privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமாணவர் லெனின் தற்கொலை – ரிலையன்சின் நரபலி ஆரம்பம் !

மாணவர் லெனின் தற்கொலை – ரிலையன்சின் நரபலி ஆரம்பம் !

-

தற்கொலை செய்து கொண்ட மாணவன்
தற்கொலை செய்து கொண்ட மாணவன்

துரை நகரைச் சேர்ந்த கதிரேசன் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். படித்த நடுத்தர வர்க்கமே பொறியியல் கல்வி மாயையில் ஏமாறும் காலத்தில் இவரைப் போன்ற சாதாரண மக்களோ எப்பாடு பட்டாவது தமது வாரிசுகளை படிக்க வைக்க விரும்புகிறார்கள். அதன்படி இவர் தனது மகன் லெனினை பொறியியல் கல்லூரி ஒன்றில் சேர்க்கிறார். அதற்காக பொதுத்துறையைச் சேர்ந்த எஸ்.பி.ஐ வங்கி கிளை ஒன்றில் ரூ.1.90 லட்சம் கடன் வாங்கி இருந்தார் லெனின்.

முதல் தலைமுறையாக உயர்கல்வி படிக்கும் மக்கள் அனைவரும் அதை முடிப்பது என்பது நிறைய தடைகளும் சவால்களும் நிறைந்தது. அப்படித்தான் லெனினும் பொறியியல் படிப்பை முடித்தாலும், சில பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.  தேர்ச்சி பெற்றவர்களுக்கோ இல்லை கல்லூரி வளாக நேர்காணலில் வேலை கிடைத்தவர்களுக்கோ கூட வேலை கிடைக்காத இந்தக் காலத்தில் பட்டமே கைக்கு வந்திராத லெனினுக்கு வேலை கிடைத்து விடுமா என்ன? வேலையும் இல்லை, கடனையும் கட்ட முடியவில்லை.

இந்நிலையில்தான் தனது கல்விக் கடனை வசூலிக்கும் தமிழக உரிமையினை ஸ்டேட் வங்கி ரிலையன்சு நிறுவனத்திற்கு விற்று விடுகிறது. அதன் முழுவிவரத்தை இணைப்பில் உள்ள கட்டுரையில் காண்க. அம்பானி கம்பெனியும் கடனை கட்டுமாறு தொலைபேசி மூலமாகவும், குறுஞ்செய்திகள் வழியாகவும் தொடர்ந்து லெனினுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.  வேலையும் இல்லை, படிப்பும் முடிக்கவில்லை, கடனையும் கட்ட முடியவில்லை, கடனைக் கட்டச் சொல்லி சித்திரவதை என்ற நான்முனைத் தாக்குதலில் லெனின் மிகுந்த மன அழுத்தத்தில் மாட்டிக் கொண்டார். அதன் வேகத்தை அம்பானி கம்பெனி துரிதப்படுத்தியது.

இறுதியில் ரிலையன்ஸ் கயவர்கள் மாணவன் வீட்டிற்கே சென்று மிரட்டியிருக்கிறார்கள். வேறு வழியற்ற அந்த அப்பாவி மாணவன் லெனின் 15.07.2016 அன்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அனைத்து ஊடகங்களும் அம்பானியின் பெயரை மறைத்து விட்டு, ரிலையன்சின் குற்றத்தை வெறும் தனியார் நிறுவனத்தின் கடன் வசூல் என்று பேசுகிறார்கள். அம்பானியோ தமிழில் நியூஸ் 18 என்று தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தையே ஆரம்பித்து விட்டார்.

மாணவர் லெனினின் தந்தை கதிரேசன் கூறும்போது, “என் மகன் இந்த முடிவை எடுப்பார் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை ”, என்கிறார். பொதுவுடமை கட்சியின் செல்வாக்கில் மகனுக்கு லெனின் என்று பெயரிட்டவர் அப்படி எதிர்பாராமல் இருந்திருப்பார்தான். ஆனால் ஒரு மாணவனின் படிப்பையே மரணத்திற்கான நுழைவாயிலாக மாற்றியிருக்கும் இந்த அரசுகளையும், வங்கிகளையும், முதலாளிகளையும் அவர் நினைத்து பார்த்திருக்கமாட்டார். விவசாயிகள் தற்கொலையோடு இனி நமது மாணவர்களும் சேர்கிறார்கள். ஆம் நமது நாடும், சமூகமும், அரசும் நம்மை வாழத்தகுதியற்றதாக அறிவித்து விட்டது.

மாணவர்களை தொடர்ந்து மிரட்டி வரும் ரிலையன்ஸ் நிறுவனம்
மாணவர்களை தொடர்ந்து மிரட்டி வரும் ரிலையன்ஸ் நிறுவனம்

“தற்கொலை முடிவு முன்கூட்டியே எனக்கு தெரிந்திருந்தால், எனது வீட்டை விற்றாவது கடனை அடைத்திருப்பேன். கல்விக் கடனை கட்ட முடியவில்லை என்று மனமுடைந்து தற்கொலை செய்வது எனது மகனோடு முடியட்டும். என் மகனைப் போல மற்ற மாணவர்களும் இதுபோன்ற தவறான முடிவை எடுக்காமலிருக்க கல்விக் கடன் முழுவதையும் அரசு ரத்து செய்ய வேண்டும்”என்கிறார் லெனின் தந்தை. ஆனால் அரசு ரத்து செய்வதல்ல பிரச்சினை. முதலாளிகள் நாமம் போட்டிருக்கும் 12 இலட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடனை மக்களாகிய நாம் எப்படி வசூல் செய்யப் போகிறோம் என்பதே நமது மாணவர்களின் கடனை ரத்து செய்வதற்கான நிபந்தனை. அரசைப் பொறுத்த வரை முதலாளிகளுக்கு வராக்கடன், மாணவர்களுக்கு கட்டாய வசூல் என்று வைத்திருக்கிறார்கள்.

மேலும் பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலைமை நிரூபணமான நிலையிலும் சுயநிதிக் கல்லூரிக் கொள்ளையர்களோ சகஜமாக கொள்ளையைத் தொடர்கிறார்கள். ரிலையன்சுக்கு கொடுத்த இலாபத்தை தள்ளுபடியாக மாணவர்களுக்கு கொடுத்திருந்தால் எத்தனையோ மாணவர்கள் ஸ்டேட் வங்கி கடனை அடைத்திருக்க முடியாதா? ஆனால் அம்பானியின் இலாபத்தை விட மாணவனின் தற்கொலை பிரச்சினையல்ல என்று காட்டியிருக்கிறார்கள்  கயவர்கள்.

தமிழக மாணவர்கள் ரிலையன்ஸின் உடை, காய்கறி, மளிகை, செல்பேசி, தொலைக்காட்சி என அனைத்து நிறுவனங்களையும் முற்றுகையிட வேண்டும். லெனினின் மரணத்திற்கு நியாம் கேட்க வேண்டும். ரிலையன்ஸ் நிறுவனம் வைத்திருக்கும் பல ஆயிரம் கோடி கடனை வசூலித்து வங்கிகளுக்கு கொடுக்கும் போராட்டத்தையும் ஆரம்பிக்க வேண்டும்.

ஏனெனில் ரிலையன்சின் கடனை இந்த அரசு வசூலிக்காது, நாம் தான் வசூலிக்க வேண்டும். அந்த போராட்டம் நடைபெறும் போது அந்த கந்து வட்டி கயவர்களையும் அவர்களுக்கு படியளக்கும் அரசுகளையும் தண்டிக்க முடியும். லெனின் மரணம் அதைத்தான் கோருகிறது! மாணவர்கள் செய்வார்களா?