privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கபகத்சிங் - சோசலிசப் புரட்சியாளனா தீவிர தேசியவாதியா ?

பகத்சிங் – சோசலிசப் புரட்சியாளனா தீவிர தேசியவாதியா ?

-

“பகத்சிங், ஏகாதிபத்திய எதிர்ப்பு சோசலிசப் புரட்சியாளனே தவிர, தீவிர தேசியவாதி அல்ல!”

கத்சிங்கின் 84-வது நினைவு தினத்தையொட்டி சென்னை ஐ. ஐ. டி. மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரைநிகழ்த்திய பேராசிரியர் சமன்லால் அவர்களிடம் எடுக்கப்பட்ட நேர்காணலைச் சுருக்கித் தருகிறோம். பேராசிரியர் சமன் லால் ஐவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்திய மொழியியல் துறையில் 31 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்திய விடுதலை வரலாற்றில் புரட்சியாளர்களின் பங்கு திட்டமிட்டு மறைக்கப்படுவதற்கு எதிராக, புரட்சியாளர்களின் வரலாற்றை வெளிக்கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்றியவர். பகத்சிங்கை பற்றி 10- க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது சமீபத்திய நூலாக “பகத்சிங்கைப் புரிந்துகொள்வது” வெளிவந்திருக்கிறது. பகத்சிங் குறித்த விழிப்புணர்வு பேருரைகள் நிகழ்த்துவது, முன்னணி நாளேடுகளில் கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதுவது என்று முனைப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

மறுகாலனியாக்கச் சுரண்டலும் அடிமைத்தனமும், சாதிவெறி, பார்ப்பன இந்து மதவெறி உள்ளிட்ட எல்லா வகையான பிற்போக்குத்தனங்களும் தலைவிரித்தாடும் இன்றைய சூழலில் பகத்சிங்கின் அரசியல் கண்ணோட்டத்தை விளக்குகிறார் சமன் லால்.

ஏன் பகத்சிங்கை தங்களது ஆய்விற்கு தேர்ந்தெடுத்தீர்கள்? குறிப்பிட்ட காரணங்கள் ஏதேனும் உள்ளதா?

பேராசிரியர் சமன் லால்
பகத் சிங் குறித்து பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுநூல்களை எழுதி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பகத் சிங்கின் புரட்சிகர பாத்திரத்தை நிறுவிய பேராசிரியர் சமன் லால்.

எனக்கு இருபது வயதாக இருக்கும் பொழுது மன்மதநாத் குப்தாவின் They Lived Dangerously – Reminiscences of a Revolutionary என்ற நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மன்மதநாத் குப்தா இந்தியப் புரட்சியாளர்களுடன் விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்தவருள் முக்கியமானவர். 1925 ககோரி சம்பவத்தில் பங்கெடுத்த பொழுது அவர் சிறுவனாக இருந்தார். இச்சம்பவத்திற்குப் பின்னர் புரட்சிகர முன்னணியாளர்களான அஷ்பகுல்லா கான், ராம்பிரசாத் பிஸ்மில், ரோசன் சிங், ராஜேந்திர லஹிரி போன்றோர் தூக்கிலிடப்பட்டனர். மன்மதநாத்திற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் மன்மதநாத் குப்தா இந்தியா புரட்சியாளர்களின் வரலாற்றை மிகச்சிறப்பாக எழுதினார். நான் 1960-70-களில் ஹிந்தி பாக்கெட் புக் கிளப்பின் உறுப்பினராக இருந்த பொழுது, மன்மதநாத் குப்தாவின் “பாரத் கி கிராந்திகாரி”யை வாசிக்க நேர்ந்தது. இப்புத்தகத்தில் இருந்து பல்வேறு புரட்சியாளர்களின் வரலாற்றை எனது தாந்மொழியான பஞ்சாபியில் மொழிபெயர்த்தேன். எனது மொழிபெயர்ப்பு பஞ்சாபின் பல்வேறு இதழ்களில் வெளிவந்தன. குறிப்பாக, கத்தர் பார்ட்டியின் ஜலந்தர் பகுதி இதழான “தேஷ்பகத் யாதான்” இல் வெளிவந்தது.

தேஷ்பகத் யாதானில் ஆரம்பகால மொழிபெயர்ப்புகளுடன் தான் பகத்சிங்கைப் பற்றிய எனது பணி தொடங்கியது. (குறிப்பு; தேஷ்பகத் யாதானின் ஆரம்பகால வெளியீடுகளை துரதிருஷ்டவசமாக தான் தொலைத்துவிட்டதாகவும், ஜலந்தர் பகுதியிலேயே இதன் வெளியீடுகளை திரும்பப் பெறமுடியவில்லையெனவும் பேராசிரியர் குறிப்பிட்டார். 1970-களில் தேஷ்பகத் யாதான் நக்சல் எழுச்சியோடு தொடர்பு கொண்டிருந்ததன் காரணமாக ஆளும் வர்க்கம் இவ்விதழைத் தடைசெய்திருந்தது இதற்கான காரணங்களுள் ஒன்றாகும்).

பகத்சிங்கை அக்காலத்தில் உள்ளவர்கள் பார்க்கிற பார்வைக்கும் தற்பொழுதைய தலைமுறைகள் பார்க்கிற பார்வைக்கும் மாறுபாடுகள் உள்ளதா?

அன்றைய ஆளும் கட்சியான காங்கிரசின் பார்வை பகத்சிங் ஒரு தேசியவாதி; அதிலும் தீவிர தேசியவாதி என்பதாக இருந்தது. பகத்சிங்கின் புரட்சிகர சிந்தனைகளோ, மதங்களைப் பற்றிய நிலைப்பாடுகளோ ஒருபோதும் வெளியில் கொண்டுவரப்படவில்லை. குறிப்பாக, பள்ளிப்பாட புத்தகங்களிலும் பொதுவெளியிலும் பகத்சிங் ஒரு பிம்பமாக மட்டுமே முன்னிறுத்தப்பட்டார். இதன் காரணமாக பொதுமக்கள், பகத்சிங் ஒரு இலட்சியவாதி என்ற அளவில் மட்டுமே புரிந்து வைத்திருக்கின்றனர்.

தோழர் பகத்சிங்
காங்கிரசின் சரணடைவு, துரோகப் பாதைக்கு மாற்றாக, இந்திய விடுதலைக்குப் புரட்சிகரப் பாதையைக் காட்டிய தோழர் பகத்சிங்

பகத்சிங் ஒரு காத்திரமான எழுத்தாளர். அவர் கீர்த்தி இதழில் புனைபெயரில் எழுதியுள்ளார். கீர்த்தி, பஞ்சாபில் செயல்பட்ட இடதுசாரி பத்திரிகையாகும். பகத்சிங்கின் தேர்ந்த படைப்பான “நான் ஏன் நாத்திகன்?” போன்றவை இதில் வெளிவந்திருக்கின்றன. எனினும், தேசியவாதி என்ற பிம்பம் பகத்சிங்கின் இதர மதிப்பீடுகளையும் கொள்கைகளையும் திட்டமிட்டு மறைக்க பல்வேறு குழுக்களுக்குப் பயன்படுகிறது.

பஞ்சாபை விட பஞ்சாபுக்கு வெளியேதான் பகத்சிங் சரியான விதத்தில் இனங்கண்டுகொள்ளப்பட்டு புகழப்பட்டார். சான்றாக, தமிழ்நாட்டில் பெரியாரின் இயக்கம் பகத்சிங் பற்றிய புரிதலை மக்களுக்குக் கொண்டு சென்றதில் இதர மாநிலங்களைவிட முன்னோடியாக இருந்தது. “நான் ஏன் நாத்திகன்?” படைப்பு தமிழிலும், பகத்சிங் குறித்து குடியரசு இதழில் தலையங்கமும் வெளியிடப்பட்டன. ஆக, தமிழ்நாட்டையும் பஞ்சாபையும் ஒப்பிடுகிற பொழுது பஞ்சாபில் உணர்ச்சி ரீதியிலான பிம்பமே மேலோங்கியிருக்கிறது என்று கருதுகிறேன்.

10-chamanlal-captionகம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரை பகத்சிங்கின் பங்களிப்பைப் பெருமளவில் எடுத்துச் செல்லாதவர்கள் என்றே சோல்லலாம். பகத்சிங் ஒருபோதும் புரட்சியாளராக இவர்களால் முன்னிறுத்தப்பட்டதில்லை. இத்துணைக்கும் அஜய் கோஷ் போன்றவர்கள் பகத்சிங்குடன் உடனிருந்தவர்கள். இவர்களுக்குப் பகத்சிங்கைப் பற்றி நமக்கு தெரிந்ததைவிட அதிகம் தெரியும். இருப்பினும், பொதுமக்களிடம் பகத்சிங்கை எடுத்துச் செல்வதில் இவர்கள் பெரிய முனைப்பு காட்டவில்லை. பகத்சிங் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சோசலிசத்திற்காகப் போராடிய புரட்சியாளன் என்பதை எடுத்துச் சென்றிருந்தால் பொதுமக்களிடம் பகத்சிங்கைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கும். நக்சல்பாரி இயக்கமும் புரட்சியாளர்களும்தான் 1960-70-களில் பகத்சிங்கை சரியான முறையில் மக்களிடம் எடுத்துச் சென்றனர்.

1980 வரையிலும்கூட பகத்சிங்கைக் குறித்த தொகுப்பான வெளியீடு என்று ஒன்றுகூட இல்லை. அதற்கு முன்பு சிறுசிறு வெளியீடுகள் பல்வேறு மொழிகளில் வெளிவந்திருக்கின்றன. இதில் “நான் ஏன் நாத்திகன்?” தமிழில் வெளிவந்திருப்பினும் பிற மொழிகளில் மிகமிகக் காலம் தாழ்த்தியே வெளிக்கொண்டுவரப்பட்டன. இதில் சிவ் வர்மா, அஜய் கோஷ் போன்றவர்கள் பகத்சிங் குறித்து எழுதினாலும், பிபின் சந்திராவின் “நான் ஏன் நாத்திகன்?” மொழிபெயர்ப்பு 1980-களில்தான் பல்கலைக்கழக, ஆராச்சி மாணவர்களிடமும் அறிவுத்துறையினரிடமும் முன்வைக்கப்பட்டன. இதற்குப் பிறகுதான் “பகத்சிங் மார்க்சிஸ்ட்டா?” “மதங்களைப் பற்றிய பார்வை என்ன?” போன்ற தலைப்புகளில் விவாதமும் விமர்சனங்களும் தொடங்கப்பட்டன. 1970-கள் வரை பகத்சிங்கை பற்றி யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நிலைதான் இருந்தது. குறிப்பாக இந்துத்துவ சக்திகள், பகத்சிங் ஆர்.எஸ்.எஸ்.க்கு நெருக்கமானவர் என்று பல கதைகளை சோடித்தனர்; இன்றும் சோடிக்கின்றனர்.

"நான் நாத்திகன் - ஏன்?" என்ற தமிழ் மொழி பெயர்ப்பு நூலின் முகப்பு அட்டை
பகத் சிங்கின் தேர்ந்த படைப்பான “நான் நாத்திகன் – ஏன்?” என்ற தமிழ் மொழி பெயர்ப்பு நூலின் முகப்பு அட்டை.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு பகத்சிங் வழங்கிய அறிவுத்துறை பங்களிப்பு பற்றி..

பகத்சிங் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்புவரை, மக்களுக்கு பகத்சிங்கைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. அதற்குமுன் மக்கள், இந்தியாவை பாரதமாதா என்று போற்றிக் கொண்டிருந்தனர். சேலை அணிவிக்கப்பட்ட பாரதமாதா சிலையெல்லாம் கூட இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் 18-12-1928-ல் சாண்டர்ஸ் கொல்லப்பட்ட பொழுது லாகூரின் சுவரெங்கும் ஒட்டப்பட்ட சிவப்புச் சுவரொட்டிகள் மக்களின் கவனத்தைப் பரவலாக ஈர்த்தன. பகத்சிங், நாட்டின் அடையாளமாகக் கருதப்பட்டார். வெள்ளையர்களின் பாராளுமன்றத்தில் குண்டு வீசப்பட்ட பிறகு, அதை விளக்கி வெளியிடப்பட்ட “செவிடர்களைக் கேட்க வைப்பதற்கு” எனும் தலைப்பிலான பிரசுரம் மிகவும் பிரபலமான ஒன்று. அது ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உந்துதலை உருவாக்கியது. வழக்கிற்காக பகத்சிங் நீதிமன்றத்திற்கு ஒவ்வொரு முறை வரும் பொழுதும் விண்ணதிரும் புரட்சிகர முழக்கங்கள் மக்களால் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு முறையும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதம் பாடப்பட்டது.

10-chamanlal-caption-2நீதிமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 06-06-1929 உரை பகத்சிங்கின் பங்களிப்பிற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இங்குதான் அவர் “பாராளுமன்ற தாக்குதல், தனிபட்ட நபர் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அன்று; அது ஏகாதிபத்திய நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்” என்பதைத் தெளிவுபடுத்தினார். புரட்சி குறித்த கண்ணோட்டத்தையும், இந்திய விடுதலையையும் உரத்துக் கூறிய பகத்சிங்கின் வார்த்தைகள் மிக முக்கியமானவை.

ஆனால், பகத்சிங்கின் இத்தகைய பங்களிப்புகள் பொதுமக்கள் மத்தியில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. பொதுவுடைமைக் கட்சிகள் (போலி கம்யூனிஸ்டுகள் ) பகத்சிங்கின் இத்தகைய பங்களிப்பை அங்கீகரிக்கவும் இல்லை; மக்களிடம் எடுத்துச் செல்லவும் இல்லை. ஒருவேளை இவையெல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் மக்கள் மேலும் அரசியல்படுத்தப்பட்டிருப்பார்கள்.

பகத்சிங்கின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது திட்டமிடப்பட்டது என்று கருதுகிறீர்களா?

ஆம். இந்தியா என்றில்லை, எல்லா நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கொள்கைகளைத்தான் விரும்புகின்றன. கல்வியமைப்பின் மூலமாக அவர்கள் இளைஞர்களை அடிமைகளாகக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். பாடப் புத்தகங்களில் பகத்சிங்கின் வாழ்வை உள்ளது உள்ளபடி சொன்னால் மக்கள் முன் அம்பலப்பட்டுபோவோம் என்பது ஆளும் வர்க்கங்களுக்கு நன்றாகவே தெரியும். அதேசமயம், அவர்களால் பகத்சிங்கின் புகழைத் தடுத்து நிறுத்த இயலாது. இதன் காரணமாகவே பகத்சிங்கை தேசியவாதி, வீரதீரமானவர் என்ற அளவுடன் நிறுத்திக் கொள்கின்றன. பகத்சிங்கின் கம்யூனிசக் கொள்கைகள் முழுவதுமாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன.

நரேந்திர மோடி உரை
பகத் சிங்கைத் தமது ஆளாகக் காட்ட முயலும் இந்து மதவெறிக் கும்பல் : பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவுநாளையொட்டி பஞ்சாபிலுள்ள ஹூசைனிவாலா கிராமத்தில் அமைந்துள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தில் உரையாற்றும் ஏகாதிபத்திய விசுவாசி நரேந்திர மோடி.

பகத்சிங் எது போன்ற இந்தியாவை இலட்சியமாகக் கொண்டிருந்தார்?

இது மிகவும் தெளிவானது. சோவியத் யூனியன் போன்ற புரட்சிகர நாட்டை பகத்சிங் விரும்பினார் என்று கருதுகிறேன். பகத்சிங் 23 வயதிலேயே கொல்லப்பட்டார். அவர் வாழ்ந்த காலத்தில் தன் கண் முன்னே இருந்த தீர்வான 1917-ல் நடந்த புரட்சி போன்றதொரு சமூக மாற்றம் இந்தியாவிலும் வரவேண்டுமென்று விரும்பினார். பகத்சிங்கிற்கு லெனின் ஒரு வழிகாட்டியாகவும் ஆசானாகவும் இருந்தார். எனது எழுத்துக்களில் பகத்சிங் உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவின் லெனினாக வரக்கூடும் என்றே பலமுறை மதிப்பிட்டிருக்கிறேன். லெனின், மாவோ, ஹோசிமின், பிடல் காஸ்ட்ரோ, சே குவரா போன்று பகத்சிங்கும் ஒரு சிறந்த கம்யூனிச ஆளுமை ஆவார்.

சாதிக்குழுக்கள் கட்டபொம்மன் எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்; மருது சகோதரர்கள் எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார்கள். இதே போன்றதொரு நிலை பஞ்சாபிலும் நிலவுகிறதா?

ஆம். அடிப்படையில் இது மிகவும் இழிவான ஒன்று. இது பஞ்சாபிலும் நடைபெறுகிறது. சான்றாக உத்தம் சிங், பகத்சிங்கைப் பின்பற்றிய விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவர். இவர் ஜெனரல் டயரைக் கொன்றதற்காக லண்டனில் கொல்லப்பட்டார். ஆனால், இவர் நினைவு கூரப்படுவது விடுதலைப் போராட்ட வீரர் என்ற அடிப்படையில் இல்லாமல், அவர் கம்போஜ் என்கிற உட்சாதிப் பிரிவின் நாயகனாக முன்வைக்கப்படுகிறார். மறுகாலனியாக்கக் கொள்கைகளால் இன்றைக்கு மக்கள் சகல துறைகளிலும் நலிவுற்று இருக்கின்றனர். இதில் இருந்து திசை திருப்புவதற்கு, சாதி ரீதியான முன்னெடுப்புகள் ஆளும் வர்க்கங்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது.

எங்கெல்லாம் முற்போக்கு இயக்கங்களின் தீவிரம் குறைவாக இருக்கிறதோ, அங்கெல்லாம் இதன் தாக்கம் அதிகம் இருக்கிறது

பி.ஜே.பி. அரசு பதவியேற்றவுடனேயே சமஸ்கிருத வாரம் கொண்டினார்கள். இந்து-இந்தி-இந்தியா எனும் கொள்கைகளை வேகமாகத் திணித்து வருகின்றனர். இதுபற்றிய தங்களது கருத்து என்ன?

சமஸ்கிருதம் யாராலும் பேசப்படவில்லை. சமஸ்கிருதம் ஒரு வழக்காடு மொழியன்று. மாறாக, கிரேக்கமும் அரபும் இன்றளவும் வழக்காடு மொழிகளாக இருக்கின்றன. சீனம் மிகப் பழமையான மொழியாக இருப்பினும் இன்றளவும் வழக்காடு மொழியாக இருந்து வருகிறது. ஆனால் சமஸ்கிருதமோ பழமையான மொழி மட்டுமே. இன்னும் கடுமையாகச் சொல்வதானால், சமஸ்கிருதம் ஒரு செத்த மொழியாகும். இந்து வேதங்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அது யாராலும் வாசிக்கப்படாத ஒன்றாகத்தான் இருக்கிறது. இதன் பொருட்டே சமஸ்கிருதம் திட்டமிட்டுத் திணிக்கப்பட்டு வருகின்றது. இதைத்தாண்டி சமஸ்கிருதத்தில் இருக்கிற ஒரே ஆரோக்கியமான விசயம் ஆயுர்வேதம் ஆகும். சமஸ்கிருதத்திற்கு செலவிடுவதற்குப் பதில் 100 செயல்பாட்டு மொழிகளின் மீது கவனம் செலுத்தினால், அது ஆக்கப்பூர்வமான ஒன்றாக இருக்கும்.

ஒப்பிட்டுப் பார்த்தால் ஓர் உண்மை தெரியும். நம் நாட்டில் ஏழைகளின் மொழிக்கு அரசு எந்தவித மரியாதையையும் தருவதில்லை. பணக்காரர்கள் அல்லது குறிப்பிட்ட குழுக்களின் மொழிக்கு மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. இந்த வகையில் பார்ப்பனியமே கோலோச்சி வருகிறது. பார்ப்பனமயமாதல் சமஸ்கிருதத்தின் மூலமாக முன்நகர்த்திக் கொண்டு செல்லப்படுகிறது. சமஸ்கிருதம் உண்மையில் ஓர் ஒட்டுண்ணியாகும். பிற மொழிகளுடன் ஒப்பிடும் பொழுது அது ஒட்டுண்ணியாகத்தான் இருக்கிறது. ஒட்டுண்ணிகள் எதைச் சார்ந்து வாழ்கிறதோ அவ்வுயிரிகளிடமிருந்தே சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதைப்போல சமஸ்கிருதமும் பிற மொழிகளை உறிஞ்சி ஒட்டுண்ணியாக இருந்திருக்கிறது. அது பல இந்திய மொழிகளைத் தின்று செரித்திருக்கிறது. தத்துவார்த்த ரீதியாக பார்ப்பனியமும் சமஸ்கிருதத்தைப் போன்றே ஒட்டுண்ணியாகும். மற்ற இந்திய மொழிகளைப் பாதுகாக்க வேண்டுமெனில், இந்த ஒட்டுண்ணிகள் களையப்பட வேண்டும்.

தீண்டாமை மற்றும் சாதியைப் பற்றி பகத்சிங் கொண்டிருந்த கண்ணோட்டம் என்னவாக இருந்தது?

பகத்சிங், தன்னுடைய கட்டுரைகளில் தீண்டாமை மற்றும் சாதியைப் பற்றி எள்ளி நகையாடவே செய்வார். குறிப்பாக, “மேல்சாதிக்காரருடைய வீட்டின் அடுப்பங்கரைக்குள் நாய் நுழைய முடியும்; ஆனால் மனிதர்கள் போகமுடியாது” எனக் கூறுகிறார். தாழ்த்தப்பட்டோரின் ஒடுக்குமுறைக்கெதிராக பேசும் போது “ஓ, ஒடுக்கப்பட்டவர்களே! நீங்கள் சிங்கம் போன்றவர்கள்! விழித்தெழுங்கள்! உங்கள் உரிமைகளை நீங்களே பறித்துக் கொள்ளுங்கள்” என்கிறார். மேலும் புரட்சியின் மூலமே சாதியை ஒழிக்க முடியும் என்பது பகத்சிங்கின் எண்ணம்.
(குறிப்பு: 1926 அல்லது 1928 -இல் பிக்ரிதி பத்திரிகையில் “தீண்டாமை பற்றி” என்ற கட்டுரையை பகத்சிங் எழுதியுள்ளார். சாதி பற்றிய தன்னுடைய கட்டுரை ஒன்றில் அன்றைய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், மோடி அரசால் பாரத ரத்னா வழங்கி கவுரவிக்கப் பட்டிருப்பவருமான, இந்துத்துவ பாசிஸ்டுகளின் வழிகாட்டி, மதன் மோகன் மாளவியா தீண்டாமை குறித்து இரட்டை வேடம் போடுவதை அம்பலப்படுத்தியிருக்கிறார்.)

இன்றைய நிலையில் இந்திய இளைஞர்களுக்கு பகத்சிங்கின் போராட்டமும் கொள்கைகளும் எந்தளவு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

உரிமைகளுக்காகப் பிச்சையெடுக்க வேண்டும் என்பதை பகத்சிங் ஒருபோதும் கோரியதில்லை. எந்த வழிமுறைகளானாலும் மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். அது இல்லாதபொழுது பகத்சிங் கூறியபடி உரிமைகளைப் பறித்துக் கொள்வதுதான் நம் வழிமுறையாக இருக்க முடியும்.

நாம் சிறுவயதில் இருந்தே தொடர்ச்சியாக இரண்டு பெயர்களைக் கேட்டு வருகிறோம். அது டாட்டா மற்றும் பிர்லா ஆகும். இதுதவிர, இருபது பெரிய குடும்பங்களைப் பற்றி அறிவோம். ஆனால் தற்பொழுதோ புதுப்புது பெயர்களை அறிகிறோம். அதானி, அம்பானி என்று நூற்றுக்கணக்கான புதுப்புது அதானிகளும் அம்பானிகளும் வந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட பில்லினியர்கள் இந்தியாவில் இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிற தேசத்தில்தான், இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது? இந்த ஆளும் அமைப்பு முற்றிலும் தோற்றுவிட்டதைக் காட்டுகிறது.

மக்கள் இந்த அமைப்பிற்கு எதிராகப் போராட வேண்டும். அப்படி போராடுவது இந்த அமைப்பை நொறுக்கி புதிய அமைப்பைக் கட்டமைப்பதற்குத்தானே தவிர, இந்த அமைப்பைச் சீர்திருத்துவதற்கல்ல.

– நேர்காணல்: அழகு
___________________________
புதிய ஜனநாயகம், மே 2015
___________________________