privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுமூடு டாஸ்மாக்கை ! திருச்சி, விழுப்புரம் போராட்டம் - படங்கள்

மூடு டாஸ்மாக்கை ! திருச்சி, விழுப்புரம் போராட்டம் – படங்கள்

-

மூடு டாஸ்மாக்கை : ஆர்ப்பாட்டங்கள் – 3

4. திருச்சி

மிழகத்தில் அறிவிக்கப்படாத ஒரு அவசரநிலை போலீசுக் காட்டாட்சி ஜெயலலிதா தலைமையில் நடக்கிறது.

மதுவிலக்கு கோரியும், சாராயக் கடைகளை மூடக்கோரியும் ஆர்ப்பாட்டம், உண்ணாநிலை முதல் மனிதச்சங்கிலி வரை அமைதி வழியில் போராடும் பள்ளி சிறுவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் போலீசால் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்படுகின்றனர். போராடுபவர்கள் மீது கொலை முயற்சி போன்ற கடுமையான வழக்குகள் ஏவப்படுகின்றன.

மூடு டாஸ்மாக்கை ஆர்ப்பாட்டம்
திருச்சி காந்தி மார்க்கெட் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம்

கொலை கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற எந்த பிரச்சனை பற்றியும் துளியும் கவலை படாத அரசு டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று மக்கள் வாயை திறந்தாலே வெறிநாயாக சீறி வருகிறது.

இந்த அராஜகத்தையும் அடக்கு முறையையும் எதிர்த்து, மக்கள் தன் கையில் அதிகாரத்தை எடுத்து போராட வேண்டும். இத்தகைய அபாயகரமான சூழலில் அனைத்து ஜனநாயக சக்திகளும் முற்போக்கு இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒரணியில் திரண்டு பாசிச ஜெயா அரசின் ஒடுக்குமுறையை முறியடிக்க வேண்டியது அவசியமானதும், அவசரமானதுமாகும்.

மூடு டாஸ்மாக்கை ஆர்ப்பாட்டம்
மூடு டாஸ்மாக்கை! அடக்கு முறையால் தடுக்க முடியாது மக்கள் போராட்டத்தை

அந்த வகையில் தான் கடந்த 3 மாத காலமாக தமிழகம் முழுக்க ‘மூடு டாஸ்மாக்கை கெடு விதிப்போம் ஆகஸ்டு 31’ என்ற அறைகூவலோடு பிரச்சாரம் செய்தோம், போராட்டம் செய்தோம். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க 31-08-2015 அன்று ‘மூடு டாஸ்மாக்கை! அடக்கு முறையால் தடுக்க முடியாது மக்கள் போராட்டத்தை’ என்ற முழக்கத்தை முன் வைத்து மாபெரும் பேரணி ஆர்ப்பாட்டம்  மக்கள் அதிகாரம் சார்பாக நடத்தப்பட்டது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் பேரணியாக சென்று சத்திரம் அண்ணாசிலை-யில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் சார்பாக காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இத்தகைய பேரணி ஆரப்பாட்டத்தை தடை செய்வது என்ற நோக்கத்துடனே கான்ஸ்டபில் முதல் கமிஷனர் வரை அக்கறை காட்டினர்.

மூடு டாஸ்மாக்கை ஆர்ப்பாட்டம்
உங்கள் அதிகாரம் உங்கள் கையில் நமக்கான தேவைகளை நாமே பெற்றுக் கொள்வோம் என்ற அடிப்படையில் தான் மக்கள் அதிகாரத்தை நிறுவி உள்ளோம்

அனுமதி கேட்டு சென்ற நாள் முதல் ஆர்ப்பாட்ட தின நாள் வரை தொடர்ச்சியாக போனிலும், நேரிலும் கெஞ்சுவது பிறகு மிரட்டும் தோணியில் பேசுவது சட்டம் ஒழுங்கு துறையினர் உளவுத் துறையை குறை சொல்வது, உளவுத் துறையினர் உயர் அதிகாரிகளை குறை சொல்வது என்று சமாதானம் பேசி போராட்டத்தை நீர்த்து போக செய்ய முயற்சித்தனர்.

“தமிழகத்தில் எங்குமே பேரணிக்கு அனுமதி இல்லை திருச்சியில் மட்டும் ஏன் விடாபிடியாக அனுமதி கேட்கீறிர்கள்” எனக் கேட்ட அதிகாரியிடம், “தமிழகத்தில் எங்குமே முன்னெச்சரிக்கை கைதோ வழக்கோ இல்லாத போது திருச்சியில் மட்டும் தோழர்களை தேடி தேடிச் சென்று வழக்கு போட்டது ஏன்?” என்ற கேள்விக்கு மழுப்பலாகவே பதில் கூறினார்.

“சமீப காலமாக அரசியல் கட்சிகளுக்கு குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் ஆர்பாட்ட அனுமதி உண்டு” என்று நாம் கோரி இருந்த இடத்திற்கு அனுமதி மறுத்தனர்.

“இந்த முடிவு அ.தி.மு.கவுக்கு பொருந்ததா? காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை எதிர்த்து அவர்கள் நடத்தும் போராட்டங்கள் எல்லாம் காவல் துறையின் வரம்பிற்குள் நடத்தப்பட்டது தானா?” என்ற கேள்விக்கு நமட்டுச் சிரிப்பும் மழுப்பல் பதிலுமே விலையாக கிடைத்தது. இறுதிவரை பேரணிக்கு அனுமதி கொடுக்காமல், நாம் பேரணிக்கு திட்டமிட்ட இடத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ஆயுதப்படையினர், வஜ்ரா வாகனம் உள்ளிட்ட ஒரு பெரும் படையே ஆக்கிரமித்து அனுமதி மறுத்தனர்; “மீறினால் கைது செய்வோம்” என்று மிரட்டினர்.

மூடு டாஸ்மாக்கை ஆர்ப்பாட்டம்
இன்று இது மக்கள் இயக்கமாக மாறத் தொடங்கி விட்டது.

மக்கள் அதிகாரம் தாம் நடத்தும் முதல் ஆர்ப்பாட்டம் என்பதாலும், இதில் வணிகர் சங்கம் விவசாயிகள் அமைப்பு, ம.தி.மு.க., புதிய தமிழகம், ஆதித்தமிழர் பேரவை, ஆதி தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொள்ள இருப்பதாலும் போலீசாரின் அராஜகத்தை சகித்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்தை மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தோழர்களும் ஆதரவாளர்களும் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் சத்திரம் பேருந்து நிலையத்திலுள்ள அண்ணாசிலை அருகில் துவங்கியது.

மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தோழர் தர்மராஜ் பேசும் போது, மக்கள் அதிகாரம் அமைப்பு உருவான விதமும் அதன் தேவை பற்றியும் விளக்கினார். “இது வன்முறையை தூண்டும் அமைப்பு என்று அரசு செய்யும் விஷம பிரச்சாரம் செய்வது தவறானது. அரசு மக்களுக்கு வைத்த திட்டமான நமக்கு நாமே திட்டத்தை போல மத்திய அரசு முன் வைத்த உங்கள் பணம் உங்கள் கையில் என்ற திட்டத்தை போல, தூய்மை இந்தியா திட்டத்தை போல உங்கள் அதிகாரம் உங்கள் கையில் நமக்கான தேவைகளை நாமே பெற்றுக் கொள்வோம் என்ற அடிப்படையில் தான் மக்கள் அதிகாரத்தை நிறுவி உள்ளோம். அதன் முதல் போராட்டமாக இந்த டாஸ்மாக்கை இழுத்து மூடும் இயக்கத்தை முன் வைத்து எடுக்கப்பட்டது.

இன்று இது மக்கள் இயக்கமாக மாறத் தொடங்கி விட்டது. இது போன்று பல்வேறு மக்கள் பிரச்சனைகளை, இயற்கை வளங்கள் சுரண்டலை தொழிலாளர் விரோதப் போக்கை முறியடிக்கும் விதமாக இயக்கமாக எடுக்க உள்ளோம். அதற்கு ஜனநாயக சக்திகள் ஆதரவும் ஊக்கமும் கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தி பேசினார்.

புதிய தமிழகத்தை சேர்ந்த திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஐயப்பன் தலைமையில் முன்னணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர் மக்கள் அதிகாரம் போராட்டம் பற்றியும் டாஸ்மாக்கை இழுத்து மூடும் வரை போராடும் அவசியம் பற்றியும் இவ்வளவு போராட்டங்களுக்கு பிறகும் இந்த அரசு சுரணையின்றி இருப்பது பற்றியும் பேசினார். மக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலமே இதற்கு முடிவு கிடைக்குமென உரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அடுத்து பேசிய மா.ப. சின்னத்துரை, விவசாயிகள் சங்கம், திருச்சி மாவட்ட தலைவர், “என் குடும்பம் பிள்ளை சீரழிந்து விடக்கூடாது, எனவேதான் இதை எதிர்த்து போராட வந்துள்ளேன். ஓட்டுப்பொறுக்கி அ.தி.மு.க அரசு ஓட்டுக் கேட்டு வரும் போது நான் மக்களை அடிப்பேன், ஒடுக்குவேன் என சொல்லவில்லை. இன்று அவர்களின் சுயநலத்துக்கு விளக்கமாறு தூக்கியுள்ளனர். இனி எங்களிடம் ஓட்டுக் கேட்டு வந்தால் விளக்கமாறு, செருப்பை தூக்கி விரட்டியடிப்போம்.

மூடு டாஸ்மாக்கை ஆர்ப்பாட்டம்
கலிங்கப்பட்டி, சென்னை போன்ற இடங்களில் மாணவர்களும், மக்களும் அதிகாரத்தை கையிலெடுத்து போராடியதால் தான் மூட முடிந்தது.

டாஸ்மாக்குக்கு எதிராக அனைத்து கட்சி நபர்களையும் ஒருங்கிணைத்த மக்கள் அதிகாரம் அமைப்புக்கு நன்றி. திருவரங்கம் இடைத்தேர்தலில் ரூ 150 கோடி செலவு செய்து வெற்றி பெற்றாலும் குடிக்கிற தண்ணியை கூட மக்களுக்கு கொடுக்காமல் அலைக்கழிக்கும் ஜெயலலிதா அரசு, டாஸ்மாக் கடையை மூடாது. மக்கள் போராட்டங்கள் மூலமாக தான் மூட முடியும் .

இளங்கோவனுக்கு எதிராக விளக்கமாறு செருப்பையும் தூக்கி போராடிய ஓட்டுக்கட்சிகள் ஓட்டுகேட்டு வந்தால் அவர்கள் பாணியிலேயே விரட்ட வேண்டும்.” என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்து பேசினார்.

அடுத்து பேசிய M.K.கமலக்கண்ணன் திருச்சி காந்தி மாக்கெட் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் “இந்த அரசு டாஸ்மாக் கடையை மூடாது, நாம் தான் மூட வேண்டும் என கலிங்கப்பட்டி, சென்னை போன்ற இடங்களில் மாணவர்களும், மக்களும் அதிகாரத்தை கையிலெடுத்து போராடியதால் தான் மூட முடிந்தது. இது போன்ற போராட்டங்கள் தான் தீர்வாக அமையும். இதை கையில் எடுத்த மக்கள் அதிகாரம் குழுவினருக்கு நன்றி” என பேசினார்.

அடுத்து பேசிய கந்தவேல்குமார், திராவிடர் விடுதலைக் கழகம் திருச்சி, “டாஸ்மாக் விசயத்தில் தங்கள் போராட்டத்தையும் தங்கள் அமைப்புத் தோழர்கள் சிறை சென்ற அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டு பேசினார். இது போன்ற டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் இணைய வேண்டும் என்று பேசினார்.

மேலும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் மணிமாறன், திருச்சி பச்சையப்பன் கல்லூரி மாணவர் போராட்டத்தை பற்றி பேசினார். “மாணவர்கள் என்பவர்கள் வெளி உலகம் தெரியாத பச்சை பிள்ளைகள் அல்ல. பச்சமிளகாய் போல காரம் மிகுந்தவர்கள். மிளகாய் கடித்தல் என்ன விளைவுகள் ஏற்படும்? என்பது தமிழ்நாடு முழுவதும் எதிரொலித்துள்ளது என பேசி போராட அறைகூவினார்.

மேலும் ஆதிதமிழர் பேரவை, ஆதி தமிழர்க் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், புத்தனாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தங்கவேல், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர். நிலவழகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்ட உரையாற்றினர்.

நிறைவாக பேசிய மக்கள் அதிகார மாநில தலைமை குழு உறுப்பினர் காளியப்பன் “இந்த அரசுக் கட்டமைப்பு தோற்று போய் உள்ளது. செயலிழந்து முடங்கி போயுள்ளது. இதை வீழ்த்தி முறியடிக்க வேண்டியது அவசியம். மூடு டாஸ்மாக்கை என்ற எமது முழக்கம் அரசிடம் வைத்த முழக்கமில்லை. மக்கள் தமது உரிமையை பெற போராட வேண்டுமென வலியுறுத்தி இத்தகைய முழக்கம் முன் வைக்கப்பட்டது. டாஸ்மாக்கை மூடும் வரை இந்த போராட்டம் நீடிக்கும்” என பேசினார்.

மூடு டாஸ்மாக்கை ஆர்ப்பாட்டம்
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழுவினர் கலந்து கொண்டு புரட்சிகர பாடல்கள் பாடி உணர்வூட்டினர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழுவினர் கலந்து கொண்டு புரட்சிகர பாடல்கள் பாடி உணர்வூட்டினர். இறுதியாக மக்கள் அதிகார உறுப்பினர் தோழர் ஓவியா நன்றியுரை கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

மேற்கண்ட பேச்சாளர்களை கூட்டத்திற்கு வரும் முன்னர் Q பிரிவு போலீசார் மிரட்டும் தொனியில் எச்சரிக்கை விடுத்த அதையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்; இறுதிவரை இருந்து ஆதரவு தெரிவித்தனர்.

மக்கள் அதிகாரம் என்றால் அதன் பிரதிநிதிகள் மட்டும கலந்து கொள்ளும் கூட்டமாக இருக்குமென நினைத்த போலீசுக்கு அனைத்து பிரமுகர்களும், பிற இயக்கங்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தது அரசின் அடியாள் படையான போலீசுக்கு அதிர்ச்சியளித்தது.

இது முடிவல்ல துவக்கம் தான் என்பைதை இனிவரும் காலம் நிருபிக்கும். மக்கள் அதிகாரம் தொடர்ந்து இத்தகைய பணிகளில் ஈடுபடும் என்பதை மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அரசுக்கு எச்சரிக்கை விடும் வகையில் ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:
மக்கள் அதிகாரம், திருச்சி.
தொடர்புக்கு: 9445475157.

5. விழுப்புரம்

  • டாஸ்மாக்கை மூடு
  • மக்கள் போராட்டங்களை ஒடுக்குமுறையால் தடுக்க முடியாது

என்ற தலைப்பின் கீழ் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

people-power-vpm-demo-01இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர் ஏழுமலை தலைமை தாங்கி பேசுகையில், டாஸ்மாக்கை மூடு என்று அனைத்து கட்சிகளாலும் சொல்ல முடியாது. அதனை மக்கள் அதிகாரம் மட்டும் தான் இரண்டு மாதங்களாக பிரச்சாரம் செய்து வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த மூன்றாம் தேதி முதலே பச்சையப்பன் கல்லுரி மாணவர்கள், பு.மா.இ.மு தோழர்கள் மற்றும் மக்கள் அதிகார உறுப்பினர்கள் போராட்டத்தை தொடங்கிவிட்டனர். இந்தப் போராட்டத்தை காவல் துறையினர் காட்டுமிராண்டித் தனமாக தாக்கியதை தொலைக்காட்சி செய்தியில் பார்த்திருப்பிர்கள்

தோழர் ஏழுமலை
தோழர் ஏழுமலை உரையாற்றும்போது

அதே போல் மேலபாளையூர் கிராமத்தில் தோழர் ராஜு தலைமையில் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராடினர். அவர்கள் மீது கடுமையான அடக்குமுறை பொய் வழக்கு போட்டு பிணையில் விட மறுக்கிறது. அதே நிலைதான் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் நீடிக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் கள்ளச்சாராயத்தை போலிசும், அரசும் தான் விற்பனை செய்தது. இப்போது டாஸ்மாக் என்ற பெயரில் அம்மா அரசே விக்கிறது.

கப்பூரை சேர்ந்த ஒரு பெரியவரிடம் நோட்டிஸ் தரும் போது “எப்பய்யா இந்த சாராயத்தை ஒழிப்பிங்க. எங்கள் ஊரில் முப்பது இளைஞர்கள் செத்து போய்டாங்க” என்று கதறினார். பல உளவு பிரிவு போலீசார் ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்கிறீர்களே, பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று விசாரணை நடத்திப்பாருங்கள். மீத்தேன் திட்டம், ஜிண்டால் எதிர்ப்பு என பல போராட்டங்களை மக்கள் தானே நடத்தி வருகின்றனர்.

ஊடகங்களுக்கு பேட்டி
ஊடகங்களுக்கு பேட்டி

மக்கள் போராடினால் அவர்களை ஒடுக்குகிறீர்கள். எனவே நமது பிரச்னையை சாதி மத அடிப்படையில், போலிசு, சட்டம், நிதித்துறை மூலம் தீர்க்க முடியாது மக்களாகிய நாம் தான் போராடி தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு மக்கள் அதிகாரமே தீர்வு” என்று கூறி தனது தலைமை உரையை முடித்தார்.

அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் தோழர் சோமு பேசுகையில், “இழுத்து மூடு டாஸ்மாக்கை என்று மக்கள் போராட துவங்கி பல நாட்கள் ஆகிறது. எதிர்த்து போராடும் மக்களை மழுங்கடிக்கும் திசைதிருப்பும் செயலை தொடர்ந்து கீழ்த்தரமாக குறுக்கு புத்தியுடன் நடந்துகொள்கிறது அரசு.  இந்த ஆர்ப்பாட்டத்தில் வி.சி.க மட்டும் அல்ல. அனைத்து தமிழ் சமூகமும் எதிர்த்து வருகிறது. ஒரு சிலர் மட்டும் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தூபம் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் சாராயத்தின் மூலம் மக்களை மழுங்கடிக்கிறார்கள். எனவே உடனடியாக தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமுல்படுத்தும் வரை மக்கள் அதிகாரமும் விடுதலை சிறுத்தைகளும் இணைந்து போராடுவோம்” என்று கூறி தனது கண்டன உரையை முடித்தார்.

ஆன்மநேய ஜெய. அண்ணாமலை
ஆன்மநேய ஜெய. அண்ணாமலை

அவரைத் தொடர்ந்து வள்ளலார் சன்மார்க்க கழகம் திரு.ஜெய.அண்ணாமலை பேசுகையில் “இன்றைய தினம் மக்கள் அதிகாரத்தின் சார்பாக தமிழகத்தில் ஐந்து இடங்களில் ஆர்பாட்டம் நடக்கிறது. மூடு டாஸ்மாக்கை என்று மக்கள் அதிகாரம் கெஞ்சவில்லை. உரிமையோடு போராடி வருகிறது. மனித ஒழுக்கத்தை வலியுறுத்தி வள்ளலார் சன்மார்க் சங்கமும் போராடி வருகின்றது. டாஸ்மாக்குக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம். அந்த அடிப்படையில் தான் நான் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டேன்.

உயிர்களுக்கு ஏற்படும் துன்பத்தை தூக்கி எரிய போராடிக்கொண்டிருக்கும் மக்கள் அதிகாரத்தை பாராட்டுகிறேன். டாஸ்மாக் போராட்டம் யாரையும் எதிர்க்கவில்லை, மக்கள் நலம் குறித்துதான் தொடர்ந்து போராடிவருகின்றனர். இவர்களைதான் காவல்துறை ஒடுக்குகிறது. இதனை பொற்கால ஆட்சி என்கிறார்கள். இது பொற்கால ஆட்சி என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாயில்லை?

உடலுக்கு கேடு விளைவிக்கும் சாராயத்திற்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள் இதுதான் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம். லஞ்சம் ஊழல் இவைகளுக்கு எதிரான அமைப்புதான் மக்கள் அதிகாரம். தமிழ்நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது இங்கு எதற்கும் அனுமதி இல்லை இதையும் எதிர்த்து மக்கள் அதிகாரம் வீதி வீதியாக பிரச்சாரம் செய்கிறது இவர்களை எந்த ஒடுக்குமுறையாலும் தடுத்துவிட முடியாது” என்று கூறி தனது உரையை முடித்தார்.

வழக்குரைஞர் சங்கத் தலைவர் தோழர் வேலு குபேந்திரன் மயிலாடுதுறை
வழக்குரைஞர் சங்கத் தலைவர் தோழர் வேலு குபேந்திரன் மயிலாடுதுறை

வழக்குரைஞர் சங்க தலைவர் தோழர் வேலு குபேந்திரன் மயிலாடுதுறை பேசுகையில், “டாஸ்மாக்கை முட வேண்டும் என மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை காவல்துறை ரவுடிகள் மாணவர்களை ஒடுக்குகிறது. டாஸ்மாக்கை மூடினால் அரசுக்கு வருமானம் வராது என சொல்கின்றனர். தாதுமணல், கிரானைட் உள்ளிட்டவற்றை முறை படுத்தினாலே நல்ல வருமானம் வரும். அவ்வாறு செய்யாமல் கொள்ளைக்கு ஆதரவாக இருக்கிறது அரசும், போலிசும்.

 

திரண்டிருந்த மக்கள்
திரண்டிருந்த மக்கள்

விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்கள் டாஸ்மாக்கை எதிர்த்து போராடினால் காவல் துறையை ஏவிவிட்டு ஒடுக்குகிறது. காரணம், தோழிகள் நடத்தும் மிடாஸ் சாராய ஆலையில் வருமானம் குறைந்துவிடும் என்பதால் தான்.

காவல் துறையினர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் எங்களுக்கு எதிராக என்ன செய்கிறீர்களோ அதையே நாங்கள் பிரயோகிப்போம், இதுதான் மக்கள் அதிகாரம்.

டாஸ்மாக்குக்கு எதிராக நாங்கள் தான் போராடி வருகிறோம். ஆனால் சில கட்சிகள் இதனை பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறார்கள். நான் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று சொல்கிறார்கள். முதலில் அவர்கள் கட்சியில் இருக்கும் தொண்டர்களை குடிக்க விடாமல் தடுக்கட்டும்.

முழக்கமிடும் தோழர்கள்
முழக்கமிடும் தோழர்கள்

மதுவிலக்கு கோரி மக்கள் போராடும் போது அதை நேர்மையாக அமுல் படுத்த வேண்டும். இல்லையென்றல் போயஸ் தோட்டத்தை முற்றுகை இடுவோம்.” என கண்டன உரையை முடித்தார்.

தோழர் கலை
தோழர் கலை

இறுதியாக கண்டன உரை ஆற்றிய மக்கள் அதிகாரம் தோழர்.கலை “டாஸ்மாக் எதிரான இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். டாஸ்மாக்கு எதிராக போராடும் அனைத்து ஓட்டுக்கட்சிகளையும் ஒடுக்குகிறது ஜெயா அரசு; உளவுப் பிரிவு போராடும் மாணவர்களை போட்டோ எடுத்து மிரட்டி வருகிறது. ஆனால் மக்கள் போராட்டங்களை போலிசால் ஒடுக்க முடியாது.

மது அரக்கன்
மது அரக்கன்

“டாஸ்மாக்கை உடைத்தால் அபராதம் போடுவது, எந்த சட்டத்தில் உள்ளது. சட்டத்தை மீறுவது இந்த அரசுதானே, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயாவை கைதுசெய்த போது அ.தி.மு.க குண்டர்கள் ரௌடித்தனம் செய்ததை காவல் துறை வேடிக்கை பார்த்தது. ஆனால் மக்களின் வாழ்வை பறிக்கும் டாஸ்மாக்கை மூடு என அமைதி வழியில் போராடினால் PPT act, 307 போன்ற கடுமையான பொய் வழக்கு போடுகிறது காவல்துறை. உரிமைக்காக போராடுகின்ற பெரும்பான்மை மக்களை ஒடுக்கி, குடிகாரர்களாக்கி மக்களை ஆளும் அருகதையை ஜெயா அரசு இழந்து விட்டது” என அரசையும், காவல் துறையையும் அம்பலபடுத்தி பேசினார் .

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் மாணவர்கள் இளைஞர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே மது அரக்கன் வேடமணிந்த தோழர்கள், குடி கெடுக்கும் ஜெயா அரசை அம்பலப்படுத்தும் விதமாக மக்கள் கூடும் இடங்களில், குறிப்பாக பெண்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று , “நான் மது அரக்கன் வந்திருக்கேன். உங்கள் தாலியை அறுக்க போறேன். உங்கள் வாழ்வை அழிக்க வந்திருக்கேன்” என ஆக்ரோஷமாக மதுவின் கொடூரத்தை சித்தரிக்கும் வகையில் , மக்களை சிந்திக்க வைக்கும் விதமாக பேசினர்.

இளைஞர்கள், மாணவர்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் –ல் பதிவு செய்ய போட்டோ எடுத்துக் கொண்டார்கள், பேருந்துகளிலிருந்து இறங்கி வந்து பார்த்தார்கள் மக்கள். கடைவீதி உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் நமது கருத்து பிரச்சாரமாக கொண்டு சேர்க்கப்பட்டது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்த ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருக்கையில், அருகில் உள்ள மார்க்கட்டில் உள்ள பூக்கடை வைத்து வியாபாரம் நடத்தும் இரண்டு இளைஞர்களிடம் டாஸ்மாக்கை மூடுவதைப்பற்றி கருத்து கேட்டபோது.

“டாஸ்மாக்கை மூடியே ஆகனும், இதனால என் அப்பாவ இழந்துடேன். தினமும் வருவாரு 200 ரூபாய் வாங்கிட்டு போய் குடிப்பாரு, இப்படி குடிச்சியே செத்துட்டாரு. அவரு குடிக்கலனா இந்த வெய்யிலுல பூக்கடைல வேல செய்வனா?”

முழக்கமிடும் சிறுவர்கள்
முழக்கமிடும் சிறுவர்கள்

அருகில் இருந்த நண்பர், “என் ஃப்ரண்ஸ்லாம் காலேஜ் போறேன்னு சொல்லிட்டு பஸ்டாண்டுல டாஸ்மாக் பார்க்கு மேல இருக்கிற லாட்ஜில் ரூம் போட்டு குடிச்சிடு வீணா போறாங்க. இந்த டாஸ்மாக்கடைய மூடியே ஆகனும் ஏன்னா? அவரோட அப்பா செத்துபோனதுக்கும், என்னுடைய நண்பர்கள் குடிகாரர்கள் ஆகுறதுக்கும் இந்த அரசாங்கம்தான் காரணம். அதனால இந்தப் போராட்டத்துக்கு எங்களுடைய ஆதரவு இருக்கும்” என்று அரசு மீது உள்ள கோபத்தை வெளிபடுத்தினார்கள்.

அதே மார்கட்டில் 65 வயது மதிக்க தக்க ஒரு பூக்கடை அம்மாவிடம் கருத்து கேட்கும்போது.

“இந்த அரசுக்கு சாராயக்கடையாலதான் வருமானம் வருதுனா? அது அசிங்கம் இல்லையா? சின்ன சின்ன பசங்கலாம் குடிச்சிட்டு வீணாபோறாங்க. என் புருசனும் குடியாலதான் செத்துபோனாரு… சாராயக் கடைய மூடனும் ….” என்று உழைக்கும் வர்க்கத்தின் கோபத்தை வெளிக்காட்டினார்.

பக்கத்து கடை தொழிலாளி ஒருவர் பேசும்போது “இந்த மார்கெட்ல சராசரியா 300 ரூபாய் சம்பாதிக்கிறாங்க அதுல குவாடர்கும் வாட்டர்கும் இன்னும் ஒரு பெக்குக்கும் சரியா போய்டும். இவங்களோட புள்ளை குட்டிலாம் வறுமைல கஷ்டபட்றாங்க! டாஸ்மாக்க மூடியே ஆகனும்.” என்று கூறினார்.

மூடு டாஸ்மாக்கை ஆர்ப்பாட்டம்ஒரு முதியவர், “மக்கள் அதிகாரம் சட்டையும், கேப்பும், எப்போது தருவீங்க? நம்ம ஊரில் இதுபோல கூட்டம் போட்டு பேச வேண்டும்” என்று கேட்டார்.  அதே வேகத்தில் சிறையில் உள்ள தோழர்கள் பார்க்க சென்றுள்ளார்.

+1 மாணவன் ஒருவர், “எப்போது செயலில் இறங்க வேண்டும் எண்ணையும் கூப்பிடுங்கள், நான் சிறை செல்ல தயார் , பேச அழைத்தால் பேசவும் தயாராக உள்ளேன்.” என்று கூறினான்.

25 வயது இளைஞர், “சாராய ஒழிப்பு பாடல் தயாரித்துள்ளேன் பாட அனுமதித்தால் பாடுவேன்” என்றார்.

தகவல்

மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்

முந்தைய செய்திகள்

  1. மூடு டாஸ்மாக்கை ! திருப்பெரும்புதூர் ஆர்ப்பாட்டம் – செய்தி, படங்கள்
  2. மூடு டாஸ்மாக்கை ! தருமபுரி, மதுரை போராட்டம் – படங்கள்