privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விசென்னை ஐ.ஐ.டி APSC தடை : ஹைதராபாத்தில் மோடி படம் எரிப்பு

சென்னை ஐ.ஐ.டி APSC தடை : ஹைதராபாத்தில் மோடி படம் எரிப்பு

-

Ambedkar Periyar Study Circle (APSC) தடையை கண்டித்து ஹைதரபாத் பல்கலைக்கழகத்தில் மோடியின் உருவப்படம் எரிப்பு!

பாசிச மோடி அதிகாரத்திற்கு வந்த பிறகு முற்போக்கு இயக்கங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மிக கடுமையான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. அதேசமயத்தில், இந்துத்துவத்தை வாழ்த்தி பேசுவதற்கும் சிறுபான்மை மக்களை தாக்குவதற்கும் சங்க பரிவார இயக்கங்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். பத்திரிகைகளும் தொலைக்காட்சி செய்திகளும் மோடி அரசின் ஓர் ஆண்டு வேதனைகளை மறைத்து சாதனைகளாக பட்டியலிட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்த பாசிச அரசை தோலுரிப்பது ஜனநாயக சக்திகளின்  தலையாய கடமையாகும்.

கடந்த ஓர் ஆண்டு காலமாக கல்வித்துறையில் பல சீரழிவுகளை இந்த மோடி அரசு ஏற்படுத்தி வருகிறது.

சமஸ்கிருத வாரத்தை கொண்டாடுவதற்கு ஆணை பிறப்பித்தது, சமஸ்கிருதத்தை கட்டாயமாக புகுத்தியது, கிறிஸ்மஸ் தினத்தன்று விடுமுறையை மறுக்க வேண்டுமென்றே வாஜ்பாயி குறித்த போட்டிளை பள்ளி மாணவர்கள் மத்தியில் நடத்தியது, வரலாற்றுத் துறையில் பழம் பஞ்சாங்கங்களை கொண்டு வந்தது என பல நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவை எல்லாவற்றிலும் பார்ப்பனிய மேலாதிக்க வக்கிரமும் மறுகாலனியாக்க நடவடிக்கைகளில் இருந்து மக்களின் கவனத்தை மடைமாற்றம் செய்யும் திட்டமுமே உள்ளன.

மேல்குறிப்பிட்ட நிகழ்வுகள் அனைத்தும்  மாணவர்களை குறிவைத்து அமல்படுத்தப்பட்டன. ஆனால், பெரிதாக பேசப்படும் உயர்கல்வி நிறுவனங்களில் நிலைமை மிகக் கொடுமையாக உள்ளது. பல மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் அமைப்பே இல்லை, காரணம் பல்கலைக்கழக நிர்வாகங்கள் மாணவர் தேர்தலை பல ஆண்டுகளாக நடத்துவதே இல்லை. உதாரணமாக, ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகள் பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University—EFLU) மாணவர் அமைப்பு முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது, மாணவர் தேர்தலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படுவதில்லை.

இந்நிலையில் பல மத்திய பல்கலைக்கழகங்களில் முற்போக்கு மாணவர் அமைப்புகளுக்கு மறைமுகமாக நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய வளர்ச்சியின் ஒரு அங்கமாக கருதப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (IITs) மாணவர்கள் தம்மை முற்போக்கு வாதிகள் என்று அடையாளப்படுத்துவதற்குக் கூட இயலாதநிலை ஏற்பட்டுள்ளது.

குஜராத் உள்ளிட்ட பல IIT-களில் இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் ஆய்வு மேற்கொள்ள விரும்பும் மாணவர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக சமஸ்கிருதம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளச்சொல்லி கட்டாயப் படுத்துவது போன்ற பார்ப்பனிய இம்சை பல பேராசிரியர்கள் மத்தியில் காணப்படுகிறது. ஹிந்துத்துவம் மேலோங்கி இருக்கும் இவ்வாறான மத்திய நிறுவனங்களில் முற்போக்கு அரசியலை பேசுவதென்பதே ஒரு பெரிய போராட்டமாக உள்ளது. மேலும், அவ்வாறு மாற்று அரசியலை பேசும் மாணவர்களை திட்டமிட்டு துறைரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளாகுவதும் இதுபோன்ற நிறுவனங்களில் ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது.

இந்நிலையில் இந்த நிறுவனங்களில் பரவி இருக்கும் பார்ப்பனிய காவி பயங்கரவாதத்தையும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தபட்ட மாணவர்களுக்கு எதிராக இந்நிறுவனங்களில் நிலவும் சூழலையும், இந்த பாசிச அரசின் மக்களுக்கு எதிரான திட்டங்களையும் மாணவர்களின் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை ஐ.ஐ.டி.யில் உருவாக்கப்பட்ட அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை dean of students (DOS) தடை செய்திருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அதேசமயத்தில் இதுபோன்ற தடைகள் மட்டுமல்ல இம்மாதிரியான நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடமில்லை என்பதனையும் மறைமுகமாக இந்தத் தடையின் மூலமாக ஆர்.எஸ்.எஸ் காவி கும்பல் நமக்கு சொல்லியிருக்கிறது. இங்கு குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில், ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஐ.ஐ.டி-களில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றளவிலும் பேராசிரியர்களை நியமிப்பதில் இடஒதுக்கீடு சரியாகப் பின்பற்றுவதில்லை.

முழுக்க முழுக்க ஒடுக்கப்பட்ட பிரிவினர்களுக்கு எதிராக இருக்கும் இந்த நிறுவனங்களை கண்டித்தும் கருத்து சுதந்திரத்திற்கு தடைவிதிக்க ஆணை பிறப்பித்திருக்கும் பாசிச மோடி அரசை வன்மையாக கண்டித்தும் நாடுதழுவிய அளவில் APSC வாசகர் வட்டத்திற்கு ஆதரவான போராட்டத்தை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம்.

துணைவேந்தரின் ஊழலை விவரித்தும் கட்டமைப்பு வசதிகள் சரியில்லை என்று கூறியும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் பல பல்கலைக்கழகங்களில் இருந்து  தொடர்ந்து மாணவர்கள் அமைப்புகளின் மூலமாகவும் பேராசிரியர்களின் அமைப்புகள் மூலமாகவும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றுக்கெல்லாம் பதில்கூட கூறாத இந்த அமைச்சகம் ஒரு பெயரிடாத மொட்டைக் கடிதத்திற்கு வினையாற்றி உடனேடியாக மாணவர் அமைப்பை தடைசெய்ய கோரி மறைமுகமாக உத்திரவிட்டிருக்கிறது.

ஏன் என்றால், இந்த அமைப்பு அவர்களின் அரசின் திட்டங்களில் உள்ள வக்கிரத்தையும், பார்ப்பன காவி பயங்கரவாததையும் துண்டுபிரசுரங்கள் வாயிலாக அம்பலப்படுத்தி இருக்கிறது. பெரியார் பிறந்த மண்ணில் இந்தத் தடையை விதித்து இருக்கும் இந்துத்துவத்தின் கூடாரமான IIT சென்னையையும் காவி கும்பலின் அதிகார மையமான பாசிச மோடி அரசையும் நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்தத் தடையை எதிர்த்து ஹைதராபத்தில் உள்ள ஒஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்களும் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழக மாணவர்களும் 30-05-2015 அன்று ஒஸ்மானிய பல்கலைக்கழக வளாகத்தில் மாலை ஐந்து மணியளவில் மோடியின் உருவப்படத்தை எரித்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

முன்னதாக “மோடி அரசு ஒழிக”, “போராடுவோம் போராடுவோம், பார்ப்பனிய அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவோம்” என்ற வாசகங்களோடு கோஷமிட்டவாறே பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் ஊர்வலம் வந்தனர். மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தையும் APSC மாணவர்களுக்கு ஆதரவையும் தெரிவித்தனர்.

apsc-solidority-protest-usmania-unversity

தகவல்:
ஆய்வு மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு மொழிகளுக்கான பல்கலைகழகம் (EFLU) ஹைதராபாத்