privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்காக்கா முட்டை : விகடனின் விமரிசனத் தரம் என்ன?

காக்கா முட்டை : விகடனின் விமரிசனத் தரம் என்ன?

-

விகடன் மதிப்பெண் நாற்பதுக்கு மேல் போனாலே அடுத்த நாள் அந்த சினிமா விளம்பரத்தில் அந்த மதிப்பெண் வந்துவிடும். “காக்கா முட்டை”க்கு 60 மதிப்பெண் வழங்கிய பிறகு, தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, இணையத்தின் அறிஞர் பெருமக்களும் தமது பொன் முட்டையை விகடனும் அங்கீகரித்திருப்பதை கொண்டாடினார்கள். ஒருவேளை படம் குறித்து முதல் ஐந்து நாட்களில் தமிழ் இணையம் காட்டிய நெகிழ்ச்சி அலையில் விகடன் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாமே என்று சிலர் கேட்கலாம்.

காக்கா முட்டை - விகடன் விமர்சனம்
இந்தப் படத்தை உலகத்துக்கான தமிழ் சினிமா என்றே விமரிசனத்தின் முதல் பத்தியில் கூறுகிறது விகடன்.

இந்த பத்தாண்டின் தலைசிறந்த குடும்ப சித்திரம் என்ற விளம்பரம் “காக்கா முட்டை”க்கும் மட்டுமல்ல, “ஸ்லம்டாக் மில்லினியரு”க்கும் கொடுக்கப்பட்டதைப் பார்த்த போது இந்த பீட்சாவின் இரக்கம் அனைத்துத் தரப்புகளிலும் திட்டமிட்டு வரவழைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

தமது மேலான ரசனை போலவே முக்கிய ஊடகம் ஒன்றின் ரசனையும் இருப்பதாக இணைய மக்கள் நம்புவதைப் போல அவர்களை தாங்கள் மட்டுமே பிரதபிலிப்பதாக விகடனும் அதை காட்டிக் கொள்ளலாம். பரஸ்பர ஆதாயம்.

போகட்டும். 60 மதிப்பெண் கொடுத்திருக்கும் விகடன் அதை எப்படி ‘உலகத் தரத்தில்’ எழுதியிருக்கிறது என்று பார்ப்போம். ஏனெனில் இந்தப் படத்தை உலகத்துக்கான தமிழ் சினிமா என்றே விமரிசனத்தின் முதல் பத்தியில் கூறுகிறது விகடன்.

“தடதடப்பும், படபடப்புமாக கடக்கிறது படம்”, “போகிற போக்கில் போட்டுத் தாக்குகிறது”, “கலீச் சுளீர் உரையாடல்களாகவும்”, “அட்டகாசமாக அறிமுகமாகும் ரமேஷும், அதட்டும் விக்னேஷும் அகதளம்…அமர்க்களம்!”, “சினிமா கேரியரில் ஐஸ்வர்யாவுக்கு இது அர்த்தமுள்ள அடையாளம்”, “ஒவ்வொருவருமே கச்சிதமான காஸ்ட்டிங்,” “நக்கலும் நையாண்டியுமாகக் கடக்கும் ஆனந்த் அண்ணாமலை, ஆனந்த் குமரேசன் கூட்டணியின் வசனங்கள், சிரிப்பு செருப்பு அடிகள்”, “ஹேய் சூப்பரப்பு”, “கண்களை கலங்கச் செய்யும் ஈர அத்தியாயம்”, “ஏரியாவையே பதறவைத்த ஏக களேபரங்களுக்குப் பிறகு”, “கச்சித டைமிங்கால் சீனுக்கு சீன் விறுவிறுக்க வைக்கிறது கிஷோரின் எடிட்டிங்”,…………………

இவைதான் ஒரு உலக சினிமா குறித்து ஒரு உலகத் தரத்திலான விமரிசனம் தேடிக் கண்டுபிடித்த வரிகள்! எனினும் இவர்கள்தான் டி.ராஜேந்தரின் எதுகை மோனை ஏப்பங்களை கிண்டலடிக்கிறார்கள். மேடைகளில் பேசும் அரசியல்வாதிகள், செயற்கையான நடையிலும், உணர்ச்சிகரமான நடிப்பிலும் பேசுவதாக குறைபடுவர்களும் இவர்களே.

கேட்டால் மக்கள் திரளுக்கு புரிய வைக்கும் மொழியில், இளையோரின் நவீன நடையில், சுண்டி இழுக்கும் ரசனையில் எழுதுவதால், அரசியல் சார்ந்து சிந்திப்போருக்கு அதன் அருமை புரியாது என்பார்கள். ஒரு வேளை விமரிசனம் எப்படியிருந்தால் என்ன, இதை வைத்து திரையரங்கிற்கு இன்னும் பலரை இழுத்து வரும் வேலையை இது செய்யுமையா என்று வசூலை முன்வைத்தும் சிலர் நியாயப்படுத்தலாம்.

கலீர் சுளிர், கச்சிதமான காஸ்ட்டிங் போன்ற வரிகளை படித்து விட்டு ஒருவன் “காக்கா முட்டை”யை பார்த்தால் அவனிடம் இந்தப்படம் என்னவாக இறங்கியிருக்கும்? ஏற்கனவே மல்டிபிளக்சில் பீட்சாவை சுவைத்தவாறே இந்தப்படம் ரசிக்கப்படுவதின் அபத்தத்தை சிலர் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். இயக்குநர் மணிகண்டனோ, “இந்தப் படத்தைப் பார்த்து சிலர் தமது பிள்ளைகள் பீட்சாவை வேண்டாமென்று விட்டுவிட்டதாக கூறியது மனதுக்கு திருப்தியாக இருந்தது” என்றிருக்கிறார். இறுதியில் பீட்சாதான் வில்லனா?

பெப்சி-கோக், மெக்டனால்டு, கே.எஃப்.சி, லேஸ், ஹல்திராம், நெஸ்லே என்று பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகள் பலரும் கோலேச்சும் நுகர்வுத் துறையில் பீட்சாவை மட்டும் தவிர்ப்பதால் என்ன பயன்? படத்தில் பீட்சா ஒரு குறியீடு என்பவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? இங்கே இந்த குறியீட்டின் அரசியல் என்னவாக உணர்த்தப்பட்டிருக்கிறது அல்லது படவில்லை என்பதைப் பொறுத்தே பீட்சா புரிந்து கொள்ளப்படுகிறது. ஆகவே படத்தில் பீட்சா மட்டும் இருக்கிறது. ரசிகர்களும் பீட்சா மட்டும் வேண்டாம் என்று பர்கருக்கு மாறிக் கொள்ளலாம்.

மற்ற சினிமாக்களிலிருந்து இது வேறுபட்டிருப்பதால் உலகத்திற்கான சினிமா, சிவப்பு கம்பளம் விரித்து இயக்குநரை வரவேற்கிறான் விகடன் என்றெல்லாம் தூக்கிவிட்டு விமரிசனத்தில் அது ஏன் உலகத் தரம், எதனால் வரவேற்பு என்று கேட்டால் அது அரட்டை அரங்கின் தரத்தைத் தாண்டாது. விகடன் கருதும் தரம், உலகத்தின் அளவீடு என்ன?

விளிம்பைத் தாண்டியும் துரத்தப்பட்ட மண்ணின் மைந்தர்களை மனம் நிறையக் கரிசனத்துடன் இப்படம் அணுகியதாக கூறும் விகடன் அதற்கான ஆதாரத்தை படத்திலிருந்த தருவது இருக்கட்டும். அந்த கரிசனம் இவர்களுக்கு தெரியுமா புரியுமா என்பதற்கு என்னய்யா ஆதாரம்?

கிச்சன் கில்லர்கள்
கி கி ஆங்கில டைட்டில் போட்டுத்தான் நூடில்ஸ் பிரச்சினையை புரியவைக்க முடியும் என்றால் பன்னாட்டு நிறுவனங்கள் வேறு ஒரு போ போ ரைமிங் கண்டுபிடிப்பு மூலம் அதைக் காலி செய்து விட முடியும்.

வலை பாயுதே, சைபர் ஸ்பைடர் எனும் மிரட்டும் வார்த்தைகளில் டிவிட்டுகளை தொகுத்து தருகிறது விகடன். அதில் “பஸ்ல பக்கத்து ஸீட்காரன் என் மொபைலையே பார்த்துட்டிருக்கான். ஏண்டா நீயெல்லாம் நோக்கியா, சாம்சாங்கோடு பொறக்கலியா” என்றொரு டிவிட் இருக்கிறது. ‘ஸ்மார்ட் ஃபோனை எட்டிப் பார்ப்பது ஒரு அநாகரிகம்’ என்பது ஒரு திமிரான மேட்டிமைத்தனமான மொழியில் இங்கே சொல்லப்படுகிறது. இது விகடனுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் பீட்சா சாப்பிட ஆசைப்பட்ட சிறுவர்களை பிடிக்கும் என்பதை நம்ப முடியவில்லையே?

கேபினட் கேமரா, மந்திரி தந்திரி எனும் பகுதியில் அ.தி.மு.க அமைச்சர்களின் தொகுப்பான வரலாற்று, நிர்வாக முறைகேடுகள், ஊழல் போன்றவற்றை “நாகரிகமான” மொழியில் தொகுத்து தரும் விகடன் தொடரில் இந்த வாரம் இடம்பெற்றிருப்பவர் முக்கூர் சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்.

“சத்துணவுக் கூடங்களுக்கு காய்கள் அளித்து வந்த சிறு வியாபாரி இன்று பள்ளிகளின் விழாவில் மாணவர்களுக்கு லேப்டாப் அளிக்கும் அமைச்சராக மாறிவிட்டார்” என்று கூறுகிறது விகடன். இதையே அம்பானி, அதானி என்றால் உழைத்து முன்னுக்கு வந்த சாதனையாக காட்டுவார்கள். இங்கே சைக்கிள் ஓட்டி வியாபாரம் செஞ்வனெல்லாம் இன்று அமைச்சர் என்று மேட்டிமைத் திமிருடன் அலுத்துக் கொள்ளும் நடுத்தர வர்க்கத்தின் பார்வையில் இது சொல்லப்படுகிறது.

மேலும் அந்த அமைச்சரது ஊழலை குத்திக் காட்டும் விகடன் அதன் கூடவே படிப்பறிவற்ற ஒருவர் தகவல் தொழில் நுட்ப அமைச்சராகியிருக்கும் அவல நிலையாக அதைக் குறிப்பிட்டுச் சொல்கிறது. அந்தப் படிக்கு படிப்பறிவில்லாத காமராஜர் கூட இவர்களது  தகுதியில் தேற மாட்டாரே!

தனது டச் ஃபோனை இயக்கத் தெரியாத ஒருவர் கணினி துறைக்கு அமைச்சராகியிருக்கிறார் என்று கிண்டல் செய்கிறது விகடன். பீட்சாவின் ருசி தெரியாமல் அந்த சிறுவர்கள் அது நன்றாக இல்லை என்று புறக்கணித்தது விகடனுக்கு பிடித்திருக்கிறது. அந்தப் பிடிப்பின் அடிப்படை சாதா இரக்கமா, இல்லை நம்ம ஐட்டத்தை அதற்கு உரியவர்களல்லாத ஏழைகள் பிடிக்கவில்லை என்று சொன்னதால் ஏற்பட்ட ஸ்பெசல் இரக்கமா?

விமானத்துறை அமைச்சராக இருப்பவருக்கு ஹெலிகாப்டரை ஓட்டத் தெரியவில்லையென்று இவர்கள் எழுதுவார்களா? முக்கூர் சுப்ரமணியத்திற்கு டச் ஃபோன் இயக்கத் தெரிந்தாலோ தெரியாமல் போனாலோ என்ன பிரச்சினை? மேலும் இதுதான் பிரச்சினை என்று வைத்துக் கொண்டாலும் முக்கூர் உட்பட் பல்வேறு டுபாக்கூர்க்களை வைத்து ஆட்சி நடத்தும் பாசிச ஜெயாவின் பிரச்சினையல்லவா? அந்தப் படிக்கு டச் ஃபோன் மற்றும் ஆங்கிலம் தெரிந்த ஒரு பெண்மணியை விமரிசிக்காமல் காய்கறி சப்ளை செய்தவர் என்ற பெயரில் ஏழ்மையை பரிகசிப்பதன் காரணம் என்ன?

“கூகுள், யூடியூப், வாட்ஸ் அப்…இதெல்லாம் இங்கிலீஸ் படப் பேரா?” எனக் கேட்கும் அளவுக்குத்தான் துறை நிபுணராக இருக்கிறார் அமைச்சர் சுப்பிரமணியன் என்கிறது விகடன். இதையே காக்கா முட்டை மொழியில்  பெயர்த்தால் பீட்சா தெரியாதவனெல்லாம் உணவுத்துறை மந்திரியாக குப்பை கொட்டுகிறான் என்று பேஷா சொல்லலாமே?

காக்கா முட்டை - விகடன் விமர்சனம்
பெப்சி-கோக், மெக்டனால்டு, கே.எஃப்.சி, லேஸ், ஹல்திராம், நெஸ்லே என்று பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகள் பலரும் கோலேச்சும் நுகர்வுத் துறையில் பீட்சாவை மட்டும் தவிர்ப்பதால் என்ன பயன்?

ஒரு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தமிழகத்தின் விவசாயம், தொழில்துறை, மீன்வளம், கால்நடை இதர துறைகளுக்கு தேவையான நுட்பங்களை தெரிந்து கொள்வதும், அதை தெரிவிப்பதற்கு தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதும்தானே தேவை? மாறாக மக்கள் யூடியூப், கூகுள் பார்த்து “காக்கா முட்டை” நடிகை ஐஸ்வர்யாவின் ப்ளோ அப் சுவரொட்டிகள் தேடுவது குறித்தா அவர் அறிந்து வைத்திருக்க வேண்டும்? ஆக முக்கூர் சுப்பிரமணியனை விடுங்கள், ஒரு தகவல் தொழில்நுட்ப அமைச்சருக்கு என்ன தெரியவேண்டும் என்பது விகடன் பார்வையில் பீட்சாவை மட்டும் தெரிந்து கொள்வதாகவே இருக்கிறது. ஆக இவர்கள் கிண்டலடிப்பதில் மேட்டிமைத்தனம் இருக்கிறது என்றால் அறிவிலோ முட்டாள்தனம் கொடிகட்டிப் பறக்கிறது.

இப்படி டெக்னாலஜி அப்டேட் இருக்கட்டும், தமிழகத்தின் ஐ.டி துறையில் ஊழியர்கள் பந்தாடப்படும் நிலை குறித்து இந்த அமைச்சர் ஏதாவது பேசியிருக்கிறாரா என்றெல்லாம் விகடன் துளியளவு கூட நினைக்கவில்லை. மாறாக ஊர் ஊராக ஐ.டி பார்க் ஏன் வரவில்லை என்பதே இவர்களது கவலை. இதையும் தெருத்தெருவாக பீட்சா கடை வரவேண்டும் என்று எழுதலாம்.

பிட்ஸ் பிரேக் எனும் ஒரு மசாலா பகுதியில் இயக்குநர் மணிரத்தினம் ஆப்பிள் மேக்புக் ஏர் மடிக்கணினி வாங்கி அதை பாராட்டி தனது நண்பர்கள் இருவருக்கு பரிசளித்ததையெல்லாம் ஒரு செய்தியாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். சரி, இந்த ஆப்பிள், மேக்புக், கூகுள், வாட்ஸ் அப் போன்றவற்றில் அருகாமை பீட்சா கடை எங்கே உள்ளது, என்ன டாப்பிங்ஸ் புதிது, என்ன விலை, யாருடைய சர்வீஸுக்கு மதிப்பெண் அதிகம் இதைத்தானே அதிகம் தேடுகிறார்கள்? பிறகு ஏன் காக்கா முட்டைக்கு கண்ணீர் வடிக்கிறீர்கள்?

“இது காமடி வெடி”என்று சந்தானத்தின் புதுப்படம் குறித்த நேர்காணல் ஒன்று. “நீங்க வாழ்க்கையில என்ன வேணும்னாலும் ஆகணும்னு கனவு காணுங்க. ஆனா, இருக்கிறதை விட்டுட்டுப் பறக்கிறதுக்கு ஆசைப்படாதீங்க. அடுத்த உயரம் தொட படிப்படியா உழைப்பைக் கொட்டுங்க. இதான் மெசேஜ். ரீலையும் ரியலையும் மேட்ச் பண்ணோமா” என்று சந்தானத்தின் தத்துவ முத்து ஒன்றை போட்டே கட்டுரை ஆரம்பிக்கிறது.

இதுதான் காக்கா முட்டையின் கிளைமாக்ஸ். சிறுவர்கள் டேஸ்ட் காரணமாக அதை விலக்கினாலும் அதன் பின்னே இருப்பது எதிர்ப்புணர்வு அல்ல. சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று தானே விலக்குகிறார்கள். இதன் மூலம் ஓசியில் கிடைக்கும் பீட்சாவை அவர்கள் மறுப்பதான சுயமரியாதை ஒன்று, இரண்டாவதாக அவர்கள் பீட்சாவை போராடி மறுக்கவில்லை. இதைத்தான் நைந்து போன மொழியில் சந்தானம் கூறுகிறார். ஆகவே காக்கா முட்டையில் விகடனுக்கு பிடித்த தத்துவம் இதுவாகத்தான் இருந்திருக்கும்.

மாகி நூடில்ஸ் பிரச்சினையை ஒட்டிய அட்டைப்படக் கட்டுரைக்கு விகடன் வைத்திருக்கும் தலைப்பு “கிச்சன் கில்லர்கள்”. எனில் இந்த தலைப்பு திடீர் நகர், காசிமேடு சிறுவர்களோ இல்லை பெற்றோருக்கு புரியுமா? அவர்கள்தான் விகடனை படிப்பதே இல்லை எனில் பீட்சா சாப்பிடுபவர்கள்தான் வாசகர்கள். அவர்களுக்கு இந்த கி கி ஆங்கில டைட்டில் போட்டுத்தான் நூடில்ஸ் பிரச்சினையை புரியவைக்க முடியும் என்றால் பன்னாட்டு நிறுவனங்கள் வேறு ஒரு போ போ ரைமிங் கண்டுபிடிப்பு மூலம் அதைக் காலி செய்து விட முடியும்.

ஆக, ஒரு விசயத்தை எத்தனை ஆழமாகவும், அரசியல் ரீதியாகவும் பார்க்கிறோம் என்பதே அது குறித்து எழுதவதற்கும், படிக்கப்படுவதற்கும், பயன்படுவதற்கும் காரணமாக இருக்கிறது. இங்கே நொறுக்குத் தீனி வாசிப்பையே மூலதனமாக வைத்திருக்கும் விகடன், அதற்குரிய படிமங்கள், காட்சிகள், களத்திலேயே சுற்றி கொண்டு விட்டு, ஒரு சேஞ்சுக்காக காக்கா முட்டையை ரசிக்கிறது. ஆனால் அந்த ரசனையில் மேற்கண்ட சுற்றி வரும் ஜாலி எப்படி தவிர்க்க முடியாமல் இணைந்திருக்கிறது என்று கண்டு கொண்டால் பிறகு நீங்கள் விகடன் விமரிசனத்தை எதிர்பார்க்க மாட்டீர்கள்.

தங்கமீன்கள் விமரிசனம் வந்த போது இயக்குநர் ராம் விகடனது சினிமா விமரிசன முறையை விமரிசித்து எழுதியிருந்தார். ஒரு படத்தை பார்த்து விட்டு உடன் ஏற்படும் உணர்ச்சியை பதிவு செய்வதை விமரிசனம் என்று எழுதுவதோ, மதிப்பெண் போடுவதோ தவறு, தனது படங்களுக்கு இத்தகைய விமரிசனங்கள் தேவையில்லை என்ற பொருளில் அவர் எழுயிருந்தார். விமரிசனம் என்பது ஒரு இயக்குநரின் படைப்பை தீவிரமாக படித்து, பார்த்து, முழுமையாக உள்வாங்கி எழுத வேண்டும், தமிழில் அத்தகைய விமரிசன மரபு இல்லை என்றும் அவர் கவலைப்பட்டிருந்தார்.

அவரைப் பொறுத்தவரை இது ஒரு டெக்னிக்கல் பிரச்சினை. அதாவது “திரைப்பட விமரிசனக் கலை எனும் துறையை இங்கே அறிந்தவர் இல்லை. அப்படி அறிந்தவர் இருந்து, ஊடகங்கள் அப்படி எழுத ஆரம்பித்தால் நல்ல விமரிசனங்கள் வரும், திரைப்படங்களுக்கு அவை நல்ல அறிமுகத்தை கொடுக்கும்” என்று அவர் எதிர்பார்க்கிறார்.

மங்காத்தா, மாஸ் போன்ற போடங்கள் அதிகம் வரும் தமிழ் சினிமாவிற்கு அந்த விமரிசனக் கலை வந்து என்ன ஆகப்போகிறது என்பது ஒருபுறமிருக்க ஒரு ஆழமான விமரிசனமோ இல்லை உடன் பார்த்து எழுதும் மொக்கைப் பதிவோ ஒருவரின் உலகக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. அது விமரிசனத்தில் மட்டுமல்ல சம்பந்தப்பட்ட நபரின் அனைத்து பார்வை, மதிப்பீடுகளிலும் அது நீக்கமற நிறைந்திருக்கும். இதன்படி விகடனின் விமரிசனப் பிரச்சினை சினிமா விமரிசனக் கலை தெரியாமல் வந்த ஒன்றல்ல. அவர்கள் இந்த உலகினை, சமூகத்தினை, அரசியலை, ஏழ்மையை, வாட்ஸ் அப்பை எப்படி பார்க்கிறார்கள் என்பதோடு தொடர்புடையது.

மற்ற துறைகளில் அவர்களது பார்வை என்ன தரிசனத்தை கொண்டிருக்கிறதோ அதுவே விமரிசனத்திலும், மதிப்பெண் போடும் முறையிலும் வெளிப்படும். ஒருவேளை சில பல சிபாரிசுகள், திரைப்பட தயாரிப்பாளர்களது தொழில் உறவுகள் காரணமாக மதிப்பெண்கள் சற்று அதிகமாகவோ குறைவாகவோ போடப்படலாம். அதனால் பார்வை மாறிவிடுவதில்லை.

ஆகவே விகடனை திருத்த வேண்டும் என்பது சினிமா விமரிசனத்தை நல்லவிதமாக எழுத வைப்பதன் மூலம் – அப்படி முடியாது என்ற போதிலும் – முடியாது. அது வெளியே நடக்கும் சமூக அரசியல் போராட்டங்களின் மூலமாகவே நடந்தேறும். முன்னர் கோலோச்சிய அக்ரஹார மொழி விகடனை விட்டு அகன்று போனதற்கே இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ராம் அடிப்படையில் ஒரு சினிமாக் கலைஞர் என்பதால் அவர் சினிமாவை மட்டும் வைத்து விகடனை அளந்து பார்க்கிறார். ஆனால் சினிமாவோ, விமரிசனமோ, ஊடகங்களோ அனைத்தையும் தீர்மானித்து இயக்குவது இறுதியில் அரசியலே. அந்த அரசியலின் சரி தவறுகளில், போராட்டங்களில், மக்களின் பங்கேற்பு அதிகம் – குறைவு காரணமாகத்தான் நாம் எதிர்பார்க்கும் ஆரோக்கியமான கலைச் சூழல் பிறக்கும் அல்லது போராடும்.

காக்கா முட்டை விமரிசனத்திற்கு பிறகு வந்த இதழில் இயக்குநர் மணிகண்டனை நேர்காணல் செய்திருக்கிறது விகடன். அதில் ஒரு அறிமுக இயக்குநரின் முதல் படத்திற்கு 60 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டதிற்கு அவர் பெரும் நன்றிக்கடனை இயல்பாக செலுத்தியிருக்கிறார்.

விகடன் எழுதிய விமரிசனத்தின் தரம் என்னவென்று பார்த்து விட்டோம். அந்த தரம் மணிகண்டனுக்கு ஏன் தெரியவில்லை? கமர்சியல் படங்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டு தீவிர படிப்பு, நல்ல படங்களை மட்டும் பார்க்கும் அவருக்கு விகடனின் கமர்சியல் விமரிசன பாணி உறைக்கவில்லையா? இல்லை 60 மதிப்பெண் கொடுத்து விட்டால் நீயும் நண்பனே, நல்ல அறிஞனே எனும் சமரசமா?

காக்கா முட்டை படத்தின் குறியீடுகள் குறித்து கம்பராமாயணம் போல விளக்குகிறார்கள். அண்ணாவின் சந்திரமோகன் நாடக வரிகள் – மராட்டிய மன்னன் சிவாஜி தாழ்ந்த சாதி என்பதால் பார்ப்பனர்கள் மறுப்பது, கூண்டிலிருக்கும் நடுத்தர வர்க்கசிறுவன், சுதந்திரமாக அலையும் சேரி சிறுவர்கள், பாலிதீன் பையில் பிடித்து வரப்படும் நீர், உடைந்த கோக்பாட்டில், அரசியல் பேனரில் சே குவேரா படம் என்று நிறைய சொல்கிறார்கள். இந்த படம் குறித்து நமக்கு வகுப்பும் எடுக்கிறார்கள். நல்லது, இதைத்தாண்டி ஒரு குறியீடு படத்தில் உள்ளது. உண்மையைச் சொன்னால் அது குறியீடே இல்லை, வெளிப்படையான காட்சி.

“காக்கா முட்டை” படத்தில் பீட்சாக் கடைக்காரர்களால் தமது சிறுவர்கள் தாக்கப்பட்டது குறித்து திடீர் நகர் மக்களுக்கு கோபம் ஏதுமில்லை. போராட்டம் ரத்து செய்யப்பட்டதால் 100 ரூபாய் பணமும், ஒரு பிரியாணி போராட்டமும் பறிபோனதே அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. அந்தக் காட்சியில் முதலாளி வர்க்கம் ஒழிக எனும் ஒரு நைந்து போன அட்டை தெரிகிறது.

இறுதிக் காட்சியில் சிறுவர்களின் அம்மா கூட அந்தக் கோபத்தை துறந்து பிள்ளைகள் பீட்சா சாப்பிடும் காட்சியில் மெய் மறக்கிறார். பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்புகிறார்கள். விகடன் 60 மதிப்பெண் போடுகிறது.

இது உண்மையிலேயே ஃபீல் குட் மூவிதான்.

  1. டிவிட்டர் ஷேரிங்கில் வந்த கருத்துக்கள்…

    கர்ணாசக்தி ‏@karna_sakthi
    … பஸ்ல எம் போனையே பாக்கான், ஏண்டா நீயெல்லாம் சாம்சங்,நோக்கியா கூட பொறக்கலியான்னு டிவிட்டின மேட்டுக்குடி மேதாவி யாருப்பா?

    நவினன் ‏@navin_iv

    @iParisal ச்சே ஏம்பரிசல் இப்டி செஞ்சிங்க https://www.vinavu.com/2015/06/19/vikatan-cinema-vimarsanam-popcorn-standard/
    (இந்த பரிசல் சார்தான் அந்த சாம்சங் பொறக்கலியா டிவிட்டு போட்டு விகடன் போட்டுறுக்காங்கன்னு தெரியுது)

    டெமுஜின் கப்பல் ‏@iKappal
    சாட்டையடி!

    srinivasan ‏@sathishvasan

    கலீர் சுளிர், கச்சிதமான காஸ்ட்டிங் போன்ற வரிகளை படித்து விட்டு ஒருவன்“காக்கா முட்டையை பார்த்தால்அவனிடம் இந்தப்படம்என்னவாக இறங்கியிருக்கும்?
    vinavu rocks

    ஆயிரத்தில் ஒருவன் ‏@SriLiro
    //ஒரு படத்தை பார்த்து விட்டு உடன் ஏற்படும் உணர்ச்சியை பதிவு செய்வதை விமரிசனம் என்று எழுதுவதோ, மதிப்பெண் போடுவதோ தவறு

    கபிலன் ‏@kabi_B
    விகடன் விமர்சனத்திற்கே விமர்சனம் வச்சிப்புட்டானுக;

    Sais lakshmanan ‏@Saislakshmanan

    இது தெரியாம இரண்டு மூன்று முறை ஊடக அறத்தை மீற மாட்டேனு உறுதிமொழி எடுத்துட்டேன் மக்கா இதற்கு மேலும் உங்கள்…

    கர்ணாசக்தி ‏@karna_sakthi

    கர்ணாசக்தி retweeted Oneindia Tamil

    vinavu சார்.. தகர கொட்டகைல லட்சம் மக்கள் வசிக்கிற ஊர்ல இவன் கவலையப் பாருங்க.. புடிச்சு கட்டுரைல போடுங்க சார்

    கர்ணாசக்தி added,
    Oneindia Tamil @thatsTamil
    மும்பை மழையால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பிரபலங்கள்

  2. டிவிட்டரில்
    Kannan S ‏@kannan08mca

    விமர்சனதிருக்கே விமர்சனம்! அருமை அலசல்

  3. டுபாக்கூர் விமர்சனம் எழுதுவோரை செருப்பால் அடிப்போர் சங்கம் ஒன்று ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். முதல் உறுப்பினராக வினவு ஆசிரியர் தான் ஆக வேண்டும்.

  4. விகடனைப் பற்றிய முக்கிய விமர்சனம் விளம்பரம், சினிமா இவற்றை விட்டுவிட்டால் அதிக பட்சம் ஒரு 6 பக்கம் தேறலாம். காக்கா முட்டையை விமரிசித்ததை நீங்கள் விமர்சிப்பது மிக அதிமேதாவித்தனம்.

Leave a Reply to ரியல் என்கவுண்டர் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க