privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்மேகி நூடுல்ஸ் – பிரச்சினை காரீயமா ? முதலாளிகளின் காரியமா ?

மேகி நூடுல்ஸ் – பிரச்சினை காரீயமா ? முதலாளிகளின் காரியமா ?

-

32 இரண்டு ஆண்டுகளாக இந்தியக் குழந்தைகளின் இரைப்பையையும் பெற்றோரின் பணப்பையையும் விளம்பரங்களின் உதவியுடன் சுரண்டி வருகிறது பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே. இதன் ‘பிரபலமான’ உணவுத்தயாரிப்பான மேகி நூடுல்ஸ், அளவுக்கு அதிகமான அஜினோமோட்டோவாலும் காரீயம் கலந்திருப்பதாலும் நாடு முழுவதிலும் தடை செய்யப்பட்டு வருகிறது.

மேகி விவகாரம்
“நரகல்ல சீனி போட்டாக் கூட நகரத்தில வித்துறும்”

இதில் ‘பிரபலமான’ எனும் சொல்லிற்கு விளக்கமாக அன்றைக்கே 23-ம் புலிகேசி “நமது மக்கள் ஆட்டு மூத்திரத்தை சுத்த இளநீர் என்று விளம்பரப்படுத்தினாலும் வாங்கிக் குடிப்பார்கள்” என்று அர்த்தம் கொடுத்திருந்தார்.

அல்லது கிராமங்களில் கிழவிகள் இன்னும் சொலவடையாக “நரகல்ல சீனி போட்டாக் கூட நகரத்தில வித்துறும்” என்று யதார்த்தமாக நுகர்வுக்கலாச்சாரத்தைத் தோலுரித்ததுண்டு.

இதில் முத்தாய்ப்பாக இரண்டு விசயங்கள் இன்றைக்கு நாடெங்கிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

1. மக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் மேகி போன்ற பொருட்களை தடை செய் அல்லது கடும் சோதனை செய் என்று ஓட்டுக்கட்சிகள், என்ஜிஓக்கள், பொதுமக்கள், ஆளும் வர்க்க ஊடகங்கள் அனைவரும் கருத்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். மேகியை தமிழ்நாட்டில் இருந்து விரட்டிவிட்டதாக அம்மாவைப் புகழ்ந்தும் மேற்கு வங்கத்து தீதியை காய்ச்சியும் கார்ட்டூனில் காவடி ஆடியிருக்கிறது ‘தமிழ் இந்து’ நாளிதழ்.

2. மறுபுறம், மேகி விளம்பரத்தில் நடித்த நடிகர்களின் மீது வழக்குப்போட வேண்டும் என்று ஆதரவாகவும் எதிராகவும் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் விவாதம் போய்க் கொண்டிருக்கிறது.

முன்கூட்டியே ஒன்றைக் கராறாக சொல்லிவிடுகிறோம். நெஸ்லேவின் மேகி நூடுல்சைப் பொறுத்தவரை அஜினோமோட்டோ மட்டுமே பிரச்சனை அல்ல. கார்ப்பரேட்டுகளின் விளம்பரங்களால் கல்லா கட்டும் ஊடகங்களும் பிரச்சனையை உடல்நிலை, விழிப்புணர்வு தாண்டி போகவிடாமல் பொதுப்புத்தியை வடிவமைத்து வருகிறது.

மேகி விவகாரம்
நெஸ்லேவின் மேகி நூடுல்சைப் பொறுத்தவரை அஜினோமோட்டோ மட்டுமே பிரச்சனை அல்ல

மற்றபடி நடிகர்கள் பிரச்சனையை புலிகேசி தவிர வேறு யாரும் சிறப்பாகச் சொல்ல முடியாது. வெள்ளைக்காரன் ‘மா’மன்னனிடம் அக்கமாலா மற்றும் கப்சி விளம்பரப்படுத்துவதற்காக ‘நமது உள்ளூர் நாடக நடிகர்களை பயன்படுத்தப்போகிறோம்’ என்று சொன்னதற்கு மறுமொழியாக எமது புலிகேசி ‘கிராதகா!’ என்று பாராட்டுவார். இதைத் தாண்டி ஒரே ஒரு வாதம் மட்டும் எஞ்சியிருக்கிறது.

‘நடிகர்களுக்கு மேகி நூடுல்ஸ் பற்றி எப்படி மன்னா தெரியும்?’ ஆகையால் ‘எப்படி தண்டிக்க முடியும்?’ என்று வெள்ளந்தியாக நடித்துக் கொண்டு பத்திரிக்கைகள் கருத்துக்கணிப்புகள் நடத்துகின்றன. ஆனால் இத்துணை நிமிடத்திற்கு கோகோ-கோலாவை வாயில் வைத்து கொப்புளிப்பதற்கென்றே சச்சினும் ஹிருத்திக் ரோசனும் ஐஸ்வர்யாவும் கோடிக் கணக்கில் வாங்கிக் கொள்கிறார்கள் எனும் செய்தி இவர்களின் தொழில் ரகசியத்தை புட்டு புட்டு வைக்கின்றன. மாகி நூடில்சை வாங்கச் சொல்லி இவர்கள் மக்களிடம் வைப்பது சுகாதாரம், உடல் நலத்தை முன் வைத்தல்ல; தமது பிரபலத்தையே விற்கிறார்கள்.

இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் உதவும் கரங்கள் அமைப்பை நடத்தும் வித்யாகர், ‘எய்ட்ஸ் குழந்தையை தூக்கி அணைக்க வேண்டும்’ என்று உலக அழகி ஐஸ்வர்யா ராயிடம் கேட்ட போது உலக அழகியோ தனது மருத்துவரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு பதில் சொல்வதாக சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். உயிருள்ள ஒரு குழந்தையை தூக்குவதற்கே இவர்கள் இப்படி எச்சரிக்கையாக இருக்கும் போது அனைத்து குழந்தைகளும் உண்ணும் நூடில்சு குறித்து யாரிடம் கேட்டார்கள்? கேட்டால் அரசு அனுமதித்து விட்டதே என்று கூறலாம். எனில் எய்ட்ஸ் குழந்தைகைள வாரி அணைத்து முத்தமிடலாம் என்றும் அரசுதானே  கூறியிருக்கிறது?

மேகி விவகாரம்
‘நடிகர்களுக்கு மேகி நூடுல்ஸ் பற்றி எப்படி மன்னா தெரியும்?’ ஆகையால் ‘எப்படி தண்டிக்க முடியும்?’

விளம்பரங்களைப் பொறுத்தவரை எச்சிக்காசு பொறுக்கும் நடிகர்கள் எத்துணை காரியவாதிகளாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

இது ஒருபுறமிருக்க மேகியின் அடிநாதப் பிரச்சனை என்ன?

மேகி விசயத்தை முதலாளிகள் மிகுந்த கவலையோடும் அதிர்ச்சியோடும் நோக்குகிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் அதன் சந்தை படுத்து விட்டது. மக்களிடம் கொள்ளை இலாபம் அடிக்கும் முதலாளித்துவத்துக்கு இலாபத்தைப் பெருக்குவதற்கு புதுப்புது சந்தைகள் கண்டிப்பாக தேவை.

சந்தையில் பணம் புழங்காவிட்டால் அது முதலாளித்துவத்திற்கு மிகப்பெரும் கேடு! 2008-ல் உலகப்பொருளாதார பெருமந்தம் அனைத்து நாடுகளையும் தாக்கிய பொழுது (ஒவ்வொரு சில பல வருடத்திற்கும் பொருளாதார பெருமந்தம் என்பது முதலாளித்துவ இழவுக்கதையாகவே இருக்கிறது!) முதலாளிகள் புதிய சந்தைகளை உருவாக்குவதற்கு நாடுகளின் அரசாங்கங்களையே நம்பியிருந்தனர். இதில் இந்தியா, சந்தைக்கான தேவையை நிறைவேற்றும் பொருட்டு நிதிமூலதன விரிவாக்கத்திற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.

நெருக்கடி தருணத்தில் சந்தையை ஜாக்கி வைத்து தூக்கி நிறுத்த வேண்டுமானால் மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும். அதற்காகவே வட்டிவிகிதம் குறைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இப்படி இந்திய சந்தை முற்றி நிற்கும் நெருக்கடியில் தான் நெஸ்லே நிறுவனத்தின் மேகி விவகாரம் அஜினோமோட்டோவாக வந்து நிற்கிறது.

மேகி விவகாரம்
இந்திய சந்தை முற்றி நிற்கும் நெருக்கடியில் தான் நெஸ்லே நிறுவனத்தின் மேகி விவகாரம் அஜினோமோட்டோவாக வந்து நிற்கிறது.

முதலாளித்துவத்தை ஆதரிக்கிற அறிவுஜிவிகள் மேகி விவகாரத்தைப் பார்த்து பல்லைக் கடிக்கிறார்கள். உதாரணத்திற்கு தீரஸ் நைய்யார், “மேகி விவகாரம் சந்தைக்கு எந்தவிதத்திலும் ஆரோக்கியமானதல்ல” என்கிறார். விசயமறியாத நடுத்தர வர்க்கம் உடல்நலப் பிரச்சனையாக மேகி விசயத்தை பார்க்கிறது.

பிரபலமான பிராண்ட் நுகர்வோரிடமிருந்து அம்பலப்பட்டு நிற்பது சந்தை நெருக்கடிக்கு உவப்பானதல்ல. இன்றைக்கு நெஸ்லே மாட்டியது போல் நாளைக்கு ஒவ்வொரு நிறுவனமும் மாட்டினால் சந்தையின் நிலைமை என்னவாகும் என்று பிரச்சனையின் மையத்தை சரியாகவே தொட்டுச் செல்கிறார்கள் முதலாளித்துவ அறிவு ஜீவிகள்!

மேகி விவகாரம் வெளியே வருவதற்கு முன்னமே அரசு இதில் தலையிட்டு தடுத்திருந்தால் இன்றைக்கு பிரச்சனை கையை மீறிப்போயிருக்காது என்று அங்கலாய்க்கிறார்கள். முதலாளித்துவமே வளர்ச்சி என்று செல்போனையும், பிளாஸ்மா டிவியையும் வைத்து முடிவு செய்பவர்களுக்கு இந்த வாதம் கண்டிப்பாக அதிர்ச்சியளித்திருக்க வேண்டும்.

‘தொழில் துறையில் அரசு தலையிடவே கூடாது, பொதுத்துறையை தனியார்மயமாக்க வேண்டும், லைசன்ஸ் ராஜ் ஒழிக’ என்று லா பாயிண்டுகள் பேசியவர்கள் இன்று அரசு ‘தலையிட்டு’ தடுத்திருக்க வேண்டும் என்கிறார்கள். எதை ஐயா தடுத்திருக்க வேண்டும்? விளம்பரத்திற்கு செலவழிக்கும் தொகையில் ஐந்து சதவீதத்தைக் கூட தரக்கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு நெஸ்லே ஒதுக்கவில்லை. இவ்வளவு ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றெல்லாம் அரசு கூறியிருந்தால் எங்கள் தொழில் உரிமையில் எப்படி தலையிடலாம் என்றல்லவா கத்தியிருப்பார்கள்?

இன்றைக்கு மேகி விவாகரத்தால் சந்தையில் நெஸ்லேவின் பங்குகள் மூன்று சதவீதக்கும் மேல் விழுந்திருக்கின்றன. இதே போன்று ஒவ்வொரு நிறுவனமும் நுகர்வோர் எதிர்ப்புக்கு உள்ளானால் இந்திய சந்தைக்கு பெரும் ஆபத்து என்கின்றனர். சக முதலாளிகளோ இன்னும் ஆக்ரோசமாக நெஸ்லேவின் முட்டாள் தனத்தைக் கண்டிக்கின்றனர். அதாவது நெஸ்லே தனது பொருளை வாபஸ் வாங்குவதாக அறிவித்திருக்க கூடாதாம்.

அதற்கு சான்றாக மெக்டோனல்டை உதாரணம் காட்டுகின்றனர். மெக்டோனல்ட் உணவு விடுதியில் தெருவோர சிறுவன் கழுத்தைப் பிடித்து வெளித்தள்ளப்பட்ட பொழுது வந்த எதிர்ப்பினால் பிராண்ட் பாதிக்கவில்லை என்று மூர்க்கமாக பேட்டியளிக்கின்றனர். இவர்களின் மனநிலை என்ன சொல்கிறதென்றால் அற உணர்ச்சி அல்லது விழுமியங்கள் மீது அடிவிழுந்தாலும் கூட அதை துடைத்து விட்டு சந்தையில் நிற்க முடியும். ஆனால் முட்டாள் நெஸ்லே இதைக் கூட பயன்படுத்தவில்லையென்று கையைப் பிசைகிறார்கள்.

ஆனால் நெஸ்லே இதைத்தான் வேறு வார்த்தைகளில் கூறியிருக்கிறது. தனது பொருட்களில் தரக்குறைவு எதுவுமில்லை, தற்போது நுகர்வோருக்கு குழப்பம் ஏற்பட்டிருப்பதால் மேகியை திரும்ப பெறுகிறோம், எதிர்காலத்தில் இப்போதைய சேர்மானங்களோடு மாகி வெளிவரும் என்றே நெஸ்லே ஊடகங்களில் பேசிவருகிறது.

கூட்டிக் கழித்தால் என்ன வருகிறது? மக்களின் வாழ்க்கை, ஆரோக்கியத்திற்கும் பிராண்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அது சந்தைக்கு மட்டுமே கட்டுப்பட்டது. எத்தனை பேர் இறந்தாலும் சந்தையில் இருந்து பிராண்டை திரும்ப பெறவே கூடாது. இதுதான் முதலாளித்துவம் கூறும் அறம்.

முதலாளித்துவ அறிஞர்களின் திட்டப்படி, இது வெற்றிகரமான உணவுப் பாதுகாப்பு பிரச்சனையாக மடைமாற்றப்பட்டிருக்கிறது. நெஸ்லே இதை ஊதிவிட்டு விரைவிலேயே வரும். அதிக பட்சம் நுகர்வோர் சட்டத்தைப் பயன்படுத்தி ரூ 5000 அபராதம் விதிக்கப்படலாம். மற்றபடி தனது பிராண்டு பாதிப்புக்குள்ளானதை அடுத்து மீண்டும் தூக்கி நிறுத்த நட்சத்திரங்களை பெரும் செலவில் இருத்தும். தேவைப்பட்டால் நீங்கள் மதிக்கும் அறிஞர் பெருமக்களோ இல்லை அமைச்சர் பெருமக்களோ கூட அதை செவ்வனே செய்யலாம். அடுத்து நெஸ்லேவை எதிர்த்து எழுதுபவர்கள் மீது வழக்கு போட்டு அச்சுறுத்தலாம்.

ஆக மேகி பிரச்சினையை வெறும் உடல் நலம் குறித்த முன்னெச்செரிக்கை முத்தண்ணா பிரச்சினையாக மட்டும் பார்க்க கூடாது.

445 கோடி ரூபாய் விளம்பரத்திற்காக செலவிட்ட நெஸ்லே நிறுவனம் 19 கோடி ரூபாய் மட்டும் தரக்கட்டுப்பாட்டிற்கு செலவழித்திருக்கிறது. இதை வைத்துப் பார்த்தாலும்  மேகி விவகாரம் உணவுப் பாதுகாப்பு குறித்த பிரச்சனையல்ல. மாறாக மக்களை பணையம் வைத்து முதலாளித்துவ பயங்கரவாதம் நடத்தும் அப்பட்டமான இலாபம்-சுரண்டல் குறித்த பிரச்சனை.

நெஸ்லே உணவுத்துறைக்கு வருவதற்கு முன், குறுந்தொழில்கள் பட்டியலில் இருந்து பல சுயேச்சையான உழைப்புத் தொழில்களையும் சிறு குறு முதலாளிகளைக் இந்திய அரசு கொன்றிருக்கிறது. இதற்கு பா.ஜ.க மற்றும் காங்கிரசு இரண்டு கட்சிகளுமே காரணம்.

இன்றைக்கு இந்தப்பட்டியலில் மோடி அரசு மேலும் இருபது தொழில்களான ஊறுகாய், ரொட்டி, கடுகு எண்ணெய், கடலை எண்ணை, வீட்டு உபயோக மரப்பொருள்கள், பதிவேடுகள், நோட்டு புத்தகங்கள், மெழுகுவர்த்தி, சலவை சோப், தீக்குச்சி, பட்டாசு, ஊதுவத்தி, கண்ணாடி வளையல், ஸ்டீல் அலமாரி, ரோலிங் ஷட்டர் தயாரிப்பு, ஸ்டீல் சேர், ஸ்டீல் டேபிள், ஸ்டீல் பர்னிச்சர், பூட்டு, எவர்சில்வர் பாத்திரம், வீட்டு உபயோக அலுமனியப் பாத்திரம் என ஏகபோக முதலாளிகளுக்கு திறந்துவிட்டிருக்கிறது.

மேக் இன் இண்டியா, மேகி நூடுல்சை சமைத்த கதை இது தான்!

இது தெரியாத நம்மில் பலரும் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறோம் ‘அஜினோமோட்டோ உடம்புக்கு கெடுதி என்று’.

உண்மை என்ன? அஜினோமோட்டோ எனும் கெடுதியை சந்தைப்படுத்தி காசு பார்த்து விட்டு அதை நியாயப்படுத்தும் முதலாளித்துவம் எனும் கெடுதியை குறிபார்த்து அடிக்காமல் நாம் நம் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை வழங்கிவிட முடியாது.

– இளங்கோ

மேகி நூடுல்ஸ் – பன்னாட்டு நிறுவன உணவுப் பொருட்களுக்கு எதிராக திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆர்ப்பாட்டம்

குறிப்புகள் எடுக்கப் பயன்பட்டவை

  1. மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியில் சில சிறப்பியல்புகள்-லெனின்-கீழைக்காற்று வெளியீட்டகம்
  2. Reliance Retail removes 11 instant noodle brands from stores
  3. Maggi lessons for India
  4. Nestle India: Rs 19 crore for quality testing, Rs 445 crore for ads
  5. மேகி விற்பனை அதிகரிக்கக் காரணம் சோம்பல் மிகு தாய்மார்களே: பாஜக எம்.எல்.ஏ.
  6. மத்திய அரசின் அறிவிப்பு குறுந்தொழில்களைப் பாதிக்குமா?