privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைமாணவர் - இளைஞர்அவர்களுக்குத் தேவை கருணை அல்ல !

அவர்களுக்குத் தேவை கருணை அல்ல !

-

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு 9.3.2015 முதல் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

“கர்ணகொடூரமாக நடந்துகொள்ளும் இந்த அரசிடம் கருணையை நாம் எதிர்பார்க்க முடியாது. இதை பார்வையற்ற மாணவர்கள் பிரச்சனையாக மட்டும் பார்த்து ஒரு இடத்தில் முடங்கிவிடக் கூடாது. இது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் பிரச்சனை. அனைத்து கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்களை இப்போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிரட்ட வேண்டும். அப்போதுதான் குறைந்தபட்ச நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்” என்று எழுச்சியுடன் பேசினார்.

rsyf-backs-blind-students-struggle-5பார்வையற்ற இந்த மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அவர்கள் தமிழக முதல்வரை சந்திக்க வேண்டும் என்று கோருகின்றனர். இதை செவிகொடுத்து கேட்க தயாரில்லாத போலீசோ அவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நைச்சியமாக மிரட்டுகிறது.

பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கைகள் என்ன என்று கேட்போது அவர்கள் சொன்னது “புதிதாக ஒன்றும் கேட்கவில்லை சார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்ன கேட்டோமோ அதையேதான் இப்போது கேட்டு போராடுகிறோம்’’ என்றார்.

இந்த அரசால் செய்ய முடியாத அளவுக்கு அப்படி என்ன கேட்டுவிட்டார்கள்?

rsyf-backs-blind-students-struggle-1ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவருக்கும் உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் தர வேண்டும் என்று கோருகிறார்கள். இதை செய்ய முடியாதா? செய்ய முடியாது என்பதல்ல செய்யக்கூடாது என்பதுதான் இந்த அரசின் நோக்கம்.

நீண்ட நாட்களாக ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. அவற்றை நிரப்பி வேலையற்ற படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலையும், அதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வியும் கொடுக்கலாம். அப்படி செய்துவிட்டால் அரசுப்பள்ளி, கல்லூரிகள் தரமாகிவிடும், தனியார் பள்ளியை / கல்லூரியை நோக்கிச் செல்லும் மாணவர்கள் அரசுப் பள்ளி, கல்லூரியை நோக்கி திரும்பி விடுவார்கள். அப்புறம் தனியார் கல்வி முதலாளிகள் எப்படி கல்லாக் கட்ட முடியும். அவர்கள் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே! இதை செய்யத் துணிவார்களா? அதனால்தான் தங்கள் எஜமானின் விசுவாசத்திற்காக ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஒடுக்குவதில் தப்பில்லை என்று பார்வையற்ற மாணவர்களின் வாழ்வை பறித்து வருகிறது இந்த அரசு.

  • ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவருக்கும் உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும்.
  • B.Ed பட்டம் பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி தமிழ், ஆங்கிலம், வரலாறு போன்ற பாடங்களில் 550 பட்டதாரிகளை பட்டதாரி ஆசிரியர்களாக பணி அமர்த்த வேண்டும்
  • முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக தகுதியுடைய 200 பார்வையற்ற பட்டதாரிகளை உடனடியாக சிறப்பு தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய வேண்டும்.
  • உதவிப் பேராசியருக்கான தகுதித் தேர்வு (NET Or SET) முடித்து நீண்டகாலமாக காத்திருக்கும் தகுதி உடைய பார்வையற்ற 100 பட்டதாரிகளுக்கு உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உடனடியாக சிறப்பு நேர்காணல் மூலம் நிரப்பப்பட வேண்டும்.
  • பார்வையற்றோருக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிறப்பு தேர்வு ஒன்றினை நடத்துவதற்கு தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். தமிழக அரசு பார்வையற்றவர்களுக்கென கண்டறிந்துள்ள காலிப்பின்னடைவு பணியிடங்களை (9000 பணியிடங்கள்) உடனடியாக ஒரு சிறப்பு தேர்வின் மூலம் நிரப்ப வேண்டும்.
  • உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க தமிழக அரசு உடனடியாக குரூப் A மற்றும் B பிரிவு பணியிடங்களில் 500 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பணிவாய்ப்பு வழங்க ஆவண செய்ய வேண்டும்.
  • பார்வையற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசினால் வழங்கப்படுகின்ற ஊர்தி பயணப்படியினை மத்திய அரசு வழங்குவது போல் ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.
  • படித்து முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வேலையற்றோர் நிவாரண உதவித் தொகையினை ரூ.1000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
  • தற்போது பார்வையற்ற கல்லூரி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை இரட்டிப்பாக்கி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
  • 01.04.2003 க்கு பிறகு தமிழக அரசு பணியில் சேர்ந்த பார்வையற்ற அரசு ஊழியர்களுக்கும் சம பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்திலிருந்து விலக்கு அளித்து முழு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முழு ஓய்வூதியம் வழங்க ஆவன செய்தல் வேண்டும்.
  • பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு எழுத வரும் எழுதுனர்களுக்கு ரூபாய் 300/- வழங்கி அரசாணை வெளியிட வேண்டும்.

rsyf-backs-blind-students-struggle-8பார்வையற்ற மாணவர்களின் மேற்கண்ட கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அவற்றை இந்த அரசு தானாக நிறைவேற்றாது என்பதில் சந்தேகமே இல்லை.

கடந்த 2013-ம் ஆண்டு இதே போல் போராடியபோது அரசு அவர்களை நடந்திய விதம் மிகவும் கொடூரமானது. போராட்டத்தின் போது கைது செய்து சென்னைக்கு ஒதுக்குப் புறமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தன்னந்தனியாக விட்டு விட்டு வருவது என்பதை ஒவ்வொருமுறையும் செய்து மாணவர்களை உயிரோடு கொல்ல முயன்றது. அதில் பல நேரங்கள் இரவு நேரங்கள்.

அதுமட்டுமல்ல பார்வையற்ற மாணவிகளை போலீசு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கின. அரசின் இந்த அடக்குமுறைகளுக்கு பணியாத பார்வையற்ற மாணவர்கள் உறுதியாக போராடினார்கள். ஆனால் இறுதியில் அவர்கள் கண்ட பலன் வெறும் வாக்குறுதிகள்தான். இப்போதும் அதே வழிமுறைகளில் பார்வையற்ற மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு எத்தனிக்கும்.

நாம் என்ன செய்யப்போகிறோம். வேடிக்கை பார்ப்பது அவமானம். போராடும் பார்வையற்ற மாணவர்களுக்கு துணை நிற்க வேண்டியது கருணையல்ல, நமது கடமை.

தகவல்:

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை