privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஉயிர்காக்கும் மருந்துகளுக்கு தடை போடும் மோடி அரசு

உயிர்காக்கும் மருந்துகளுக்கு தடை போடும் மோடி அரசு

-

இந்தியாவிற்கு எதிராக பாஜக மோடி அரசு அமெரிக்காவுடன் இரகசிய ஒப்பந்தம்!

Pharmaceutical tablets ந்திய மக்களின் உயிரோடு விளையாடும் பொருட்டு ‘இனி மேல் உயிர் காக்கும் மலிவுவிலை பதிலீட்டு (Generic Versions) மருந்துகளைத் தயாரிக்கும் உள்நாட்டு மருந்துக் கம்பெனிகளுக்கு கட்டாய உரிமம் வழங்கமாட்டோம்’ என மோடியின் பாஜக அரசு  அமெரிக்காவுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

அமெரிக்க-இந்திய வர்த்தக கூட்டமைப்பு (USIBC-United States Indian Business Council), அமெரிக்க வணிக பிரதிநிதியத்திடம் (USTR-Unites States Trade Representative) சென்ற பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த அறிக்கையில் இந்தியா மலிவு விலையில் மருந்துகளை உள்நாட்டில் தயாரிப்பதற்கு கட்டாய உரிமம் இனி வழங்காது என அமெரிக்காவிற்கு தனிப்பட்ட முறையில் உறுதியளித்திருப்பதாக தெரிவிக்கிறது.

மார்ச் ஒன்பதாம் தேதி அமெரிக்க ஊடகங்களால் வெளிவந்த இந்த செய்தி, இந்திய ஊடகங்களால் எங்கும் விவாதிக்கப்படவில்லை. மோடி அரசின் இந்த சதிச் செயல் இந்திய அரசாங்கத்தால் இதுவரை ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மலிவு விலையில் இந்தியா மருந்து பொருட்களை உற்பத்தி செய்வதால் அமெரிக்க-பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் வறுமையில் வாடுவதாகவும் இரண்டு வருடங்களாக தம்பி மோடியின் நடவடிக்கைகளை பெரியண்ணனின் USIBC அமைப்பு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் உள்நாட்டில் மருந்து பொருட்கள் மேற்கொண்டு தயாரித்தால் அமெரிக்கா பொருளாதாரத் தடை போடுவதற்கும் வாய்பிருப்பதாகச் சொல்கிறது USIBC அமைப்பு.

மேற்படி மோடி அரசு இந்திய நாட்டு மக்களுக்கு தெரியாமல் அமெரிக்காவிற்கு வழங்கியிருக்கும் இந்த உறுதிமொழியின் விளைவுகள் என்னவென்பதை பார்ப்பதற்கு பதிலீட்டு மருந்துகள் குறித்து சில விசயங்களைக் கவனிப்போம். காய்ச்சலைக் குணப்படுத்தும் பாராசிட்டமால் மாத்திரை உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். இதை அசிட்டாமினாஃபென் எனவும் அழைப்பர். இதன் முறையான வேதியியல் பெயர் N-(4-ஹைட்ராக்சிபினைல்)-அசிட்டமைடு என்பதாகும். இந்த வேதியியல் மூலக்கூறை ஆய்வகங்களில் பல்வேறு நாடுகள் தன் சொந்த செலவில் தயாரித்து மக்களின் நோய் தீர்க்க முடியும். ஆனால் இந்த பாராசிட்டமால் மாத்திரையை பல்வேறு கம்பெனிகள் டோலோ-650, கால்பால், மெட்டாசின் என்று தங்கள் பிராண்டு பெயர்களை வைத்துக்கொண்டு அதற்கு காப்புரிமை பெற்றுக்கொண்டு சந்தையில் கொள்ளை இலாபத்திற்கு விற்றுக் கொண்டிருக்கிறது. இக்கொள்ளையை உலக வர்த்தகக் கழகத்தின் 1994-ம் ஆண்டு வெளிவந்த ‘அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் (TRIPS-Trade Related aspects of intellectual property rights)” எனும் ஒப்பந்தம் சட்டப்பூர்வமாக்கியிருக்கிறது.

உலகவர்த்தகக் கழகத்தின் உறுப்பு நாடுகளாக இருக்கும் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் ஒருவேளை உள்நாட்டிலேயே பாராசிட்டமால் மாத்திரைகளை தயாரித்து மக்களுக்கு வழங்கும் எனில் TRIPS ஒப்பந்தத்தின்படி அந்நாடு தயாரித்த பாராசிட்டமால் மாத்திரை டோலோ-650, மெட்டாசின் போன்ற கம்பெனி பிராண்டுகளின் பதிலீட்டு மருந்தாகவே கருதப்படும். இத்தகைய பதிலீட்டு மருந்துகளை ஒரு நாடு தன் சொந்த செலவில் தானகவே தயாரித்து கொண்டாலும் பன்னாட்டு மருத்துவ கம்பெனிகளின் காப்புரிமையின் படி சொத்துரிமை திருட்டாகவே கருதப்படும்.

Modi fail (4)
அமெரிக்கா சென்ற மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம், செப், 2015.

எனினும் மூன்றாம் உலக நாடுகளின் கொடிய வறுமையும், கொள்ளை நோய் தாக்குதல்களும் ஒட்டு மொத்த சந்தைக்கான வாய்ப்பையே சிதறடித்துவிடும் என்பதற்காக 1994-TRIPS ஒப்பந்தத்தில் ஏழைநாடுகள் பதிலீட்டு மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான கட்டாய உரிமம் குறித்த சரத்துகள் சேர்க்கப்பட்டிருந்தன. இதன்படி இந்தியா போன்ற ஏழைகள் அதிகம் வாழும் நாடுகள் கொள்ளை நோய்களின் பொருட்டோ, அவசரக் காலங்களிலோ கட்டாய உரிமத்தைப் பயன்படுத்தி பன்னாட்டு கம்பெனிகளின் காப்புரிமைகளைத் தாண்டி பதிலீட்டு மருந்துகளை தயாரிக்க முடியும் என்ற நிலை இருந்தது.

இந்தவகையில் இந்தியா முதன்முதலில் 2012-ம் ஆண்டு, புற்றுநோய் மருந்தை மலிவு விலையில் தயாரிப்பதற்காக முதல் கட்டாய உரிமத்தை பயன்படுத்தியது. இதற்கு முன்பாக ஜெர்மனியின் பன்னாட்டு மருத்துவக் கம்பெனியான பேயர் (Bayer) Nexavar எனும் பிராண்டு பெயரில் புற்றுநோய் மருந்தை சந்தையில் விற்றுவந்தது. இந்த Nexavar  மருந்து சிறுநீரகப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் தொண்டைப் புற்றுநோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால் இந்தியர் ஒருவர் பேயர் கம்பெனியின் புற்றுநோய் மருந்தை வாங்க வேண்டுமென்றால் மாதம் ஒன்றிற்கு மூன்று இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டும். இத்தொகை இந்திய உயர்வருவாய் பிரிவினராலும் கூட தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றாகும். எஞ்சியிருக்கும் 80% மக்களின் நிலை? ஆனால் நெக்சவரின் வேதியியல் பெயரான சோராபினிப் எனும் மூலக்கூறை எந்த நாடும் தன் சொந்த செலவில், சொந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்துக்கொள்ள முடியும். மலிவான விலையில் மக்களுக்கும் வழங்க முடியும். இந்தியா இந்த வகையில்தான் 2012-ல் புற்றுநோய்க்கான பதிலீட்டு மருந்தை தயாரித்துக் கொள்ள முடிந்தது.

மேலும் இந்தியா இப்படி தயாரித்துக்கொண்ட பதிலீட்டு மருந்துகளை எக்காரணம் கொண்டு எந்தவொரு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக் கூடாது எனச் சொல்கிறது TRIPS ஒப்பந்த விதி! இந்த விதியால் மலிவு விலையில் எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை இந்தியாவில் உற்பத்தி செய்து ஏழை ஆப்ரிக்க நாடுகளுக்கு வழங்குவதை பன்னாட்டு மருந்து கம்பெனிகள் தடுத்து நிறுத்தியிருக்கின்றன. தென் ஆப்ப்ரிக்காவிற்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் வழக்கு தொடுத்திருப்பதை கட்டுரையாளர் கேரி லீச் “முதலாளித்துவம்- ஒரு கட்டமைக்கப்பட்ட மக்கட் படுகொலை (Capitalism- A structural genocide)” எனும் தனது புத்தகத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

தற்பொழுது இந்தியாவைப் பொறுத்தவரை 2012-ல் இருந்து கட்டாய உரிமத்தை பயன்படுத்தி மலிவு விலையில் புற்றுநோய் மருந்துகளைத் தயாரிப்பதை பன்னாட்டு மருத்துவக் கம்பெனிகள் எதிர்த்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாகத்தான் மோடி அரசு சத்தமேயில்லாமல் மலிவு விலையில் உயிர்காக்கும் மருந்துகளை தயாரிக்கும் கட்டாய உரிமத்தை இனி பயன்படுத்தமாட்டோம் என அமெரிக்காவிற்கு ரகசியமாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது.

பா.ஜ.க மோடி அரசு அமெரிக்காவிற்கு வழங்கிய இந்த ரகசிய வாக்குறுதி உலகநாடுகளை ஏன் அமெரிக்க மக்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது என கட்டுரையாளர் ஸ்ரீவித்யா ராகவன் இந்து ஆங்கிலே நாளேட்டில் 21-03-2016 அன்று எழுதிய கட்டுரையில் தெரிவிக்கிறார்.

சான்றாக ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே மக்கள் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் கொள்ளை இலாபத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் நிற்கதியாக நிற்பதை எடுத்துக்காட்டுகிறார். அமெரிக்காவின் கீலீடு கம்பெனி விற்கும் சோவால்டி மருந்து (வைரஸ் எதிர்ப்புயிரி) அமெரிக்க மக்களின் வாங்கும் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருப்பதால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடியிருக்கிறார்கள். அமெரிக்க செனட் சபையிலேயே முதலாளித்துவத்துவத்தை ஆதரித்துப் பேசிய கோமான்களே இத்தகைய மருத்துவக் கம்பெனிகளின் வரைமுறையற்ற கொள்ளையைத் தடுக்க வேண்டுமென எதிர்குரல் எழுப்பியிருப்பதை பதிவு செய்திருக்கிறார் ஸ்ரீவித்யா ராகவன்.

capitalism (1)அமெரிக்க மக்களே அமெரிக்காவை எதிர்த்து அடிப்படையான இன்றியமையாத உயிர்காக்கும் மருந்துகளின் விசயத்திற்காக போராடி வரும் பொழுது மோடியின் பாஜக கும்பல் இந்திய மக்களுக்கு எதிராக ரகசியமாக அமெரிக்காவிற்கு சம்மதம் தெரிவித்திருப்பதை வேறு எந்த வகையில் விளக்க முடியும் என்று தெரியவில்லை. அதை வாசகர்களாகிய நீங்களே முடிவு செய்யுங்கள். ஆனால் இந்த செய்தி வெளிவந்த காலத்தில் தான் ஆர்.எஸ்.எஸ், ஏபிபிவி கும்பல் பல்கலைக்கழகம், மக்கள் கூடும் பொதுஇடங்கள், ஊடகங்கள், பத்திரிக்கைகள் என ஒரு இடம் விடாமல் தேசத்துரோகி என்று நாட்டு மக்களை முத்திரை குத்திக் கொண்டிருந்தார்கள். போலீசு, அரசு எந்திரத்தின் உதவியோடு மக்களைத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். இதற்கு என்ன பதில்?

மோடி கும்பலின் தேசத்துரோகம் இத்தோடு நிற்கப்போவதுமில்லை. மருத்துவ உலகின் விதிகளின்படி ஒருநாட்டில் நடைபெறும் மருத்துவ பரிசோதனை முடிவுகள் (Clinical Trails), நோயைத் தீர்ப்பதற்காக உலகிங்கெலும் பகிர்ந்துகொள்ளப்பட்டதுதான் வரலாறாக இருந்தது. ஆனால் உலக வர்த்தகக் கழகத்தின் காட்ஸ் ஒப்பந்தம் இந்த அத்தியாவசிய தேவையைக் கூட வணிக நோக்கில் மாற்றியமைக்கிறது. இதன்படி மருத்துவ பரிசோதனை தரவுகள் இனி நாடுகளுக்கிடையே மருத்துவமனைகளுக்கிடையே பகிரப்படாது. அவை ஒவ்வொன்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் சொத்துக்களாக கருதப்படும் வகையில் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை அமல்படுத்துவதில் மோடி அரசு முனைப்பாக இருக்கிறது.

மோடி அரசு கொண்டு வரும் அறிவுசார் சொத்துடமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் இனி இந்தியனின் குடலைக்கூட நரசிம்ம அவதாரம் எடுத்து அமெரிக்க கம்பெனிகள் இரத்ததுடன் பிய்த்துக்கொண்டு மாலையாக போடலாம். மோடியின் ஆர்.எஸ்.எஸ் சங்கப்பரிவாரக் கும்பல் குஜராத்தில் கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றைக் கிழித்து இதை நடைமுறையில் செய்து காட்டியிருக்கிறார்கள். இந்தவகையில் பார்ப்பன பாஜக கும்பலின் தேசபக்தியின் எல்லை எதுவென்பதை நாம் அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறோம். இனி தேசம் குறித்து இவர்களை இனியும் பேச அனுமதிக்காமல் வரலாற்றிலிருந்து இந்தக் கும்பலை தூக்கி எறிய வேண்டியதுதான் தேசத்தைக் காக்கும் மக்களின் ஒவ்வொருவரது கடமையாக இருக்கமுடியும்!

(குறிப்பு- இக்கட்டுரையின் தொடர்ச்சியாக மோடி அரசு ஏன் அமெரிக்காவுடன் உள்நாட்டு மருந்துக் கம்பெனிகளுக்கு கட்டாய மருத்துவ உரிமம் வழங்கமாட்டோம் என்பதை இரகசியமாக நிறைவேற்றினார்கள் என்பதை அடுத்த பதிவில் விளக்குகிறோம்).

– இளங்கோ

செய்தி ஆதாரங்கள்: