privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்காலில் சூடு போட்ட ஆசிரியைக்கு எதிராக மக்கள் போராட்டம்

காலில் சூடு போட்ட ஆசிரியைக்கு எதிராக மக்கள் போராட்டம்

-

ளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க நிலை பள்ளி உள்ளது.  இப்பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை வைஜெயந்தி மாலா இருவர் மட்டுமே ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கின்றனர். 55 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.

teacher-education-department
கல்வித் துறை அதிகாரியால் விசாரிக்கப்படும் ஆசிரியை – படம் : நன்றி thehindu.com

இந்த புதிய கல்வியாண்டில் பள்ளி தொடங்கி 10 நாட்களிலேயே மாணவர்கள் படிக்கவில்லை என்று காரணம் காட்டி காலில் கற்பூரம் சூடம் ஏற்றி கொடுமைப்படுத்தியுள்ளார். இந்தக் கொடூர செயலுக்கு இவர்கள் சொல்லும் காரணமும் நம்பத்தக்கதாக இல்லை. இந்த ஆசிரியை தொடந்து இது போல் காட்டுமிராண்டித்தனமாக (வெயிலில் முட்டி போட வைப்பது, பெரம்பால் அடித்து விளாசுவது) மாணவர்களிடம் நடந்து வந்துள்ளார்.

இதை கண்டிக்க வேண்டிய தலைமையாசிரியர் தினமும் பள்ளிக்கு குடித்துவிட்டு வந்து தூங்கிவிடுவார் என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆசிரியை உள்ளூராக இருப்பதால் எதாவது புகார் அளித்தால் ஊருக்கு பிரச்சினையாகிவிடும் என்று மக்கள் தவிர்த்து வந்தனர்.

ஆனால், இந்த சம்பவத்திற்கு பிறகு மறுநாள் காலை பள்ளிக்கு முன் ஆசிரியையின் அராஜகப் போக்குக்கு முடிவுகட்ட வேண்டுமென பெற்றோர்கள் ஒன்று திரண்டனர். மக்கள் ஒன்று திரண்ட போதும் ஆசிரியை திமிர்த்தனமாகவே பேசியுள்ளார். கொஞ்ச நேரம் கத்திவிட்டு கலைந்து விடுவார்கள் என்று ஆசிரியை, தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியையின் கணவர் பள்ளியினுள்ளேயே காத்திருந்துள்ளனர்.

இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காணவோ, மக்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கவோ எந்த கட்சி பிரதிநிதியும் முன்வரவில்லை. அப்பகுதி நண்பர்கள் மூலம் தகவல் அறிந்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு சென்றனர். அந்த கொடூரம் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டு மக்களிடம் இந்த ஆசிரியையை பணி நீக்கம் செய்து கைது செய்யும் வரை தொடர்ந்து போராட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர். மக்களும் வெகு நேரம் கலையாமல் பள்ளி முன்பாக சூழ்ந்து நின்றனர்.

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த ஆசிரியை மக்களிடம் மன்னிப்பு கேட்டார். இனி இப்படி நடந்து கொள்ளமாட்டேன் என கூறினார். மக்கள் அதை ஏற்கவில்லை. போலிசாரும் கல்வி துறை அதிகாரிகளும் வந்து மக்களை சமாதானப்படுத்த முயன்றனர். மக்கள் விடாப்பிடியாக இருந்ததால் வேறு வழியின்றி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களிடம் புகார் மனு பெற்று கைது செய்தனர். அப்பள்ளி தலைமையாசிரியரையும் ஆசிரியையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்

மாணவர்களுக்கு பாடம் நடத்துவது மட்டுமல்லாமல் அவர்களை பாதுகாக்க வேண்டிய கடமையுள்ள ஆசிரியை அதற்கு எதிராய் நடந்து கொள்கிறார். இத்தகைய ஆசிரியர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தலைமையாசிரியர் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் அவர்களை பாதுகாக்கவே முயல்கின்றனர்.

கட்டணக்கொள்ளையால் பாதிக்கப்பட்டு அவமானப்படும் தனியார் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயல்வது, பள்ளி பேருந்து ஒட்டையில் இருந்து விழுந்து சிறுமி உயிரழப்பது, கற்பூரம் ஏற்றி சூடு வைக்கும் கொடூரம் எனத் தொடரும் நிகழ்வுகள் மாணவர்களுக்கு கல்வி கொடுத்து நாட்டின் மனித வளத்தை மேம்படுத்தி பாதுகாக்க வேண்டிய கல்வி துறை எனும் அரசு உறுப்பு செயலிழந்து போயுள்ளதையே காட்டுகிறது.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விருத்தாசலம்