privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅந்தக் கஷ்டம் எங்களுக்கும் தெரியும்

அந்தக் கஷ்டம் எங்களுக்கும் தெரியும்

-

ழை தீவிரமாக இருந்த நாட்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் சேவைகளை நிறுத்திக் கொண்ட தருணத்தில் மாநகர போக்குவரத்துதான் மக்களின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து சென்று பாதுகாத்ததில் மாநகர போக்குவரத்து தொழிலாளிகளின் பங்கு மகத்தானது.

“சின்ன சின்ன குழந்தைகள் சார். தாத்தா வீடு ,சித்தாப்பா வீடு முகவரிகளை கையில் கொடுத்து பாத்து இறக்கிவிட்டுருங்கனு எங்களை நம்பி குழந்தைகளை அனுப்பிவைச்சாங்க சார். எப்படி சார் வேலை செய்யாம இருக்க முடியும்.“

– மழையில் தங்கள் உடைமைகளை இழந்திருந்தாலும் தூக்கமில்லாமல் வேலை செய்து வரும் போக்குவரத்து தொழிலாளிகள் அனைவரும் முதலில் சொல்வது இதைத்தான்.

MTC (2)சென்னை கே.கே நகர் (கலைஞர் கருணாநிதி நகர்) மாநகர பேருந்து நிலையம் மற்றும் பணிமனையில் மழை தீவிரமான நாட்களில் பணிக்கு வந்த நூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இடுப்பளவு தண்ணீரில் சிக்கி கொண்டனர். இரண்டு நாட்கள் உணவு, தண்ணீரில்லாமல் இருந்தால் டிப்போவில் கழித்திருக்கின்றனர். தண்ணீரின் அளவு குறைந்து முட்டி அளவுக்கு வந்த பிறகு பணியை உடன் துவக்கி விட்டனர். அவர்கள் யாரும் ஐந்து நாட்களாக வீட்டிற்கு போகவில்லை.

ஆரம்ப நாளில் பணிமனையிலிருக்கும் 200 பேருந்துகளில் 70-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கினர். தொடர்ச்சியாக கண்விழித்து வேலை செய்து வருகிறார்கள். பணிமனையில்  தங்குவதற்கு இருந்த பகுதிகளும் மழையால்  சிதிலமடைந்து விட்டதால் இரவு தூங்குவதற்கு சிரமப்படுகிறார்கள்.

இனி அவர்களே பேசுகிறார்கள்:

“மழையால் சீரழிந்த வண்டிகளை பணிமனை தொழிலாளிகள், உடனடியாக சரி செய்தனர். சாலைகள் மிக மோசமாக இருக்கும் நிலையில், வைபர் இல்லாத நிலையில், சைட் மிரர் இல்லாத நிலையில் சில பேருந்துகளில் டிரைவர்கள் சீட்டின் மேற்கூரைகள் ஒழுகிய நிலையிலும் முடங்கி விடாமல் வேலை செய்தனர். எங்களுக்கு வழக்கமாகவே முகூர்த்த நாளும் நல்ல நாளும் லீவு கிடையாது. அதுபோல வெள்ள நாளும் வேலை நாள்.

MTC (1)அதிகாரிகள் பண்ணும் கொடுமை கொஞ்ச நஞ்சமில்லை. லீவு எடுத்தால் ஐந்து நாட்கள் டியூட்டி போடாமல் தண்டனையளிப்பது, ரூட்டை மாற்றி இடைஞ்சல் செய்வது இப்படி எல்லாம் பல விதங்களில் அதிகாரத்தை காட்டுவார்கள். அரசும், நிர்வாகமும் எங்களுக்கு செய்து வரும் இடைஞ்சல்களுக்கு ரோடு சரியில்லை, வண்டி சரியில்லை என்று கூறி இன்று வேலைகளை மறுத்திருக்க முடியும். இக்கட்டான சமயத்தில் நாங்கள் அவர்களைப் போல நடந்துகொள்ளவில்லை. மக்களை கைவிட்டு செல்ல விரும்பவில்லை. எங்கள் வீடும் நீரில் மூழ்கியிருந்தது. அந்த கஷடம் எங்களுக்கு தெரியும்.

நாங்கள் அடிப்படை தேவைகளுக்காக ஸ்டிரைக் செய்தால் தனியார் வண்டி – ஓட்டுநர்களை இறக்கி போராட்டத்தை முடக்குவார்கள். இப்போது அவர்களை இறக்கவேண்டியது தானே. இந்த வெள்ளத்தில் ஒரு வண்டியை ஓட்டுவானா அவன்?

நல்ல நாளிலேயே ரோடு எங்களுக்கு கிடையாது. கப்பல் போல காரு இருக்கும். காரு காரர்களிடம் அசிங்கமாக திட்டு வாங்கியிருக்கிறோம். ஆளும் கட்சி ஆளுங்க, கவுன்சிலர் வண்டிகள் அவர்களே  உரசினாலும் எங்களை திட்டுவார்கள். வெள்ளத்தில் அவர்கள் அனைவரும் ஒதுங்கி விட்டார்கள். நாங்கள் தான் வேலை செய்தோம்.அவங்க எல்லாம் இப்போ எங்க போனாங்க?

அண்ணா தொழிற்சங்க தலைவர்களும், போக்குவரத்து கழக பி.எம் களும் சேர்ந்து கொண்டு மற்ற தொழிற்சங்கத்தினரை பழிவாங்குவது முதல் கொள்ளையடிப்பது வரை கூட்டாக செயல்பட்டார்கள். இப்போது வெள்ளத்தில் அவர்களை மட்டும் வைத்து இயக்க முடியுமா? இப்போது மட்டும் எங்கள வேலையை வாங்கிக் கொள்கிறார்கள். இதை மனதில் வைத்து நாங்கள் பழிவாங்கவில்லை. மக்களுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

நாங்கள் இவ்வளவு கஷ்டம் பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் அம்மா இலவச பயணம் என்று கூறிவிட்டு பேரு வாங்க விரும்புகிறார்கள். நாங்கள் வேலை செய்வதால் தானே பொதுபோக்குவரத்து இயங்க முடிகிறது. நல்ல நாட்களில் எங்கள் வேலைகள் கண்டுக்கொள்ளப்படுவதில்லை. இது போன்ற நாட்களிலும் கண்டுகொள்ளப்படுவதில்லை.

280 நாள் டியூட்டி கொடுத்தால் அவர்களை பணிநிரந்திரம் செய்ய வேண்டும் என்பதற்காகவே 3 ஆண்டுகளாக இருந்தாலும்  டியூட்டி தருவதை குறைத்தார்கள் அதிகாரிகள். மழையில் டியூட்டி செய்வதால் எங்களுக்கு கிரீடம் தருவதில்லை.

MTC (2)கோடம்பாக்கம், கே.கே நகர் போன்ற ஒவ்வொரு  பணிமனையிலும் குறைந்தது 200 வண்டிகள் இருந்தால் இவற்றில் 50 தான் ஒழுங்காக இயங்குகிறது. மற்ற வண்டிகள் தொழிலாளிகளின் வேலை திறத்தினால் மட்டுமே இயங்குகிறது.

எல்லாத்துக்கும் மேல எப்பவமுமே நாங்க மக்களுக்காக வண்டி ஓட்டுறதுனால இப்ப மட்டும் ஸ்பெசலா ஓட்டுற மாரி இல்ல. என்ன மழையில மூழ்குன எங்க வீடுங்களை சரி செய்யக் கூட நேரம் இல்லை, வீட்டுக்கு போக முடியவில்லை.

MTC (3)
மாநகர பேருந்து தொழிலாளிகள்

– வினவு செய்தியாளர்கள்