privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்கல்விக் கொள்ளையருக்காக தினத்தந்தியின் கண்காட்சி

கல்விக் கொள்ளையருக்காக தினத்தந்தியின் கண்காட்சி

-

கல்விக் கண்காட்சி : தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு மாமா வேலை பார்க்கும் பத்திரிகைகள்!

திப்பெண் எடுக்கும் எந்திரங்களாக்கப்பட்டுவிட்ட மாணவர்கள் +2 தேர்வு முடிந்துவிட்டதே என்று நிம்மதி பெருமூச்சு விடமுடிவதில்லை. +2 வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தாலும் மேல்படிப்பு படிக்க என்ன செய்வது? விரும்பிய படிப்பை காசு இல்லாமல் படிக்க முடியுமா? என்று எழும் பல கேள்விக்கணைகளை எதிர்கொள்ள முடியாமல் ஏழை, நடுத்தர பிரிவு மாணவர்களும், பெற்றோர்களும் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இவை எதைப்பற்றியும் கவலைப்படாத தனியார் கல்விக் கொள்ளையர்கள் பிள்ளை பிடிக்கும் வேலையை படுஜோராக செய்து வருகிறார்கள்.

தனியார் கல்விக் கொள்ளை
தனியார் கல்விக் கொள்ளையர்களின் பிள்ளை பிடிக்கும் வேலை

தனியார் பள்ளிகளுக்கு பிள்ளை பிடித்துக்கொடுக்கும் வேலையை கல்விச் சேவை என்ற பெயரில் தினத்தந்தி, தினகரன் போன்ற மஞ்சள் மசாலா பத்திரிக்கைகள் போட்டி போட்டுக்கொண்டு செய்து வருகின்றன.

இந்த கல்விக்கண்காட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடும்போது இப்படி எழுதுகிறது தினத்தந்தி ’மாபெரும் கல்விச் சேவையில் ஈடுபட்டுவரும் தினத்தந்தி மாணவர்கள் சரியான கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுக்க கல்விக் கண்காட்சியை நடத்துகிறது’ என்று. தினத்தந்தியும் பிற பத்திரிகைகளும் செய்யும் கல்விச் சேவை நமக்குத் தெரியாதா என்ன?

தனியார் கல்விக் கொள்ளையர்
தினத்தந்தியும் பிற பத்திரிகைகளும் செய்யும் கல்விச் சேவை நமக்குத் தெரியாதா என்ன?

கல்விக் கொள்ளையர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு போர்ஜரியான, போணியாகாத கல்வி நிறுவனங்களையும், ஆகா, ஓகோ, சூப்பர் கல்வி நிறுவனங்கள் என புகழ்ந்து பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரம் வெளியிடும் யோக்கிய சிகாமணிகள்தானே.

10 வது, 12 வது தேர்வுக்கு முன்னாள் மாணவர்களை கூட்டி வைத்து, “வெற்றி நிச்சயம், ஜெயித்துக்காட்டுவோம்” என்று மந்திரித்து விடுவது, பின்னர் தேர்வு மாதிரி வினா – விடை வெளியிடுவது, வாராவாரம் மாணவர் ஸ்பெஷல், கல்வி மலர், கல்வி மணி வெளியிடுவது, பொங்கல் மலர், தீபாவளி மலரில் தனியார் கல்லூரிகளின் விளம்பரம் வெளியிடுவது, தேர்வு முடிந்ததும் கல்வி வழிகாட்டி என சிறப்பு புத்தகம் வெளியிடுவது, இப்படியெல்லாம் புரோக்கர் வேலை பார்த்தவர்கள் இறுதியாக மாணவர்களை கல்விக் கொள்ளையர்களிடம் அடகு வைப்பதற்கு கல்விக்கண்காட்சியை நடத்துகிறார்கள். இதில் என்ன தவறு என்று சிலர் புத்திசாலித்தனமாக கேட்கலாம். இதெல்லாம் சேவைதான். ஆனால் யாருக்கு மாணவர்களுக்கா? கல்வி முதலாளிகளுக்கா?

தனியார் கல்விக் கொள்ளையர்
இதெல்லாம் சேவைதான். ஆனால் யாருக்கு மாணவர்களுக்கா? கல்வி முதலாளிகளுக்கா?

தினகரன், இந்து, தினத்தந்தி போன்ற பத்திரிகைகள் தனியார் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கல்விக் கண்காட்சியை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போட்டி போட்டுக்கொண்டு நடத்தி வருகிறார்கள்.

‘டாக்டர்’ எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்
’கூவம்கொண்டான்’ என்ற பட்டப்பெயர் பெற்ற ஏ.சி.சண்முகத்தின் ‘டாக்டர்’ எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்

நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடந்து முடிந்த கல்விக் (விற்பனை) கண்காட்சி பற்றிய சில அனுபவங்களை இங்கே தொகுத்துத் தருகிறோம்.

எம்.ஜி.ஆரின் முன்னாள் அடியாளும், ’(அ)நீதிக்’ கட்சியின் இந்நாள் தலைவரும், மதுரவாயலில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து ’கூவம்கொண்டான்’ என்ற பட்டப்பெயர் பெற்றவருமான ஏ.சி.சண்முகத்தின் ‘டாக்டர்’ எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகமும், ‘தினத்தந்தி’ யும் இணைந்து இந்த கண்காட்சியை நடத்தியுள்ளன.

பூந்தமல்லி, தாம்பரம், போரூர் பகுதிகளில் இருந்து இலவச பஸ்சேவை. வண்ண விளக்குகள் ஜொலிக்க 100-க்கும் மேற்பட்ட அரங்குகள். ஆள்பிடிக்க கல்லூரி விரிவுரையாளர்கள் விற்பனை பிரதிநிதியைப்போல கையில் வண்ண அட்டைகளுடன் வரவேற்கிறார்கள். ஒரு காலத்தில் ‘’எழுத்தறிவித்தவன் இறைவன்’’ என்பார்கள். ஆனால் இன்றோ லாப வெறிபிடித்த தனியார் கல்லூரி முதலாளிகள், இறைவனே ஆனாலும் ஆள்பிடித்துக்கொடுத்தால்தான் வேலை என்கிறார்கள்.

தனியார் கல்விக் கொள்ளை
உலகளாவிய பிசினெஸ்ஸாக கல்வி மாற்றப்பட்டுள்ளது

எஸ்.ஆர்.எம், வேல்ஸ், மீனாட்சி, என எல்லா கல்வி முதலைகளும் கண்காட்சியில் அணிவகுத்திருந்தன.

முதலில் நாம் பார்த்தது எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம். முழுக்க விதவிதமான விளக்குகள் அமைத்து, ஐந்து நட்சத்திர விடுதியின் வரவேற்பறை போல அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. விரிவுரையாளர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் அரங்கில் குவிந்திருந்தனர்.

அங்கிருந்த ஒரு விரிவுரையாளரிடம் பேச்சு கொடுத்தோம். நம்மைப் பார்த்தவுடன் “என்ன கோர்ஸ் சேரப் போறீங்க” என்று ரெப் பேசுவதைப் போல பேச்சைத் தொடங்கினார். நாம், “இன்ஜினியரிங்” என்றவுடன் அதுபற்றி கூற ஆரம்பித்தார்.

மெதுவாக நாம் அவரிடம் “சார், நாங்க பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள். தப்பா எடுத்துக்காதீங்க… ஒரு ஆசிரியர் வந்து மாணவர்களை கல்லூரியில் சேர்க்கிறதுக்காக, இப்படி நின்னு பேசுவதை பார்க்கும்போது எங்களுக்கு கஷ்டமா இருக்கு’’ என்று கூறியவுடன், அவர் வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார்.

தனியார் கல்விக் கொள்ளை
எல்லா கல்வி முதலைகளும் கண்காட்சியில் அணிவகுத்திருந்தன.

“என்னங்க செய்யறது, போகலன்னு சொன்னா, வேலைய விட்டு தூக்கிடுவாங்க, எந்த கேள்வியும் கேட்க முடியாது. நான் வேலைய விட்டு போனா அதே வேலைய இன்னும் குறைவான சம்பளத்தில் செய்யறதுக்கு நிறைய பேர் இருக்காங்க அப்படிங்கிற தைரியத்துலதான் இப்படிச் செய்யறாங்க’’.

‘’ஏன் மத்த சார்ங்களோட சேர்ந்து கேட்க முடியாதா’’ என்று கேட்டோம்.

‘’அப்படியெல்லாம் அனுமதிக்க மாட்டாங்க, தனியார் கல்லூரிகள்ல சங்கமெல்லாம் ஆரம்பிக்க முடியாது’’ என்றார்.

எந்த உரிமையும் இல்லாமல், வெறும் பாடம் சொல்லிக் கொடுக்கும் இயந்திரங்களாக வைத்து, பேராசிரியர்களை, விரிவுரையாளர்களை சுரண்டுவதுதான் தனியார் பொறியியல் கல்லூரிகளின் உண்மையான முகம்.

டானிஷ் அகமத் பொறியியல் கல்லூரி
பலூன் கட்டி அழகுபடுத்தல்

டேனிஷ் அகமது பொறியியல் கல்லூரி பலூன் கட்டி அழகுபடுத்தப்பட்டிருந்தது.

பெரி இன்ஸ்டிடியூட் என்ற கல்லூரியின் சார்பாக, பொது அறிவு வினாக்களைக் கேட்டு பதில் சொல்பவர்களுக்கு பரிசு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆள்பிடிக்கும் வேலைக்கு ஆயிரத்தெட்டு டெக்னிக்குகளை கைவசம் வைத்துள்ளார்கள்.

பெரி இன்ஸ்டிட்யூட்
ஆள்பிடிக்கும் வேலைக்கு ஆயிரத்தெட்டு டெக்னிக்குகள்

இப்படி ஒவ்வொரு கல்லூரியும் பல்வேறு ஜிகினா வேலைகளைக் காட்டிக் கொண்டிருந்ததை அரங்கம் முழுக்க பார்க்க முடிந்தது.

பொறியியல் படிப்புக்கு மாணவர் எண்ணிக்கை குறைவதை உணர்ந்த தனியார் கல்வி முதலாளிகள் இப்போது புதுசு புதுசாக பல்வேறு கோர்ஸ்களை இறக்குமதி செய்து அதன் மூலம் மாணவர்களுக்கு பொறி வைப்பதையும் பார்க்க முடிந்தது.

இறக்குமதி படிப்புகள்
புதுசு புதுசாக பல்வேறு கோர்ஸ்கள் இறக்குமதி

பிராக்டிகலை கற்றுக் கொடுப்பதை கல்லூரி நிர்வாகம் பொறுப்பெடுத்து செய்வதில்லை. அதற்கு பதிலாக, டி.வி.எஸ் போன்ற கம்பெனிகளுக்கு சம்பளமில்லா தொழிலாளர்களாக மாணவர்கள் அனுப்பப்பட்டு, அதை பயிற்சி என்று கூறி அதற்கும் நிர்வாகம் கட்டணம் வசூலிக்கும் கொடுமையைப் பார்க்க முடிந்தது.

பிலிப்பைன்ஸ், ரசியாவுக்கு சென்று மருத்துவப் படிப்பு படிக்க குறைவான கட்டணம் என்று கூறி நிறைய ஏஜென்சிகள் கண்காட்சியில் கடை விரித்திருந்தன. உலகளாவிய பிசினெஸ்ஸாக கல்வி மாற்றப்பட்டுள்ளது. எந்தளவுக்கு மாணவர்களையும், பெற்றோர்களையும் இளிச்சவாயர்களாக இந்த தனியார் கல்லூரிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றன?

தனியார் கல்விக் கொள்ளையர்
ரிசல்ட் இல்லையென்றால் மாணவர்களை குறை கூறுவது என்பதை தனியார் கல்லூரிகள் ஒரு தொழில் நுணுக்கமாக செய்கின்றன.

ஒரு சில கல்லூரி நிர்வாகிகளிடம், “பொறியியல் படிப்பு முடித்த மாணவர்கள் 98 லட்சம் பேர் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளனரே, எதை நம்பி நாங்கள் சேருவது” என்று கேட்டோம்.

அது மாணவர்களுடைய திறமையின்மை என்றுதான் பெரும்பாலும் கூறுகின்றனர். சேர்க்கும் போது, எப்பேர்ப்பட்ட மாணவரையும் திறமையானவராக மாற்றி விடுவோம் என்று பணம் கறப்பதற்காக பொய் கூறுவது, பிறகு ரிசல்ட் இல்லையென்றால் மாணவர்களை குறை கூறுவது என்பதை தனியார் கல்லூரிகள் ஒரு தொழில் நுணுக்கமாக செய்கின்றன.

தனியார் கல்விக் கொள்ளை
கல்வி தனியார்மயத்தின் ஒட்டுமொத்த பரிமாணத்தையும் கண்முன்னே காட்டும் ஒரு நிகழ்வாகத்தான் இந்தக் கல்விக் கண்காட்சி இருக்கிறது.

நுனி நாக்கு ஆங்கிலம், ஆங்கில கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நடை, உடை, பாவனைகள், செயற்கையான மரியாதை, வாயைத் திறந்தால் பொய் இவற்றை மூலதனமாக வைத்துதான் மாணவர்களை தங்கள் கல்லூரிக்கு பிடிக்கும் வேலையை எல்லா தனியார் கல்லூரிகளும் செய்து கொண்டிருந்தன.

கல்வி என்னும் உன்னதமான சேவையை, இன்று அரசின் ஆசியோடு தனியார் கல்வி முதலாளிகள் கடைவிரிக்கும் ஒரு பொருளாக மாற்றிவிட்ட அவலத்தையும், கல்வி தனியார்மயத்தின் ஒட்டுமொத்த பரிமாணத்தையும் கண்முன்னே காட்டும் ஒரு நிகழ்வாகத்தான் இந்தக் கல்விக் கண்காட்சி இருக்கிறது.

தனியார் கல்விக் கொள்ளை
நுனி நாக்கு ஆங்கிலம், ஆங்கில கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நடை, உடை, பாவனைகள், செயற்கையான மரியாதை, வாயைத் திறந்தால் பொய்

கொள்ளையடிக்கும் தனியார் கல்லூரிகளை, தனியார்மயக் கல்விக் கொள்கையை, அதை நடைமுறைப்படுத்தும் இந்த அரசை அடித்து நொறுக்காமல், உன்னதமான சேவையான கல்வியை அனைவரும் இலவசமாக பெற முடியாது.

தனியார் கல்விக் கொள்ளை
அரசுக்கல்வி தரமாகக் கிடைக்கப் போராடுவதுதான் ஒரே மாற்றுவழி.

இனியும் இப்படிப்பட்ட கல்விக்கண்காட்சிகளுக்கு சென்று ஏமாறப்போகிறோமா? பெற்றோர்களே, மாணவர்களே சிந்தித்துப்பாருங்கள்…. மாற்று இல்லை என்று நினைப்பதை விட்டொழியுங்கள். அரசுக்கல்வி தரமாகக் கிடைக்கப் போராடுவதுதான் ஒரே மாற்றுவழி.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.