privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஆர்.கே நகரில் அம்மாவின் அலப்பறைகள் !

ஆர்.கே நகரில் அம்மாவின் அலப்பறைகள் !

-

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி ஜெயா, நீதிமன்றத்தை வளைத்து நெளித்து வெளியில் வந்து முதல்வராகி தற்போது ஆர்.கே நகரில் செயற்கையாக ஒரு தேர்தலை உருவாக்கி போட்டியிடுகிறார்.

ஜெயா வேட்புமனு தாக்கல்
வேட்புமனு தாக்கல் செய்வதில் ஒரு ‘புரட்சி’

வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ஜெயலலிதா ஆர்.கே நகருக்கு வந்த போது போக்குவரத்து நெருக்கடியை மட்டும் ஏற்படுத்தவில்லை, புரட்சித்தலைவி என்கிற பெயருக்கு ஏற்றாற் போல வேட்புமனு தாக்கல் செய்வதில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறார்.

இதற்கு முன்பு நடந்த இடைத்தேர்தல்களை விட ஆர்.கே நகர் தேர்தலில் தேர்தல் ஆணையம் அ.தி.மு.க வின் துணை அமைப்பு போலவே செயல்பட்டு வருகிறது. ஜெயா வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற போது நடந்த கூத்துகளை பத்திரிகைகளே கிண்டல் செய்கின்றன. ‘வேட்பாளராக ஜெயலலிதா நிற்பதால் தேர்தல் விதிகள் அனைத்தும் காற்றில் பறந்துகொண்டிருக்க.. அவர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போதோ அவை விண்ணில் பறந்தன’ என்று எழுதுகிறது ஜீனியர் விகடன்.

தேர்தல் நடக்க இருக்கும் வட சென்னையின் குண்டும் குழியுமான சாலைகள் எல்லாம் இரவோடு இரவாக பளிச் என்று புத்தம் புது சாலைகளாக மாறின; மின்னி மின்னி சோகமாக எரியும் தெரு விளக்குகள் எல்லாம் கூச்சமின்றி வெளிச்சம் வீசின; கழிவு நீர் கலந்து வரும் குழாய்களில் எல்லாம் திடீரென்று அமுதம் போல நல்ல நீர் வந்தது; தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முதல் நாள் இரவு அமைச்சர்களும், அதிகாரிகளும் விடிய விடிய தூங்கவில்லை. புதிதாக போட்ட சாலைகளை கூட்டிப் பெருக்குவது முதல், வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தை புனரமைப்பது வரை அனைத்து வேலைகளையும் முன் நின்று செய்தது அமைச்சர்களும் அதிகாரிகளும் தான்.

அ.தி.மு.க அமைச்சர்கள்
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முதல் நாள் இரவு அமைச்சர்களும், அதிகாரிகளும் விடிய விடிய தூங்கவில்லை. (படம் : நன்றி ஜூனியர் விகடன்)

வேட்புமனு தாக்கல் செய்யச் செல்லும் ஜெயலலிதா புதிய சாலையில் சர் என்று சறுக்கிக் கொண்டு செல்வதற்காக நாற்பது சாலை போடும் இயந்திரங்கள் இரவோடு இரவாக கொண்டு வந்து இறக்கப்பட்டன. பாரிமுனை ரிசர்வ் வங்கி கட்டிடத்திலிருந்து தண்டையார்பேட்டை வரை புதிதாக சாலை போடப்பட்டது. அதே போல திரும்பிப் போவதற்கு மகாராணி தியேட்டரிலிருந்து கடற்கரை சாலை வரை புதிய சாலை போடப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட இந்தச் சாலைகளில் எங்கும் வேகத்தடை இல்லை. பழைய சாலையில் இருந்த வேகத் தடைகளும் அகற்றப்பட்டன.

எழும்பூர் ஆணையர் அலுவலகத்தில் இருக்க வேண்டிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், தியாகராயர் கல்லூரி அருகே நின்று கொண்டு மேஸ்திரி போல சாலை போடும் வேலைகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்ததாகவும், அமைச்சர் பெருமக்களும், அதிகாரிகளும் சாலை போடுவதற்கான பொருட்களை எடுத்துக் கொடுத்து வேலை வேகமாக நடக்க உதவி செய்ததாகவும் எழுதுகின்றன பத்திரிகைகள்.

தண்டையார்பேட்டையில் உள்ள பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கும் மாநகராடசி அலுவலகம் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இடம். வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகம் இங்கே தான் அமைய வேண்டும் என்று முடிவு செய்தது தேர்தல் ஆணையம் அல்ல, ஜெயலலிதா தான். மேலும், அதை மற்றுமொரு அ.தி.மு.க அலுவலகமாகவே மாற்றிவிட்டிருந்தனர்.

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயாவின் தனி அறை எப்படி இருக்குமோ அப்படியே அலங்காரம் செய்யப்பட்டு எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று போயஸ் தோட்டத்தைப் போலவும் மாற்றப்பட்டிருந்தது. அந்தச் சின்ன அறைக்கு மூன்று ஏ.சி.க்கள் பொருத்தப்பட்டன. அதுவரை பாழடைந்து கிடந்த இடத்தில் ஃபால்ஸ் சீலிங், வால் பேப்பர், மின் விளக்குகள், ஸ்விட்சுகள், டேபிள் நாற்காலிகள், கடிகாரம், திரைசீலை, தரை விரிப்புகள், அலுமினிய கதவுகள் என்று அனைத்தும் புத்தம் புதிதாக வாங்கி மாட்டப்பட்டன.

அந்த குட்டி அறைக்குள் ஒரு குளியலறை வேறு கட்டப்பட்டிருந்தது. குளியலறை உள்ளே போவதற்கு மரத்தால் செய்யப்பட்ட தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. அலுவலகத்திற்கு உள்ளே எப்படியோ அப்படி தான் முழுக் கட்டிடத்திற்கும் பச்சை வண்ணம் அடிக்கப்பட்டிருந்தது. அலுவலக வாசற்படிக்கட்டுக்குக் கீழே பிளாட்பாரம், அதற்குக் கீழே சாலையிலிருந்து அரையடி உயரத்தில் இருக்கிறது பிளாட்பாரம்.

அ.தி.மு.க அடிமை அமைச்சர்கள்
ஜெயலலிதாவை வரவேற்பதற்காக பிரியாணியும், சரக்கும், துட்டும் கொடுத்து பெருங்கூட்டத்தை கூட்டி சாலையின் இருபக்கமும் நிறுத்தி வைத்திருந்தார்கள் அமைச்சர்கள் (படம் : நன்றி ஜூனியர் விகடன்)

கப்பல் மாதிரி சாலையை அளந்து கொண்டு செல்லும் ரோடோ காரில் வந்து இறங்கும் ஜெயலலிதா, அங்கிருந்து அலுவலக படிக்கட்டில் ஏறி நடந்து வர முடியாதாம். எனவே சாலையிலிருந்து நேராக அலுவலகத்திற்குள் வருவதற்கு ஒரு படிக்கட்டு மேடை அமைக்கப்பட்டது. காலில் மிதிபடப்போகும் அந்த படிக்கட்டுக்கு ஒரு தனி விரிப்பு. அந்த விரிப்பின் மீது மண் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அதற்கு மேல் ஒரு வெள்ளைத்துணி விரிப்பு. அவ்வப்போது அந்த வெள்ளைத்துணியில் விழும் துகள்களை அப்புறப்படுத்துவதற்கு தனி ஆட்கள். இந்த பகட்டான படிக்கட்டில் ஏறும் போது பிடிப்பதற்கு வசதியாக இரு புறமும் சில்வர் கம்பிகள் என்று காரிலிருந்து இறங்கி சில நொடிகள் நடந்து வருவதற்காக இத்தனை ஆடம்பர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மறு நாள் காலை. ஜூன் 5-ம் தேதி மதியம் 2 மணிக்கு தான் ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்தார். ஆனால் காலை 8 மணிக்கே கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் 2,000 போலீசார் சாலை எங்கும் குவிக்கப்பட்டிருந்தனர். காலையிலிருந்து மதியம் நெருங்க நெருங்க போக்குவரத்து நெருக்கடி துவங்கியது. 12 மணிக்குள் தமது வேலைகளுக்குச் சென்று விட்டவர்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள். செயற்கையான இந்த இடைத்தேர்தலை போலவே செயற்கையான போக்குவரத்து நெருக்கடியையும் ஏற்படுத்தினர். ஆடம்பரமான வரவேற்பு நிகழ்ச்சிகளாலும், சாலைகளை முழுமையாக மூடியதாலுமே இந்த நெருக்கடி ஏற்பட்டது. சென்னை நகரின் முக்கிய சிக்னல்களில் போடப்பட்டிருந்த தடையரண்களை எல்லாம் கொண்டு வந்து இந்த சாலைகளில் குவித்து விட்டனர்.

12 மணி முதல் 3 மணி வரை கொளுத்தும் வெயிலில் மூடப்பட்டிருந்த பல்வேறு சாலைகளில் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும், ஆட்டோக்களும், கார்களும், துறைமுகத்திற்கு சரக்குப் பெட்டிகளை ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரிகளும், பல்லாயிரக்கணக்கானோரை சுமந்து கொண்டிருந்த மாநகரப் பேருந்துகளும் செல்வதற்கு வழியில்லாமல் திணறிக் கொண்டிருந்தன. அவசர வேலைகளுக்கு சென்று கொண்டிருந்தவர்கள், மருத்துவமனைகளுக்குச் சென்றவர்கள், முன்பதிவு செய்துவிட்டு வெளியூர்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு சென்று கொண்டிருந்தவர்கள் என்று அனைவரும் இந்த நெருக்கடியில் மாட்டிக்கொண்டனர். இந்தப் போக்குவரத்து நெருக்கடியிலிருந்து தப்பிக்க பலர் குறுக்கு வழிகளிலும், பிற வாகனங்களை முந்திக்கொண்டும் செல்ல முயன்றதாலும் பல இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

ஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கல் செய்யப்போகும் அதிசயம் நடக்க இருந்ததால் சில மணி நேரங்கள் நிறுத்தப்பட்டவை இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமல்ல, ரயிலே நின்றுவிட்டது. அன்று நிற்காமல் இயங்கியது இருந்த கடலில் மிதக்கும் கப்பல்களும், விண்ணில் பறக்கும் விமானமும் தான். “வேட்புமனுத்தாக்கல் முடிந்து அம்மா திரும்பும் வரை எந்த கூட்ஸ் வண்டியும் இயங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் மோகன், ரயில்வே அமைச்சகத்திடம் நேரடியாக பேசியிருக்கிறார். அதன்படி ஜெயலலிதா சென்று திரும்பும் வரை எந்த சரக்கு ரயிலும் அந்தத் தடத்தில் இயக்கப்படவில்லை.

சி. மகேந்திரன்
ஒவ்வொரு தேர்தலிலும் ஒன்று இரண்டு சீட்டுகளையும், சொற்ப ஓட்டுக்களையும் வாங்கி எவ்வளவு கேவலமாக அவமானப்பட்டாலும் சற்றும் சளைக்காத போலிக்கம்யூனிஸ்டுகள் போலி ஜனநாயக தேர்தல் முறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் காமடியில் முன்னணியில் இருக்கின்றனர். (போலி கம்யூனிஸ்டுகளின் வேட்பாளர் சி. மகேந்திரன்)

ஜெயலலிதாவை வரவேற்பதற்காக பிரியாணியும், சரக்கும், துட்டும் கொடுத்து பெருங்கூட்டத்தைக் கூட்டி சாலையின் இருபக்கமும் நிறுத்தி வைத்திருந்தார்கள் அமைச்சர்கள். அனைத்தையும் நேரங்காலம் பார்த்து சரியாகச் செய்யும் ஜெயா சசி கும்பல் போயஸ் தோட்டத்திலிருந்து சரியாக 1.30 மணிக்கு கிளம்பியது. ஆனால் அம்மாவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் கார் நடுவழியில் கோளாறாகி நின்றது. இதனால் சில நிமிடங்கள் தாமதமானது. ரிப்பேரான காரிலிருந்து இறங்கி பின்னால் வந்துகொண்டிருந்த மற்றொரு காருக்கு மாற வேண்டும். ஜெயலலிதா இறங்கி ஏறினார். இதை மாபெரும் உலக அதிசயம் போலவும், தியாகமாகவும் அமைச்சர்கள் கருதினர்.

வேட்புமனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு சரியாக 2 மணிக்கு வந்து இறங்கினார் ஜெயலலிதா. நாலடி நடப்பதற்குள் வெயில் பட்டுவிடுமாம், உடனே ஜெயலலிதாவை விட ஒரு பெரிய சைஸ் குடையை விரித்து பிடித்தனர் பாதுகாப்பு படையினர். அம்மா அமர்வதற்கு ஒரு ஸ்பெஷல் சேரை போட்டனர். சரியாக 2.01 மணிக்கு (நல்ல நேரம்) கடிகாரத்தை பார்த்தபடி தேர்தல் அதிகாரி சவுரிராஜனிடம் வேட்புமனுவை கொடுத்தார் ஜெயா. அவர் அதை எழுந்து நின்று வாங்கிக் கொண்டார். சவுரிராஜன் ஜெயலலிதாவிடம் மட்டும் எழுந்து நின்று வாங்கவில்லை, ஜெயாவிடம் மட்டும் எழுந்து நின்று வாங்கினால் பிரச்சினையாகிவிடும் என்பதால் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த அனைவரிடமும் எழுந்து நின்றே வாங்கினார்.

முந்தைய தேர்தல்களில் அனைவரிடமும் உட்கார்ந்து வாங்கியதை வைத்து இங்கே ஜனநாயகம் ஆல் போல தழைத்துவிட்டதாக உருகியவர்கள் இப்போது எங்கே அறை எடுத்து அழுகிறார்கள், தெரியவில்லை.

ஜெயலலிதாவுக்கு பிடித்த எண் 11 என்பதால் அவர் 11-வது ஆளாக வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். டிராபிக் ராமசாமி, பதமராஜன், அகமது ஷாஜகான், ரவி பறையனார், ஆபிரகாம் ராஜ்மோகன் ஆகியோர் 3-ம் தேதியும், ராமதாஸ், மனோகரன், வெங்கடேஷ், வசந்தகுமார், குமாரசாமி ஆகியோர் 5-ம் தேதியும் அதாவது ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன்பாகவும் வரவழைக்கப்பட்டு மனுக்கள் அளிக்க வைத்திருக்கிறார்கள். 11-வது ஆளாக ஜெயலலலிதா வந்தார்.

வேட்புமனுத்தாக்கல் செய்யும் இரண்டு நிமிடத்திற்காக மக்கள் வரிப்பணத்திலிருந்து எத்தனை லட்சங்களை கொட்டி இறைத்தார்கள், தெரியவில்லை. வடசென்னை என்பது வறுமை நிறைந்த மக்களின் பகுதி. அந்தப் பகுதியில் கழிவறையில் ஏறுவதற்கு கூட மேடை அமைத்து பகட்டு காட்டி இழிவுபடுத்துகிறது ஜெயா சசி கும்பல்.

இந்த இடைத்தேர்தலில் பிரதான ஓட்டுக்கட்சிகள் எல்லாம் போட்டியிடாமல் பின் வாங்கிக்கொண்ட நிலையில், கூத்தில் கோமாளிகள் இல்லாத குறையை தீர்த்து வைக்கின்றனர் போலிக்கம்யூனிஸ்டுகள். ஒவ்வொரு தேர்தலிலும் ஒன்று இரண்டு சீட்டுகளையும், சொற்ப ஓட்டுக்களையும் வாங்கி எவ்வளவு கேவலமாக அவமானப்பட்டாலும் சற்றும் சளைக்காத போலிக்கம்யூனிஸ்டுகள் போலி ஜனநாயக தேர்தல் முறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் காமடியில் முன்னணியில் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த தேர்தலிலும் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர் மகேந்திரனை காமடியாக்கி ஊடகங்கள் கேள்விகள் கேட்கின்றன. அவரும் ஏதோ இலட்சிய பயணத்தில் இருக்கும் சாகச வீரர் போல வெட்கமின்றி வாழ்வே மாயம் என தத்துவம் பேசுகிறார். தொலைக்காட்சி விவாதங்களில் இவரை அ.தி.மு.க சில்லுண்டிகள் கதறக் கதற போட்டுத் தாக்குகின்றனர். கம்யூனிஸ்டுகள் பேசுவார்கள், அம்மா அதை களத்தில் செய்வார் என ‘தோழர்களை’ பப்பி ஷேமாக்கி முடக்கிவிட்டனர்.

தேர்தல் ஆணையம் என்கிற அமைப்பு தனக்கென்று விதிக்கப்பட்ட குறைந்தப்பட்ச பணியைக் கூட நிறைவேற்ற முடியாத செயலற்ற உறுப்பாகிவிட்டது என்பதை இந்த இடைத்தேர்தலில் நன்கு காண முடிகிறது. எதிர்க்கட்சிகளோ நடப்பவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்து புலம்பிக் கொண்டிருக்கின்றனவே தவிர எதையும் செய்யத் திராணியற்றவையாக இருக்கின்றன. ஆளும்கட்சி நடத்தும் தேர்தல் இது, இங்கே ஜனநாயகமில்லை என்று அழுகிறார்களே தவிர ஜனநாயகமில்லாத அமைப்பில் தங்களுக்கு என்ன வேலை என்று அவர்கள் வெட்கப்படுவதில்லை.

ஜெயா கும்பலோ எதற்கும், யாருக்கும் கட்டுப்படாமல் ரெக்கார்டு டான்ஸை நடத்தி வருகிறது. இவ்வளவு கேலிக்கூத்துகளுக்கு பிறகும் இந்த போலி ஜனநாயகத் தேர்தல் முறையின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா ? இன்னமும் இது உண்மையான ஜனநாயகம் தான் என்று நம்புகிறீர்களா ?

–    வையவன்