privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபெரியார் திடல் : அம்மா ஆதரவுடன் பார்ப்பனிய தாக்குதல்

பெரியார் திடல் : அம்மா ஆதரவுடன் பார்ப்பனிய தாக்குதல்

-

மோடி ஆட்சி அமைத்த பிறகு அதிகரித்து வரும் பார்ப்பன தாக்குதல்களின் ஒரு பகுதியாக புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பவிருந்த தாலி பற்றிய விவாதத்தை டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு மூலமும், மிரட்டல்கள் மூலமும் தடுத்து நிறுத்தியிருந்தனர் இந்துத்துவ ரவுடிகள். இந்தச் சூழலில் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று, பெரியார் திடலில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்வு மற்றும் மாட்டுக்கறி விருந்து நடத்தத் திட்டமிட்டிருந்தது திராவிடர் கழகம்.

பெரியார் திடல் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி
அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்வு மற்றும் மாட்டுக்கறி விருந்து.

ஏப்ரல் 13 அன்று இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பித்தது சென்னை மாநகர காவல் துறை. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு, நிகழ்ச்சியை நடத்த அனுமதி பெற்றது திராவிடர் கழகம். விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன் வேப்பேரி உதவி ஆணையரின் ஆணைக்குத் தடை விதித்து திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் விழாவுக்கு அனுமதி கொடுத்ததோடு, காவல்துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஆணை பிறப்பித்தார்.

பெரியார் திடல் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி
ஏப்ரல் 14 அன்று அதிகாலை 7 மணிக்கே தாலி அகற்றும் நிகழ்ச்சி ஆரம்பமானது.

நீதிமன்ற அனுமதியின்படி சென்னை பெரியார் திடலில் ஏப்ரல் 14 அன்று அதிகாலை 7 மணிக்கே தாலி அகற்றும் நிகழ்ச்சி ஆரம்பமானது. 21 பெண்கள் தங்களின் கழுத்தில் பெண்ணடிமைச் சின்னமாகத் தொங்கிக் கொண்டிருந்த தாலியைக் கத்தரித்து அகற்றினார்கள். பெரியாரின் பிரச்சாரம் இன்னமும் வீரியமாக தமிழ் நாட்டில் நிலைகொண்டுள்ளது என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டியது.

பெரியார் திடல் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி
பெரியாரின் பிரச்சாரம் இன்னமும் வீரியமாக தமிழ் நாட்டில் நிலைகொண்டுள்ளது.

இந்து மதவெறியர்களால் காவல்துறை, நீதிமன்றம் என அலைக்கழிக்கப்பட்டு போராடிப் பெற்ற இந்த நிகழ்ச்சியை, அதிகாலையிலேயே உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு போட்டு தடுக்க முயற்சி நடந்தது. இந்த முறை இந்துமதவெறி அமைப்புகளுக்குப் பதிலாக, ‘நானொரு பாப்பாத்தி’  என்று அறிவித்துக் கொண்ட ‘மக்களின் முதல்வர்’ ஜெயாவின் பினாமி அரசே இந்த நிகழ்ச்சிக்குத் தடை கோரியது.

பெரியார் திடல் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி
‘மக்களின் முதல்வர்’ ஜெயாவின் பினாமி அரசே இந்த நிகழ்ச்சிக்குத் தடை கோரியது.

வேப்பேரி காவல்துறை உதவி ஆணையர் சார்பில் நீதிபதிகள் எஸ்.கே. அக்னி ஹோத்திரி, திரு எம். வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் காலை 8 மணிக்கே மேல் முறையீடு செய்தனர். பொதுமக்களின் நலன் சார்ந்த எத்தனையோ வழக்குகளுக்கு மேல்முறையீடு செய்யாமல் மாதக்கணக்கில் இழுத்தடிக்கும் அரசு இதற்கு இவ்வளவு அவசரம் காட்டியதில் இருந்தே அதன் பார்ப்பன பாசத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

ps18
பெரியார் திடல் வாயிலில் செஞ்சட்டையுடன் பு.மா.இ.மு தோழர்கள்

 

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களுமாக சுமார் 50 தோழர்கள் பெரியார் திடலின் முகப்பில் இருந்து உள்ளரங்கம் வரை நிகழ்ச்சி முடியும் வரை பாதுகாப்பாக அணிவகுத்து நின்றனர்

நீதிபதிகள் விசாரித்துக்கொண்டிருக்கும்போதே பெரியார் திடலுக்குள் நுழைந்த காவல்துறை, நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கேட்டது. ‘தடையாணையைக் கொண்டுவரும் வரை நிகழ்ச்சியை நிறுத்த முடியா’தென மறுத்து, தாலி அகற்றும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டது, திராவிடர் கழகம். எல்லாம் முடிந்தபின்னர் அக்னி ஹோத்திரி, வேணுகோபால் அமர்வு நிகழ்ச்சிக்குத் தடை விதித்தது. இவ்வாறு முகத்தில் கரியைப் பூசிக்கொண்ட ஜெயா அரசின் காவல்துறை, இதற்கு பழி தீர்க்க வன்மம் கொண்டிருந்தது.

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
நிகழ்ச்சியில் இந்து மதவெறிக் கும்பல் புகுந்து இடையூறு செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் தி.க இளைஞர்கள் தயாராகவே இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, தாலி புனிதமானது என்ற மூடத்தனத்தை தகர்த்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இந்து மதவெறிக் கும்பல் புகுந்து இடையூறு செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் தி.க இளைஞர்கள் தயாராகவே இருந்தனர்.

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
இந்துவெறி அமைப்பின் புரசைவாக்கம் பகுதி குண்டர்கள் சிலர் நோட்டம் பார்க்க வந்தனர்; சிவப்புச் சட்டைகளைக் கண்டபின் அங்கு வராமல் ஓட்டம் பிடித்தனர்.

இந்துவெறிக் கும்பலை எதிர்கொள்ள புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களுமாக சுமார் 50 தோழர்கள் பெரியார் திடலின் முகப்பில் இருந்து உள்ளரங்கம் வரை நிகழ்ச்சி முடியும் வரை பாதுகாப்பாக அணிவகுத்து நின்றனர். சந்தேகத்துக்கிடமான நபர்கள், தோழர்களால் தடுக்கப்பட்டனர். முற்பகலில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில் பெரியார் திடல் அமைந்திருக்கும் ஈ.வெ.கி.சம்பத் சாலையில், இந்துவெறி அமைப்பின் புரசைவாக்கம் பகுதி குண்டர்கள் சிலர் நோட்டம் பார்க்க வந்தனர்; சிவப்புச் சட்டைகளைக் கண்டபின் அங்கு வராமல் ஓட்டம் பிடித்தனர்.

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
சிவசேனா குண்டர்களை ஏவிவிட்ட காவல்துறை, அக்கும்பல் பெரியார் திடலை முற்றுகையிட போதுமான அளவு ஒத்துழைப்பு தந்தது.

பிற்பகலில், தி.க உள்ளிட்ட திராவிட இயக்கத்தினரும், பு.மா.இ.மு. தோழர்களும் கலைந்து சென்ற பின்னர், சுமார் 3 மணியளவில் சிவசேனா குண்டர்களை ஏவிவிட்ட காவல்துறை, அக்கும்பல் பெரியார் திடலை முற்றுகையிட போதுமான அளவு ஒத்துழைப்பு தந்தது. சாணிப்பால், சுத்தியல், பெரியார், வீரமணி ஆகியோரின் படங்களோடு வந்த 15 பேர் கும்பலை பெரியார் திடலில் இருந்து 100 மீட்டர் தொலைவு வரை வர அனுமதித்தது, காவல்துறை.

‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று கூக்குரல் போட்ட அக்கும்பல் பெரியாரை ஆபாச வார்த்தைகளால் திட்டியபடி முன்னேறியது. தங்களின் கோரிக்கைக்காக முற்றுகைப் போராட்டம் நடத்தும் முற்போக்காளர்களையும், புரட்சியாளர்களையும், ஊர்வலம் தொடங்கும் முன்பே கைது செய்வதை வழக்கமாக்க் கொண்டுள்ள, காவல்துறை சிவசேனா குண்டர்களை 100 மீட்டர் தொலைவு வரை அனுமதித்த்தில் இருந்தே அவர்களின் இந்து மதவெறி சார்பு தெளிவாகத் தெரிந்தது.

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
சிவசேனைக் கும்பல் வருவதை அறிந்து கொதித்துப் போன தி.க. தொண்டர்கள், திடலுக்கு வெளியே வந்து சிவசேனையினரை நோக்கிப் பாய்ந்து தாக்கத் தொடங்கினர்.

சிவசேனைக் கும்பல் வருவதை அறிந்து கொதித்துப் போன தி.க. தொண்டர்கள், திடலுக்கு வெளியே வந்து சிவசேனையினரை நோக்கிப் பாய்ந்து தாக்கத் தொடங்கினர். சிவசேனா கும்பல் திருப்பித் தாக்கியது. தி.க தொண்டர்கள், கையில் கிடைத்தவற்றைக் கொண்டு 4 சிவசேனா தொண்டர்களை சாத்தத் தொடங்கவே அந்த ‘வீரர்’களின் ‘பாரத் மாதா கீ ஜெய்’ கோஷம், ‘அய்யோ..அடிக்கிறான்..கொல்றான்’ என மாறி, தப்பித்து ஓட்டம் பிடித்தனர். இச்சமயத்தில் சிவசேனையினரைப் பாதுகாத்து நின்ற போலீசு, கருப்புச் சட்டை அணிந்தவர்களைக் குறிவைத்துத் தாக்கியது. சுற்றி வளைத்து தி.க.வினர் 5 பேரின் மண்டையைக் குறிபார்த்து பூண் போட்ட தடியால் மிகக் கடுமையாகத் தாக்கியது. இதில் தி.க பொதுச்செயலாளர் ஒரத்த நாடு குணசேகரன், மற்றும் இளவரசு, சுரேஷ் உள்ளிட்ட 4 தொண்டர்கள் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய தொண்டர்களையும் தடியடி நடத்தி விரட்டி விட்டு சிவசேனையினர் 15 பேரைக் கைது செய்துள்ளனர்.

பெரியார் திடலைத் தாக்கும் நோக்கத்தோடு வந்த அக்கும்பல் விட்டுவிட்டுச் சென்ற ஆட்டோவில் இருந்து வெங்காய வெடிகள் (தடை செய்யப்பட்டவை) கைப்பற்றப்பட்டன.

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
பெரியாரின் தொண்டர்களிடம், அரசு பற்றி இருந்து வந்த பிரேமையை வேப்பேரி போலீசின் குண்டாந்தடி கலைத்து விட்டது.

இதன் பின்னரும் பாசிஸ்டுகள் தாக்க மீண்டும் வரக்கூடும் என்ற தகவல் பரவியதை அடுத்து தி.க., தந்தை பெரியார் தி.க, தி.வி.க, பு.மா.இ.மு அமைப்புகளின் தொண்டர்கள் மாலை 7 வரை பெரியார் திடலில் குழுமி நின்று எதிர்கொள்ளச் சரியான தயாரிப்போடு இருந்தனர். ஆனால் தயாரிப்பினைப் பயன்படுத்த வாய்ப்பினை வழங்காமல், பாசிஸ்டுகள் அப்பகுதிக்கே வராமல் இருந்து விட்டனர். கூடியவிரைவில் இதைச் செய்யும் வாய்ப்பு வரும். பாசிஸ்டுகளின் ‘அய்யோ’ ‘அம்மா’ கதறலின் ஒலி காற்றில் நிறைந்திருக்கும்.

போலீசும் சிவசேனை கும்பலும் திட்டமிட்டு நடத்தியுள்ள இந்தத் தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்துவெறிக் கும்பலுக்கு பதிலாக அரசே மேல் முறையீடு செய்துள்ளதன் மூலம், ‘மக்கள்’ முதல்வரின் பினாமி அரசு இன்னொரு பா.ஜ.க.தான் என்பது அம்பலமாகியுள்ளது. இதனைக் கூட அறுதியிட்டு சொல்லத் துணிவில்லாமல், தி.க தலைவரோ, ‘இந்தத் தடை விதிப்பு, சில பேரை அம்பலப்படுத்தியிருக்கிறது. சில பேருடைய உருவத்தை வெளியில் காட்டியிருக்கிறது’ என்று அடக்கி வாசிக்கிறார். ஆனால் பெரியாரின் தொண்டர்களிடம், அரசு பற்றி இருந்து வந்த பிரேமையை வேப்பேரி போலீசின் குண்டாந்தடி கலைத்து விட்டது.

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
சட்ட வரம்புக்குள்ளேயே பாசிஸ்டுகளை ஜெயித்துவிட முடியும் என வீரமணி பலமுறை சொன்னாலும் களத்தில் இறங்கினால்தான் இந்தக் காலிகளை அடித்து விரட்ட முடியும் என்று அனுபவத்தில் தி.க தொண்டர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.

‘நாங்கள் தடையை மீறவில்லை. தடை போட்டது சரியா? இல்லையா? என்று சட்டப்படி பரிகாரம் தேடுவோம்’ என்று சட்ட வரம்புக்குள்ளேயே பாசிஸ்டுகளை ஜெயித்துவிட முடியும் என வீரமணி பலமுறை சொன்னாலும் களத்தில் இறங்கினால்தான் இந்தக் காலிகளை அடித்து விரட்ட முடியும் என்று அனுபவத்தில் தி.க தொண்டர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். அவர்களது, இந்த வீரம் செறிந்த தாக்குதலைப் பாராட்டுகிறோம்.

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
“பெரியார் திடல் தனியார் இடமானாலும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் அது பொது இடம். இதனால் இதற்கு காவல்துறை அனுமதி கட்டாயம் தேவை” – நீதிமன்றம்.

‘தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்படும்’ என்பது அண்ணாதுரை காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வருகின்ற வசனம். ஆனால் பெரியாரின் இயக்கத்தின் மீது இந்து மதவெறியர்கள் நேரடி தாக்குதல் நடத்திய பின்னரும், தி.மு.க எனும் துப்பாக்கிக் குழலில் இருந்து சத்தம் ஏதும் இல்லை. இதனை சுட்டிக்காட்டி ‘தி.மு.கவை அழைத்து அவர்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தலாமே’ என்று வினவியபோது தி.க தலைவர் ஒருவர், ‘அதெல்லாம் சும்மா. இன்னைக்கு நடந்த நிகழ்ச்சிக்கு கூட அவங்க வரலை. அவங்களுக்கு கொள்கையாவது ஒண்ணாவது’ என்று ஆத்திரத்துடன் பதில் தந்தார்.

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
பெரியாரின் இயக்கத்தின் மீது இந்து மதவெறியர்கள் நேரடி தாக்குதல் நடத்திய பின்னரும், தி.மு.க எனும் துப்பாக்கிக் குழலில் இருந்து சத்தம் ஏதும் இல்லை.

விழாவுக்கு தடைபோடும் நீதி மன்றம், தாலியின் புனிதத்தையோ, மாட்டுக்கறி விருந்தையோ பற்றி விவாதிப்பதை கவனமாகத் தவிர்த்து விட்டு, “பெரியார் திடல் தனியார் இடமானாலும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் அது பொது இடம். இதனால் இதற்கு காவல்துறை அனுமதி கட்டாயம் தேவை” என்றும் வாதிட்டுள்ளது. இதை முன்னுதாரணமாக்கி இனிமேல் அரங்கக் கூட்டம் மட்டுமல்ல, முற்போக்குத் திருமணம் செய்யக் கூட காவல் நிலையம் அலைய வைக்கும் சதி இதில் உள்ளது. இதனை எதிர்த்து முறியடித்தாக வேண்டும்.

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
தி.க.வின் நிகழ்ச்சியைக் கண்டித்து அரசு பேருந்துகளை இந்து வெறியர்கள் கல்வீசித் தாக்கியுள்ளனர்.

தி.க.வின் நிகழ்ச்சியைக் கண்டித்து அரசுப் பேருந்துகளை இந்து வெறியர்கள் கல்வீசித் தாக்கியுள்ளனர். வீரமணியின் வீடு மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தி.க தலைமை அலுவலகம் மீது தாக்கும் நோக்கில் தடை செய்யப்பட்ட வெடிகளைக் கொண்டு வந்துள்ளனர். இச்செயல்களில் ஈடுபட்ட சிவசேனா உள்ளிட்ட இந்துமதவெறி அமைப்புகளை அரசு தடை செய்ய வேண்டும். இத்தாக்குதலில் ஈடுபட்ட சிவசேனா குண்டர்களை, குண்டர் தடைச் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும்.

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
எதிரியும் அரசும் சட்டத்தை மதிக்காதபோது நாம் மட்டும் ஏன் சட்டத்தை மதித்துக் கொண்டும் அதனால் உதை வாங்கிக் கொண்டும் இருக்க வேண்டும்?

மாறாக, காவல்துறை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த திராவிடர் கழகத்தினரை கைது செய்திருக்கிறது. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை பார்க்கச் சென்றவர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பிணையில் வராத பிரிவுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். திராவிடர் விடுதலை கழகம் நடத்தும் நிகழ்ச்சிக்கான அனுமதி கடிதத்தில் நிகழ்ச்சியில் அசைவ உணவு பரிமாறக் கூடாது என்று நிபந்தனை போட்டிருக்கிறது காவல்துறை. பார்ப்பனத் தாய் ஜெயாவின் ஆட்சியில் மாட்டுக் கறிக்கு மட்டுமில்லை அசைவ உணவுக்கே மறைமுக தடை அமலுக்கு வருகிறது.

ஏறி வந்து தாக்கத் தொடங்கி விட்டது, இந்து வெறி பாசிசம். இனிமேலுமாவது, ‘சட்டப்படியே எதிர்கொள்வோம்’ என்ற மயக்கத்தில் இருந்து பெரியார் தொண்டர்கள் விடுபட வேண்டும். எதிரியும் அரசும் சட்டத்தை மதிக்காதபோது நாம் மட்டும் ஏன் சட்டத்தை மதித்துக் கொண்டும் அதனால் உதை வாங்கிக் கொண்டும் இருக்க வேண்டும்? டஜன் கணக்கிலான பாசிச அமைப்புகள் ஒத்த நோக்கோடு செயல்படும்போது, நமது பொது எதிரியை எதிர்த்து முறியடிக்க பெரியார் தொண்டர்களும், முற்போக்காளர்களும், புரட்சிகர சக்திகளும் ஒருங்கிணைந்து செயலாற்ற முன்வர வேண்டும்.

தோழமையுடன்,

அ.முகுந்தன்,
தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.