privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஏரிகளை ஆக்கிரமித்தது மக்களா முதலாளிகளா ?

ஏரிகளை ஆக்கிரமித்தது மக்களா முதலாளிகளா ?

-

சென்னை மழை வெள்ளம் குறித்த தொடர் கட்டுரையின் இறுதிப் பகுதி

முந்தைய மூன்று பாகங்கள்:

ஏரிகளை ஆக்கிரமித்து உருவான சென்னை
ஏரிகளை ஆக்கிரமித்து உருவான சென்னை

க்கிரமிப்புகளை அகற்றி சென்னையை இன்னுமொரு வெள்ளத்திலிருந்து காப்பது பற்றியுமான விவாதங்கள் மெல்லத் துவங்கியுள்ளன. சென்னையின் பேரழிவிற்கு தோல்வியுற்ற அரசு நிர்வாக எந்திரத்திலிருந்து, செயல்படாத அரசாங்கத் தலைமை, மிக மோசமாக திட்டமிடப்பட்ட நகர விரிவாக்கம் போன்ற பிற காரணங்கள் இருக்க, ஆக்கிரமிப்புகள் பற்றிய உரையாடல்களுக்கு முதலாளித்துவ ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பது ஏன்?

பொத்தாம் பொதுவான ”ஆக்கிரமிப்புகள்” என்கிற வார்த்தைக்குப் பின்னே ஊடகங்கள் நிறுத்துவது கூவம், அடையாறு நதியோரங்களில் குடிசைகள் போட்டு வாழும் ஏழைகளைத் தான். 1996-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது ஆக்கிரமிப்புகள் தான் காரணமென்று பழியை மக்களின் மீது போட்டார்கள். விளைவாக அங்கே வாழ்ந்த குடும்பங்களை வேறோடு பிடுங்கி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நட்டார்கள்.

இவ்வாறாக ஆக்கிரமிப்புகள் என்றதும் குடிசைகள் மட்டும் என்பதாக ஊடகங்கள் கட்டியமைக்கின்றன. முன்பொரு காலத்தில் வேளச்சேரி மிகப் பெரிய ஏரியாக இருந்தது, மியாட் மருத்துவமனை அடையாற்றின் கரையாக இருந்தது, முகப்பேரு, ரெட்டேரி பகுதிகளில் இன்று இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் லேக் வ்யூ அப்பார்ட்மெண்டுகளும் முன்பு ஏரிகளாக இருந்தவை தாம். சரிந்து விழுந்த மவுலிவாக்கம் கட்டிடம் ஏரியின் மீது எழுப்பபட்டது தான்.

ஆக, ”ஆக்கிரமிப்பாளர்கள்” சேரிகளில் வாழும் குடிசைவாசிகள் மாத்திரமல்ல – ஐந்து அல்லது ஆறு இலக்கங்களில் சம்பாதிக்கும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரும் தான். இது தவிற தொன்னூறுகளுக்குப் பின் துரிதப்படுத்தப்ட்ட புதிய பொருளாதார கொள்கைகயின் விளைவாக ஏற்பட்டிருக்கும் ”வளர்ச்சியின்” ஆக்கிரமிப்புகளே பிரதானமான காரணமாக உள்ளன. உதாரணமாக, சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப்பட்ட இரண்டாம் ஓடுதளம் மிகச் சரியாக அடையாற்றின் மீதே அமைந்துள்ளது.

பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் சிரீபெரும்புதூர் சாலையெங்கும் நிலங்களில் அமைந்துள்ள பன்னாட்டுக் கம்பெனிகளும் நீர்பிடிப்புப் பகுதிகள் அல்லது வடிகால் பகுதிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவையே. நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை, அங்கிருந்து இயல்பாக வழிந்து சிறிய குளங்களுக்கும், பின் அதிலிருந்து கால்வாய்கள் மூலம் பெரிய ஏரிகளுக்கும் வந்தடைய வேண்டும். பின் ஏரிகளில் இருந்து சிறிய ஆறுகளாக கடலை நோக்கிச் சென்றாக வேண்டும்.

சென்னையின் புற நகர்ப் பகுதிகளில் பல்லாயிரம் ஹெக்டேர் நிலத்தை வளைத்து ஏற்படுத்தப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் அதனுள் பிரம்மாண்டமான கட்டிடங்களை ஏற்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் மிகச் சரியாக நீர்வழிகளின் மீதே அமைந்துள்ளன. இவ்வாறு பெரிய கட்டிடங்களை அமைக்கும் போது குறிப்பிட்ட வளாகத்திற்குள் சேரும் நீர் வடிந்து செல்வதற்கான கால்வாய் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

1990-ம் ஆண்டில் ஒப்பீட்டளவில் பசுமையுடன் காணப்படும் சென்னை
1990-ம் ஆண்டில் ஒப்பீட்டளவில் பசுமையுடன் காணப்படும் சென்னை
2010-ல் பசுமையை அழித்து விட்டு நகரம் 'வளர்கிறது'.
2010-ல் பசுமையை அழித்து விட்டு நகரம் ‘வளர்கிறது’.

கட்டிடங்கள் எழுப்ப ஒப்புதல் வாங்கும் போது, அதோடு சேர்த்து நீர் மேலாண்மைத் திட்ட நகலையும் இணைத்து தான் அனுமதி பெற்றிருப்பார்கள். எனில், அவை ஏன் ஏற்படுத்தப்படவில்லை? ஏன் இந்த தவறுகளை உரிய துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் விசாரித்து தண்டிக்கவில்லை? ஏனெனில், அவ்வாறான நடவடிக்கைகள் தொழில் முனைவிற்கு எதிரானதாகவும், வளர்ச்சிக்கு எதிரானதாகவும் அரசால் கருதப்படுகிறது. திறந்த மடம் போல் எந்த நாட்டைச் சேர்ந்த முதலாளியும் உள்ளே புகுந்து தொழிலாளர் நலன், தொழிலாளர் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் என்று சகல விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டு மலிவான கூலிக்கு உழைப்பைச் சுரண்டுவதையும் வளங்களைக் கொள்ளையடிப்பதையுமே ”வளர்ச்சி” என்கின்றனர்.

போலவே, குடிசைகளை பிடுங்கி எரிவதையும், நடைபாதையில் தக்காளி விற்கும் கிழவியை விரட்டியடிப்பதை மட்டும் ஆக்கிரமிப்பை அகற்றுவது என்பதாகப் புரிந்து கொள்பவர்கள், வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் குளங்களை ஆக்கிரமித்து அதன் மேல் அடுக்குமாடிக் குடியிருப்புகளை எழுப்பி நடுத்தர வர்க்கத்தினரின் ஆசையைத் தூண்டி ஏமாற்றும் ரியல் எஸ்டேட் முதலைகளைப் பற்றி ஏன் சிந்திப்பதில்லை?

விதிமுறைகளை மீறிக் கட்டப்படும் கட்டிடங்களின் சொந்தக்காரர்கள் ஒரு சிறிய தொகையை அபராதமாக செலுத்தி தங்களது சட்டவிரோதச் செயலை சட்டப்பூர்வமாக்கிக் கொள்ளலாம் என்கிற விதியை 28 நாட்களே ஆண்ட வி.என்.ஜானகியின் அரசு 1988-ல் கொண்டு வந்தது. 1991-1996 காலகட்டத்தில் தமிழகத்தை மொட்டையடித்த புரட்சித்தலைவின் ஆட்சியின் கீழ் ஏரி குளங்கள் ஆக்கிரமித்து ப்ளாட்டுகள் போடும் ரியல் எஸ்டேட் கொள்ளை ஒரு தொழிலாக ஒழுங்கமைக்கப்பட்டது.

ஐந்தாண்டுகளில் நீர் நிலைகளும், இயற்கையான வடிகால்களும் நாசமாக்கப்பட்ட நிலையில் தான் 1996 வெள்ளம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 1996 – 2001 தி.மு.க ஆட்சிக்காலத்தில் விதிமுறைகளை மீறி    1998-க்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்களை சட்டப்பூர்வமாக்கினார்கள் (Town and country planning Act) தொடர்ந்து வந்த அ.தி.மு.க அரசுக்கு (2001-2006) கொள்ளையை சட்டப்பூர்வமாக்கும் தி.மு.க பாணி முக்காடு கூட தேவைப்படவில்லை. சென்னையின் புவியியல் சமநிலையை எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் கொள்ளையடிக்க கதவைத் திறந்து வைத்தார்கள்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ள ஐ.டி. நிறுவனங்கள்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ள ஐ.டி. நிறுவனங்கள்.

அடுத்து வந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் நீதிபதி மோகன் தலைமையிலான கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அதாவது விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ள (அதாவது 98-க்குப் பிறகு) கட்டிடங்களைக் குறித்து ஆய்வு செய்த அந்தக் கமிட்டி, மீண்டும் Town and country planning act சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து 2007-க்கு முன் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்களை சட்டப்பூர்வமாக்க பரிந்துரைத்தது. இவ்வாறாக, சென்னையின் 50 சதவீதத்திற்கும் மேலான கட்டிடங்கள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளன.

இவை தவிர அரசே புகுத்தும் “வளர்ச்சி” திட்டங்களின் விளைவாக ஏற்படும் ஆக்கிரமிப்புகள் தனி. சென்னை விமானநிலையம் அடையாற்றை மறித்து நிற்கிறது என்றால், ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையம் என்று பீற்றிக் கொள்ளப் படும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஏரியின் மீது நிற்கிறது.

இப்போது சொல்லுங்கள் எந்த ஆக்கிரமிப்பை முதலில் அகற்றலாம்? யார் குற்றவாளிகள்?

உலகமயமாக்கல் பொருளாதாரம் அருளும் ”வளர்ச்சியென்பது” உண்மையில் வேரில்லாத மரம் போன்றது. உலகநாடுகளுக்குத் தேவையான பொருட்களை மூன்றாம் உலக நாடுகளின் சல்லிசான மனிதவளம், இயற்கை வளம் மற்றும் உழைப்புச் சுரண்டலின் மூலம் குறைந்த மூலதனத்தில் உற்பத்தி செய்து கொள்ளை லாபத்திற்கு ஏற்றுமதி செய்வதே அதன் நோக்கம். இதன் விளைவாக தனது மொத்த பொருளாதார நடவடிக்கைகளையும் நகரங்களை நோக்கியே அது குவிக்கிறது.

நோக்கியா, பாக்ஸ்கான், ஹுண்டாய், ஹோண்டா, ஃபோர்டு, மோட்டரோலா, ஐ.பி.எம் போன்ற நிறுவனங்கள் தமது கடையை இங்கே திறப்பது நமக்கு அவர்கள் கொடுக்கும் வரம் அல்ல – சாபம். இவர்கள் இயற்கையின் மீதும், புவியியல் சமநிலையின் மீது தொடுக்கும் தாக்குதலின் பாரதூரமான விளைவுகளைத் தான் பெருவெள்ளத்தின் வடிவில் நாம் கண்டோம்.

இவ்வகையில் தொன்னூறுகளுக்குப் பின் செயற்கையான முறையில் ஊதிப் பெருக்க வைக்கப்பட்ட சென்னை நகருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் படையெடுத்தனர். இதில் ஏற்கனவே படிக்க வசதி இருந்ததால் பொறியியல் போன்ற தொழில்நுட்ப படிப்புகளின் தேர்ச்சி பெற்றோர் ஐந்திலக்க சம்பளத்தோடு ஏரிகளின் மேல் அமைந்த ஏரி பார்த்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இடம் பிடித்துக் கொண்டனர். இவர்களுக்கு இரவு நேரக் காவலர்களாகவும், ஆட்டோ ஓட்டுனர்களாகவும், குப்பை வாருபவர்களாகவும் சேவை செய்ய கிராமப்புரங்களில் இருந்து – விவசாயம் பொய்த்துப் போன நிலையில் – சென்னைக்கு வந்தவர்களை அடையாறு கூவம் போன்ற நதிகளின் கரைகளே வரவேற்றன. பிந்தையவர்களைத் தூக்கி வீசலாம் என்று பேசுபவர்கள் முந்தையவர்களைப் பற்றி வாய் திறப்பதில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை நீர் நிலைகளை ஆக்கிரமித்தவர்களின் முக்கியமானவர்கள் சுயநிதிக் கல்விக் கொள்ளையர்கள். இந்த கொள்ளை எம்.ஜி.ஆர் ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது. சாரய கொள்ளையர்கள் கல்வி தந்தைகளானார்கள். கூடவே ஏரிகள், கால்வாய்கள் என அரசு புறம்போக்கு நிலங்களை வளைத்துக்கொண்டார்கள். இன்று அது தமிழகம் முழுக்க விரிந்து பரவியிருக்கிறது.

அடையாறு நதியின் மேல் கட்டப்பட்டுள்ள சென்னை விமான தளத்தில் விமானம் ஓடுமா, மிதக்குமா?
அடையாறு நதியின் மேல் கட்டப்பட்டுள்ள சென்னை விமான தளத்தில் விமானம் ஓடுமா, மிதக்குமா?

தற்போதைய் வெள்ளத்தையொட்டி பச்சைமுத்துவின் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மனிதாபிமானம் கொப்பளித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் தான் பொத்’ஏரி’ மீது அமைந்திருக்கும் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்திலிருந்து கயிறு கட்டி மாணவர்கள் மீட்கப்படுகிறார்கள். தென்தமிழக கடற்கரையோரத்தை நாசப்படுத்திய தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனின் நியூஸ் 7 தொலைக்காட்சியோ இயற்கை பேரழிவிற்கு கண்ணீர் வடிப்பதாக கூறுகிறது. சென்னைக்கு மிக அருகில் என்று ஏரிகளை பிளாட் போட்ட ரியல் எஸ்டேட் முதலாளிகளும் கூட சாம்பார் சாதம், போர்வைகள் என தங்கள் மனிதாபிமானத்தை கடைவிரித்துவிட்டு குற்றத்தை மறைக்கிறார்கள்.

எஸ்.ஆர்.எம் மட்டுமல்ல சென்னையை சுற்றியுள்ள பல சுயநிதி பொறியியல் கல்லூரிகளும், பல்கலைகழகங்களும் , கார்ப்பரேட் மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள் அடையாற்றின் கரைகளையும், அதற்கான நீர்வழித்தடங்களையும் அழித்துவிட்டு அதன் மீது தான் கட்டப்பட்டுள்ளன. கூவத்தின் கரைகளை தின்று செறித்திருக்கும் ஏ.சி.சண்முகத்தின் எம்.ஜி.ஆர் பல்கலகழகம், அப்பல்லோ மருத்துவமனை, ஜேப்பியாரின் சத்யபாமா பல்கலை என இந்த பட்டியிலுக்கு முடிவில்லை.

வெள்ளம் உண்டாக்கிய பெருந்துயரும் மக்களின் கண்ணீர்க் கதைகளும் பரவலான மனிதாபிமானத்தை தோற்றுவித்துள்ளன. சென்னையின் மழை வெள்ளத்திற்கு பின்னே ஒளிந்திருக்கும் அரசியலை அறியாத வரை இந்த மனிதாபிமானத்தின் ஆயுள் சடுதியில் மறைந்து விடும்.

ஏரிகளை அழித்த சுயநிதிக் கல்விக் கொள்ளையர்கள்: பச்சமுத்து, ஜேப்பியார், ஐசரி வேலன், உடையார், ஏ.சி.சண்முகம்.
ஏரிகளை அழித்த சுயநிதிக் கல்விக் கொள்ளையர்கள்: பச்சமுத்து, ஜேப்பியார், ஐசரி வேலன், உடையார், ஏ.சி.சண்முகம்.

இந்த மழை வெள்ளம் உணர்த்தியிருக்கும் மிக முக்கியமான பாடத்தை நாம் மறந்து விடக்கூடாது. அரசும், அரசின் ஒவ்வொரு உறுப்புகளும் மிக மோசமாகத் தோற்றுச் சரிந்து போனதை இந்த மழை உணர்த்தியுள்ளது. அரசு எந்திரத்தின் ஒவ்வொரு அலகும் தனக்கேயான கடமைகளில் இருந்து வழுவியுள்ளதுடன் மக்களைக் கொல்லும் இரத்தக் காட்டேரிகளாக மாறியுள்ள எதார்த்தத்தை கண்டோம். ஆளும் வர்க்கம் ஆளத் தகுதியிழந்து விட்டதை இந்தப் பேரிடர்க் காலம் நமக்கு உணார்த்தினாலும் இந்த நிலை ஒரு மழையால் தோன்றியதன்று. இந்த மழை கோப்பை நிரம்பி வழியத் தேவையான கடைசி சொட்டு மட்டும் தான்.

மக்களைக் காப்பாற்ற வக்கற்றுப் போன, மக்களைக் கொலைக்களத்திற்கு அனுப்பிய இந்த அமைப்பு முறையின் மீது நாம் நம்பிக்கை கொள்ளத் தேவையில்லை. நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும் – மக்களின் அதிகாரம் நிலை நாட்டப்படுவது ஒன்றே மக்களைக் காப்பாற்றும். தோற்றுப் போன அவர்கள் மீண்டும் வருவார்கள்; நிவாரணம் என்கிற பிச்சைக் காசை விட்டெறிந்தால் எத்தனை ஓட்டுக்கள் கிடைக்கும் என்கிற கணக்கோடு வருவார்கள்.

மீண்டும் ஒரு முறை கொலைக்களத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் தூண்டில் அது என்பதால் அவர்களைப் புறக்கணிப்பதும், புதிதாய் மக்களின் தலைமையில், மக்களுக்குக் கட்டுப்பட்ட ஒரு அதிகார அமைப்பைக் கட்டமைப்பது ஒன்றே மீண்டும் நாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாதிருக்க சாத்தியமான ஒரே வழி.

சென்னை மழை வெள்ளம் குறித்த தொடர் கட்டுரையின் முந்தைய பாகங்கள்:

  1. சென்னை மழை வெள்ளம் – புவியியல் குறிப்பு
  2. செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் – பாசிச ஜெயா அரசின் குற்றம் !
  3. இந்த சேதாரத்தை வழங்கியோர் அதிகார வர்க்கம் + ஜெயா அரசு

– தமிழரசன்

  1. இந்த கட்டுரையை எழுதியதின் மூலமாக
    வினவு “தெயிவ குத்தத்துக்கு” ஆளாகி விட்டது…
    பால்மனம் மாறாத பச்சை முத்துவின் மீதா குற்றம் சுமத்துவது?
    அ.னா ஆவன்னா தெரியாத ஜேப்பியாரையா பழி சுமத்துவது>?
    பாவம் அயா பாவம்…

  2. எம்.ஜி.ஆர் வாரிசுகள் எம்.ஜி.ஆர் தோட்டம் அருகில் ஆக்கிரமித்துள்ள 100 அடிகள் மேல் உள்ள மணப்பாக்கம் கால்வாய் மண்ணை போட்டு ஆக்கிரமித்து 10 அடிகளாக சுருக்கி விட்டனர்.
    ஆற்றங்கரை குடிசை வாசிகளை அகற்றபோவதாக அறிக்கை விடும் அதிமுக ஆட்சி 100 அடிக்கு மேல் உள்ள மணப்பாக்கம் கால்வாயில் 80 அடிகளுக்கு ஆக்கிரமித்துள்ள எம்.ஜி.ஆர் வாரிசுகள் ( …யார் ..?)( பூந்தமல்லி- கிண்டி சாலையின் பாலம் அருகில்,,) மீது என்ன நடவடிக்கை எடுக்க போகின்றது.. இந்த மணப்பாக்கம் கால்வாய் செம்பரம்பாக்கம் ஏரி, போருர் ஏரியின் இருந்து கால்வாய்கள் மூலம் வரும் உபரிநீரை இராமாபுரம் ஏரிக்கு கொண்டு சேர்க்கும்..
    …………………………
    .DLS பின்புறம் உள்ள இந்த மணப்பாக்கம் கால்வாயை பட்டா போட்டு அதை சிறைவைத்து கம்பிகள் போட்டுள்ளர்.. ஆஸ்ரமம் பகுதி உள்ள பெரும் பணக்காரர்கள்..?https://www.facebook.com/natarajan.krishnan.1/posts/1066951746727167

  3. Vinavu, It seems you are categorizing greedy peoples with respect to their economic position. That is not actual neutrality and it will jeopardize your support towards working community.

    1) When greedy people in high level of human economic chain building and encroaching lake lands and other lands belongs to government with their influence, why next level of peoples (buyers) to them in human economic chain are buying it? So both of them doesn’t have social responsibility. Other than that common people are really responsible for this by choosing unscrupulous,corrupted people as representative from their constituency to govern them.

    2) And ask the educated fellows to come out and vote for right candidate. These are all the people responsible for this.

    Not to view the incidents in one angle it should be 360 degree.

  4. கடந்த ஆட்சி காரர் : Vinavu, விகடன், சவுக்கு ஒரு நடுநிலை பத்திரிகை.

    மக்கள் : எப்படி சொல்றீங்க ? கடந்த ஆட்சி காரர் : கடந்த ஆட்சியில் (2006 – 2011 ) நாங்கள் பல துறைகளில் பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்தோம். அதை Vinavu, ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், சவுக்கு போன்ற பத்திரிகைகளில் கிழி, கிழி என்று கிழித்து எழுதினார்கள். மக்கள் கடும் கோபம் கொண்டு அதிமுக கூட்டணிக்கு வாக்கு அளித்தார்கள்…

    மக்கள் : அப்புறம் ?

    கடந்த ஆட்சி காரர் : இப்ப அதிமுக கட்சி காரர்கள் பல துறைகளில் பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்து இருக்கிறார்கள். அதே பத்திரிகைகளில் கிழி, கிழி என்று கிழித்து எழுதுகிறார்கள்.

    மக்கள் : அப்புறம் ?

    கடந்த ஆட்சி காரர் : எங்க கட்சி தலைவர் அவர்களே ஒத்துக்கொண்டார்கள். நாங்கள் கடந்த ஆட்சியில் பல தவறுகள் செய்துவிட்டோம். மன்னித்துவிடுங்கள். (மீண்டும் எங்களுக்கு ஒட்டு போடுங்கள்; நாங்கள் மீண்டும் கொள்ளை அடிப்போம்).

    மக்கள் : இதெல்லாம் ஒரு பிழைப்பு…மானங்கெட்ட ஜென்மங்கள்….திருந்தவே திருந்தாதுங்க….

Leave a Reply to Boldthoughts பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க