privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விசைதாப்பேட்டை சாய் இன்ஸ்டியூட் சாயம் வெளுக்கப்பட்டது

சைதாப்பேட்டை சாய் இன்ஸ்டியூட் சாயம் வெளுக்கப்பட்டது

-

சென்னை-  சைதாப்பேட்டையில் சாய் இன்ஸ்டிட்யூட் என்ற பெயரில் போர்ஜரி கல்வி நிறுவனம் – தோலுரித்தது பு.மா.இ.மு-வின் போராட்டம்!

போர்ஜரி சாய் இன்ஸ்டிட்யூட்
போர்ஜரி சாய் இன்ஸ்டிட்யூட்

ன்றைய சூழலில் பெரும்பான்மை மாணவர்களுக்கு அரசுக் கல்வி மறுக்கப்படுகிறது. இதனாலேயே ஏழைகளும் நடுத்தர வர்க்கமும் தமது வாரிசுகளின் கல்விக்காக தனியார் கல்வி நிறுவனங்களிடம் சொத்துபத்துகளை விற்று கடனாளியாகி வருகிறார்கள்.

இதை வைத்து பல லட்சம் செலவு செய்து பொறியியல் மருத்துவம் படிக்க முடியாத நடுத்தர, ஏழை மாணவர்களிடம் குறுகிய காலத்தில் வேலை என்ற ஆசையைக் காட்டி பல சிறிய போர்ஜரி ( 420 ) கல்வி நிறுவனங்கள் பெருகி மோசடி செய்து வருகின்றன. இந்த வகை 420 கல்வி நிறுவனங்களை  புரிந்துகொள்ள ஒரு உதாரணம்தான் சைதாப்பேட்டையில் இயங்கி வரும் சாய் இண்டர்நேஷ்னல் இன்ஸ்ட்யூட் ஆப் கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட்.

சாய் இன்ஸ்டிட்யூட்
பெரிய கல்வி நிறுவனம் போன்ற மாயை

பெயரில் இன்டர்நேஷனல் இருந்தாலும் அது உண்மையில் ஒரு பாழடைந்த மடமே. கூடவே இன்ஸ்ட்யூட், ஹோட்டல், மேனேஜ்மெண்ட் என்று பெரிய கல்வி நிறுவனம் போல காட்டிக் கொண்டாலும் நேரில் பார்க்கும்போது பெட்டிக்கடை போலவே இருக்கிறது.

420 சாய் இன்ஸ்ட்யூட் பற்றி ஓர் அறிமுகம்

2004-ம் ஆண்டு குறைந்த மாணவர்களை வைத்துத் தொடங்கியதுதான் இந்த சாய் இன்ஸ்டிடியூட்.  இந்த நிறுவனத்தின் முதலாளி வினோத் தன்னை சி.இ.ஓ என்று பந்தாவாக கூப்பிடும் படி ஆணை போட்டிருந்தாலும் இவர் ஏதோ ஒரு டூபாக்கூர் ஒரு வருட டிப்ளமோவை ‘முடித்து’ விட்டு இந்த நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் ஒரு கட்டிடத்தின் மாடியில் பெட்டிக் கடை அளவு இடத்தில் 4 தடுப்புகள் வைத்து அதை 4 வகுப்பறைகளாக்கி, 350-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏமாற்றி வருகிறார் இந்த இன்டர்நேஷனல் சி.இ.ஓ.

சாய் இன்ஸ்டிட்யூட் ஃபோர்ஜரி
தி.நகரில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் வைத்து மாணவர்களை சேர்ப்பது;

மாணவர் சேர்க்கை இங்கு கிடையாது. இந்த பெட்டிக்கடையைப் பார்த்தால் எந்த மாணவர் வந்து சேருவார். எல்லா தனியார் கல்வி நிறுவன ஃபிராடுகளைப் போல தி.நகரில் உள்ள ‘கார்ப்பரேட்’ அலுவலகத்தில் வைத்து மாணவர்களை சேர்த்து விட்டு பிறகு  பெட்டிக் கடையில் தள்ளிவிடுவார்கள்.

மாணவர் சேர்க்கையின் போது சி.இ.ஓ மனைவி பேசும்போது பார்க்க வேண்டுமே! ஒரு மாணவர் அதை விவரித்தார்:

“ஹாஸ்டல் வசதி, இந்தி வகுப்பு, பிரெஞ்சு வகுப்பு, ஆங்கில வகுப்புகள் என எல்லா வசதியும் இருக்கிறதுன்னு அந்தம்மா சொன்னாங்க சார், ஆனா அதெல்லாம் இங்க இருக்கானு கேக்காம ஏமாந்துட்டேன் சார்’’ என்றார்.

சாய் இன்ஸ்டிட்யூட் - ஃபோர்ஜரி
பி.எஸ்.சி-யை தொலைதூரக்கல்வியின் மூலம் நடத்திக் கொண்டு, மாணவர்களிடம் இது பாரதியார் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்குகிறது என்று பொய்யாகக் கூறியிருக்கின்றனர்.

அந்த இன்ஸ்டியூட்டில் பட்டய இரண்டாண்டு படிப்பை (டிப்ளமோ கோர்ஸ்) 2007- ல் தொடங்கியிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து 2013-ல் பி.எஸ்சி ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ்சையும் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். பி.எஸ்.சி-யை தொலைதூரக்கல்வியின் மூலம் நடத்திக் கொண்டு, மாணவர்களிடம் இது பாரதியார் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்குகிறது என்று பொய்யாகக் கூறி ஆண்டுக்கு 1 லட்சம் வரை பயிற்சிக்கட்டணம் வாங்கி மாணவர் பலரை ஏமாற்றியிருக்கிறார்.

அது மட்டுமில்லாமல், +2 பெயிலான மாணவர்களுக்கும்  பி.எஸ்.சி ஹோட்டல் மேனேஜ்மெண்ட்டில் சேர்த்திருக்கிறார். இப்படி எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமலேயே சட்டத்துக்கு புறம்பாக ஏமாற்றுவது தெரிந்து ஒரு மாணவர் தனது  டி.சி.யை திருப்பிக் கேட்க அதற்கு 22,500 முதல் 45,000 கட்டணம் கட்டித்தான் வாங்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

டிப்ளமோ கோர்ஸுக்கு ரூ 20,000 (செமஸ்டருக்கு), பி.எஸ்.சி-க்கு (செமஸ்டருக்கு) ரூ 22,500 பெறுவது, யூனிபார்முக்கு ரூ 3,000 என  தன் விருப்பம் போல் வாங்கியிருக்கிறார் இந்த இன்டர்நேஷனல் 420 சி.இ.ஓ.

இதை தாங்கிக் கொள்ள முடியாத மாணவர்கள், வகுப்புக்கு வராமலும், விரக்தியுடனும் அலைந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணிக்கு வந்த புகாரால் வினோத் எனும் குள்ளநரியின் சாயம் வெளுத்தது.

சாய் இன்ஸ்டிட்யூட் - ஃபோர்ஜரி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணிக்கு வந்த புகாரால் வினோத் எனும் குள்ளநரியின் சாயம் வெளுத்தது.

முதலில் பாதிக்கப்பட்ட மாணவனின் பிரச்சனையை தீர்க்கக் கோரி பு.மா.இ.மு-ல் இருந்து முறையாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. இதற்கு பதில் வரவில்லை.

பிறகு அந்த மாணவன் நிர்வாகத்திடம் சென்று கேட்டபோது, “பு.மா.இ.மு-டம் அனைத்தையும் பேசிவிட்டோம், அவர்கள் சரியாக நடத்துவதாக எங்களை பாராட்டிவிட்டார்கள், அதனால் நீ நாங்கள் கேட்கும் பணத்தை கட்டிவிட்டுதான் சான்றிதழ்பெற முடியும்” என்று 420-க்கே உரிய முறையில் பேசி இருக்கிறார் வினோத்.

இதன் தொடர்ச்சியாக பு.மா.இ.மு.வின் சென்னைக்கிளை தோழர்கள் அந்த இன்ஸ்டிடியூட்டுக்கு நேரில் சென்றனர். இந்த ஃபிராடு வினோத்தை பார்க்க அங்கே பல்வேறு தடைகளை பந்தாவாக போட்டிருந்தார்கள். தோழர்கள் அதை தூக்கிவிட்டு கல்வி முதலாளியை சந்தித்திருக்கிறார்கள்.

சாய் இன்ஸ்டிட்யூட் - ஃபோர்ஜரி
பல மாணவர்கள் அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களும் பு.மா.இ.மு.வுடன் இணைந்து போராட தயாரானார்கள்

தோழர்கள் “படிப்பை தொடர விருப்பம் இல்லாத லோகநாதனுக்கு டி.சியை கொடுக்காமல், எங்களைப் பற்றியும் தவறாக பேசியது ஏன்? அவரது சான்றிதழை முடக்கி வைக்க உங்களுக்கென்ன அதிகாரம் இருக்கிறது” என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு அவர், “இதுதான் எங்கள் நிறுவனத்தின் ரூல்ஸ். அதன்படிதான் நாங்கள் நடக்கிறோம். பணம் கட்டிவிட்டு டி.சியை வாங்கிக் கொள்ளுங்கள்” என்று திமிராக பேசியதுடன் மட்டுமல்லாமல் சென்ற தோழர்களிடம் “பு.மா.இ.மு என்ன அமைப்பு, உங்களுக்கு ஐ.டி கார்டு இருக்கா’’ என்றெல்லாம் ‘ரூல்ஸ்’ பேசியிருக்கிறார்.

சாய் கேட்டரிங் இன்ஸ்டிடியூட்
சாய் கேட்டரிங் இன்ஸ்டிடியூட்டின் மோசடித்தனத்தையும் நிறுவன முதலாளியின் சட்டவிரோத போக்கையும் அம்பலப்படுத்தும் விதமாக சுவரொட்டி.

“உம்மை போராட்டக் களத்தில் சந்திக்கிறோம்’’ என்று தோழர்கள் வெளியேறினர். அதன் பின்பு பாதிக்கப்பட்ட பல மாணவர்களும் பு.மா.இ.மு.வுடன் இணைந்து போராட தயாரானார்கள்.

முதலில்,  சாய் கேட்டரிங் இன்ஸ்டிடியூட்டின் மோசடித்தனத்தையும் நிறுவன முதலாளியின் சட்டவிரோத போக்கையும் அம்பலப்படுத்தும்  சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டது.

அந்த போஸ்டர் மாணவர்களின் கண்களில் பட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று எண்ணி அதை எல்லாவற்றையும் கிழித்திருக்கிறார்கள். அவர்களின் கைக்கு எட்டாத போஸ்டர்களை அப்படியே விட்டுவிட்டு இருக்கிறார்கள். அதை கண்டுவிட்ட சில மாணவர்கள் போட்டோ பிடித்து வாட்ஸ் அப், பேஸ்புக் என்று அனைத்திலும் பரப்பியிருக்கிறார்கள்.

மாணவர்கள் சந்தோஷத்துடன் தோழர்களுக்கு நன்றி கூறியதுடன் இல்லாமல் “அண்ணே இவன சும்மா விடக்கூடாதுண்ணே, எங்க பணத்த பிடுங்கினது மட்டுமில்லாம எங்க டி.சி. யையும் தரமாட்ரான்னே.. அவன் டி.சி.யை கொடுத்துட்டான்னா நாங்க வேற எங்கயாவது கவர்மெண்ட் கல்லூரியிலாவது போய் சேருவோம். நாங்க உங்க கூட கடைசி வரைக்கும் போராடுவோம்’’ என்று  உற்சாகத்துடன் கூறினர்.

 போஸ்டர் கிழிப்பு
போஸ்டர் கிழிப்பு

சாய் நிர்வாகம் அங்கு ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்தாலும் தோழர்கள் அசராமல் திரும்ப திரும்ப ஒட்டினார்கள். பு.மா.இ.முவுக்கு போன் செய்து பண வலைகளில் விழ வைக்கும் முயற்சிகளில் அவர்கள் மானங்கெட்டு தோற்றுப்போனது தனிக்கதை.

பு.மா.இ.முவின் உறுதியான போராட்டத்தைப் பார்த்து ஒரு லோகநாதன் மட்டுமல்ல, இந்த சுவரொட்டியால் அனைத்து மாணவர்களும் போர்க்கொடி தூக்கி விடுவார்களோ என்று எண்ணியிருப்பார்கள் போல.

உடனே லோகநாதனுக்கு போன் செய்து, “தம்பி நீங்க உடனே வந்து டி.சி. யை வாங்கிக்கோ” என்று கூறியிருக்கிறார் வினோத். அவரும் எந்த வித கட்டணமும் கட்டாமல் வாங்கி விட்டார். அவரை தொடர்ந்து 4 மாணவர்களுக்கு மேல் அதேபோல் பணம் எதுவும் கட்டாமல் டி.சி யை வாங்கியிருக்கிறார்கள்.

லோகநாதன் என்ற ஒரு மாணவனிடம் தொடங்கிய இப்பிரச்சினை அனைத்து மாணவர்களிடமும் ஒரு பாரிய விழிப்புணர்வை கற்றுத் தந்திருக்கிறது.

sai-rsyf-meeting-5இது வெறும் சாய் இன்ஸ்டிட்யூட்டோடு முடிந்து போகும் பிரச்சினையல்ல. நாடு முழுவதும் இது போன்று ஆயிரக்கணக்கில் பெட்டிக் கடைகளை திறந்து வைத்து 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் பணம் பறிக்கும் தனியார் கல்விக் கொள்ளையர்களை ஒழிக்காதவரை ஓயாது இந்த போராட்டம்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளஞர் முன்னணி,
தமிழ்நாடு