privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்வெயிலில் மரணம் – ஏ.சி அறையில் எச்சரிக்கை

வெயிலில் மரணம் – ஏ.சி அறையில் எச்சரிக்கை

-

“அப்பப்பப்பப்பா கூலிங் கிளாஸ் போடலைன்னா ரெண்டு கண்ணும் அவிஞ்சுருமே…” என இந்த ஆண்டு கோடை வெயிலை பார்த்து அங்கலாய்ப்பவர்களா நீங்கள்?

ஆனால், பல கோடி மக்களுக்கு இது வெறும் அங்கலாய்ப்பல்ல, வாழ்வா சாவா போராட்டமாக உள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு இது வரை கோடை வெயிலுக்கு 1400 பேருக்குமேல் பலி கொடுக்கப்பட்டிருகிறார்கள். அதிக பட்சமாக ஆந்திராவில் 1020 பேரும், தெலங்கானாவில் 350 பேரும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

வெப்ப்ச சாவுகள்
பல கோடி மக்களுக்கு இது வெறும் அங்கலாய்ப்பல்ல, வாழ்வா சாவா போராட்டமாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இக்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. எனினும், கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை அரசு அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை வெளியிடத் தயாரில்லை என்பதே உண்மை.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெப்பத்தாக்கு நோய் (sun stroke) அல்லது உடலில் நீர் வற்றிப்போதலினால் (dehydration) மரணமடைகின்றனர். உடலின் வெப்பச்சமனிலை குலையும் பொழுது அதாவது உடல் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டும் பொழுது வெப்பத்தாக்கு நோய் ஏற்பட்டு அதிக பட்சமாக மரணத்தை விளைவிக்கிறது. ஆனால் இந்தியாவின் மத்திய பகுதிகளில் இந்த ஆண்டு வெயிலோ, புற வெப்பநிலையை 48 டிகிரி செல்சியஸ் அளவுக்கு ஏற்றியிருக்கிறது.

வெப்ப சாவுகள்
கடந்த 25 ஆண்டுகளில் வெப்பத் தாக்குதலால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை (அதிகாரபூர்வ பதிவுகளின்படி)

இங்கு கொல்லப்பட்டவர்கள் யாரும் “கடும் உழைப்பினால்” முன்னேறியதாக சொல்லப்படும் அதானி, ரத்தன் டாடா, நாராயண மூர்த்தி வகையறாக்கள் அல்ல. யாருடைய கடும் உழைப்பினால் மேற்படியார் குளுகுளு அறைகளில் காலத்தை கழிக்கிறார்களோ அந்த விவசாயக்கூலிகளும், கட்டுமானத் தொழிலாளர்களும் ஏனைய உழைக்கும் வர்க்கத்தை சார்ந்தவர்களுமே கொல்லப்படுகின்றனர்.

வெப்பத் தாக்குதல் சாவுகள்
கொல்லப்பட்டவர்கள் யாரும் “கடும் உழைப்பினால்” முன்னேறியதாக சொல்லப்படும் அதானி, ரத்தன் டாடா, நாராயண மூர்த்தி வகையறாக்கள் அல்ல

இந்தியாவிலேயே அதிக அளவு பேர் உயிரிழந்த ஆந்திர மாநில அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளின் துரித நடவடிக்கை என்னவெனில், விழிப்புணர்வு இயக்கம் என்னும் மலைப்பிரசங்கத்தை நடத்தி, மதியம் 1 மணிக்கும் 4 மணிக்கும் இடையே வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், வெளியில் போக வேண்டி வந்தால் தலையை வெயில் படாமல் அகன்ற தொப்பிகளால் மூடிக்கொள்ளுமாறும், வெளிர் நிற பருத்தி உடை அணியுமாறும், குடை பயன்படுத்துமாறும், நிறைய தண்ணீர் குடிக்குமாறும் கோடைக் கால “டிப்ஸ்” அளிப்பதுதான். கூடுதலாக, நகரங்களின் என்.ஜி.ஓக்களிடம் கையேந்தி தண்ணீர் பந்தல், மோர் வினியோகத்துக்கு ஏற்பாடு செய்கின்றனர்.

ஆமாம், இந்த அறிவுரையை எல்லாம் கேட்காமல் கொளுத்தும் 48 டிகிரி செல்சியஸ் வெயிலில் வெளியே சுற்றுவானேன், செத்துப்போவானேன்? என்ற கேள்வி தோன்றலாம்.

தினம் 200 ரூ கூலி பெறும் கட்டிடத்தொழிலாளியானா தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத்தை சேர்ந்த மகாலெட்சுமி இதற்கு பதில் சொல்கிறார். “இந்த வெயிலுக்கு பயந்து நான் வேலைக்கு வராமல் வீட்டுக்குள் இருந்தால் என் குடும்பத்துக்கு யார் சோறு போடுவது?”

வெப்பத் தாக்குதல் சாவுகள்
மதியம் 1 மணிக்கும் 4 மணிக்கும் இடையே வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு மலைப்பிரசங்கம்

அரசின் அபார  யோசனைப்படி வீட்டுக்குளேயே இருந்தால் மட்டும் என்ன  குலு மனாலி காற்றா வீசப்போகிறது? நாட்டில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு மின்சாரமென்றால் புளிக்குமா, துவர்க்குமா எனக்கூட தெரியாத நிலையில், கொஞ்சம் வசதி படைத்த திரிசங்கு சொர்க்கத்தில் ஊசலாடும் நடுத்தர வர்க்கத்தின் மின் விசிறி, ஏர் கூலர்களின் தலையில் கணக்கு வழக்கற்ற மின்வெட்டை சுமத்தி மங்களம் பாடியிருக்கிறது ஆந்திர அரசு.

2005-ல் ஐ.நா.வின் கணக்குப்படியே 7 கோடியே 80 லட்சம் வீடற்றவர்களை  கொண்ட இந்தியாவில், சாலையோரத்திலும், பாலத்தின் அடியிலும், சாக்கடையோரத்திலும்  வசிக்கும் மக்களை இவர்கள் எந்த வீட்டுக்கு போகச் சொல்கிறார்கள்? ஐ.நா வீடற்றவர்கள் என குறிப்பிடுவது தலைக்கு மேல் கூரை கூட இல்லாமல் தெருவில் உறங்குபவர்களை.

வெப்பத் தாக்குதல் சாவு
வெளியில் போக வேண்டி வந்தால் தலையை வெயில் படாமல் அகன்ற தொப்பிகளால் மூடிக்கொள்ள வேண்டுமாம்.

ஆனால், இந்தியாவின் கிராமங்களின் மண் சுவற்றின் மேல் வெய்யப்பட்ட பிய்ந்துபோன ஓலைக் குடிசைகளை, நகர் புறச்சேரிகள் மற்றும் புலம் பெயர்ந்த வட இந்திய கூலித்தொழிலாளிகளின் தகரக் கொட்டகைகளை ‘வீடு’ என்னும் வகைக்குள்ளேயே அடக்க முடியுமா? ஆக, இன்னும் கணக்கில் வராத கோடிக்கணக்கான உழைக்கும் இந்திய மக்களுக்கு வெயிலிலிருந்து பாதுகாப்பளிக்கும் குறைந்தபட்ச குடிசை கூட இல்லை என்பதே நிதர்சனம்.

மேலும், கோடை கால வெப்பநிலை கடந்த 15 வருட சராசரியை விட 2 லிருந்து 5 டிகிரி வரை அதிகரித்துள்ளது எனவும் பருவ மழை சரியான நேரத்திற்கு வராமல் போனதும் இந்த வெப்பநிலை தொடர்ந்து நீடிப்பதற்கு காரணமெனவும் இந்திய வளிமண்டலவியல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெப்பத் தாக்குதல் சாவுகள்
முதலாளிகள் குளு குளு அறையில் காலத்தை கழிக்க வெயிலில் உருகும் தொழிலாளிகள்

உடனே, ‘பேங்க்குலயே பணமில்லைன்னா செக்(காசோலை) குடுத்தவன் என்னய்யா பண்ணுவான்?’ என காரணத்தை ஆராயாமல் பருவ மழை மீது பழியை போடுகிறார்கள் அறிஞர் பெருமக்கள். வெப்பநிலை அதிகரிப்பதற்கும், பருவமழை முறைதவறுவதற்கும் காரணமான இயற்கை அழிவுகளை நிகழ்த்துவதும் முதலாளி வர்க்கம்தான் என்பது அந்த அறிஞர்கள் அறியாத ஒன்றல்ல.

  • தன் சொகுசுக்காய் ஏசி அறையில் அமர்ந்து கொண்டே பசுமை இல்ல வாயுக்களால் ஓசோனை கிழித்து போடுவது.
  • தாதுவளத்திற்காக தண்டகாரண்ய காடுகளை மொட்டையடித்து, நியமகிரி மலையை  கபளீகரம் செய்வது.
  • நீலமலை, கொடைக்கானல் மலைப் பகுதிகளை சுற்றுலா பெயரில் கபளீகரமாக்கி சராசரி மழை அளவைக் குறைத்து, காடுகள், புல்வெளிகளை அழித்து மழை நீரை விரயமாக்குவது.
  • நிலத்தடி நன்னீர் வளத்தையும், தாமிரபரணி, பாலாறு போன்ற ஆறுகளையும், ஏரிகளையும் ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் ஆக்கிக் கொழுப்பது

என்று தமது லாபத்துக்காக இயற்கையை அழிப்பவர்கள்தான் தான் இதற்கு பொறுப்பு. ஆனால், அதன் விலையை கொடுப்பவர்களோ உழைக்கும் மக்கள்.

வெப்பத் தாக்குதல் சாவுகள்
ஐஸ் கட்டியையே கட்டி இழுத்தாலும், வெப்பத் தாக்குதலிலிருந்து தப்பிக்க வழியில்லை!

கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை என சந்திரபாபு அரசு விஷயத்தை கை கழுவி விட்டு, அதை விட அதிமுக்கியமாக சந்திர சேகர ராவுடன் தெருவில் புரண்டும், மிகப்பெரிய கல்லறை தோட்டம் அமைக்குமளவு மாநிலமெங்கும் இழவு விழுந்து கிடக்கும்போது, புதிய தலைநகரத்துக்குச் செங்கல் நட்டும் ஊடக வெளிச்சத்தை தக்கவைத்துகொள்ளும் முயற்சியில் இருக்கிறது.

சாவு வீட்டிலும் சஃபாரி போட்டு செல்பி எடுக்கும் மோடியின் கூட்டணிக் கட்சிக்காரர் என்பதை நிரூபிக்க வேண்டுமா இல்லயா?

‘சண்டைல கிழியாத சட்ட எங்கைய்யா இருக்கு வெய்யலடிச்சா சாவத்தான் செய்வான்’ என `கனிவுள்ளத்தோடு` பேசும் நல்ல வாய்களும் இங்கே அதிகம் என்பதால் இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டியிருக்கிறது. இதைக்காட்டிலும் சுட்டெரிக்கும் வெப்ப நிலையும், சுரண்டலையும் கொண்ட வளைகுடா நாடுகளில் கூட கடும் வெய்யில் நேரத்தில் கட்டுமான வேலையை நிறுத்தி சில மணி நேரம் ஓய்வு கொடுக்கும் நடைமுறை இருக்கிறது.

வெப்பத் தாக்குதல் சாவுகள்
ஆறுகளையும், ஏரிகளையும் ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் ஆக்கிக் கொழுப்பது யார்?

ஆனால், இங்கு அதைப்பற்றிய எந்த வழிகாட்டுதலோஅல்லது சட்டமோ இல்லை, இருக்கின்ற போராடிப்பெற்ற தொழிலாளர்  உரிமைகளையே ஊத்தி மூடிக்கொண்டிருக்கும் பாசிஸ்டுகலின் கூடாரமான மோடி அண்ட் கோவும், இதுவரை மக்களுக்காக இயங்குவதாக வாய்ச்சவடால் அடித்துக்கொண்டிருக்கின்ற ஏனைய ஓட்டுப்பொறுக்கும் கட்சிகளும் இதைப்பற்றியெல்லாம் மூச்சுக்கூட விடவில்லை.

கொளுத்தும் வெயிலிலும் விவசாய மற்றும் கட்டுமானப்பணியில் கூலித்தொழிலாளர்கள் மீது சாட்டை சொடுக்குகின்றது முதலாளி வர்க்கம்.

முறை சார்ந்த மற்றும் முறை சாரா தொழிலாளர்கள் நலன், வேலை நேரம், ஊதியம், மருத்துவ உதவி, பணியிடப் பாதுகாப்பு என எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் இருக்கின்ற தொழிலாளர் நலச் சட்டங்களையும் சவக்குழிக்குள் அனுப்பிவைக்கிறது மோடி அரசு.

ஆக, இந்த 1400 பேர் கொல்லப்பட்டிருப்பது இயற்கைப் பேரழிவல்ல, பச்சைப்படுகொலை!

– எட்கர்

செய்தி ஆதாரங்கள்:

  1. “சுட்டெரிக்கும் வெப்ப நிலையும், சுரண்டலையும் கொண்ட வளைகுடா நாடுகளில் கூட கடும் வெய்யில் நேரத்தில் கட்டுமான வேலையை நிறுத்தி சில மணி நேரம் ஓய்வு கொடுக்கும் நடைமுறை இருக்கிறது”.

    இந்த வரியில் எனக்கு உடன்பாடு இல்லை. வளைகுடா நாடுகளில் தொழிலாளர்கள் இங்குள்ளதை விட மனிதாபிமானத்துடன் நடத்தப்படுகிறார்கள் என்ற கூற்று உண்மைதானா?

  2. எல்லா நாடுகளிலும் தொழிலாளிகளை நல்ல விதமாக கவனிக்கும் நிறுவனங்களும் உள்ளன, தொழிலாளிகளை நசுக்கி பிழிந்தெடுக்கும் நிறுவனங்களும் உள்ளன. வளைகுடா நாடுகளில் நான் பார்த்த சில கம்பெனிகள் தொழிலாளிகளை வெயிலுக்காக வேலையை நிறுத்த செய்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் அத்தனை வெயிலிலும் அவர்கள் ஏசி இல்லாத கூண்டு பேருந்துகளில் தான் கூட்டிச்செல்ல படுகின்றனர்.

  3. பனி பொழிவு காரணமாக ஆண்டுக்கு ஆராயிரம் பேர் சாவரானுங்க அதுக்கும் ஒசோன், ரியல் எஸ்டேட், ஏரி குளம் வற்றி போனது தான் காரணமோ??? அறிவு இல்லாத கட்டுரை ஆசிரியரை… ஆந்திராவில் 1 கோடி ஏழை மக்கள் இருக்கிறார்கள், இவர்களின் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், வேறு உடல் உபாதைகளினால் பாதிக்கப்பட்டவர்களும் தான் இறந்தது.. இதற்கு அத்தாட்சியும் உண்டு… பெரிய அறிவாளியாட்டம் எழுதாதே ….

    • யோவ் இந்தியன்….நீர் சொல்லுற தகவல் இந்திய அமைப்புச் சட்டத்திற்கே விரோதமா இருக்குய்யா…நாயுடுவும் ராவும் கேட்டாங்கன்னா அடுத்த நிமிடம் உமக்கு மரணம் தான்…அது மட்டுமில்லாம அண்ணன் கேடி ஆட்சி வேற நடக்குது, மக்களுக்கு சாவே வராதுன்னு அண்ணன் தேர்தல் அறிக்கையிலேயே கொடுத்துட்டாராம்ல….

      அவிங்களே ஒத்துகிட்டா கூட நம்ம இந்தியன் ஒத்துக்கவே மாட்டாரு….

  4. ///இதைக்காட்டிலும் சுட்டெரிக்கும் வெப்ப நிலையும், “சுரண்டலையும்” கொண்ட வளைகுடா நாடுகளில் கூட /// is there any word like mankind?

Leave a Reply to கற்றது கையளவு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க