privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

சீதை

-

sithaசீதான்னு எனக்கு எதுக்கு பேரு வச்சாங்கன்னு இப்பத்தான் தெரியுது! பதினாலு வயசுல நான் ஒம்பதாம் வகுப்பு படிச்சிகிட்டு இருந்தேன். ஒரு நாள் அம்மா சொன்னாங்க கோயிலுக்கு போறோம் கெளம்பு காரு வந்துருமுன்னு. (நிலம் அதிகம் இருந்தாலும் இருவத்தஞ்சு வருசத்துக்கு முன் கார் கிடையாது.) காருல போறோங்கற சந்தோசம், தலகால் புரியல எனக்கு. யாரு முன் சீட்ல உக்கார்ரதுன்னு எனக்கும் எந்தம்பிக்கும் ஒரே சண்ட. எந்த சண்டையிலயும் என்னை திட்ற அம்மா அன்னைக்கி எந்தம்பிய திட்னாங்க. முன் சீட்ல எடம், காருல போறது, தம்பிய திட்னதுன்னு மனம் கொள்ளா பூரிப்போட போனேன்.

கோயில்ல போய் பாத்தா எங்க சொந்தக்காரங்க எல்லாரும் வந்துருந்தாங்க. மொட்ட, காதுகுத்து, வேண்டுதல்னு எல்லாரும் ஒண்ணா கோயிலுக்கு போறது வழக்கந்தான். அதனால இவங்க வந்தது எனக்கு ஒன்னும் சந்தேகத்த தரல. அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா அவங்களோட பிள்ளைங்கன்னு அத்தன கூட்டம். அவங்கள பாத்த சந்தோசத்துல விளையாட கெளம்பின என்ன சித்தி கூப்புட்டு பக்கத்துல உக்கார வச்சு தலய தடவி கொடுத்து மெல்ல ஆரம்பிச்சா.

“நீ விளையாடல்லாம் போக கூடாது. இங்க வந்து உட்காரு. நான் சொல்றத நல்லா கேட்டுக்க. இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கும் மாமாவுக்கும் கல்யாணம் நடக்கப் போகுது. ஒன்னோட நல்லதுக்குதான் செய்றோங்கறத புருஞ்சுகிட்டு நடந்துக்க. தாத்தாவுக்கு ஒடம்பு சரியில்ல. அவரு சாவரதுக்குல்ல இந்த கல்யாணத்த நடத்தனுன்னு ஆசப்படுறாரு, அம்மா அப்பாவுக்கு ரொம்ப சந்தோசம். நீ தாத்தா வீட்ல ராணி மாரி இருக்கலாம்”ன்னு சொல்லி வெளையாட்டோட சேத்து எவ்வாழ்க்கைக்கு சமாதி கட்டினாங்க.

அந்த ஊரிலேயே என் தாத்தா குடும்பம்தான் பெரிய பணக்கார குடும்பம். மாமா வீட்டுக்கு அடங்காத தறுதல, பத்தாவதையே பலதடவ முயற்சி பண்ணியும் பாசாகல. வயசு கோளாறு, வெட்டி பந்தா, தெருவுக்கு ஒரு கூத்தியான்னு வாழ்க்கைய அசிங்கமா வாழ்ந்துகிட்டு இருந்தவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டா எல்லாம் சரியாகிடுன்னு என் அம்மா உட்பட குடும்பமே சேந்து முடிவெடுத்தாங்க. அதுக்காகதான் சொல்லாம கொள்ளாம கோயிலுக்கு கூட்டிட்டு வந்து அம்மா ஆசை, தாத்தா சாவுன்னு மந்திரம் ஓதி பலி கொடுக்க ஏற்பாடு செஞ்சாங்க. இவ்வளவு சொத்துக்கும் நம்ம மகதான் மகாராணி என்ற நெனப்புல வயசுக்கே வராத என்ன அந்த தறுதல தலையில கட்டிவச்சாங்க.

sitha 1கல்யாணம் நடந்துருச்சுன்னு சம்பிரதாயத்துக்கு ஒரு மாசம் தாத்தா வீட்டுல இருந்துட்டு அம்மா வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தாங்க. ஏழட்டு மாசம் கழிச்சு வயசுக்கு வந்தேன். பிறகு ஆறு மாசம் அம்மா வீட்டுலேயே இருந்துட்டு அதுக்கபுறம் தாத்தா வீடல கொண்டு போய் விட்டுட்டாங்க.

பதினாறு வயசே சரியா முடியாத எனக்கு தாம்பத்திய வாழ்க்கையில எந்த பிடிப்பும் இல்ல. ஆசப்பட்ட பொம்பளைய அடையனுன்னு நெனப்பு உள்ளவனுக்கு நான் இணக்கமா நடந்துக்காதது ஆத்தரத்த தூண்டுச்சு. வீட்டுல உள்ள பெரியவங்க, என் அம்மா, அப்பான்னு எல்லார்கிட்டையும் புகார் சொல்ல ஆரம்பிச்சிட்டான்.

விசயம் கேள்விபட்டவங்க எல்லாரும் “சின்னப் பொண்ணு போக போக சரியாயிடும்”னு அவனுக்கு சமாதானமும், “புருசனுக்கு அடங்கி போறவதான் பொண்டாட்டி, இது வரைக்குந்தான் நீ சின்ன பொண்ணு, இப்ப நீ பெரியவளாயிட்ட இதுக்கு மேல குடும்பத்த பாத்துக்க வேண்டியது ஒம் பொறுப்பு, ஏற்கனவே அவன் அப்புடி இப்புடி போறான்னுதான் கல்யாணம் பண்ணி வச்சது. நீ மொறண்டு புடுச்சா அப்புறம் சுத்தமா போயிருவான் அவன திருத்தி நல்ல வழிக்கு கொண்டு வர்ரது உன் கையிலதான் இருக்கு”ன்னு புத்தி சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

விதவிதமான துன்பத்தோட எத்தனையோ பொண்ணுங்க தண்ணியில சிக்குன சருகாட்டம் சுத்தி திரியிராங்க. அதுதான் ஊருக்குள்ள எதார்த்தமா இருக்கும் போது எனக்கு மட்டும் மாற்றம் கிடைச்சுருமா என்ன?. அதப் புரிஞ்சுகிட்டு நான் மனசு மாறி வரும் போது அவன் நெனப்பு வேற மாறி போச்சு. “ஒரு பொம்பளைக்கி இத்தனை திமிரா என்ன வேண்டான்னவள நான் தொடவே மாட்டே”ங்கறத கொள்கை முடிவா வச்சுருந்தான்.

நானோ மாடி வீட்டு எஜமானி. வீட்ட விட்டு வெளிய போய் யார்கிட்டயும் பேசின கௌரவம் போயிரும். அதால வீட்ல உள்ள வேலைய பாக்கறது, பொழுதுப் போக்குக்கு டீவி பாக்றதுன்னு வீட்டுக்குள்ள ஒரு கைதியா அடைச்சு கிடந்தேன்.

இவன் தான் புருசன், இதுதான் வாழ்க்கைன்னு ஏத்துகிட்டப் பிறகும் என்ன ஒதுக்கி வச்சு வேதனைப் படுத்தினான் கொடுமக்கார பாவி. இப்படியே பதிமூனு வருச காலம் இந்தத் தீண்டத்தகாத வாழ்க்கையை வாழ்ந்தேன். பெத்தவங்களோ ஏறாத கோயிலு இல்ல, செய்யாத சாங்கியமில்ல, இது ஒரு பக்கம் நடந்துச்சு. அவனோ ஊருக்கே பணக்காரன், வீட்டுக்கு பண்ணையாள அடிமையா வச்சுக்கறது போல, அவங்களோடப் பொண்ணையும் சேத்து ‘ஆசையடிமையா’ வச்சுகிட்டான். சாதியிலயும் பணத்துலயும் கீழ இருக்குறவங்க இஷ்டம் இல்லேன்னாலும் எசமான் கட்டளையையும், ஆசையையும் மறுக்க முடியாது. அந்த திமிர்ல பல பெண்கள் வாழ்க்கையை சீரழிச்சான்.

என்னதான் பொறுக்கி புத்தியோட நடத்தாலும் பணம் இருந்துட்டா அவன்தான் ஊருக்குள்ள பெரிய மனுசன். காலப் போக்குல அரசியல் செல்வாக்குன்னு பவர் கூடிகிட்டே போச்சு. எல்லாம் இருந்தும் ஊர் மெச்சக் பொண்டாட்டி புள்ள வேணுமுன்னு நெனச்சான்.

எந்த அறிகுறியும் இல்லம ஒரு நாள் திடீர்னு வந்து “நான் இன்னெரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுக்காக நீ உங்க அம்மா வீட்டுக்கு போகணுன்னு இல்ல, எப்பையும் போலவே நீ இந்த வீட்ல இருக்கலாம். அதுக்கு ஒனக்கு எல்லா உரிமையும் இருக்கு. என்னால எத்தன வருசம் ஆனாலும் உன்னோட சேந்து வாழ முடியாது. அதனால எனக்கு மனசுக்கு புடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டேன். பக்கத்தூரு பெருந்தனக்காரரு வீட்லதான் அந்த பொண்ண கூட்டிட்டு வந்து வச்சிருக்கேன். நீ மொறண்டு பிடிக்காம சம்மதிக்கனும். மாமா நல்லாருக்கனுன்னு நெனச்சியன்னா இந்த குங்குமத்த அந்த பொண்ணு நெத்தியில வச்சு வாழ்த்திட்டு வா”ன்னு சொன்னான்.

sitha 3கணவன் மனைவின்னு எந்த ஒட்டுதலும் இல்லாம இருந்த 13 வருச சிறை வாழ்க்கை அன்னைக்கி ஒரு முடிவுக்கு வந்துச்சு. தெருவுக்கு ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுத்து உடல் தேவையை தீத்துகிட்டவன், அந்தஸ்த்துக்கு பொண்டாட்டி வேணுன்னு இன்னெரு கல்யாணம் பண்ணிகிட்டான். ஆனா என்ன ஒரு மனித பிறவியா கூட மதிக்காம “நீ எப்பயும் போலவே இந்த வீட்ல இருக்கலாம்”ன்னு சொன்னானே நான் செஞ்ச பாவம் என்ன?

விசயம் தெரிஞ்சு மறு நாள் பதறி அடிச்சுகிட்டு என்னோட பெத்தவங்க வந்தாங்க. அழுது புரண்டாங்க, அவன வெட்டனும் குத்தனும்னு குதிச்சாங்களே தவிர நாம செஞ்சது தப்புன்னு உணறல. ஆனா அவனுக்கு தெரியும் கோபம் அடங்குற வரைக்கும் தலைமறைவா இருக்கனுங்கறது. பொண்ணும் மாப்பிளையுமா கல்யாணம் முடிஞ்சு தலைமறைவுங்கற பேர்ல உல்லாசமா எங்கேயோ இருந்தான். பெத்தவங்களோ, ஆளில்லாத வீட்ட பாத்து மண்ண வாரி எறிஞ்சுட்டு செத்தா வாழ்ந்தா இனி அவனுக்கும் நமக்கும் ஒன்னுமில்லங்கற மாபெரும் தீர்ப்ப சொல்லிட்டு அழச்சுகிட்டு வந்துட்டாங்க.

நடந்தது என்ன? நடக்குறது என்ன? நடக்கப் போறது என்ன? எதைப் பத்தியும் சிந்திக்க முடியாம மறத்துப் போன மனசோட சாவ வழி தெரியாத நெலையில இருந்தேன். என்னைக்காவது ஒரு நாள் மனந்திருந்தி வருவான் ஏத்துக்கிட்டு வாழ்வோமுன்னு நம்புறதத் தவிர எனக்கு என்ன வழி இருந்துச்சு? 13 வருசமா காத்திருந்ததுதான் மிச்சம். அறியாத வயசுல கல்யாணம், வாழ வேண்டிய வயசுல சன்யாசம்னு ஒரு நரக வேதனையை அனுபவிச்சேன்.

என் வேதனைய மறந்து சந்தோசமா இருக்கனுமுன்னு ஆறு மாசம் கழிச்சு சுத்திப் பாக்க சிங்கப்பூருக்கு அனுப்பினாங்க பெத்தவங்க. வானுயர கட்டிடம், சுதந்திரமா சுத்தி வரும் பெண்கள்னு புது ஒலகமா இருந்தாலும் அதுக்கு மத்தியிலயும் நான் வாழ்ந்த அவலமான வாழ்க்கதான் கண்ணு முன்னாடி வந்து நின்னுச்சு. பிறகு கேரளா, பெங்களூரு, சென்னை, ஊட்டின்னு சந்தோசத்த தேடித்தேடி அனுப்பினாங்க. ஒரு கட்டத்துக்கு மேல என் கதையும் பழசா போச்சு. சொந்தக்காரங்க அனுதாபமும் கொறஞ்சு போச்சு. அப்புறம் சந்தோசத்த தேடி வேலைக்கு போக ஆரம்பிச்சேன். ஒவ்வொரு வேலையா மாறி மாறி 10 வருசமா சந்தோசத்த தேடிகிட்டே இருக்கேன்.

sitha 2பெத்தப் பிள்ளைக்கி இப்படி ஒரு கொடுமைய செஞ்சுட்டமேன்னு பெத்தவங்க என்ன பன்னிருக்கனும்? எனக்கு வேற ஒரு கல்யாணத்த பண்ணி வச்சுருக்கனும். ஆனா அப்பா, சித்தி, சித்தப்பான்னு என்ன சுத்தி எல்லா சொந்தக்காரங்களும் படிச்சிட்டு நல்ல நெலமையில இருந்தும், நடந்த தவற சரி செய்ய மனசில்லாம சாதி கௌரவத்த கட்டிகிட்டு அழறாங்க.

கொஞ்சமும் கூச்சம் இல்லாம பொறுக்கித் தனம் பண்ணிட்டு பதவி பவுசுன்னு நெஞ்சு நிமுந்து நடக்குறான். மறு கல்யாணம் பன்னிகிட்டு ஆசைக்கு பொண்ணு, ஆஸ்த்திரிக்கு பையன்னு சந்தோசமா இருக்கான். அவனுக்கு புடிக்கல, என்ன வேணானுட்டு வேற கல்யாணம் பன்னிட்டான். ஏன்னா அவன் ஆம்பள. அத இந்த ஊரு ஒலகம் ஏத்துக்குது. ஆனா எனக்கு இந்த கல்யாணம் வேணான்னு சொல்லவொ, தூக்கி எரிஞ்சுட்டு போகவொ, வேற வாழ்க்கைய தேடிக்கவோ முடியாது. ஏன்னா நான் பொம்பள கட்டுப் பட்டுதான் வாழனுன்னு இந்த ஊரு ஒலகம் சொல்லுது. மத்தவங்கள காரணமா சொல்ற நான், என் வாழ்க்க பிரச்சனைய சரி செய்ய போராடினேனான்னு பாத்தா கேள்விக் குறிதான்.

என் வாழ்க்கையை எதுக்கு இப்படி சீரழிச்சிங்க? எந்த தவறும் செய்யாத நான் எதுக்கு தண்டன அனுபவிக்கனும்னு பெத்தவங்கள கேக்கவும் துப்பிலாம, நடந்த தவறுக்கு நீங்கதான் பொறுப்பு என் வாழ்க்கையை நானே பாத்துக்குறேன்னு சொல்ற தைரியமும் இல்லாம, என் நல்லது கெட்டத நானே தீர்மானிச்சுக்குற தெறமையும் இல்லாம, ஒரு நடைபிணமா இருக்கேன்.

ராமாயண நாடகத்துல சீதை தீக்குளிச்சு இறந்து போனான்னு காட்டுவாங்க. ஆம்பளைங்க தப்பா பேசுனா “நான் என்ன சீதையா தீக்குளிக்கன்னு” சண்டையில பொம்பளைங்க பரிதாபமா சொல்லுவாங்க! எங்கதையில ஊருக்கே தெரியும், அவன்தான் பொறுக்கின்னு. ஆனா தீக்குளிச்சதென்னமோ நாந்தான்.

  • சரசம்மா
  • புகைப்படங்கள்: நசீம்

(உண்மைச் சம்பவம், ஊர், பெயர், விவரங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க