மக்களை கண்ணீர் விட வைக்கும் குண்டுகளை உள்ளூர் முதலாளிகளே உற்பத்தி செய்வதற்குத்தான் “மேக் இன் இந்தியா” திட்டத்தை கொண்டு வந்திருக்கிறாராம் மோடி.

“சி.பி.ஐ, சி.வி.சி, சி.ஏ.ஜி (புலனாய்வு, ஊழல் ஒழிப்பு, தணிக்கை) போன்ற துறைகளின் கண்காணிப்பிலிருந்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளை விடுவித்து ஒத்துழைப்பு, போட்டி, கூட்டுமுயற்சிகள் என்ற அடிப்படையில் அவர்களை முடிவெடுக்க வைக்க வேண்டும்” என்று கார்ப்பரேட் ஊழலையே சட்டபூர்வமாக்கும் படி கேட்டிருக்கிறார், அம்பானி. மேலும், தனியார் பங்களிப்புக்கு அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டிருக்கிறார். ‘மார்க்சிஸ்ட்’ ராமின் தி ஹிந்து பத்திரிகை அனில் அம்பானியின் கோரிக்கைகளை கடை விரிக்கும் கார்ப்பரேட் விளம்பரப் பத்திரிகையாக மாறியிருப்பதும் மோடியிச இந்தியாவின் புதிய நடைமுறை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு மறைமுக பங்களிப்பை செய்துள்ள அதே நேரம், இந்த விலையேற்றம் விமானப் பயணிகளைப் பாதிக்க கூடாது என்பதால் விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கு மட்டும் சலுகைகள் வழங்கியுள்ளது மத்திய அரசு.

நடக்கும் ஒவ்வொரு அநீதியையும் பார்க்கும் போது இது யாருக்கான அரசு என்பதை விளங்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு பாடம் எடுக்க வருகிறார் பொருளாதார அறிஞர் அசோக் தேசாய்.

அருண் ஜெட்லி
பா.ஜ.க.வுக்கு நிதி கொடுத்த புரவலர்களுக்காக மட்டும் இந்த பட்ஜெட்.

இந்து பத்திரிகையில் அவர் எழுதியுள்ள பட்ஜெட் அலசல் கட்டுரையில், “2008 – 10 காலகட்டத்தில் நாடு கண்ட வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சி என்பது வாஜ்பாயின் சாதனையை காங்கிரசு தட்டிப் பறித்துக் கொண்டதாகும்” என்றும், “அப்படி வாஜ்பாயால் கிடைத்த வளர்ச்சியின் பலனை உணவு மானியம், வேலை வாய்ப்பு என்று மக்கள் மீது காங்கிரசு வீணடித்து விட்டது” என்றும் குறிப்பிட்டுள்ளார். 2008 – 10 காலத்தில் உலகமே பொருளாதார பெருமந்தத்தில் குப்புறக் கவிழ்ந்து கிடந்த போது வாஜ்பாயால் விளைந்த வரலாறு காணாத வளர்ச்சியென்று கட்டுரையாளர் ஜல்லியடிப்பதற்குள் நாம் நுழையத் தேவையில்லை.

ஆனால், “மக்களின் வாக்குகளை இத்தகைய திட்டங்கள் மூலம் வளைத்துப் போடும் காங்கிரசின் திட்டத்தை முறியடிக்க, சளைக்காமல் வார்த்தைகளை அருவியாய் கொட்டும் ஒரு புதிய தலைவரை, அவரது இந்துத்துவ சாதனைகளிலிருந்து விடுவித்து காங்கிரசின் சொந்தக் குதிரையான வளர்ச்சியை  திருடிக் கொள்ள களமிறக்கியது பா.ஜ.க.” என்று சொல்லும் அவர், “நரேந்திர மோடியை ஆதரித்த மக்களுக்கும், பா.ஜ.க.வின் தேர்தல் பணப்பெட்டியை நிரப்பிய வர்க்கங்களுக்கும் பதில் செய்ய வேண்டிய நேரம் இது” என்று மோடியின் தேர்தல் வெற்றிக்கு அவரது சவடால் பேச்சுக்களும், கார்ப்பரேட்டுகள் கொட்டிய பண மூட்டைகளும்தான் ஆதாரம் என்பதை தெளிவாக்கி விடுகிறார்.

ஆம் ஆத்மியை நசுக்கும் பட்ஜெட்
மோடி ஜக்கம்மா சகிதம் வந்து சொல்ல ஆரம்பித்த “நல்ல காலம் பொறக்குது…” அருள்வாக்கின் பிந்தைய பகுதியான “நாடே நாண்டுகிட்டு சாகப் போகுது” என்பதை இப்போது நடைமுறையில் செயல்படுத்திக் காட்டத் துவங்கி விட்டார்.

ஆனால், மோடி அரசு காங்கிரசு கொண்டு வந்த மக்களுக்கான திட்டங்களை ஊத்தி மூடி விட்டு அவற்றுக்கான நிதியை முதலாளிகளின் வளர்ச்சியை நோக்கி திருப்பி விடாததை கடுமையாக விமர்சிக்கிறார்.

“அந்தத் திட்டங்களின் மேல் பாரதிய ஜனதாவுக்கு எந்தக் கடப்பாடும் இல்லை” என்கிறார் அவர் .  அதாவது, ‘அந்தத் திட்டங்களில் பலன் பெற்றவர்கள் உனக்கா ஓட்டுப் போட்டார்கள், ஏன் அவர்களுக்கு கொட்டியழ வேண்டும். அந்தப் பணத்தை முதலாளிகளுக்கு திருப்பி விடு” என்பதே இதன் பொருள்.

நிதிப் பற்றாக்குறையை குறைக்க ‘உணவு மானியம், உர மானியம் போன்ற வீண் செலவுகளை ஆய்வு செய்து குறைக்க வேண்டும்’ என்றெல்லாம் சொல்லும் முதலாளித்துவ ஆய்வாளர்கள், முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பது என்று வரும் போது பற்றாக்குறையைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று  கூறுவது உலகெங்கும் உள்ள நடைமுறை. அதையே பின்பற்றி “மக்களுக்கான திட்டங்களை வெட்ட தைரியம் இல்லை என்றால், பற்றாக்குறையை அதிகமாக்கிக் கொள்ளலாம்” என்றும் ஆலோசனை கூறுகிறார், தேசாய்.

மோடியின் அரசு யாருக்கு சாதகமானது என்பதை இதற்கு மேலும் தெளிவாக யாராலும் விளக்கி விடமுடியாது என்பதால் இந்து பத்திரிகைக்கும் அசோக் தேசாய்க்கும் நாம் நன்றியுடையவர்களாகிறோம்.

மோடி ஜக்கம்மா சகிதம் வந்து சொல்ல ஆரம்பித்த “நல்ல காலம் பொறக்குது…” அருள்வாக்கின் பிந்தைய பகுதியான “நாடே நாண்டுகிட்டு சாகப் போகுது” என்பதை இப்போது நடைமுறையில் செயல்படுத்திக் காட்டத் துவங்கி விட்டார்.

இது புலம்பும் நேரமோ, மோடியின் பேச்சுமாத்துகளை கேலி கிண்டல் செய்து சிரித்துக் கொள்ளும் தருணமோ அல்ல – ஏமாற்றப்பட்டவர்களின் ஆத்திரத்தை செயலில் காட்ட வேண்டிய நேரம் – தெருவிலிறங்கிப் போராட வேண்டிய நேரம்.

– தமிழரசன்

படங்கள் : சமூக வலைத்தளங்களிலிருந்து