privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்என்.எல்.சி தொழிலாளர் போராட்டம்: பின்னடைவு உணர்த்தும் உண்மைகள் !

என்.எல்.சி தொழிலாளர் போராட்டம்: பின்னடைவு உணர்த்தும் உண்மைகள் !

-

ரசுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.) ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்தக் கோரி 39 நாட்களாக நடைபெற்று வந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டு பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஊதிய உயர்வுக் கோரிக்கை நிர்வாகத்தால் ஏற்கப்படாத நிலையில், ஆகஸ்ட் 27 இரவு முதலாகத் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

என்.எல்.சி.யில் 12 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்களும், 10 ஆயிரம் ஒப்பந்த – தற்காலிகத் தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும். 2011 டிசம்பர் 31-ம் தேதியுடன் முந்தைய ஒப்பந்தம் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த 43 மாதங்களாக புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து நிர்வாகம் அடாவடி செய்து வந்தது. ஆண்டுக்கு ரூ 1500 கோடி இலாபமீட்டியுள்ள போதிலும்,தொழிலாளர்கள் கோரும் 24 சதவீத ஊதிய உயர்வை ஏற்க மறுக்கும் நிர்வாகம், 10 சதவீத அளவுக்கே தரமுடியும் என்று பிடிவாதமாக நின்றது. ஊதிய உயர்வுக்காக 30 முறை பேச்சுவார்த்தைகள் நடந்துள்ள போதிலும், நிர்வாகம் சற்றும் இறங்கிவராத நிலையில்தான் புதிய ஊதிய ஒப்பந்தம், தொழிலாளர்கள் பெற்றுவந்த அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன.

இவ்வேலை நிறுத்தத்துக்குத் தடை விதிக்கக் கோரி என்.எல்.சி.யின் மண்டலத் தலைமை மேலாளர்  தாக்கல் செய்த மனுவை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தடை விதித்தது. இத்தடையை  மீறித்தான் கடந்த ஜூலை 20-ம் தேதி முதலாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை. மாறாக, வேலை நிறுத்தத் தடையுத்தரவை மீறியதாகத் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளதுடன், அத்தலைவர்களை ஏன் வேலை நீக்கம் செய்யக் கூடாது என்று காரண அறிக்கையும் கொடுத்து அச்சுறுத்தியது. தொ.மு.ச. தொழிற்சங்கத் தலைவர் திருமாவளவனைப் பணி நீக்கம் செய்திருப்பதோடு, மற்ற தொழிற்சங்க நிர்வாகிகளை , “ஏன் உங்களை வேலை நீக்கம் செய்யக் கூடாது” என்று விளக்க நோட்டீசு கொடுத்து அச்சுறுத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

நல்ல இலாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றாக இருந்தபோதிலும், ஊதிய உயர்வைக் கொடுக்க மறுத்து என்.எல்.சி. நிர்வாகம் திமிர்த்தனமாக நடந்து கொண்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக் காரணமென்ன? ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஒரு மாதத்துக்கும் மேலாக வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், நிர்வாக அலுவலக முற்றுகை, ரயில் மறியல், உண்ணாவிரதம் – எனப் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்திய போதிலும் இப்போராட்டம் தோல்வியடையக் காரணம்தான் என்ன?

நிர்வாகத்தின் திமிர்த்தனத்தையும், வேலைநிறுத்தத்துக்குத் தடைவிதித்த நீதித்துறையின் சர்வாதிகாரத்தையும் கண்டு தொழிலாளி வர்க்கம் அச்சப்படவோ, போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளதைக் கண்டு அவநம்பிக்கை கொள்ளவோ கூடாது. இது தோல்விதான் எனினும், போராட்டத்தில் தோல்வி ஏற்படுவது தவறல்ல. ஆனால், ஏன் தோல்வி ஏற்பட்டது என்று பரிசீலிக்காமல் இருப்பதுதான் தவறு.

இதற்கு முன்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து அற்பக் கூலிக்கு உழைத்துவரும் என்.எல்.சி.ஒப்பந்தத் தொழிலாளர்கள் 2008-லும், அதன் பின்னர் 2014-லும் போராடிய போதிலும் நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை. மைய அரசோ, உச்ச நீதிமன்றத்தின் ஆணைகளைத் தொடர்ந்து உதாசீனப்படுத்துகிறது. என்.எல்.சி.யில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுக்கும் என்.எல்.சி. நிறுவனத்தின் மீதும், அதன் இயக்குனர்கள் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க நீதித்துறை மறுக்கிறது. அதேசமயம், தற்போது நிரந்தரத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம்  உடனே தடைவிதிக்கிறது.

என்.எல்.சி தொழிலாளர்கள்
அனல் மின் நிலையத்தை முற்றுகையிட ஊர்வலமாகச் செல்லும் என்.எல்.சி தொழிலாளர்கள்.

நீதித்துறையானது தொழிலாளர்களின் உரிமைகளையும்  மக்களின் உரிமைகளையும் பறிக்கும்  ஒடுக்குமுறை நிறுவனமாகவே மாறி நிற்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவே, உயர் நீதிமன்றம் தலையிட்டு வேலை நிறுத்தத்தைத் தடைசெய்வதை சட்டப்படி தவறு என்று கூறுகிறார். ஆனாலும், தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் நீதித்துறையின் சர்வாதிகாரத்துக்கு எதிராக என்.எல்.சி. தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து போராடவில்லை. தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பை முன்கூட்டியே அறிவித்து சட்டபூர்வ வழியில் போராடினாலும், நீதித்துறையும் அரசும் நிர்வாகமும் அதனைக் கடுகளவும் மதிப்பதில்லை. அரசும் நிர்வாகமும் நீதித்துறையும் தாங்கள் போட்ட சட்டத்தை தாங்களே மதிக்காத நிலையில், என்.எல்.சி. தொழிலாளர்கள் சட்டவரம்புகளை மீறிப் போராடவும்  முன்வரவில்லை.

நெய்வேலியில் ஊதிய உயர்வு கோரி நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போதிலும்,பெருமளவு பாதிப்போ தடையோ இல்லாமல் மின் உற்பத்தி வழக்கம் போலவே தொடர்ந்து கொண்டிருந்தது. ஒப்பந்த – தற்காலிகத் தொழிலாளர்களைக் கொண்டு மின் உற்பத்தி தடைபடாமல் அனல் மின்நிலையத்தை நிர்வாகம் இயக்கியது. நிரந்தரத் தொழிலாளர்கள் போராடினாலும், ஒப்பந்த – தற்காலிகத் தொழிலாளர்களைக் கொண்டு உற்பத்தியைத் தொடர முடியும் என்ற நம்பிக்கை நிர்வாகத்துக்கு இருக்கிறது. அதனால்தான் நிரந்தரத் தொழிலாளர்கள் ஓரணியில் திரண்டு போராடிய போதிலும், கடுகளவும் அசைந்துகொடுக்க மறுத்ததோடு, தொழிற்சங்க முன்னணியாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது.

போராடிய நிரந்தரத் தொழிலாளர்கள், தற்காலிக – ஒப்பந்தத் தொழிலாளர்களுடன் இணைந்து கூட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தவில்லை. அவ்வாறு ஒன்றிணைந்து போராடியிருந்தால், நெய்வேலியில் மின் உற்பத்தியை முற்றாக முடக்கி, நிர்வாகத்தை நிலைகுலைய வைத்து பணிய வைத்திருக்க முடியும் . ஆனால், இதற்கு நிரந்தரத் தொழிலாளர்களும் அவர்களது தொழிற்சங்கங்களும் தயாராக இல்லை. இதனால்தான் என்.எல்.சி. நிரந்தரத் தொழிலாளர்களின் போராட்டத்தைக் கண்டு நிர்வாகம் அஞ்சவில்லை. நிரந்தரத் தொழிலாளியை வேலைநீக்கம் செய்து  வீட்டுக்கு அனுப்பினால்கூட நிர்வாகத்தை ஒன்றும் செய்ய முடியாத அவமானகரமான நிலைமைதான் உள்ளது.

நிரந்தரத் தொழிலாளர்கள் கூடுதல் சம்பளம் பெறுவதற்கும், அதிகாரிகள் ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு சம்பளத்துடன் கொழுப்பதற்கும், என்.எல்.சி. யின் லாபம் பெருகியதற்கும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான் முக்கிய காரணமாக உள்ளனர். ஆனால், ஒப்பந்தத் தொழிலாளர் போராடினால் நிரந்தரத் தொழிலாளர்கள் ஆதரவாக நிற்பதில்லை. நிரந்தரத் தொழிலாளர்களுக்கென ஒரு சங்கமும், தற்காலிக – ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கென ஒரு சங்கமுமாக தொழிற்சங்கத் துரோகிகள் தொழிலாளர்களைப் பிரித்து வைத்துதான் இயக்குகின்றனர். நெய்வேலி மட்டுமல்ல; இதர அரசுத்துறை, தனியார் துறைகளிலும் இப்படித்தான் நடக்கிறது.

இதனால் நிரந்தரத் தொழிலாளர்கள் போராடினால், தற்காலிக – ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்து உற்பத்தியைத் தொடர்வதும், போராடும் நிரந்தரத் தொழிலாளர்களைப் பழிவாங்குவதும் தொடர்கிறது. நிரந்தரத் தொழிலாளியும் தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளியும் ஐக்கியப்பட்டு போராடாவிடில் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்துக்கே அழிவுதான். இதனைப்  படிப்பினையாகக் கொண்டு நிரந்தரத் தொழிலாளர்களும் தற்காலிக – ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராடினால்தான் உற்பத்தியை முடக்கி நிர்வாகத்தை பணிய வைக்க முடியும். தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டிவளர்த்து போராடுவதற்கான பாதை விரிந்து கிடக்கிறது. பயணத்தைத்தான் தொழிலாளி வர்க்கம் தொடங்க வேண்டியிருக்கிறது.

– மனோகரன்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2015
________________________________