privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்தூத்துக்குடி : தேவர் சாதி வெறியை எதிர்த்த PRPC தோழர் அரிராகவன் கைது !

தூத்துக்குடி : தேவர் சாதி வெறியை எதிர்த்த PRPC தோழர் அரிராகவன் கைது !

-

தூத்துக்குடியில் தேவர் சாதிவெறியர்களை அம்பலப்படுத்தி சுவரொட்டி ஒட்டிய PRPC தோழர் அரிராகவன் கைது! ஆதிக்க சாதிவெறிக்கு ஒத்தூதும் அதிகார வர்க்கம்!

டுமலையில் தலித் இளைஞர் சங்கர், தேவர்சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் 18 &19.03.16 ல் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. பொதுவாக ஆணவக்கொலை என்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வரும் சூழலில் குறிப்பாக தேவர்சாதி வெறியை அம்பலப்படுத்தி நம் அமைப்பு மட்டுமே சுவரொட்டி ஒட்டியது. அதிலும் அரசு வேலைக்கு கெஞ்சும்போது பிற்பட்ட சாதியாக பம்மி பதுங்குவதையும், ஊருக்குள் தாழ்த்தப்பட்டவர் களிடம் மட்டும் சத்ரியனாக அருவா தூக்குவதையும் அம்பலப்படுத்தி, இந்த சாதிவெறியர்களுக்கு இடஒதுக்கீட்டை ரத்து செய்யும்படி வலியுறுத்தி முழக்கம் வடிக்கப்பட்டிருந்தது.

PRPC-Poster

இது வன்முறையை தூண்டும் விதமாகவும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாகவும் இருப்பதாக கூறி மீளவிட்டான் கிராம நிர்வாக அலுவலர் சிவபெருமாள், தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார். உடனே களமிறங்கினர் ‘ஆய்’வாளர் சுரேஷ்குமார் தலைமியிலான சட்டத்தின் காவலர்கள்! இதற்கு பின்னால் இருந்து தாசில்தாரும் கண்காணித்துள்ளார். என்னே கடமை உணர்ச்சி!

இப்படித்தான் சுவரொட்டி ஒட்டிய 19.03.16 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் PRPC மாவட்ட தலைவர் தோழர் அரிராகவனின் வீட்டுக்கு வந்தது போலீசு படை. என்ன விசயம் என்று விசாரித்த தோழர் அரி தான் கைது செய்யப்படுவதை உடனே தோழர்களுக்கும், சக வழக்குரைஞர் களுக்கும் தகவல் தந்தார். அவரை கைது செய்த தெற்கு காவல் நிலைய ஆய்வாளர்,தோழரிடம் “போஸ்டரை யார் யார் ஒட்டினீர்கள்? எங்கு அச்சிட்டீர்கள்” என்று கேட்டார். “நான் மட்டும்தான் ஒட்டினேன்; மற்ற விசயங்களை நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்” என்று காவல்துறையின் விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அரிராகவன். போலீசோ “நான் ஒட்டவில்லை” என்று கூறினால் போதும் விட்டுவிடுகிறோம் என்று ஆசைகாட்டியது.

கைது செய்யப்பட்டது சனிக்கிழமை என்பதால் எப்படியாவது “உள்ளே தள்ளிவிடுவது” என்று சதியுடன் செயல்பட்டது அதிகார வர்க்கம். வேண்டுமென்றே தாமதப்படுத்தி இரவு 7.00 மணிக்குமேல் நீதிபதியின் வீட்டிற்கு தோழரை கொண்டு சென்றனர்.

கைதைக் கேள்விப்பட்டு சனி இரவிலும் சுமார் 30 வழக்கறிஞர்கள் தோழர் அரிக்கு ஆதரவாக அணிதிரண்டு நீதிபதியைprpc-ariragavan-arrested-4 முற்றுகையிட்டனர். அதில் தூத்துக்குடி பார் கவுன்சிலின் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துவிட்ட நம் அமைப்பு வழக்கறிஞர்களும் அடக்கம்.

காவல்துறையினர் குற்றம் சாட்டும் ஒருவரை (7 ஆண்டுகளுக்கு உட்பட்டு தணடனை தரக்கூடிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும் பட்சத்தில்) நீதிமன்றக்காவலில் வைக்க நினைத்தால் அதற்கான விளக்கத்தை தரவேண்டும். அப்படி எதையும் போலீசார் முன்வைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி வழக்கறிஞர்கள் விளக்கும்போது நீதிபதியின் செல்போன் ஒலித்தது. உடனே எழுந்து சற்று தள்ளிச்சென்று “அவர்கள்தான் வந்திருக்கிறார்கள்” என்று யாருக்கோ விளக்கிவிட்டு வந்தார்.

வழக்கறிஞர்கள் வாதத்தை தொடர்ந்தனர். “வழக்கறிஞராக 13 ஆண்டுகளாக இதே கோர்ட்டில் வாதாடிவரும் அரிராகவன் பலவேறு சமூகப் பிரச்சினை களுக்காக தொடர்ந்து போராடிவருபவர். மக்கள் உரிமைப்பாதுகாப்பு மையத்தின் பிரதிநிதியும் கூட. இவரை நீதிமன்றக்காவலில் அடைக்க எந்த அவசியமும் இல்லை. ஏற்கனவே சுவரொட்டிக்கான ஆதாரம் உங்கள் வசம் உள்ளது. சாட்சியாக இருப்பது VAO., போலீசுதான். இவர் இவர் எந்த ஆதாரத்தை அழிக்கப் போகிறார்? எந்த சாட்சியை கலைக்கபோகிறார்? இல்லை தலைமறைவாகத்தான் போகப் போகிறாரா?” என்று போலீசின் நோக்கத்தை தோலுரித்தனர். வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் சுரேஷ்குமார் தேவர் சாதியை சேர்ந்தவர். ஆனால் தோழர் அரியோ சம்மந்தப்பட்ட இரண்டில் எந்த சாதியையும் சேர்ந்தவரல்ல. பொதுநலனுக்காகவே இந்த சுவரொட்டியை ஒட்டியுள்ளார் என்று காவல்துறையை குறிப்பாக குற்றம் சாட்டினர். இது குறித்த அர்னேஷ்குமார் வழக்கின் தீர்ப்பு உதாரணத்தையும், வழிகாட்டுதலையும் சுட்டிக்காட்டினர்.

ஓராண்டுக்கு முன் (2015-ல்) நம் அலுவலக சுவற்றில் உள்ள பெயர்ப் பலகையை பார்த்துவிட்டு மனித உரிமை என்ற பெயரை பயன்படுத்தியதாக வழக்கு பதிவுசெய்து வைத்திருந்தனர். அந்த காரணத்தையும் போலீசார் இப்பொழுது முன்வைத்தனர். நாம் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற பெயரில் செயல்பட்டதையும், அந்த பெயரிலேயே கடந்த காலத்தில் உச்ச நீதிமன்றம் வரை பல வழக்குகளில் வாதிட்டு வருவதையும் விளக்கினர். இப்பொழுது அமைப்பின் பெயரை மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் என்று மாற்றி செயல்பட்டு வருவதையும் விளக்கினர்.

நம்தரப்பு வாதங்களை கேட்டபின் “ கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் நான் கன்சல்ட் பண்ணிவிட்டு வந்துடரேன்” என்று கூறிவிட்டு மீண்டும் செல்போனில் பேசியபடி சென்றார். யாரிடம் கன்சல்ட் செய்யப் போயுள்ளார்? அல்லது யாரிடம் உத்தரவு பெற்றுவருகிறார்? இது என்ன நீதிபரிபாலனை? என்று அனைவருமே சந்தேகத்துடன் நீதிபதியின் செயல்பாடுகளை பார்த்தனர். திரும்பி வந்தவுடன் “ரிமாண்ட் பண்ணுகிறேன்” என்று அறிவித்தார்.

வழக்கறிஞர்களோ “நாங்கள் பிணை மனு தாக்கல் செய்கிறோம். இப்பொழுதே பிணை தர 437 CRPC படி உங்களுக்கு அதிகாரம் உள்ளது. செய்யுங்கள்” என்றனர். மீண்டும் செல்போனை எடுத்துக்கொண்டு எழுந்து சென்றுவிட்டு வந்து “பிணை வழங்கமாட்டேன்” என்றார். முன்கூட்டியே எழுதப்பட்ட நாடகத்தின் ஒத்திகையைப்போல இருந்தது இக்காட்சி.

தெருவில் திடீரென முளைத்த போலீசு வாகனங்கள், பைக்குகள், கார்கள்; வீட்டிலிருந்து வாசலையும் தாண்டி கேட்கும் வாதங்கள் என பிரையண்ட் நகர் 4வது தெரு களைகட்டியது. என்ன? என்ன? என்று அனைவரும் நின்று விசாரித்து சென்றவண்ணம் இருந்தனர். நேரம் கடந்து கொண்டிருந்தது.

முடிவாக தோழரின் உடல்நலைக் குறைவை முன்வைத்து மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப உத்தரவிட கோரி மனுதாக்கல் செய்தோம். வேறு வழியின்றி இம்மனுவை ஏற்றுக்கொண்டார் நீதிபதி. இரவு 9.00 மணிக்கு மேல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அட்மிட் செய்தனர். உடனே பரிசோதனைகள் துரிதமாக நடத்தப்பட்டன.

இரவு 1.00 மணிக்கு எக்ஸ்ரே எடுத்ததிலிருந்தே அரசின் வேகத்தையும், விரைவில் சிறைக்குள் தள்ளவேண்டும் என்ற நோக்கத்தையும் புரிந்துகொள்ள முடிந்தது. தவிர்க்க முடியாமல் சிகிச்சை தொடரவே இரு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கண்காணிக்க வைத்ததை தாண்டி எதுவும் செய்யமுடியாமல் கையைப் பிசைந்தபடி தவித்தனர் அதிகாரிகள். ஒருவழியாக திங்கள் காலை மருத்துவமனையிலிருந்து சிறைக்கு கொண்டு சென்றனர்.

இந்த கைது ஏன்? அதுவும் ரிமாண்டா? – என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தன்னிடம் கேள்விகேட்ட வழக்கறிஞர்களுக்கு தோழர் அரி நம் நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை முன்வைத்து விளக்கினார். உயர்கல்வித் துறையைப் போலவே நீதித்துறையை பார்ப்பன இந்துமதவெறி அமைப்புக்கள் கைப்பற்ற செய்துவரும் எத்தனிப்புகளையும், உழைக்கும் மக்களை பிளவுபடுத்த சாதிவெறியூட்டுவதையும், இந்தியாவை சுரண்ட இவர்கள் ஆதரிக்கும் பன்னாட்டு கன்பெனிகளையும், எதிர்த்து நிற்பதுதான் காரணம் என்பதை அரசின் இந்த கைதின் மூலம் புரிய வைத்தார்.

நாம் வழக்கு பதிவு செய்தவர் தேவர் சாதியை சேர்ந்தவர் என்று வாதிட்டதால், உடனே தூத்துக்குடியிலுள்ள பிற காவல்நிலையங்களிலும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சுவரொட்டியால் பாதிக்கப்பட்டதாக யாராவது புகார் தந்தனரா? என்று கேள்வி எழுப்பியதால் மறுநாளே தேவர் ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் தேவர்சாதி வெறியினர் ASP அருண் சக்தி குமாரிடம் புகார் அளித்துள்ளனர். ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று பீற்றிக்கொள்ளும் பத்திரிக்கைகள் இவ்வழக்கு பற்றிய போலீசின் செய்தியையே (வன்முறையை தூண்டும் சுவரொட்டி ஒடியதாக) வெளியிட்டனர். நடுநிலை, பத்திரிக்கை தர்மம் என்பதெல்லாம் ஏமாற்று என்பதை, உண்மையை எழுதும் தகுதியை இழந்துவிட்டதை உணர்த்திக்கொண்டனர் ஊடகவியலாளர்கள். அதேநேரம் தேவர் சாதியினர் தமது புகார் மனுவில் தாங்கள் சாதி மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாகவும், உடுமலையில் நடந்தது ஒரு தனிப்பட்ட நபரின் குடும்ப பிரச்சினையில் நடந்த கொலைதான் என்றும் கூறியுள்ளதை அப்படியே போட்டு தமது உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளது தினகரன் நாளேடு.

திங்கட்கிழமை நீதிமன்றத்தில் பிணை கிடைத்துவிடும் என்று கணித்த அதிகார வர்க்கம் தோழரை முதலில் தூத்துக்குடி கிளைச்சிறையில் அடைத்தனர். பின்னர் பெயில் கிடைத்தாலும் உடனே வெளியே வரவிடக் கூடாது என்று தாமதப்படுத்தவே பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பினர்.

பிணை மனு மீதான விசாரணை மதியம் 3.00 மணிக்கு விசாரணைக்கு வந்தது. சுமார் 20 வழக்குரைஞர்கள் அரியின் சார்பில் ஆஜராகினர். நீண்ட வாதப் பிரதிவாதங்களை நீதிபதியுடன் நடத்தினர். முடிவில் எதிர்ப்பார்த்தது போல பிணை வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி.

பன்னாட்டு முதலாளிகளின், தரகு முதலாளிகளின் எடுபிடுகளான, ஆதிக்க சாதிவெறியர்களுக்கும் இந்து மதவெறியர்களுக்கும், பாசிச ஜெயாவுக்கும் அடியாட் படையான போலீசு அவ்வளவு எளிதாக நம்மை விட்டுவிடுவார்களா என்ன? சந்தேகத்துடன் விசாரித்தோம். வடபாகம் மற்றும் சிப்காட் போலீசார் தென்பாகத்தினரின் வழியில் தமது பங்கிற்க்கு களமிறங்கினர்.

இப்படி தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனையோ, ஸ்டெர்லைட்டின் அதிகாரிகளையோ இப்படி எந்த போலீசும் உள்ளே தள்ள முயற்சித்ததில்லை. உண்மையில் இவர்களை எதிர்த்த நம் தோழர்களை ஒடுக்கத்தான் அதிகார வர்க்கம் ஆலாய்ப் பறக்கிறது.

ஒரு நீதிபதி பிணை தருகிறார். ஆனால் அதே கட்டிடத்தின் மற்றொரு அறையில் மற்றொரு நீதிபதி இதே குற்றத்திற்காக ரிமாண்ட் செய்ய உத்தரவிடுகிறார். நாளை 22.03.2016 செவ்வாயில் இன்றைய நாடகத்தின் காட்சிகள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து அரங்கேறும். இந்த கட்டமைப்பு தோற்றுவிட்டது. தான் எதற்காக இருப்பதாக சொல்லிக் கொள்கிறதோ அதற்கு எதிர்நிலையாக மாறிவிட்டது. ஆதிக்க சாதி வெறிப்படுகொலைகள் அன்றாட நிகழ்வாகிவிட்ட தென்மாவட்டத்தில் தான் அதை எதிர்ப்பவர்களும், கண்டிப்பவர்களும்தான் அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள். இந்த காவல்துறையும், நீதித்துறையும் இங்கு எதற்காக இருப்பதாக சொல்லப்படுகிறதோ அதற்கு எதிராகத்தான் செயல்படுகிறது என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்?

தோழரை மீண்டும் அடுத்தடுத்த வழக்கில் இருந்து பிணையில் எடுக்கவும், ஆதிக்க சாதிவெறிக்கும், (அ)நீதித்துறை மற்றும் இந்து மதவெறி பாசிசத்திற்க்கும் எதிராக அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்கவும் தோழர்கள் முனைந்துள்ளனர்.

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தூத்துக்குடி.