privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபோலீசின் சித்திரவதை – தோழர் தமிழ்ச்செல்வியின் வாக்குமூலம் !

போலீசின் சித்திரவதை – தோழர் தமிழ்ச்செல்வியின் வாக்குமூலம் !

-

 

Hosur tasmac protest (1)மூடு டாஸ்மாக் கடையை என்று சாணி எறிந்து வலியுறுத்திய ஓசூர் ஆர்ப்பாட்டம் 11-08-2015 அன்று நடந்தது. உடன் கைது செய்யப்பட்டாலும் இரவு 9 மணிக்கு கைக்குழந்தையுடன் இருந்த தோழர்.தமிழ்ச்செல்வி மட்டும் விடுவிக்கப்பட்டார். மற்ற தோழர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். தோழர்களை கைது செய்து கொண்டு சென்ற போலீசு எப்படியெல்லாம் சித்திரவதை செய்திருக்கிறது என்பதை தோழர் தமிழ்ச்செல்வி தெரிவித்த வாக்குமூலத்தை இங்கே வெளியிடுகிறோம்.

“போராட்டத்தை முடித்துக் கொண்டு நானும் தோழர்களும் பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தோம். அங்கே, உளவுப் பிரிவு போலீசார் என்னையும் மற்ற தோழர்களையும் போட்டோ எடுத்தனர். அதன் பின்னர் எங்களை சுற்றி வளைத்தனர்.

தோழர்கள் முனியப்பன், முருகேசன், மணி, தீபன், விஜி ஆகியோருடன் நானும் மக்களைப் பார்த்து முழக்கமிட்டேன். இது பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள மக்களுக்கு என்ன என்று புரிந்து கொள்வதற்காகவும், போலீசு தீவிரவாதிகளை சுற்றி வளைப்பது போல சுற்றி வளைப்பதையும், டாஸ்மாக்குக்கு எதிராக நாங்கள் போராடியதையும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் எங்களை சூழ்ந்து கொண்டனர். சுமார் 20 நிமிடங்கள் நாங்கள் முழக்கமிட்டோம்.

அதன் பின்னர், ஒசூர் நகரப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையில் வந்த போலீசு படை எங்களை சூழ்ந்து கொண்டு கைது செய்தனர்.

தீபன், முனியப்பன், குமார், மணி ஆகியோரை ஒரு ஆட்டோவில் ஏற்றினர். ஆட்டோவில் இடம் இல்லாததால், தோழர்.முருகேசனும் நானும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தோம். எங்கள் இருவரையும் போலீசு வண்டியில் ஏற்றிக்கொண்டனர். நாங்கள் முற்றுகையிட்ட டாஸ்மாக் கடைக்கு அழைத்து சென்றனர். போலீசார் மட்டும் கடையை சென்று பார்த்தனர். சாணியை வெளியே எல்லாம் அடித்துள்ளீர்கள், கடை ஊழியர்கள் மீது ஏன் அடித்தீர்கள் என்று கேட்கத் தொடங்கிய போலீசிடம் தோழர்கள் விளக்கம் கொடுத்தனர். வேண்டும் என்று அடிக்கவில்லை என்று பேசினர்.

அப்போது தோழர்.முருகேசனுக்கு போன் வந்தது. போனை அவர் பேச முயற்சித்த போது, பேசாதே என்று கூறி போலீசார் தடுத்தனர். அப்போது, தோழரின் கை தெரியாமல் போலீசு மீது பட்டது. இன்ஸ்பெக்டரும் சப் இன்ஸ்பெக்டரும் சேர்ந்து கொண்டு தோழரை என்னையே எதிர்க்கிறியா என்று கூறி அடிக்கத் தொடங்கினர்.

police tortureஇதன் பின்னர், போலீசு நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசு லாக்கப்பில் வைத்து இருவரும் பூட்ஸ் காலால் மாறி மாறி உதைத்தனர். தோழரின் காலின் மீது ஏறி நின்று உதைத்தனர். இதனை தடுக்க முயன்ற என்னை அங்கிருந்த ‘பெண்’ போலீசு ஒருவர், இவளுக்கு நாலு போடுங்க என்றார். “பொட்ட பையன், நீ எல்லா ஒரு தலைவராடா?” என்று எல்லா ஆபாச வார்த்தைகளையும் சொல்லி திட்டினர், அடித்தனர்.

அடிக்காதீங்க என்று சொன்ன என்னை, “நீ எவனையாவது வச்சிருப்ப, பல்லிளிச்சிக்கிட்டு புருசன் பொண்டாட்டியா வந்திருக்க” என்று ஆபாசமாக பேசத் தொடங்கினார். உடனே, அந்தப் பெண் போலீசு, “சார் கோபாமா இருக்காரு அவரை எதிர்த்து கேட்காதே” என்று என்னை அடக்க முயற்சித்தார். நானோ தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருந்தேன்.

தோழர் முருகேசனின் முகத்திலேயே ஓங்கி ஓங்கி அறைந்தனர். இதனால், அவரது கன்னம் மிக அதிகமாக வீங்கியுள்ளது. ஒரு காலை அவரால் தூக்க முடியவில்லை. அவரை, இறுதிவரை போலீசு செல்லும் டாய்லட் அருகில் உட்கார வைத்தனர். அவரால் நடக்க முடியாத அளவில் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். ஒரு பெண் போலீசு, டாய்லட் போக போகும் போது, அந்தப் பக்கமா போய் உட்காரு என்று சொன்னார். என்னால் நடக்க முடியாமல் இருக்கேன் என்று தோழர்.முருகேசன் சொன்னதற்கு, இவனுக்கு கொடுத்த அடி எல்லாம் பத்தாது, இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லி இன்னும் நாலு போடனும் என்றார்.

இரவு 8 மணிக்கு என்னை மட்டும் விடுவித்தனர். மற்ற 4 தோழர்களை இரவு அழைத்து வந்தனர். ஆனால், அவர்களுடன் என்னை பேச அனுமதிக்கவில்லை. ஆனால், தோழர்களின் முகம், கைகள் வீங்கி புடைத்துப் போயிருந்தன. ஒருவரின் உதடு அதிகமாக வீங்கி இருந்தது.

போலீசு தோழர்களை நடத்திய விதம் இதுதான். தமிழ்நாடு முழுக்க மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் தோழர்களை இப்படித்தான் போலிசு நடத்துகிறது. இதன் பொருள், “குவாட்டர் பாட்டில் தான் அரசு சொத்து! குடி கெடுப்பதுதான் அரசின் கடமை! டாஸ்மாக்கை மூடு என்பது தேசவிரோதம், மூடச் சொல்பவர்கள் பயங்கரவாதம்!”

கைது செய்யப்பட்ட தோழர்கள் முருகேசன், முனியப்பன், மணி, தீபன், குமார் ஆகியோர் மீது ஒசூர் நகர போலீசு ஸ்டேசனில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்கள்:

Cr.No.812/2015 Hosur Town Police Station

குற்றங்களாக பதிவு செய்யப்பட்ட சட்டங்கள், பிரிவுகள்

  1. IPC 147 – கலகம் விளைவித்தல்
  2. IPC 294B – ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துதல்
  3. IPC 341 – எந்த ஒரு ஆளையும் சட்டவிரோதமாகத் தடுத்தல்
  4. IPC 353 – பொது ஊழியரை அவரது கடமையைச் செய்யவிடாமல் தாக்குதல்
  5. IPC 355 – ஒருவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற உட்கடுத்துடன் தாக்குதல்
  6. IPC 506(1) – குற்றமுறு மிரட்டல்
  7. தமிழ்நாடு சொத்து சேதப்படுத்துதல் தடுப்பு சட்டம் பிரிவு 3 – பொருட்களுக்கு தீங்கு விளைவித்தல்
  8. தமிழ்நாடு திறந்த வெளிக் குற்றங்கள் தடுப்புச் சட்டம் பிரிவு 3 மற்றும் 4 –

பிறகு தோழர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கே ஏற்கனவே பென்னாகரம் ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்களும் இருக்கின்றனர்.

ஆனால் தமிழக போலிசாருக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம். உங்கள் அடக்குமுறை எங்களையோ மக்களையோ முடக்கிவிடாது. டாஸ்மாக் கடைகளை மூடாமல் ஓயாது எங்களது போராட்டம்!

தகவல்: மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
தொடர்புக்கு 99623 66321

  1. மிக விரைவில் போலிசுக்கு அவர்கள் பாணியில் பாடம் புகட்டணும்

  2. மக்கள் அதிகாரம் மக்களிடம் வேகமாக பரவி வருவதை போலீசால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. எனவே அடக்குமுறையை ஏவுகிறது.வீறுகொண்டு எழுவோம்!

  3. இன்னுமா ஊழல் மன்றத்தை நம்பிக்கிட்டு இருக்கீங்க? போங்க போய் புள்ளக் குட்டிகளை படிக்க வைங்க.

Leave a Reply to kiraamaththaan no 1 பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க