privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்CRP தொழிலாளர் போராட்டம் - பு.ஜ.தொ.மு தீவிரவாத சங்கமா ?

CRP தொழிலாளர் போராட்டம் – பு.ஜ.தொ.மு தீவிரவாத சங்கமா ?

-

டந்த மார்ச் மாதம் 12-ம் தேதி முதலாக நடந்து கொண்டிருக்கும் CRP தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக, கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் 07-04-2015 அன்று மாலை 5.30 மணியளவில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் விகந்தர் தலைமையில் கண்டனக்கூட்டம் நடத்தப்பட்டது. இணைப்பு, கிளைச் சங்கத் தொழிலாளிகள் மற்றும் உழைக்கும் மக்கள் கலந்து கொண்டனர்.

சி.ஆர்.பி வேலைநிறுத்தம்

கூட்டத்தில் CRP தொழிலாளிகளின் உரிமைக்கான போராட்டத்தை ஆதரித்து, SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் ஆறுமுகம் உரையிலிருந்து :

“CRP தொழிலாளிகள் செய்த ஒரே தவறு என்னவெனில், சட்டத்தை நம்பி நீதிமன்றம், கோர்ட், தொழிலாளர் துறை என்று சென்றதுதான். இந்த கோர்ட் நீதிமன்றம், போலிசு அனைத்துமே முதலாளிகளுக்கு சேவை செய்பவைதான். நாங்கள் எங்கள் சங்க கோரிக்கைகளுக்காக04-09-2008-ல் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தை, வீரியமிக்கதாகவும், பலதரப்பட்ட உழைக்கும் மக்களை சென்று சேரும் வகையிலும் கட்டியமைத்தோம். இது  போன்ற போராட்டங்களை செய்வதன் மூலமாகத்தான் முதலாளித்துவ அடக்குமுறைகளை வெல்ல முடியும்”

கெமின் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தோழர் ராஜேஷ் பேச்சிலிருந்து

“இரண்டு வருடத்துக்கு முன்னால் எங்களது ஆலை நிர்வாகத்தை எதிர்த்து நாங்கள் பு.ஜ.தொ.மு தலைமையில் போராடிய போது இத்தனைப் பெரிய கூட்டத்தை கூட்டமுடியவில்லை. ஆனால் இரு வருடம் கழித்து ஒரு தொழிற்சங்க போராட்டத்துக்காக 300 தொழிலாளர்களை கூட்டி கூட்டம் நடத்த முடியுமென்பது, பு.ஜ.தொ.மு வின் போராட்டப் பாதை சரியானது என்பதையும், முதலாளித்துவ அடக்குமுறைக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுவதே சரியானது என்பதையே காட்டுகிறது.”

CRP தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தோழர் வினோத் உரையில் :

“அண்ணா தொழிலாளர் சங்கம் என்கிற கைக்கூலி சங்கத்தில்தான் இருக்க வேண்டுமென நிர்வாகம் கூறுகிறது. அது தொழிலாளிகளுக்கு ஏற்புடையதல்ல என்பதால் நாங்கள் தனிச் சங்கம் துவங்கி பு.ஜ.தொ.மு-வில் எங்களை இணைத்துக் கொண்டோம். அது தீவிரவாத சங்கமா துரோக சங்கமா, தொழிலாளிகளுக்கு நல்லது செய்யுமா செய்யாதா என்பதை குறித்து முடிவு செய்ய வேண்டியது நாங்கள் தான்.

நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்த்து பல கட்ட போராட்டங்களை நடத்திவிட்டோம். வருவாய் துறையின் அனைத்து கதவுகளையும் தட்டிவிட்டோம். ஆனால் இதுவரை யாருமே எங்கள் கோரிக்கைக்கு செவிமடுக்கவோ, பேசித் தீர்க்கவோ முன்வரவில்லை. ஜனநாயக முறைப்படியான அனைத்து போராட்டமும் நடத்தப்பட்டாகி விட்டது. இனி என்ன செய்ய வேண்டுமென முடிவு செய்ய வேண்டியது மக்கள் தான்”.

கிரீவ்ஸ் காட்டன் (GREAVES COTTON) தொழிலாளர் சங்க செயலாளர் தோழர் ஆறுமுகச் செல்வன் பேச்சிலிருந்து

“நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து நாங்கள் என்ன போராட்ட வடிவங்களை கையாண்டோமோ அதையே தான் இன்று CRP தொழிலாளர்களின் செய்து வருகின்றனர். முதலாளித்துவ அடக்குமுறை என்பது காலந்தோறும் தீவிரமாகி வருகிறது. இதற்கெதிராக அனைத்து தொழிலாளர்களும் போராட வேண்டும். CRP தொழிலாளர்களின் போராட்டத்துக்கு எமது சங்கம் தற்போது ஆதரவளிப்பதைப் போலவே தொடர்ந்து ஆதரவளிக்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்”.

லைட்விண்ட் ஸ்ரீராம் (LITEWIND SHRIRAM) சங்க செயலாளர் தோழர் மீன் பகதூர்  உரையில் :

“நாங்கள் தற்போது தான் புதிதாக பு.ஜ.தொ.மு சங்கத்தில் இணைந்தோம். நாங்கள் சங்கம் துவக்கிய அடுத்த 10 நாட்களில் நிர்வாகம் INTUC சங்கத்தை துவங்கியுள்ளது. என்ன கோரிக்கை என்று கூட கேட்காமல் நிர்வாகம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஒரு போராட்டத்தில் இறங்கி விட்டால் துணிந்து செய்ய வேண்டும். போராட்டத்தில் இறங்குமுன் பல முறை சிந்திக்கலாம். ஆனால் இறங்கியபின் வீரியமாக போராடி ஜெயிக்க வேண்டும். அந்த வகையில் போராடும் CRP தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்”.

கூட்டத்தில் உரையாற்றியவர்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி சுதேஷ் குமார் பேச்சிலிருந்து:

“புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தீவிரவாத சங்கமென்றும், வன்முறையை தூண்டுகிறதென்றும் பேசி வருகிறார்கள். ஆனால் நியாயமான உரிமைக்காக போராடிவரும் CRP தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமையை மறுத்து, தொழிலாளர்களைப் பழிவாங்கி தினம் தினம் அவர்களின் மீது அடக்குமுறையை ஏவி வரும் நிர்வாகம் செய்வது வன்முறையில்லையா?” என்ற கேள்வியோடு துவங்கி, “நிர்வாகம், பால்வளத்துறை அமைச்சரிடம் சென்று தங்களது குறையை மண்டியிட்டு அழுது, மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் ஆட்களை பிடித்து வேலைக்கு அழைத்து வருவதாக எங்களுக்கு செய்தி கிடைத்துள்ளது. ஒருவேளை அந்த செய்தி உண்மையாக இருந்தால் ‘அக்ரி‘ கிருஷ்ணமூர்த்திக்கு என்ன நிலைமை உண்டானதோ அதே நிலை உண்டாகக்கூடும். பு.ஜ.தொ.மு-வை பற்றி அமைச்சருக்கும் தெரியும், அவரிடம் சென்று அழுது முறையிட்ட நிர்வாகத்துக்கும் தெரியும்.”

“இந்த கும்மிடிப்பூண்டியில் இது வரை எத்தணையோ கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கு தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று கூடி முதலாளிக்கு எதிராகப் போராடுங்கள் என்று தைரியமூட்டி நிதியளித்த ஒரு கூட்டத்தை பார்த்திருக்கிரீர்களா? அது தான் பு.ஜ.தொ.முவுக்கும் மற்ற ஓட்டு கட்சிகளுக்கும் இருக்கின்ற வித்தியாசம்.

சி.ஆர்.பி வேலைநிறுத்தம்ஆலைக்குள் மட்டுமல்ல, ஆலைக்கு வெளியிலும் நிர்வாகத்துக்கு ஆதரவாக இருக்கும் அரசை எதிர்த்து நாம் போராட வேண்டியுள்ளது.

போராட்டம் தாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு. ஆசான் மார்க்ஸிடம் அவரது மகள் எலியனார் மார்க்ஸ் ஒரு முறை, “மகிழ்ச்சி என்றால் என்ன?” என்று கேட்ட போது, “போராட்டம் தான் மகிழ்ச்சி” என்றார் மார்க்ஸ். உதாரணத்துக்கு SRF உள்ளிருப்புப் போராட்டத்தை எடுத்துக்கொண்டாலும் கூட, வெறும் 23 தொழிலாளிகளைக் கொண்டு துவங்கிய போராட்டம் அடுத்த 10 நிமிடத்தில் 200 பேர் கலந்து கொண்ட போராட்டமானது.

தொழிற்சங்க பிரச்சனைகளுக்காக மட்டும் போராட்டம் நடப்பதில்லை. இன்றைய தேதியில் மேகதாது அணைக்கெதிரான போராட்டம், மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம், நாம் கண்டனக்கூட்டம் நடத்தும் இந்த இடத்திலும் கட்டிடங்கள் இடிக்கப்பட்டதற்காக வியாபாரிகள் போராடினார்கள். ஆக போராட்டமென்பது மனித வாழ்வில் பிரிக்க முடியாதது.

முதலாளிகளுக்கு எதாவது பிரச்சனை என்றால் நமது பிரதமர் மோடியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஊர் ஊராக நாடு நாடாக ஓடி, குறைந்த பணத்துக்கு தொழிலாளிகள் கிடைபார்கள் எங்கள் நாட்டுக்கு வாருங்கள் என்று கூவி கூவி அழைத்தாலும் ஒருவனும் வருவதாக இல்லை. ஒபாமாவை அழைத்து வந்து விருந்தளித்து, அவரது மனைவிக்கு புடைவை பரிசளித்து என்னென்னவோ செய்து பார்த்து விட்டார் மோடி. ஆனால் என்றும் நடக்கவில்லை.

விவசாய நண்பன் என்று கூறிக்கொண்டு, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது, உரத்துக்கான மானியத்தை தர மறுப்பது, இவர் ஆட்சிக்கு வந்த பின் தான் மணலி உரத் தொழிற்சாலை மூடப்பட்டது. “நான் இங்கு நிலத்துடன் இருக்கிறேன். நீ அங்கு நிலத்துடன் இருக்கிறாயா” என்று விவசாயிகள் தங்களுக்குள் கடிதமெழுதிக்கொள்ளும் அளவுக்கு விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மட்டுமல்ல, இந்நாட்டில் உள்ள அனைத்து பிரிவினரும் பாதிக்கப்படுகின்றனர். வணிகர்களுக்கு வால்மார்ட், மாணவர்களுக்கு கல்வி மறுப்பு, சாதி மத ரீதியான ஒடுக்குமுறை என அனைத்து தளங்களிலும் உழைக்கும் மக்களின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தீவிரப்படுத்தப்படும் தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தினுடைய விளைவு இது. ஊழல், லஞ்சம், முறைகேடு என அனைத்து துறைகளிலும் இந்த அரசு ஆளத் தகுதியிழந்து சீரழிந்துள்ளது.

இந்தப் பின்னணியிலிருந்து தான் CRP தொழிலாளிகளின் போராட்டத்தை நாம் பார்க்க வேண்டுமே ஒழிய தனித்து பார்க்கக் கூடாது. இனியும் கோரிக்கை மனுக்களைக் கொடுப்பது, அடையாள ஆர்ப்பட்டம் நடத்துவது என்பதெல்லாம் காலாவதியாகி விட்டது. நமக்கான அதிகாரத்தை நாமே கையிலெடுத்துக் கொள்வது தான் தீர்வு.”

போலீஸ் கண்காணிப்பு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கிளை இணைப்பு சங்க தோழர்கள் தத்தமது சங்கங்களின் சார்பாக நிதியளித்தும், போராட்டம் முழுமைக்கும் துணை நிற்போம் என்று உறுதியளித்தும் சென்றனர். CRP நிர்வாகத்தையும், அரசையும் திரைகிழித்த இந்த கண்டன ஆர்ப்பாட்டம், பகுதி தொழிலாளிகளிடையே புது நம்பிக்கையை விதைத்துள்ளது.

சி.ஆர்.பி வேலைநிறுத்தம்
கிளை இணைப்பு சங்கங்களின் ஆதரவு

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டம்.