privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்கருவானூர் யாதவ சாதி வெறியின் சிறுநீர் கொடூரம் – நேரடி ரிப்போர்ட்

கருவானூர் யாதவ சாதி வெறியின் சிறுநீர் கொடூரம் – நேரடி ரிப்போர்ட்

-

ம்முடைய வாயில் யாரேனும் சிறுநீர் கழிப்பதை கற்பனை செய்ய முடியுமா? தலித் மக்களைப் பொறுத்த வரை இத்தகை கொடுமைகள் கற்பனைகள் அல்ல.

வாயில் மலம் திணிக்கப்பட்ட திண்ணியம் கருப்பையா, பத்தாண்டுகளுக்கு முந்தைய ஆதிக்க சாதிவெறியின் சான்று. கருவானூர் அரவிந்தன் சமீபத்திய உதாரணம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கருவானூர் கிராமத்தில் உள்ள குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன். கருவானூரில் பெரும்பான்மை சாதி யாதவர்கள், மொத்தம் நூறு குடும்பங்கள். குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மிகச்சிறுபான்மை, மொத்தம் பத்து குடும்பங்கள்.

2015 மார்ச் 3-ம் தேதி ஊரில் நடந்த பெருமாள் கோவில் திருவிழாவிற்கு அரவிந்தன், பக்கத்து ஊரில் உள்ள தனது மாமா பையன் தினேஷை வரவழைத்திருக்கிறார். திருவிழா நாளன்று இரவு பதினோரு மணியளவில் தினேஷ் ஒரு மரத்தின் கீழ் செல்போனில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அங்கே வந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் பலர் கும்பலாக சேர்ந்து,கொண்டு தங்களை தாக்கியதோடு அரவிந்தனை தாக்கி அவர் வாயில் சிறுநீர் கழித்ததாக தினேஷும் அரவிந்தனும் மட்டுமல்ல ஏனைய குறவர் சமூகத்தை சேர்ந்த மக்களும் கூறுகின்றனர்.

எதிர்தரப்போ, “அரவிந்தனும், தினேஷும் தங்கள் சமூகத்தை சேர்ந்த பெண்களிடம் கலாட்டா செய்து கையைப் பிடித்து இழுத்ததால் தான் சண்டை வந்தது, வாயில் சிறுநீர் கழிக்கவில்லை, இதில் சாதிப்பிரச்சினை எதுவும் இல்லை” என்றும் மறுக்கின்றனர். இந்த செய்தி கிட்டத்தட்ட அனைத்து பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது.

இந்தப் பிரச்சனை நாடாளுமன்றத்திலும் கேரள எம்.பி கொடிக்குனில் சுரேஷால் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து கலாட்டா செய்த அ.தி.மு.க எம்.பிகள் ஆதிக்க சாதியினர் கூறிய அதே காரணத்தை கூறி இரு இளைஞர்களையும் குற்றவாளிகளாக்கினர்.

உண்மை அறிய கருவானூருக்கு சென்றோம்.

நாங்கள் சென்ற போது கருவானூர் முழுமையாக போலீசின் கட்டுப்பாட்டில் இருந்தது. விசாரணைக்கு பிறகே போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர். முதலில் ஆதிக்க சாதியினரிடம் பேசினோம்.

ஊருக்குள் இருக்கும் ஆதிக்க சாதியினர் வீடுகளுக்கு மத்தியில் இருக்கும் ஒரே குறவர் சாதி வீடு அரவிந்தனுடையது மட்டும் தான். முதலில் அவருடைய வீட்டுக்கருகில் உள்ள ஆதிக்க சாதி பெண்களிடம் கேட்ட போது அனைவரும் பதில் சொல்ல மறுத்துவிட்டார்கள்.

“குறவர் சாதி இளைஞர்கள் உங்க பொண்ணுங்க கையை பிடிச்சு இழுத்ததா சொல்றங்களே, அப்படி ஏதும் நடந்துச்சா?” என்று கேட்ட போது

“தெரியவில்லையே” என்றுதான் சொன்னார்கள்.

கையைப் பிடித்து இழுத்த கதை ஊர்ப் பெண்களுக்கே தெரியவில்லை என்றால் இழுக்கப்பட்ட பெண்கள் யார்?

“இதுக்கு முன்னாடி இந்த மாதிரி சம்பவம் ஏதும் நடந்திருக்கா?” என்று கேட்ட போது,

“அப்படி ஒன்னு கூட நடந்தது இல்லை” என்றார்கள்.

“உங்க சாதி பொண்ணோ பையனோ அவங்க சாதி பசங்க பொண்ணுங்கள கல்யாணம் பண்ணியிருக்காங்களா?” என்றால்,

“இதுவரைக்கும் அப்படி எதுவும் நடக்கலைங்க” என்று பதிலளித்தார்கள்.

இவை தாண்டி பொதுவில் பெண்களில் பலர் வாயைத் திறக்கவே இல்லை. பேசியவர்களில் பெரும்பான்மை எதுவும் தெரியாது என்று சாதித்தனர்.

கருவானூர் ஒரு டீ கடை கூட இல்லாத கிராமம். டீ கடைக்கு பதிலாக இருந்தது ஒரு பெட்டிக்கடை தான். அங்கு அமர்ந்திருந்த சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

“பசங்களுக்குள்ள என்ன பிரச்சினை, திருவிழாவில் என்ன நடந்தது ?”

“சரியாத் தெரியலைங்க, நானும் அன்னைக்கு திருவிழாவுக்கு வந்திருந்தேன். நாங்க எல்லாம் கோவில்ல இருந்தோம் அப்ப கூத்து நடந்துக்கிட்ருந்தது. அந்த பசங்க ஏதோ பொண்ணுங்கள கிண்டல் பண்ணதாவும் அதை இவங்க கேட்டதாவும் அதுல பிரச்சினை வந்ததாவும் சொல்றாங்க.”

“பெரிய சாதி பொண்ணுங்கள கிண்டல் பன்ற அளவுக்கு எப்படி குறவர் இன பசங்களுக்கு தைரியம் வந்துச்சு ?” என்றதும் லேசாக சிரித்தவாறே.

“அப்படி தானேங்க இப்பல்லாம் நடக்குது, என்ன பன்றது?” என்றார்.

இந்த உரையாடலை கவனித்துக்கொண்டிருந்த சீனிவாசன் பேசினார்.

“ஊருக்குள்ள எந்த பிரச்சினையும் இல்லைங்க, பத்திரிகைகாரங்க தான் அப்படி இப்படின்னு எழுதியிருக்காங்க” என்றார்.

“எந்தப் பிரச்சினையும் இல்லைன்னா குறவர் பசங்கள இந்தப் பசங்க அடிக்கலைங்கிறீங்களா ? இது சாதி பிரச்சினை இல்லைன்னா எதுக்கு ஊரே போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கு ?”

“போலீஸ் அவங்களுக்காகத் தான் வந்திருக்காங்க.”

“அவங்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு தானே போலீஸ் வந்திருக்கு ?”

“அப்படின்னு அவங்க புகார் கொடுத்ததால வந்திருக்காங்க.”

“அந்த மக்கள் மேல எவ்வளவு மோசமான தாக்குதல் நடந்தாலும் ஊருக்குள்ளயே கட்டப்பஞ்சாயத்து பேசி தீர்க்கிறதா சொல்றாங்களே உண்மையா ?”

“அப்படி எல்லாம் இல்லைங்க. எந்த பிரச்சினையா இருந்தாலும் அதை ஊருக்குள்ளேயே பேசித் தீர்த்துக்கலாம், எதுக்கு போலீசு கேசுன்னு போகணும்னு பெரியவங்க சொல்றதை தான் அப்படி சொல்றாங்கன்னு நினைக்கிறேன்.”

“சரி பசங்களுக்குள்ள எதுக்காக சண்டை நடந்துச்சி, பொண்ணுங்க பிரச்சினையா ?”

“இது பொண்ணுங்க பிரச்சினையே இல்லைங்க, பசங்க பிரச்சினை. எங்க பொண்ணுங்ககிட்ட அப்படி எல்லாம் வம்புக்கு வர முடியாது. அவங்களுக்கு அந்தளவுக்கு தைரியமும் இல்ல.”

“அப்படின்னா வாயில மூத்திரம் போனது ?”

“அது பத்தி தெரியலைங்க, அப்படி நடந்ததா நாங்க கேள்விப்படலை.”

“மேல் சாதி ஆண்கள் குறவர் பெண்கள்கிட்ட ரொம்ப தப்பா நடந்துகிட்டதா சொல்றாங்களே ?”

“என்ன தப்பா நடந்துகிட்டாங்க, அப்படி ஒன்னு சொல்ல முடியுமா ?:

“அரவிந்தனுடைய அக்கா கலா ஒரு நாள் காட்டுக்கு வெளிக்கு போகும் போது அவங்க மேல பாய்ஞ்சு நைட்டியை கிழிச்சு அவங்களை பலாத்காரம் பண்ண முயற்சி செஞ்ச மேல் சாதி பையன் ஒருத்தன் மேல புகார் வந்து ஊருக்குள்ள பஞ்சாயத்து பேசி தீர்த்ததா சொல்றாங்களே ?”

“அது பத்தி எனக்கு எதுவும் தெரியாதுங்க. நம்ம ஊர்ல அப்படி எதுனா நடந்துச்சா என்ன ?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்றொருவரிடம் சீனிவாசன் தெலுங்கில் கேட்டார். அவரோ, முகத்தை சுழித்துக்கொண்டு, ‘போய்யா நீ வேற இதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு’ என்பதை போல அலுத்துக்கொண்டார். பிறகு பள்ளி மாணவர்கள் சிலரை பார்த்தோம். அவர்களும் குறிப்பாக பேசவில்லை.

ஊரே சொல்லி வைத்ததைதான் பேசுகிறது என்பதுதை அறிந்துகொண்டதால் அடுத்து அரவிந்தனையும், தினேஷையும் பார்க்க ஆயத்தமானோம். அப்போது தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர் தாமோதரன் ஊருக்குள் வந்து கொண்டிருந்தார். கோனார்களின் வட இந்தியக் கட்சி இங்கேயும் சாதி சார்ந்து திரட்ட முயற்சிப்பது ஆச்சரியமல்ல. ஒரு காரிலிருந்து தாமோதரன் இறங்கினார். அதுவரை காணாமல் போயிருந்த ஆண்கள் அனைவரையும் அப்போது தான் பார்க்க முடிந்தது.

தாமோதரன் கீழே இறங்கியதும் பட்டாசை வெடித்தனர். குறவர் குடியிருப்பு அருகே பட்டாசு எதையோ நினைவுபடுத்தும் வண்ணம் வெடித்தது. தாமோதரனை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்திய போலீசார் “ஊருக்குள் போகக்கூடாது” என்றனர்.

“தான் எந்த பிரச்சினையிலும் ஈடுபட வரவில்லை என்றும் சம்பந்தப்பட்ட இளைஞர்களையும் (தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்க சாதி இளைஞர்களையும்) அவர்களின் பெற்றோர்களையும் சந்தித்து ஆறுதல் கூற என்னை போக விடுங்கள்” என்றார்.

அரவிந்தனிடம், ‘பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் செய்துகொள்ளலாம்’ என்று கூறிய டி.எஸ்.பி,  “இப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும், நீங்க திரும்பி போய்டுங்க சார்” என்று தாமோதரனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். இறுதியில், “ஊரில் உள்ள அரசமரத்தடியில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் உட்கார்ந்து பேசுங்க. நாங்க அவங்களை கூட்டிட்டு வர்றோம்” என்று அவரை கோவிலில் கொண்டு வந்து உட்கார வைத்தனர்.

சமாஜ்வாதி சாதிவெறி ஆள்திரட்டல்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பிறகு, “சரி விடுங்க நான் அவங்களை கூட பார்க்கல, பெருமாள் கோவிலுக்கு போய் சாமி தரிசனம் பன்னனும் அதுக்காவது அனுமதிப்பீங்களா” என்றார். போலீசார் அவரை கோவிலுக்குச் செல்ல அனுமதித்தனர். மொத்த கூட்டமும் அவர் பின்னால் சென்றது. எனக்கு ஒன்னும் தெரியாது, நான் அன்னைக்கு ஊரிலேயே இல்லை, திருவிழாவுக்கே போகவில்லை, வேற யார்கிட்டயாவது கேளுங்க என்று பதிலளித்த அனைவரும் அந்த கூட்டத்தில் இருந்தனர்.

நாங்கள் அரவிந்தன் வீட்டை நோக்கிச் சென்றோம். பாதி வழியில் எங்களை வந்தது அழைத்துக்கொண்ட அரவிந்தன் அவருடைய வீட்டிற்கு அழைத்துச்சென்றார். வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு இடத்தில் நின்று, “சார் நீங்க இது வழியா வாங்க நான் அப்படியே வந்துடுறேன்” என்று கூறிவிட்டு எங்களுடைய பதிலை எதிர்பார்க்காமல் சுமார் நூற்று ஐம்பது மீட்டர் சுற்றிக்கொண்டு வந்தார். நாங்கள் நேர் பாதையிலிருந்து வெறும் ஐம்பதடி தூரத்தில் வீட்டை அடைந்தோம். இந்த சுற்று வழி எதற்கு? ஆதிக்க சாதியினர் இருக்கும் தெரு வழியாக அரவிந்தனோ அவரது மக்களோ இன்று வரை நடக்க கூடாது.

வீட்டில் தினேஷ் அமர்ந்திருந்தார். உடன் அரவிந்தனின் அம்மா, பாட்டி மற்றும் அத்தை ஆகியோர் இருந்தனர்.

என்ன நடந்தது என்பது பற்றி தினேஷ் கூற ஆரம்பித்தார்.

தினேஷ் - அரவிந்தன்
தினேஷ் – அரவிந்தன்

“ஊர்ல திருவிழா நடக்குது நீ வாடான்னு அரவிந்தன் எனக்கு ஃபோன் பன்னி கூப்பிட்டான் சார், அதனால திருவிழா அன்னை நான் ஒரு ஏழரை மணிக்கே இங்க வந்துட்டேன். நைட்டு ஒரு பதினோரு மணி இருக்கும், அப்ப கோவில்ல கூத்து நடந்துகிட்டிருந்துச்சி. எனக்கு ஒரு ஃபோன் கால் வந்ததுனால பேசுறதுக்காக அங்கிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு புளிய மரத்துக்கு கீழே வந்து நின்னு பேசிக்கிட்டிருந்தேன். அப்ப ஒரு ஆறு பேரு வந்தானுங்க, வந்து யார்டா நீ, எந்த ஊர்டா, இங்க என்னாடா பன்றன்னு கேட்டானுங்க.

நான் கனகம்பட்டி தான், பேரு தினேஷ், அரவிந்தன் வீட்டுக்கு வந்திருக்கேன்னு சொன்னேன். கனகம்பட்டில எங்க, ஊருக்குள்ள இருக்கியா ரோடு மேல இருக்கியான்னு கேட்டானுங்க. ரோடு மேல தான் இருக்கேன்னு சொன்னேன். ரோடு மேல இருக்கன்னா கொறப்பயனா நீன்னு கேட்டாங்க.

எதுக்கு சாதியச் சொல்லி பேசுறீங்கன்னு கேட்டதுக்கு, எங்களையே எதிர்த்து பேசுறீயான்னு அதுல ஒருத்தன் அடிச்சிட்டான். உடனே நான் அரவிந்தன்கிட்ட போய் நடந்ததை சொல்லி வந்து கேளுடான்னு சொன்னேன். அவனும் வந்து கேட்டான், கேட்டதுக்கு அவனையும் சேர்த்து அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

என்னை பருத்தி தோப்புக்குள்ளயும் அவனை மாந்தோப்புக்குள்ளயும் இழுத்துட்டு போய் அடிச்சாங்க. என்னோட ஃபோன் காசு எல்லாத்தையும் புடுங்கிகிட்டாங்க.

அப்ப உங்களை என்ன பன்னாங்க அரவிந்த் ?

தினேஷ்
தினேஷ்

தினேஷையும் என்னையும் அடிச்சு ஆளுக்கொரு பக்கம் இழுத்துட்டு போய்ட்டாங்க. அப்புறம் நான் தினேஷை பார்க்கல, அவன் எங்கையாவது தப்பிச்சு போயிருப்பான்னு நினைச்சேன். அதுக்கப்புறம் ஒரு பனிரெண்டு மணி போல ரகுபதி, பாலாஜின்னு ரெண்டு பேரு வந்து உன்னை யாரோ கூப்பிடுறாங்கன்னு கூப்பிட்டாங்க. அவங்க சொன்ன இடத்துக்கு வந்து பார்த்தா அப்பயும் பத்து பேர் தினேஷை அடிச்சிட்டிருந்தானுங்க. நான் போனதும் இந்த கொறத் தே.. பையன் தான் இவனுக்கு சப்போர்ட்டுக்கு வந்தான்னு சொல்லி என்னை மறுபடி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

என்னை அடிச்சி மறுபடியும் மாந்தோப்புக்குள்ள இழுத்துட்டு போனானுங்க. அங்க ஒரு கல்லு மேல முட்டி போட வச்சி ரெண்டு பேரு என் தொடை மேல ஏறி நின்னு மிதிச்சானுங்க. வலி தாங்க முடியாம கத்துனதுக்கு, சாமல்பட்டி மணிங்கிறவன் கொறத் தே.. பயலே என்னடா கத்துறன்னு வாயில துணிய வச்சி திணிச்சி கழுத்துல பெல்ட்டை சுத்தி இறுக்கி, இது ஸ்டியரிங் புடிச்ச கைடான்னு சொல்லி கன்னத்துலயே மாறி மாறி அறைஞ்சான்.

மத்தவனுங்க எல்லாம் சட்டைய கிழிச்சி செருப்பு, கம்பி, பெல்ட்ன்னு எல்லாத்துலயும் அடிச்சானுங்க. வலி தாங்க முடியல, தாகமா தவிச்சு தண்ணி தண்ணின்னு கேட்டேன். அதுக்கு சாமல்பட்டி மணிங்கிறவன், இந்த கொறத் தே.. பையனுக்கு தண்ணி வேணுமாம் மூத்திரத்தை கொடுங்கடான்னு சொன்னான். உடனே தேவேந்திரன்கிறவன் அப்படியே என் வாயில யூரின் பாஸ் பண்ணிட்டான்.

அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு எனக்குத் தெரியல. அந்தப் பக்கம் ஒரு பப்ளிக் டாய்லெட் இருக்கு அதுக்கு பின்னாடி கொண்டு வந்து போட்ருக்கானுங்க. காலையில அந்த பக்கம் வந்த எங்க மாமா தான் என்னை தூக்கிட்டு வந்து வீட்ல போட்டாரு.

என்னை வீட்டுல கொண்டு வந்து சேர்த்த கொஞ்ச நேரத்துல அந்த பசங்களோட அம்மா அப்பா ஊர்க்காரங்க எல்லாம், அரவிந்தன் எங்கன்னு கேட்டுக்கிட்டு எங்க வீட்டுக்கு முன்னாடி கூடிட்டாங்க. வந்தவங்க எல்லாம் என் பையன் அடிச்சானா, என் பையன் அடிச்சானான்னு கேட்டாங்க.

அடிச்சது யார்ன்னு எனக்குத் தெரியும் நான் பார்த்துக்கிறேன் விடுங்கன்னு சொன்னேன். நீ எங்க பார்த்துக்கிறியோ பார்த்துக்க எங்களுக்கும் போலீஸ்ல ஆள் இருக்கு நாங்களும் பார்த்துக்கிறோம்னாங்க.

அப்புறம் நானும் மாமாவும் வண்டியை எடுத்துக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பினோம். ரோட்ல இருக்க அரச மரத்துக்கிட்ட ஒரு மாரியம்மன் கோவில் இருக்கு, அங்கே எல்லோரும் கூட்டமா கூடி நின்னுகிட்டு எங்களை ஹாஸ்பிடலுக்கு போக விடாம வழியை மறிச்சுக்கிட்டு, பஞ்சாயத்து பேசிட்டு தான் போகனும், ஊருக்கு கட்டுப்படுறீங்களா இல்லையான்னு சொல்லி வண்டி சாவிய புடுங்கிகிட்டாங்க.

அரவிந்தனின் முதுகில் தழும்புகள்
அரவிந்தனின் முதுகில் தழும்புகள்

 

பஞ்சாயத்துக்கு கட்டுப்பட முடியாதுன்னு ஒரு மணி நேரமா நிக்கிறோம். அந்த நிலைமையிலயும் எங்களை போக விடாம தடுத்துக்கிட்டு நிக்கிறாங்க. கடைசில, போறதுன்னா பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு போங்க கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு போகாதீங்கன்னு சொன்னாங்க. என்னால அதுக்கு மேல நிக்க முடியல மயக்கம் வர்ற மாதிரி ஆகிடுச்சு. சரி பிரைவேட் ஹாஸ்பிடலுக்கே போறோம்னு சொல்லிட்டு கனகம்பட்டிக்கு வந்து தினேஷையும் கூட்டிகிட்டு ஊத்தங்கரை கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனோம்.

ஹாஸ்பிடலுக்கு ரெண்டு போலீஸ்காரங்க வந்தாங்க. அதுல சேட்டுங்கிறவரு தான் எங்கிட்ட வாக்குமூலம் வாங்கினாரு. ரெண்டு நாள் ஊத்தங்கரை ஹாஸ்பிடல்ல இருந்தோம், 6-ம் தேதி தர்மபுரியில் அட்மிட் ஆனோம். 11-ம் தேதி டிசார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தோம். வீட்டுக்கு வந்து எஃப்..ஐ.ஆர் காபியை வாங்கி பார்த்தா நான் சொன்ன எதுவுமே அதுல இல்ல. உடனே தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநில துணைத்தலைவர் ரவியை பார்த்து விசயத்தை சொன்னேன். 13-ம் தேதி நானும் அவரும் போய் மறுபடியும் ஒரு எஃப்.ஐ.ஆர் கொடுத்தோம்.”

“வாக்குமூலத்துல என்ன சொல்லிருந்தீங்க என்ன இல்லை ?”

“கம்பில அடிச்சது, பெல்ட்டால கழுத்தை இறுக்கினது, யூரின் பாஸ் பன்னது, கொறத் தே.. பயான்னு ஜாதிப் பேரைச்சொல்லி திட்டினது எதுவுமே இல்ல. சும்மா கையிலயும், பெல்ட்லயும் அடிச்சதா இருந்துச்சு.”

“அடிச்சவங்களை எல்லாம் உங்களுக்கு தெரியுமா ?”

“எல்லோரையும் தெரியாது சிலரைத் தெரியும். ஏழு பேரை அடையாளம் காட்டியிருக்கேன்.”

“மொத்தம் எத்தனை பேர் அடிச்சாங்க ?”

“நாற்பது பேர் இருக்கும்.”

“இப்ப ஊருக்குள்ள நிலைமை எப்படி இருக்கு?”

அரவிந்தன்
அரவிந்தன்

“ஊரே எங்க மேல பகையா இருக்கு. 9 -ம் தேதி நாங்க தருமபுரில இருந்தோம். வீட்ல யாரும் இல்ல. அந்த நேரம் பார்த்து வீட்டுக்கதவை உடைச்சி டி.வி, சிலிண்டர், டி.வி.டி பிளேயர் எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ருக்காங்க. யார் மேல கம்ப்ளெய்ண்ட் கொடுக்குறது? யாரு செஞ்சதுன்னு தெரிஞ்சா கொடுக்கலாம் யாருன்னே தெரியாதப்ப என்ன செய்றதுன்னு தெரியாம அப்படியே விட்டுட்டோம். ஆனா கொறவரே கொறவரோடதை திருடிருப்பாங்கன்னு அவங்க சொல்றாங்க.”

“கைதானவங்க எல்லாம் இப்ப ஜாமீன்ல வந்துட்டாங்க, ஊருக்குள்ள உங்களை பார்க்கும் போது எப்படி நடந்துக்கிறாங்க ?”

“எங்களுக்கு இப்ப உயிருக்கு பாதுகாப்பே இல்லை, யார் என்ன பண்ணுவாங்கன்னு தெரியல. ஊருக்குள்ள இருக்க கடைகளில் நின்னுக்கிட்டு, இந்த கொறத் தே.. பசங்கள விடமாட்டோம். ஒவ்வொருத்தனையா வெட்டி சாய்ப்போம், நாய்க்கனா கொறவனான்னு பார்க்கலாம்கிறாங்க.”

“அவங்க பொண்ணுங்கள நீங்க கிண்டல் பண்ணதாவும் அவங்க மேல கீ செயின் லைட்டை அடிச்சதாவும் சொல்றாங்களே?”

“தினேஷை அடிச்சாங்கன்னு நான் போய் கேட்டேன் சார் இது தான் நடந்த உண்மை. இதை எப்படி எல்லாம் ஜோடிச்சிருக்காங்க, என்ன நடந்துச்சிங்கிறதை எல்லாத்தையும் சட்டமே தீர்மானிக்கட்டும்.”

“உண்மையான பிரச்சினை என்னன்னா, பெருமாள் கோவில் ஏழு கிராம மக்களுக்கும் பொதுவானது. அங்கே தலித் மக்கள் கால் வைக்கக்கூடாது, திருவிழாவுக்கு வரக்கூடாது, இந்த நிலைமையில வெளியூர்காரனையும் கூட்டிட்டு வந்துருக்கானேன்னு தான் பொண்ணு கைய புடிச்சு இழுத்தான், கிண்டல் பண்ணிணான்னு பொய் சொல்றாங்க. அதை உண்மைன்னு நிரூபிச்சா என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குவேன்” என்று உணர்ச்சிவயப்பட்ட அரவிந்தன் இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த உண்மையான காரணத்தை, குறவர்களை கோவிலுக்கு வரவிடாமல் தடுக்கும் தீண்டாமை தான் இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்பதை தனது பதிலின் மூலம் அழுத்தமாக கூறினார்.

அரவிந்தனின் பாட்டி
அரவிந்தனின் பாட்டி

மேற்கொண்டு

“நாங்க வயசு பசங்க சார் எங்க மேல இந்த குற்றச்சாட்டை சொன்னா கூட பரவாயில்லை. எங்க மாமாவுக்கு 31 வயசு, அவரு திருவிழாவுக்கே வரல. எங்க தாத்தாவுக்கு 67 வயசு அவரும் திருவிழாவுக்கு வரல. 67 வயசான பெரியவர் பொண்ணுங்க கையை பிடிச்சு இழுத்ததா கம்ப்ளெய்ண்ட் கொடுத்திருக்காங்க” என்றார்.

திருவிழா நடந்த மறுநாளே அரவிந்தன் மருத்துவமனையிலிருந்தபடி போலீசிடம் புகார் அளித்திருக்கிறார். அவருடைய வாக்குமூலம் போலீசாரால் வேண்டுமென்றே தவறாக பதிவு செய்யப்பட்டதை அடுத்து 13-ம் தேதி மீண்டும் ஒரு புகார் கொடுத்திருக்கிறார். அதற்கு பிறகும் புகார் அளிக்காத ஆதிக்க சாதியினர் பொறுமையாக 20-ம் தேதி தான் காவல் நிலையத்திற்கு சென்றிருக்கின்றனர், அதாவது 18 நாட்கள் கழித்து. உள்ளூர் ஆதிக்கசாதி கட்டப்பஞ்சாயத்து மூலமே பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம் என்று காத்திருந்தது தான் தாமதத்திற்கு காரணம்.

இதற்கு முன்பும் பல முறை இக்கிராமத்தில் சாதியக் கட்டப்பஞ்சாயத்துகள் இம்மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. அரவிந்தன் கட்டப்பஞ்சாயத்திற்கு கட்டுப்படாமல் காவல் நிலையத்திற்கு சென்றதால் வேறு இல்லாமல் ஆதிக்க சாதியினரும் ஒரு பொய் புகாரை கொடுத்திருக்கின்றனர்.

அரவிந்தனின் அம்மா
அரவிந்தனின் அம்மா

“இதற்கு முன்பு நடந்த சில கட்டப்பஞ்சாயத்துகளைப் பற்றி சொல்லுங்களேன் ?”

“மாதம்மான்னு ஒருத்தங்க கர்ப்ப பை ஆப்ரேஷன் பண்ணியிருந்தாங்க, ஒரு பிரச்சினையில அவங்களை அடிச்சி ஆப்ரேஷன் பண்ணுன இடமெல்லாம் செப்டிக் ஆகி கிருஷ்ணகிரி ஹாஸ்பிடல சேர்த்திருந்தாங்க. போலீஸ்ல கேசும் கொடுத்திருந்தாங்க. உடனே ஊர்க்காரங்க எல்லாம் அவங்கள பார்த்து ஒனக்கு ஊர் வேணுமா இல்ல கேஸ் வேணுமான்னு மிரட்டி கட்டப்பஞ்சாயத்து பன்னி, கேஸ் கொடுத்தா ஊருக்குள்ள தண்ணி விட மாட்டோம், வழி விடமாட்டோம், கடையில எதுவும் தர மாட்டோம்னாங்க. அடிச்சவங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிச்சு கேசை வாபஸ் வாங்க வச்சு பிரச்சினையை முடிச்சிட்டாங்க.

இன்னொன்னு, எங்க மாமாவையும் அக்காவையும் அடிச்சி கைகால் உடைச்ச கேஸ். போலீஸ்ல புகார் கொடுத்து ஒரு வருஷமா கேஸ் நடந்துச்சு. அப்புறம் அதையும் இதே மாதிரி ஒரு முடிவுக்கு கொண்டு வந்துட்டாங்க.

அடுத்து, எங்க அத்தை காட்டுக்கு வெளிய போனப்ப அங்க மேல பாஞ்சி நைட்டியை கிழிச்சி, மானபங்கப்படுத்த முயற்சின்னு கேஸ். அந்த கேசும் ஒரு வருஷம் நடந்துச்சி. கேஸ் நடத்தினா ஊருக்குள்ள வாழ முடியாதுங்கிறதுனால வேற வழி இல்லாம ஒரு வருஷத்துக்கு மேல கேசை நடத்த முடியாம ஊரோடு ஒத்துப்போறோம்னு சொல்லிட்டோம். மானபங்கப்படுத்தினவனுக்கு மூவாயிரம் ரூபாய் அபராதம் விதிச்சு பிரச்சினையை முடிச்சாங்க.”

“உங்க பிரச்சினையையும் கட்டப்பஞ்சாயத்து மூலம் தீர்க்க முயற்சி பண்றாங்களா ?”

“ஆமா எங்ககிட்ட நேரடியா பேசுறது இல்ல. எங்க தாத்தா மூலமாவும் மற்ற சொந்தக்காரங்க மூலமாவும் முயற்சி செஞ்சுகிட்டு தான் இருக்காங்க.”

“நீங்க வழக்கை நடத்துறதுல உறுதியா இருக்கீங்க ஆனா கேசை தொடர்ந்து நடத்தினா குடிநீர் கிடைக்காது, பாதை விடமாட்டாங்க, மளிகை பொருட்கள் கிடைக்காது அதுக்கெல்லாம் என்ன பண்ணுவீங்க ?”

“அதெல்லாம் ஊருக்குள்ள கிடைக்காட்டி பரவாயில்லை சார். ஒரு டிராக்ட்டர் தண்ணி 500 ரூபாய் ஆகுது ஆனாலும் பரவாயில்ல எங்க சமுதாய மக்கள் எல்லோருக்கும் சேர்த்து அந்த தண்ணியை மொத்தமா வாங்கிக்குவோம். பாதையை பொருத்த வரைக்கும் சுத்தி வளைச்சு போகனும். மளிகை பொருள் எல்லாம் கல்லாவியில் (கல்லாவி பக்கத்து ஊர்) கிடைக்குது. அங்கிருந்து மொத்தமா வாங்கிக்குவோம். ஆனா கேசை விட்டுட்டு கட்டப்பஞ்சயத்துக்கு உடன்படுறதா மட்டும் இல்லை. இதோடு இந்த பிரசினையை ஒரு முடிவுக்கு கொண்டு வரணும்னு நினைக்கிறோம்.”

“சிங்கப்பூர் போற திட்டம் ?”

ஆதிக்கசாதி பெண்கள்
ஆதிக்கசாதி பெண்கள்

“சிங்கப்பூர் போறது இப்போதைக்கு முடியதுன்னு நினைக்கிறேன். கேசுக்காக போலீசு கூப்பிட்டா போகனும், கோர்ட்டுக்கு போகனும், அதனால இப்போதைக்கு போக முடியாது.”

“ஊருக்குள்ள ரெண்டு சாதிக்குள்ளயும் இதுவரை கல்யாணம் ஏதாவது நடந்திருக்கா ?”

“ஒண்ணு கூட நடந்தது இல்ல.”

“அந்த சாதி பொண்ணுங்கள காதலிக்கணும்னு நீங்க விரும்பிருக்கீங்களா ?”

“நாங்க இங்க இருக்கிறதே இல்ல சார், நான் பெங்களூர்ல வேலை செய்றேன். எங்க வேலை உண்டு நாங்க உண்டுன்னு இருப்போம். அப்படி எல்லாம் நினைச்சது இல்ல.”

“சரி எதார்த்த்தில் தான் இல்லை கற்பனையில கூட நினைச்சது இல்லையா ?”

“இல்லை நினைச்சது இல்லை.”

“ஏன் ?”

“ஏன்னா அவங்க மேல் சாதி நாம கீழ் சாதின்னு நினைச்சிக்கிறது. அதனால அதையெல்லாம் யோசிச்சு கூட பார்த்தது இல்ல.”

“உங்களுக்கு எத்தனை வயசு ?”

“இருபது.”

“தினேஷ் உங்களுக்கு ?”

“பதினெட்டு.”

“இந்த சாதி பொண்ணுங்களை விடுங்க, வேற யாரையாவது காதலிக்கிறீங்களா ?”

“இல்லை சார்.”

“இதுவரை யாரையுமே காதலிச்சதில்லையா ?”

“அதுக்கெல்லாம் எங்க சார் நேரம் இருக்கு. பெங்களூர்ல வேலை செய்ற இடத்திலேயே தான் தங்கியிருக்கேன். அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.”

“உங்களுக்கு தெரிஞ்சி ரெண்டு சாதிக்குள்ளயும் ஒரு கல்யாணம் கூட நடந்தது இல்லையாம்மா?” என்று அரவிந்தன் அம்மாவிடம் கேட்டோம்.

“இல்லைங்க.”

“உங்க பையனை இப்படி செஞ்சவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கனும்னு நினைக்கிறீங்க ?”

“ஏதாவது நல்ல தண்டனையா கொடுக்கட்டும். நாலு வருஷம் ஜெயில்ல வைக்கட்டும். யார் தப்பு பண்ணியிருந்தாலும் தண்டனை கொடுக்கட்டும். ஆனா என் பையன் அப்படி பண்ணல” என்றார்.

“பொண்ணுங்க மேல சின்னதா கைப்பட்டாலே கேஸ் கொடுக்கிற இந்த காலத்துல கையப்புடிச்சு இழுத்தோம்னு சொல்றவங்க இருபது நாள் கழிச்சு கேஸ் கொடுக்க என்ன சார் காரணம்? எது உண்மை எது பொய்ன்னு கடவுளுக்குத் தெரியும் சார்! சட்டப்படி என்ன நடக்குதோ நடக்கட்டும்” என்றார் அரவிந்தன்.

அரவிந்தனின் வீடு
அரவிந்தனின் வீடு

“தலித் இளைஞர்கள் எல்லாம் ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ், பல்சர் பைக்கை வச்சுக்கிட்டு மேல் சாதி பெண்களை காதலிச்சு ஏமாத்துறாங்கன்னு ராமதாஸ் சொல்றாரே அதை பத்தி என்ன நினைக்கிறீங்க, உங்ககிட்ட பல்சர் பைக் இருக்கா ?”

“பைக்கு இருக்கு ஆனா என்னோடது இல்ல, எங்க மாமாவோடது, அதுவும் பல்சர் இல்ல. தலித் பசங்க இப்படி பன்றாங்க அப்படி பன்றாங்கன்னு அவருக்கு எப்படித் தெரியும். இந்த ஊர்ல என்ன நடக்குதுன்னு அவருக்கு தெரியுமா? அவர் ஊர்ல என்ன நடக்குதுன்னு அவர் சொல்லலாம். எல்லா எடத்திலயும் என்ன நடக்குதுன்னு சொல்றதுக்கு அவர் என்ன கடவுளா?

தலித் பசங்க அந்த பொண்ணை லவ் பன்றாங்க இந்த பொண்ண லவ் பன்றாங்கன்னு சொல்றது எல்லாம் அவங்க அரசியலுக்கு தான். அவங்க மெஜாரிட்டியா இருக்காங்க நாங்க மெஜாரிட்டியா இல்ல. குறவரோ, பறையரோ, அருந்ததியரோ நாங்க எங்க சாதியை பத்தி எங்கேயும் சொல்றது இல்ல. ஆனா அவங்களோ, நாங்கல்லாம் பாட்டாளி மக்கள் கட்சிடா, யாதவர் கட்சிடா அப்படிம்பாங்க. ஜாதியா சரி இருந்துட்டு போகுதுடா, ஜாதியப்பத்தி சொன்னா கடையில ஒருத்தன் சும்மா பொருள் தரமாட்டான், உழைச்சா தான் காசுன்னு நாங்க எங்க வேலையை பார்த்துக்கிட்டு இருக்கோம்.”

“மொத்தம் நாற்பது பேர் சேர்ந்து தாக்கியிருக்காங்க ஆனா ஏழு பேர் மேல தான் வழக்கு போடப்பட்டிருக்கு மற்றவங்க மேல போடாததற்கு என்ன காரணம் ?”

“ஏழு பேரை தான் எனக்கு தெரியும் மத்தவங்க எல்லாம் வெளியூர்காரங்க. தெரியாதவங்க மேல எப்படி கேஸ் கொடுக்கிறது? அடிச்சதுல முக்கியமானவன் சாமல்பட்டி மணிங்கிறவன் அவனை கைது பண்ணல. சாமல்பட்டில மணின்னு ஒரு ஆளே இல்லைன்னு போலீசு சொல்லுது. ஆனா அவன் என்னை அடிக்கும் போது சமல்பட்டில வந்து டிரைவர் மணின்னா யார்ன்னு கேட்டுப்பார்டா கொறத் தே.. பயலேன்னு சொல்லித் தான் அடிச்சான்.

போலீஸ்காரங்க அவங்களுக்கு சாதகமா நடந்துக்கிறாங்க. அதுக்கு காரணம் போலீஸ்ல அவங்க ஆளுங்க நிறைய இருக்காங்க. டி.எஸ்.பி கூட பேசும் போது என்ன சொல்றார்னா ‘ஒன்னுக்கு போனதெல்லாம் ஒரு விசயமாப்பா, இதையெல்லாம் ஏன் பெருசுபடுத்துறீங்க. பீஸ் கமிட்டி வச்சு நான் ஏதாவது பணம் வாங்கி தர்றேன் பேசாம சமாதானமா போங்கன்னு சொல்றாரு. குற்றவாளிகளை தண்டிக்க வேண்டிய போலீஸ் அதிகாரியே இப்படி பேசுறாரு.

திருவிழா நடந்த கிருஷ்ணன் கோவில்
திருவிழா நடந்த கிருஷ்ணன் கோவில்

குறவர் சங்க மாநிலத் துணைத்தலைவர் ரவி டி.எஸ்.பியை பார்த்து மனு கொடுத்த போதும், இதையெல்லாம் பெருசுபடுத்தாதீங்க எஸ்.சி/எஸ்.டி ஆக்ட்டெல்லாம் நான் ஆயிரம் கேஸ் பார்த்திருக்கேன் எதுவுமே நின்னது இல்ல, பேசி பணம் வாங்கித்தர்றேன் சமாதானமா போய்டுங்கன்னு பேசியிருக்காரு. அது நிக்கட்டும் நிக்காம போகட்டும் சார் நீங்க கேசை பைஃல் பண்ணி நடவடிக்கை எடுங்கன்னு சொன்ன பிறகு தான் அப்படி பேசுறதை நிறுத்தியிருக்காரு.

காவல் துறை மக்களுக்கு நண்பன்னு சொல்றாங்க, ஆனா அவங்க எதிரிகளுக்கு தான் நண்பனே தவிர பாதிக்கப்பட்டவங்களுக்கு இல்லை. பாதிக்கப்பட்டவங்களுக்கு முக்கியமான எதிரியே போலீஸ் தான்.

இந்த பசங்களுக்கு இந்த வயசுலயே இவ்வளவு சாதிவெறி இருக்குன்னா எதிர்காலத்துல எப்படி இருப்பாங்க சார். எதுக்கு இவ்வளவு ஜாதிவெறி ? இந்த கிராமத்துக்குள்ள தான் இப்படி நடந்துக்க முடியும் இதுக்கு வெளிய போய் இப்படி இருக்க முடியுமா ?

இவங்க சொல்றதை கேட்கலைன்னா தண்ணி விட மாட்டாங்க, வழி விடமாட்டாங்க, பொருள் கொடுக்க மாட்டாங்கன்னா எவ்வளவு அநியாயம் சார் ? எங்க அக்கா பையன் ஒரு சின்ன குழந்தை, அவன் ஒரு ரூபாயை எடுத்துக்கிட்டு மிட்டாய் வாங்க கடைக்கு போயிருக்கான். ‘ஏய் ஒங்க சாதிக்கெல்லாம் நாங்க தர்றது இல்ல போ போ’ அப்படியினிருக்காங்க. ஒரு குழந்தைக்கிட்ட கூட எப்படி நடந்துக்கிறாங்க பாருங்க.

இந்த ஊருக்கு வெளிய இந்த கட்டுப்பாடெல்லாம் செல்லுமா?” என்று கேள்வி எழுப்பியவர் அருகில் இருந்த நமது பையை சுட்டிக்காட்டி,

“ந்த பேகை தச்சது யாருன்னு யாருக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியுமா எனக்குத் தெரியுமா? இதை தச்சது ஒரு பறையரா இருக்கலாம், குறவரா இருக்கலாம், அருந்ததியரா இருக்கலாம். ஒரு கம்பெனில வேலை தர்றாங்கன்னா ஜாதி பார்த்தா வேலை தர்றாங்க? படிப்புக்காக தான் வேலை தர்றாங்களே தவிர ஜாதிக்காக இல்லை.

இங்கே காலம் காலமா இப்படி தான் சார் நடக்குது. நாளைக்கு எங்களுக்கு கல்யாணம் ஆகி குடும்பம் குழந்தைங்கன்னு உருவாகலாம். அப்பவும் இப்படி ஊர்க்கட்டுப்பாடு, பொருள் தர மாட்டோம், நடக்க விடமாட்டோம்கிற நிலைமை இருக்கக்கூடாது. இதெல்லாம் எங்க அம்மா அப்பா காலத்தோட முடியனும்.

karuvanur-caste-atrocity-11அவங்க பாட்டுக்கு அவங்க இருக்கட்டும் எங்க பாட்டுக்கு நாங்க இருக்கோம். நாங்க கீழ் சாதி தாங்க இல்லைன்னு சொல்லலை, ஆனா யாரா இருந்தாலும் உழைச்சா தான் சோறு. அவங்க வேலையை அவங்க பாக்கட்டும் எங்க வேலையை நாங்க பாக்குறோம். இந்த நிலைமையை ஒரு முடிவுக்கு கொண்டு வரனும்னு தான் நாங்க இப்ப ஊருக்கு கட்டுப்படாம துணிச்சலா இறங்கியிருக்கோம்.”

“பெங்களூர்ல என்ன வேலை செய்றீங்க ?”

“கேஸ் கட்டிங், வெல்டிங் வேலை சார். சிங்கப்பூர் போகலாங்கிறதுக்காக பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காக தான் ஊருக்கு வந்தேன். திருவிழா நடக்குது அதுக்காக வரணும்னே வரல வந்த இடத்துல இப்படி ஆகிடுச்சு. எனக்கு அப்பா இல்ல அம்மா மட்டும் தான் இருக்காங்க. வெளிநாடு போனா ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கலாம்னு நினைச்சேன். இப்ப அதுவும் முடியாம போச்சு” என்றார்.

அத்துடன் அரவிந்தனுடனான உரையாடலை முடித்துக்கொண்டு விடைபெற்றோம் அப்போது மாலை நான்கு மணியாகிவிட்டது. அவருடைய வீட்டை விட்டு கிளம்பி பேருந்துக்காக சாலைக்கு வந்தோம். காலையில் எங்களோடு பேருந்தில் வந்த, வாட்ச்மேன் வேலை செய்யும் பெரியவரும் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார். பகலில் தூங்கி எழுந்து மீண்டும் வேலைக்கு கிளம்பிவிட்டார். இவருக்கு கிடைக்கும் மாதச் சம்பளம் 5000 ரூபாய். வேலையோ 12 மணி நேரம், ஆனால் ஆதிக்க சாதி !

இக்கிராமத்தில் ஆதிக்க சாதியினர் என்று கூறிக்கொள்ளும் நூற்றுச் சொச்ச குடும்பங்களில் யாரும் நிலப்பிரபுக்களோ பண்ணையார்களோ இல்லை. கொஞ்சம் போல தரிசு நிலத்தை வைத்துக் கொண்டு மழைக்காக காத்திருக்கும் சாதாரண மக்கள் தான். அரவிந்தனை போல பல இளைஞர்கள் வெளியூர்களில் வேலை செய்கிறார்கள், பலர் லாரி டிரைவர்களாக இருக்கின்றனர். பிறர் கூலி வேலைகளிலும், விவசாய வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.

தம்மை யாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் நாயக்கர்கள், நாயுடுகள் என்றும் கூறிக்கொள்கின்றனர். தாய் மொழி தெலுங்கு, சாதி சான்றிதழில் யாதவர்கள் என்று பதிவு செய்திருக்கின்றர். தலித் மக்களை எல்லா சாதிகளும் ஒரே மாதிரி ஒடுக்குவதில்லை. இவர்கள் பார்க்க அமைதியாக இருக்கின்றனர். ஆனால் இவர்களின் சாதி ஆதிக்கம் பிற ஆதிக்க சாதியின் ஒடுக்குமுறைக்கு சற்றும் சளைத்தது இல்லை.

ஊர் மக்களே எதிர்த்த போதும் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ராமச்சந்திரன் ஊருக்குள் இருந்த தன்னுடைய நிலத்தை அரவிந்தனுக்கு விற்றார். அந்த இடத்தின் மதிப்பு 51,000 ரூபாய். அரவிந்தன் அதில் 40,000 ரூபாயை கொடுத்துவிட்டார். மேலும் கொடுக்க வேண்டியது 11,000 ரூபாய் தான். அந்த 11,000 ரூபாய்க்காக நிலப்பட்டாவை அரவிந்தனிடம் கொடுக்காமல் தன் கையிலேயே வைத்திருக்கிறார் ராமச்சந்திரன்.

ஊர் மக்களே எதிர்த்த போதும் அரவிந்தனை ஊருக்குள் வீடு கட்ட அனுமதித்த ராமச்சந்திரன் முட்டாள் அல்ல. அனைத்தையும் திட்டம் போட்டு தான் செய்திருக்கிறார். தற்போது அரவிந்தன் மீதும் அவருடைய மாமா, தாத்தா மீதும் பொய் புகார் அளித்திருப்பதும் இந்த ராமச்சந்திரன் தான். இவருடைய பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக தான் புகார் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் பணம் கொடுத்த பிறகும் வீட்டுமனை பட்டா தனக்கு கிடைக்குமா கிடைக்காதா என்கிற அச்சத்தில் இருக்கிறார் அரவிந்தன்.

இவர்கள் தேவர் சாதி வெறியர்களை போலவோ, வன்னியர்களைப் போலவோ முரட்டுத்தனமான நடந்துகொள்வதில்லை, ஆனால் தலித் மக்களை அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் புரிவதில் அவர்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல.

கிருஷ்ணகிரி மாவட்டம் முன்பு தருமபுரி மாவட்டத்துடன் இணைந்திருந்தது. நக்சல்பாரி இயக்கங்கள் இருந்ததால் தருமபுரி மாவட்டத்திற்கு என்று ஒரு புரட்சிகர பாரம்பரியமும் மரபும் இருந்தது.

1980 களில் வெளிப்படையான சாதி ஒடுக்குமுறை என்பது இப்பகுதிகளில் சுத்தமாக இல்லை என்றே கூறலாம். பல்வேறு சாதிகளுக்கு இடையில் சாதி மறுப்பு திருமணங்கள் நடப்பது மிகச்சாதாரண நிகழ்வாக இருந்தது. ஆனால் இன்று நக்சல்பாரி இயக்கங்கள் பின்னடைவை சந்தித்ததன் விளைவாகவும், சாதிவெறிக்கட்சிகள் வளர்ந்ததன் காரணமாகவும் நத்தம் காலனி தாக்குதல் போன்ற சம்பவங்கள், இம்மாவட்டத்தின் முற்போக்கு வர்க்க ஒற்றுமை மரபுக்கே இழிவைத் தேடித்தர துவங்கியிருக்கின்றன. அதில் ஒன்றாக இப்போது கருவானூரும் இணைந்திருக்கிறது.

சாதி ஒடுக்குமுறை நடக்கும் அனைத்து இடங்களிலும் போலீசு சாதிவெறியர்களுக்கு ஆதரவாக தான் இருக்கிறது. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறையே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சக்தியாக மாறியிருப்பதை போல, குற்றங்களை விசாரித்து நீதி வழங்க வேண்டிய நீதிபதிகளே கிரிமினல் குற்றவாளிகளாக மாறியிருக்கின்றனர். அவர்களிடமிருந்து நேர்மையான நியாமான தீர்ப்பை, அதுவும் சாதி ஆதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான இது போன்ற வழக்குகளில் எதிர்பார்ப்பது குதிரைக்கு கொம்பு முளைக்கும் என்று காத்திருப்பதை போன்றது. சில விதிவிலக்குகளை தவிர இந்திய நீதிமன்றங்கள் ஆதிக்க சாதிவெறியர்களுக்கு கடுமையான தண்டனைகள் அளித்ததாக வரலாறே இல்லை.

சுண்டூர், பதானிதோலா, லஷ்மண்பூர் பதே, கயர்லாஞ்சி, பரமக்குடி என்று ஒவ்வொரு ஊராக கூறிக்கொண்டே போகலாம். அத்தனை வழக்குகளிலும் நீதி மன்றங்கள் சாதிவெறியர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டிருக்கின்றன. சொல்லப்போனால் ஆதிக்க சாதிவெறியர்களுக்கு நீதிமன்றங்கள் பாதுகாப்பான இடமாகவே இருக்கின்றன.

சாதி ஒடுக்குமுறைக்கான தீர்வு நீதிமன்றங்களிலோ சட்டத்திலோ இல்லை. ஆதிக்க சாதியில் உள்ள ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களை நடத்துவதிலும், இறுதியில் இந்த பார்ப்பனிய சாதிய சமூகத்தை முற்றாக மாற்றியமைப்பதிலும் தான் சாதி ஒடுக்குமுறைகளுக்கான தீர்வு இருக்கிறது.

இந்தியா இன்றும் எப்படி இருக்கிறது என்பதற்கு கருவானூர் ஒரு சான்று. தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி அன்றாடம் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதற்கு அரவிந்தன் ஒரு இரத்த சாட்சியம். ஜனநாயக உணர்வு கொண்டோர் வெட்கி தலைகுனிவதோடு இந்த சாதி அமைப்பை வெட்டவும் முன் வரவேண்டும்.

– வினவு செய்தியாளர்கள்.

  1. “ஆதிக்க சாதியில் உள்ள ஜனநாயக சக்திகளை” could be written as non-brahmins, which includes all castes.

  2. தமிழ் பேசும் தமிழ் நாட்டு தொல்குடி மக்கள் மீது தெலுங்கு மொழியில் மாத்தாடும் யாதவ வந்தேரிகளின் தாக்குதல் . தமிழ் இனவாதம் பேசும் தலைகள் இதுக்கு என்ன சொல்றாங்க?

  3. அவர்கள் அதிமுகவின் ஆணைப்படி அவ்வப்போது கருணாநிதியை காய்ச்சுவதோடு தமது பணி முடிவுற்றுதாக எண்ணிக்கொள்வார்கள். அதற்கு மேல் அவர்களிடம் சரக்கு இல்லை.

  4. ஏன் வக்கீல் துணையோடு FIR பதிவு செய்ய வில்லை? அதை பற்றி எழுத வில்லையே?
    இதை வன்முறை என்ற முறையில் சட்ட ரீதியில் அணுகலாமே?
    இந்த கட்டுரையில் ஏன் பார்ப்பனீயத்தை பற்றி எழுதவில்லை?
    இதற்க்கு முழு காரணமும் பார்ப்பனர்கள் தான்….இல்லையா?

Leave a Reply to Uma Shankar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க