privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்91% தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்

91% தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்

-

மிழ் நாட்டில் 06-05-2015 முதல் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு 16-05-2015 முடிய மொத்தம் 1.69 இலட்சம் விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. கடந்த ஆண்டு 2014-ல் மட்டும் மொத்தம் 2.11 இலட்சம் பொறியியல் இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு இது இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசா
ஒடிசாவில் அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளும் போலி ஆசிரியர்களை அமர்த்திய பட்டியலில் உள்ளன.

இது தொடர்பான ஓர் அதிர்ச்சிகரமான விசயம், ஜெயா கும்பலின் விடுதலையை ஒட்டிய பரபரப்புகளுக்கு மத்தியில் சத்தமேயில்லாமல் புதைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் 90% சுயநிதி பொறியியல் கல்லூரிகள் போலி ஆசிரியர்களைக் கொண்டிருக்கின்றன. அதாவது 8,842 சுயநிதி பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள், விரிதாளில் (எக்சல் (Excel) சீட்டில்) உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆள் இல்லாத கடைக்கு டீ ஆத்துவதைப் போன்று, போலி பெயர் பட்டியலைக் கணக்கு காட்டி கல்வி வியாபாரம் செய்துவருகின்றன மேற்படி டூபாக்கூர் கல்லூரிகள்.

ஒவ்வொரு சுயநிதி பொறியியல் கல்லூரியும் தங்கள் கல்லூரியில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியலை அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகத்திடம் (AICTE) சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலை ஆய்வு செய்த ராக்கேஷ் துப்புடு குழுவினர் இந்தியா முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பெயர்கள் போலியானவை என்பதை “கண்ட்ரோல் சர்ச் பட்டன்” மூலமாக அம்பலப்படுத்தி இருக்கின்றனர். இந்தக் கூத்தின் படி ஒரே ஆசிரியரின் பெயர் பல சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் சம்பளப் பட்டியலில் உள்ளது!

இதைப் புரிந்து கொள்ள ஓர் எளிய உதாரணம் உள்ளது. பல்வேறு பண்பலை வானொலி நிலையங்கள் ஒரே வாசகரின் பெயரை நேயர் விருப்பம் என்று பல பாடல்களுக்கு ஒலி பரப்புவார்கள். கேள்விப் பட்டிருக்கிறீர்களா? பத்தமடை எஸ் கந்தசாமி, குளப்பாக்கம் எஸ் கஜேந்திரன் என்ற பெயர்களையே நாள் முழுக்க வாசிப்பார்கள். இதே போன்று தமிழ்நாட்டில் மட்டும் உள்ள 90% சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 8,800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பெயர்களை அடித்துத் தள்ளியுள்ளன.

சான்றாக கன்னியாகுமரியில் வேளாளர் அறக்கட்டளை நடத்தும் KNSK பொறியியல் கல்லூரி மற்றும் NSK பாலிடெக்னிக் கல்லூரியில் மட்டும் 11 ஆசிரியர்களின் பெயர்கள் போலியானவை எனத் தெரியவந்துள்ளது.

ஆந்திரா கல்லூரிகள்
ஆந்திராவில் 91% கல்லூரிகள் போலி ஆசிரியர்களை கணக்கு காட்டியிருக்கின்றன.

தமிழகத்தில் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் கனகசுந்தரி நினைவு பொறியியல் கல்லூரி, அம்சவல்லி அறக்கட்டளை பாலிக்டெக்னிக், ஜேகே குஞ்சராம்பாள்-மீனாட்சி முதலியார் கல்வி அறக்கட்டளை பொறியியல் கல்லூரி என்று தினுசு தினுசான பெயர்ப்பலகை கல்லூரிகள் அரசியல் பினாமிகளாலும் சாராய வியாபாரிகளாலும் குற்றக்கும்பல்களாலும் நடத்தப்பட்டு வருகின்றன என்பதை பச்சைக் குழந்தை கூட அறியும். இக்கும்பல்கள் கேலிக்கூத்தாக்கியிருக்கிற மற்றொரு விசயம் தான் போலி பேராசிரியர்கள்.

ஏற்கனவே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பல சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றியிருப்பதை அறிந்திருப்பீர்கள். சான்றாக துணைநடிகர்களை பேராசிரியர்கள் என்று செட்டப் செய்து அங்கீகாரம் பெறுவது, தெர்மாகூல் அட்டையை வளைத்துப்போட்டு கம்யூட்டர் லேப் என்று கணக்கு காட்டுவது என்று நடக்கிற மோசடிகளை மாணவர்கள் மற்றும் புரட்சிகர இயக்கங்களின் போராட்டங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. ஆனால் தற்பொழுது வெளிவந்திருக்கிற பெயர் பட்டியல் மோசடி ஒட்டு மொத்த இந்தியாவில் தனியார்மயக்கல்வி அழுகி நாறுவதை ஒரேசேர படம் பிடித்துக் காட்டுகிறது. இது கல்வித் துறையில் தலைக்குமேலே வெள்ளம் போவதைக்காட்டுகிறது.

போலி ஆசிரியர்கள் விசயத்தில் ஒடிசாவிலும் உத்தரப்பிரதேசத்திலும் எல்லா சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் சிக்கியிருக்கின்றன. கல்லூரிகளின் சதவீதக் கணக்கில் 89% ஆந்திராவிலும், 91% தமிழ்நாட்டிலும், 96% மகாராஷ்ட்ராவிலும், 92% கர்நாடகாவிலும், 97% குஜராத்திலும், 100% ஒடிசாவிலும், 99% உத்தரப்பிரதேசத்திலும் போலி ஆசிரியர்களைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது ராக்கேஷ் துப்புடுவின் ஆய்வு.

தமிழ்நாடு தனியார் கல்லூரிகள்
தமிழ்நாட்டில் 91% தனியார் கல்லூரிகள் போலி ஆசிரியர்களை பட்டியலில் சேர்த்திருக்கின்றன.

இங்கு அமைப்பு முறை குறித்து ஒரு நியாயமான கேள்வி எழ வேண்டும். ஏ.ஐ.சி.டி.ஈ என்பது யாருக்கானது? இது யாருடைய நலன்களை பிரதிபலிக்கிறது? ராகேஷ் துப்புடுக் குழுவினரின் ஆதங்கப்படியே சொல்வதனால் “ஏ.ஐ.சி.டி.ஈ இணையத்தில் FACULTY  (ஆசிரியர்கள்) என்பதைக் கிளிக் செய்து எங்களாலேயே மிக எளிதாக போலி ஆசிரியர்களை அடையாளம் காணமுடிகிற பொழுது ஏ.ஐ.சி.டி.ஈ-யால் ஏன் இதை இனங்கண்டு விசாரணை நடத்தமுடியவில்லை” என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

அரசக்கட்டமைப்பு தகர்ந்து போய் முற்றிலும் ஆளத் தகுதியில்லாமல் குற்றக்கும்பல்களும் அரசியல் கூட்டங்களும் நீதித்துறையும் பத்திரிகையும் அழுகிநாறும் காலம் இது. இந்த அமைப்பால் சுயநிதி பொறியியல் கல்லுரிகளின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்த இயலுமா?

சான்றாக, கன்னியாகுமரியைச் சேர்ந்த வைரம் சந்தோஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளின் தரமதிப்பீட்டை வெளியிடவேண்டும் எனவும் இதனால் மாணவர்களால் கல்லூரிகளின் தரம் குறித்து தெரிந்துகொள்ள முடியும் எனவும் ஆனால் அரசு இந்த பட்டியலை வெளியிடாதது உள்நோக்கம் கொண்டது எனவும் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். இதை விசாரித்த டி.எஸ்.சிவஞானம் மற்றும் ஜி.சொக்கலிங்கம் அமர்வு, தரப்பட்டியலை வெளியிடவும் இரண்டுவாரங்களுக்குள் அரசு பதில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருக்கிறது. கடந்த ஆண்டும் நீதிமன்ற தலையீட்டின் காரணமாகவே இப்பட்டியல் வெளியிடப்பட்டது.

ஒரு தரப்பட்டியல் வெளியிடுவதற்கே ஒவ்வொரு ஆண்டும் இந்த அரசை நிர்ப்பந்திக்கும் பொருட்டு நீதிமன்றத்தின் படிகளை மிதிக்க வேண்டியிருக்கிறது என்றால் போலி பேராசிரியர்களை கொண்டிருக்கும் 91% தமிழ்நாட்டு பொறியியல் கல்லூரிகளின் கிரிமனல் குற்றங்களையும் நாடெங்கிலும் உள்ள 90%-க்கும் மேற்பட்ட அரசியல் பினாமிகளின் பொறியியல் கல்லூரிகளையும் இந்த அமைப்பால் தண்டிக்க முடியுமா?

பொறியியல் கல்லூரி சேர்க்கை
நாடெங்கிலும் உள்ள சுயநிதிபொறியியல் கல்லூரிகளில் காணாமல் போன 50,000 பேராசிரியர்களை “கொமாரசாமி-தத்து” நீதித்துறை கொண்டுவருமா?

பொதுவாக ஹேபியஸ் கார்பஸ் என்பது ஆட்கொணர்வு மனுவாகும். இதன்படி நாடெங்கிலும் உள்ள சுயநிதிபொறியியல் கல்லூரிகளில் காணாமல் போன 50,000 பேராசிரியர்களை “கொமாரசாமி-தத்து” நீதித்துறை கொண்டுவருமா? கிணற்றைக்காணவில்லை என்று வடிவேல் கொடுத்த பிராது ஒருவர் இருவர் என்றால் பார்க்கலாம். ஊரையே காணவில்லை என்றால் இந்த அமைப்பு யாருக்கானது?

இந்த இலட்சணத்தில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் நாற்றம் வெளிவந்த பிறகும் கூட இதில் சம்பந்தப்பட்டவர்களும் இந்த அரசும் பதில் சொல்லாமால் வாய்மூடி மவுனம் சாதித்து வருவதுடன் கல்லா கட்டும் நோக்கத்தில் கலந்தாய்வை நடத்த திட்டமிட்டிருக்கிறது.

சொல்லப்போனால் ஏ.ஐ.சி.டி.ஈ ஒரு போலியான அமைப்பாக இருக்குமோ என்று இந்த விசயம் நம்மை சந்தேகிக்க வைக்கிறது. இவ்வமைப்பின் கல்விக்கொள்கையின் படி பதினைந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது விதியாகும். மேலும் பேராசிரியர், இணைப்பேராசிரியர் மற்றும் துணைபேராசிரியரின் விகிதம் ஒவ்வொரு கல்லூரியிலும் 1:2:6 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.

போலி பெயர்பட்டியலின் விகிதங்களைக் கணக்கில் எடுக்கிற பொழுது தமிழ்நாட்டில் 91% பொறியியல் கல்லூரிகள் கிரிமினல்கள் ஆவர். இந்த நிலையில் இதைப் பற்றி விசாரிக்காமல் கலந்தாய்வு நடத்துவது என்பது முழுக்கவும் கல்லா கட்டும் வியாபாரமே! இது ஒரு கிரிமினல் மோசடியே!

உயர் கல்வி கொடுப்பது அரசால் மட்டும் சாத்தியமல்ல, தனியார் இன்றி பொறியியலாளர்களை உருவாக்க முடியாது என்று பிலாக்கணம் பாடியவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்? ஒருக்கால் இந்த மோசடி கல்லூரிகள் இல்லை என்றால் தமிழ்நாட்டில் கட்டிடம் கட்டும் தொழில் வளர்ந்திருக்காது, வேலை வாய்ப்பு கிடைத்திருக்காது என்று கூட அவர்கள் வாதிடலாம்.

அதன் பொருள் என்ன? பெருச்சாளியைக் கொல்ல வீட்டைக் கொளுத்துவதுதானே?

– இளங்கோ

செய்தி ஆதாரங்கள்