privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்கல்விக் கொள்ளையருக்காக தினத்தந்தியின் கண்காட்சி

கல்விக் கொள்ளையருக்காக தினத்தந்தியின் கண்காட்சி

-

கல்விக் கண்காட்சி : தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு மாமா வேலை பார்க்கும் பத்திரிகைகள்!

திப்பெண் எடுக்கும் எந்திரங்களாக்கப்பட்டுவிட்ட மாணவர்கள் +2 தேர்வு முடிந்துவிட்டதே என்று நிம்மதி பெருமூச்சு விடமுடிவதில்லை. +2 வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தாலும் மேல்படிப்பு படிக்க என்ன செய்வது? விரும்பிய படிப்பை காசு இல்லாமல் படிக்க முடியுமா? என்று எழும் பல கேள்விக்கணைகளை எதிர்கொள்ள முடியாமல் ஏழை, நடுத்தர பிரிவு மாணவர்களும், பெற்றோர்களும் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இவை எதைப்பற்றியும் கவலைப்படாத தனியார் கல்விக் கொள்ளையர்கள் பிள்ளை பிடிக்கும் வேலையை படுஜோராக செய்து வருகிறார்கள்.

தனியார் கல்விக் கொள்ளை
தனியார் கல்விக் கொள்ளையர்களின் பிள்ளை பிடிக்கும் வேலை

தனியார் பள்ளிகளுக்கு பிள்ளை பிடித்துக்கொடுக்கும் வேலையை கல்விச் சேவை என்ற பெயரில் தினத்தந்தி, தினகரன் போன்ற மஞ்சள் மசாலா பத்திரிக்கைகள் போட்டி போட்டுக்கொண்டு செய்து வருகின்றன.

இந்த கல்விக்கண்காட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடும்போது இப்படி எழுதுகிறது தினத்தந்தி ’மாபெரும் கல்விச் சேவையில் ஈடுபட்டுவரும் தினத்தந்தி மாணவர்கள் சரியான கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுக்க கல்விக் கண்காட்சியை நடத்துகிறது’ என்று. தினத்தந்தியும் பிற பத்திரிகைகளும் செய்யும் கல்விச் சேவை நமக்குத் தெரியாதா என்ன?

தனியார் கல்விக் கொள்ளையர்
தினத்தந்தியும் பிற பத்திரிகைகளும் செய்யும் கல்விச் சேவை நமக்குத் தெரியாதா என்ன?

கல்விக் கொள்ளையர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு போர்ஜரியான, போணியாகாத கல்வி நிறுவனங்களையும், ஆகா, ஓகோ, சூப்பர் கல்வி நிறுவனங்கள் என புகழ்ந்து பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரம் வெளியிடும் யோக்கிய சிகாமணிகள்தானே.

10 வது, 12 வது தேர்வுக்கு முன்னாள் மாணவர்களை கூட்டி வைத்து, “வெற்றி நிச்சயம், ஜெயித்துக்காட்டுவோம்” என்று மந்திரித்து விடுவது, பின்னர் தேர்வு மாதிரி வினா – விடை வெளியிடுவது, வாராவாரம் மாணவர் ஸ்பெஷல், கல்வி மலர், கல்வி மணி வெளியிடுவது, பொங்கல் மலர், தீபாவளி மலரில் தனியார் கல்லூரிகளின் விளம்பரம் வெளியிடுவது, தேர்வு முடிந்ததும் கல்வி வழிகாட்டி என சிறப்பு புத்தகம் வெளியிடுவது, இப்படியெல்லாம் புரோக்கர் வேலை பார்த்தவர்கள் இறுதியாக மாணவர்களை கல்விக் கொள்ளையர்களிடம் அடகு வைப்பதற்கு கல்விக்கண்காட்சியை நடத்துகிறார்கள். இதில் என்ன தவறு என்று சிலர் புத்திசாலித்தனமாக கேட்கலாம். இதெல்லாம் சேவைதான். ஆனால் யாருக்கு மாணவர்களுக்கா? கல்வி முதலாளிகளுக்கா?

தனியார் கல்விக் கொள்ளையர்
இதெல்லாம் சேவைதான். ஆனால் யாருக்கு மாணவர்களுக்கா? கல்வி முதலாளிகளுக்கா?

தினகரன், இந்து, தினத்தந்தி போன்ற பத்திரிகைகள் தனியார் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கல்விக் கண்காட்சியை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போட்டி போட்டுக்கொண்டு நடத்தி வருகிறார்கள்.

‘டாக்டர்’ எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்
’கூவம்கொண்டான்’ என்ற பட்டப்பெயர் பெற்ற ஏ.சி.சண்முகத்தின் ‘டாக்டர்’ எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்

நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடந்து முடிந்த கல்விக் (விற்பனை) கண்காட்சி பற்றிய சில அனுபவங்களை இங்கே தொகுத்துத் தருகிறோம்.

எம்.ஜி.ஆரின் முன்னாள் அடியாளும், ’(அ)நீதிக்’ கட்சியின் இந்நாள் தலைவரும், மதுரவாயலில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து ’கூவம்கொண்டான்’ என்ற பட்டப்பெயர் பெற்றவருமான ஏ.சி.சண்முகத்தின் ‘டாக்டர்’ எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகமும், ‘தினத்தந்தி’ யும் இணைந்து இந்த கண்காட்சியை நடத்தியுள்ளன.

பூந்தமல்லி, தாம்பரம், போரூர் பகுதிகளில் இருந்து இலவச பஸ்சேவை. வண்ண விளக்குகள் ஜொலிக்க 100-க்கும் மேற்பட்ட அரங்குகள். ஆள்பிடிக்க கல்லூரி விரிவுரையாளர்கள் விற்பனை பிரதிநிதியைப்போல கையில் வண்ண அட்டைகளுடன் வரவேற்கிறார்கள். ஒரு காலத்தில் ‘’எழுத்தறிவித்தவன் இறைவன்’’ என்பார்கள். ஆனால் இன்றோ லாப வெறிபிடித்த தனியார் கல்லூரி முதலாளிகள், இறைவனே ஆனாலும் ஆள்பிடித்துக்கொடுத்தால்தான் வேலை என்கிறார்கள்.

தனியார் கல்விக் கொள்ளை
உலகளாவிய பிசினெஸ்ஸாக கல்வி மாற்றப்பட்டுள்ளது

எஸ்.ஆர்.எம், வேல்ஸ், மீனாட்சி, என எல்லா கல்வி முதலைகளும் கண்காட்சியில் அணிவகுத்திருந்தன.

முதலில் நாம் பார்த்தது எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம். முழுக்க விதவிதமான விளக்குகள் அமைத்து, ஐந்து நட்சத்திர விடுதியின் வரவேற்பறை போல அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. விரிவுரையாளர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் அரங்கில் குவிந்திருந்தனர்.

அங்கிருந்த ஒரு விரிவுரையாளரிடம் பேச்சு கொடுத்தோம். நம்மைப் பார்த்தவுடன் “என்ன கோர்ஸ் சேரப் போறீங்க” என்று ரெப் பேசுவதைப் போல பேச்சைத் தொடங்கினார். நாம், “இன்ஜினியரிங்” என்றவுடன் அதுபற்றி கூற ஆரம்பித்தார்.

மெதுவாக நாம் அவரிடம் “சார், நாங்க பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள். தப்பா எடுத்துக்காதீங்க… ஒரு ஆசிரியர் வந்து மாணவர்களை கல்லூரியில் சேர்க்கிறதுக்காக, இப்படி நின்னு பேசுவதை பார்க்கும்போது எங்களுக்கு கஷ்டமா இருக்கு’’ என்று கூறியவுடன், அவர் வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார்.

தனியார் கல்விக் கொள்ளை
எல்லா கல்வி முதலைகளும் கண்காட்சியில் அணிவகுத்திருந்தன.

“என்னங்க செய்யறது, போகலன்னு சொன்னா, வேலைய விட்டு தூக்கிடுவாங்க, எந்த கேள்வியும் கேட்க முடியாது. நான் வேலைய விட்டு போனா அதே வேலைய இன்னும் குறைவான சம்பளத்தில் செய்யறதுக்கு நிறைய பேர் இருக்காங்க அப்படிங்கிற தைரியத்துலதான் இப்படிச் செய்யறாங்க’’.

‘’ஏன் மத்த சார்ங்களோட சேர்ந்து கேட்க முடியாதா’’ என்று கேட்டோம்.

‘’அப்படியெல்லாம் அனுமதிக்க மாட்டாங்க, தனியார் கல்லூரிகள்ல சங்கமெல்லாம் ஆரம்பிக்க முடியாது’’ என்றார்.

எந்த உரிமையும் இல்லாமல், வெறும் பாடம் சொல்லிக் கொடுக்கும் இயந்திரங்களாக வைத்து, பேராசிரியர்களை, விரிவுரையாளர்களை சுரண்டுவதுதான் தனியார் பொறியியல் கல்லூரிகளின் உண்மையான முகம்.

டானிஷ் அகமத் பொறியியல் கல்லூரி
பலூன் கட்டி அழகுபடுத்தல்

டேனிஷ் அகமது பொறியியல் கல்லூரி பலூன் கட்டி அழகுபடுத்தப்பட்டிருந்தது.

பெரி இன்ஸ்டிடியூட் என்ற கல்லூரியின் சார்பாக, பொது அறிவு வினாக்களைக் கேட்டு பதில் சொல்பவர்களுக்கு பரிசு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆள்பிடிக்கும் வேலைக்கு ஆயிரத்தெட்டு டெக்னிக்குகளை கைவசம் வைத்துள்ளார்கள்.

பெரி இன்ஸ்டிட்யூட்
ஆள்பிடிக்கும் வேலைக்கு ஆயிரத்தெட்டு டெக்னிக்குகள்

இப்படி ஒவ்வொரு கல்லூரியும் பல்வேறு ஜிகினா வேலைகளைக் காட்டிக் கொண்டிருந்ததை அரங்கம் முழுக்க பார்க்க முடிந்தது.

பொறியியல் படிப்புக்கு மாணவர் எண்ணிக்கை குறைவதை உணர்ந்த தனியார் கல்வி முதலாளிகள் இப்போது புதுசு புதுசாக பல்வேறு கோர்ஸ்களை இறக்குமதி செய்து அதன் மூலம் மாணவர்களுக்கு பொறி வைப்பதையும் பார்க்க முடிந்தது.

இறக்குமதி படிப்புகள்
புதுசு புதுசாக பல்வேறு கோர்ஸ்கள் இறக்குமதி

பிராக்டிகலை கற்றுக் கொடுப்பதை கல்லூரி நிர்வாகம் பொறுப்பெடுத்து செய்வதில்லை. அதற்கு பதிலாக, டி.வி.எஸ் போன்ற கம்பெனிகளுக்கு சம்பளமில்லா தொழிலாளர்களாக மாணவர்கள் அனுப்பப்பட்டு, அதை பயிற்சி என்று கூறி அதற்கும் நிர்வாகம் கட்டணம் வசூலிக்கும் கொடுமையைப் பார்க்க முடிந்தது.

பிலிப்பைன்ஸ், ரசியாவுக்கு சென்று மருத்துவப் படிப்பு படிக்க குறைவான கட்டணம் என்று கூறி நிறைய ஏஜென்சிகள் கண்காட்சியில் கடை விரித்திருந்தன. உலகளாவிய பிசினெஸ்ஸாக கல்வி மாற்றப்பட்டுள்ளது. எந்தளவுக்கு மாணவர்களையும், பெற்றோர்களையும் இளிச்சவாயர்களாக இந்த தனியார் கல்லூரிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றன?

தனியார் கல்விக் கொள்ளையர்
ரிசல்ட் இல்லையென்றால் மாணவர்களை குறை கூறுவது என்பதை தனியார் கல்லூரிகள் ஒரு தொழில் நுணுக்கமாக செய்கின்றன.

ஒரு சில கல்லூரி நிர்வாகிகளிடம், “பொறியியல் படிப்பு முடித்த மாணவர்கள் 98 லட்சம் பேர் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளனரே, எதை நம்பி நாங்கள் சேருவது” என்று கேட்டோம்.

அது மாணவர்களுடைய திறமையின்மை என்றுதான் பெரும்பாலும் கூறுகின்றனர். சேர்க்கும் போது, எப்பேர்ப்பட்ட மாணவரையும் திறமையானவராக மாற்றி விடுவோம் என்று பணம் கறப்பதற்காக பொய் கூறுவது, பிறகு ரிசல்ட் இல்லையென்றால் மாணவர்களை குறை கூறுவது என்பதை தனியார் கல்லூரிகள் ஒரு தொழில் நுணுக்கமாக செய்கின்றன.

தனியார் கல்விக் கொள்ளை
கல்வி தனியார்மயத்தின் ஒட்டுமொத்த பரிமாணத்தையும் கண்முன்னே காட்டும் ஒரு நிகழ்வாகத்தான் இந்தக் கல்விக் கண்காட்சி இருக்கிறது.

நுனி நாக்கு ஆங்கிலம், ஆங்கில கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நடை, உடை, பாவனைகள், செயற்கையான மரியாதை, வாயைத் திறந்தால் பொய் இவற்றை மூலதனமாக வைத்துதான் மாணவர்களை தங்கள் கல்லூரிக்கு பிடிக்கும் வேலையை எல்லா தனியார் கல்லூரிகளும் செய்து கொண்டிருந்தன.

கல்வி என்னும் உன்னதமான சேவையை, இன்று அரசின் ஆசியோடு தனியார் கல்வி முதலாளிகள் கடைவிரிக்கும் ஒரு பொருளாக மாற்றிவிட்ட அவலத்தையும், கல்வி தனியார்மயத்தின் ஒட்டுமொத்த பரிமாணத்தையும் கண்முன்னே காட்டும் ஒரு நிகழ்வாகத்தான் இந்தக் கல்விக் கண்காட்சி இருக்கிறது.

தனியார் கல்விக் கொள்ளை
நுனி நாக்கு ஆங்கிலம், ஆங்கில கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நடை, உடை, பாவனைகள், செயற்கையான மரியாதை, வாயைத் திறந்தால் பொய்

கொள்ளையடிக்கும் தனியார் கல்லூரிகளை, தனியார்மயக் கல்விக் கொள்கையை, அதை நடைமுறைப்படுத்தும் இந்த அரசை அடித்து நொறுக்காமல், உன்னதமான சேவையான கல்வியை அனைவரும் இலவசமாக பெற முடியாது.

தனியார் கல்விக் கொள்ளை
அரசுக்கல்வி தரமாகக் கிடைக்கப் போராடுவதுதான் ஒரே மாற்றுவழி.

இனியும் இப்படிப்பட்ட கல்விக்கண்காட்சிகளுக்கு சென்று ஏமாறப்போகிறோமா? பெற்றோர்களே, மாணவர்களே சிந்தித்துப்பாருங்கள்…. மாற்று இல்லை என்று நினைப்பதை விட்டொழியுங்கள். அரசுக்கல்வி தரமாகக் கிடைக்கப் போராடுவதுதான் ஒரே மாற்றுவழி.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

  1. விசியம் என்னன்னா நீங்க புரியாம பேசறீங்க. ஒரு ௨௦ வருசத்துக்கு முன்னாடிலாம் கோட்டா லைசன்சுன்னு எக்கசக்க கெடுபிடி. அப்பெல்லாம் இந்த மாதிரி புதுபுது கோர்சுங்க படிக்க முடிஞ்ச்சிருக்குமா? மாட்டு மேய்ச்சிகிட்டு இருந்த பயலெல்லாம் தனியார்மயம் வந்ததுனாலதான் ஏசி பஸ்ல காலேஜ் போறான். உங்களேல்லாம் மாடு மேய்க்கவே விட்டுருக்கனும்.

    • இவ்வளவு நாள் யாரு இந்தியால இவ்ளோ மாற்றம் கொண்டு வந்து மக்கள முன்னேற்றுனாங்கனு தேடிகிட்டு இருந்தேன்….. இப்போ தெரிஞ்சிருச்சு…… அது நீங்கதானா பாஸு……

  2. OK…..We see what you’re saying..
    We all agree that Education has become expensive and quality is going down. This has been going on for a while.
    We all expect the author to suggest solutions to fix the system.
    What are you trying to achieve by elaborating the issue known to everyone?

    • உமா ஷங்கர்,

      தனியார்மயம், தாரளமாக்கப்பட்டால், உலகமயமான முதலாளிகளிடையே போட்டி ஏற்ப்பட்டு அதன் காரணமாக கட்டணம் குறைந்து அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் அனைத்து சேவைகளும் கிடைக்கும் என்பது தானே குண்டூசியில் இருந்து தண்ணீர் கல்வி மருத்துவம் வரைக்கும் தனியார்மயக் கொள்கைக்கு வால் பிடிப்பவர்கள் வாய் வலிக்கச் சொல்லும் திருமந்திரம் .

      ——
      ஏழை எளிய மக்களுக்கு எட்டாக் கனியாக இருக்கும் கல்வி மருத்துவம் போன்ற அடிப்படை சேவைகளை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்பது ஒரு தற்காலிகத் தீர்வு . இந்த சீர்திருத்தத்தை முன் வைத்து “மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்” தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. நிரந்தரத் தீவுகள் எப்பொழுதும் அதன் அடிக்கட்டுமனத்தைத் தகர்ப்பதிலேயே இருக்கிறது.

      இந்தப் பிரச்சினையை எதற்க்காக அனைவருக்கும் கொண்டு போக வேண்டும் என்று கேட்கின்றீர்களே, இத்தனை நாட்களாக விவாதித்தும் உங்களுக்குப் புரியவில்லை என்றால் என்ன செய்வது? இது வெறும் இணையத்தில் மட்டும் நடக்கும் விவாதம் அல்ல. ஏனெனில் வெறுமனே இணையத்தை மேய்பவர்கலாளோ அல்லது மெத்த படித்த மேதாவிகலாலோ ஒன்றுமே செய்ய இயலாது என்பது தான் இதுகாறும் கண்ட யதார்த்த உண்மை.

      மைய அரசு அளித்த அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கான நிதியான 4000 கோடிகளை பயன்படுத்தி தமிழகத்தில் சுமார் 1400 பள்ளிகளுக்கு மேலாக இன்று வரைக் கட்டியிருக்க வேண்டும் மற்றும் பள்ளிகளில் மறு சீரமைப்பு செய்திருக்க வேண்டும். ஆனால் வெறுமனே 100 சொச்சம் பள்ளிகளே கட்டப்பட்டு இருக்கின்றன. இது அப்படியே மருத்துவத்திற்கும் பொருந்தும்.

      காசுக்குக் கல்வி என்றானவுடன் ஏழை எளிய மக்களின் குழந்தைகளின் சரணாலயம் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மட்டுமே. அடிப்படை வசதிகள் இல்லாமல் பள்ளியில் இருந்து வெளியேறும் குழந்தைகளில் பெரும்பானோர் தான் குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றப்படுகிறார்கள்.

      நாணயத்தின் ஒருபுறம், எந்த எதிர்ப்பும் இல்லாமல் 100 கணக்கான பள்ளிகளை இந்த தரகு- முதலாளித்துவ அரசு மூடி வருகிறது அதன் மறுபுறம் அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவிகளின் தன்னெழுச்சியான போராட்டம் அவர்களுக்கான ஆசிரியர்களை நியமித்தும் இருக்கிறது.

      ஒருபுறம் புற்றீசல் போல பொறியியல் கல்லூரிகள் முளைத்து வருகின்றன. கட்டணங்கள் என்ன குறைந்து விட்டனவா? படித்து முடித்து வெளி வரும் மாணவர்களுக்கு வேலைக் கிடைத்து விடுகிறதா?கடனைக் கட்டுவதா இல்லை முதலாளித்துவம் கூறும் தனி மனிதத் திறமை வளர்த்துக் கொள்வதா?

      இங்கே தாங்கள் பூசி மெழுகி சொல்வது போல அதாவது “ஆம், கட்டணம் உயர்வாகத் தான் இருக்கிறது, போக போக சரியாகி விடும் ” என்ற மொண்ணைத் தனமான வாதம் எல்லாம் யதார்த்தத்தில் பொசுங்கி விடுகிறது.

      எந்த பிரச்சினை என்றாலும் சரி அதற்கான தீர்வுகளை பெற “நாம் என்ன செய்ய வேண்டும்” என்பதை தான் இவை துல்லியமாக கோடிட்டுக் காட்டுகின்றன.

      நன்றி.

  3. மேலை நாடுகளில் கல்வி முற்றிலும் அரசால் நடத்தபடுகிறது. இங்கே தனியார் மூலம் நடத்தபடுகிறது. தனியார் நிறுவனங்களுக்கு கல்வி முதல் போட்டு இலாபம் பார்க்கும் தொழிலாக இருக்கிறது. பெரும் புள்ளிகள் தங்களது கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு கல்வி ஒரு பாலமாக விளங்குகிறது. பல அரசியல் புள்ளிகளே இதில் முதன்மை வகிக்கின்றனர். தரமான பாட்டில் தண்ணீர் கொடுக்க வேண்டும், ஓட்டல் நடத்த வேண்டும்… என சிந்திக்கும் அரசு நல்ல தரமான கல்வி அய் மக்களுக்கு குறிப்பாக ஏழை, எளியவர்களுக்கு தர வேண்டும் என எண்ணுவதில்லை. மாறாக தனியாருக்கு அதனை தாரைவார்த்து வேடிக்கை பார்க்கிறது. இந்த கல்விக் கொள்கையை (கொள்ளையை?) மாற்றி அமைப்பதற்கு ஆளும் கட்சி மட்டுமல்ல, எதிர் கட்சிகளும் சிந்திப்பதில்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்து அரசியல் பண்ணும் இவர்களுக்கு எப்படி மாற்றி யோசிக்க குடியும்?

Leave a Reply to சிவப்பு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க