privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பென்னாகரத்தில் லஞ்சத்திற்கு தடை ! வி.வி.மு - பு.மா.இ.மு அறிவிப்பு

பென்னாகரத்தில் லஞ்சத்திற்கு தடை ! வி.வி.மு – பு.மா.இ.மு அறிவிப்பு

-

அரசு அலுவலகங்களில் நடைபெறும் லஞ்சம் – ஊழலை தடுப்பதைப் பற்றி ஆலோசிக்க மக்கள் பேரவைக் கூட்டம்.

நாடு முழுவதும் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் -( பி.டி.ஓ) போன்ற அரசு அலுவலகங்களில் மக்கள் தேவைகள் (சான்றிதழ், அரசு உதவி, சலுகைகள்) லஞ்சம் கொடுக்கப்படாமல் நிறைவேறுவதில்லை. இங்கே அதிகாரிகள் லஞ்சம் பெறுவதற்கென்றே புரோக்கர்களை வைத்து ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதை விட கொடுமை என்னவெனில், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுடன் இவர்கள் கள்ளத் தொடர்பும் வைத்துள்ளனர்.

இதனால் லஞ்சம் வாங்குவது குறித்து புகார் கொடுத்தால் உடனே லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு எச்சரிக்கையுடன் நடக்கின்றனர். அடுத்த நாள் மீண்டும் அதே லஞ்ச வேலையில் ஈடுபடுகின்றனர். இப்படி பல அதிகாரிகள் லஞ்சம் பெறுவதில் முனைவர் பட்டம் பெறுமளவிற்கு நிபுணத்துவம் கொண்டவர்களாக உள்ளனர்.

பி.டி.ஓ அலுவலகம் என்றால் கமிசன் கொடுத்தால் மட்டுமே வேலை நிறைவேறும். உதாரணமாக, திருமண உதவித் தொகை என்றால் 5000 ரூபாய். தொகுப்பு வீடு என்றால் 20,000 ரூபாய் கமிசன் வெட்ட வேண்டும். “என்ன இவ்வளவு ரூபாய் தரணுமா?” என்று ஒரு கேள்வி கேட்டாலே போதும், “சரிப்பா, நீ எங்கியோ போய் பாத்துக்க” என்று மக்களை விரட்டுகிறார்கள் தெண்ட சோறு அதிகாரிகள்.

மக்கள் பேரவைக் கூட்டம்
“என்ன இவ்வளவு ரூபாய் தரணுமா?” என்று ஒரு கேள்வி கேட்டாலே போதும், “இதாப்பா, நீ எங்கியோ போய் பாத்துக்க” என்று மக்களை விரட்டுகிறார்கள் தெண்ட சோறு அதிகாரிகள்.

மறுபக்கத்தில் விவசாயம் அழிந்து வருவதால் நகரங்களை நோக்கி நாடோடிகளாக கூலி வேலைக்கு செல்கின்றனர் விவசாயிகள். இது போக, சிறிதளவு நிலமும், கணுக்கால் அளவு தண்ணீரையும் விட்டு செல்ல முடியாத விவசாயிகள், மின்சார வாரியம் மூலம் வழங்கப்படும் பூந்தோட்ட இணைப்புகள் பெற முயற்சித்தால் அந்த அதிகாரிகள் கேட்கும் லஞ்சத்தை கேட்டாலே இதயத் துடிப்பே நின்று விடும். இணைப்புக்காக உயர் அதிகாரிகளுக்கு 20,000 ரூபாய் லஞ்சமும், இடம் தேர்வுக்கு 500 ரூபாயும், மின் இணைப்பு கொடுக்கும் போது 50000 ரூபாய் என முப்பதாயிரம் வரை லஞ்சமாக கொள்ளையடிப்பதாக குமுறுகின்றனர் விவசாயிகள்.

இவ்வாறு எல்லா தரப்பு மக்களையும் லஞ்சம்-ஊழல் என்று அட்டையைப் போல உறிஞ்சுவதற்கு எதிராக, லஞ்சம் கொடுப்பதை நிறுத்துவதைப் பற்றி ஆலோசிக்க, மக்கள் பேரவை கூட்டம் ஒன்றை கிராம மக்களை திரட்டி நடத்துவது என்று முடிவு செய்தோம்.

மக்கள் பேரவைக் கூட்டம்
“லஞ்சம் -ஊழலை தடுப்பதற்கு யாரிடம் அனுமதி வாங்குவது. “

அதன்படி தெருமுனைக் கூட்டம், பிரச்சாரம், வீடு வீடாக மக்களை சந்திப்பது, ஜனநாயகவாதிகளை சந்தித்து கூட்டத்துக்கு அழைப்பது, சுவரெழுத்து இயக்கம், சுவரொட்டி பிரச்சாரம் என 20 நாட்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தோம். இறுதியாக பென்னாகரத்தில் இந்திராநகர் ஆஞ்சநேயர் கோயில் அருகில் கூட்டம் நடைபெற்றது.

இந்த மக்களை பேரவை கூட்டம் தொடர்பாக சுவரெழுத்துகளும், விளம்பரங்களும் மக்கள் கூடும் இடத்தில் விளம்பர தட்டிகளும் வைத்திருந்தோம். இரவோடு இரவாக போலீசே களத்தில் இறங்கி சுவர் விளம்பரத்திற்கு வெள்ளை அடித்தனர். சுவரொட்டிகளை கிழித்தனர். பேனரை பிய்த்து எறிந்தனர்.

மக்கள் பேரவைக் கூட்டம்
“இனி இதுபோல் (லஞ்ச ஊழல்) நடக்காது”

தொலைபேசியில் தொடர்புகொண்டு,  “அனுமதி இல்லாமல் எப்படி நடத்துறீங்க” என்று சட்ட வாதத்தை ஒன்றொன்றாக கழட்டி விட்டனர்.

“லஞ்சம் -ஊழலை தடுப்பதற்கு யாரிடம் அனுமதி வாங்குவது. அப்படி சட்டம் எதுவும் சொல்லவில்லையே?” என்று கேட்டால் பதில் இல்லை.

“இல்ல, நீங்க அனுமதி வாங்கிதான் செய்ய வேண்டும். 32 சட்டப் பிரிவு அமுலில் இருக்கிறது” என்று பேசியது போலீசு.

“அதுவெல்லாம் எங்களுக்கு தெரியாது. இதுபோன்ற கூட்டங்களுக்கு அனுமதி பெற வேண்டிய தேவையில்லை” என்று வாக்குவாதம் செய்த பிறகு

“பேனரை எடுங்கள், இதற்கு அனுமதி வேண்டும்” என்றது.

“சரி, எடுத்துக் கொள்கிறோம்” என்று சொல்லியும், 10 நிமிடத்திற்குள்ளாக பேனரை கிழித்தது போலீசு.

இப்படி பீதியூட்டும் வேலையை போலீசு நிறுத்தவில்லை.

மறுநாள் கூட்டம் நடப்பதற்கு முன்பாகவே அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டே இருந்தது போலீசு. எந்த வழியிலும் பொதுமக்கள் வரக்கூடாது என்று வழியெங்கும் முச்சந்திகளில் வாகனங்களை நிறுத்தி வைத்தது. தோழர்கள் ஓரிடத்தில் கூடி, பிரசுரம் கொடுத்து மக்களையும்  அழைத்துக் கொண்டு சென்றவுடன், உளவுத்துறை உட்பட 40 போலீசை வழியெங்கும் நிறுத்தினர்.

மக்கள் பேரவைக் கூட்டம்
இன்ஸ்பெக்டர் தனியாக வந்து, “நான் எல்லாம் லஞ்சம் வாங்குவதில்லை, தயவு செய்து கூட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்” என்று தோழர்களிடத்தில் பேசினார்.

இதனை பொருட்படுத்தாமல்  பொதுமக்களை சேர்த்துக் கொண்டு கோயில் முன்பு அமர்ந்து கூட்டத்தைத் தொடங்கினோம்.

எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி, வீ.ஏ.ஓ, தாசில்தார் என்று பெரிய பட்டாளமே வந்திருந்தது. “இனி இதுபோல் (லஞ்ச ஊழல்) நடக்காது” என்று யாரும் பேசவில்லை. மாறாக, முகத்தில் ஈ ஆடாமல் கூட்டத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தனர்.

இன்ஸ்பெக்டர் தனியாக வந்து, “நான் எல்லாம் லஞ்சம் வாங்குவதில்லை, தயவு செய்து கூட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்” என்று தோழர்களிடத்தில் பேசினார்.

டி.எஸ்.பி.யோ நமது வழக்கறிஞர்களிடத்தில், “நான் எப்போதும் லஞ்சம் வாங்குவதில்லை சார்” என்று தனது பங்கிற்கு தனியாக கூறியிருக்கிறார். இவ்வாறு பேசக் கொண்டிருக்கும் போதே தோழர்கள் ராமலிங்கம், மாது கூட்டத்துக்கு தலைமையேற்று நடத்தினர்.

இதைத் தொடர்ந்து வி.வி.மு. வட்டக்குழு தோழர் மாயாண்டி பேசினார். “சுவரொட்டியை உரசிக் கிழிக்கும் போலீசு, லஞ்சம் வாங்கும் தாசில்தாரையும், பி.டி.ஓ-வையும் கிழிப்பார்களா. இனி எந்த அதிகாரிகள் லஞ்சம் வாங்கினாலும், தெரு முச்சந்தியில் நிறுத்தி புளிய விறால்களால் பரிசு வழங்கப்படும்” என்றார்.

மக்கள் பேரவைக் கூட்டம்
“சுவரொட்டியை உரசிக் கிழிக்கும் போலீசு, லஞ்சம் வாங்கும் தாசில்தாரையும், பி.டி.ஓ-வையும் கிழிப்பார்களா”

அடுத்து பேசிய தோழர் கோபிநாத், வட்டார செயலர், வி.வி.மு, “தாலுகா அலுவலகம் தொடங்கி மின்சார வாரியம் வரை மக்களிடத்தில் லஞ்சம் வாங்குகின்றனர். கொடுக்க மறுத்தால், இழுத்தடித்து லஞ்சம் கொடுக்கும் வரை மனு மீது நடவடிக்கை எடுப்பதில்லை. தினந்தோறும் அரசு அலுவலகங்களில் வாசல்முன் மக்கள் காத்துக் கிடக்கின்றனர். லஞ்சத்தை தடுக்க மக்கள் அதிகாரத்தை தங்கள் சொந்தக் கையில் எடுக்க வேண்டும்” என்று அறைகூவி அழைத்தார்.

இதன்பிறகு குடும்ப அட்டைக்கு லஞ்சம் கேட்டு அலைக்கழிக்கப்பட்ட நபர் ஒருவர் மனு கொடுத்தார். முதியோர் உதவித் தொகை நிறுத்தி விட்டதாக ஆதரவற்ற முதியோர்கள் 4 பேர் நம்மிடத்தில் மனு கொடுத்தனர்.

லஞ்சத்தை எதிர்த்து விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் போராடி மக்களை திரட்டினால் நமது அதிகாரம் என்னாவது என்று யோசித்த நிர்வாகம் தோழர்கள் மீது வழக்கு போட்டிருக்கிறது.

மக்கள் பேரவைக் கூட்டம்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரச்சனைகளை தீர்க்க வேலைகளை தொடங்கியுள்ளது, வி.வி.மு

எனினும் அடுத்த கட்டமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரச்சனைகளை தீர்க்க வேலைகளை தொடங்கியுள்ளது, வி.வி.மு. இந்த சமர் தொடரும்.

லஞ்சத்தை எதிர்த்ததற்காக வி.வி.மு தோழர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது குறித்த பத்திரிகை செய்தி

pennagaram-people-council-case

விவசாயிகள் விடுதலை முன்னணி,
பென்னாகரம் வட்டம்
9943312467