privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்இந்தியாவில் மாடுகள் : புனிதமா பொருளாதாரமா?

இந்தியாவில் மாடுகள் : புனிதமா பொருளாதாரமா?

-

cowந்திய விவசாயிகளின் மாட்டுப் பிரச்சனை என்பது இந்து மதவாதிகள் கூறுவதைப் போல கோமாதா என்ற புனிதப் பிரச்சனையல்ல, மாட்டைத் தெய்வமென்பதற்காக கோடிக்கணக்கான மக்கள் வளர்க்கவில்லை. விவசாய வேலைகளுக்காகவும், பால் பொருள் சந்தைக்காகவும் வளர்க்கப்படும் மாடுகள் கால்நடைப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகும்.

உலகிலேயே இந்தியாவில்தான் கால்நடைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். மாடு, ஆடு, குதிரை, கழுதை, ஒட்டகம் போன்ற கால்நடைகளின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டுகிறது. அதில் அனைத்து வகை மாடுகள் மட்டும் 28.5 கோடிக்கு அதிகமாகும். இதில் 8.3 கோடி உழவு மாடுகள் 40 கோடி ஏக்கர் நிலத்தை உழுவதற்கும், விவசாயப் பொருட்களின் போக்குவரத்திற்கும் பயன்படுகின்றன. இவற்றில் பெரும்பங்கு காளைகள், சிறுபங்கு எருமைக் கடாக்கள்.

10.2 கோடி கன்றுகள் போக மீதமிருக்கும் கறவை மாடுகள் 10 கோடி. எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் எருமைகள் குறைவாக இருந்தாலும் மொத்த பால் உற்பத்தியில் எருமைப்பால்தான் அதிகம். இந்தியாவின் தற்போதைய விவசாய, பால் தேவைக்கு மிக அதிகமாகவே மாடுகள் இருக்கின்றன. முக்கியமாக அறுபது சதவீத மாடுகளுக்குத்தான் தீவனம் அளிக்க முடியும் என்ற நிலையும் இருக்கின்றது.

30 ஆண்டுகளாக விவசாய வேலைகளுக்குப் பயன்படும் டிராக்டர்கள், பம்புசெட்டுகள், டெம்போ-லாரிகளின் எண்ணிக்கை பிரம்மாண்டமாக அதிகரித்து விட்ட நிலையில், இவ்வேலையைச் செய்து வந்த எருது, காளைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. அதேசமயம், நகர்ப்புற பால் சந்தையின் பெருக்கம், கலப்பின மாடுகளின் உருவாக்கம், பாலை பதப்படுத்தி விற்கும் முன்னேறிய தொழில்நுட்பம் ஆகிய காரணங்களால் கறவை மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்திருகின்றது. இருப்பினும், இந்தியாவின் மாடு வளர்ப்பு என்பது பெரும்பான்மையாக சிறு உற்பத்தியாளர்களின் தொழிலாக இருக்கிறதேயொழிய பண்ணை சார்ந்த பெரு உற்பத்தியாக இல்லை. அதிகமும் சிறு விவசாயிகளால் வளர்க்கப்படும் மாடுகள் விவசாயத்தின் அழிவையொட்டி பராமரிக்க இயலாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

ஒரு விவசாயி தன் பொருளாதார வாழ்க்கைக்காக மாடு வளர்க்கிறாரேயன்றி ‘சொர்க்கம் கிடைக்கும், புண்ணியம் வரும்’ என்பதற்காக அல்ல. பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்கி ஆட்குறைப்பு செய்து வரும் உலகமயமாக்கம், விவசாயத்தையும் தனது இலாப வேட்டைக்கேற்ப அழித்தும் மாற்றியும் வருகிறது. இறால் பண்ணைகளினால் கூலி விவசாயிகள் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான காளைகளும் வேலையிழந்திருக்கின்றன.

எனவே, சினை பிடிக்காத பசு மாட்டையும், வயதான, வேலையிழந்த காளைகளையும் ஒரு விவசாயியினால் பராமரிக்கவே முடியாது. வருமானமற்ற நிலையில், வருமானம் தராத மாடுகளுக்குச் செலவு செய்து தீனி போடுவது என்பது அவரால் முடியவே முடியாத காரியம். அதனால்தான் உதவாத மாடுகளை வெட்டுக்கு விற்று, உதவுகின்ற மாடுகளையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றப் போராடுகிறார் விவசாயி.

உலக மாட்டு இருப்பில் முதலிடம் பெற்றிருக்கின்ற இந்தியாதான் உதவாக்கரை மாடுகளை வைத்திருப்பதிலும் முதலிடம் வகிக்கின்றது. எனவே, இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் வெட்டப்படும் மாடுகள் அளிக்கும் வருவாய்தான் எஞ்சியிருக்கும் கால்நடைச் செல்வத்தைக் காப்பாற்றுவதற்கே ஒரு மறைமுகக் காரணமாக இருக்கிறது.

இந்தி பேசும் மாநிலங்கள் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கனவே பசுவதைத் தடைச்சட்டம் அமலில் இருப்பதால் வெட்டுக்குச் செல்லும் மாடுகள் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்கின்றன. எப்படியாவது விற்றாக வேண்டும் என்ற விவசாயியின் நிர்ப்பந்தம் இந்த இடையூறுகளைக் கடந்து வியாபாரத்தையும், சந்தையையும் உருவாக்கியிருக்கின்றது.

மேலை நாடுகளில் கால்நடைப் பொருளாதாரத்தில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாட்டுப் பண்ணைகள் ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றன. இது இறைச்சி, மக்களின் ஆரோக்கியம், மருந்துகள், தோல் பொருட்கள் என்று பன்முகப் பயன்பாடு கொண்டதாகவும், பொருளாதார ரீதியில் பெரும் வருவாய் ஈட்டும் முக்கியத் தொழிலாகவும் இருக்கின்றது. இந்தியாவில் இப்படி ஒரு பெரும் தொழில் உருவாகமல் தடுத்த ‘புண்ணியம்’ காங்கிரசு மற்றும் இந்துமதவெறிக் கும்பலுக்கே சேரும். அதனால்தான் உதவாத மாடுகளைக் கூட வெட்டுவதற்கு உள்ள இடர்கள் விவசாயிகளையும், வியாபாரிகளையும் சினமடைய வைக்கிறது. விற்பனை செய்ய முடியாததால் பசுமாடுகள் கைவிடப்படுகின்றன. லக்னோ நகரில் மட்டும் நாளொன்றுக்கு 100 மாடுகள் பாலிதீன் பைகளைத் தின்று சாகின்றன.

இந்தி பேசும் மாநில மாடுகள் இராஜஸ்தான் வழியாக பாகிஸ்தானுக்கும், பீகார் வழியாக மேற்கு வங்கத்திற்கும் – வங்க தேசத்திற்கும், தென்னிந்திய மாடுகள் இறைச்சிக்காக கேரளத்திற்கும், தோலுக்காக தமிழகத்திற்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இதில் அரசு ஏற்படுத்தியிருக்கும் தடைகள், தேவையற்ற போக்குவரத்துச் செலவு, உழைப்பு விரயம் மிக அதிகம். இந்தியா பாகிஸ்தான் எல்லையிலே ‘தீவிரவாதிகளை’ ஊடுருவாமல் கண்காணிக்கும் மத்திய அரசு இந்த மாட்டு வர்த்தகத்தை மட்டும் அனுமதிக்கின்றது. ஒருவேளை தடுக்க நினைத்தால் ‘இந்துக்களின்’ மாட்டுப்படை இராணுவத்தையே மோதி அழித்து விடும். இது கற்பனையல்ல.

உள்நாட்டில் பசுவின் புனிதம் பேசி மதவெறி அரசியல் நடத்த வேண்டும்; உதவாத மாடுகளை விற்பதற்கும் பல சுற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும். இந்த அவலமான, அயோக்கியத்தனமான சூழ்நிலையே இந்தியக் கால்நடைச் செல்வத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தீங்காகும். சற்று கற்பனை செய்து பாருங்கள் : இந்தியாவில் ஆங்காங்கே மாடுவெட்டும் தொழிற்சாலைகளும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் இருந்தால் விவசாயிகளுக்கு நன்கு பயன்படும் என்பதோடு, இறைச்சி மற்றும் தோலின் தரத்தை உயர்த்தி பல கோடி மக்களை ஒரு முறையான உற்பத்தியில் ஈடுபடச் செய்யவும் முடியும்.

தற்போது அந்த நிலைமை இல்லை. ஆனால், வெட்டுவதற்கான மாடுகள் அதிகம் இருந்தும் இங்கு வெட்டப்படும் மாடுகள் மிகவும் குறைவு. 1980-ம் ஆண்டு 1.56 கோடி மாடுகளும், 2000-ம் ஆண்டு 2.43 கோடி மாடுகளும் இறைச்சிக்காக வெட்டப்பட்டிருக்கின்றன. 20 ஆண்டுகளில் ஆண்டுக்கு 5 சதவீதம்தான் வளர்ந்திருக்கின்றது. இதனால் பாலுக்கும், விவசாய வேலைக்கும் பயன்படுகிற மாடுகளைப் பராமரிக்கும் திறன் விவசாயிகளிடம் கடுமையாகக் குறைந்திருக்கிறது. முக்கியமாக, இறைச்சிக்காக மாடு வளர்க்க வேண்டும் என்ற அவசியம் இருந்தும் இந்தத் திசையில் நாம் இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை.

இந்தியாவில் சட்டபூர்வமாக 3,600 மாடு வெட்டும் கூடங்களும், சட்டத்திற்குத் தெரியாமல் 32,000 கூடங்களும் இருக்கின்றன. மனிதனுக்கு அளப்பரிய பயனைக் கொடுக்கும் மாட்டை வெட்டுவது என்பது கிரிமினல் நடவடிக்கையாக மாற்றப்பட்டிருப்பது எத்தகைய அநீதி!

holycowபசுவதைத் தடைச்சட்டம் காரணமாக கேரளத்துக்கும் வங்காளத்துக்கும் மாடுகளைக் குறைந்த செலவில் கொண்டு போக வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கி விட்டு, வியாபாரிகளை மாடுகளை இரக்கமற்ற முறையில் கொண்டு போவதாக மிருகவதை தடுப்பு மனிதர்கள் ஊளையிடுகின்றனர். மாடுகளை வளர்க்கவும், வெட்டவும் தடையாயிருக்கின்ற இந்நிலைமை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை எனலாம். இப்படி பல்வேறு தடைகளைத் தாண்டி வெட்டப்படும் மாடுகளை மட்டும் நம்பி தோல் பதனிடும் தொழிற்சாலைகள் 1,400-ம், தோல் பொருட்களைத் தயாரிக்கும் சிறு நிறுவனங்கள் இலட்சக் கணக்கிலும் இங்கு இருக்கின்றன. இதில் தமிழ்நாட்டின் பங்கு கணிசமானது. தோல் துறையை நம்பி மட்டும் 25 இலட்சம் இந்திய மக்கள் – அதில் மூன்றிலொரு பங்கினர் பெண்கள் – பிழைக்கின்றனர்.

கச்சாத் தோல் அளிப்பில் இறைச்சிக் கூடங்களிலிருந்து 60 சதவீதமும், இறந்து போகும் கால்நடைகளிலிருந்து 30 சதவீதமும், வெளிநாட்டு இறக்குமதியில் 10 சதவீதமும் பங்கு வகிக்கின்றன. பசுவதைத் தடைச்சட்டம் இந்தியா முழுவதற்கும் கடுமையாக அமலுக்கு வரும் பட்சத்தில், இலட்சக்கணக்கான குடும்பங்கள் வேலையிழக்கும். வெளிநாட்டிலிருந்து தோல் இறக்குமதி கணிசமாக அதிகரிக்கும். அதன் விளைவாக அத்தியாவசியத் தோல் பொருட்களின் விலை மிகவும் உயரும். ஒரு மாட்டுத் தோல் 25 சதுர அடியும், ஒரு ஆட்டுத்தோல் 4 சதுர அடி பரப்பையும் கொண்டிருப்பதால், தோல் பொருள் தயாரிப்பில் மாட்டுத் தோலின் பங்கே முக்கியமானது.

77.6 கோடி செருப்பு ஜோடிகளும், 1.8 கோடி ஆயத்த ஆடைகளும், 6 கோடி கைப்பொருட்களும் (பை, பர்ஸ், பெல்ட் முதலியன) 5 கோடி தொழிற்சாலை கையுறைகளும் – இந்தியத் தோல்பொருள் ஏற்றுமதியில் அடக்கம். இதன் மதிப்பு 10,000 கோடி இந்திய ரூபாய்களாகும். இதில் 60 சதவீத பங்கு சிறு – குடிசைத் தொழில்கள் செய்யும் மக்களிடமிருந்து வருகிறது. எனவே, பசுவதைத் தடைச்சட்டம் வர வேண்டும் என்ற இந்து மதவெறியர்களின் விருப்பம் கோடிக்கணக்கான மக்களைக் கொன்றுவிட்டுத்தான் அமலுக்கு வரமுடியும். ஆக பார்ப்பனியத்தின் கோமாதா என்ற புனிதத்தின் உண்மைப் பொருள் மனிதவதை என்பதே.

இளநம்பி

புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2003

மாட்டுக்கறி : பார்ப்பன மதவெறி – புதிய கலாச்சாரம் வெளியீடு