privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்காஞ்சிபுரம் லார்ட் ஐயப்பா கல்லூரி - புரட்டியெடுத்த போராட்டம்

காஞ்சிபுரம் லார்ட் ஐயப்பா கல்லூரி – புரட்டியெடுத்த போராட்டம்

-

காஞ்சிபுரம் லார்டு ஐயப்பா பொறியியல் கல்லூரி

கல்விக்கொள்ளையில் ஒரு புதிய பரிமாணம் – முறியடிக்கும் போராட்டத்தில் பு.மா.இ.மு

சென்னை – தாம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் பாதையில் வாலாஜாபாத்திற்கு முன்பாக உள்ள பகுதி ஊத்துக்காடு. ஊத்துக்காட்டிலிருந்து சுங்குவார்சத்திரம் செல்லும் வழியில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கல்லூரி தான் லார்டு ஐயப்பா இன்ஜினியரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் என்ற தனியார் பொறியியல் கல்லூரி.

லார்டு அய்யப்பா கல்லூரி
கல்விக் கொள்ளையன் கேசவன் யாதவிற்கு லார்டு வெங்கடேஸ்வரா, லார்டு ஐயப்பா இன்ஜினியரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் என்று இரண்டு கல்லூரிகள் உள்ளன.

அரசின் கல்வி ஊக்கத்தொகை பெறும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்கள் இங்கு ஐந்து பிரிவுகளில் பொறியியல் படிப்பை படித்து வருகின்றனர். மொத்தமாக 300 பேர் வரை இங்கு படிக்கின்றனர்.

பெயர் தான் கல்லூரியே தவிர அதற்கான அறிகுறி எதுவும் இல்லாத சுடுகாடு அது. உண்மைதான், அந்தப் பகுதி ஒரு பொட்டல்காடு. 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டார அளவிற்கு எந்த கிராமமும் கிடையாது. ஒரு சுடுகாடு மட்டும் உண்டு.

கல்விக் கொள்ளையன் கேசவன் யாதவிற்கு லார்டு வெங்கடேஸ்வரா, லார்டு ஐயப்பா இன்ஜினியரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் என்று இரண்டு கல்லூரிகள் உள்ளன. ஆனால் செயல்பாட்டில் இருப்பது லார்டு வெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் மட்டும்தான்.

லார்டு அய்யப்பா கல்லூரி
பெயர் தான் கல்லூரியே தவிர அதற்கான அறிகுறி எதுவும் இல்லாத சுடுகாடு அது.

லார்டு ஐயப்பா இன்ஜினியரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் ல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் யாரும் சேரவில்லை. லார்டு வெங்கடேஸ்வரா கல்லூரியில் சேர்ந்தவர்களில் சில மாணவர்களை லார்டு ஐயப்பா கல்லூரியில் மாற்றல் செய்யப்பட்டனர். மிக முக்கியமாக தாழ்த்தப்பட்ட / பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கான மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டத்தின் ( அரசாணை எண் – 92 ) வழியாக சேர்ந்த மாணவர்கள் தான் அதிகம். மொத்தமுள்ள சுமார் 300 மாணவர்களில் 180 பேர் இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏஜெண்டுகள் மூலம் பிடித்து கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள்.

அந்த ஏஜெண்டுகள் யார் தெரியுமா? இதே தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரிகளாக இருந்தவர்கள், இருப்பவர்கள்தான். அதில் மிகவும் முக்கியமானவர் இரா. கிருத்துதாசு காந்தி, ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். பதவியில் இருந்த போது அரசின் அடியாளாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கியவர், இப்போது பதவியில் இல்லையென்றாலும் ஏகாதிபத்திய கைக்கூலி நிறுவனமான “துடி இயக்கம்” எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் காப்பாளராக இருந்து தாழ்த்தப்பட்ட மக்களை காட்டிக்கொடுத்து வருபவர்.

லார்டு அய்யப்பா கல்லூரி
லஞ்சத்தொகைக்காக விழிப்புணர்வு ஊட்டுவது என்ற பெயரில் அப்பாவி மாணவர்களை பிடித்துக் கொண்டு வந்து கல்விக்கொள்ளையனிடம் அடகு வைத்திருக்கிறான்.

இந்த துரோகிதான் தனக்கு கிடைக்கும் லஞ்சத்தொகைக்காக நெல்லை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது என்ற பெயரில் அப்பாவி மாணவர்களை பிடித்துக் கொண்டு வந்து இந்த கல்விக்கொள்ளையனிடம் அடகு வைத்திருக்கிறார்.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்படி சேரும் மாணவருக்கான கல்விக்கட்டணம் முழுவதையும் அரசே கொடுத்துவிடும் என்றாலும் கல்லூரியில் சேரும் போது முன்தொகையாக 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கட்ட வேண்டும். அப்புறம் விடுதிக் கட்டணம், வீட்டில் இருந்து வருபவர்களுக்கு பேருந்து கட்டணம், செயல்படாத கல்லூரி என்றாலும் அவ்வப்போது நிர்வாகம் சொல்லும் கட்டணங்கள் என மாணவர்களிடம் கறந்து விடுவார்கள்.

லார்டு அய்யப்பா கல்லூரி
விடுதிக் கட்டணம், வீட்டில் இருந்து வருபவர்களுக்கு பேருந்து கட்டணம், செயல்படாத கல்லூரி என்றாலும் அவ்வப்போது நிர்வாகம் சொல்லும் கட்டணங்கள் என மாணவர்களிடம் கறந்து விடுவார்கள்.

இதில் மிகவும் கொடூரமானது என்னவென்றால், மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகையான 14,000 ரூபாயை நிர்வாகம் மாணவர்களுக்கு தருவதில்லை. ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி ரவுடிகளை வைத்து மிரட்டி அந்தப் பணத்தையும் பறித்துக் கொள்கிறார்கள். தட்டிக் கேட்டால் கொலை செய்து அருகில் உள்ள சுடுகாட்டில் புதைத்து விடுவோம் என்று மிரட்டுகிறார்களாம்.

கல்லூரியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. விடுதி பாழடைந்த நிலையில் சீரழிந்து கிடக்கிறது. உணவு, குடிநீர் வசதிகளைப் பொறுத்தவரை, எந்தவிதமான சுகாதாரமும் இல்லை.விடுதிக்கு காவலர்கள், வார்டன்கள் என யாரும் இல்லை.

லார்டு அய்யப்பா கல்லூரி
தட்டிக் கேட்டால் கொலை செய்து அருகில் உள்ள சுடுகாட்டில் புதைத்து விடுவோம் என்று மிரட்டுகிறார்களாம்.

முக்கியமாக, இக்கல்லூரிக்கென்று நிரந்தரமான பிரின்ஸ்பால், துறை தலைவர்கள் (HOD) கிடையாது. மொத்தமாகவே 5 விரிவுரையாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆய்வகம், ஆய்வு உபகரணங்கள் கிடையாது. இதனால் மாணவர்கள் பாடங்களை படிக்க முடியாமல் போன காரணத்தால், எல்லா மாணவர்களுக்கும் அரியர் உள்ளது. இன்னும் சரியாக சொல்லப்போனால் கடந்த 6 மாதங்களாக கல்லூரி நடைபெறவே இல்லை. மாணவர்கள் வீட்டில் இருப்பதுபோல் எப்பொழுதும் லுங்கியுடன் ஆங்காங்கே உட்கார்ந்து படித்துத்தான் தேர்வுக்கு தயாராகிறார்கள். மொத்தமாக இது கல்லூரியே கிடையாது என்பதை அங்கு செல்கின்ற யார் வேண்டுமானாலும் எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

இந்தப் பிரச்சனைகளுக்காக மாணவர்கள் பலமுறை மறியல் செய்வது, அண்ணா பல்கலைக்கழகத்தில் மனு கொடுப்பது, கோட்டாட்சியரிடம் மனு கொடுப்பது என்று பலமுறை போராடியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை .

ஒவ்வொரு முறையும் எந்த அடிப்படை வசதிகளை கேட்கிறார்களோ அந்த வசதி அறவே ஒழிக்கப்படும் என்பதே உண்மை. உதாரணத்திற்கு ஒரு முறை “கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறை, ஆய்வக வசதி போதவில்லை, விடுதியில் உணவு வசதி சரியில்லை” என்று போராடி இருக்கின்றனர். போராட்டத்திற்கு பின்பு ஆசிரியர்கள் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டுள்ளது; ஆய்வகம் இழுத்து மூடப்பட்டுள்ளது; விடுதியில் வெறும் புளி சாதம், லெமன் சாதம் என்ற அளவுக்கு மேலும் மோசமாக்கப்பட்டுள்ளது.

லார்டு அய்யப்பா கல்லூரி
கல்லூரியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. விடுதி பாழடைந்த நிலையில் சீரழிந்து கிடக்கிறது.

இது பற்றி மாணவர்கள் கல்லூரி நிர்வாகியிடம் கேட்டபோது “அப்படித்தான் செய்வேன் உங்களால என்ன மயி…….. புடுங்க முடியும். ரொம்ப பேசுனா அடிச்சு கொன்னுபோடுவேன்” என்று ஒரு மாணவனை அடிக்கச் சென்றுள்ளார். மிரண்டுபோன மாணவர்கள் அடங்கிப் போவது, அல்லது மூட்டை முடிச்சுகளுடன் வீட்டுக்குப் போவது என்ற இரண்டு முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம்.

அப்போதுதான் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் செயல்பாட்டை நண்பர்கள் மூலமாக கேள்விப்பட்டு நம்மைத் தொடர்புகொண்டு போனிலேயே குமுறினார்கள். நேரில் சென்று அவர்களைப் பார்த்தபோது செங்கல் சூளையில் கொத்தடிமையாக மாட்டிக்கொண்டவர்களின் நிலைதான் நினைவுக்கு வந்தது. நேரில் கண்ட காட்சிகள்  யாரையும் கண்கலங்க வைத்துவிடும். இருப்பினும் அம்மாணவர்கள் போராட்ட உணர்வினை மட்டும் கைவிடவில்லை.

லார்டு அய்யப்பா கல்லூரி
மாணவர்களின் நிலை செங்கல் சூளையில் கொத்தடிமையாக மாட்டிக்கொண்டவர்களின் நிலையைவிட மோசமாகவே இருந்தது.

அரசு உதவித் திட்டம் என்ற பெயரில் கல்லூரியில் சேர்த்துவிட்ட தாழ்த்தப்பட்ட பிரிவு முன்னாள், இன்னாள், உயர் அதிகாரிகள், கல்லூரி நிர்வாகத்தின் அடியாளாக அவ்வப்போது வந்து மிரட்டிச் செல்லும் புரட்சிபாரதம் எனும் தலித் அமைப்பின் யோக்கியதைகள், அண்ணாபல்கலைக்கழக உயர் அதிகாரிகள், வட்டாட்சியர், கோட்டாட்சியர், போலீசு ஆகிய அதிகாரவர்க்கத்தின் பித்தலாட்டம், கிரிமினல்தனங்கள், அதிகார பலம், பண பலம், சாதிஆதிக்கம் ஆகியவற்றைக் கொண்டு கல்விக்கொள்ளையை நடத்தி வரும் கல்லூரி நிர்வாகம் எனப் பலபேரின் சுயரூபங்களை சொந்த முறையில் உணர்ந்து இருந்தார்கள். ஆனால் போராடி, களைத்துப்போய் இருந்தார்கள்.

அரசியல்படுத்தப்பட்ட மாணவர்கள்

இந்நிலையில் பு.மா.இ.மு தோழர்கள் தனியார்மயக் கல்விக்கொள்கையின் அரசியலை அவர்களிடம் எடுத்துரைத்தார்கள், மாணவர்களுக்கு அரசியல் தேவை புரிந்தது, அமைப்பானார்கள். தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக புரட்சிகர அமைப்பாக போராடும் துணிவைப் பெற்றார்கள்.

செயல்படாத அந்த லார்டு ஐயப்பா கல்லூரிக்கு இவ்வாண்டுக்கான அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் வழங்கும் சடங்குக்காக 19-03-2015 அன்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வரும் தகவலை மாணவர்கள் அறிந்துகொண்டார்கள்; “இம்முறையும் ஏமாறக்கூடாது, இதற்கு முடிவு கட்டிவிட வேண்டும்” என்று முடிவு செய்தனர்.

லார்டு அய்யப்பா கல்லூரி

அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் வழங்கும் சடங்குக்காக அதிகாரிகள் ஆய்வு செய்ய வரும் தகவலை மாணவர்கள் அறிந்துகொண்டார்கள்; “இம்முறையும் ஏமாறக்கூடாது, இதற்கு முடிவு கட்டிவிட வேண்டும்” என்று முடிவு செய்தனர்.

கல்லூரியை போராட்டக்களமாக்கிய மாணவர்கள்

19-03-2015 அன்று காலை 10 மணிக்கு அதிகாரிகள் வருவதாக தகவல். நாம் அதற்கு முன்பே 9 மணிக்கே கல்லூரிக்கு அருகில் சென்றுவிட்டோம். அங்கிருந்து நடப்பவைகளை கவனிக்கத் தொடங்கினோம்.

அந்த சுடுகாட்டில் அதிசய காட்சிகள் அரங்கேற தொடங்கியிருந்தன.

  • இதுவரை 5 விரிவுரையாளர்கள் மட்டுமே இருந்த கல்லூரிக்கு அன்று 30 க்கும் மேற்பட்ட ‘விரிவுரையாளர்கள்’ இறக்குமதி செய்யப்பட்டு அடையாள அட்டை மாட்டிவிடப்பட்டு ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். பார்ப்பவர்கள் யாரும் அவர்களை சினிமா துணை நடிகர்கள் என்று அடையாளம் கண்டிடலாம்.
  • இதுவரை கணிப்பொறிகளையே பார்த்திராத கம்ப்யூட்டர் லேபில், 10 க்கும் மேற்பட்ட கணிப்பொறிகள் வாடகைக்கு வந்திறங்கியிருந்தன.
  • மாணவர்கள் அனைவரும் அடையாள அட்டை சகிதமாக கல்லூரிக்கு அனைவரும் வரவேண்டும் என விடுதிக்கு உத்தரவும் பறந்தது. அன்று மட்டும் விடுதியில் சமையல் கொஞ்சம் சுமாராக செய்யப்பட்டிருந்ததாம்.

காலை 10 மணிக்கு அதிகாரிகள் மூன்று காரில் கல்லூரி நிர்வாகத்தினருடன் வந்திறங்கினர். மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்குள் ஆஜராகி இருந்திருந்தாலும் கல்விக்கொள்ளையன் கேசவனால் மகிழ்ச்சியடைய முடியவில்லை. மாணவர்கள் அனைவரும் லுங்கி, கால்சட்டையுடன் வந்திருந்தததுதான் அதற்குக் காரணம்.

அதிகாரிகள் கல்லூரிக்குள் ஆய்வுப் பணியை மேற்கொள்ளத் தொடங்கினர். ஆய்வுப் பணியை மேற்கொள்வதை போல நடித்தனர் என்றும் கூறலாம்.

லார்டு அய்யப்பா பொறியியல் கல்லூரி
“நாங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டோம். உங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஏற்பாடு செய்கிறோம்” என்று பழைய பல்லவியையே பாடிய அதிகாரிகள்.

சரியாக 1.30 மணி நேரத்திற்குப் பின்பு அதிகாரிகள் ‘ஆய்வை’ முடித்துவிட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் 150 பேர் வெளியில் நின்று கொண்டிருக்க, மாணவர்களிடம் எதுவும் விசாரிக்காமல், அதைக் கண்டுகொள்ளாதது போல் நேராக அலுவலகத்திற்கு சென்று கல்லூரி சேர்மனிடம் ‘பேச வேண்டியதை பேசி விட்டு’ ’வாங்க வேண்டியதை வாங்கும் வழிமுறையை சொல்லிவிட்டு’ வெளியே வந்தனர்.

அதிகார வர்க்கத்திற்கே உரிய திமிரோடு, எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அதிகாரிகள் புறப்படத் தயாரானார்கள். ‘இப்போதுதானே வேலையே தொடங்குகிறது இவர்கள் எங்கு கிளம்பிவிட்டார்கள்’ என்ற உணர்வோடு வெளியே வந்த அதிகாரிகளை குறுக்கிட்டு மாணவர்கள் கேள்வியெழுப்பத் தொடங்கினர்.

விடுதியையும் பார்க்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகளோ “நாங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டோம். உங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஏற்பாடு செய்கிறோம்” என்று பழைய பஞ்சாங்கத்தை பாடத் தொடங்கினர்.

லார்டு அய்யப்பா கல்லூரி
“நாங்க எல்லாவற்றையும் பார்த்து விட்டோம்… கரெக்டாதான் செஞ்சிருக்கோம்’’ – என்று கூறினர் அதிகாரிகள்.

மாணவர்கள் விடுவதாயில்லை. “அப்படியென்றால், நீங்கள் ஆய்வு செய்த அந்த பேப்பரை காட்டுங்க சார் நாங்க கொஞ்சம் ஆய்வு செய்கிறோம்’’ என்று கேட்டவுடன் அதிகாரிகளுக்கு முகம் சுள்ளென்று ஆனது.

“அதெல்லாம் காட்ட முடியாது. எங்க மேல நம்பிக்கை இல்லையா, நாங்க எல்லாவற்றையும் பார்த்து விட்டோம்… கரெக்டாதான் செஞ்சிருக்கோம்’’ என்று தங்கள் புத்தியைக் காட்டத் துவங்கினர்.

“இதுக்கு முன்னாடியும் இப்படித்தான் எழுதிக்கிட்டு போனீங்க, ஒண்ணும் நடக்கல, இப்ப மட்டும் என்ன நடக்கப் போகுது… எங்களுக்கு ஒரு முடிவு செஞ்சுட்டு போங்க சார்” மாணவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியது.

அதிகாரிகளுக்கோ வியர்க்கத் தொடங்கியது. “எங்களால எந்த முடிவும் செய்ய முடியாது. அதிகாரம் இல்லை’’ என்று கூறினார்கள்.

“அப்படியென்றால் அதிகாரம் உள்ள அதிகாரிகள் வரும்வரை இங்கேயே இருங்கள்” என்று கூறி மாணவர்கள் அதிகாரிகளை சிறை பிடித்தார்கள்.

மாணவர்கள் உறுதியாக நிற்பது கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர் அதிகாரிகள். மாணவர்களும் பு.மா.இ.மு தோழர்களும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினர் அதிகாரிகள்.

மாண்வர்களை மீறி வெளியில் செல்லமுடியாது என்பதை உணர்ந்தவர்கள், அவர்களாகவே அலுவலக அறைக்குள் அடைபட்டுக்கொண்டார்கள். கல்லூரி சேர்மன் திருடன் பஞ்சாயத்து பேசுவது போல மாணவர்களிடம் சமரசம் பேசினார்.

“சேர்மனோடு பேசத் தயாரில்லை, அதிகாரிகளை வரச்சொல்” என்று கூறி அவரோடு பேசுவதை புறக்கணித்தோம். இரண்டு மணிநேரம் சிறைவாசம் தொடர்ந்தது, அதிகாரம் உள்ள அதிகாரிகள் யாரும் வரவில்லை. வழக்கம்போல போலீசு தான் படையோடு வந்தது. வந்தவுடன் வாலாஜா இன்ஸ்பெக்டர் நடிப்பைத் தொடங்கினார்.

சேர்மனைப் பார்த்து “காலேஜை ஒழுங்கா நடத்துனா இந்தப் பிரச்சினை வருமா, முடியலைன்னா இழுத்து மூடிவிட்டுப் போக வேண்டியதுதானே’’ என்று கூறி தன்னை நல்லவனாக காட்டிக் கொண்டார்.

நாம் பிரச்சினையை எடுத்துக் கூற ஆரம்பித்தவுடனே “நீங்கள் யார்? மாணவர் அமைப்பெல்லாம் உள்ளே வரக்கூடாது, வெளியே போங்க’’ என்றது போலீசு.

“நாங்கள் மாணவர்களின் பிரதிநிதிகள். மாணவர்கள் சொன்னால் செல்கிறோம்’’ என்றதும், மாணவர்கள் ஒரே குரலில் “அவர்கள் எங்களுக்காகத்தான் வந்திருக்காங்க, அவர்கள் இங்குதான் இருப்பார்கள்’’ என்று கூறி போலீசின் வாயை அடைத்தனர்.

“உங்கள் லைஃபை கெடுத்துக்காதீங்க’’ என்று கூறி மிரட்டும் பாணியில் பேசத் தொடங்கி தன் வேலையை போலீசு காட்டியதும் மாணவர்களோ “ஏற்கனவே வாழ்க்கை போய்விட்டது, இனி போவதற்கு ஒன்றும் இல்லை’’ என்று பதிலளித்தவுடன் அடங்கியது போலீசு.

போலீசும், நிர்வாகமும் ஒரு கட்டத்தில் நம்மோடு பேசுவது போல் பேசிக் கொண்டே அதிகாரிகளை திருட்டுத் தனமாக, வேறு வழியில் தனித்தனியாக அழைத்துச் சென்றனர். இதை அறிந்த மாணவர்கள் அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராவோம் என அறிவித்தனர்.

அன்று இரவே தகவல் பலகையில், “கல்லூரியில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளதால் கல்லூரியை காலவரையின்றி மூடு”வதாக கல்லூரி முதல்வர் கையொப்பமிட்ட ஒரு பேப்பர் ஒட்டப்பட்டிருந்தது.

இரவு வாலாஜாபாத் போலீசு இரண்டு பேர் வந்து “ஒழுங்கா, நைட்டோட நைட்டா காலி பண்ணிட்டு போயிடுங்க, இல்லன்னா வலுக்கட்டாயமா வெளியேற்றுவோம்” என்று கூறி மிரட்டியது.

மாணவர்கள் “காலி செய்ய முடியாது” என்று மறுத்தனர்.

அடுத்தநாள் உணவையும் நிறுத்தி விட்டனர். மாணவர்கள் முழுநாளும் உணவில்லாமல் தவிக்க விடப்பட்டனர். தொடர்ச்சியாக, சேர்மனோ மாணவர்கள் மீது குற்றம் சாட்டிக் கொண்டிருந்தார்.

“அதிகாரிகளை முற்றுகையிட்டது தவறு, மன்னிப்புக் கடிதம் கொடுத்தால்தான், இனி ஆய்வுக்கு வருவார்கள், இல்லாவிட்டால் தேர்வு எழுத முடியாது…” என்று கூறி மிரட்டப் பார்த்தார்.

மாணவர்கள், “மன்னிப்புக் கடிதம் கொடுக்க முடியாது” என்று உறுதியாகக் கூறிவிட்டு அடுத்த போராட்டத்திற்கு தயாரானார்கள்.

கலெக்டர் அலுவலகத்தை விடுதியாக்கிய மாணவர்கள்

மாணவர்கள் கொஞ்சம் பேர் விடுதியை காலி செய்துவிட்டு காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தை விடுதியாக பயன்படுத்துவது என திட்டமிட்டு 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் தலைமையில் இரவு 7.30 மணி அளவில், லார்டு ஐயப்பா கல்லூரி நிர்வாகத்தையும், அரசு அதிகாரவர்க்கத்தின் சதித்தனத்தையும் அம்பலப்படுத்தி முழக்கங்கள் எழுப்பி கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று அமர்ந்தனர்.

போலீசு தலைதெறிக்க ஓடி வந்தது “உடனே இடத்தை காலி செய்யாவிட்டால் எப்.ஐ.ஆர் போடுவோம்” என்று பூச்சாண்டி காட்டியது.

“என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், எங்கள் பிரச்சனைக்கு முடிவு தெரியும் வரை இங்கிருந்து போக மாட்டோம்’’ என்று உறுதியாக நின்றவுடன் ” கலெக்டரிடம் பேசுகிறேன்” என்று போலீசு பதுங்கியது.

சிறிது நேரத்தில் தாசில்தார் வந்தார். சமரசம் பேசினார். அடுத்த சில நிமிடங்களில் கோட்டாட்சியர் ஓடி வந்தார். பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

“உடனடியாக கல்லூரியையும், விடுதியையும் திறக்க வேண்டும், அடுத்த நாள் (20-03-15) முதல் உணவு ஏற்பாடு செய்து தரவேண்டும்” என்று கோரினோம். “மற்றவற்றை உங்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை. அதை நாங்கள் கல்லூரியில் பேசிக்கொள்கிறோம்” என்றோம்.

நமது கருத்தைக்கேட்ட கோட்டாட்சியர் கல்லூரி நிர்வாகத்தை உடனடியாக வரவழைத்து,  “கல்லூரியையும், விடுதியையும் உடனே திறக்க வேண்டும்” என உத்தரவு போட்டார். “அடுத்த நாள் கல்லூரிக்கு வந்து பிரச்சனையை தீர்ப்பதாக” சொன்னார்.

பிரச்சனையை தீர்ப்பார் என்பதில் நம்பிக்கை இல்லை என்றாலும் காலவரையற்ற விடுமுறை ரத்து செய்யப்பட்டதால் போராட்டத்தை தொடர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டதை நினைத்து கல்லூரி விடுதிக்கு மாணவர்கள் கிளம்பினர். அடுத்த நாள் கோட்டாட்சியர் தலைமையில் கல்லூரியில் பேச்சுவார்த்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

கல்லூரியில் கோட்டாட்சியர்

காலை 10 மணிக்கு வருவதாகச் சொன்ன கோட்டாட்சியர் வரவில்லை. மாணவர்கள் தொடர் நிர்ப்பந்தத்தால் மதியம் 1 மணியளவில் வந்தார். நேராக கல்லூரி சேர்மனை சந்திக்க சென்றதன் மூலம் தனது சுயரூபத்தை வெளிப்படுத்திக் கொண்டார், கோட்டாட்சியர்.

பின்பு, மாணவர்கள் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். அவர்களோடு பு.மா.இ.மு தோழர்கள் இருவரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் அடிப்படையான பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல், நிர்வாகம் மாணவர்களின் மீது கூறிய சில்லரை விசயங்களை முன்வைத்து மாணவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றினார் கோட்டாட்சியர்.

நேற்றைய போராட்டத்திற்குப் பிறகு பேச்சுவார்த்தையில் மாணவர் அமைப்பையும் கலந்து கொள்ளச் சொன்ன கோட்டாட்சியர், இன்றோ சதித்தனமாக நடந்து கொண்டார். தோழர்கள் இருப்பது மாணவர்களுக்கு தைரியமூட்டுகிறது என்பதை உணர்ந்து அமைப்புத் தோழர்கள் இருவரையும் அராஜகமாக வெளியேற்றி, தான் தனியார் கல்லூரி முதலாளிகளின் பக்கம்தான் என்பதை நிரூபித்துக் கொண்டார்.

“இன்று முதல் அடிப்படை வசதிகளுக்கான வேலையை தொடங்க வேண்டும். கல்லூரியை முறையாக நடத்த வேண்டும், விடுதியை முறையாக பராமரிக்க வேண்டும்” என்று மாணவர்கள் உத்தரவு போட வேறு வழியில்லாத இந்தக் கூட்டுக்களவாணிகள், ” இதையெல்லாம் செய்கிறோம். ஆனால் அதற்கு ஒரு காலஅவகாசம் தேவைப்படும்” என்ற பாட்டை பாடிக்கொண்டே இருந்தனர்.

மாணவர்களோ, “கல்லூரியை முறையாக நடத்தவில்லையென்றான் இதை மூடும் இறுதிச் சடங்கை நாங்கள் செய்யவேண்டி வரும்” என்று எச்சரித்து விட்டு வெளியேறிவிட்டனர்.

மாணவர்கள் ஒரு புரட்சிகர அமைப்பின் பின்னால் உறுதியாக நின்று போராடுவதை கண்ட கல்லூரி நிர்வாகம் பழையபடி மாணவர்களை அடக்கமுடியாது என்பதை உணர்ந்து ஆய்வுக்காக கொண்டு வந்து இறக்குமதி செய்யப்பட்டவைகளை நிரந்தரமாக்கி கல்லூரியை நடத்தத் தொடங்கியுள்ளது.

பு.மா.இ.மு தலைமையிலான மாணவர்களின் உறுதியான போராட்டம்தான் இதை சாதித்துள்ளது என்றாலும், கல்வி உதவித்தொகை திட்டம் என்ற பெயரில் உழைக்கும் மக்களின் பிள்ளைகளை தனியாரிடம் தள்ளிவிட்டு கல்விக்கொள்ளையர்களை கொழுக்க வைக்கும் இந்த அரசின் உண்மை முகம் தற்போதுதான் இக்கல்லூரி மாணவர்களுக்கு புரியவந்துள்ளது.

அரசுப் பணத்தை (உழைக்கும் மக்கள் பணத்தை) லார்டு ஐயப்பா போன்ற தனியாரிடம் கொடுத்து ஏன் கொழுக்க வைக்க வேண்டும்? இந்தக் கல்லூரிகளையே அரசு கையகப்படுத்தி மாணவர்களுக்கு தரமான கல்வியைக் கொடுக்கலாமே என்ற கேள்வியை அக்கல்லூரி மாணவர்கள் எழுப்புகிறார்கள்.

அததகையதொரு போராட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியுடன் இணைந்து தயாராகிக் கொண்டிருக்கின்றனர் லார்டு ஐயப்பா இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள்.

  • இதுபோல் பல தனியார் பொறியியல் கல்லூரி! கல்விக்கொள்ளையர்களிடம் சிக்கியுள்ள லட்சக்கணக்கான மாணவர்களே
  • அவர்களின் பெற்றோர்களே!
  • இதையெல்லாம அன்றாடம் பர்த்துக்கொண்டிருக்கும் பேராசிரியர்களே!
  • உழைக்கும் மக்களே!

பொறுத்தது போதும், போராட வாருங்கள் !

உங்களுக்கு சேவை செய்ய பு.மா.இ.மு காத்திருக்கிறது.
தொடர்புகொள்ளுங்கள் – 9445112675.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
காஞ்சிபுரம்
.

  1. வினவு தோழர்களே லார்டு அய்யப்பாவுக்கும் கமென்ட் பெட்டிய திறந்து விடக்கூடாதா ஏகப்பட கல்லூரிகள் இன்டஸ் லார்டு அய்யப்பா அப்பிடி மேரி காலேஜ் நிறைய இருக்குது எல்லாத்தயும் மாத்த முடியுமா கொஞ்சம் கஸ்டம்தான்….!

  2. காஞ்சிபுரம் பகுதி தோழர்களுக்கு.,

    சிறப்பான வழிநடத்தல் தோழர்களே., வாழ்த்துக்கள்.

    //உங்களுக்கு சேவை செய்ய புமாஇமு// என்பதை விட உங்களுடன் இணைந்து தோள் கொடுக்க என மாற்றினால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

  3. அன்புள்ள வினவு & காஞ்சிபுரம் புமாஇமு,

    இரா. கிருத்துதாசு காந்தி அவர்களைப் பற்றியும், துடி இயக்கத்தைப் பற்றியும் இந்த கட்டுரை மிகவும் எதிர்மறையில் பேசுகிறது என்று தோன்றுகிறது. தோழமை சக்திகளை இப்படி பேசி விரோதிகளாக்கிக் கொள்வது சரியல்ல என்று நினைக்கிறேன்.

    //அரசின் அடியாளாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கியவர்,//

    இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கொடுத்தால் நல்லது.

    //ஏகாதிபத்திய கைக்கூலி நிறுவனமான “துடி இயக்கம்”//

    இது பொதுவான குற்றச்சாட்டா இல்லை குறிப்பான காரணங்களுக்காக கொடுக்கப்பட்டதா என்பதை அறிய விரும்புகிறேன்.

  4. //அரசின் அடியாளாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கியவர்,//

    என்னண்ணே இது கூட புரியலயா இவிங்களுக்கும் அவிங்களிக்கும் இடயே யேதாவது உள் குத்து இருக்கும் இதை எல்லாம் ஆதாரமா வெளியிட முடியுமா இவிங்கிளுக்கு தெரிஞ்சது ஏகாதிபத்தியம் முதலாளித்துவம் எல்லாம் தான் அதப்பயன்படுத்தி திட்டுனா போதாதா அனாலும் இவர்களின் போராட்டம் நியாயமானது ஏனென்றால் எல்லா தனியார் கல்லூரிகளும் இப்படித்தான் இருக்கின்றன இவகளுக்கு தெரிஞ்சது இண்டஸும் லார்டு அய்யப்பாவும் இன்னும் நிறய கல்லூரிகள் இது போல இருக்குது …..

  5. //அரசின் அடியாளாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கியவர்,//

    இந்த வாக்கியத்தில் இருந்த என்பதற்குப் பதிலாக இருந்து என்று வர வேண்டும். ஒரே ஒரு எழுத்து மாறினால், ஒட்டுமொத்த அர்த்தமே மாறிவிடுகிறது.

  6. We need to pro-actively find out all such colleges in TN, prepare a list and then take it up with higher authorities.
    There may be some who are friendly with DMK; Vinavu won’t dare to accuse them, will they?

Leave a Reply to p.joseph பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க