privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாகிடாயின் கருணை மனுவும் - மனுவின் கொலை வெறியும் !

கிடாயின் கருணை மனுவும் – மனுவின் கொலை வெறியும் !

-

மக்களுக்கு ஆன்மீக அறிவு எங்கிருந்து வருகிறது?

துர்கா, ஆடிவெள்ளி, சிவராத்திரி, ராஜகாளி அம்மன், பாளையத்து அம்மன், மாயா என்று திரைப்படங்கள் மூலமாக மக்களை காவிக்கும்பலின் சேட்டைகளுக்கு பழக்கப்படுத்த உதவியவர் இயக்குநர் இராமநாராயணன்.

இராமநாராயணனின் கிராபிக்ஸ் வித்தைகள் மட்டுமன்றி ராமசாமி யானை, நாகேஸ்வரி பாம்பு, ராமு குரங்கு என பலதரப்பட்ட ஜீவ ராசிகள் பிள்ளையார், அனுமனின் அப்ரசண்டிகளாக திலகரின் ராம ராஜ்யத்தை திரையில் வேசம் போட்டு வெளுத்துக் கட்டின!

ramanarayanan
கிராபிக்ஸ் வித்தைகள் இராமநாராயணன்

இது போன்ற குரளி வித்தைகள் தான் சூத்திர பஞ்சம மக்களை ஆட்கொள்ளும் இறுதியான ஆன்மீக எல்லையாக இருக்கிறது. மற்றபடி ஆரியச் சிசு ஆதிசங்கரனின் தன்னையே மறுக்கும் அத்வைதம் என்றோ, உபநிசங்களின் தெய்வாதீனம் என்றோ வேத பாரம்பரிய வியாபாரம் மக்களிடம் போணி ஆகாது என்பதை பார்ப்பனக் கும்பல் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது.

சான்றாக, ஆறுமுறை தரிசனங்கள், வெண்முரசு, என்று ஜெயமோகன் போன்றவர்கள் அலுப்பில்லாமல் பார்ப்பன இந்துத்துவத்திற்கு வேலை செய்தாலும் ஓய்வு நேரத்தில் ஜாக்கி ஜட்டி குறித்து சிந்திக்காமல் இருக்க முடிவதில்லை. இப்படிப்பட்டவர்களை வைத்து மக்களை ஆன்மீகமயமாக்குவது ரொம்பவும் சிரமம்!

காவிக்கும்பலுக்கு எஞ்சியிருக்கும் எளிமையான வழி திரைப்படங்கள் மற்றும் காட்சி ஊடகங்கள் மட்டுமே! எனினும் காட்சி ஊடகங்களில் சற்று பிசகினாலும் காரியம் கெட்டுவிடும். குறிப்பாக ரஜினியின் பாபா திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் ஆன்மிக அனுபவமாக தயாரிக்கப்பட்டது. ரஜினி, படம் முழுக்க அபய ஹஸ்த முத்திரையைக் காட்டிக்கொண்டு வருவதைக் காணச் சகியாமல் பல ரஜினி ரசிகர்கள் ‘தற்கொலை’ செய்து கொண்டது தமிழகத்து வரலாறு. இத்துணைக்கும் நடிகை மனீஷா கொய்ராலாவை வைத்து “பாபா ஒரு கிஸ்ஸு தா! அது நூறு கிஸ்ஸு ஆகுதான்னு பாப்போம்” என்று ஆன்மீக சரக்குகளுக்கு இடையில் பலான சரக்குகளை வைத்தும் ஆன்மீகப் பித்து மக்களை ஆட்கொணரவில்லை. மதுரை ஆதீனமே அ.தி.மு.க அடிமைகள் போட்ட குத்துப் பாட்டிற்கு மட்டும் தான் ஆடினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

திரைப்படங்களின் மூலம் பார்ப்பன பாசிசம்

rajini-baba
“பாபா ஒரு கிஸ்ஸு தா! அது நூறு கிஸ்ஸு ஆகுதான்னு பாப்போம்”

பாளையத்தம்மா நீ பாச விளக்கு; உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு என்று இராமநாராயணனின் ஆன்மீக போதையை எடுத்துவிட்டால் பக்தகோடிகளுக்கு ஏற்படும் பல்ஸைப் பார்த்து காவிக் கும்பல் எதைவிடவும் பரவசமடைகிறது!

இன்றைய தமிழகத்து டிரெண்டில் இத்தகைய பாடல்களை வைத்துக்கொண்டுதான் ஆர்.எஸ்.எஸ் கும்பல்

  • திருவிழாக்களை கைப்பற்றுவது,
  • தெருவுக்கு தெரு குத்து விளக்கு பூஜை நடத்துவது,
  • குஷ்பூ நடித்த ‘தாலிவரம் கேட்டு வந்தேன் தாயம்மா; கண் திறந்து பாரம்மா’ எனும் பாடலை வைத்துக்கொண்டு சுமங்கலி பூஜை நடத்துவது

என்று பார்ப்பனியத்திற்கு திரைவடிவத்தையே பிரதானமாக பயன்படுத்துகிறது.

பங்குனி மாதத்தில் மாரியம்மனின் கோயிலில் எல். ஆர். ஈஸ்வரியின் “செல்லாத்தா எங்கள் மாரியத்தா” எனும் ஆல்பத்தை ஓடவிட்ட காலம்போய் புதுப்புது வடிவங்களில் பார்ப்பன பாசிசம் தமிழகத்தில் புகுத்தப்படுகின்றது.

விஷ்வ ஹிந்து பரிஷத் என்று தமிழ்நாட்டில் பெயர் வைத்தால் மார்வாடி பனியா கும்பல் என்று மக்கள் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை அண்டவிட மறுப்பதால், இந்து முன்னணி என்று தமிழில் பெயர்மாற்றிக் கொண்டு பந்தி பாக்கியில்லாமல் ஆஜராகிவிடுகின்றது காவிக் கூட்டம்.

தமிழ்நாட்டிற்கு சாய்பாபா எப்படி வந்தார்?

sai-baba
சாய்பாபாவை முதலில் உள்ளிழுத்துக்கொண்டது மாம்பலத்து அக்ஹரஹாரம் தான்

குறிப்பாக இராம நாராயணனின் மாயா திரைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நக்மா, நெப்போலியன், எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடி நடித்து சாய்பாபாவின் அற்புதங்களை பிரச்சாரம் செய்யும் படமாக தமிழ்நாட்டில் வெளிவந்தது. ‘பாபா ஓர் கருணாலாயம்; உன் பாதங்கள் கமலாலயம்’ என்று பாடல் பட்டி தொட்டி வரை கொண்டு செல்லப்பட்டது. அப்படியிருந்தும் சாய்பாபா செல்ப் எடுக்காமல் தான் இருந்தார். ஆனால் சாய்பாபாவை முதலில் உள்ளிழுத்துக்கொண்டது மாம்பலத்து அக்ஹரஹாரம் தான்.

சென்னையிலிருந்து சீரடி சாய்பாபாவிற்கு ரெயில் விட்டபோது மாம்பலத்து மாமிகளும் அம்பிகளும் வரிசைகட்டி புளியோதரை கட்டிக்கொண்டு முன்வரிசையில் சென்றனர். இதுதவிர கர்நாடகா ஆந்திராவிற்கு டேப் ரிக்கார்டர், பர்னிச்சர் விற்பனை எனும் பெயரில் கந்துவட்டிக்கும் விடும் தமிழகத்து ஆதிக்க சாதிகள் கணிசமானோர் சாய்பாபா அற்புதத்தில் திளைத்தனர். செவ்வாய், வெள்ளி போதாதென்று வியாழக்கிழமையை பாபாவிற்கு ஒதுக்கி கருவாடு கவுச்சியை ஒதுக்கி தள்ளினர்.

இன்றைக்கு தமிழகத்தில் பாபா பிசினஸ், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா தொழிலைத் தாண்டி சக்கைபோடு போடுகிறது. பாபாவைக் கும்பிடுவதில் நடுத்தரவர்க்கம் என்றில்லாமல் உழைக்கும் மக்கள் கணிசமாக பலியாக்கப்பட்டிருக்கின்றனர். பார்ப்பனக் கூட்டம் நடராசனை 3000 தீட்சதர்களில் ஒருவன் என்று கதைத்தது போல் சாய்பாபா எனும் 420 ஆசாமிக்கு பூணுல் போட்டு கும்பாபிசேகம் நடத்துவது, தீர்த்த கலசங்களுக்கு யாகம் நடத்துவது, தேரோட்டம் நடத்துவது என அடுத்த கலவரத்திற்கு நாள் தேடிக்கொண்டிருக்கிறது.

உழைக்கும் மக்களின் செல்போனிலோ எஸ்.பி பாலசுப்ரமண்யத்தின் பாபா ஓர் கருணாலயம் திரைப்படப் பாடல் ரிங்டோனாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற திரைப்பாடல்கள் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ் கும்பலால் வாரத்தின் வியாழக்கிழைமையை கைப்பற்றி இருக்க முடியாது!

திரைப்படங்களின் தற்போதைய டிரெண்டு: ஒரு கிடாயின் கருணை மனு (2016) சொல்லப்போவது என்ன?

kidayin-karunai-manu
ஒரு கிடாயின் கருணை மனு (2016) சொல்லப்போவது என்ன?

தற்பொழுது தமிழகத்தில் நிலவிவரும் நூதன டிரெண்டு என்ன?உழைக்கும் மக்களின் அசைவ உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றுவதற்கும் சிறுதெய்வ வழிபாட்டை சமஸ்கிருத பார்ப்பனமயமாக்குவதற்கும் யதார்த்த பாணியில் பல திரைப்படங்கள் எடுப்பதுதான்.

அது என்ன யதார்த்த பாணி?இயக்குநராக அறிமுகமாகவிருக்கும் சுரேஸ் சங்கய்யா ‘ஒரு கிடாயின் கருணை மனு’ எனும் படத்தை ஈராஸ் கார்ப்பரேட் தயாரிப்பு கம்பெனியின் முதலீட்டில் இயக்கியிருக்கிறார். படம் ரீலிசாகவில்லை. புரோமோசனுக்காக தமிழ் தி-இந்து பத்திரிக்கை சுரேஸ் சங்கையாவின் நேர்காணலை வெளியிட்டிருக்கிறது.

இதில் பேட்டியாளர், ‘ஆட்டுக்கிடாயை மையமாகக் கொண்ட கதை வித்தியாசமாக இருக்கிறதே’ என்று முதல் கேள்வியைக் கேட்கும் பொழுது, இயக்குநர்  இப்படத்தின் கதை, தனது இலட்சியம் என்கிறார்.

“நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். கிராமத்து வாழ்வில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயயான பிணைப்பு உணர்வுபூர்வமானது. தங்கள் குழந்தைகளுக்கு எப்படிப் பெயர் வைத்து வளர்த்து அவர்களைப் பாராட்டிச் சீராட்டுகிறார்களோ அப்படித்தான் தங்கள் வீட்டு விலங்குகள் மீதும் அக்கறை காட்டுவார்கள்.

கால்நடைகளும் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும். கண்கள் வழியாகவும் உடல்மொழி அசைவுகள் வழியாகவும் தங்கள் பசியையும் வலியையும் கூறும். இந்தப் பிணைப்பு வாழ்க்கை, வழிபாடு என்று வருகிறேபாது முரணாக மாறிவிடுகிறது. கோயில் திருவிழாக்களில் ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுப்பதும் வழக்கமானதாகவே இருக்கிறது.

உயிருக்கு உயிராக வளர்த்து இப்படி பலி கொடுப்பது கிராம மக்களின் சம்பிரதாயங்களில் முக்கியமானதாக இருப்பதைக் கண்டு சிறு வயது முதலே மனதுக்குள் புழுங்கி வந்தவன் நான். பலி என்பது வழிபாடாகவும் சடங்காகவும் இருப்பதை இனிவரும் தலைமுறைகள் களைந்தெறிய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இக்கதையை எழுதினேன். என்னைப்போன்ற ஒரு புதிய இயக்குநருக்கு ஈராஸ் போன்ற பெரிய தயாரிப்பாளர் கிடைப்பது அரிது.” (மனிதர்களைப் பேச வைக்கும் ஆடு: சுரேஷ் சங்கய்யா நேர்காணல்– தி இந்து தமிழ்-24-06-2016)

இயக்குநரின் மனப்புழுக்கத்தை ஒன்லைனில் சொல்ல வேண்டுமென்றால் ஜெயலலிதாவின் கிடாவெட்டுத் தடைச்சட்டம் தமிழகத்து குல தெய்வ கோயில்களில் மீண்டும் வரவேண்டும். இதற்கு பார்ப்பன அடிமையாக போயஸ் தோட்டத்திற்கு போன் போட்டுச் சொன்னாலே போதுமானது என்ற எளிமையை, கலைநயத்தால் வெல்ல வேண்டும் என்று இக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர். இதில் இயக்குநரின் யதார்த்த பாணி பிரச்சாரம்தான் கவனிக்கதக்கது. உயிருக்கு உயிராக வளர்த்த கிடாயை, வழிபாடு என்பதன் பெயரில் எப்படி பலிகொடுக்கலாம் என்கிறார்.

குல தெய்வ வழிபாடு, அசைவத்திற்கு எதிரான பல்வேறு பிரச்சார உத்திகள்

இயக்குநர் சுரேஷ் சங்கய்யா மட்டுமல்ல. இதுவரை, சிறு தெய்வ வழிபாட்டில் ஆடு கோழி பலியிட்டு அசைவ உணவு உண்ணும் பழக்கத்தை பல்வேறு நூதனமான வழிகளில் கரித்துக் கொட்டி தனது மேலாண்மையை நிறுவத் துடித்திருக்கிறது பார்ப்பனக் கும்பல். அவற்றின் உத்திகள் இவ்வாறு இருந்தன.

1. அசைவ உணவு காமவெறியைக் கிளப்பும். அதை உண்பவர்கள் அரக்க குணம் கொண்ட இழிவானவர்கள் என்று திணமணி வைத்தி அடித்து சத்தியம் செய்து தலையங்கம் எழுதுவார். காஞ்சி சங்கராச்சாரி, தேவநாதன், நித்யானந்தாவின் சைவ லீலைகள் அதிகரித்துக் கொண்டு போவது ஒரு பக்கம். இதை மறைத்து கருவாடு நாறுகிறது என்று மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு புகார் படிப்பது இன்னொரு பக்கம் என்று இந்தப் பிரச்சாரம் போய்க்கொண்டிருக்கிறது.

2. வள்ளலாரைப்போன்று ஜீவகாருண்யம் பேசுவது இரண்டாவது உத்தி. ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் வள்ளலார் அன்பை வெஜிடபிள்ஸுகளுக்கும் சேர்த்து போதிக்கிறார். வள்ளலாரைப் போன்று வாடிய பயிரை கண்டபோதல்லாம் வாடினேன் என்று மேற்கு வங்கப் பார்ப்பனர்கள் மட்டுமல்ல எந்த சாம்பார் வடையும் சொல்வதில்லை. தங்கள் மேலாண்மையை நிரூபிக்க மீனை, தண்ணீர் பூக்கள், கடல் பூக்கள் என்று சொல்கிறார்கள். பூக்களை சூத்திரன் நுகர்ந்தாலே தீட்டு என்று பதைக்கிற இந்து பார்ப்பனியம் பார்ப்பனர்களை மட்டும் மீன் மாமிசத்தை பூக்கள் என்று புசிப்பதற்கு வழிவகை செய்கிறது. மாமிசங்களுக்காக விலங்குகளைக் கொல்கிறார்களே, அய்யோ பாவம் என்று கதறுபவர்கள் இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 25, பார்ப்பனர்களுக்கு மட்டும் மாமிசம் புசிக்க விலங்குகளைக் கொல்லும் உரிமையை எக்ஸ்குளூசிவாக கொடுத்திருக்கிறது என்பதை பார்க்க மறுக்கிறார்கள்.

இதைத்தாண்டித்தான் இயக்குநர் சுரேஸ் சங்கைய்யாவின் மூன்றாவது பாணியிலான பிரச்சாரம் வருகிறது. மனிதனுக்கும்-விலங்குகளுக்கும் உள்ள பிணைப்பு, பந்தம், பாசம் என்று இன்னும் வலுவான கண்ணியைப் பின்னியிருக்கிறார். அவ்வளவு லேசாக இதை அறுக்க முடியாது என்பதால் “ஒரு கிடாயின் கருணை மனு” திரைப்படம் முழு நீள நகைச்சுவை படமாக வெளிவர இருக்கிறது. கண்டிப்பாக பார்வையாளர்கள் வயிறு குலுங்கச் சிரிக்கப் போவது உறுதி என்று சொல்லியிருக்கிறார்.

2014-ல் சைவம் திரைப்படம் எதை பிரச்சாரம் செய்தது?

saivamயக்குநர் சுரேஸ் சங்கைய்யாவிற்கு இருந்த அதே இலட்சியத்தைத்தான் 2014-ல் வெளிவந்த சைவம் படமும் பேசியது. இயக்குநர் ஏ.எல்.விஜய் குழந்தை சாராவையும் பலியிடப்போகும் சேவலையும் வைத்து சிறு தெய்வ வழிபாட்டில் பார்ப்பனியத்தை திணிக்கும் வேலையைச் செய்தார். இந்தப் படத்தில் குழந்தை ஒரு வெடிகுண்டு போல பயன்படுத்தப்பட்டிருக்கும்.

குழந்தை சாரா, பலியிடப்போகும் சேவல் மீது வைக்கிற பாசம் ஒரு பக்கம் இருக்கும். மறுபக்கத்தில் உறவினர்கள் எல்லாம் குழந்தை சாராவை முன்னிட்டு ஒன்று சேரும் காட்சி வைக்கப்பட்டிருக்கும். இறுதியில் சாராவுடன் சேர்ந்து ஒட்டுமொத்த குடும்பமும் சேவலை வெட்டும் காட்சியை மிரட்சியுடன் பார்ப்பதாகவும் படம் இருக்கும். இதன் கிளைமாக்ஸை பார்க்காதவர்கள் இங்கு பார்த்துவிடுங்கள்.

சைவம் படத்திற்கு திரை விமர்சனம் எழுதிய தி இந்து விமர்சனக் குழு, விமர்சனத்தின் முடிவுரையில் “அசைவத்துக்கு எதிரான படம், சைவத்தை ஆதரிக்கும் படம் என்ற முன் அனுமானங்கள் தேவையற்றவை. இது குடும்ப உறவுகளை, உணர்வுகளை வலியுறுத்தும் படம்” என்று திறனாய்வின் பேரில் வாசகர்களை மிரட்டியது.

ஆனால் இதே விமர்சனக் கட்டுரையின் உள்ளே இந்து விமர்சனக் குழு “சேவலைத் தேடும் போது ஏற்படும் பரபரப்பு சேவலை பலிகொடுக்கப் பூசாரி கத்தியை ஓங்கும்போது ஏற்படவில்லை” என்று எழுதியது. அதாவது சேவலை பலிகொடுக்கிற காட்சியில் அழுத்தமாக பரபரப்பாக நடிக்காமல் ‘சொதப்பிட்டியே ரங்கா’ என்று மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு எரிச்சல் படுகிறது.

சைவம் படத்தில் குழந்தை-விலங்கு எனும் பிணைப்பை இன்னும் சற்று விரிவாக்கி, விலங்கின் துன்பம் என்ற கோணத்தை தன் பேட்டியில் விளக்குகிறார் இயக்குநர் சங்கய்யா. அருப்புக்கோட்டையைச் சுற்றிய கரிசல் மண் இப்படத்திற்கான களம் என்று அறிவிக்கின்றனர் இப்படத்தின் குழுவினர்.

கரிசல் மண் பூமியில் வாழ்ந்த ஒரு கிராமத்து இளைஞன் ஆட்டுக்கிடாயுடன், தான் கொண்டிருக்கும் பாசம் காரணமாக குல தெய்வ வழிபாட்டில் கிடா வெட்டப்படுவதை தடுக்க முயற்சிக்கிறான் எனும் நோக்கம் எந்தளவிற்கு நேர்மையானது? இதில் அம்பலப்படுத்த வேண்டிய பொய் எது? என்பதைப் பார்ப்போம்.

ஆர்.எஸ்.எஸ் கும்பலும் உழைக்கும் மக்களும் மாட்டை எப்படி பார்க்கின்றனர்? -போட்டோ ஆதாரம்

Cows-Dying-Rajasthan-BJP-Stateர்.எஸ்.எஸ் கும்பலுக்கு மாட்டுக்கறி அரசியல் என்பது இந்துக்களை இசுலாமியர்களுக்கு எதிராக நிறுத்தவும் மாட்டுக்கறி உண்ணும் சூத்திர தாழ்த்தப்பட்டவர்களை கொலை செய்து பார்ப்பனியத்தைத் தூய்மைப்படுத்தவும் துருப்புச் சீட்டாக பயன்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதன் முதலாக ராஜஸ்தானில் பசு நல வாரியம் என்று தனியாக அமைச்சகம் மூலம் கோச்சார்-துங்கபத்ரா ஆற்றுப்படுகையில் பசு பாதுகாப்பு மையத்தை அமைத்தது பிஜேபி பார்ப்பன பரிவாரங்கள். கோமாதா புனிதமானது என்று விவசாயிகளை பால்மடி வற்றிய மாடுகளை விற்கவிடாமல் பிடுங்கிக் கொண்டுபோய் கோசாலையில் சேர்த்தார்கள்.  ஆனால் இங்கு பசுக்களுக்கு அன்ன ஆகாரம் தண்ணீர் ஏதும் கொடுக்காமல் நாளொன்றுக்கு ஐந்து முதல் பத்து பசுக்களைக் கொன்றிருக்கிறது பி.ஜே.பி. இதற்கு ஆதாரமாக தி இந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த புகைப்படத்தை வாசகர்கள் முன் வைக்கிறோம். வாயில் நுரைதள்ளி செத்துக்கிடக்கும் இந்த கோமாதாக்கள், ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பலின் மாட்டு அரசியல், பார்ப்பன மேலாண்மைக்கானதேயன்றி பசுக்களின் நலனுக்கானதல்ல என்பதை நிரூபிக்கிறது.

நன்றி: தி இந்து ஆங்கில நாளேடு. (Cows dying in Rajasthan despite special Ministry to protect them)

மாறாக இந்நாட்டின் உழைக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது சிறு உற்பத்திக்கு பயன்படும் கால்நடைகளை இயக்குநர் சொல்வது போல தங்கள் பிள்ளை போல பார்த்துக்கொள்கின்றனர். சாம்பிராணி புகை போடுகின்றனர். பால் மடி வற்றி, உழவுக்கு ஆகாது எனும் பொழுது மேற்கொண்டு மாட்டைப் பராமரிக்க முடியாத விவசாயிகள் மாடுகளை விற்கின்றனர், அவை கறிக் கடைக்குத்தான் போகிறது என்றாலும். ஏனெனில் இதுதான் இயற்கையான பொருளாதார சங்கிலியாகவும் புது கால்நடைகளை அபிவிருத்தி செய்வதற்கான வழியாகவும் இருக்கிறது. இந்த சுழற்சியை கோமாதா அரசியல் பேசி நிறுத்தினால் விவசாயியும் கால்நடையும் என இருவருமே செத்துப்போகிறார்கள்.

ஜல்லிக் கட்டு குரூப்பின் விலங்குகளின் மீதான பாசம்

ஜல்லிக்கட்டு மற்றும் ரேஸுக்காக காளைகளை வளர்க்கும் ஆண்டைகள் இருக்கிறார்கள். இவர்களும் காளைகளை தங்கள் பிள்ளைகள் என்றே சொல்லிக்கொள்கின்றனர். தமிழர்களின் வீர விளையாட்டு என்றும் பொத்தாம் பொதுவாக அடிக்கின்றனர். இவர்களின் பந்தம் எப்படிப்பட்டது என்பதற்கு கரிசல் கதை எழுத்தாளர் அ.முத்தானந்தத்தின் ‘மாடுகள்’ எனும் கதையை எடுத்துக்கொள்வோம்.

அ.முத்தானந்தத்தின் ‘மாடுகள்’ கதை சொல்லும் சேதி

‘மாடுகள்’ கதையில் விவசாயக் குடிகளாக ஆதிக்க சாதிகளான பிள்ளைகளும் கோனாரும் வருகின்றனர். பொன்னுசாமி பிள்ளையின் அப்பா, சொத்துக்களை இழந்து தேசாந்திரம் போய்விடுகிறார். பொன்னுசாமியும் அவரது மனைவி மற்றும் இரு பெண்குழந்தைகளும் வயிற்றுப்பாட்டிற்கே அல்லல்பட்டு உழைக்கின்றனர். இவர்களுக்கு உள்ள ஒரு ஆசை, நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து மாடு பூட்டி உழவு செய்து வெள்ளாமை பார்க்க வேண்டும் என்பது. வீட்டில் இதற்காகவே உழுகருவிகளையும் மாட்டைப் பராமரிக்க தேவைப்படும் பல பொருள்களையும் யாருக்கும் விற்காமல் வைத்திருக்கின்றனர். இரண்டு தொத்த மாடாவது வாங்கலாம் என்ற யோசனையில் பொன்னுசாமி ஒரு காலத்தில் தன் தகப்பனார் கைகொடுத்து தூக்கி விட்ட கீதாரி கோனார் வீட்டிற்கு போகிறார். கோனார் பொன்னுசாமியின் வறுமையைப் பார்த்தும் தனக்கு உதவி செய்தவர்களுக்கு உதவும் பொருட்டும் தன் வீட்டில் உள்ள இரு மயிலைக் காளைகளை பொன்னுசாமியிடம் கொடுத்துவிடுகிறார்.

கோனாரின் இரு பிள்ளைகளோ ரேஸ் விளையாட்டில் களித்திருக்கும் லும்பன்கள். எந்த ஊரில் நல்ல காளை இருந்தாலும் எந்த குடியானவனின் வயிற்றில் அடித்தாவது காளைகளை வாங்கி ரேசில் பூட்டி விளையாடுவதே கோனாரின் பிள்ளைகளுக்கு வேலை. ரேசுக்குப் போன காளைகளின் உடம்பெல்லாம் ரத்தமும் வார் வாராய் இழுப்பும் இருப்பதை பார்த்து பொன்னுசாமி மிகவும் வேதனைப்படுவார். பெத்தனாட்சி அம்மன் ரேசுக்கு மாடுகளை விடச்சொன்னாளாக்கும் என்று மனதிற்குள் கடிந்து கொள்கிறார் (இயக்குநர் சங்கய்யா விவசாயியின் இந்த உணர்ச்சியைத்தான் பலியிடலுக்கு எதிரான தன் பிரச்சாரத்திற்கும் கூர்மையாக பயன்படுத்துகின்றார்). தொத்தலாக இருக்கும் காளைகளை வீட்டிற்கு வாங்கி வரும் பொன்னுசாமியும் பொன்னுசாமியின் குடும்பமும் அக்காளைகளை ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் கண்ணும் கருத்துமாக பார்த்து பார்த்து வளர்க்கின்றனர். தாங்கள் குடிக்கும் கஞ்சியில் பாதியை மட்டும் குடித்துவிட்டு கும்பாவோடு மாட்டுக்கு கொடுத்து மகிழ்கின்றனர். பொன்னுசாமியின் மனைவி பக்கத்து வீட்டுக்காரரின் கிண்டலுக்கு பயந்து மாடுகளை யாருக்கும் தெரியாத வண்ணம் சுடுதண்ணீர் ஊற்றி குளிப்பாட்டி விடுகிறாள்.

அந்த வருட மழையில் பொன்னுசாமி குத்தகைக்கு எடுத்த கரிசல் காட்டு புஞ்சைகளில் விளைச்சல் பச்சையாக நிற்கிறது. மாடுகளும் வளர்ந்து ஊரே பொறாமைப்படும் அளவுக்கு கம்பீரமாக நிற்கிறது. இங்கு கோனாரின் பிள்ளைகளுக்கு பொன்னுசாமி வளர்க்கும் மாடுகள் மீது ஒரு கண் வந்துவிடுகிறது. பொன்னுசாமியிடம் மாட்டை வாங்கி ரேசுக்கு விட வேண்டும் என்ற வெறியில் பொன்னுசாமியிடம் தாங்கள் கொடுத்த மாடுகளை பத்திக்கொண்டு போவதற்காக மாட்டுப்பொங்கல் நாளில் வருகின்றனர். முன்னூறு ரூபாயை விட்டெறிந்து மாட்டைப் பராமரித்த கூலியாக வைத்துக்கொள்ளட்டும் என்று மைனர் குஞ்சுகள் பொன்னுசாமியிடம் கூறுகின்றனர். பொன்னுசாமியின் குடும்பம் பணத்தை வாங்காமல் மாட்டை கோனாரின் மகன்களிடம் கொடுத்துவிட்டு தெரு முக்கு திரும்பியவுடன் வீட்டிற்குள் கதவைச் சாத்திக்கொண்டு ஆளுக்கொரு மூலையில் குப்புறப்படுத்து கேவி கேவி அழுகின்றனர். இத்துடன் அக்கதை முடிகிறது.

முத்தானந்தின் கதையில் வரும் உற்பத்தியிலும் உழைப்பிலும் ஈடுபடாத சொத்துள்ள இந்த ஆண்டைகள் தான் தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக எந்த விவசாயிடமும் இருந்தும் மாடுகளைப் பறித்துக்கொண்டு போகிறவர்களாக நிதர்சனத்தில் இருக்கின்றனர். பெண்ணைப் பார்த்தால் வன்புணர்வு செய்ய வேண்டும். மாடுகளைப் பார்த்தால் ஓட்டிக்கொண்டு போக வேண்டும் என்ற பண்ணையார்தனம் தான் தமிழ்நாட்டு வீரவிளையாட்டுக்கு மூலதனம். மாடுகள் ஜெயித்தால் மீசையை முறுக்கிவிட்டு சாதிப்பெருமை பேசுகிற கும்பலின் கள நிலைமை இது.

இப்படி விலங்குளுக்கும்-மனிதர்களுக்கும் உள்ள பிணைப்பை ஜல்லிக்கட்டு ரேசிற்காக மாட்டைப் பறிகொடுத்து நிற்கும் எத்துணையோ விவசாயிகளின் பாசப்பிணைப்பை பற்றியும் இயக்குநர் வாய்திறக்கவில்லை. அப்படி படம் எடுத்தால் ஈராஸ் நிறுவனத்திற்கு கல்லா பெட்டி ரொம்பாது என்பது இயக்குநர் சங்கய்யாவிற்கும் தெரியும்! இதையெல்லாம் தாண்டித்தான் பலியிடலை தன் கதைக்கான கருவாக எடுத்துக் கொள்கிறார். மேலும் சங்கய்யா எடுத்திருக்கும் கதைக்களம் ஆட்டுக் கறி அரசியலைப் பற்றியது.

ஆட்டிறைச்சி தொழிலை அலைக்கழிக்கும் பார்ப்பனியம் எனும் தலைப்பில் வடஇந்தியாவின் பார்ப்பனக் கொடுங்கோன்மையை சென்ற வருடம் வினவில் வெளிக்கொண்டு வந்திருக்கிறோம். வட இந்தியாவில் பெரும்பாலான ஆடு வளர்ப்பவர்கள் ஆட்டிறைச்சி உண்பதிலிருந்து பார்ப்பனிய மேலாண்மை காரணமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் இந்த நிலைமை உருவாக்குவதற்கு குல தெய்வ வழிபாடு பார்ப்பனமயமாக்கப்பட வேண்டும் என்ற முன்நிபந்தனையை படம் தன் கருவாகவே கொண்டிருக்கிறது.

எனவே சங்கய்யா முன்வைக்கும் விலங்குகளின் மீதான பாசத்தை விளக்குவதற்கு நிறைய ஸ்கோப் இருப்பது என்பது பலியிடலை எதிர்ப்பதற்கு பயன்படுத்தும் கருவிதானே ஒழிய வேறெதுவும் இல்லை.

ஆட்டுக்கிடாய் பலி: கிராமங்களின் நிலைமை எத்தகையது?

கிடாயைக் பலிகொடுப்பது கிராமங்களில் அசைவம் உண்ணும் நடைமுறையின் வழக்கம் தான். கிராமங்களில் கூறுக்கறி என்று கூறுவார்கள். ஊரில் உள்ள சலவைத்தொழிலாளிகளுக்கு ஆட்டுத் தலை கொடுப்பதை பொறுக்காத ஆதிக்க சாதிகள் அவர்களை இழிவுபடுத்தும் வண்ணம் ‘வண்ணான் ஆட்டுத் தலைக்கு பறந்தாப்ல பறக்காதே’ என்று சொலவடையையே புழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். இதுக்கெல்லாம் மனம் புழுங்காத இயக்குநர் ஆடு சாவதற்காக புழுங்குகிறார் என்றால் இதைவிட அயோக்கியத்தனம் ஒன்று இருக்க முடியுமா?

இதுதவிர கிடாய் பலியை கூட்டாக அல்லாமல் ஒருவர் தனிநபராக கொடுக்கிறார் என்றால் அது வசதியுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே சாத்தியம். அங்கும் அது உணவுக்காகத்தான். இதுதவிர கிடாய் வளர்க்கும் குடியானவர்கள், தமிழ்நாட்டின் மிகவும் புகழ்பெற்ற மேலப்பாளையம் ஆட்டுச் சந்தைக்கு விற்பதற்காக கொண்டுவருகின்றனர். மேலும் சினை பிடிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். இதைத்தாண்டி ஊரில் திரியும் செல்லக் கிடாய்கள் ஜமீன்தார் வீட்டு பிள்ளை கணக்காக அழிச்சாட்டியம் செய்வதற்கும் ஆண்ட பரம்பரையின் சாதிப்பெருமை பேசுவதற்குதான் பயன்பட்டு வருகிறது.

அப்படியானால் ஆடோ, மாடோ, கோழியோ செல்லப்பிராணியாக இருக்கும் பட்சத்தில் மட்டும் பலியிடாதீர்கள் என்று படம் எடுத்தால் திரிஷாவின் அனிமல் வெல்ஃபேர் ரசிகர்கள் மட்டுமே படம் பார்ப்பார்கள். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. போயஸ் தோட்டத்து ஜெயா சசிகலா கும்பல் வளர்க்கும் செல்ல நாய்களுக்கு நாளொன்றுக்கு பதினைந்து கிலோ கறி போடுகிறார்களாம். இந்த நாய்களுக்கு போடும் கறியும் ஏதோ ஒரு செல்லக் கோழியாக, செல்லச் சேவலாக, செல்ல ஆடாக இருந்து, பலியிடுதலைப் போன்று வேண்டாம் என்று பிரச்சாரம் செய்வதற்கு தமிழ்நாட்டில் எந்த கலைப்புலிக்காவது தைரியம் இருக்கிறதா?

சிரிப்பதா? சிந்திப்பதா?

ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் இயக்குநர் சங்கய்யா முன்வைக்கும் பிரச்சனை ஆடோ மாடோ, கோழியோ பற்றியது அல்ல. பார்ப்பனியத்தை நிறுவத் துடிக்கும் சூத்திர உழைக்கும் மக்களின் பண்பாட்டில் தொடுக்கப்படும் பகிரங்கமான போர் தான் ஒரு கிடாயின் கருணை மனு. கிடா வெட்டுத் தடைச் சட்டத்தை காமெடியாக சொல்ல முடியும் என்று இலட்சியத்தோடு வந்திருக்கிறார். சிரிப்பதா? சிந்திப்பதா? என்பது இப்பொழுது உழைக்கும் மக்களின் தன்மானப் பிரச்சனையாக மாறியிருக்கிறது. மனுதர்மத்தின் ஆட்சியில் மக்களை பிரித்து வதைத்த மண்ணில் கிடாயின் கருணை மனு – வேண்டுகோளல்ல, விஷம்!

-இளங்கோ