privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகதைதொண்டைக்குள்ள சோறு இறங்கல !

தொண்டைக்குள்ள சோறு இறங்கல !

-

chennai floods people experience (6)ருக்கப்பட்டவர் இல்லாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் புரட்டி போட்டது சென்னையில் பெய்த மழை. உடமைகளை இழந்தவர்கள் உறவை இழந்தவர்கள் என இழப்பை எதிர் கொள்ள முடியாத சோகம் மக்களிடம். நம் கற்பனைக்கு எட்டாதமாதிரி நூற்றுக்கணக்கான வகைகளில் அந்தக் கதைகள் மக்களிடம் உள்ளன. அப்படி நான் சந்தித்தவர்ளில் சதாசிவமும் பூபதியும் இரு வேறு திசைகளில் படம் பிடித்துக் காட்டினார்கள்.

சென்னைக்கு மிக அருகாமையில், ரயில் நிலையத்துக்கு பக்கத்தில், பேருந்து நிலையத்துக்கு எதிர் புறத்தில் அகலமான உள் சாலைகளுடன் நல்ல குடிதண்ணீருடன் காற்றோட்டமான வீட்டு மனைகள் என்று கூவி கூவி நடுத்தர மக்களின் சம்பாத்தியத்தையும் எதிர் காலத்தையும் கூறு போட்ட ரியல் எஸ்டேட் கும்பல்கள் இங்கே ஏராளம். அந்த கும்பலிடம் மனை வாங்கி சம்பாத்தியத்தில் பாதியை தொலைத்துவிட்டு மீதமுள்ளதை மழை வெள்ளத்தில் இழந்து விட்டவர் சதாசிவம்.

சதாசிவம் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னை மாநகர குடிநீர் வாரியத்தில் பணியாற்றி ஓரிரு வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர். வெள்ளம் சூழ்ந்த மூன்றாம் நாள் தப்பித்தவர் குடும்பத்துடன் தேனி    சென்று விட்டார்.

“நாங்க குன்றத்தூருக்கு பக்கத்துல இருக்குற அனகாபுத்தூர்ல இருக்கோம். இங்க வீடு கட்டி குடிவந்து நாலு வருசமாச்சு. நாங்க இருக்குற ஏரியாவுல வீடுக நெருக்கமா இருக்காது. காலி மனையும் வீடுமாதான் கலந்து இருக்கும். உதவி கேக்கவோ, செய்யவோ ஒரு ஃப்ளாட்டு, ரெண்டு ஃப்ளாட்டு தள்ளித்தான் போகணும்.

நவம்பர் மாச கடைசியில கணுகாலுக்கு மேல தண்ணி தெருவுல ஓடை போல ஓடிச்சு. மழை அதிகமா பேஞ்ச அன்னைக்கி ஆறு போல ஓடுச்சு. கரண்டும் காலையிலேயே போச்சு. ராத்திரி 9 மணிக்கெல்லாம் படுத்துட்டோம். திடீர்னு ராவுல 10 மணிக்கு வீட்டுக்குள்ள தண்ணி வர ஆரம்பிச்சுருச்சு என்ன செய்றதுன்னே தெரியல. கண்ணிமைக்கிற நேரத்துல தண்ணி விறுவிறுன்னு ஏறுது. சன்னல் ஒசரத்த தாண்டியும் வந்துறுச்சு. எத எடுக்குறது எத விடுறதுன்னு தெரியல. தண்ணி வந்த வரத்துல உயிர் தப்பிச்சா போதுமுன்னு மொட்ட மாடிக்கு ஓடுனோம்.

chennai floods people experience (4)என்ன செய்யறது, எங்க போறதுன்னு நிலைதடுமாறி நின்னப்ப எங்க ஏரியா இளவட்ட பசங்க எங்கள கையைப் பிடிச்சு காப்பாத்தி அடுத்த வீட்டு மாடி முதல் தளத்துல விட்டாங்க. நாங்களாவது பரவாயில்ல முழிச்சுருந்தோம். பக்கத்து வீட்ல தண்ணி வீட்டுக்குள்ள வந்தது தெரியாம கைக்குழந்தையோட புருஷனும் பொஞ்சாதியும் தூங்கிட்டு இருந்துருக்காங்க. எங்களக் காப்பாத்துன பசங்கதான் அவங்களையும் காப்பாத்துனாங்க.

கதவு தட்டுற சத்தம் கேட்டு எழுந்து பாத்த அந்தப் பையன் கட்டில் முட்ற அளவு தண்ணிய பாத்ததும் பொறி கலங்கி போயிட்டாரு. என்ன ஏதுன்னு யோசிக்கறதுக்கு நேரமில்லாம அந்த இளைஞர்கள் பிள்ளைய தூக்கிட்டு அவரையும் அவர் மனைவியையும் கூட்டிட்டு நாங்க இருக்குற வீடு வந்து சேர்றதுக்குள்ள தண்ணி வரத்து ரொம்ப வேகமாயிருச்சு.

மூணு வருசமாச்சு அந்த ஏரியாவுக்கு குடி போயி. அக்கம் பக்கமா இருந்தாலும் நாங்க யாரும் அப்புடி ஒன்னும் அன்னியோன்யமா பழகினது கிடையாது. வெரும் ஹலோ ஹாய்யோட சரி. பழகாத ஒரு வீட்டுல உண்டு உறங்கி இயல்பா இருந்துருக்கோமுன்னா உயிர் பயந்தான் வேற என்னன்னு சொல்லெ!

நாங்க இருந்த வீட்டுக்கு எதிர் புறத்துல ஒரு அம்மாவும் மகனும் இருந்தாங்க அவங்களும் தூங்கிட்டு இருக்கும் போது தண்ணி வீட்டுக்குள்ள வந்ததுதான் முழிச்சவங்க எப்புடியோ தப்பிச்சு வீட்டு மொட்ட மாடிக்கு வந்துட்டாங்க. மூணு நாள் வரைக்கும் காப்பாத்த யாரும் இல்லாம சாப்பாடு இல்லாம தண்ணி டேங்குக்கு கீழ ஒண்டிகிட்டு இருந்தத பாக்க சகிக்கல. ஆளுங்களையும் பாத்து அவங்க கஷ்டப்படுறதையும் பாத்துகிட்டு நாம ஒன்னுமே செய்ய முடியாத நிலைமை மாதிரி ஒரு கஷ்டம் இந்த உலகத்துல இல்லேனு தோணுது.

மூணு நாளும் மழை தண்ணிய புடிச்சுதான் குடிச்சோம். வீட்டுக்குள்ள கெடந்த வெள்ளத்துல வந்த தண்ணியத்தான் டாய்லெட்டுக்கு மொண்டு விட்டோம். அந்த வீட்டுல இருந்த வச்சு மூணு குடும்பமும் மூணு நாளு சமைச்சு சாப்பிட்டோம்.

சுடச் சுட நாங்க சாப்புடும் போது எதுத்தாப்போல அந்த அம்மாவும் பையனும் பட்டினியா கெடந்தத நெனச்சா தொண்டையில சொறு இறங்குவனாங்குது. கடவுளு இருக்காறான்னு சந்தேகம் தான் வந்துச்சு. அவங்களுக்கு எந்த உதவியும் எங்களால செய்ய முடியல. உதவிக்கு யாராவது வர மாட்டாங்களான்னு கண்ணுக்கு எட்டுன தூரம் பாத்துகிட்டே இருந்தோம். கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கம் தண்ணிதான தெரிஞ்சுது, யாருமே வரல.

chennai floods people experience (5)எத்தனையோ வீடுகள்ல முதல் மாடியிலயும் தண்ணி வந்துருச்சு. எங்க வீட்டுல கட்டுன துணிய தவிர வீட்டுல இருந்த ஒரு பொருளையும் எடுக்கல. என்னோட 58 வருச உழைப்பு அந்த வீடும் அதுல இருந்த பொருளும் தான். ரிட்டயர்டு ஆன பணத்த வச்சு காரு வாங்குனேன். இருந்த பழைய பொருட்கள மாத்தி புதுசு வாங்கினேன். எல்லாம் போச்சு. இதுலேருந்து நான் மீண்டு வரவே முடியாது. ஏங்காலத்துக்குள்ள திரும்பவும் என் குடும்பத்தை இப்படி வாழ வைக்க முடியுமான்னு கேட்டா நிச்சயம் முடியாது” என்று பெருமூச்சு விட்டார் சதாசிவம்.

பூபதி தஞ்சை மாவட்டத்தின் விவசாயக் குடும்பத்திலிருந்து சென்னை வந்தவர். இவருக்கு மழை வெள்ளம் சேதம் எல்லாத்துலயும் கொஞ்ச அனுபவம் உண்டுன்னு சொல்லலாம். குடும்பத்துல முதல் பட்டதாரியான பூபதி சென்னைக்கு வந்து 17 வருடங்கள் ஆகிறது. அடையாறு நதிக்கரையில் ஆற்றை ஒட்டிய பகுதி ஒன்றின் முதல் தெருவிலேயே குடியிருக்கிறார்.

“அறநூறு சதுரடி அளவு கொண்ட இடத்துல கீழ நாலு மேல நாலுன்ன மொத்தம் எட்டு குடும்பங்க இருந்தோம். பழைய காலத்து வீடு அது. இருக்குற ரெண்டு சுவரலயும் நாலு விரிசல் விட்டுருக்கும். வெள்ளம் வந்து மாடியும் சேந்து மூழ்கிருச்சு. என்னையத் தவிர அந்த வீட்டுல உள்ள அத்தன குடும்பத்துக்கும் போக இடம் கெடையாது. முதல்ல பெஞ்ச மழையில தெரு பூறா தண்ணி ஓடிச்சு. அப்பவே மனைவி குழந்தைகள ஊருக்கு அனுப்பிட்டேன். மத்த சிலபேரு தெரிஞ்சவங்க வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. (அங்கேயும் தண்ணிதான்). லீவு போட்டு ஊருக்கு போனா பூவாவுக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான். அதுக்காக இப்பையோ அப்பையோன்னு இருக்குற அந்த வீட்ட நம்பி நாங்க அத்தன பேரும் மொட்ட மாடியில தஞ்சம் அடைஞ்சோம்.

அன்னைக்கு தண்ணி வந்த வேகம் யாரையும் நிதானமா எதையும் எடுக்க விடல. பொம்பளைங்களும் பிள்ளைகளும் பயந்து கத்துனதும் கொஞ்ச நஞ்ச தைரியத்தையும் ஆம்பளைங்க இழக்க ஆரம்பிச்சோம். இருந்தாலும் சுதாரிச்சுகிட்டு தைரியமா சிலிண்டர், அடுப்பு, அரிசி ரெண்டு மூணு பாத்திரம் இதுகள எடுத்துகிட்டு மொட்ட மாடிக்கு போயிட்டோம். (இரண்டாம் தளத்தின் மேல்மாடி).

மெட்ட மாடியில அஸ்பஸ்டாஸ் போட்ட பத்துக்கு பத்து செட்டு ஒன்னுக்குள்ள ஏழெட்டு குடும்பமும் மூணு நாளு அடைஞ்சு கெடந்தோம். யாரு செஞ்ச புண்ணியமோ கஞ்சிக்கி மட்டும் வழி பண்ணிட்டோம். ஆனா அதுல போட்டு குடிக்க உப்பு எடுக்கல. உப்புல்லாத கஞ்சிய பிள்ளைங்க குடிக்கவே மாட்டேங்குது. பிள்ளைங்க என்ன எங்களாலயே குடிக்க முடியல. இருந்தாலும் கசாயம் போல வெடுக்கு வெடுக்குன்னு கண்ண மூடிட்டு குடிச்சுட்டோம்.

chennai floods people experience (3)இரண்டாம் நாள் காலையில ஹெலிகாப்டர்ல கைக்கு எட்டுர தூரத்துல ஆத்துத் தண்ணிய தொட்டுகிட்டு சாப்பாடு போடுவானுங்க. ஆனா நம்ம பன்னுண புண்ணியமோ, நம்ப பெத்தவங்க செஞ்ச புண்ணியமோ பக்கத்து மாடிக்கு கரெக்டா விழும் ஒரு பொட்டலங் கூட எங்க எடத்துல விழாது. அடுத்த வீட்டு மாடியில இருக்குற கூட்டத்த பாத்தா எங்களுக்கு ஒன்னு தாங்கன்னு கேக்கவும் முடியாது. அந்த மூணு நாளும் நல்லா ‘அனுபவிச்சு’ வாழந்தோமுன்னு சொல்லலாம்.

சினிமா கிராபிக்ஸ் காட்சியில பாத்துருப்போம் சோன்னு மழ (மழை), பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், மிதக்கும் வீடுக, மேல ஹெலிகாப்டர், வீடுகளுக்கு மத்தியில படகு……. வேதனை ஒரு பக்கம் இருந்தாலும் இப்ப நெனச்சாலும் ஆச்சரியம் தாங்கல எங்களுக்கு.

முதல் நாள் வரைக்கும் எல்லார் முகத்துலயும் சோகம். அடுத்து வந்த மூணு நாளும் சிரிப்பும் கும்மாளமுமா மொத்த குடும்பங்களும் பிக்னிக் போனது மாறி பட்டினியிலயும் அத்தனை சிரிப்பு. எல்லாம் போச்சு எப்படி வாழப்போறோங்குற கவலை இல்லாம என்ன சிரிப்பு வேண்டி கெடக்குன்னு பொம்பளைங்க அப்பப்ப திட்டுவாங்க. நாம இருந்தாதான் பொருளுக தேவை முதல் நம்ம பொழைக்கிறமான்னு பாருங்கன்னு சிரிப்பாரு டிரைவர் அண்ணன்.

chennai floods people experience (7)முதல்ல பெஞ்ச கனமழைக்கே வீட்டுக்குள்ள தண்ணி வந்துருச்சி. கீழ் வீட்டுக்காரங்க மேல் வீட்டுல சில பொருட்கள பாதுகாப்பா வச்சுட்டு எச்சரிக்கையாத்தான் இருந்தோம். தொடர்ந்து பெஞ்ச மழையும் அதனால வந்த பெருவெள்ளமும் ஒட்டு மொத்த சென்னையையே அழிச்சுட்டு போயிருச்சோன்னு தோணுது.

யாரோ ஒரு நீதிபதி ஒருத்தர் வெள்ளத்துல பாதிக்கப்பட்டு தனியா மாட்டிக்கிட்டாராம். மூணு நாள் பட்டினியில முனியாண்டி விலாஸ்ல போயி பசிக்கிதுன்னு சாப்பாடு கேட்டாராம். நாங்களலே ஒரு வாரமாச்சு அடுப்பு மூட்டி. கஞ்சி இருக்குது, ரெண்டு கிளாஸ் குடிச்சுட்டு போங்கன்னு கொடுத்தாங்களாம். அவருக்கே அந்த நெலமன்னா நாம எம்மாத்திரம். இதுக்காக கவலைபட்டு என்ன செய்றது, உயிருருந்தா பொழச்சுக்குவோம் என்ன நான் சொல்றது.” என்று சோகம் கலந்த சிரிப்புடன் முடித்தார் பூபதி.

– சரசம்மா