privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகதைவெறும் கஞ்சி குடிக்கிறவர் அரசாங்கத்தை நடத்த முடியுமா ?

வெறும் கஞ்சி குடிக்கிறவர் அரசாங்கத்தை நடத்த முடியுமா ?

-

லெனின் வாழ்க்கைச் சம்பவம்: பக்கோமோவ்கா கிராமத்திலிருந்து ஒரு தூதுவர்

மாஸ்கோ அருகே கூட்டுப் பண்ணையில் பெண்கள்
மாஸ்கோ அருகே கூட்டுப் பண்ணையில் பெண்கள்

புரட்சி முடிந்த ரசியா, மப்பும் மந்தாரமுமான அக்டோபர் நாள். அதோ ஒரு விவசாயி. வயதானவர். பழந்துணியால் தைத்த மேல் கோட்டு, இடுப்பில் இறுகக்கட்டிய நைந்துபோன கயிறு. சிறு புதர்போல புருவ மயிர் தொங்க அவரது விழிகள் நிதானமாக, கவனமாகச் சுற்றுமுற்றும் ஆராய்ந்தன. அவரது தோளில் கோணிப்பை.

அவர் மாஸ்கோவுக்கு வந்ததற்கு ஒரு காரணம் உண்டு – புரட்சியின் நாயகன் லெனினைப் பார்க்க வேண்டும். அவரது ஸ்மோல்னி அலுவலகத்தை விசாரித்தபோது சிலர் கேலியாகச் சிரித்தார்கள் துப்பாக்கி ஏந்திய மூன்று தொழிலாளிகள் பொறுப்போடு வழி சொன்னார்கள்.

ஒரு வழியாக ஸ்மோல்னியைக் கண்டுபிடித்து லெனினது செயலாளரையும் பார்த்துப் பேசி, அவர் சந்திக்க வேண்டிய விவசாயத் துறைத் தலைவரது அறைக்கும் அனுப்பப்பட்டார்.

அந்த விவசாயி பக்கோமோவ்கா கிராமத்திலிருந்து வருகிறார். ‘பக்கோமோவ்’ என்ற பெயர்கள் கொண்ட குடும்பங்களே அங்கு அதிகம். அவர் பெயரும் பக்கோமோவ் – எவ்கார் பக்கோமோவ். சோவியத் வெளியிட்டுள்ள ‘நில ஆணை’ பற்றி அவருக்குப் பல சந்தேகங்கள் – அதை யெல்லாம் தெரிந்து கொண்டபிறகு தான் கிராமம் திரும்ப வேண்டும். முக்கியமாக அவர் லெனினைப் பார்க்காமல் ஊர் திரும்பக் கூடாது.

ரபரப்பான சோவியத் தலைமை அலுவலகத்தில் அவர் மட்டும் வித்தியாசமாகத் தெரிந்தார். ஒரு கையில் தொப்பி. மற்றொன்றில் கோணிப்பை. அவரது கோட்டிலிருந்தும், கோணிப் பையிலிருந்தும் வெந்த ரொட்டி மனமும், புகை மணமும் கலந்து வீசியது.

கோதுமை தூற்றும் களத்து மேடுகள், காய்ந்த உருளைச் செடியைப் போட்டுத் தீமூட்டி எரியவிடும் வயற்புறம், இலையுதிர்கால நீலவானில் கத கதப்பான தெக்கத்திச் சூழல் தேடிப் பறந்து செல்லும் நாரைகள் – இது போன்ற சித்திரத்தை உங்கள் மனக்கண் முன்னால் கொண்டுவர அந்தக் கலவையான மணம் போதும். அடக்கமும் மரியாதையும் தோன்ற ஒரு பெண் அவரிடம் வந்து பேசினாள். “விவசாயத்துறைத் துணைக் கமிசார் (கமிசார் என்றால் தலைவர்) அதோ அந்த மேசைக்கு வருவார். அதுவரை இங்கே நாற்காலியில் உட்காருங்க” என்று ஒரமாக அமர வைத்தாள்.

பெரிய கூடம். அதில் பல சோவியத் துறைகள் இயங்கின. ஒவ்வொரு துறைக்கும் ஒரு கமிசார், துணைக் கமிசார். அவர்களுக்குத் தனித்தனி மேசைகள் பக்கோமோவுக்கு அது பிடிக்கவில்லை. அவரவர்களுக்குத் தனி அலுவலகம், பல அறைகள். வேலைக்குப் பல ஆட்கள் இல்லாமல் எல்லாருக்கும் சேர்த்து ஒரே ஒரு பெரிய கூடமா? நிர்வாகம் என்று இதை எப்படி நம்புவது? புரட்சி செய்து அதிகாரம் வைத்திருக்கும்போது நம்பிக்கை ஊட்டும், ஏன் அச்சமூட்டும் விதமாக அடக்கி ஆளுகிற விஷயங்கள் கூட தேவைதானே?

பக்கோமோவ் தொடைமீது தாளம் போட்டவாறு யோசித்தார். “என்னதான் புதுசுன்னாலும் அரசாங்கம், அரசாங்கம் தானே? அதிலும் லெனின் நடமாடக் கூடிய கமிசார்கள் நிறைந்த இடம் இப்படி இருக்கக் கூடாது.”

அவரவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சில பெண்களும் சுறுசுறுப்பாக ஓயாது வேலை செய்தார்கள். தொலைபேசி அவ்வப்போது அலறிக் கொண்டிருந்தது. செய்திகள் வந்தன கட்டளைகள் வெளியே சென்றன.

கொஞ்சநேரத்தில் பெரிய புத்தக அலமாரியைப் பலர் சேர்த்து தூக்கி வந்தார்கள். ஒருவர் அவசரமாக வந்து “புகை பிடிக்காதீர்கள்” என்றாரு பலகையைச் சுவரில் பொருத்திவிட்டுப் போனார்.

அதை ஒருமுறை படித்துத் தலையை அசைத்துக் கொண்ட பக்கோமோவ் கோட்டுப் பையிலிருந்து உறையை எடுத்தார். நிதானமாக சிகரெட் தாள் ஒன்றை எடுத்து நன்றாக நீவிவிட்டு அதில் கொஞ்சம் புகையிலைத் துளை விரவிச் சுருட்டினார்.  சுருட்டிய உருளையின் ஒரு ஓரம் நாவினால் பசைப்படுத்தி மூடினார். சிகரெட் தயார்; பற்ற வைத்துக் கொண்டு நாற்காலியில் நன்றாகச் சரிந்து உட்கார்ந்து புகையை ஆழமாக இழுத்தார்.

அதேசமயம் லெனின் தன் அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். பக்கோமோவைத் தாண்டிப் போக, முயன்றவரால் முடியவில்லை, நின்றார்.

“மன்னிக்கனும் தோழரே” என்று அழைத்தார் லெனின்.

”மன்னிச்சிட்டேன் சொல்லுங்க” என்று சொல்லவிட்டு பக்கோமோ சிகரெட்டில் மேலும் ஒரு இழுப்பை இழுத்துக் கொண்டார்.

“அங்கே என்ன எழுதி இருக்குதுன்னு பார்த்தீங்களா?” – லெனின் சுவற்றில் காட்டினார்.

“பார்த்தேன் பார்த்தேன்” பக்கோமோவ் நிதானமாகவே பதில் சொன்னார்.

“அப்புறம் எதற்காகப் புகை பிடிக்கிறீங்க?”

“நம்ம நாட்டில் கூட எத்தனையோ சட்டங்கள் இருக்குது. ஒரு மனுசன் அதுல பாதியக் கடைப்பிடிக்கனும்னு ஆரம்பிச்சான்னாக் கூட அவன் ஆயுசு முடிஞ்சிடும்.”

“ரொம்பச் சரி. நான் முழுசா ஒத்துக்கறேன். ஆனா நிறைய சட்டம் இருந்தது பழைய ஆட்சியில. இப்ப இருக்கிறது புது அரசாங்கம் அல்லவா?”

சோவியத் கால உக்ரேன் வயல் வெளியில் இளைஞர்கள்
சோவியத் கால உக்ரேன் வயல் வெளியில் இளைஞர்கள்

“ஆமாம், புது அரசாங்கம்தான்….” பேச்சை முடிக்காமலேயே பக்கோமோவ் சிகரெட்டை அனைத்து பத்திரமாகப் புகையிலை உறையில் வைத்துக் கொண்டார்.

“இது எப்படி? நல்ல அரசாங்கமா, கெட்ட அரசாங்கமா?” லெனின் மேலும் விளக்க முயற்சித்தார்.

”நல்ல அரசாங்கம்-தான்னு நெனய்க்கிறேன். நிலத்தை எல்லாம் வினியோகிச்சுட்டாங்கல்ல….” -அவர் இழுத்தார்.

“வேற என்ன சொல்லுங்க”

பக்கோமோவ் கேள்வி கேட்டவரை ஒரு கணம் பார்த்தார் திரும்பி அறை முழுக்க ஒரு கண்ணோட்டம் விட்டார்.

”ஆனால்… ஆனால் எதிர்பார்க்கிற அளவு ’திடமா’ இல்லே. இதச்செய், அதச்செய் என்று கட்டளை போட்டா போதுமா?”

“மன்னிக்கணும் விளாடிமிர் இலியிச், கிரான்ஸ்டாட் உங்களைக் கூப்பிடறார். ஏதோ அவசரமாகப் பேசணுமாம்….” ஊழியர் ஒருவர் ஓடிவந்து லெனினைக் கூப்பிட, “இதோ வருகிறேன்” என்று பக்கோமாவுக்கும் ஊழியருக்கும் சேர்த்து ஒரே பதிலைச் சொல்லிவிட்டு அவர் விரைந்தார். லெனினது வாய் மட்டும் ”அரசாங்கம் இன்னமும் திடமாக இல்லைங்கிறாரே” என்று சொல்லிக் கொண்டிருந்தது.

துணைக்கமிசார் வந்தார். பக்கோமோவோடு கைகுலுக்கினார். அவரும் லேசுப்பட்டவர் அல்ல. நிதானமாக, ஆனால் திட்டவட்டமாக மாணவனுக்கு வாத்தியார் விளக்குவது போல ’நில ஆவணம்’ பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தார்.

பாவம். அவரை ஒரு அதிகாரிக்குரிய அந்தஸ்தும் தராமல் அவரது மேசையையே தள்ளி வைத்து விட்டு இடத்தை ஒழுங்குபடுத்தினார்கள் சில ஆட்கள். துணைக்கமிசார் பக்கோமோவுக்கு அருகில் காகிதக் கட்டுக்கள் மேலேயே அமர்ந்து விளக்கிக் கொண்டேயிருந்தார். ஒரு மரியாதை நிமித்தம் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்துவிட்டு துணைக்கமிசாரிடமிருந்து ’நிலம் பற்றிய ஆவணம்’ முழுசாக ஒரு புதுப் பிரதியும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தார் பக்கோமோவ்.

தோ பக்கோமோவ் மறுபடி லெனினது செயலரின் முன்னால் வந்து நின்றார்.

”தோழரே, துணைக்கமிசார் விளக்கியது போதுமல்லவா?”

”ஆங்…. பேசினேன்… பக்கோமோவ் குத்துமதிப்பாகப் பதில் சொன்னார்.

“நான் நாற்காலியில உட்கார்ந்திருந்தேன். அவர் காகிதக் கட்டுமேலே உட்கார்ந்திருந்தார்… இப்படியே பேசினோம்….” அவரது லேசான கிண்டலை செயலர் ரசித்துச் சிரித்தாள்.

கொஞ்சம் இடைவெளிவிட்டு அந்த விவசாயி ஆற்றாமையோடு கேட்டார். “தோழரே நான் லெனினைக் கட்டாயம் பார்க்கணும். இந்தக் கிராமத்தானோட ஆசையைப் புரிஞ்சிக்குங்க”

அவர் அசைவதாகத் தெரியவில்லை.செயலருக்கு லெனினது வேலைகள் பற்றி முழுக்கவும் தெரியும் கடந்த சில நாட்களாகவே ஒருநாளைக்கு இரவில் 2 அல்லது 3 மணி நேரமே உறங்கினார்.

”கொஞ்சம் இருங்க அவர் உங்களோட பேசமுடியுமான்னு கேட்டுச் சொல்றேன்.”

”ஓ, நன்றி தோழரே!” அவர் மகிழ்ச்சியில் கை தட்டினார். “முதல்லேயே அதைச் செஞ்சிருக்கணும் தோழரே!”

லெனின் அறை அது தான் என்று செயலர் அறை ஒன்றைக் காட்டினார். வெளியே காத்திருக்கச் சொன்னார்; பக்கோமோவ் காத்திருந்தார்.

”தோழர் அடுத்து உங்களைக் கூப்பிடுவார். கொஞ்சம் இருங்க” – செயலர் வந்து அவரிடம் சொல்லிவிட்டு எங்கோ வேகமாகப் போனார்.

ஐந்து நிமிடம் நகருவது முப்பது நிமிசமாகத் தெரிந்தது பக்கோமோவுக்கு. பொறுமையிழந்து எழுந்து நின்றார். யாருமே இல்லாத அறைவாசலில் நிற்பது வேடிக்கையாகத் தோன்றவே, உடனே உட்கார்ந்து கொண்டார். ஒரு நிமிடம் போயிருக்கும், தன்னை அறியாமல் தான் எழுந்து நிற்பதையும், அறைக்கு முன் மேலும் கீழும் நடப்பதையும் தானே கவனித்தார்.

நேரம் பறக்கிறதே? அந்தச் செயலர் ஏன் திரும்ப வரவில்லை? உள்ளே லெனின் தனக்காகக் காத்திருப்பாரோ? கடைசியில் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு லெனினது அறைக்குள் நுழைந்துவிட்டார் பக்கோமோவ்.

கூட்டுப் பண்ணைகளின் செய்திகள் சோவியத் பத்திரிகைகளில்
கூட்டுப் பண்ணைகளின் செய்திகள் சோவியத் பத்திரிகைகளில்

ட்டையான நடுத்தர உயரம் சாதாரண காற்சட்டை மேல்சட்டை. ஒரு பெரிய மேசை. மேசைக்குப் பின்னால் இரு நாற்காலிகள். ஒரு நாற்காலி அருகே ஒரு சிறு மேசை. அதிலிருந்து ராணுவ வீரர் சாப்பிடும் கேன்டின் உணவு அடைத்த டப்பா ஒன்றைத் திறந்து ஸ்பூனில் அவர் ஏதோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அவர்தான் லெனினாக இருக்க வேண்டும்.

”ஆ நீங்களா தோழர் வாங்க வாங்க” லெனின் வரவேற்றார். புகை பிடிப்பது பற்றிக் கேட்ட அதே நபர் ஓ, இவர்தானா லெனின்?

”உங்க பேர் என்ன?”

”பக்கோமோவ். எவ்கார் பக்கோமோவ்.”

”நீங்கள் ஏன் இங்கே உட்காரக் கூடாது?” தனக்கு அருகிருந்த ஒரு நாற்காலியைக் காட்டினார் லெனின்.

”நீங்க கிராமத்துலேருந்து நில ஆணைப்பற்றித் தெரிஞ்சிக்கணும்னு வந்திருக்கீங்க. அரசாங்கம் போதுமான அளவு ’திடமா’ இல்லேங்கிறீங்க, சரி தானே? ரொம்ப சுவாரசியமான கேள்வி” – அவர் முகத்தில் புன்சிரிப்பு.

பக்கோமோவ் அந்த நாற்காலியில் தொற்றியதுபோல அமர்ந்தார். லெனினையும், அவர் கையிலிருந்த டப்பா உணவையும் மாறி மாறிப் பார்த்தார். வெண்ணெய் இல்லாத ஒட்ஸ் கஞ்சியைச் சாப்பிட்டு இப்பேர்ப்பட்ட தலைவர் எப்படி ஒரு தேசத்தையே தாங்க முடியும்? வந்த வேலையை விட்டுவிட்டு லெனினை விசாரித்து விட அவர் முடிவு செய்தார். “வெண்ணெய் கூட இல்லாமயா சாப்பிடறீlங்க?” என்றார்.

”இப்போதைக்கு அப்படித்தான் தோழர் பக்கோமோவ்” என்றார் லெனின்.

”ம்…ம்…” விவசாயி வாய்க்குள் முனகினார்.

“மன்னிக்கணும் தோழரே…” லெனின் திடீரென்று கேட்டார். “கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா?… ஸ்பூன் வெச்சிருக்கீங்களா? நீங்களே எடுத்துக்கங்க…”

”நன்றி தோழர். எனக்கு வேண்டாம்” – பக்கோமோவ் மறுத்தார்.

சுற்றிலும் எல்லாவற்றையும் ஊன்றிக் கவனித்தார். லெனினையும் சேர்த்து.

”சரி முதல்ல உங்க கிராமத்தப் பத்திச் சொல்லுங்க விவசாயிங்க என்ன சொல்றாங்க? ஆணை பற்றி என்ன பேசிக்கிறாங்க?”

சோவியத்தின் முதல் ஆவணமான நில ஆவணம் – தான் தயாரித்து முன்மொழிந்து இறுதியான ஆவணம் – அவர் நினைவில் வந்திருக்க வேண்டும். விவசாயிகள் அதை எப்படி வரவேற்றார்கள் என்று தெரிந்து கொள்ள லெனினுக்கு ஆர்வம். கற்றுக் கொள்கிற மாணவன் போல ஆசையோடு ஊன்றிக் கேட்கலானார்.

பக்கோமோவ் ”நில ஆணை பற்றி என்ன சொல்றாங்கன்னு கேக்கறீங்க. என் வாழ்க்கையிலேயே மக்கள் அந்த மாதிரிப் பரவசம் அடைஞ்சத நான் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு சந்தோசம்” என்றார். இப்போதும் அதன் ஒளி அவர் முகத்தில் மினுங்கியது.

“கிராமத்தையே ஒரு கலக்குக் கலக்கிட்டுதுன்னு சொல்லலாமா?” – லெனின் கேட்டார்.

“எங்கப் பார்த்தாலும் அதே பேச்சு தேனி போல இங்கேயும் அங்கேயும் சனங்க போயி வராங்க அங்க அங்க கூட்டமா நின்னு விவாதிக்கிறாங்க. ஏ… அப்பா…”

“என்ன விவாதிச்சிக்கிட்டாங்க…?” லெனின் விவசாயியின் முகத்தைப் படித்தார்.

“எல்லா நிலத்தையும் எடுக்கலாமா, அதுல கொஞ்சம் கொஞ்சம் எடுக்கலாமா?… இப்படி..”

“எல்லா நிலமும், எல்லா நிலமும்…. கடைசி அங்குல இம்மி அளவு நிலம் உட்பட எல்லாம்தான். அப்புறம் வேற என்ன சொன்னாங்க?”

“கொஞ்சம் கூட ஒரு விலை இல்லாம இலவசமாவா நிலம் கொடுப்பாங்க அப்படின்னு ஒரு சந்தேகம் அவங்களுக்கு. ஒருவேளை, கொஞ்சமா ஒரு விலை இருக்கும். அப்பத்தானே பழைய மொதலாளி பசியால சாகாம இருக்க முடியும். இப்படியும் பேசிக்கிட்டாங்க.”

“அப்படின்னா ஈட்டு விலை குடுக்காம நீங்க சம்மா நிலத்தை வாங்க விரும்பலே. உங்களோட அரசாங்கம் திடமா இருக்கனும். விவசாயிகளை அது சவுக்கால அடிக்கனும். காசப் பிடுங்கனும். அப்ப சரியா இருக்கும். அப்படித்தானே தோழரே? நான் மறுபடி சொல்றேன், நிலத்துக்குப் பைசா காசு கிடையாது. நிலம் யாருக்கு உரிமையோ அவங்களுக்குச் சேரனும் அதுல ஒழக்கிறவங்களுக்குத் தான் சொந்தம் சரி. அப்புறம்… அப்புறம்…”

“அப்புறமா அவுங்க வேற ஒரு விசயத்தைப் பேசறாங்க” – பக்கோமோவ் முக்கியமான விசயத்தைத் தொட்டு விட்டார்.

”அதான் வேணும், சொல்லுங்க”

பக்கோமோவ் நீண்டபெரு மூச்சு விட்டார். எதற்கோ தயங்கினார். “தயங்காம சொல்லுங்க தோழர்” – லெனின் ஊக்கப்படுத்தினார்.

கூட்டுப் பண்ணைகளில் கூட்டுழைப்பு
கூட்டுப் பண்ணைகளில் கூட்டுழைப்பு

”ஒருவேளை இப்போ சும்மா நிலத்தை உட்டுப்புட்டு பின்னாடி அடிச்சு ஒதச்சிப் பிடுங்கிட்டாங்கன்னா – அப்புறம் எத்தன தலைமுறை ஆனாலும் நிமிர முடியாது பாருங்க. அதான் சந்தேகம்.”

ஒரு நொடிக்குள் லெனின் கோபாவேசமானார். ”இதெல்லாம் யாரு பேசினாங்க கொஞ்சம் சொல்லுங்க..”

பக்கோமோவ் கையை விரித்தார்.

”அவங்களுக்குப் பின்னால நிச்சயமா ஏதோ ரகசியம் இருக்குது…” லெனின் எடுத்துக் கொடுத்தார்.

”ரொம்பப் பயங்கரம் தோழர்” என்றார் பக்கோமோவ்.

“ஆனால் யாரைப் பார்த்து எதுக்காகப் பயப்படனும்?”

பக்கோமோவ் இப்போது பதில் சொல்லவில்லை.

“பலநூறு வருசமா கொட்டமடிச்ச பண்ணையாருங்களும். மடாலய மாமிச மலைகளும் நிலத்தைச் சும்மா கொடுத்துருவாங்களா? நிச்சயமா மாட்டாங்க. அவுங்க மிரட்டுவாங்க. அதமட்டும் தான் அவுங்க செய்ய முடியும் அவுங்களுக்காக யாரு அடி தடில இறங்கி உதவுவாங்க?” என்றார் லெனின்.

”அதுக்கும் சில ஆளுங்க உண்டு தோழரே”.

“இருப்பாங்க… இருப்பாங்க… ஆனால் அவுங்க அடிக்க அடிக்க சம்மா வாங்கிக்கிட்டு நாம அழிஞ்சு போகனுமா? அது எப்படி சரி?” – லெனின் சூடேற்றச் சூடேற்ற பக்கோமோவ் கறி பிரட்டுவது போல வாகாக விசயங்களை எடுத்து வைத்தார்.

”இல்ல தோழரே, அவங்க வலுவான ஆளுங்க.”

”எதிரிகளத்தானே சொல்றீங்க..” – லெனின் இறுக்கிப் பிடித்தார். பக்கோமோவ் ஆமாம் என்று தலையாட்டினார்.

”இப்போ புரியது தோழர் இப்போ நிலத்தை எடுத்துக்கிறீங்க. பிறகு புது அரசாங்கம் சிதறிப் போகலாம். போல்ஷ்விக்குகளும், கமிசார்களும் ஒடிருவாங்க. நிலத்தை எடுத்ததற்காக விவசாயிகளை எதிரிங்க தண்டிப்பாங்க அடிப்பாங்க. கொல்லுவாங்க. அதனாலதான் சோவியத் அரசாங்கம் திடமாக இல்லைன்னு சொன்னிங்க, அப்படித்தானே தோழரே! சோவியத் அரசாங்கத்த, நம்ம அரசாங்கத்த யாராலயும் அசைக்க முடியாது. அது உயிரோடு வாழனும்னா நம்ம கையில இருக்குது. உங்களையும் சேர்த்துத் தான் தோழரே…”

லெனினது கடைசிச் சொற்கள் புதிராக இருந்தது. அவர் கேட்டார்: “என் கையில என்ன இருக்குது லெனின் தோழர்?”

“தோழரே, சோவியத் அரசாங்கத்தைக் காப்பாற்ற மற்றவங்க எப்படில்லாம் சண்டை போடுறாங்கன்னு ஒரமா நின்னு வேடிக்கையும் பார்க்கலாம்; கூடவே வந்து ஆயுதம் எடுத்து நீங்களும் காப்பாற்றலாம். ஆனால் நம்ம அரசாங்கம் திடமா இருக்கனும்; உங்களுடையதாகவும் இருக்கனும்.”

பக்கோமோவ் தலைகுனிந்தவாறு யோசித்தார்.

குலக்குகள் எனும் நிலப்பிரபுக்களுக்கு எதிரன சோவியத் மக்கள் இயக்கம்
குலக்குகள் எனும் நிலப்பிரபுக்களுக்கு எதிரன சோவியத் மக்கள் இயக்கம்

மேசையிலிருந்த தொலைபேசி ஒலித்தது. லெனின் பேசி முடித்தார். இதற்குள் கோணிப்பையைத் திறந்து கொஞ்சம் பன்றிக் கொழுப்பு, ஒரு பெரிய ரொட்டித் துண்டு கொஞ்சம் உப்பு, வெங்காயம் எல்லாவற்றையும் எடுத்து மேசை மேல் வைத்தார். லெனின் வாங்க மறுத்தார்.

“கிராமத்துல போய் இதச் சொன்னா என்னைக் கொன்னுடுவாங்க” என்று கெஞ்சினார் பக்கோமோவ். லெனின் சிறிய அளவு ஏற்க ஒப்புக் கொண்டார்.

நன்றி தோழரே. உங்களிடமிருந்து இதற்கு மேலும் கேட்கலாமா…?” பக்கோமோவ் திகைத்தார்.

“கொழுப்பு – ரொட்டி சாப்பிடறீங்க. ஆனால் தொழிலாளி, ராணுவம், நம்ம படிப்பாளிங்களுக்கு என்ன கிடைக்கிறது தெரியுமா? கொஞ்சம் ஒட்ஸ் கஞ்சிதான்” என்றார் லெனின்.

பக்கோமோவ் தலை நிமிரவேயில்லை. லெனினது விமரிசனத்தை அவர் ஏற்றுக் கொண்டார்.

”தோழரே… தொழிலாளிகளுக்கு நாங்க நல்ல ரொட்டி கொடுக்க முடியும். எப்படியாவது சேர்த்து அனுப்புவோம்…” என்று பதில் சொன்னார்.

“அற்புதம் தோழரே, உங்க கிராமத்துலயே இருக்கட்டும். தொழிலாளர் பிரதிநிதி வந்து பெற்றுக் கொள்வார். இப்படித்தான் புதுத்திட்டம் வேணும் தோழரே. சரி.நிலம் எடுத்துக்கிறப் போறீங்களா இல்லையா?”

”நிலம் தானே.அந்த ஆணை வந்து ஒரு மணி நேரத்துல எப்பவோ பிரிச்சுகிட்டோம்”

அறையில் ஒரு நிமிடம் ஆழமான அமைதி. அடுத்த நொடி அதை உடைத்து எறிவதுபோல லெனின் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

“மொத்த நிலத்தயும் பிரிச்சிட்டிங்க அப்புறம் எதுக்குத் தோழர் இப்ப ரெண்டாவது யோசனை?”

”ரெண்டாவது யோசனை எனக்கில்லை தோழர் ஆனால் இன்னொரு கேள்வி?”

”ரொம்ப முக்கியமோ?” லெனின் கண்கள் குறும்பாய்ச் சிமிட்டின.

“நம்ம அரசாங்கம் நிரந்தரமா இருக்கும்னிங்க. ஆனால் இது என்ன வகை அரசாங்கம்? ஒரு அதிகாரிக்கு மேசை கூட இல்ல. இன்னொருத்தர் ஒரு தலைவர் வெண்ணெய் இல்லாம வெறும் கஞ்சி குடிக்கிறார்…”

”அதுவும் அந்தத் தலைவர் ஒரு வழுக்கைத் தலையர்…” தன் தலையைக் கையால் தடவியவாறு பக்கோமோவ் குரலில் பேசிக் கேலிசெய்தார் லெனின்.

”வெறும் கஞ்சி குடிக்கிறவர் மொத்த சோவியத் அரசாங்கத்தை நடத்துகிறார் என்றால் நம்ப முடிகிறதா?”

சளைக்காமல் லெனின் எதிர்க் கேள்வி போட்டார். ”ஏன் நம்ப முடியாது தோழர்? இதோ பாருங்க. உங்களை சோவியத்துக்குத் தேர்ந்தெ டுத்தால் நீங்கள் தானே அரசாங்கம். தோழரே, நைந்துபோன மரப்பட்டையாலான ஷூ காலணி, கிழிந்த துணிக் கோட்டு, கயிறு பெல்ட்டு போட்ட நீங்கள்தான் அரசாங்கம். அது என்ன வகையான அரசாங்கம்? ஆனால், உங்க கிராமத்துல ஒவ்வொருத்தரும் சொல்வாங்க, எகோர் பக்கோமோவ் தான் சோவியத் பிரதிநிதி. இப்படிச் சொன்னாங்கன்னா, அது என்னாய்யா அரசாங்கம்?”

பக்கோமோவின் உள்ளம் உருகி ஒடியது.

லெனின் அவரது அறையில்
அலுவலகத்தில் தோழர் லெனின்

அவரை வாயில்வரை அழைத்துச் சென்று கைகுலுக்கி வழியனுப்பினார் தோழர் லெனின்.

அடுத்த சில நொடிகளில் வரவேற்பரைக் கூடத்தில் நின்ற பக்கோமோவ் சுற்றி ஒரு நோட்டம் விட்டார். இப்போது அந்தக் கூடம் போர்க்களத்துக்கான ஆயுதம் தயாரிக்கும் உலைக்களமாக உருமாறி பிரம்மாண்டமாகத் தெரிந்தது. தன்னையே அவர் ஒரு கணம் பார்த்துக் கொண்டார். மரப்பட்டைக் காலணி, கிழிந்த துணிக் கோட்டு, கயிறு பெல்ட் கோணிப்பை…

“நானா சோவியத் அரசாங்கத்தின் பிரதிநிதி.” – அவர் யோசித்தார். அழகான புன்முறுவல் அவர் முகத்தில் பூத்தது.

லெனினது வாழ்க்கைச் சம்பவங்களை வைத்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான ‘தொலைவில் ஒரு நம்பிக்கை ஒளி’ என்ற நூலிலிருந்து.

ஆசிரியர் :செர்க் ஆன்டோனோல்

– புதிய கலாச்சாரம், டிசம்பர் 2003.