privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஎதையும் காணவில்லை இன்னும் - டிரேஸி சாப்மன் பாடல்

எதையும் காணவில்லை இன்னும் – டிரேஸி சாப்மன் பாடல்

-

நல்லகாலம் கெட்டகாலம்
இரண்டையும் பார்த்துவிட்டோம்

சன்னலின் வழியே
தப்பிப் பறக்கிறது நம்பிக்கை

அதிருஷ்டம் – அதுவோ
கதவைத் திறந்துகொண்டு
வெளியேறுகிறது.

புரிந்து கொண்டோம்
போகப்போக எல்லாம்
சரியாகிவிடும்
என்பதை மட்டும்
நம்பக்கூடாதெனப்
புரிந்து கொண்டோம்

ஏனென்றால்
நாங்கள் இன்னும்
எதையும் காணவில்லை

கைகள் கட்டப்படவில்லை
சுதந்திரம்!

ஆட்டம் என்னவோ
பழைய கோமாளி ஆட்டம்தான்.

ஒட்டம்… கால்கள் தரிக்காத ஒட்டம்
எங்கும் போய்ச் சேராத ஒட்டம்

புதிய பக்கம் – பழைய புத்தகம்
புதிய ஆட்டம் – அதே பழைய விதிகள்

விளக்கொளி தணிந்து
இருள்கிறது மேடை

இன்னும் எதையும் காணவில்லை நாங்கள்

சேனத்தில் பூட்டப்பட்டிருக்கின்றது
நொறுங்கிப்போன வாழ்க்கை.

நாற்பது ஏக்கர் நிலம்
நாற்பது அவுன்சு சாராயமாகித்
தொண்டையில் இறங்குகிறது.
இதுதான் நீதி போலும்!

டிரேஸி சாப்மன்
டிரேஸி சாப்மன்

போலிசு வண்டிகளின் ஊளைச் சத்தம்
அழுகுரலாய்த் தேய்ந்து கரைகிறது
சுதந்திரதேவிக் கைச்சுடரின்
நிழல் மறைவில்

அதோ… கரைக்கு அப்பால்
தொடுவானத்தில்
மெல்லக் கடலில் மூழ்குகின்றன
எங்களைப் பிணைத்து வந்த படகுகள்

இன்னும்
நாங்கள் எதையும் காணவில்லை.

குற்றமாய்க் கனக்கிறது வாழ்க்கை

இது வரமா இல்லை சாபமா
என் விருப்பமா இல்லை வெறுப்பா
இதைக் கைப்பற்றினேனா
பிடுங்கியெறியப்பட்டேனா

ஒடிவிடத் துடிக்கிறேன்
எங்கே ஒடுவேன்
போகுமிடம் எதுவுமில்லை

நின்றுதான் தீரவேண்டும்
முழந்தாளில் சரியமாட்டேன்
நிற்பேன் போராடுவேன்

உன்னதமான காலம் வரத்தான் போகிறதென்று
நம்பிக்கைக் கொள்வேன்
இறைஞ்சுவேன்

ஏனென்றால்
நாங்கள் எதையும் காணவில்லை
இன்னும்.

– டிரேஸி சாப்மன்

TRACY CHAPMAN

“Nothing Yet”

Good times and bad
Seen them both
Hope fly out the window
Fortune walk through the door
Learned not to believe
This is as good as it gets
Because we ain’t seen nothing yetHands untied
But the same shuffle once again
Running all the time
Ain’t going nowhere
It’s a new page in the same book
It’s a new game with the same rules
The lights go down
Fade to black on the set
And we ain’t seen nothing yet

Saddled with bonds
Broken and in disrepair
Forty acres to a forty-ounce
Don’t seem fair
The sirens rise and wail
Shadowed by Liberty’s torch
As the boats that brought us over
Are slowly sinking off the shore
And we ain’t seen nothing yet

This life a crime
A blessing and a curse
Chosen and unwanted
Displaced and usurped
I’d run away
But there is nowhere to go
So I’ll stand and fight
And hope and pray
That the best is yet to come
And we ain’t seen nothing yet

மெரிக்கக் கருப்பினப் பாடகி டிரேஸி சாப்மனின் பாடல்களை அவ்வப்போது வெளியிட்டிருக்கிறோம். அவரது சமீபத்திய பாடல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது இந்தப்பாடல்.

சொற்களின் பொருளை முந்திக் கொண்டு நுழைந்து இதயத்தைப் பிசைய வல்லது சாப்மனின் குரல். அமெரிக்கக் கருப்பின மக்களின் ஏமாற்றமும் குமுறலும் அவரது குரலின் மீதே ரேகைகளாய்ப் பதிந்துள்ளன.

எனினும், இந்தப் பாடலின் பொருளைப் புரிந்து கொள்வதற்கு அமெரிக்க ஆங்கில வழக்கு, கருப்பின மக்களின் வாழ்க்கை அனுபவம், குறிப்பான வரலாறு ஆகியவை குறித்துத் தெரிந்திருப்பது அவசியமாக இருந்தது.

இணையத்தின் மூலம் அறிமுகமான ஒரு தோழர் – கலிபோர்னியா மாநிலத்தில் தோட்டத் தொழிலாளி – விளக்கம் தந்து உதவினார். விளக்கத்தைச் சொற்களுக்கான அடிக்குறிப்பாகத் தருவதைக் காட்டிலும் கீழ்க்கண்டவடிவத்தில் தருவது வாசகர்களுக்குப் பயனுள்ளதெனக் கருதுகிறோம்.

***

முந்நூறு ஆண்டுகள் உழைத்து முடிந்து அமெரிக்கா எனும் நாட்டை உருவாக்கிய கருப்பினம் தலைமுறை தலைமுறையாக வஞ்சிக்கப்பட்டது. ஆபிரகாம் லிங்கனின் விடுதலைப் பிரகடனத்தில் தொடங்கி கருப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் வரை பலரது நம்பிக்கையூட்டும் பிரகடனங்களையும், முதலாளித்துவ அறிஞர்கள் -பாதிரிகளின் வாக்குறுதிகளையும் கேட்டுச் சலித்து விட்டனர் கருப்பின மக்கள்.

slaveவெள்ளை நிறவெறியையும் வறுமையையும் அமெரிக்க ஜனநாயகம் ஒழித்துவிடும் என்ற நம்பிக்கையை கருப்பின மக்கள் மீது எவ்வளவுதான் முயன்று திணித்தாலும்… தப்பிப் பறக்கிறது அவர்களது நம்பிக்கை.

அடிமைமுறை ஒழிந்துவிட்டது என்று ஜம்பம் பேசும் வெள்ளை ஆளும் வர்க்கத்தின் மீதும், இதைச் சுதந்திரம் என்று நம்பும் கருப்பின நடுத்தர வர்க்கத்தின் மீதும் சாட்டையாய் இறங்குகிது சாப்மனின் குரல். ”கைகள் கட்டவிழ்ந்தாலும் ஆடுவதென்னவோ கோமாளி ஆட்டம் தான்.”

1960-களில் கருப்பர்களைக் கைதுக்கி விடுவதாக அமெரிக்கா பீற்றிக் கொண்ட காலத்தில், சினிமா மற்றும் பொழுது போக்குத்துறைகளில் அவர்கள் அனுமதிக்கபட்டார்கள். ஆனால் அங்கும் அவர்கள் முட்டாள்களாகவும், கோமாளிகளாகவும், நாகரிகமற்றவர்களாகவும் தான் சித்தரிக்கப்பட்டார்கள். அன்று மேடையில் கருப்பர்கள் ஆடிய “ஷஃப்லிங்” என்றொரு நடனத்தைக் குறிப்பிட்டு, இன்று ஆடிக் கொண்டிருப்பதும் அதே ஆட்டம்தான் என்ற உண்மையை ”விளக்கொளி தணியும் மேடையின்” அயர்ச்சியுடன் வெளியிடுகிறார் சாப்மன்.

”நொறுங்கிப் போன வாழ்க்கை” என்ற சொல்லின் முழுப் பரிமாணத்தையும் உணர வேண்டுமானால் அமெரிக்கக் கருப்பின மக்களின் வரலாறு கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். ”ஏழு தலை முறைகள்” என்ற அலெக்ஸ் ஹெய்லியின் வரலாற்றுப் புதினம் வாழ்க்கையின் உயிர்த் துடிப்புடன் அந்த வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது.

சுதந்திரதேவி ஏந்தி நிற்கும் தீப்பந்தத்தின் ஒளியில் இந்த அநீதியைக் காண முடியவில்லையா? ’தீச்சுடரின் நிழல்' கருப்புச் சேரியின் மீது கவியும் போது எப்படிக் காணமுடியும்?
சுதந்திரதேவி ஏந்தி நிற்கும் தீப்பந்தத்தின் ஒளியில் இந்த அநீதியைக் காண முடியவில்லையா? ’தீச்சுடரின் நிழல்’ கருப்புச் சேரியின் மீது கவியும் போது எப்படிக் காணமுடியும்?

ஆப்பிரிக்கப் பழங்குடிச் சமூகத்தை விலங்குகளைப்போல் வேட்டையாடிக் கொண்டு வந்து; விலங்கினும் கீழாய்த் துன்புறுத்தி அமெரிக்கா என்ற சொர்க்கத்தை உருவாக்கிக்கொண்டார்கள் வெள்ளை முதலாளிகள் உருவாக்கித்தந்த கருப்பின மக்களில் ஆகப் பெரும்பான்மையினர் சென்னை மாநகரின் சேரிகளையொத்தவீடுகளில் வாழ்கிறார்கள். ’குற்றப் பரம்பரையாக’ மாற்றப்பட்டுச் சிறைகளில் வாடுகிறார்கள்.

300 ஆண்டுகள் உழைத்த கருப்பின விவசாயிகளுக்கு இரக்க மனம் கொண்ட வெள்ளை முதலாளிகள் சில பேர் 40 ஏக்கர் நிலமும் ஒரு கோவேறு கழுதையும் வழங்கிய ’பெருந்தன்மையை’ நினைவு கூறுகிறார் சாப்மன். முதலாளிகள் வழங்கிய நிலத்தை அமெரிக்க முதலாளித்துவம் விழுங்கி விட்டது.

இன்று எஞ்சியிருப்பது என்ன? நாற்பது அவுன்சு சரக்கு என்றழைக்கப்படும் மலிவான சாராயமும் கருப்பினச் சேரிக்குள் திடீர் திடீரென நுழைந்து ‘குற்றவாளிகளை’ அள்ளிச் செல்லும் போலீசு வண்டியின் ஊளைச் சத்தமும் பெண்களின் ஒலமும் தான்.

சுதந்திரதேவி ஏந்தி நிற்கும் தீப்பந்தத்தின் ஒளியில் இந்த அநீதியைக் காண முடியவில்லையா? ’தீச்சுடரின் நிழல்’ கருப்புச் சேரியின் மீது கவியும் போது எப்படிக் காணமுடியும்?

நீண்ட துயரத்தின் குறியீடாய், தங்களது வரலாற்றின் எஞ்சியிருக்கும் சாட்சியமாய் சாப்மனின் கண்களில் தென்படுகிறது ஒரு படகு. அவரது மூதாதையர்களை விலங்கிட்டுக் கொண்டு வந்த படகு. அந்தச் சாட்சியமும் அதோ மூழ்கிக் கொண்டிருக்கிறது.

நினைவில் படர்ந்து அலைக்கழிக்கும் வரலாற்றிலிருந்து, நினைவு திரும்பி சட்டெனத் தன்னையே ஒருமுறை ஏறு இறங்கப் பார்த்துக்கொள்கிறார். வசதியான வாழ்க்கை.

“மேலே மேலே ஏறி
முன்னேறி ஓடிவிடத் துடிக்கிறாயே
அந்த அறையை
மூடிவிட முயல்கிறாயே – முடியாது.

நம் முன்னோர்கள்
பசிதீராத ஆவிகள்.
அறை முழுவதும் அவர்களது எலும்புகள்
அந்த அறையை மூடமுடியாது”

– என்று கருப்பின மேட்டுக் குடியினரைத் தனது பாடலால் குத்திய சாப்மனுக்குத் தனது வாழ்க்கையே முள்ளாய் உறுத்துகிறது. கருப்பின வரலாற்றின் சோகம், மக்களின் அன்றாடத் துயரம் இவற்றின் பின்புலத்தில் தனது வெற்றியை எடைபோடும்போது அந்த முரண்பாடு அவரை நிலைகுலைய வைக்கிறது. நெஞ்சை அறுக்கிறது. வெள்ளை ஆதிக்கத்திற்கெதிரான அவரது விமரிசனம் உணர்ச்சிபூர்வமான சுய விமரிசனமாக மாறுகிறது.

அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான அவநம்பிக்கை, அந்தக் கணமே போராட்டத்தின் மீதான நம்பிக்கையாக வெடித்து முளை விடுகிறது. சொல்லும் குரலும், பொருளும் உணர்ச்சியும் சாப்மனின் கிதார் ஒலியில் இசைந்து அடங்குகிறது.

புதிய கலாச்சாரம், ஆகஸ்ட் 2001.