privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்இதர நாடுகள்ஜப்பானின் புகழ் - ரோபோவா தற்கொலையா ?

ஜப்பானின் புகழ் – ரோபோவா தற்கொலையா ?

-

கார்டியனில் 08-04-2016 அன்று வெளிவந்த புகைப்படம், ஜப்பானின் ‘புகழ்’ பெற்ற கார் உற்பத்தியின் இன்றைய நிலையைக் காட்டுகிறது. அசெம்பிளி லைனில் எந்த தொழிலாளியுமின்றி ரோபோக்கள் மட்டுமே காரின் உப பாகங்களை கோர்த்து பொருத்துகின்றன. குட்டி நாடு ஜப்பான் ‘தொழில் வளர்ச்சியில் என்னமா அடிச்சு போறான் பாத்தியா?’ என்று முதலாளித்துவ அறிஞர் பெருமக்கள் வியப்பது உடன் நினைவுக்கு வருகிறதா?

படம் பிரசுரம்: கார்டியன் நாளிதழ்: மூலம்: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்
இன்றைய நிலையில் ஜப்பானில் கார் உற்பத்தி எவ்விதம் நடைபெறுகிறது என்பதைக் காட்டுகிறது. அசெம்பிளி லைனில் எந்த தொழிலாளியுமின்றி ரோபோக்கள் மட்டுமே காரின் உப்பாகங்களை கோர்த்து பொருத்துகின்றன படம் பிரசுரம்: கார்டியன் நாளிதழ்: மூலம்: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்

ஆனால் தொழில் நுட்ப வளர்ச்சியின் பெயரில் போற்றப்படும் ஜப்பானின் மறுபக்கம் என்ன?

இந்து ஆங்கில நாளேட்டில் 03-04-2016 அன்று மறுபிரசுரமான ராய்ட்டர்ஸின் கட்டுரை ஜப்பானில் ஓவர்டைம் பார்ப்பதால் கசக்கிப் பிழியப்படும் தொழிலாளர்களின் மரணம் மிகப்பெரும் அளவில் அதிகரித்திருப்பதாக சொல்கிறது. அதுவும் பணிச்சுமையால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் இளைஞர்களும் ஆவர்.

ஜப்பானில் கடந்த வருடத்தில் (மார்ச் 2015 வரை) மட்டும் ஓவர்டைம் பார்த்து மரணமடைந்தன் மூலம் கரோஷி காப்பீடுக்கு (Karoshi-பணிச்சுமையால் மரணமடைந்தவர்களுக்கான காப்பீடு) விண்ணப்பித்தவர்கள் 1,456 பேர் என்கிறது அந்நாட்டு தொழிலாளர் அமைச்சகம். ஆனால் அரசின் புள்ளிவிவரத்தை விட பத்து மடங்கு தொழிலாளிகள் ஓவர்டைம் பார்த்து மரணமடைந்திருப்பதாகச் சொல்கிறார் பணிச்சுமையால் மரணடமடைந்தவர்களுக்கான தேசிய பாதுகாப்பு பேரவையின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஹிரோஷி கவகைட்டோ.

ஜப்பானில் தொழிலாளர்களுக்கான வரையறுக்கப்பட்ட வேலை நேரம் என்ற குறைந்தபட்ச அடிப்படை உரிமை கூட கிடையாது என்கிறார் ஹிரோஷி. இது தொழிலாளிகள் வகைதொகையின்றி சுரண்டப்படுவதற்கு வாய்ப்பாக இருக்கிறது. இலாப வெறியால் கசக்கிப் பிழியப்படுகிற தொழிலாளி ஒருவேளை பணிச்சுமையால் இறந்துபோனால் இரண்டுவிதமான காப்பீடுகள் ஜப்பானில் இருக்கின்றனவாம்.

முதல் வகையில் பணிச்சுமையின் காரணமாக மாரடைப்பு போன்ற இதய நோய்களால் ஒரு தொழிலாளி இறந்துபோனால் காப்பீடு பெறுவதற்கு இறப்பதற்கு முன் கடைசிமாதத்தில் 100 மணிநேரம் ஓவர்டைம் பார்த்திருக்க வேண்டுமாம். அல்லது இறப்பதற்கு முன் ஆறுமாதங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களில் தொடர்ச்சியாக 80 மணிநேர ஓவர்டைம் பார்த்திருக்க வேண்டுமாம். வேறு விதமாக சொல்வதென்றால் ஜப்பானில் ஒரு தொழிலாளி ஒருமாதத்தில் 100மணி நேரம் ஓவர் டைம் பார்த்தால் அவர் மாரடைப்பால் செத்துப்போவது உறுதி என்பதை ஜப்பானிய தொழிலாளர் அமைச்சகம் ஒரு விதியாகவே அறிவிக்கிறது.

இரண்டாவது வகையில் பணிச்சுமையின் காரணமாக ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டால் காப்பீடு பெறுவதற்கு தற்கொலைக்கு முந்தைய மாதத்தில் 160 மணிநேரத்திற்கும் மேல் ஓவர்டைம் பார்த்திருக்க வேண்டுமாம். அல்லது கடைசி ஆறுமாதத்தில் மூன்றுமாதங்களுக்கு மேல் தொடர்ச்சியாக 100 மணிநேரத்திற்கும் மேல் ஓவர்டைம் பார்த்திருக்க வேண்டுமாம். அதாவது  ஜப்பானில் ஒரு தொழிலாளி ஒருமாதத்தில் 160 மணிநேரத்திற்கும் மேல் ஓவர்டைம் பார்த்தால் அவர் தற்கொலை செய்யப்படுகிறார் என்றாகிறது!

japan_women_workersஜப்பான் தொழிலாளர் அமைச்சக தகவலின் படி, கடந்த நான்கு வருடங்களில் வேலை தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட இளைஞர்கள் 49% பேர். இதில் 39% பேர் பெண்களாவர்! தொழில்நுட்பத்தின் உச்சம் என்று சொல்லப்படுகிற ஜப்பான்தான் உலகிலேயே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறவர்களின் நாடு!

முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொழிலாளி எட்டுமணி நேரம் செய்கிற வேலையை இயந்திரங்கள் நான்குமணி நேரத்தில் செய்கிற பொழுது தொழிலாளி ஒன்று வேலையிழப்பார் அல்லது அவரது வேலை நேரம் இன்னும் கூடுதலாகி பன்னிரெண்டு, பதினான்கு மணிநேரம் உழைக்க வேண்டியிருக்கும். இதனால் சுரண்டலின் கொடுமை கூடுமே தவிர குறையாது.

எடுத்துக்காட்டாக ஜப்பானில் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளிகள், ஒப்பந்த தொழிலாளிகள் என இரும் பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். வரையறுக்கப்படாத ஒப்பந்த வேலைகளில் பெரும்பாலும் இளைஞர்களும் பெண்களும் பணியர்மத்தப்படுகின்றனர். ஜப்பானில் 1990-ல் 20% ஆக இருந்த ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, 2015-ல் 38% ஆக அதிகரித்திருக்கிறது. இதில் 68% பெண்கள் ஆவர். ஜப்பான் வழக்கறிஞர்கள் மற்றும் போராளிகளின் கருத்துப்படி பெரும்பாலான ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இடைவேளையும் ஓவர் டைம் பார்ப்பதற்கான ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்கின்றனர். இளைஞர்கள் வேறுவேலையில் சேர்வதற்கான அனுபவமின்மை காரணமாகவும் பிரசவ கால விடுப்பு எடுக்கும் பெண்கள் மீண்டும் பணியில் வேறு எங்குமே சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையிலும் இவர்கள் இடைவேளை குறித்தோ ஓவர்டைம் ஊதியம் குறித்தோ வாய்திறப்பதில்லை என்கின்றனர்.

எமிக்கோ தரோநிஷி
எமிக்கோ தரோநிஷி

திருமதி. எமிக்கோ தரோநிஷி பணிச்சுமையால் தற்கொலை செய்துகொண்ட தன் கணவரின் நினைவாக பணிச்சுமையால் தற்கொலை செய்துகொள்ளும் பிற தொழிலாளிகளுக்கு காப்பீடு பெற்றுத் தருவதில் இறங்கியிருக்கிறார். இவர் கம்பெனிகளின் மூர்க்கத்தனமான சுரண்டல் எத்தகையது என்பதை அம்பலப்படுத்துகின்றார். இவரது கருத்தின்படி சில கம்பெனிகள் சம்பளத்தோடு 80 மணி நேர ஓவர்டைம் பார்ப்பதையும் கட்டாயமாக்குகின்றனவாம். 80 மணி நேர டார்கெட்டை நிறைவு செய்யவில்லையென்றால் கூலியை திருப்பித்தர வேண்டுமென கம்பெனிகள் நிர்ப்பந்திப்பதை எடுத்துக்காட்டுகிறார். இத்தகைய முறையால் தொழிலாளிகள் பலரால் குறைந்த பட்ச கூலியைக் கூட பெறமுடிவதில்லை என்கிறார்.

முதலாளித்துவ சமூகத்தில் இராக்கெட் விட்டாலும் சரி ரோபோ வேலை செய்தாலும் சரி இலாபத்தை நிர்ணயிப்பது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியல்ல. பாட்டாளிகளின் கூலியுழைப்புதான் இலாபத்தை நிர்ணயிக்கிறது. ஆகையால் தான் ரோபோக்கள் கார் உற்பத்தி செய்வது தொழில்நுட்பத்தின் உச்சம் என்று வியக்கிற நாட்டில் தொழிலாளிகள் ஓவர்டைம் பார்ப்பதால் தற்கொலை செய்துகொள்கிறார்கள்! மாரடைப்பால் சாகிறார்கள். இந்தவகையில் ஜப்பானை மனிதர்களைக் கொல்லும் ரோபோக்களின் நாடு என்று சொல்லலாம். ரோபோக்கள் வளர்ச்சி பெற்று செயற்கை அறிவைக் கண்டடைந்து மனித குலத்தை கட்டுப்படுத்துவதாகவும், அதை சில சூப்பர் ஹீரோக்கள் தடுத்து நிறுத்துவதாகவும் நிறைய ஹாலிவுட் படங்களை வெளிவந்திருக்கின்றன. உண்மையில் அந்த ரோபோக்கள் முதலாளித்துவ வர்க்கமாகவும், தடுத்து நிறுத்தி இந்த உலகைக் காப்பாற்றப் போவது தொழிலாளி வர்க்கம் மட்டுமே.

கேள்வியும் தொடர்ச்சியும்: தொழில்நுட்ப வளர்ச்சி தொழிலாளிக்கு எதிரானதா? இல்லை. சமூகத்தில் நிலவும் உற்பத்தி முறையில் தொழிலாளிகள் என்ன பாத்திரம் வகிக்கிறார்கள் என்பது தான் தொழிலாளிகளின் வாழ்நிலையை நிர்ணயிக்கிறது. இதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

இப்பொழுது வாசகர்கள் விவாதிப்பதற்கு ஒரு செய்தி: முதல் தொழிற்புரட்சியில் நீராவி இயந்திரம் மற்றும் மின்சாரம், இரண்டாவது தொழிற்புரட்சியில் கன்வேயர் பெல்ட் மூன்றாவது தொழிற்புரட்சியில் கணிணிமயமாக்கம் நான்காவது தொழிற்புரட்சியில் தானியங்குதல் (Automation-ரோபோக்கள் மயமாவது) என்று தொழில்நுட்ப சகாப்தத்தை வரையறுக்கிறார்கள். ஆனால் தற்பொழுது உலகில் வெறும் 62 பேரிடம் இருக்கும் சொத்து, உலகில் 360 கோடி பேர் வைத்திருக்கும் சொத்திற்கு சமம் என்கிறது ஆக்ஸ்பம் வெளியிட்ட அறிக்கை. முதலாளித்துவம் கார், செல்போன் வீடியோகேம் வழங்கியது என்று வாதிட்டவர்கள் 66க்குள் இருக்கிறார்களா? 400 கோடிக்குள் இருக்கிறார்களா?

– இளங்கோ

செய்தி ஆதாரம்.

Death by overwork on rise among Japan’s vulnerable workers