ரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்தால் படிக்க மாட்டார்கள், கெட்ட பழக்கங்கள் வரும், வாழ்க்கையே நாசமாகிவிடும் என்ற கருத்தும் காசு கொடுத்தாலும் தனியார் பள்ளிக்கூடம்தான் தரமானது, அங்கு படித்தால் வாழ்க்கையே மாறிவிடும் என்பதும் பெரும்பாலான மக்களின் மனநிலையாக இருக்கிறது.  இதெல்லாம் தானாகவே நடக்கிறதா? இல்லை, இல்லை. ஒரு சினிமாப்படம் போல திட்டமிட்டு, சீன் சீனாக நடந்து கொண்டிருக்கிறது.

அதில் ஒரு சீன் தான் ஓசூர் அருகே உள்ள மாசிநாயக்கன்பள்ளி கிராமத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆம், தெலுங்குவழி மேல்நிலைப்பள்ளியான இங்கு +2 படித்த 29 மாணவர்களும் பெயிலாகியிருக்கிறார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால், மாணவர்கள் எண்ணிக்கை 12 வருடத்தில் 1100 – லிருந்து 130 பேராக குறைந்திருக்கிறது.

சென்ற மே மாதம் +2 தேர்வு முடிவு வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் 87.13% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 26 வது இடத்தை பிடித்தது. இங்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 177 பள்ளிகள் இயங்குகின்றன. ஓசூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட மாசிநாயக்கன்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 25 மாணவர்கள், 4 மாணவிகள் என மொத்தம் 29 பேர் +2 தேர்வு எழுதினார்கள். இதில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.

புதர் மண்டிக் கிடக்கும் கழிப்பறைகள்

மாணவர்கள் தேர்ச்சி பெறாததைக் குறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டால்  ஆசிரியர்கள் பற்றாக்குறைதான் காரணம் என்கிறார். அப்படியானால் ஆசிரியர் இருக்கும் பாடப்பிரிவுகளில் 100% தேர்ச்சிப்பெற்று உள்ளனரா? எனக் கேட்டால் மாணவர்கள் ஒழுக்கம் இல்லை எனவும், பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் மீது அக்கறையில்லை எனவும் மாணவர்களையும் பெற்றோர்களையும் குற்றம் சொல்கிறார்கள் சில ஆசிரியர்கள். இப்பள்ளியை சுற்றியுள்ள 15 கிராமங்களில் வசிக்கும் விவசாயி வீட்டுப்பிள்ளைகள், உதிரித் தொழிலாளி, அடித்தட்டு உழைக்கும் மக்களின் குழந்தைகள்தான் இப்பள்ளியில் படித்துவருகின்றனர். இவர்களில் ஆகப் பெரும்பான்மையோர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்.

2004-ம் ஆண்டு 1100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிலும் பள்ளியாக பிரம்மாண்டமாக இருந்தது. 2010-11-ல் +2 ஆரம்பிக்கப்பட்டு மேல்நிலைப்பள்ளியாக உயர்ந்தது. ஆனால் பல ஆண்டுகளாக 11 மற்றும் 12 வகுப்பில் கணிதம், உயிரியல், வேதியியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. 2004-ம் ஆண்டில் 1100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தநிலை மாறி,  படிப்படியாக குறைந்து 2014-15 ல் 200 மாணவர்களும் 2016-17-ல் 230 மாணவர்களும், 2017-18-ல் 130 மாணவர்களும் என்ற நிலை உள்ளது. குறைந்த மாணவர்களே உள்ளனர் என கணக்குக்காட்டி இழுத்து மூடும் அபாய நிலைக்கு வந்துள்ளது இப்பள்ளி.

இந்நிலையில்தான் 2017- 18 ஆண்டின் பொதுத்தேர்வில் +1 வகுப்பில் கணிதம் 22/24, உயிரியல் 22/24, வேதியியல் 21/24, இயற்பியல் 12/24, கம்ப்யூட்டர் சயின்ஸ் 12/24 என  தோல்வி அடைந்துள்ளனர். +2 தேர்வில் கணிதம் 29/29, வேதியியல் 22/29, இயற்பியல் 25/29, உயிரியியல் 11/13, கம்யூட்டர் சயின்ஸ் 6/16 பேர் தோல்வியடைந்துள்ளனர். ஆசிரியர்கள் இருக்கும் பாடத்தில் கூட +2-வில் 29 பேர்களுக்கும் +1 ல் 24 பேர்களுக்கும் பாடத்தை நடத்தி தேர்ச்சியடைய வைக்கவில்லை. மக்களின் வரிப்பணத்தில் வாங்கும் சம்பளத்திற்கு குறைந்தபட்ச நேர்மையுடன் கூட வேலை செய்யவில்லை. இங்கு, உடற்கல்வி ஆசிரியர் கணிதப் பாடம் நடத்துகிறார். ஆனால், இப்பள்ளியில் +2 வகுப்பில் இல்லாத பாடப்பிரிவிற்கு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வேலையே செய்யாமல் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஏழு வருடமாக இப்பள்ளி, பெரும்பான்மையான ஆதிக்க சாதி பின்னணி கொண்ட ஆசிரியர்கள், அவர்களுக்கு ஆதரவான தலைமை ஆசிரியர் என மாணவர் நலனில் அக்கறையே இல்லாமல் இயங்கியது. இப்போது உள்ள தலைமை ஆசிரியர், 12 மணிக்கு பள்ளிக்கு வந்து 3 மணிக்கு சென்று விடுவார். ஒரு சில ஆசிரியர் தவிர பெரும்பான்மை ஆசிரியர்கள் 11 மணிக்கு வந்து 3.30 மணிக்கு வீட்டிற்கு புறப்பட்டு விடுவார்கள். மதியம் சாப்பிட்ட பிறகு ஆசிரியர் வகுப்பறைக்கு வருவது கடினம், வந்தாலும் பாடம் நடத்துவதில்லை என்கிறாகள் மாணவர்கள்.

குறிப்பாக ரெட்டி சாதியை சேர்ந்த ஒரு ஆசிரியை தொடர்ந்து தாமதமாக வருவது குறித்து முன்பிருந்த தலைமை ஆசிரியர் கேட்டதற்கு, இந்தப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் எனக்கு சொந்தக்காரர்தான் என்று மிரட்டியுள்ளார். இதற்குமேல் பேசமுடியாது என்ற நிலையில், வேறு ஊருக்கு பணிமாறுதல் வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார் அந்த தலைமை ஆசிரியர். ஆதிக்கசாதி பின்புலம் கொண்ட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மத்தியில், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் படித்து என்ன கிழிக்கப் போகிறார்கள் என்ற கருத்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பதை நாம் சந்தித்த பலரும் கூறுகின்றனர்.

இப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கும். மொத்தமாக தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்வில் தோல்வியடைந்ததற்கும் முழு பொறுப்பு, கடமையை செய்யாத ஆசிரியர்களும், இதனை கண்டுகொள்ளாத கல்வித்துறை அதிகாரிகளும்தான். அதனால்தான் சொல்கிறோம், தோற்றுக் கொண்டிருப்பது மாணவர்கள் அல்ல, ஒட்டுமொத்த கல்வித்துறையும்தான்.

ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்தவில்லை என்பதைத் தாண்டி, மாணவர்கள் இப்பள்ளியில் படிக்கும் சூழலே இல்லை என்பதுதான் இன்னும் மோசமானது. இதை இப்பள்ளியின் புகைப்படங்களை பார்த்தாலே உணர முடியும்.

கட்டப்பட்ட 6 வருடங்களுக்குள்ளாகவே முறையான பராமரிப்பில்லாமல் பாழடைந்து, புதர்கள் மண்டி பயன்படுத்தவே முடியாத நிலையில் பாம்புகளின் கூடாரமாக மாறியிருக்கின்றன கழிவறைகள். இந்த நிலையால் பாதிக்கப்படுவது குறிப்பாக மாணவிகள்தான். எந்த நம்பிக்கையில் இங்கு வந்து படிக்க முடியும்? பெற்றோர்கள் எப்படி அனுப்புவார்கள்? 1100 பேரிலிருந்து 130 பேராக குறைந்ததன் காரணம் இங்குதான் அடங்கியிருக்கிறது.

கட்டப்பட்ட காலம் முதல் பராமரிப்பில்லாமல் இருக்கும் வகுப்பறைகள், கழிவறைகள், போதிய ஆசிரியர்கள் இல்லை, இருப்பவர்களும் ஒழுங்காக வகுப்புகளுக்கே வருவதில்லை, பாதுகாப்பற்ற சூழல், வேதியியல், இயற்பியல் ஆய்வுக் கூடத்தில் தேவையான பயிற்சி உபகரணங்கள் இல்லை என எல்லாப் பிரச்சினைகளும் குடிகொண்ட கூடாரமாக இருக்கிறது இப்பள்ளி. இது எதுவும் தனக்குத் தெரியாத மாதிரி கண்ணை மூடிக் கொண்டு நாடகமாடுகிறது பள்ளி கல்வித்துறை.

100% தேர்ச்சி விகிதம் கொடுக்கும் பள்ளியைப் போலவே மோசமான தேர்ச்சி விகிதம் தரும் பள்ளியும் எந்த நேரமும் அதிகாரிகளின் கவனத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனாலும், யார் எக்கேடு கெட்டால் என்ன?, நமக்கு மாதமானால் சம்பளம் வந்தால் சரி; பினாமி மூலம் தாம் நடத்தும் தனியார் பள்ளியில் ஆள் சேர்ந்தால் சரி; கந்து வட்டிக்கு பணம் வந்தால் சரி என கல்வித்துறையின் ஒவ்வொரு அதிகாரியும், அவர்களின் செல்லப்பிள்ளைகளான ஆசிரியர்களுமாக சேர்ந்து கல்வித்துறையை சீரழித்து வருகின்றனர். இதற்கு மாசிநாயக்கன்பள்ளி கிராமத்தின் மேல்நிலைப் பள்ளியே சிறந்த உதாரணமாக இருக்கிறது.

இங்கு வேலை செய்யும் ஆசிரியர்களுக்கான சம்பளம் மட்டுமே தோராயமாக ஆண்டுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய். அத்தனையும் மக்களின் வரிப்பணம். ஆனால், வரிப்பணம் கட்டும் மக்களின் பிள்ளைகளுக்கு முறையான கல்வி கிடைக்கிறதா? கல்வி கொடுத்து, நல்ல குடிமகனாக, சமூக மனிதனாக மாற்ற வேண்டிய அரசுதான் இம்மாணவர்கள் சீரழிய காரணமாக மாறியுள்ளது. தான் செய்ய வேண்டிய வேலைக்கு நேர் எதிரான வேலையை செய்து வருகிறது.

இந்த மோசமான நிலைமையை மாற்ற வேண்டும் என, சமூக அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து மனுக்கள் அனுப்பி வந்துள்ளனர். இந்த ஆண்டு அனைவரும் தோல்வியடைந்ததைக் கண்டு, வேதனையடைந்த ஜனநாயக சக்திகள், பெற்றோர் சிலர் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதற்கு முன்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் சிலர், பத்திரிக்கை செய்தி அடிப்படையில் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றனர். எங்கள் ஊர் பிரச்சினைக்கு எங்கிருந்தோ வந்து அக்கறை காட்டுகிறீர்களே என மக்கள் நெகிழ்ந்துள்ளனர். இன்னாரைப் பாருங்கள் என சிலரை கை காட்டியுள்ளனர்.

குறைவான மாணவர்கள் இருப்பதும், பல்வேறு கிராமங்களில் இருந்து வருவதும், சட்டென ஒருங்கிணைக்க முடியாத நிலையும் இருக்கும்போதுதான், இரண்டு நாட்கள் பிரச்சாரமும், ஆய்வும் நடத்திய நிலையில் கண்டன ஆர்ப்பாட்ட செய்தி வந்ததாக நம்மிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த 04.06.2018 அன்று பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி முன்னாள் மாணவர்கள், கிராமப் பொது மக்கள் என அனைவரும் தனது பணியை ஒழுங்காக செய்யாத ஆசிரியர் மீதும், கல்வி முதன்மை அதிகாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், 12 ம் வகுப்பு தேர்வில் நூறு சதவீத தோல்வியைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் என அறிவித்து நோட்டீஸ் விநியோகம் செய்து பள்ளி முன்பு திரண்டனர். இச் ‘சமூக விரோதிகளை’ கண்காணிக்ககவும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் காலை 8 மணிக்கே பள்ளி முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்தும் பெற்றோர் ஆசிரியர் சங்க குழுவினரிடமும், மக்களிடமும், சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்க முடியாது எங்களுக்கு கலெக்டர் நேரடியாக வரும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்ற பிறகு 10.30 க்கு தாசில்தார் வந்தார். அவரும் சமரசம் பேசினார். உடனடியாக ஆசிரியர்களை நியமனம் செய்கிறேன், துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் மக்களும் ஆர்ப்பாட்ட குழுவும் ஏற்றுக் கொள்ளவில்லை. 11.30 மணி அளவில் சி.இ.ஓ மகேஸ்வரி வந்தார்.

ஓசூர் கல்வி மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருக்கிறது; நான் இந்தப் பகுதிக்கு வந்து நான்கு மாதம் தான் ஆகிறது; அரசுப்பள்ளி பற்றியும் இங்கு படிக்கும் மாணவர்கள் மீதும் எனக்கு அக்கறை உண்டு; இந்த பள்ளி பற்றி எனக்கு இவ்வளவு நாள் தெரியாது; தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; ஆசிரியர் இல்லாத பாடத்திற்கு உடனடியாக ஆசிரியர் நியமனம்  செய்கிறேன்; இத்துடன் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்றார்.

இவருக்கு வேண்டுமானால் அப்பள்ளி குறித்து தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லது இதை விடவும் ‘முக்கியமான’ வேலைகள் இருந்திருக்கலாம். இத்தனை ஆண்டுகளாகவே 25 – 30% அளவுக்கே தேர்ச்சி விகிதம் இருந்துவரும் இந்தப் பள்ளியின் அவலநிலை பற்றி ஏன் எந்த அதிகாரிக்கும் தெரியாதா? அல்லது தெரியாதது போல நடிக்கிறார்களா?

மக்கள் இதனை ஏற்க மறுத்து கடந்த சில வருடமாக வரும் எல்லா சி.இ.ஓ.வும் இதனை தான் கூறுகின்றனர், ஆனால் செய்யவில்லை. இதன் விளைவு 12 -ம் வகுப்பில் 100% தோல்வி என்கிற நிலைமை. 1100 மாணவர்கள் படித்த இப்பள்ளி தற்போது 130 மாணவர்கள் என்ற மூடும் நிலைக்கு வந்துவிட்டது. இப்பள்ளியை மூட அரசுக்கு திட்டம் இருக்கிறதா? சொல்லுங்கள் என்று பெற்றோர்கள் குரல் எழுப்பினர். அடிப்படை வசதி கூட இல்லை என மாணவர்களும் புகார் கூறினர்.

இதனைக் கேட்ட சி.இ.ஓ மகேஸ்வரி, உடனடியாக உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடத்திற்கு ஆசிரியர்களை நியமித்தார். தற்காலிகமாக தேன்கனிக்கோட்டை தலைமை ஆசிரியரை பொறுப்பேற்று இப்பள்ளியை நடைமுறைப்படுத்த கூறுகிறேன் என்று உறுதி அளித்தார். மாசிநாயகன்பள்ளி தலைமையாசிரியரை இடமாற்றம் செய்யவும் உத்தரவிட்டார். 5 நிமிடத்தில் கையெழுத்துப் போட்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்றால், இத்தனை வருடமாக ஏன செய்யவில்லை? இத்தனை நாள் மனு கொடுத்தவர்கள், இன்று உத்தரவு போட்டுள்ளனர், அதனால்தான் வேலை நடக்கிறது.

போராடத் திரண்ட சமூக விரோதிகள்

12-ம் வகுப்பில் 100% தோல்வி அடைந்ததை கண்டித்து ‘சமூக விரோதிகள்’ போராடிய பிறகு தான் ஆசிரியர்கள் நியமித்தல், பள்ளி மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க பள்ளியை தொடர்ந்து நடத்த மாவட்டப் பள்ளிக் கல்வித்துறை இப்பள்ளியை தத்தெடுத்து செயல்படுத்தும் என உறுதி அளித்தார், சி.இ.ஓ. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று,  மக்களுக்கு கல்வியை சொல்லி கொடுக்காமல், ஏற்றுக்கொண்ட கடமையை நிறைவேற்றாமல் இருக்கும் அரசு மக்களுக்கான அரசா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பினார்கள்.

தமிழக அளவில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு, மாணவர்கள் தங்களின் பாடங்களை செல்போனில் படிக்க நடவடிக்கை என சீன் போட்டுக் கொண்டே, பின்தங்கிய கிராமங்களில் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பள்ளிகளை ஒன்றாக இணைப்பது, மாசிநாயக்கன்பள்ளியில் நடப்பதைப் போல படிப்படியாக அழிந்துபோக அனுமதிப்பது என அரசுப் பள்ளிகளை இழுத்து மூடி தனியார் பள்ளிகளை ஊக்குவித்து வருகிறது தமிழக அரசு.

தமிழிசை சௌந்தரராசனை ஆபாசமாக ஒரு பெண் திட்டியதும் தனிப்படை அமைத்து இரண்டு நாளில் கைது செய்கிறது அரசு. ஆனால், இந்தப் பள்ளியில் ஆசிரியர் இல்லை எனவும் பள்ளி நிர்வாகம் ஒழுங்காக இல்லை எனவும் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதையும் தெரிந்து கொள்ள வைக்க 7 ஆண்டுகளாகியுள்ளது. இந்த ஏழு வருடமாக இந்த பள்ளிக்கு சுண்ணாம்பு கூட அடிக்கவில்லை என்பதில் இருந்தே அரசின் நோக்கமும் இலட்சணமும் பளிச்செனப் புரிகிறது.

இத்தனை வருடங்களாக மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் என சகல அதிகாரிகளிடமும், அவர்களின் அலுவலகங்களுக்கே சென்று மனு கொடுத்தார்கள் மக்கள். அவர்களோ மனுக்களை வாங்கி, அடியில் போட்டு உட்கார்ந்து கொண்டு, அசைய மறுத்தார்கள். தனியார் பள்ளிகளே தரமானவை என்ற சினிமாவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. இன்றோ, பள்ளிக்கூட வாசலுக்கு வந்த மக்கள், அதிகாரிகளை அங்கேயே வர வைத்தார்கள், வேலை வாங்கினார்கள், மாற்றத்தைத் தொடங்கி வைத்தார்கள்.

அரசுப்பள்ளி மோசம் – தனியார் பள்ளிதான் தரம் என்ற சினிமாவுக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்கள் இப்பள்ளியில். தமிழகம் முழுவதும், நாடு முழுவதும் மக்கள் தங்களது வேலைக்காரர்களை வேலை வாங்கும் நாள் வரும். நூறு சதவீத வெற்றி எல்லா அரசுப் பள்ளியிலும் சாத்தியமாகும் நாளும் வரும்.

தகவல் : புதிய ஜனநாயகம் செய்தியாளர், ஓசூர்.

4 மறுமொழிகள்

  1. இந்த சமூக விராேதிகளுக்கு வேற வேலையே இல்லையா …? அரசு பள்ளி பசங்களுக்காக இவ்வளவு துடிக்கிறார்களே … என்று சிலர் கேட்டாலும் கேட்பானுங்க ..நாட்டு நடப்பு அப்படி ..?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க