privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கதெருக்களில் இந்து பயங்கரவாதிகள் ! பதவிகளில் அரசு பயங்கரவாதிகள் !!

தெருக்களில் இந்து பயங்கரவாதிகள் ! பதவிகளில் அரசு பயங்கரவாதிகள் !!

-

ரேந்திர மோடியின் கையாளும், பா.ஜ.க.-வின் தேசியத் தலைவருமான அமித்ஷா, சொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கிலிருந்து, விசாரணை தொடங்கும் முன்பே விடுவிக்கப்பட்டுள்ளார். இப்போலி மோதல்கொலை வழக்கை விசாரித்து வரும் மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி கொசாவி, “அரசியல் காரணங்களுக்காக அமித்ஷா இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ள முடியாததாக, பொது அறிவுக்கு எதிரானதாக உள்ளதாகவும்” கூறி அவரை விடுவித்துள்ளார். இப்போலி மோதல்கொலை வழக்கு குறித்து இதுகாறும் மோடி-அமித்ஷா கும்பல் என்ன கூறி வந்ததோ, அதனையே தீர்ப்பாக வாந்தியெடுத்திருக்கிறது, சி.பி.ஐ. நீதிமன்றம்.

அமித் ஷாவின் அரசியல் ஆதரவு, பக்கபலத்தோடு குஜராத் மற்றும் இராசஸ்தான் மாநிலங்களில் கட்டப்பஞ்சாயத்து, தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறிப்பது மற்றும் அமித் ஷா கும்பல் இடும் வேலைகளைச் செய்துமுடிப்பது என குட்டி தாதாவாக சொராபுதீன், வலம் வந்துகொண்டிருந்தான். குஜராத்தைச் சேர்ந்த பாப்புலர் பில்டர்ஸ் என்ற கட்டிட ஒப்பந்த நிறுவனத்தின் அகமதாபாத் அலுவலகத்தை, சொராபுதீன் தலைமையில் ஒரு கும்பல் அடித்து நொறுக்கியதுடன், துப்பாக்கியால் சுட்டும் தாக்கியதாக வழக்கு ஒன்றும் பதிவாகியிருக்கிறது. இந்த மிரட்டல் வேலையை அமித்ஷாவின் ஆணையின் பேரில்தான் சொராபுதீன் செய்தான் என்பதற்கான சாட்சியங்கள் உள்ளன.

04-sorabudeen-kausan-bi
குஜராத் போலீசால் போலி மோதலில் கொல்லப்பட்ட சொராபுதீன் மற்றும் படுகொலை செய்யப்பட்ட சொராபுதீனின் மனைவி கவுசர் பீ.

மோடி அமைச்சரவையில் வருவாய்த் துறை இணை அமைச்சராக இருந்து, பின்னர் மோடியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகப் பதவி விலகிய ஹரேன் பாண்டியா, 2003-ம் ஆண்டில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். குஜராத் முசுலீம் படுகொலையை விசாரித்த சிட்டிசன் டிரிபியூனலில் ஹரேன் பாண்டியா சாட்சியம் அளித்த பிறகுதான் இப்படுகொலை நடந்தது. இப்படுகொலையை முசுலீம் தீவிரவாதிகள் நடத்தியதாகப் பழி போட்ட மோடி அரசு, சில முசுலீம் இளைஞர்களைக் கைது செய்தது. ஆனால், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முசுலீம்கள் குஜராத் உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

ஹரேன் பாண்டியா கொலையில் சொராபுதீன் கும்பலுக்குத் தொடர்பிருக்கலாம் என்ற வலுவான சந்தேகங்கள் எழுந்த நிலையில்தான், சொராபுதீன் ஷேக் கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு போலி மோதலில் அகமதாபாத் நகர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சொராபுதீன் ஒரு லஷ்கர்-இ-தொபா தீவிரவாதி என்றும் அன்றைய குஜராத் முதல்வரான மோடியைக் கொலை செய்யும் திட்டத்துடன் வந்த அவரை போலீசார் மோதலில் சுட்டுக் கொன்றதாகவும் கூறியது குஜராத் போலீசு.

ஆனால் சொராபுதீனின் சகோதரர் ரூபாபுதின், தனது சகோதரர் தீவிரவாதி என்பதை மறுத்ததுடன், அன்றைய குஜராத் உள்துறை இணை அமைச்சரான அமித் ஷாவின் இரகசிய உத்தரவின் பேரிலேயே சொராபுதீன் படுகொலை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சுமத்தி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும், சொராபுதீனுடன் இருந்த அவரது மனைவியைக் காணவில்லை என்றும் அவரையும் போலீசார் கொலை செய்திருக்க வேண்டும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இக்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது, உச்சநீதி மன்றம். அவ்விசாரணை நடந்துகொண்டிருந்த போதே, சொராபுதீன் தீவிரவாதி அல்லவென்றும் “பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்ட போலீசார் அவரைக் கடத்திச் சென்று கொலை செய்ததாக” நீதிமன்றத்தில் தெரிவித்தது, குஜராத் போலீசு. சொராபுதீன் படுகொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது மனைவி கவுசர் பி கொலை செய்யப்பட்டதையும் குஜராத் போலீசே ஒத்துக்கொண்டது.

போலி மோதல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, சொராபுதீன், அவரது மனைவி மற்றும் சொராபுதீனின் கூட்டாளியான துளசிராம் பிரஜாபதி ஆகியோர் ஆந்திர மாநிலத்தில் ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அப்பேருந்தை மறித்த போலீசார் அவர்களை குஜராத்திற்குக் கடத்தி வந்துள்ளனர். அங்கு சொராபுதீனும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகளை நேரில் பார்த்த சாட்சியான பிரஜாபதி மற்றொரு போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த உண்மைகள் அம்பலமாகிவிட்ட நிலையில், “இது பணம், பதவிக்காக நடந்த கொலை” என்ற குஜராத் போலீசின் வாதத்தை உச்சநீதி மன்றம் ஏற்க மறுத்து, விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது.

04-amit-sha-cleanupசி.பி.ஐ விசாரணையைத் தொடங்கிய பின்னர் உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன. குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோருடன் அமித் ஷாவும் கைது செய்யப்பட்டார். மூன்று மாதங்கள் கழித்து அமித் ஷா பிணையில் வெளியே வந்துவிட்டாலும், அவர் குஜராத்திற்குச் செல்லக்கூடாது என நீதிமன்றம் தடைவிதித்தது. இதற்கிடையே குஜராத் மாநில அரசு, தங்களது விசாரணையில் தலையிடுவதாகவும், அதிகாரிகளை அச்சுறுத்துவதாகவும் சி.பி.ஐ. முறையிட்டதால் வழக்கு விசாரணை மும்பைக்கு மாற்றப்பட்டது.

ஆனால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு வழக்கை சீர்குலைக்கும் சதி வேலைகள் மேலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்டன. வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்த அமித் ஷாவைக் கடுமையாகக் கண்டித்து, “அடுத்த அமர்வில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்ட நீதிபதி உத்பத் அடுத்த நாளே பூனேவிற்குத் தூக்கியடிக்கப்பட்டார். அதன் பிறகு நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிரிஜ்மோகன் லோயா, தான் தங்கியிருந்த நாக்பூர் அரசு விருந்தினர் மாளிகையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அதற்குப் பிறகு வந்த நீதிபதி கொசாவி ஆரம்பம் முதலே இந்து மதவெறிக் கும்பலின் தலையாட்டி பொம்மையாகச் செயல்படத் தொடங்கினார்.

வழக்கு விசாரணையைத் தொடங்காமல் அதனை நிறுத்திவைத்துவிட்டு, வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரும் அமித் ஷாவின் மனுவை முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார், அவர். இரண்டே நாட்களில் அம்மனு மீதான விசாரணையை முடித்து, இரண்டு வாரங்களில் தீர்ப்பெழுதி அமித்ஷாவை வழக்கிலிருந்து விடுவித்தும் உத்தரவு பிறப்பித்துவிட்டார்.

சி.பி.ஐ. தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் அனைத்தையும் அவர் பொதுபுத்திக்கு எதிரானது என புறங்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டார். “சொராபுதீன் கொலை செய்யப்பட்ட அன்று, உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேசுவதை விட்டு, கீழ்நிலை அதிகாரிகளாக இருந்த, கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோருடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது ஏன்” என்று சி.பி.ஐ. எழுப்பிய கேள்விக்கு, “தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துவரும் காலகட்டத்தில், திறமையான அமைச்சர் கீழ்நிலை அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வது தவறல்ல” என்று அமித் ஷா தரப்பிலிருந்து நீதிபதியே பதிலளிக்கிறார்.

அமித் ஷாவுக்கும் சொராபுதீனுக்கும் தொடர்பிருப்பதை நிரூபிக்கும் தஸ்ரத் பட்டேல் மற்றும் ராமன் பட்டேல் சகோதரர்களின் வாக்குமூலங்களையும் நீதிபதி ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்து விட்டார்.

அமித் ஷா, மோடியின் வலது கரம் என்பதற்காக மட்டும் விடுவிக்கப்படவில்லை. அமித் ஷாவின் விடுதலை என்பது மோடி தன்னைத்தானே விடுவித்துக் கொள்வதற்கு ஒப்பானது. 2002-ம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றதிலிருந்து அம்மாநிலத்தில் நடந்த அனைத்து மோதல் படுகொலைகளிலும் மோடி-அமித் ஷா கூட்டணி சூத்திரதாரியாகச் செயல்பட்டுள்ளது. சொராபுதீன், துளசிராம் பிரஜாபதி, இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட போலி மோதல் படுகொலைகள் அனைத்தும் மோடியை முசுலீம் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடும் அச்சமற்ற தேசியத் தலைவராகக் காட்டும் அரசியல் நோக்கத்தோடு நடத்தப்பட்டவைதான். குஜராத் போலீசு மோடிக்காக ஒரு இளம் பெண்ணை வேவு பார்த்ததுகூட அமித் ஷா உத்தரவிட்டு நடந்ததுதான். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அமித் ஷாவை உ.பி.மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக மோடி நியமித்தார். அமித்ஷா, தன் பங்குக்கு முசாஃபர் நகர் கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தி, ஜாட் வாக்குவங்கியை பா.ஜ.க.வை நோக்கித் திருப்பி விட்டார்.

குஜராத் முசுலீம் படுகொலை வழக்கிலிருந்து மோடியை ஏற்கெனவே கழற்றிவிட்டுவிட்டது, பார்ப்பன ராகவன் கும்பல். மோடி, தன்னைச் சம்பந்தப்படுத்தும் போலிமோதல் படுகொலை வழக்குகளிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டுமென்றால், ஒன்று தனது கூட்டாளிகளை அவர் போட்டுத் தள்ள வேண்டும்; அல்லது வழக்கிலிருந்து அவர்களை விடுவிப்பதோடு, வழக்குகளையும் ஊத்தி மூட வேண்டும். கார்ப்பரேட் கும்பலால் பிரதமர் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டுள்ள மோடி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இரண்டாவது வழியைக் கையில் எடுத்திருக்கிறார். சொராபுதீன் கொலையிலிருந்து அமித் ஷா விடுவிக்கப்பட்டிருப்பதும், மற்ற போலிமோதல் கொலை வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் வன்சாரா, பாண்டே, ராஜ்குமார் பாண்டியன் உள்ளிட்ட போலீசு அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டு, அதிகாரமிக்க பதவிகளில் மீண்டும் அமர வைக்கப்பட்டிருப்பதும் இதனை உறுதி செய்கின்றன. தமது அதிகாரம் மற்றும் சுயநலனுக்காக எத்தகைய கிரிமினல் குற்றத்தையும் செய்யத் தயங்காத மோடி-அமித் ஷா-வன்சாரா என்ற கிரிமினல் கும்பலிடம் நாடு சிக்கியிருப்பதையும் எடுத்துக் காட்டுகின்றன.

– அழகு
______________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2015
______________________________

  1. இந்துக்களுக்கும் பிற இந்து அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் நீதிமன்றம் தண்டனை வழங்கினால் அது சரியான தீர்ப்பு என்பதும் அதே போல் இந்து அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தண்டனை இல்லாமல் விடுவித்தால் அது அநீதி என்று தீர்ப்பு கூறுவதும் வினவு போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு ஆதரவு இயக்கங்களின் செயல். ________வினவு போன்றவைகள் கண்டும் காணாமல் இந்துக்களை தூற்றுவதிலேயே காலம் தள்ளுகிறது. வாழத் தெரிந்தவர்கள்!!! வாழ்க வசதியுடன்!!!!!!!

Leave a Reply to மு.நாட்ராயன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க