privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்பட்ஜெட் 2015 : மக்களுக்கான மரண அறிவிப்பு

பட்ஜெட் 2015 : மக்களுக்கான மரண அறிவிப்பு

-

ந்தக் காலத்தில் குடுகுடுப்பைக்காரர்களின் தொல்லைகள் அதிகமிருக்கும். நள்ளிரவில் ’ஜக்கம்மாவோடும்’ கிழிந்த கோட்டு, அழுக்கு டர்பன் சகிதம் “நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது” என்று தங்கள் அருள் வாக்கைத் துவங்குவார்கள். “இந்த வீட்டம்மா தாலியறுக்கப் போறா.. ” என்று கொளுத்திப் போடுவதற்கு முன்பும் கூட ‘நல்ல காலம் பொறக்குது’ என்று கூவ மறக்க மாட்டார்கள்.

அச்சே தின்
குடுகுடுப்பைக் காரன் மோடி எழுதிக் காட்டும் “அச்சே தின்”

சம்பந்தப்பட்ட ‘அருள்வாக்கை’ கேட்டவர்கள் விடியும் வரை திக்குதிக்கென்று இதயம் துடிக்க விழித்தே கிடப்பார்கள். ராத்திரி கொளுத்திப் போட்ட பிட்டுக்கு சன்மானத்தை வாங்க மறுநாள் ஜக்கம்மாவின் மகன் வந்தே ஆக வேண்டும். காலை சாவகாசமாய் வந்து பரிகாரம் சொல்லி அரிசியோ காசோ பிடுங்கிப் போவார்கள். இப்போது காலம் மாறி விட்டது. குடுகுடுப்பைக்காரர்களுக்கு கிழிந்த கோட்டு கிடைப்பதில் தட்டுப்பாடு வந்ததோ, தெருநாய்களின் தொல்லையோ தெரியவில்லை; குடுகுடுப்பைக்காரர்களின் நடமாட்டம் குறைந்து விட்டது.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் 10 லட்சம் ரூபாய் கோட்டு, “அச்சே தின் (நல்ல காலம்)” என்ற அருள் வாக்கு இவற்றோடு நவீன குடுகுடுப்பைக்காரனாக அவதரித்தார் மோடி. தேர்தல் முடிந்த உடன் இரயில் கட்டணத்தை பாரதிய ஜனதா அரசு உயர்த்திய போதே மக்களின் தாலியறுக்கும் காலம் மலரத் துவங்கியது. தற்போது நில அபகரிப்புச் சட்டத்தில் ஓங்கி வீசும் ‘நல்ல காலத்தின்’ நறுமணம், 2015-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் ஊரெங்கும் நாற்றமெடுக்கத் துவங்கியுள்ளது.

“இது கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட்” என்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம். “இந்த நிதி நிலை அறிக்கையின் படி முதல் ஆண்டில் ரூ 20 ஆயிரம் கோடி, இரண்டாம் ஆண்டில் ரூ 40 ஆயிரம் கோடி, மூன்றாம் ஆண்டு ரூ 60 ஆயிரம் கோடி, நான்காம் ஆண்டு 80 ஆயிரம் கோடி கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ள சிதம்பரம், “ஆக மொத்தம் ரூ 2 லட்சம் கோடி சலுகைகளை கார்ப்பரேட்டுகளுக்கு இந்த நிதி நிலை அறிக்கை அறிவித்துள்ளது. இதே காலகட்டத்தில், பெரும்பான்மை மக்களுக்கான திட்டங்களுக்கான ஒதுக்கீடு பெருமளவு வெட்டப்பட்டுள்ளது. இதிலிருந்தே இந்த அரசு ஏழைகளுக்கானதில்லை என்று தெரிகிறது” என்கிறார்.

கார்ப்பரேட்டுகளுக்கு கொடைகள்
பத்திரிகையாளர் சாய்நாத் தயாரித்துள்ள கார்ப்பரேட் வரிச்சலுகைகள் பற்றிய வரைபடம்

ச்சே.. சத்ய சோதனை. கரடியே காறித் துப்பி விட்டதய்யா..!

மோடி வித்தை
“பணக்கார முதலைகள் முட்டை போடும்” என்று மோடி-ஜெட்லி காட்டும் வித்தை.

கார்ப்பரேட்டுகளின் வருமான வரியை 4 ஆண்டுகளில் 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைப்பதாக அறிவித்துள்ள மோடி அரசு,  இணையத்தில் தனக்காக களமாடி வரும் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கும் தனிநபர் வருமான வரிக்கான தற்போதுள்ள வரிவிலக்கு உச்சவரம்பை அதிகரிக்கவில்லை.

மாறாக, தனியார் காப்பீடு, மருத்துவ, இதர வகைகளில் பாலிசி எடுத்தால் ரூ 4.4 லட்சம் அளவுக்கு சலுகை கிடைக்கும் என்று ஃபிலிம் காட்டுகிறார்கள். இதில் ஆதாயம் முதலாளிகளுக்கு, பீதி நமக்கு என்பதை நடுத்தர வர்க்கம் உணர்வதில்லை.

என்றாலும், சமூக வலைத்தளங்களில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னும் பின்னும் மோடி என்னவெல்லாம் பேசினார் என்பதைப் பீராய்ந்து திரைச்சொட்டுகளாக (Screen shots) வெளியிட்டு வருகின்றனர் நம்பிக் கெட்ட நடுத்தர வர்க்கத்தினர்.

கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்’சுமை’யை குறைத்த கையோடு, ஒட்டு மொத்த மக்களையும் பாதிக்கும் வகையில் சேவை வரியை 12.36%-லிருந்து 14% ஆக உயர்த்தியிருக்கிறார், ஜெட்லி. மேலும், மோடியும் அவரது மேட்டுக்குடி பாதந்தாங்கிகளும் துடைப்பம் எடுத்து தெருக்களை பெருக்குவதாக போஸ் கொடுக்கும் ஸ்வச்ச பாரத் (தூய்மை இந்தியா) திட்டத்துக்கு வாய்க்கரிசி போட, தேவைப்படும் போது சேவை வரியை 2% கூட்டவும்  வசதி செய்திருக்கிறார் அவர்; மோடி தான் போடும் நாடகங்களுக்கான விளம்பரக் கட்டணமாக கார்ப்பரேட்டுகளுக்கு படியளக்கும் பில்லை மக்கள் தலையில் கட்டியிருக்கிறார். கேட்டால் நாடெங்கும் கழிப்பறைகள் கட்டுவதாக உதார் விடுகிறார்கள். எனில், ஸ்வச்ச பாரத் திட்டத்தின் விளம்பரச் செலவு எவ்வளவு, கழிப்பறை கட்டிய செலவு எவ்வளவு என்று வெள்ளை அறிக்கை விட்டால் இதன் மோசடியை உணர முடியும்.

பாபா ராம்தேவ்
யோகாவுக்கு செலவுக செய்யும் பணத்துக்கு வரிவிலக்கு.

அதோடு கூடவே, தூய்மை இந்தியா திட்டத்துக்கு கார்ப்பரேட்டுகள் ஒதுக்கும் நன்கொடைகளுக்கு 100% வரிவிலக்கு என்று முதலாளிகள் வரி ஏய்க்க இன்னொரு  ஓட்டையை திறந்து விட்டிருக்கிறார் ஜெட்லி.

மேட்டுக்குடியினர் வரிவிலக்கு பெறும் தர்ம காரியங்களில், யோகாவுக்கு செலவு செய்யும் பணத்தையும் சேர்த்து பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்ற சாமியார் கம்பெனிகளுக்கும் நன்றிக் கடன் செலுத்தியிருக்கிறார் மோடியின் நிதி அமைச்சர்.

உயர்குடியினரின் முக்கிய புனித தளங்களான “ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்கள் புதிதாக துவங்கப்படும்” என்று நிதி நிலை அறிக்கையில் அறிவித்துள்ள அதே வேளை, கல்விக்கான ஒதுக்கீடு கடந்தாண்டை விட 2 சதவீதம் குறைந்துள்ளது. இந்த வெட்டு, சாதாரண மக்களுக்கான அரசு பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டில்தான் நடக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.

மேலும், 2 சதவீதம் குறைவு என்ற இந்தக் கணக்கு என்பது கடந்த நிதியாண்டில் செலவிடப்பட்ட தொகையில் இருந்து கணக்கிடப்பட்டதாகும். உண்மையில் கடந்தாண்டு நிதி நிலை அறிக்கையில் செலவிடப்போவதாக பீற்றிக் கொண்ட தொகையில் இருந்து கணக்கிட்டால் 16.54 சதவீதம் இந்தாண்டு நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது. அதாவது, சென்ற நிதி ஆண்டிலேயே அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து சுமார் 85.5 சதவீதம் தான் உண்மையில் செலவிடப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டம்
தூய்மை இந்தியா திட்டத்துக்கு செலவழிக்க மக்கள் தலையில் சுமை.

பொதுப்பணித் துறையில் சுமார் ரூ 1.25 லட்சம் கோடி செலவிடப்படும் என்ற நிதி நிலை அறிக்கையின் வாசகங்களை ஜெட்லி வாசித்துக் கொண்டிருக்கும் போதே, சிமெண்டு, எஃகு மற்றும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயரத் துவங்கியது. ஜெட்லி கார்ப்பரேட்டுகளுக்கு எழுதப் போகும் மொய்தான் அந்த ரூ 1.25 லட்சம் கோடி என்பதை அவர்களது புனிதத் தலமான பங்குச் சந்தையின் பக்தர்கள் முதலில் உணர்ந்து விட்டார்கள்.

ஒரு பக்கம் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள பாரதிய ஜனதா, விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என்று சகல பிரிவினரின் மேலும் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.

2013-ம் ஆண்டு ரூ 17,778 கோடியாக இருந்த விவசாயத் துறைக்கான நிதி ஒதுக்கீடு, தற்போதைய 2015-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ரூ 11,657 கோடியாக வெட்டிக் குறுக்கப்பட்டுள்ளது. இதில் பாசன வசதிகளுக்காக கடந்தாண்டு ரூ 1,797 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போதைய நிதி நிலை அறிக்கையில் ரூ 772 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசுகளின் சார்பாக செயல்பட்டு வந்த விவசாய பொருட்களுக்கான சந்தைக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (APMC – Agricultural produce marketing committee) கட்டுப்பாட்டிலிருந்து பழங்கள் மற்றும் அத்தியாவசிய காய்கறிகள் விடுவிக்கப்பட்டு ஏற்கனவே விளைச்சலுக்கு போதிய விலையில்லாமல் அவதிப்பட்டு வந்த விவசாயிகளை லாபவெறி கொண்ட கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்புக் கொடுத்துள்ளது மத்திய அரசு.

விவசாயத் துறைக்கு வெட்டு
பாசன வசதிகளுக்காக கடந்தாண்டு ரூ 1,797 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போதைய நிதி நிலை அறிக்கையில் ரூ 772 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது

மோடி பதவியேற்ற பின் விவசாயிகள் தற்கொலை 26 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எஞ்சிய விவசாயிகளின் தலையில் திணித்து அவர்களை உயிரோடு குழியில் தள்ளி தற்போதைய பட்ஜெட்டின் மூலம் மண்ணைப் போட்டு மூடியுள்ளது மத்திய அரசு.

தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தம், தொழிற்சாலை பாதுகாப்பு விதி முறைகளை தளர்த்தியது, விவசாயிகள் வாழ்க்கையை அழித்தது, கல்விக்கான ஒதுக்கீட்டை குறைத்து மாணவர்களுக்கு துரோகம் செய்தது, சமையல் வாயு மானியத்தை டி.பி.டி.எல் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து நடுத்தர வர்க்க குடும்பப் பெண்களை அல்லாடவிட்டது என்று எந்தப் பாரபட்சமும் இல்லாமல் சகல தரப்பினரையும் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது குடுகுடுப்பைக்கார அரசு.

அரசின் தாக்குதலில் ஓய்ந்து வீழும் மக்களுக்கு போதிய மருத்துவம் கூட கிடைக்காது என்பதாக மருத்துவத் துறைக்கான ஒதுக்கீட்டையும் 15 சதவீத அளவுக்கு குறைத்துள்ளது, மோடி அரசு. ஏற்கனவே உள்ள நிதி ஒதுக்கீடு போதாமல் அரசு மருத்துவமனைகள் நாற்றமெடுக்கும் பாழடைந்த குடோன்களைப் போல காட்சியளித்து வரும் நிலையில் இனி வரும் காலங்களில் ஏழை மக்களின் வாழ்க்கையை தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளிடம் சமர்ப்பித்துள்ளார் மோடி.

இராணுவச் செலவு
இந்திய இராணுவம் என்ற தின்னிமடக் கூட்டத்திற்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாயில் மோடி வைத்திருக்கும் மொய் விருந்தைப் பொருத்தவரை தீனி இராணுவத்திற்கு – மொய் பன்னாட்டு ஆயுத தளவாட தயாரிப்பு நிறுவனங்களுக்கு.

ஒருபக்கம் மக்களின் தலையில் கொள்ளியை வைத்துள்ள இதே பட்ஜெட்டில் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கப்பட்டுள்ள சலுகைகள் தவிர இராணுவத்திற்கு ரூ 2.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கி அறிவித்துளார் நிதியமைச்சர். வெள்ளைக்காரன் இந்தியாவுக்கென்று எப்போது இராணுவத்தையும் போலீசையும் ஏற்படுத்தினானோ அன்றிலிருந்து இன்று வரை ஒட்டுமொத்த நாட்டையும் உறிஞ்சிக் கொழுக்கும் பிரம்மாண்டமான தின்னிப் பண்டாரமாக உருவெடுத்துள்ளது இராணுவம்.

இது பாசிசவாதிகளின் காலம் என்பதால், அவர்கள் தங்கள் குண்டாந்தடிகளுக்கு வெண்ணை தடவி பளபளப்பாக வைப்பதில் பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்திய இராணுவம் என்ற தின்னிமடக் கூட்டத்திற்கு இரண்டரை லட்ச ரூபாயில் மோடி வைத்திருக்கும் மொய் விருந்தைப் பொருத்தவரை தீனி இராணுவத்திற்கு – மொய் பன்னாட்டு ஆயுத தளவாட தயாரிப்பு நிறுவனங்களுக்கு.

பெட்ரோல் விலை
பெட்ரோல் விலையால் கடிக்க வைக்கும் மோடி மஸ்தான்.

இந்த விருந்தில் தனக்கும் ஒரு இடம் வேண்டும் என்று ஒண்டிக் கொள்வதற்காக தி ஹிந்து நாளிதழில் மோடியை விதந்தோதி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார், சின்ன அம்பானி அனில்.

சின்ன அம்பானி ஒரு முறை மோடியை சந்தித்த போது, “அனில், நம்ம நாட்டில் விடப்படும் கண்ணீர் கூட நம்மோடது இல்லை தெரியுமா? நம்மோட பாதுகாப்பு படைகள் பயன்படுத்தும் ஒவ்வொரு கண்ணீர் புகை குண்டும் இறக்குமதியாகிறது” என்று கண்ணீர் விட்டாராம், மோடி. அதனால், நாட்டு மக்களை கண்ணீர் விட வைக்கும் குண்டுகளை உள்ளூர் முதலாளிகளே உற்பத்தி செய்வதற்குத்தான் “மேக் இன் இந்தியா” திட்டத்தை கொண்டு வந்திருக்கிறாராம் மோடி.

“சி.பி.ஐ, சி.வி.சி, சி.ஏ.ஜி (புலனாய்வு, ஊழல் ஒழிப்பு, தணிக்கை) போன்ற துறைகளின் கண்காணிப்பிலிருந்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளை விடுவித்து ஒத்துழைப்பு, போட்டி, கூட்டுமுயற்சிகள் என்ற அடிப்படையில் அவர்களை முடிவெடுக்க வைக்க வேண்டும்” என்று கார்ப்பரேட் ஊழலையே சட்டபூர்வமாக்கும் படி கேட்டிருக்கிறார், அம்பானி. மேலும், தனியார் பங்களிப்புக்கு அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டிருக்கிறார். ‘மார்க்சிஸ்ட்’ ராமின் தி ஹிந்து பத்திரிகை அனில் அம்பானியின் கோரிக்கைகளை கடை விரிக்கும் கார்ப்பரேட் விளம்பரப் பத்திரிகையாக மாறியிருப்பதும் மோடியிச இந்தியாவின் புதிய நடைமுறை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு மறைமுக பங்களிப்பை செய்துள்ள அதே நேரம், இந்த விலையேற்றம் விமானப் பயணிகளைப் பாதிக்க கூடாது என்பதால் விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கு மட்டும் சலுகைகள் வழங்கியுள்ளது மத்திய அரசு.

நடக்கும் ஒவ்வொரு அநீதியையும் பார்க்கும் போது இது யாருக்கான அரசு என்பதை விளங்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு பாடம் எடுக்க வருகிறார் பொருளாதார அறிஞர் அசோக் தேசாய்.

அருண் ஜெட்லி
பா.ஜ.க.வுக்கு நிதி கொடுத்த புரவலர்களுக்காக மட்டும் இந்த பட்ஜெட்.

இந்து பத்திரிகையில் அவர் எழுதியுள்ள பட்ஜெட் அலசல் கட்டுரையில், “2008 – 10 காலகட்டத்தில் நாடு கண்ட வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சி என்பது வாஜ்பாயின் சாதனையை காங்கிரசு தட்டிப் பறித்துக் கொண்டதாகும்” என்றும், “அப்படி வாஜ்பாயால் கிடைத்த வளர்ச்சியின் பலனை உணவு மானியம், வேலை வாய்ப்பு என்று மக்கள் மீது காங்கிரசு வீணடித்து விட்டது” என்றும் குறிப்பிட்டுள்ளார். 2008 – 10 காலத்தில் உலகமே பொருளாதார பெருமந்தத்தில் குப்புறக் கவிழ்ந்து கிடந்த போது வாஜ்பாயால் விளைந்த வரலாறு காணாத வளர்ச்சியென்று கட்டுரையாளர் ஜல்லியடிப்பதற்குள் நாம் நுழையத் தேவையில்லை.

ஆனால், “மக்களின் வாக்குகளை இத்தகைய திட்டங்கள் மூலம் வளைத்துப் போடும் காங்கிரசின் திட்டத்தை முறியடிக்க, சளைக்காமல் வார்த்தைகளை அருவியாய் கொட்டும் ஒரு புதிய தலைவரை, அவரது இந்துத்துவ சாதனைகளிலிருந்து விடுவித்து காங்கிரசின் சொந்தக் குதிரையான வளர்ச்சியை  திருடிக் கொள்ள களமிறக்கியது பா.ஜ.க.” என்று சொல்லும் அவர், “நரேந்திர மோடியை ஆதரித்த மக்களுக்கும், பா.ஜ.க.வின் தேர்தல் பணப்பெட்டியை நிரப்பிய வர்க்கங்களுக்கும் பதில் செய்ய வேண்டிய நேரம் இது” என்று மோடியின் தேர்தல் வெற்றிக்கு அவரது சவடால் பேச்சுக்களும், கார்ப்பரேட்டுகள் கொட்டிய பண மூட்டைகளும்தான் ஆதாரம் என்பதை தெளிவாக்கி விடுகிறார்.

ஆம் ஆத்மியை நசுக்கும் பட்ஜெட்
மோடி ஜக்கம்மா சகிதம் வந்து சொல்ல ஆரம்பித்த “நல்ல காலம் பொறக்குது…” அருள்வாக்கின் பிந்தைய பகுதியான “நாடே நாண்டுகிட்டு சாகப் போகுது” என்பதை இப்போது நடைமுறையில் செயல்படுத்திக் காட்டத் துவங்கி விட்டார்.

ஆனால், மோடி அரசு காங்கிரசு கொண்டு வந்த மக்களுக்கான திட்டங்களை ஊத்தி மூடி விட்டு அவற்றுக்கான நிதியை முதலாளிகளின் வளர்ச்சியை நோக்கி திருப்பி விடாததை கடுமையாக விமர்சிக்கிறார்.

“அந்தத் திட்டங்களின் மேல் பாரதிய ஜனதாவுக்கு எந்தக் கடப்பாடும் இல்லை” என்கிறார் அவர் .  அதாவது, ‘அந்தத் திட்டங்களில் பலன் பெற்றவர்கள் உனக்கா ஓட்டுப் போட்டார்கள், ஏன் அவர்களுக்கு கொட்டியழ வேண்டும். அந்தப் பணத்தை முதலாளிகளுக்கு திருப்பி விடு” என்பதே இதன் பொருள்.

நிதிப் பற்றாக்குறையை குறைக்க ‘உணவு மானியம், உர மானியம் போன்ற வீண் செலவுகளை ஆய்வு செய்து குறைக்க வேண்டும்’ என்றெல்லாம் சொல்லும் முதலாளித்துவ ஆய்வாளர்கள், முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பது என்று வரும் போது பற்றாக்குறையைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று  கூறுவது உலகெங்கும் உள்ள நடைமுறை. அதையே பின்பற்றி “மக்களுக்கான திட்டங்களை வெட்ட தைரியம் இல்லை என்றால், பற்றாக்குறையை அதிகமாக்கிக் கொள்ளலாம்” என்றும் ஆலோசனை கூறுகிறார், தேசாய்.

மோடியின் அரசு யாருக்கு சாதகமானது என்பதை இதற்கு மேலும் தெளிவாக யாராலும் விளக்கி விடமுடியாது என்பதால் இந்து பத்திரிகைக்கும் அசோக் தேசாய்க்கும் நாம் நன்றியுடையவர்களாகிறோம்.

மோடி ஜக்கம்மா சகிதம் வந்து சொல்ல ஆரம்பித்த “நல்ல காலம் பொறக்குது…” அருள்வாக்கின் பிந்தைய பகுதியான “நாடே நாண்டுகிட்டு சாகப் போகுது” என்பதை இப்போது நடைமுறையில் செயல்படுத்திக் காட்டத் துவங்கி விட்டார்.

இது புலம்பும் நேரமோ, மோடியின் பேச்சுமாத்துகளை கேலி கிண்டல் செய்து சிரித்துக் கொள்ளும் தருணமோ அல்ல – ஏமாற்றப்பட்டவர்களின் ஆத்திரத்தை செயலில் காட்ட வேண்டிய நேரம் – தெருவிலிறங்கிப் போராட வேண்டிய நேரம்.

– தமிழரசன்

படங்கள் : சமூக வலைத்தளங்களிலிருந்து

  1. நெடுங்கதை – துல்லிய தேசம்

    அத்தியாயம் I

    கரும்பூர் கிராமம் ,அருகாமையில் மறைமலைநகர் , செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் என்கின்ற ஊரில் வாழும் வானதி சரவணனாகிய நான் கூறுவது யாது எனில்


    எங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள உலகில் விலையுயர்ந்த கார் கம்பெனியின் கிடங்கின் நீலநிற உலோக கூரைகள், அதன் பக்க தடுப்புகள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன. முன்பொரு காலம் இப்படி தான் நெல்லும் ,கருனைகிழங்கும் விளைந்த கீழக்கரனை நிலம் எங்களை துரத்தியது…, வாழ்விழந்து போனோம். நான்கு ஏக்கர் நன்செய் நிலமும் ,கிணரும் , பம்பு செட்டும் கைவிட்டு போனது.சுதந்திரத்துக்கு முன் வெள்ளைக்காரன் எங்களை போன்ற ஏழை பாழைளுக்கு ,தலித் மக்களுக்கு விவசாயம் செய்ய கொடுத்த நத்தம் புறம்போக்கு நிலமெல்லாம் நாம சுதந்திரம் அடைந்து சரியாக அம்பதாவது வருடம் வெள்ளைக்கார ஹென்றி போர்டு கம்பெனிக்கே ரொம்ப கொரஞ்ச விலையில் பறிபோனது.அந்த மண்ணின் மீது எனக்கென்று ஒரு ஆசையும் இருந்தது. அப்பாவுக்கு வரும் பங்கில் நான் படித்த மருந்தாளுனர் B.Pharm படிப்பை வைத்து கவர்மண்ட் லோன் வாங்கி சின்னதா இரும்பு சத்து டானிக் செய்யும் கம்பெனி ஆரபிக்கலாம் என்று பிளான் செய்தேன். ஹும் என்ன செய்ய இப்ப எல்லாம் போய் பிரஞ்சுகாரர் நடத்தும் இரும்பு சத்து கம்பெனியிலேயே தர கட்டுப்பாட்டு அதிகாரியா வேலை செய்துகிட்டு இருக்கேன். ஆமாம் நம்ம கனவெல்லாம் கறைக்கப்பட்டாலும் , வாழ்வே நடுத்தெருவுக்கு வந்தாலும் ஏதோ வாழ்ந்து தானே ஆகணும். என் வலிகளை எல்லாம் குறைக்க ஒரு கவிதையாவது எழுத எனக்கு உரிமையுள்ளது அல்லவா ?

    “வானத்து மீன்களாய் நாங்கள்”

    அன்று விண்மீன்கள் உலவும் இரவில்

    நிலவொளியில் எங்கள் கழனிக்கு அருகில்

    ஓடையில் சலசலக்கும் மீன்களை

    வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம்.

    இன்று ஹென்றி போர்டின் தொழில்சாலை இட்ட

    முற்றுகை சுவரின் தாகத்தில்

    கீழகரனை கிராமத்தில் முள்ளிவாய்க்காலாக

    முடங்கி போனோம்

    தொடரும்

    //ஒரு பக்கம் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள பாரதிய ஜனதா, விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என்று சகல பிரிவினரின் மேலும் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.//

    • மாற்றம் :

      நத்தம் புறம்போக்கு நிலமெல்லாம->****பஞ்சமர் நிலம் எல்லாம்

      * தலித் மக்கள் நிலை பற்றி கவலை கொண்டு, 1891ம் ஆண்டில், செங்கல்பட்டில் ஆட்சியராக இருந்த டிரெமன்ஹரே என்கிற ஆங்கிலேயர், லண்டனிலுள்ள அரசிக்கு ஒரு கடிதம் எழுதினார். இந்த கடிததின் அடிப்படையில், பிரிட்டிஷ் பாராளுமன்றம், 1892 ம் ஆண்டில் ஒரு சட்டத்தை இயற்றியது.
      இந்த சட்டத்தின்படி, இந்தியா முழுவதும், Depressed Class என்று கூறப்பட்ட தாழ்த்தப்ப்ட்ட மக்களுக்கு நிலங்களை இலவசமாக அளித்தது. இந்த நிலங்களீல், தாழ்த்தப்பட்ட மக்கள் பயிர் செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம். குறைந்தது 10 ஆண்டுகளுக்கு பிறகு தான், அவர்கள் இந்த நிலங்களை பிறர் பெயருக்கு மாற்ற முடியும். அதுவும், அவர்கள் விற்பதாக இருந்தால், அவர்கள் வகுப்பைச்சார்ந்த (Depressed Class) வர்களிடம் தான் விற்க முடியும். வேறு வகுப்பினரிடம் விறறால், அநத விறபனை செல்லாது.

      நன்றி http://www.vetripadigal.in/2011/01/blog-post.html

  2. நெடுங்கதை – துல்லிய தேசம்

    அத்தியாயம் 2

    நான் இந்த கதையிலே அரசியல் பத்தியெல்லாம் பேச போறது இல்லைங்க. ஆனா கதையில் அரசியல் பத்திய உள் செய்திகள் வந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லைங்க. கார் கம்பெனிக்கு யாரு கீழக்கரனை நிலத்தை எல்லாம் எடுத்தது ,யாரு கம்பெனி கட்டியபின்பு தொறந்த வைத்தது என்று கூறும் போது அதுல அரசியல் வருமே நா என்ன செய்ய ?கார் கம்பெனியை தொறக்க டாகடர் கலைஞர் வந்ததாகாவும் அவரை பொத்தேரி அருகில் அன்னிக்கு பார்த்ததாகவும் என் வீட்டுக்காரர் சொல்லி இருக்காரு. அம்மா ஆட்சியில் தான் கீழக்கரனை நிலத்தை எல்லாம் கவர்மண்டே தரகராக இருந்து கார் கம்பெனிக்கு வாங்கி தந்ததாக அப்பா கூறியதாக நினைவு. எதுக்கு என் நிலத்தை ஹென்றி போர்டுக்கு வாங்கி தர தமிழ்நாடு கவர்மெண்டு புரோக்கர்-தரகு வேலை செய்யணும் ? எவ்வளவு கமிசன் யாரு வாங்கினாங்க ? வினவு இணைய தளத்தில் படித்த போது புதிய பொருளாதார கொள்கை ,அந்நிய செலவாணிக்கான முதலீடு என்று என்ன என்னமே காரணத்தை செல்லுறாங்க! அதை பத்தியெல்லாம் எங்க கீழக்கரனை விவசாய மக்களுக்கு என்ன தெரியுங்க ? நா அப்ப ரொப்ப சின்னவ , பள்ளிக்கூடத்தில் எழாவது தான் படிச்சிட்டு இருந்தேன். அதனால என்னால ஒன்னும் செய்ய முடியல. இனியாவது தெரிந்துக்கொண்டு மத்த ஊரையாவது ஹென்றி போர்ட் மாதிரியான ஆளுங்க கிட்ட இருந்து காப்பாத்தலாம் இல்லையா ? அதுக்கு தான் இந்த உண்ம கதையை எழுதுறேன்.

    தொடரும்

    //ஒரு பக்கம் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள பாரதிய ஜனதா, விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என்று சகல பிரிவினரின் மேலும் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.//

    • நண்பர் சுசீலா,

      உங்கள் பகிர்தல்களுக்கு நன்றி.

      நண்பர் தமிழ் ஆகிய சரவணன் அவர்களின் துணைவியரா நீங்கள்? (உங்கள் துணைவரைப் போலவே உங்களுக்கும் மற்றவர்களின் மீது அக்கறை இருக்கிறது. அளவு கடந்த மகிழ்ச்சி.)

  3. நெடுங்கதை – துல்லிய தேசம்

    அத்தியாயம் 3

    நேற்று கூட ஹென்றி போர்ட் கார் கம்பெனியில் வேலை செய்து வெளியேற்றப்பட்ட ஒரு தம்பியை பார்த்து பேசினேன். வாடிய முகத்துடனும் , சவரம் செய்யப்படாத முகத்துடனும் இருந்தாரு. மறைமலை நகரில் நாங்க வாடகைக்கு இருந்த வீட்டுக்கு பக்கத்தில் தான் நண்பர்களுடன் வீடு எடுத்து தங்கி போர்டில் வேலைக்கு போய்கொண்டு இருந்தாரு. என்னுடைய கணவருக்கு அவர் நல்ல அறிமுகம் ஆனவரு. நாங்க வீடு கட்டி கரும்பூருக்கு வந்த பின்னால அவரை பார்த்தது இன்று தான். அவரிடம் நான் மறைமலை நகர் நூலகத்தில் பேசிய பேச்சின் சாராம்சம் இது தான் …

    ” மறைமலை நகர் ஹென்றி போர்ட் கார் கம்பெனியில் 10%க்கும் குறைவானவர்களே நிரந்தர தொழிலாளர்கள். மீதி இருக்கிற தொழிலாளர்கள் எல்லாம் ஒரு வருட அக்ரிமண்டில் வேலையில் இருகின்றவங்க. அதுவும் மாத சம்பளம் ரூ 7,500 மட்டும் தான் ஒரு வருடம் கழித்து மீண்டும் வேற வேலை தேடியாகனும். அல்லது சொந்த ஊரு தேனிக்கே போயாகனும். ”

    மறைமலை நகர் ஹென்றி போர்ட் கார் கம்பெனியில் வேலை செய்யும் தம்பி ,தங்கைகளை அவர்களின் நீல நிற சீருடையில் நான் பார்த்த போது எல்லாம் ஒரு காலத்தில் பெருமை பட்டுக்கொள்வேன். ஆனா இப்ப இவரு சொல்லும் ஒரு வருட அக்ரிமண்ட் ,ரூ 7,500 மாத சம்பளம் என்பதை கேட்டபின்னால மனசு கொதிச்சு போச்சு. நினைத்து பார்த்தாலே ஒருபக்க தலை வலிதான் வருது . நாம மருந்து கம்பெனி கட்டிஇருந்தா கூடகுறைந்த சம்பளமாக ரூ 10,000கொடுத்து இருக்க முடியும். ஆனா ஹென்றி போர்ட் கார் கம்பெனி மொதலாளிங்க இப்படி அடிமாட்டு சம்பளம் கொடுத்து நம்ம மக்களை தத்தளிக்க விடறாங்களே !மனசுக்குள்ள இவனுங்களை, அமெரிக்க மொதலாளிகளை திட்ட நெறைய கெட்ட கெட்ட வார்த்தையா வருது. ஆனா பொம்பள பிள்ளை இல்லையா வெளியே எப்படி சொலுவது. தூத்தேரி ஒருநாளைக்கு அமெரிக்காவில் $120 சம்பளம் கொடுக்கும் இதே கம்பெனி, ஆனா $4 சம்பளம் தான் இந்தியாவில் கொடுகிராங்க . என்ன கொடுமை இது ? ஒரு நாள் சம்பளம் ரூ 250 ல் என்ன செய்வாங்க நம்ம பிள்ளைகள் ?

    தொடரும்

  4. நெடுங்கதை – துல்லிய தேசம்

    அத்தியாயம் 4

    எதோ சொல்லனும் என்று நினைத்தது மறந்து விட்டது . உம் நினைவுக்கு வருது. எனக்கு கல்யாணம் ஆகி 6 வருடம் ஆகுது. என் வீட்டுக்காரர் என் சொந்த ஊரு கீழகரனைக்கு இது வரைக்கும் 3 முறை தான் வந்து இருக்காரு. இத்தனைக்கும் மறைமலை நகரில் இருந்து 4கிலோ மீட்டர் தொலைவு தான். கடைசியா என்னோட பெரியப்பா சாவுக்கு ஆட்டோவில் மாலையும் கையுமா போயிருந்தோம்.ரோடு சரியிலாததாலே ஊர் கோவில் திருப்பதில் ஆட்டோவை விட்டு எறங்கியவரு ரோட்டோர ஹென்றி போர்ட் கட்டிய கோட்டைச்சுவரை பார்த்து

    “இவனுங்களை எல்லாம் அமெரிக்காவுக்கு போயி திருநெல்வேலி விச்சருவாளால் கொண்டு வெட்டணும் வானதி. உங்க ஊருக்கு வந்தாலே மனசு பதறுது. அது தான் வரது இல்லை ”

    என்று சொன்னாரு.

    சாவு வீட்டுக்கு இன்னும் 5 நிமிட நடை இருந்ததாலே நானும் அவருக்கு தெளிவா பதில் சொன்னேன்.

    ” இவனுங்களை ,அமெரிக்க மொதலாளிகளை வெட்டி சாச்சா பிரச்சனை தீர்துடுமா ? இந்த ஊருக்கு வாக்கப்பட்ட உங்களுக்கே இவ்வளவு வருத்தம் இருக்கும் போது இந்த ஊரிலேயே பிறந்து வளந்த எனக்கு எவ்வளவு கோபம் இருக்கும் . என்ன செய்ய ஊரு மக்களை அரசாங்கம் பொய்யா வேலை கொடுக்கின்றேன் , வேறு இடம் கொடுக்கிறேன் என்று வாயாலேயே மொழம் போட்டு ஏமாத்திட்டாங்க. விஎஒ-வில் இருந்து அன்னிக்கு இருந்த காஞசிபுரம் கலைக்டர் வரைக்கும் இப்படி பேசியே எங்களை கொண்ணுட்டாங்க. நாம ,நாங்க எதிர்த்து போராட வேண்டியது எங்க நிலத்துக்கு புரோக்கர் வேலை பாத்த அரசாங்கத்தை எதிர்த்து தான் ”

    அதுக்கு அப்புறம் சாவு வீடு வந்ததாலே பேச்சை நிறுத்திட்டு வீட்டுகுள் போனோம்.

    பெரியப்பா சாவுக்காண காரணத்தையும் அவரு சாவுக்கு வந்து இருந்த நொடிஞ்சு போன விவசாயி சீத்தா லச்சுமன நாயுடு கதையையும் அப்புறமா சொல்லுறேன்.

    தொடரும்

    • நல்ல முயற்சி நண்பரே,

      அதியமானின் சொற்களிலேயே சொல்வதானால் இந்த பாழாய்ப்போன தாராளமயமாக்கலுக்கு பின்னர்தான் இப்படி விளைநிலங்களை அதுவும் சென்னையை சுற்றிய பகுதிகளில் அன்னிய நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது அரங்கேறி வருகிறது.தமிழகத்தின் முன்னேற்றம் மாநிலம் முழுவதும் சமச்சீரான வளர்ச்சி பெற்றால் மட்டுமே சிறப்பாக இருக்க முடியும்.ஆனால் பன்னாட்டு நிறுவன கோமான்கள் சென்னை,மும்பை போன்ற பெருநகரங்களை விட்டு நகர மறுக்கிறார்கள். இவர்களுக்கு துறைமுகம்,வானூர்தி நிலையம் ,விண்மீன் விடுதிகள் என அனைத்து வசதிகளும் கைக்கெட்டும் தொலைவில் இருக்கவேண்டும்,தொலைவில் இருந்தால் கொள்ளைப்பணத்தில் வண்டி வாடகை என கொஞ்சம் இழக்க வேண்டும் என்பதால் இப்படி பெரு நகரங்களை சுற்றிய ஊர்களை அடித்து உலையில் போடுகிறார்கள்.இதனால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி,சிறிய நிலப்பரப்பில் வகை தொகையின்றி பெரும் மக்கள் திரள் வாழவேண்டிய கட்டாயம்,அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடு என அனைத்து பாதகங்களையும் நாம் சுமக்க வேண்டியிருக்கிறது.

      தாராளமயமாக்கலுக்கு முன்னரே தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த SIDCO ,SIPCOT ,TIDCO முதலான அரசு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

      இதில் SIDCO தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 94 ஊர்களில் தொழிற்பேட்டைகளை அமைத்து தந்திருக்கிறது.பார்க்க;

      http://www.tn.gov.in/rti/proactive/sind/handbook_sidco.pdf

      SIPCOT தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 19 இடங்களில் தொழிற்பேட்டைகளை அமைத்து தந்திருக்கிறது.பார்க்க;

      http://www.sipcot.com/industrial_complex_perundurai.htm

      இந்த தொழிற்பேட்டைகள் பெரும்பாலும் தரிசு நிலங்களிலேயே அமைக்கப்பட்டன.விவசாய நிலங்கள் எடுக்கப்படவில்லை.அதனால் எந்த எதிர்ப்பும் இன்றி பகுதி மக்களின் பேராதரவுடன் அவை அமைக்கப்பட்டன

  5. நெடுங்கதை – துல்லிய தேசம்

    அத்தியாயம் 5

    அன்னிக்கி அம்மாவாசை ,அதுவும் மாலி அம்மாவாசை. எல்லா அம்மாவாசையையும் சிறப்பா கொண்டாடி தன் பெற்றோர்களை நினைவுகூறும் பெரியப்பா, மாலி அம்மாவாசை அன்னிக்கி மட்டும் என் அப்பாவையும் வலுகட்டாயமாக அழைத்து சென்று சிங்கபெருமாள்கோவில் ஐயருக்கு தவசம் கொடுத்தாரு. என் அப்பாவுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் 16 வயது மூத்த அண்ணன் கூப்பிடும் போது வரமாட்டேன் என்று கூறமுடியாது இல்லையா ? அந்த மாலி அம்மாவாசை அன்னிக்கு தான் எங்க பெருமாளின் அடையாளமான வெள்ள கழுத்து கருடன் சுத்தும் வானத்தில் பிணம் திண்ணி கழுகுகள் உலாத்திக்கொண்டு இருந்தன. ஐயருக்கு தவசம் கொடுத்து ,காகங்களுக்கு சோறு படைத்து மாலி அம்மாவாசை வழிபாட்டை முடித்தவரு , காலை விரதத்தை முடித்து படையல் எலையில் சோறு சாப்பிட்ட பெரியப்பா வீட்டு முன் வாசலில் கயித்து கட்டிலில் ஆயாசமாக உக்காந்து இருப்பாரு. ஐந்து நிமிடம் கூட ஆகி இருக்காது , சீத்தா லச்சுமன நாயுடு பரபரப்பா ஓடியாந்தாரூ. நல்லா நெட நெடனு ஒல்லியான ஒயர்ந்த உருவம் அவரு. வெறும் வேட்டி பனியனுடன் ஒடியாந்த அவரை பார்த்த என் பெரியப்பா வேகமாக எழுந்தவரு

    “வாங்க நாயுடு ஏன் பரபரப்பா இருக்கிங்க ?” என்றாரு

    கட்டிலில் வக்காந்த நாயுடு தண்ணிய குடித்து விட்டு பெரியப்பாவை பார்த்து சத்தம் போட்டாரு ” ஊருக்குள்ளார விஎஒ ,ஆர்ஐ , தாசில்தாருனு அதிகாரிகள் வந்து கம்பெனிக்கு நெலத்தை எடுப்பது பத்தி பேசிட்டு இருக்காங்க நீயி என்னனா உன் அப்பனுக்கு அம்மாவச படையல் போட்டு கொண்டு இருக்கியா மருதா ? சிக்கிரம் கெளம்பி வா .., போயி அதிகாரிகளிடம் பேசலாம் ”

    எங்க பெரியப்பா மருதன் வேட்டி மட்டும் கட்டிய ஒடம்போட நாயுடுவை கூட்டிக்கிட்டு கோவில் அருகில் நின்று ஊர் மக்களிடம் பேசிக்கொண்டு இருந்த அதிகாரிகளை நோக்கி ஓட்டமும் நடையுமா போனாரு. அப்ப ஆர்ஐ, ரொம்ப தெளிவா பேசிகிட்டு இருந்தாரு :

    ” எதுக்கு கவலை படனும் நாம …, அமெரிக்க கார் கம்பனி வந்தா இந்த வெய்யிலிலும் ,மழையிலும் எதுக்கு நாம கஷ்ட படனும். நெலத்துக்கு ஈடா வேலையும் ,,பணமும் ,மாத்து இடமும் கவர்மெண்டு கொடுக்கும் போது உங்களுக்கு என்ன பிரச்சனை ? கிராமம் எல்லாம் நகரமா மாறினா தான் நம்ம நாடு முன்னேறும் இல்லையா ” என்று அழகாக பேசிகிட்டு இருந்தாரு

    தூரத்தில் வரும் மருதனையும் ,நாயுடுவையும் பார்த்த ஊர் தல ஒன்னு ” கூட்டாளிங்க இரண்டுமா கைய கொத்துகொண்டு வருதுங்க .., பேசியே காரியத்த கெடுத்துட போவுதுங்க .., அவங்க பேச ஆரம்பிச்சா வாயை அமுக்குங்கடா “என்று சகாகிட்ட பேசிகிட்டு இருந்தது.

    “பள்ளிகூடத்தில் ஒன்னா படிச்சுதுங்கலாம் அதனால என்னும் நட்பாம். சாதி எல்லாம் இதுங்களுக்கு பெரிசா தெரியலையாம் ” என்று ஒரு வெத்து வேட்டு பெனாத்திகொண்டு இருந்தது .

    அதிகாரியின் பேச்சை அரை குறையாக கேட்டு கொண்டு வந்த பெரியப்பா மருதன் தனக்கு அறிமுகமான விஎஒ வை பார்த்து “ஐயா வேண்டாமையா எங்களை விட்டுடுங்க .., விவசாயம் தவர வேறு எதுவும் தெரியாது அவங்களுக்கு…, கம்பெனிக்கு கூடலூர் ,கரும்பூருனு நெறைய கவர்மெண்டு பொறம்போக்கு நெலமெல்லாம் இருக்கு ..,, அங்க அவிங்களுக்கு நெலத்தை ஓதிக்கிட்டு போங்க ” என்று ரொம்ப பணிவா பேசினாரு.

    தாசில்தாரு குறுக்க புகுந்து பேசினாரு ” போர்டு கம்பெனிகாரன் NH 45 பக்கத்துல இருக்கும் இங்க தொழில் தொடங்குவானா இல்ல 5 கிமீ தொலைவில் உள்ள கூடலூரில் பேக்டரி தொடங்குவானா ? அதுதான் உங்களுக்கு மாற்று எடம் தர போறோம் இல்லையா அப்புறம் என்ன கவலை ” என்று மிக மென்மையாக பேசினாரு

    ஊரு தல பெரியப்பா மருதனை பார்த்து ” நீ பேசாம இருக்கியா ..,வர லாபத்தை எதுக்கு விடனும் ..,வெள்ளைகாரனும் ,நம்ம கவர்மெண்டும் நம்ம நல்லதுக்கு தானே எல்லாம் செய்யுறாங்க “என்றதும் விஎஒ ஊரு தலையை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தாரு

    “வேண்டாங்க எதுவும் வேண்டாங்க இப்படி தான் நெய்வேலியில் நெலமெடுத்த அரசாங்கம் பணமும் முழுசா கொடுக்கல ,வேலையும் கொடுக்கல ,மாத்து இடமும் கொடுக்கல .., நெலத்தை கொடுத்துட்டு என் மச்சினன ரொம்ப கஷ்ட படறான் ” என்றாரு நாயுடு.

    உள்ள புகுந்த ஆர்ஐ ” அது மத்திய அரசுக்கும் ,மாநில அரசுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால அப்படி ஆயிடுது … ஆனா இந்த நெலத்தை பொருத்தவரைக்கும் உடன்படுக்கையே தமிழ் நாடு அரசுக்கும் ,போர்டு கார் கம்பெனிக்கும் தான் ” என்றாரு

    இருதியாக மென்னையாக பேசிய குங்கும பொட்டு தாசில்தார் ” இன்னும் 15 நம்ம கலைக்டர் வந்து போசுவாருங்க …எதுக்கும் கவலை படாம இருங்க “என்றாரு

    அரசு அதிகாரிகள் எல்லாம் போன பின்பு வீட்டுக்கு வந்த பெரியப்பா மருதன் .., இப்பவும் வாணத்தில் பிணம் திண்ணி கழுகுகள் சுத்துவதை பார்த்த ஒடனே தலைசுத்தி கட்டிலில் படுத்தவரு அன்னிக்கே முக்கா பிணமாக ஆகிட்டாரு. அதுக்கு அப்புறம் அரை பிணம் ,கால் பிணமா ,அரிக்கால் பிணமா வாழ்க்கையை ஓட்டியவரு 17 வருடம் கழித்து நேத்து இரவு முழு பிணமாயிட்டாறு

    தொடரும் …

    • மாற்றம் :

      அதுக்கு அப்புறம் அரை பிணம் ,கால் பிணமா ,அரிக்கால் பிணமா வாழ்க்கையை ஓட்டியவரு 17 வருடம் கழித்து நேத்து இரவு முழு பிணமாயிட்டாறு -> அதுக்கு அப்புறம் அரை உசுரு ,கால் உசுரு ,அரிக்கால் உசுரோட வாழ்க்கையை ஓட்டியவரு 17 வருடம் கழித்து நேத்து இரவு முழு பிணமாயிட்டாறு

  6. நெடுங்கதை – துல்லிய தேசம்

    அத்தியாயம் 5 [ பஞ்சத்த்தில் பிழைத்த பொன்னன் 1876-1932]

    எங்க பெரியப்பா மருதனின் அப்பன் வேதகிரியின் அப்பன் பொன்னன் உயிர் பிழைத்த கதை இது. 1877 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இயற்கையாகவும் ,செயற்கையாகவும் ஏற்பட்ட உணவு பஞ்சத்துக்கு இரண்டு காரணம் சொல்றாங்க. அதுக்கு காரணம் யாராக இருந்தாலும் அதனால அதிகம் நசிஞ்சி நாதியற்று ,செத்து போனது என்னமோ எங்க தலித் மக்கள் தான். ஒருபக்கம் வெள்ளையன் அரசு பணப்பயிரை விவாசாயம் செய்ய கட்டளையிட்டது. மறுபக்கம் தமிழ் நாட்டில் குறிப்பா செங்கல்பட்டு வட்டாரத்தில் ஏழை மக்களுக்கு கஞ்சி குடிக்க வழியே இல்லாத நிலையிலும், உணவு தானியங்களையும் சொரண்டி சொரண்டி வெள்ளைக்கார நாயிங்க அரசு ஏற்றுமதி செய்தது.நிலவுடைமை சாதி ஹிந்துகளும் வெள்ளையனுக்கு வரிகட்ட வழியில்லாம தளித்துக்கொண்டு இருந்தாங்க. அவுங்களுக்கே சாப்பிட வழி கொரஞ்சிகிட்டே இருக்கும் போது அவிங்க கிட்ட வேலைக்கு ஈடா கம்பு ,கேழ்விரகு கூலிய வாங்கி வேலை செய்யும் தலித் மக்கள் நாங்க ஒருவேலை கலிக்கே வழியில்லாம போனோம். கீழக்கரனை கிராமத்தில் என் தாத்தனுக்கு அப்பன் பொன்னன் பிறந்த காலத்தில் [1876] பஞ்சம் தலைவிரித்து ஆடினாலும் அவருடைய ஆயி,அப்பன் பொன்னன் என்றேபேரு வைத்தாங்க.அவருடைய ஆயி, அப்பன் நாயுடுகாரு நெலத்தில் பண்ணையம் பன்னியவங்க.பொன்னனுக்கு 12 வயசு இருக்கும் போது சரியா உணவு கெடைக்காம ,நோய் பட்டு அவருடைய ஆயி, அப்பன் மரித்து போயிட்டாங்க. பொன்னன் சீத்தா லச்சுமன நாயுடு மூததையர் நெலத்தில் ஒண்டியாளாக பண்ணையம் பார்த்த படியிருந்தார். இவரு தனியாளாக இருந்ததாலே ரொம்ப ஜுட்டிக்கையாக இருந்தாரு. தன் அம்மாவின் ஓரமுரையில் வந்த பொழிச்சலூர் பொண்ணை தன் 18ஆவது வயசுல கல்யாணம் கட்டிகிட்டாரு.அப்பதான் அவருக்கு வாழ்க்கையிலேயே மொதமொதலா ஜாக்பாட் அடித்தது. டிரெமன்ஹரே என்ற வெள்ளைகார செங்கல்பட்டு கலைக்டர் இங்கிலாந்து ராணிக்கு கடிதம் எழுதி தலித் மக்களுக்கும் நெலம் ஒதுக்கணும் என்று கேட்டுகிட்டாறு.தலித் மக்களுக்கு நெலத்தை ஒதுக்க சொல்லி சட்டத்தை ராணியம்மா இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நெரவேத்தினாங்க. அதுக்கு அப்புறம் செங்கல்பட்டு கலைக்டரு, நாயுடுகாரு ,ரெட்டிகாரு கிட்ட இருந்த எக்ஸ்ட்ரா நெலத்தை எல்லாம் கையகபடுத்தி பஞ்சமர் பூமி என்று அதற்கு பெயரிட்டு தலித் மக்களுக்கு எல்லாம் பிரிச்சி கொடுத்தாரு. அப்படி 4 ஏக்கர் நெலத்தை பெற்ற பொன்னன் ,பின்னால கிணறு ,தோண்டி ஏத்தம் இறைச்சு பயிர் செய்து விவசாயத்தையும் ,தன் சந்ததிகளையும் வளர்தாரு. 1932 ஆம் ஆண்டு தீராத வயிற்றுப்போக்கு நோயால இறந்து போயிட்டாரு. ஆனாலும் அவருக்கும் , சீத்தா லச்சுமன நாயுடு மூததைகளுக்கும் இருந்த முதலாளி ,தொழிலாளி உறவு எங்க அப்பா ,பெரியப்பா தல முறைவரைக்கும் தொடர்ந்துகிட்டு தான் இருந்தது.

    தொடரும்

  7. நெடுங்கதை – துல்லிய தேசம்

    அத்தியாயம் 7[ ரோசா பூ தோட்டம்]
    பெரியப்பா செத்தப்ப அவரை குளிர்சாதன பொட்டியில் தான் வச்சி இருந்தாங்க.பெட்டிமேலே எக்கசக்க பூமாலைகள். அதை எல்லாம் பார்க்கும் போது நாயுடுவோட ரோசா பூ தோட்டம் தான் நெனப்புக்கு வருது.எங்க கிராமத்து வீட்டுக்கு பின்னால நாயுடுவின் நத்தம் பொறம்போக்கு நெலத்துல ரோசா பூ தோட்டம் இருந்தது . அப்பாவுக்கு சென்னை பி.டபுள்.டியில் எலக்டிரிசியன் வேலை. படிப்புக்காக செங்கல்பட்டில் வாடகை வீட்டில் தங்கி இருந்தோம். கால்பரிச்சை ,அரை பரிச்சை லீவுல நாங்க எல்லாம் செங்கல்பட்டில் இருந்து கீழக்கரனை வீட்டுக்கு போவோம். அப்ப எல்லாம் கீழக்கரனை கிராஸ் ரோட்டில் பஸ் நிற்காது. சிங்க பெருமாள் கோவிலில் இறங்கி 3 கி.லோ மீட்டர் நடந்து தான் கிராமத்துக்கு போகணும். ரோட்டுக்கு ரண்டு பக்கமும் விவசாயம் நடந்து கொண்டு இருக்கும்.பச்ச பசேலுனு இருக்கும். பெரிய பெரிய மலை எல்லாம் இருந்துது. ஆனா இப்ப இல்லை. மலையையே அழிச்சிட்டாங்க. கிராமத்துல எங்க தாத்தா பெரியப்பாவுக்கு ஒன்னு ,அப்பாவுக்கு ஒன்னு என்று ஓட்டினா போல இரண்டு ஓட்டு வீடு கட்டிவிட்டு போய் சேர்ந்துட்டாறு. கூகிள் மேப்பில் கூட ரெண்டு வீடும் ரொம்ப தெளிவா தெரியும். லீவுக்கு போனா பெரியப்பா வீட்டுல தான் தங்குவோம். அப்பாவீட்டை ஆயா மாட்டு தொழுவமா பயன்படுத்திகிட்டு இருந்தாங்க. கிராமத்து வீட்டுக்கு போன உடனே ஆயா ரோசா பூ வேணும் வேணும் என்று நான் தொல்லை பண்ணுவேன். அடுத்த நாள் காலையிலே ஆயா நாயுடு கிட்ட அனுமதி வாங்கி பூபெரிச்சி தருவாங்க . ஆயா அம்பது அறுபது ரோசா பூவை பரிச்சி கொடுத்து இருந்தது. ரோசா பூ மாலை தொடுத்துக்கொண்டு இருந்தேன்.

    அப்ப பார்த்து அஞ்சாறு அரசாங்க வண்டியில் அதிகாரிகள் ஆளு அம்போட, போலிஸ் பாதுகாப்போட எங்க காலணி வழியா ஊருக்குள்ளார போனாங்க. பார்த்தவ நானும் பூ கட்டுவதை விட்டு விட்டு வண்டிக்கு பினால மத்த பிள்ளைகளோட ஓடினேன் . பெரிய அம்பாசிடர் காருல இருந்து கலைக்டர் எறங்கினாரு. அவருக்கு வெள்ளை டிரஸ்சில் இருந்த அவரு அசிஸ்டண்டோ யாரோ வெய்யிலுக்கு குடை பிடித்து கொண்டு இருந்தாரு. ஊரு தலைங்க எல்லாம் அவரை பார்த்து கும்பிடு போட்டுகொண்டு இருந்துதுங்க. பெரியப்பாவுக்கு ரயில்வே கேட் கீப்பர் டுட்டி இருந்ததாலே அவரு இந்த ஞாயத்தில் கலந்து கொள்ளவில்லை. நாயுடு மட்டும் வந்து இருந்தாரு. அவரு கூடவே நாலு ,அஞசு படிச்ச அண்ணனுங்க இருந்தாங்க. நா அந்த சங்கதியை உண்ணிப்பா கவனிக்க கோவில் மேல் படிக்கட்டில் ஏறி நின்னுகிட்டேன்.

    தொடரும்

  8. நெடுங்கதை – துல்லிய தேசம்

    அத்தியாயம் 8[ கொரங்குங்க கையில ரோசா பூ ]

    அதிகாரிங்க கலைக்டரோட வருவதை முன்னமே தெரிஞ்சிருந்த ஊர் தலைங்க கோவில் முன்னால இருந்த எடத்தில் சார்மியானா பந்தலும் நாற்காலியும் போட்டு அலங்காரபடுத்தி இருந்துங்க. கலைக்டருக்கு ஸ்பெசலா நாற்காலி போட்டு இருந்தாங்க. அவரு அவசரத்துக்கு வெளியே போக துடிக்கும் மனிசன் போல விளிம்பில் உட்கார்ந்து இருந்தாரு. மத்த அதிகாரிங்க நாற்காலியில் உட்கார ஊர் தலைங்க தரையில் துண்ட விரிச்சி வக்காந்து இருந்ததுங்க. நாயுடு மட்டும் படிச்ச அண்ணங்கலோட பந்தல் விளிப்புல தனிய நின்னுகிட்டு இருந்தாரு. எனக்கு கோவில் படிகட்டில் இருந்து பார்க்க சரியா பார்வை அமையாததால எனக்கு தெரிஞ்ச நாயுடு தாத்தாகிட போய் நின்னுகிட்டேன். என்னைய உத்து பாத்தவரு

    “உம் பெரியப்பா எங்க மா .., அவரு சார்பா நீயி ஞாயம் பேச வந்து இருக்கியா ? “என்றாரு

    “ரொம்ப தங்க்ஸ் தாத்தா…, ஆயா 50 ரோசாப்பூ உங்க தொட்டதில் இருந்து பறித்து கொடுத்தாங்க” என்றேன்

    சோகமா சிரித்தவ்ரு “ரோசா பூ ,தோட்டம் ,நெலம் ,பம்பு செட்டு எல்லாம் இன்னும் எத்துன நாளிக்குனு தெரியலையே மா ” என்றாரு.

    கூட இருந்த ஒரு அண்ணன் “எதுக்கு மாமா மனம் ஒடஞ்சி போறிங்க நம்மளை கேட்டகாம நெலத்தை எப்படி எடுப்பங்க” என்று சத்தமா சொன்னாரு.

    சண்டைக்கு வார்த்தை வந்த தெம்புல ஊர் தலை பேச ஆரம்பிச்சிது.” யாருடா அவன் அதிகாரிங்க கிட்ட பேசும் போது எப்படி பேச்னுங்கூட தெரியல …, நீ என்னத்த படிச்சி கிழிச்ச…., நாயுடு உன் ஆளுங்களை மூடிகிட்டு இருக்க சொல்லு நாங்க பேசி காரியத்தை நல்லபடியா முடிக்கிறோம் ” என்றது

    அண்ணனுக்கு சரியான கோபம் வந்துடுச்சி ” ஊருக்கு நாட்டமனா ஊர் விசயத்துக்கு மட்டுந்தான் ..எங்க நெலத்துக்கு ப ஞ்சாயத்து பேச நீ யாரு ? நீ மூடிகிட்டு பொத்திகிட்டு இரு ” என்றாரு.

    ஊரு ரெண்டு பட்டா நெலத்துக்கு தரகர் வேலை பார்க்க வந்த அதிகாரிகளுக்கு கொண்டாட்டம் தானே ? கலைக்டர் எழுத்து நின்னு பேச ஆரம்பிச்சாரு :

    “பத்து நாளைக்கு முன்பே அதிகாரிகள் வந்து பேசும் போதே சொல்லிஇருப்பாங்க மாற்று இடம் ,இழப்பிட்டு பணம் ,வேலை எல்லாம் உண்டு யாரும் பயப்பட தேவை இல்லை. முதலமைச்சர் கூட இதனை வலியுறித்தி உங்க கிட்ட என்ன பேச சொன்னங்க. இன்னும் ஒரு வாரத்தில் முறையா எல்லாருக்கும் நோடீஸ் அனுப்புறோம் ” என்றாரு

    “எங்க நெலத்தை விக்கவே நாங்க தயாரில்லாத போது எதுக்கு compensation பத்தி பேசுறிங்க.?., வெள்ளைகாரனுக்கு எதுக்கு லேண்டு புரோக்கர் வேலை செய்யுரிங்க? ” என்று நாயுடுவோட இருந்த இன்னொரு அண்ணன் கலைக்டரை பார்த்து சத்தம் போட்டாரு.

    சூடு பத்திகிச்சு.., போலிஸ் இன்ஸ்பக்டர் பேசிய அண்ணன் பின்னந்தலையில் ஒரு போடு போட்டு இடத்தை விட்டுஇழுத்து கிட்டு போனான் . மொத்தம் அஞ்சு பேரு நாங்க ,,என்னையும் சேர்த்து 6 பேரு. போலிசு எஸ் ஐ தள்ளிவிட்டதில் நா குப்புற விழுந்துட்டேன். மூட்டியில சிராய்ப்பு எரிச்சல் ,வலி.., நா பயத்துல அழ ஆரம்பிச்சிட்டேன் . ஸ்கூல் மிஸ் கிட்ட கூட அடிவாங்கியது இல்ல . நாயுடு போலிஸ் கூட வாக்கு வாதம் செய்ய தொடங்கினாரு . போலிசு எஸ் ஐ அவரு சட்டையை பிடித்து இழுத்து கிழிச்சிட்டான்.அந்த போலிஸ் கலவரத்தில் அதிகாரிகள் வண்டியை பிடிச்சி போயிட்டங்க்க. ஊரு தலைங்க போலீசுக்கும் எங்களுக்கு இடையில ஞாயம் பேசி சண்டையை வெலக்கி விட்டு போலீசுகிட்ட நல்ல பெயரு எடுதுதுங்க. எல்லாம் முடிந்தப்ப நாங்க ஆறு பேரு மட்டும் கோவிலுக்கு முன்னால தனியா நிக்கிறோம். நாயுடு சாமியை பார்த்து சத்தம் போட்டாரு :

    “வருசம் வருசம் முற தவறாம செய்யுரோமே அதுக்கு நல்ல கருண காட்டிட்டே நீயி …, உன் பக்கமே நா செத்தாகூட வரமாட்டேன் ” என்று திட்டியவரு தெலுங்கு மொழியில என்ன என்னமோ சொல்லி அழுதாரு. அன்னிக்கு தான் முத முதலா ஆம்பளைங்க அழுவரதையே பார்தேன். எல்லாம் முடிஞ்சி வீட்டுக்கு வந்தவ வீடு வாசலில் ரோசா பூவை எல்லாம் கொரங்குங்க பிச்சி பிச்சி போட்டுகிட்டு இருந்த காட்சியை பார்த்துட்டு ஒனு அழுதுட்டேன். பெரியம்மா .ஆயா ,அக்கா ,அண்ணா என்று எல்லாரும் கூடிட்டாங்க

    “பூ தானமா போச்சி வேறு வாங்கிக்கலாம் எதுக்கு அழுவற ” என்றது ஆயா

    வீணா போன பூவுக்கு அழுதேனா அதனை பிச்சு எறிந்த கொரங்குகளின் கொடுரத்தை நினைத்து அழுதேனானு எனக்கு என்னும் தெரியல.

    தொடரும்

  9. நெடுங்கதை – துல்லிய தேசம்

    அத்தியாயம் 9 [பொன்னு வெலஞ்ச பூமி]

    கலைக்டர் வந்துட்டு போன அன்னிக்கு சாயங்காலம் ரயில்வே கேட் கிப்பர் டூட்டி முடித்து வந்த பெரியப்பா என்ன கூட்டிகிட்டு ஊருக்குள்ள இருந்த நாயுடு வீட்டுக்கு போனாரு. அவர் வீடு ரண்டு பக்கமும் திண்ண வச்சி கட்டபட்டு இருந்தது. நடுவுல உயரமான வாசப்படி. தேக்கு மரகதவு. பெரிய அஞ்சு கிலோ எடகல்லு சைசுல திண்டுக்கல் பூட்டு கதவு கொக்கியில தொங்கிகிட்டு இருந்தது.ஆனா எங்க வீடு மாதிரி இல்லை. எங்க வீட்டு முன்னால பெரிய சிமெண்டுல போட்ட வாசல். அப்பாவீட்டுக்கும் ,பெரியப்பா வீட்டுக்கும் சேத்து இரண்டு கபடி கிரவுண்டு சயிசில போடப்பட்ட வாசல் எங்களது. அரிசி மில்லுல வேக வச்ச நெல்ல உலாத்த போதுமான இடம் அது.பெரியப்பாவின் உழைப்பில எப்படியும் 35 மூட்டநெல்லு வெலஞ்சிடும். வருசம் வருசம் நெல்ல வியாபாரம் செஞ்சி தான் பெரியப்பா அவரோட மூனு பெண்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சாரு .எங்க அப்பா பங்கா வருடம் 5 மூட்ட நெல்லு கொடுத்துடுவாரு. பெரியப்பாவுடைய அப்பா வேதகிரி கூட விவசாய வருமானத்தில் மூனு பெண்களுக்கும் கல்யாணம் செஞ்சி வச்சாராம். அப்பா எங்க அத்தைங்க பத்தி கதை கதையா செல்லுவாரு. மூனு அத்தைகளுமே வாக்கபட்டது “பனைக்காரங்க” குடும்பத்தில் தான். இருபது பவுனுக்கு மேல நகை சீர் செஞ்சி தான் கட்டிவச்சாங்க. வக்காந்து தின்ன வழியில்லாட்டாலும் அவிங்க நெலத்துல வேலை செஞ்சா மூனு வேலை சாப்பாட்டுக்கும், வருடம் அஞ்சு சேலைவாங்கவும் அவிங்களுக்கு நல்லாவே வழி இருந்துது. பெரியத்தை மாரியம்மா பொத்தேரிக்கு பக்கத்து காவனூரில் வாக்கபட்டு இருந்தாங்க. நடத்தை புஸ்பா வல்லகோட்டையில வாக்கப்பட்டு இருந்தாங்க. சின்னத்தை சாரதாவை வண்டலூரில் பெண் கொடுத்து பெரியப்பாவுக்கு அவிங்க வீட்டிலேயே பெண் எடுத்தாங்க. எங்களுக்கு நெலம் மட்டும் இல்லாம போயிருந்தா ஆம்பளைங்க பாடு எப்படி ஆகியிருக்கும் என்று தெரியாது ஆனா எங்க குடும்பத்து பொம்பளைங்க மதிப்பு மரியாதையோட வாக்கப்பட்டு இருக்க முடியாது.

    தொடரும்

  10. நெடுங்கதை – துல்லிய தேசம்

    அத்தியாயம் 10 [பொன்னு வெலஞ்ச பூமி]

    மூனு தலைமுறையா எங்க குடும்பத்து பெண்களை சும்மா சொல்ல முடியாது .., கல்யாணம் ஆகி போற வரைக்கும் நெலத்துல அப்படி மாடா உழைசாங்க . வாக்குபட்டு வேறு இடம் போறப்ப செஞ்ச வேலைக்கு கூலியா அப்பனோ ,அண்ணனோ கொடுக்கும் நெக-நட்டை சீரா வாங்கிட்டு போனாங்க. எங்க குடும்பத்தில் வாக்கப்பட்ட பெண்கள் நெலம தான் கொஞ்சம் கஷ்டமா இருந்துது. வயசு இருக்கும் வரைக்கும் கொழந்தைங்களை பெத்து போடனும், வீட்டுலேயும் ,நெலத்துலேயும் வேலை செய்யனும் . வயதாயிட்டா மாடுகளை பராமரிச்சிகிட்டு வீட்டோட நாள எண்ணிகிட்டு கெடக்கனும். சாவு கூட நிம்மதியா வராது. வயித்தால நிக்காம போயியோ , காலில் அடிபட்டு சீழ் பிடித்தோ ரொம்ப துன்பமா மருத்துவ வசதியில்லாம போய் சேந்துடுவாங்க.

    தொடரும்

  11. நெடுங்கதை – துல்லிய தேசம்

    அத்தியாயம் 11

    நாயுடு வீட்டு திண்ணையில ரொம்ப நேரம் நானும் பெரியப்பாவும உட்கார்ந்து இருந்தோம்.காலையில் நடந்த கதையை பெரியப்பா என்கிட்ட விசாரித்துக்கொண்டு இருந்தாரு. வெளிய போயிருந்த நாயுடு அப்பத்தான் வந்தாரு. எங்களை பார்த்துட்டு அவரும் எதிர் திண்ணையில அமந்தாரு.

    “செங்கல்பட்டு வக்கில் ராகவ ஐயரை பார்த்துட்டு வரேன் மருதன். விசயம் உனக்கு தெரியுமில்லையா ? நல்ல வேலை நீ இல்லை .இருந்து இருந்தா உன்னையும் இந்த நாதாரிங்க அடிச்சி அசிங்கம் செஞ்சிருப்பாங்க. பாப்பா தான் உன் சார்பா எங்க கூட நின்னு போலிஸ்காரன் கிட்ட அடிவாங்கிச்சி ” என்று என்னை பார்த்து சொன்னாரு .

    கேட்டதும் பதறிப்போன பெரியப்பா “எங்க கண்ணு அடிபட்டுச்சி …, எங் கண்ணு சொல்லல்ல” என்றாரு .

    “முட்டியில் சின்ன சிராய்ப்பு பெரியப்பா.., தாத்தா செடி இலையை பிழிஞ்சி சாறு ஊத்தினேன் இப்ப காஞ்சிடிச்சி பெரியப்பா ” சிரித்துகொண்டே சொன்னேன் .

    “மருதா உன் பிள்ளைகளை தான் எட்டாவது ,பத்தாவதோட நிறுத்திட்டு கட்டி கொடுத்துட்ட .., உன் தம்பி பிள்ளையையாவது நல்லா படிக்க வையி என்றவாறே என்னை பார்த்து என்னமா படிக்கபோறே ” என்று கேட்டாரு .

    சிரித்துக்கொண்டே “டாக்டருக்கு தாத்தா ” என்றேன்.

    “எனக்கு என்னமோநெலத்து மேல இருந்த நம்பிக்கையும் சுத்தமா விட்டு போச்சு ,ஐயர் வக்கிலும் ஒன்னும் பிடிகொடுத்து பேசமாட்றார் .., இனிமே நம்ம பிள்ளைங்களுக்கு படிப்பு தான் கைகொடுக்கணும் ” என்றவாறே வீட்டுக்குள் சென்றவரு பகோடாவை தட்டில் போட்டு எடுத்து வந்து எனக்கு கொடுத்து சாப்பிட சொன்னாரு .

    இரண்டு பேரும் பட்டா ,சிட்டா ,பத்திரபதிவு என்று என்னமோ பேசிகிட்டு இருந்தபோது நான் தூங்கி போயிட்டேன்

    தொடரும்

  12. நண்பர் சுசீலா,

    உங்கள் எழுத்துக்களில் முடிந்த வரை சாதிப் பெயரை தவிர்ப்பது நல்லது. இந்கே வரும் பெயரை கண்டிப்பாக தவிர்க்கலாம். பொருள் குறையேதும் இருக்காது. சிறிய குறையேதும் நீங்கள் உணரந்தாலும் அதை அப்படியே குறையாகவே விடலாம். குறை ஒன்றுமில்லை.

  13. நெடுங்கதை – துல்லிய தேசம்

    அத்தியாயம் 12

    தேர்வு விடுமுறை முடிந்த உடன் அம்மா ,தம்பி ,தங்கையோட செங்கல்பட்டுக்கு போயிட்டோம்.ஒரு வாரம் ஆகியிருக்கும். வகுப்பிலே சரியான கவனம் இல்லை. அறிவியல் டீச்சர் மிஸ்சையே பார்த்துக்கொண்டு இருந்தேனே தவிர அவிங்க சொன்னது எதுவும் மனசுல பதியல. மனசுக்குள்ள வேறு படம் ஓடிக்கிட்டு இருந்தது. கலைக்டரின் வெள்ளை நிற கார் வெண்பிசாசா ஸ்கூலுக்கு பறந்து வருவது போன்று பிரம்மையா இருந்தது. அதிகாரிங்க எல்லாம் கையில் குண்டாந்தடியோட வாகனத்தை விட்டு ஏறங்கி என் வகுப்பு 5-B குள்ளார வருவது போன்று தோன்றியது. ஒரு போலிஸ்காரன் என்னைய புடிச்சி இழுத்துக்கிட்டு போயி ஸ்கூலுக்கு எதிர்க்க இருக்கும் செங்கல்பட்டு ரெஜீஸ்டர் ஆபிஸ் ஓரத்து சாக்கடையில் தள்ளியதா கற்பனை செய்து கொண்டு அலறிட்டேன், மயக்கமாயிட்டேன். கண்ணு முழிச்சப்ப அம்மா ஞானம்பால் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தாங்க. அம்மாவுக்கு தெரிந்த டீச்சர் ” வானதி பயந்துட்டா போல இருக்கு ” என்றவாறே எனக்கு அவிங்க வாட்டர் பாட்டலில் இருந்து தண்ணிர் கொடுத்தாங்க.

    வீட்டுக்கு வந்த உடனே விசயம் தெரு முழுக்க பரவிடிச்சு. எங்க தெருவில,பக்கத்து வீட்டுல தான் தான் நடிகர் நாசர் அங்கிளின் அம்மா இருந்தாங்க. சாயங்காலம் வீட்டுக்கு வந்தவங்க எனக்கு புரியாத மொழியில ஏதோ சொல்லி மந்திரிச்சி விட்டாங்க. அம்மாவை பார்த்து ” பயப்படாத ஞானம் எல்லாம் சாத்தானோட வேலை தான் .., மந்திரிச்சா சரியா போயிடும் ” என்றாங்க. அம்மா சிரிச்சிகிட்டே “நாசர் அம்மா …, கிராமத்துக்கு போயிருந்தோம் அங்க தான் எதாவது குட்டிசாத்தான் இவள பிடிச்சிருச்சி போல இருக்கு” என்றவாறே “என்னைய பார்த்து என்னடி நாளைக்கு பள்ளிக்கூடம் போறியா இல்ல லீவா ?” என்று கேட்டாங்க. “நாளைக்கு சண்டே லீவுமா ” என்றவாறே மாடியில இருந்த பூ செடிக்கு தண்ணி ஊத்த போயிட்டேன்.

    அடுத்த நாள் காலையில் 8 மணிக்கே ரங்கா கிளினிக்குக்கு அப்பா கூட்டிகிட்டு போனாங்க. எங்க குடும்ப டாக்டர் அவரு.நேத்து நான் மயக்கமாயிட்டதையும், கிராமத்தில் நடந்த போலிஸ் கலவரத்தையும் அப்பா, டாக்டர் கிட்ட வெளக்கமா சொன்னாங்க. என்னுடைய இரண்டு கையிலும் தோல் சிவந்து இருப்பதை பார்த்த டாக்டர்

    ” வானதி ரொம்ப டென்சன் ஆக கூடாது என்ன ? எதுவா இருந்தாலும் அம்மா .அப்பாவிடம் மனம் விட்டு பேசனும் ” என்றாரு .

    சரி என்பதற்கு அடையாளமா தாலையை ஆட்டினேன்.

    “ஜாலியன் வாலபாஹ் படுகொலையை பத்தி ஹிஸ்டரியில் படித்து இருக்கியா வானதி ” என்று கேட்டாரு.

    ” Jallianwala Bagh Massacre held on 13 April 1919. General Dyer ordered to kill Indians. Hundreds of Indians died because of shooting ….” என்று ஒப்பித்தேன்.

    டாக்டர் அமைதியா ஒரு கேள்வி கேட்டாரு ” ஆயிரம் பேருக்கு மேல செத்ததை சாதாரணமாக சொல்ல முடியுது உன்னால….. ஆனா உன் மேல பட்ட சின்ன அடியை நினைத்து பயப்படுறியே ஏன் ? ”

    யோசிக்க ஆரம்பிச்சேன்.

    தொடரும்

  14. நெடுங்கதை – துல்லிய தேசம்

    அத்தியாயம் 12 [ உதம் சிங் (Udham Singh) 1899 – 31 July 1940]

    என்னுடைய யோசனை என்னை இன்னைக்கு எனது 27வது வயது வரைக்கும் அலைகழித்துக்கொண்டு தான் இருக்கு. இதுக்கு முடிவே இருக்காது போல இருக்கு.ஜாலியன் வாலாபாக்கில் இறந்தவங்களை புள்ளிவிவரமா பாத்ததுக்காக இன்னிக்கும் எனக்கு வருத்தமா இருக்கு. எங்க செங்கல்பட்டு நூலகத்தில் இதுபத்தி புத்தகங்களை தேடிபாக்க ஆரம்பித்தேன்.பஞ்சாப் பத்தி முழுக்க படிக்க ஆரம்பித்தேன். ஜெனரல் டயர் நம்ம மக்களை கொன்றதுக்கு காரணம் அங்க நடந்த கலவரமும் அதனால கொல்லப்பட்ட ஐந்தாரு வெள்ளையரும் தான் என்று புரிந்துகொள்ள முடிந்தது. கலவரத்தில் கொல்லபட்ட வெள்ளையருக்கு பழி தீர்க்க தான் ஜெனரல் டயர் நம்ம மக்களை அவர்கள் ஆயுதமின்றி இருந்த போதும் குருவியை சுட்டு கொல்வது போல கொன்னு இருக்கான். இவனை யாரும் பழி தீர்க்கவில்லையா ? என்று அடுத்த கேள்வி எழுந்தது. உடனே எனக்கு தெரிந்த அண்ணன் பகத்சிங் கதையை தேடி படித்தேன். அவரு இந்திய நாடாளுமன்றத்தில் நான் குண்டு வீசி வெள்ளையனுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூக்கு கயிற்றை முத்தமிட்டு இறந்தாறே தவிர ஜெனரல் டயரை பழிவாங்கியதா எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஜெனரல் டயரை அவன் நாட்டுக்கே ஓடிபோயிடதாலே பகத்சிங் அண்ணன் பழிவாங்காம விட்டுட்டாரு என்று நானே முடிவுக்கு வந்துட்டேன்.

    அண்ணன் பகத்சிங் பத்தி படிக்கும் போது தான் Ghadar partyயை பற்றியும் அதனை வெளிநாட்டில் வாழ்ந்த பஞ்சாபி மக்கள் தெடங்கிய கதையையும் ,அது இந்திய சுதந்திரத்துக்காக போராடியதையும் தெரிந்துகிட்டேன். அதில் இருந்த உதம் சிங் என்று ஒருவர் பற்றிய செய்திகள் மிகுந்த சுவாரசியமாக இருந்தது. அவரு அண்ணன் பகத்சிங்கின் நண்பர் என்ற வரலாற்று விசயம் மட்டும் எனக்கு தெளிவா புரிந்தது. பழிவாங்கபடவேண்டிய ஜெனரல் டயர் 1927ல் இங்கிலாந்துலே இறந்துட்டான். அவனை யாரும் பழிவாங்கல என்று நினத்துகிட்டேன் .அதனால 1928க்கு மேலே நடந்த பஞ்சாப் வரலாற்றை படிக்காம விட்டுட்டேன்.

    இருந்தாலும் மனசுக்குள்ளார ஏதே உறுத்திகிட்டே இருந்தது. கேள்வியும் ,விடையும் தெரியாத சில விசயங்களை நான் கவனத்தில் கொண்டுவரல என்று என் மனசு சொல்லிகிட்டே இருந்தது. என்னுடைய உள்உணர்வின் மணி ஓசைக்கு 2011ல் தான் தெளிவு கிடைத்தது. சென்னை கன்னிமாரா நூலகத்தில் 2010ல் பிரசுரிக்கப்பட்ட “Dalit Freedom Fighters” என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூல் ஒன்று கிடைத்தது. நம்ம அண்ணன் உதம் சிங் பற்றிய செய்திகள் மிக தெளிவா இருந்தது. அவருடைய அப்பா கம்பா என்ற தலித் வகுப்பை சேந்தவராம். எங்க தாத்தா ,பெரியப்பாவை போலவே அவரும் ரயில்வே கேட் கிப்பரா வேலை செய்தவராம். உதம் சிங் சின்னப்பையனா இருக்கும் போதே அவருடைய அம்மா ,அப்பா இறந்துட்டாங்களாம். உதம் சிங்கையும் அவருடைய சகோதரரையும் யாரோ அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு இருக்காங்க. அங்கேயே தங்கி படித்தவரு தனது 19ஆவது வயசுல அனாதை இல்லத்தைவிட்டு வெளியே வந்துட்டாரு. தன்னுடைய பெயரை ராம் மொஹெமாத் சிங் ஆசாத் என்று மாத்திகிட்டு 1918 ல பெயிண்டிங் கடையை தொடங்கிட்டாரு. 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைத்து ரொம்ப வேதனை பட்டு இருக்காரு. அப்பவே ஜெனரல் டயர் , பஞ்சாப் கவர்னர் மிஷேல் ஒ டவேர் இரண்டு பேரையும் பழி தீக்கனும் என்று முடிவு செஞ்சிட்டார். வெள்ளைகார அரசு ஆயுதம் வைத்து இருந்ததுக்காக அவரை 5 ஆண்டுகள் உள்ள போட்டுடிச்சி. 1930 வாக்குல அவரு இந்தியாவைவிட்டு தப்பித்து ஜெர்மனி வழியா இங்கிலாந்துகுள்ளார நுழைந்துட்டார். ஜெனரல் டயர் 1927ல் செத்துப்போன விசயம் உதம் சிங் அண்ணாவுக்கு இந்தியாவில் இருக்கும் போதே தெரியும்.எனவே மீதி உசுரோட இருக்கும் முன்னாள் பஞ்சாப் கவர்னர் மிஷேல் ஒ டவேரை ப்ழிதீக்க இங்கிலாந்து முழுக்க தேடினாரு. சரியா 1940 ஆம் ஆண்டு ஒரு பொதுக்கூட்டட்டில் மாட்டிகிட்டவனை எங்க அண்ணன் உதம் சிங் ரண்டு தோட்டவால சுட்டுக்கொனாரு.

    தொடரும்

  15. வாசகர்களுக்கு ஓர் குறிப்பு :

    துல்லிய தேசம் நெடுங்கதை புனைவு அல்ல 100க்கு 100 நிசம். நான் வாழ்ந்த வாழ்க்கை அது. ஏதோ நான் படித்ததால் கீழகரனை ஊரைவிட்டு வெளியே வந்து பிழைத்துகொண்டேன். கதையில் வானதி என்ற பெயரை தவிர மிதியெல்லாம் நிசம். வானதி என்ற பெயருக்கு பதில் சுசிலா என்ற பெயருடன் படித்தாலும் எனக்கு ஏதும் ஆட்சோபனை இல்லை. சிறுவயதில் படித்த பொன்னியின் செல்வனின் காவிய நாயகியின் நினைவாகவே அப்பெயரையிட்டேன்.4 நாட்கள் கம்பெனிக்கு Planed Leave ல் உள்ளேன். தரவுகளை மேலும் செழுமையாக்க கீழக்கரனை ஊருக்கு சென்று அண்ணா வீட்டில் தங்கி ஊர் மக்களிடம் பேச்சு கொடுத்துக்கொண்டு உள்ளேன். தகவல் உரிமை சட்டத்தை பயன்படுத்தி உண்மையில் எந்த அடிபடையில் எவ்வளவு பணம் நிலத்துக்கு இழப்பிடு கொடுக்கபட்டு உள்ளது என்று விசாரிக்க உள்ளேன். வரும் ஞாயிறு அன்று மீண்டும் எழுத தொடங்க உள்ளேன்.

  16. நெடுங்கதை – துல்லிய தேசம்

    அத்தியாயம் 13 [ மார்ச் 23 பகத்சிங், சுகதேவ், ராஜகுரு அண்ணாகளின் நினைவுநாள்]

    நான்கு நாட்கள் விடுமுறை நாளையுடன் முடிகின்றது. நாளை வேலைக்கு போக வேண்டும். காலையில் எழும் முன்பே கணவரிடம் இருந்து செல்பேசி அழைப்பு வந்தது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் வானதி என்றார். அப்போது தான் என் பிறந்த நாளே எனக்கு நினைப்புக்கு வந்தது. “நன்றி பேராசிரியர் சரவணன்” என்ற மூன்று சொற்கலுடன் என் உணர்வுகளை சிரித்தவாறே வெளிக்காட்டிவிட்டு வினவில் முழ்கினேன். தோழர் தமிழ் எழுதிய தெரசாவை பற்றிய பின்னுட்டம் மிகவும் சிந்திக்க வைத்தது. அடுத்து “மார்ச்-23 : பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவுநாள்: மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக கடைபிடிப்போம்!” என்ற வினவு கட்டுரையை கண்டேன். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு அண்ணாக்களின் நினைவு நாளும் எனது பிறந்த நாளும் ஒன்றாய் இணைந்ததை நினைத்து மகிழ்வதா அல்லது துயருறுவதா என்று மன உணர்வுகளை மூலைக்கு அனுப்பி கேள்வி எழுப்பிக்கொண்டேன். மகிழ ஏதும் இருப்பதாக எனக்கு புலப்படவில்லை. துயருறுவதை காட்டிலும் நான் செயலூக்கம் கொள்ளவேண்டிய நாளாக இந்த நாள் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். கீழக்கரனை-ஹென்றி போர்ட் ஆக்கிரிமிப்பு பற்றிய தரவுகளை மேலும் செழுமையாக்க கீழக்கரனை ஊருக்கு சென்று அண்ணா வீட்டில் தங்கி ஊர் மக்களிடம் பேச்சு கொடுத்துக்கொண்டு உள்ளேன் என்று கூறியிருந்தேன் அல்லவா ? நான்கு நாட்களில் அந்த வேலையை முடித்து இன்று மாலை கருப்பூர் செல்கின்றேன். வேலை மற்றும் அதற்கான பயணம் போக தினமும் அதிகாலை 4 முதல் 5.30 வரை நேரம் கிடைக்கும். அந்த நேரத்தில் நான் சேகரித்து வைத்து உள்ள கீழக்கரனை-போர்ட் ஆக்கிரிமிப்பு விவரங்களை இன்னும் 25 அத்தியாயங்களாக எழுதி முடிக்க முடியும். ஆனாலும் இது அம்மக்கள் வெற்றி பெறும் வரையில் முற்று பெறாதா நெடுங்கதையாகதானிருக்கும். இக்கதையின் முடிவை நமது இந்திய மக்களின் ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிரான போராட்டத்தின் தொடக்கமான “நில அபகரிப்பு சட்டத்துக்கு ” எதிரான போராட்டத்தின் இன்றைய நிலையுடன் நிறுத்திக்கொள்ள போகின்றேன்.

    தொடரும்

    • Change :நாளை வேலைக்கு போக வேண்டும். ->நாளை மறுநாள் வேலைக்கு போக வேண்டும்.

Leave a Reply to Susila பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க