privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 2

போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 2

-

ஆரியப் படையெடுப்பும் நம்பூதிரியின் நயவஞ்சகமும்

பார்ப்பன சனாதன – இந்துமத வெறி பாசிசத்தை நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களை விட, உண்மையில் போலி மார்க்சிஸ்டுகள் தாம் மிகவும் அபாயகரமானவர்கள் என்று கடந்த ‘புதிய கலாச்சார’த்தில் குறிப்பிட்டிருந்தோம். ஏனென்றால் இவர்கள் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களைப் போல பகிரங்கமான முறையில் பார்ப்பனியத்தையும் பார்ப்பன ஆதிக்கத்தையும் காப்பதற்காகக் களத்தில் வந்து நிற்பதில்லை. மாறாக கம்யூனிசத்தின் பேரால் பாட்டாளி வர்க்க இயக்கத்துக்குள் புகுந்து கொண்டு நயவஞ்சகம் துரோகம், தத்துவ – வரலாற்றுப் புரட்டு ஆகிய மறைமுக வழிகளில் இதைச் செய்கிறார்கள்.

Group-Photo-of-Mundas-dravidas-nagasஆரியர்களின் ஆக்கிரமிப்பு; அதற்கு முன்பு இந்த துணைக்கண்டத்தில் நிலவிய சமூக அமைப்பு அதன் பொருளாதார பண்பாட்டு வளர்ச்சி; ஆரியர்கள் உருவாக்கிய பார்ப்பன சனாதன மதம், வருண – சாதி அமைப்பு; அதற்கு எதிராக புத்த-சமண மதங்கள், ஒடுக்கப்பட்ட வருண சாதி எழுச்சிகள்; அவற்றை அடக்குவதற்கு பார்ப்பனிய ஆதிக்க சக்திகள் மேற்கொண்ட அட்டூழியங்கள்; பார்ப்பன சனாதன மதமே அனைத்து மக்களின் ”இந்து” மதமென்று ஆதிசங்கரன் முதலியோர் செய்த பித்தலாட்டங்கள்; அதன் தொடர்ச்சியாக ”இந்துத்துவம்” தான் இந்தியப் பண்பாடு – தேசியம் என்கிற பெயரில் நடக்கும் பாசிச மோசடி ஆகிய அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் நிலைப்பாடுகளுக்கு இசைவான கண்ணோட்டத்தையே தமது மார்க்சிய வரலாற்று ஆய்வுகள் என்கிற பெயரில் சி.பி.எம்.மின் சித்தாந்த குரு சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் முன்வைக்கிறார்கள்.

ஆரியர்கள் இந்த நாட்டின் பூர்வகுடிகள் அல்ல. மத்திய ஆசியாவில் இருந்து அதிகபட்சம் போனால் நான்காயிரம் ஆண்டுகளுக்குள்ளாக இந்தியத் துணைக் கண்டத்துக்கு வந்தேறிய நாடோடிகளின் கூட்டம், அவர்களின் வருகைக்கு முன்பு இங்கு திராவிடர்கள். முண்டாக்கள். நாகர்கள் என்று வேறு பிற பூர்வகுடியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களில், குறிப்பாக திராவிடர்கள், ஆரியர்களைக் காட்டிலும் பன்மடங்கு வளர்ச்சியுற்ற உற்பத்திமுறையையும், நாகரிகம், பண்பாட்டையும் கொண்டிருந்தனர்.

well_harappa
மொகஞ்சதரோ

இது பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளால் அறியப்படும் ”சிந்து சமவெளி நாகரிகம்” மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது. இது நகர நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட அடிமைச் சமுதாயத்தின் ஆரம்ப நிலையில் இருந்தது; அப்போது தோன்றியிருந்த சமூக அமைப்பின் காரணமாக பெரும்பான்மையான மக்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டு, சிறு அளவிலான, நிரந்தரமான நகரப்படைகளே இருந்தன.

இப்படிப்பட்ட சமூக அமைப்புகளின் மீது அவற்றைக் காட்டிலும் பின்தங்கிய சமூக குழுக்கள் தாக்குதல் தொடுத்து வெற்றி கொள்வது வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல. அடிமைச் சமுதாய அமைப்பின் உச்சநிலையில் இருந்த கிரேக்கத்தையும், ரோமாபுரியையும், ஜெர்மானிய காட்டுமிராண்டிச் சமுதாயத்தினர் தாக்கி ஒடுக்கவும் ஆக்கிரமிக்கவும் முடிந்தது இதற்குச் சான்றாகும். அதேபோல ஆரியர்கள் உற்பத்திமுறை, நாகரிகம் – பண்பாடு ஆகியவற்றில் பின்தங்கியிருந்தாலும், எதிரிகளைத் தாக்கி அழிக்கவும். தப்பி ஓடவும் தேவையான விரைந்து செல்லும் குதிரைகள், ரதங்கள். கனரகப் பொருட்களை ஏற்றிச் செல்லும் காளை வண்டிகள் ஆகியவற்றைப் பெற்றிருந்ததோடு பெண்கள் உள்ளிட்ட அவர்களது நாடோடிக் கூட்டம் முழுவதுமே ஆயுத பாணியாக இருந்தது. இதன் காரணமாக இந்தியப் பூர்வகுடி சமூகங்களின் மீது அலை அலையாகப் படையெடுத்து தாக்குதல்கள் நடத்தி முதலில் சிந்து, பிறகு கங்கை சமவெளிகளை ஆரியர்கள ஆக்கிரமித்தனர். அவர்கள் வென்றடக்கிய இந்தியப் பூர்வகுடியினரை ”தாசர்கள்” – அடிமைகளாக்கினார்.

இவை எல்லாம் வரலாற்று வல்லுநர்களால் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்ட உண்மைகள். ஆனால் ஆரிய இனவெறியும், நிறவெறியும் பிடித்த ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் மேற்கண்ட வரலாற்று உண்மைகளை ஏற்பதில்லை. அவர்கள் 1960 வரை ஒரு விதமாக வாதித்து வந்தனர். அதன்படி ”ஆரியர்கள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து உலகம் முழுவதும் குடியேறிய வெள்ளை நிற இன பூர்வ குடிமக்கள் அவர்கள் மிகவும் முன்னேறிய உற்பத்திமுறை, நாகரிகம் – பண்பாடு ஆகியவற்றைக் கொண்டிருந்ததால், காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த இந்தியப் பூர்வகுடி இனத்தவரை வென்றடக்கவும், தமது வளர்ந்த சமூக அமைப்பை நிலைநாட்டவும் முடிந்தது”. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் சித்தாந்த குருக்களுடைய நூல்களில் ”இந்துத்துவ”, ”இந்துராஷ்டிர” கோட்பாடு இந்த அடிப்படையில் தான் அமைந்துள்ளது.

சிந்து சமவெளி நாகரிகம்
சிந்து சமவெளி நாகரிகம்

ஆனால் சமீப ஆண்டுகளில், இந்த நாட்டின் மீது முழு முதல் உரிமை கொண்டாடுவதற்காக ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் வேறொரு வாதம் புரிகின்றனர். இதன்படி, ”ஆரியர்களும் இந்தநாட்டின் பூர்வகுடிகள் தாம் வந்தேறிகள் அல்ல. ’ஆரியர்கள்’ என்கிற சொல் கல்வி கேள்விகள், ஒழுக்கத்தில் சிறந்த மேன்மக்கள் என்பதையே குறிக்கிறது. தனி பூர்வகுடி (RACE)யை அல்ல. சிந்து சமவெளி நாகரிகத்தைப் படைத்தவர்கள் ஆரியர்களே. சிந்து என்பது திரிந்து அந்நியர்களால் இந்து என்றழைக்கப்படுகிறது. இந்துக்கள் என்றழைக்கப்பட்ட இவர்கள் உருவாக்கிய வேதங்களை அடிப்படையாகக் கொண்ட நாகரிகம்-கலாச்சாரமே இந்தியக் கலாச்சாரம்” என்கின்றனர். இவ்வாறு இந்த மண்ணுக்கும், நாட்டுக்கும் ஆர்.எஸ்.எஸ். – பார்ப்பனர்கள் முழு முதல் உரிமை கொண்டாடுகின்றனர். ”அதன்மூலம் இசுலாமியரும் கிறித்தவரும் அந்நிய மண்ணைப் புனிதமாகக் கருதுபவர்கள்; இந்த நாட்டின் மீது விசுவாசம் வைப்பவர்கள் அல்ல. ஆகவே, அவர்களைக் கொன்றொக்க வேண்டும், வென்றடக்க வேண்டும், அல்லது துரத்தியடிக்க வேண்டும்” என்கிற ”இந்துத்துவ”க் கோட்பாட்டுக்குப் பொருத்தமாக வைக்கப்பட்டதே இந்த இரண்டாவது வாதம். அயோத்தி பாபரி மசூதியானது ராமன் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதுதான் என்று நிருபிக்குமாறு தனது அகழ்வாய்வு மற்றும் வரலாற்று வல்லுநர்களை முடுக்கி விட்டதைப் போலவே இந்த வாதத்துக்கும் ஆதாரங்களை உருவாக்குமாறு இப்போது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் சிலரைப் பணித்துள்ளார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் குருநாதராக பி.ராமமூர்த்தி!

பி.ராமமூர்த்தி
பி.இராமமூர்த்தி

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் மேற்கண்ட இரண்டு வாதங்களுக்கும் மாறி மாறி வலுச்சேர்க்கும் இனப்பாசத்தோடு, சி.பி.எம். கட்சியின் சித்தாந்தக் குருமார்கள் நடந்து கொள்கின்றனர். காலத்துக்கும் இடத்திற்கும் பொருத்தமான முறையில் எழுதுவதன் மூலம் இதைச் செய்கின்றனர்.

“ஆரியப் படையெடுப்பு ஆக்கிரமிப்பு” குறித்து முன்பு நாம் தொகுத்தளித்த முடிவுகள் நமது நாட்டு மற்றும் மேலை நாட்டு வரலாற்று வல்லுநர்கள் மட்டுமல்ல, இந்தப் போலி மார்க்சிஸ்டுகள் ஏற்றுக் கொண்டுள்ள ”சோவியத் ஒன்றிய” ஆய்வாளர்களும் நிரூபித்துள்ளவை தாம். ஆனால் மாண்டுபோன கம்யூனிச துரோகி பி. ராமமூர்த்தி இது குறித்து பின்வருமாறு எழுதியுள்ளார்.

”ஆரியர்கள் என்று பெயர் கொண்டு எந்தக் கூட்டத்தினரும் வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்று சொல்வதற்கு வரலாற்று ஆதாரம் கிடையாது. அதனால் தான் அந்த ஆரியர்கள் என்பவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள் என்பதைப் பற்றி நடத்திய ஆராய்ச்சிகளில் ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை.

வர்ணாசிரம தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட பிராமணிய மதத்தை உண்டாக்கியவர்கள் பிறப்பினால் மேல் சாதி, கீழ் சாதி என்ற பாகுபாட்டை ஏற்படுத்தியபோது, அதை நிலை நாட்டுவதற்காக பிராமண சத்திரிய வைசிய ஜாதியினரை ’ஆரியர்’ என்று சொல்லிக் கொண்டார்கள். ‘ஆரியர்’ என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ’மேலோன்’ என்பதாகும். மக்கள் பேசி வந்த பிராக்ருதம், பைசாசி, பாலி முதலிய மொழிகளில் ‘ஆரியர்’ என்ற சொல் கிடையாது. காளிதாசன் எழுதிய சகுந்தலத்தில் யஜமானுடைய குடும்பத்தினரிடம் உரையாடுவதைக் காணலாம். யஜமானுடைய மகனை அவன் ’ஐயா அத்தா’ என்று அழைப்பதைக் காணலாம். அதாவது இது ’ஆரிய புத்ரர்’ என்ற சமஸ்கிருதச் சொல்லின் பிராக்ருதச் சொல். தமிழ் நாட்டிலும் ஐயா என்ற அழைக்கும் பழக்கமுள்ளதைக் காணலாம். தன்னைக் காட்டிலும் மேலோன் என்பது அதன் பொருள்” (பி. ராமமூர்த்தியின் ”ஆரிய மாயையா? திராவிட மாயையா?” விடுதலைப் போரும் திராவிட இயக்கமும், பக்-256)

’ஆரியர்’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு ’மேலோன்’ என்று பொருளாம். இருக்கட்டுமே. அதனால் ஆரியர்கள் என்கிற பூர்வகுடி இனம், மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறியது என்பது எப்படித் தவறாகிவிடும். அப்படி வந்தவர்கள் தாம் ஆரியர்கள் என்பதும் மாந்தவியல், அகழ்வாய்வு மற்றும் மொழி ஆய்வுகளைக் கொண்டு அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது. எனவே, சி.பி.எம். கட்சியின் சித்தாந்த தலைமைக் குரு சங்கரன் நம்பூதிரி மேலும் ”திறமை”யாகத் திரித்துப்புரட்டி பின்வருமாறு எழுதுகிறார்:

நம்பூதிரிபாடின் கண்டுபிடிப்புகள்!

நம்பூதிரி
நம்பூதிரிபாட்

”ஆரியர்கள், திராவிடர்கள் என்ற இரண்டு மனித வம்சாவழியினர் மட்டும் தான் இருந்தனர் என்பதும் முதல் பகுதியினர் இரண்டாவது பகுதியினரை ஆக்கிரமித்து ஆதிக்கம் பெற்றனர் என்ற கருத்தும் ஆதாரமற்றது என்று இந்த அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். இந்தியாவுக்குள் நுழைந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்ற ஒரே மனித வம்சத்தினர் அல்ல. அவர்களிலேயே பல்வேறு கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். வாழ வழிதேடி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லவும் புதிய இடங்களில் உள்ளவர்கள் மீது ஆதிக்கம் பெறவும் முயற்சித்தவர்கள் பல்வேறு கோத்திரங்களைச் சார்ந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குள்ளேயே பல நேரங்களில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களது ஆக்கிரமிப்புகளுக்கு இரையான பிரதேசங்களைச் சார்ந்தவர்களும் பல்வேறு கோத்திரங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இவ்வாறு கோத்திர வர்க்க சமூகம் வீழ்ச்சியடையும் நிகழ்ச்சிப் போக்குகளுக்கிடையில் குடியிருப்பதற்கான இடம், ஆடு மாடுகளை மேய்ப்பதற்கான வசதி, உணவுப் பொருட்களை சேகரிப்பது உற்பத்தி செய்வது ஆகிய பிரச்சினைகளிலும் பரஸ்பரம் மோதிக் கொண்டிருந்த பல்வேறு மக்கட் பகுதியினரில் ஒரு பிரிவினருக்குத்தான் ’ஆரியர்கள்’ என்ற பெயர் கிடைத்துள்ளது”.

”இந்தப் பெயர் அவர்களுக்குக் கிடைத்ததற்காக காரணங்குறித்து சில அறிஞர்களின் கருத்து இதுதான்: சமுதாயத்தில் மெல்ல மெல்ல ஏற்பட்டு வந்த வளர்ச்சி ஒரு பிரிவினரை மற்றவர்களைக் காட்டிலும் உயர்வான கலாச்சார நிலைக்கு இட்டுச் சென்றது. அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் உயர்வான ஒரு மொழியை உருவாக்கினர். இவ்வாறு ஒரு உன்னத நிலையை அடைந்த மொழி ஆரிய மொழி என்று அறியப்படத் தொடங்கியது. இதுதான் பின்னர் சமஸ்கிருத மொழியாக வளர்ச்சியடைந்தது”.

”இந்த மொழியைப் பயன்படுத்திய முன்னேறிய பகுதியினர் பல்வேறு கோத்திரங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அதாவது ’ஆரியர்கள்’ என்கிற ஒரு மனித வம்சத்தைச் சேர்ந்தவர்களல்ல. பல்வேறு வம்சா வழியினரில் ஒரு சிறுபிரிவினர் அடைந்த முன்னேற்றத்தைக் குறிக்கிற ‘ஆரியமொழி’யை உருவாக்கி அதனைப் பயன்படுத்தி ரிக் வேதம் முதலிய நூல்களை இயற்றவும் செய்தவர்கள் ’ஆரியர்கள்’ ஆனார்கள்.

மொகஞ்சதரோ, ஹரப்பா நாகரிகம்
மொகஞ்சதரோ, ஹரப்பா நாகரிகம்

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் நிலைப்பாட்டுக்கு வலு சேர்ப்பதற்காகவே, சங்கரன் நம்பூதிரி தனக்கேயுரிய தந்திரமான முறையில் வாதங்களை முறுக்கி, மழுப்பி, புரட்டிப் புரட்டி வைப்பதை இதில் காணலாம். முதலில் ‘ஆரியர்களின் வருகை’ என்று குறிப்பிடுகிறார். பிறகு இந்தியாவுக்குள் நுழைந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்ற ஒரே மனித வம்சத்தினர் அல்ல என்கிறார். அப்படி என்றால் ஆரியர்கள் தவிர வேறு மனித வம்சத்தினர்களும் வந்தார்களா? அவர்கள் எந்தெந்த வம்சாவழியினர்? என்ற கேள்விகளும் எழுகின்றன. இதற்குப் பதில் சொல்வதற்குப் பதில் பல்வேறு கோத்திரங்களைச் சேர்ந்தவர்களும் இந்தியாவுக்குள் நுழைந்து வந்தார்கள் என்கிறார். பல்வேறு கோத்திரங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால் என்ன? அவை எல்லாம் ஒரே வம்சாவழியை பூர்வகுடி இனத்தை சேர்ந்ததாக ஏன் இருக்கக்கூடாது. ஒரே வம்சாவழிக்குள் பல கோத்திரங்கள் இருப்பது சமூகங்களின் வரலாற்றில் எங்கும் காண்பதுதானே? இது எப்படி ஆரியர்களின் படையெடுப்பை மறுப்பதாகும்? மேற்கண்ட வாதங்கள் மூலம் ஆரியப் படையெடுப்பையும் ஆக்கிரமிப்பையும் ஆதாரமற்றது என்று நிராகரிக்கிறார் சங்கரன் நம்பூதிரி.

வெளியிலிருந்து குடியேறிய பல்வேறு மனித வம்சாவழியினர் (பூர்வகுடியினர்), இங்கேயே இருந்த பல்வேறு வம்சாவழியினர் (பூர்வகுடியினர்) இந்த எல்லா பூர்வகுடியினங்களின் பல்வேறு கோத்திரங்களை சேர்ந்த பல்வேறு மக்கள் பிரிவினருக்குள் பல்வேறு பிரச்சினைகளுக்காக நடந்த மோதல்கள்-என்னும் நிகழ்ச்சிப் போக்கில் உயர்வான கலாச்சார நிலையை எட்டிய, உன்னதமான சமஸ்கிருத மொழியையும், அதில் வேதங்கள் முதலிய நூல்களையும் படைத்த ஒரு பிரிவு மக்கள்தான் ”ஆரியர்கள்” என்று ஒரு வரையறுப்பும் தருகிறார், சங்கரன் நம்பூதிரி.

இப்படி இந்தியாவிலேயே உருவாகிய ஆரியர்கள், சிந்து கலாச்சாரத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து உருவான சூனியநிலையில் அப்பிரசேத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர்; அப்படிப்பட்ட ஆக்கிரமிப்புக்கு ”இரையானவர்களை” தாசர்களாக அடிமைகளாக்கியும் தாமே ஆண்டைகளாகியும் ஒரு புதிய சமூக அமைப்பை உருவாக்கினார்கள் என்கிறார் சங்கரன் நம்பூதிரி.

நாகரிகம்
திராவிடர்கள், ஆரியர்களைக் காட்டிலும் பன்மடங்கு வளர்ச்சியுற்ற உற்பத்திமுறையையும், நாகரிகம், பண்பாட்டையும் கொண்டிருந்தனர்.

இதன் மூலம் பின்வரும் முடிவுக்கு வருகிறார்: ஆரிய ஆக்கிரமிப்புக்கு முன்பு வட இந்தியாவில் இருந்தது புராதனப் பொதுவுடைமைச் சமுதாயத்தின் வடிவிலான கோத்திர வர்க்க சமூகம்; அதைத் தகர்த்து வருண அடிப்படையிலான அடிமைச் சமூகத்தை உருவாக்கியதன் மூலம் ஆரியர்கள் முற்போக்கு பாத்திரமாற்றினர்; பின்தங்கிய சமூக அமைப்பும், கலாச்சார சூன்யநிலையும் நிலவிய போது, அதைவிட முன்னேறிய சமூக அமைப்பையும், கலாச்சாரத்தையும் ஆரியர்கள் உருவாக்கினர். ஆனால் தென்னிந்தியாவில் இந்த நிகழ்ச்சிப்போக்கு ஆரிய ஆக்கிரமிப்பால் நடக்கவில்லை. திராவிட பூர்வகுடி இனத்தினராலேயே ஏற்பட்டது என்கிறார் சங்கரன் நம்பூதிரி. ஆக, ஆரியப்படையெடுப்பு – ஆக்கிரமிப்பு, ஆரிய – திராவிடப் போர்கள் ஆகிய அனைத்தும் ஆதரமற்ற முடிவுகள் என்று நிராகரிக்கிறார்.

வரலாற்றுப் புரட்டின் நோக்கம் என்ன?

இந்தியத் துணைக் கண்டத்துப் பூர்வகுடி இனங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு அழிவு வேலைகள் செய்து, தனது இன ஆதிக்க சமூக – மத அமைப்பை உருவாக்கியது மட்டுமல்ல, அவற்றுக்கான பாரம்பரியப் பெருமை பாராட்டி, மீண்டும் உயிர்ப்பிக்கவும், இனவெறி – நிறவெறி பாசிசத்தை நிலைநாட்டவும் முயலுகின்றனர், ‘ஆரிய இன வாரிசுகள்’. அவர்கள் மீது இந்த நாட்டு மக்கள் நியாயமான வெறுப்பும் கோபமும் கொண்டிருக்கின்றனர். இதை மழுங்கடிக்கும் நோக்கத்துடன் புனையப்பட்டது தான் சங்கரன் நம்பூதிரியின் வரலாற்று ஆய்வு முடிவுகள். ஆரியர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள்; இந்த நாட்டின் கலாச்சார தத்துவ-மத வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் காரணமானவர்கள் என்பதே அவரின் வாதங்கள். ஆனால், இதற்கான ஆதாரங்கள், ஆய்வுகள் எதுவும் அவர் முன்வைக்கவில்லை. வெறும் கோட்பாடுகளும், முடிவுகளும் மட்டுமே எழுதியுள்ளார்.

ஆனால் சங்கரன் நம்பூதிரியின் மலையாள ஆராய்ச்சி முடிவுகளுக்கும் கோட்பாடுகளுக்கும் தமிழில் மொழி பெயர்ப்பும், பாஷ்யமும் (பொழிப்புரைகளும்) எழுதும் ’குட்டி சித்தாந்த குரு’ பி.ஆர்.பரமேசுவரன். தமிழ்நாட்டில் நிலவும் பார்ப்பனிய எதிர்ப்பு நிலைமைகளுக்குப் பொருத்தமாக பின்வருமாறு எழுதுகிறார்.

பரமேசுவரனின் பித்தலாட்டம்!

Kosambi-dd
டி.டி.கோசம்பி

”ஆரியர்கள் மத்திய ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். குறிப்பாக சொல்வதென்றால் இன்றைய உஸ்பெகிஸ்தான் என்று கூறுகிறார் டி.டி. கோசாம்பி” (மார்க்சிஸ்ட் மாத இதழ் நவ. 1990 பி.ஆர். பரமேசுவரன் பக். 35-36). ”இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்களும் இங்கிருந்த பூர்வகுடி மக்களுடன் நீண்டகாலம் யுத்தம் செய்து இறுதியில் அவர்கள் மீது வெற்றி பெற்றனர். உண்மையில் இந்திய உபகண்டத்தை ஆக்கிரமித்த முதல் அன்னியர்கள் ஆரியர்கள்தான்”. (மேற்படி, – 40 பக்)

”ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரீகம் இந்திய உபகண்டத்தின் ஒரு பரந்த பிரதேசத்தில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே – கி.மு. 3250-லேயே இருந்ததாக இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் நிறுவனர் ஜான் மார்ஷல் வரையறுத்துக் கூறியுள்ளார். கி.மு. 1700 வரை இந்நாகரீக சமுதாய வாழ்க்கை முறை நீடித்து இருந்து வந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. இடைக்காலத்தில் இச்சமுதாயத்தில் ஏற்பட்ட உள் முரண்பாடுகள், இயற்கையின் சீற்றம், பூகம்பம், சிந்து நதியின் போக்கில் ஏற்பட்ட மாறுதல், வறட்சி – இத்தகைய பல்வேறு காரணங்களால் பல பகுதிகள் புதையுண்டு போயின. எஞ்சியவர்கள் பலவீனமடைந்தனர். இறுதியாக ஆரியர்களின் படையெடுப்பு ஹரப்பா – மொகஞ்சதாரோ நாகரீகத்தின் – சிந்து நாகரீகத்தின் தனித்தன்மையை முற்றாக அழித்தது”.

“ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்ட பல்வேறு காரணங்களினால் ஹரப்பா – மொகஞ்சதாரோ நாகரீகம், சிந்து நாகரீகம் அழிந்து வந்த காலத்தில் தான் ஆரியர்கள் இந்திய உபகண்டத்துக்குள் நுழைந்தனர். இவர்கள் எங்கிருந்து வந்தனர்? எவ்வழியாக வந்தனர்? இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்ததாகப் பொதுவாகக் கருதப்படுகிறது. இவர்கள் ஆப்கானிஸ்தான் வழியாகவோ அல்லது ஈரான் வழியாகவோ வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மத்திய ஆசியப் பகுதியிலிருந்து (முன்னாள் சோவியத்தின் உஸ்பெக் குடியரசுப் பகுதி) புறப்பட்ட ஆரியப்பூர்வகுடியினர் பல்வேறு காலங்களிலும் பல்வேறு மார்க்கங்களிலும் இந்திய உபகண்டத்தில் குடியேறினர். கி.மு. இரண்டாயிரத்துக்குப் பின்னர்தான் ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தனர் என்பது தான் பொதுவாக வரலாற்று ஆசிரியர்கள் கருத்து”.

”ஆரியர்கள் பல கோத்திரங்களாக இந்தியா வந்தனர். யமுனை, கங்கை நதிக்கரைகளில் குறிப்பாக கங்கை நதிக்கரையில் இவர்கள் குடியேறினர். ஆகவே ஆரிய நாகரீகம் கங்கை நதிக்கரை நாகரீகம் என்று அழைக்கப்படுகின்றது. இந்தியாவின் வடக்கிலும் மேற்கிலும் பரவியிருந்த ஹரப்பா-மொஹஞ்சதாரோ நாகரீகத்தை உருவாக்கிய திராவிட இன மக்களுடன் போரிட்டும். இரண்டற இணைந்தும் தங்களை இங்கு நிலைநாட்டிக் கொண்டனர். இந்திய உபகண்டத்தில் ஆரியர்களின் குடியேற்றம் பல்வேறு முறைகளில் நிகழ்ந்தது. சோவியத் வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ள ’இந்தியாவின் வரலாறு’ என்னும் நூலில் இவ்வாறு கூறுகின்றனர்”.

ஜான் மார்ஷல்
ஜான் மார்ஷல்

”பல்வேறு பிரதேசங்களில் இந்தோ -ஆரியர்களின் குடியேற்றம் ஒரே மாதிரியாக நிகழவில்லை என்பது கூறாமலே விளங்கும். பல்வேறு இனக் குழுக்களோடு அவர்களுடைய பரஸ்பர பாதிப்பும் வெவ்வேறு வகையில் நிகழ்ந்தது. மொழிஇயல், தொல்பொருள் இயல் சான்றுகளைக் கொண்டு பார்க்கும் போது பஞ்சாபில் ஆரியர்கள் முதன்மையாக திராவிட இனக்குழுக்களுடன் கலந்து பழகத் தொடங்கினார்கள். தன்மயமாக்கும் நிகழ்வு முறை இங்கே கணிசமாக விரைவில் நடந்தேறியது. முன்னர் மிக உயர்ந்த நிலையிலிருந்த பண்பாட்டின் ஒரு சில மரபுகள் அனேக வட்டாரங்களில் இன்னும் எஞ்சி இருந்தமையால் ஆரியர்கள் வட்டார மக்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டார்கள். கிழக்கு பஞ்சாபில் சில பிரதேசங்களில் வட்டார இனக் குழுக்கள் ஆரியர்களைத் தீவிரமாக எதிர்க்கவில்லை. எனவே, அவர்கள் புதிய நிலப்பரப்புகளில் குடியேறியவாறு விரைந்து கிழக்கே சென்றார்கள். வேத இனக் குழுக்களின் மொழியிலும் இது பிரதிபலித்தது. திராவிட மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகளின்மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கு செலுத்தின என்று ரிக் வேதத்தின் மற்றும் பிற வேத சம்ஹிதைகளின் மொழி இயல் பகுப்பாய்வுகள் காட்டியது. ஆனால், இந்த பரஸ்பர பாதிப்பு நீடிக்கவில்லை”.

”இந்தியாவின் கிழக்குப் பிரதேசங்களில் வசித்த முண்டா இனக் குழுக்களுடன் இந்தோ – ஆரியர்களின் பரஸ்பர பாதிப்பு வேறு வகையில் நிகழ்ந்தது. பல முண்டா இனக் குழுக்கள் வேத இனக் குழுக்களால் காட்டுப் பிரதேசங்களுக்கு விரட்டியடிக்கப்பட்டன”. (“மார்க்சிஸ்டு” மாத இதழ், பி.ஆர். பரமேசுவரன் பக். 22–27)

ஆக, மேற்கண்டவற்றில் இருந்து பார்க்கும்போது சி.பி.எம்.மின் குட்டி சித்தாந்தக் குரு பி.ஆர். பரமேசுவரன் எழுதி வருவன பல விசயங்களில் ராமமூர்த்தி, நம்பூதிரியின் கோட்பாடுகள், முடிவுகளுக்கு மாறாக இருப்பது தெரிகிறது. ஆரியர்கள் அன்னிய பூர்வகுடியினர் தாம். வெளியிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள் தாம் மொகஞ்சதாரோ – ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்துவெளி நாகரீகம் என்பது திராவிட பூர்வகுடி இனத்தவருடையது தான் என்பதை ஆதாரங்களுடன் ஒப்புக் கொள்கிறார் பரமேசுவரன்.

தாக்குண்ட மக்களுக்கு ஆரிய எழுச்சி ஏற்படுத்திய அழிவுகள் அனேக தடவைகள் ஈடு செய்ய முடியாத அளவில் உள்ளன
தாக்குண்ட மக்களுக்கு ஆரிய எழுச்சி ஏற்படுத்திய அழிவுகள் அனேக தடவைகள் ஈடு செய்ய முடியாத அளவில் உள்ளன

அதே சமயம் தன்பங்குக்கு நம்பூதிரியின் வரலாற்றுப் புரட்டுகள் சிலவற்றை நியாயப்படுத்தவும் செய்கிறார். பரமேசுவரன் சிந்துச் சமவெளி நாகரீகம் உள்முரண்பாடு-போர்களினாலோ, இயற்கை சீற்றங்களினாலோ அழிந்து போய் அங்கு ஒரு கலாச்சார சூனியநிலை நிலவிய போது, அப்பகுதியை ஆக்கிரமித்த ஆரியர்கள் ஒரு புதிய சமூக அமைப்பை உருவாக்கி முன்னேறினர் என்கிற சங்கரன் நம்பூதிரியின் கண்டுபிடிப்பை பரமேசுவரன் நியாயப்படுத்துகிறார். ஆனால் அவரே காட்டியுள்ள மேற்கோளில் டி.டி.கோசாம்பி பின்வருமாறு எழுதியுள்ளார்.

”ஆரியப் பண்பாடு என்று பேசும் போது அதன் பொருளைத் தெளிவாக்குவது அவசியம். கி.மு. மூன்றாயிரமாவது ஆண்டு காலத்தின் பெருநகரப் பண்பாடுகளுடன் ஒப்பிடும்போது, ஆரியர்கள் நாகரீகமற்றவர்கள் அவ்வுயர்ந்த பண்பாடுகளை அவர்கள் தாக்கியதோடு மட்டுமல்லாமல் அநேக தடவைகள் சின்னா பின்னமும் செய்துள்ளனர். அவ்வாறு தாக்குண்ட மக்களுக்கு ஆரிய எழுச்சி ஏற்படுத்திய அழிவுகள் அனேக தடவைகள் ஈடு செய்ய முடியாத அளவில் உள்ளன” (1990 நவம்பர் மார்க்சிஸ்ட் இதழில் மேற்கோள் பக். 36-37).

ஆரியர்களின் ஆக்கிரமிப்பு – அழிவு பற்றிய இந்தக் கருத்தை மேற்கோள்காட்டிய அதே பரமேசுவரன் பின் வருமாறும் எழுதுகிறார்: இந்தியாவின் பூர்வகுடி மக்களான திராவிடர்கள் உருவாக்கிய மொகஞ்சதாரோ – ஹரப்பா நாகரீகம் அழிந்து போனபின் புதையுண்டு போனபின் ஏற்பட்ட நாகரித்தின் சூழ்நிலையில் ஆரியர்கள் இந்தியாவந்தடைந்தனர் என்பதே வரலாற்றாசிரியர் பலரின் கருத்து. பி.ஜே.பி. இந்து வகுப்புவாதக் கும்பல் கூறுவதுபோல், ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடி மக்களல்லர் என்பதுதான் உள்நாட்டு, அயல்நாட்டு வரலாற்று ஆசிரியர் பெரும்பாலோரின் கருத்து” (193 அக் மார்க்சிஸ்ட் இதழ் பக் 31)

ஹரப்பா நாகரிகம்
மொகஞ்சதாரோ – ஹரப்பா நாகரீகம் திராவிடர் உருவாக்கியது என்பதையும் அவருக்கு இடித்துரைக்க வேண்டும்?

”ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடி மக்களல்லர்” என்று பி.ஜே.பி. இந்து வகுப்புவாதக் கும்பலுக்கு மறுப்புச் சொல்லும் பரமேசுவரன் அதே கருத்தை சுற்றி வளைத்துச் சொல்லும் நம்பூதிரிக்கும் தானே மறுப்புச் சொல்ல வேண்டும்? மொகஞ்சதாரோ – ஹரப்பா நாகரீகம் திராவிடர் உருவாக்கியது என்பதையும் அவருக்கு இடித்துரைக்க வேண்டும்?

ஆனால், அவ்வாறு செய்யாதது மட்டுமல்ல, ஆதாரங்கள் பல இருந்தபோதும் தீராத பிரச்சினைகள் என்று சந்தேகம் எழுப்பும் வகையில் அவரே பின் வருமாறு மழுப்பியுள்ளார்.

நம்பூதிரிக்கு முட்டுக்கொடுக்கிறார். பரமேசுவரன்!

“சிந்து சமவெளி நாகரீக மக்கள் எழுத்து வடிவம் கொண்ட மொழியினையும் கொண்டிருந்தனர். அந்த எழுத்து வடிவங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கண்டெடுத்துள்ளனர். ஆனால், அவைகளை இன்று வரையிலும் யாராலும் படித்தறிய முடியவில்லை. ஆகவே அவை இன்றைய இந்திய மொழிகளில் எதனையும் ஒத்ததாக இல்லை என்பது தெளிவாகிறது”

”ஆரியர்கள் வருவதற்கு முன்னால் இந்திய உபகண்டத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரும் ஒரே இனத்தவர்களா? அனைவரும் திராவிடர்களா? வேறு இனத்தவர் எவரும் இருந்ததில்லையா? அவர்களின் பூர்வீகம் என்ன? எங்கிருந்து வந்தனர் என்பது போன்ற ஏராளமான பிரச்சினைகளுக்கு விடைகான வேண்டியுள்ளது. உலக நிலப்பிரப்பில் முதன் முதலாக குரங்கிலிருந்து மனிதனாக மாறிய நிகழ்ச்சிப்போக்கு நடந்தேறிய பிரதேசங்களில் இந்தியக் கண்டமும் ஒன்றாக இருக்கலாம் என்பது சில சோவியத் விஞ்ஞானிகளின் கருத்து. ஆகவே இந்திய உபகண்டத்து மக்கள் வேறு எங்கிருந்தாவது வந்தவர்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை”. (’93 டிசம்பர் மார்க்சிஸ்ட்’ இதழ் பக்:22-23)

சிந்து சமவெளி நாகரீக மொழி – எழுத்து திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் திராவிட முண்டா நாகா ஆகியோர் இந்தியத் துணைக் கண்டப் பூர்வகுடி இனத்தவர்கள் என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்னும் குழப்பும் நோக்கத்துடனேயே எழுதுகிறார், பரமேசுவரன் ஏனென்றால், ”திராவிட மொழிகள் இந்தோ – ஆரிய மொழிகளின் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கு செலுத்தின என்று ரிக் வேதத்தின் மற்றும் பிற வேத சம்ஹிதைகளின் மொழி இயல் பகுப்பாய்வுகள் காட்டின” என்று சோவியத் அறிஞர்களின் முடிவுகளை மேற்கோள் காட்டும் பரமேசுவரன் ”சிந்து சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துக்களை யாரும் படித்தறியவில்லை; அவை இன்றைய மொழிகளில் எதனையம் ஒத்ததாக இல்லை” என்று சாதிக்கிறார்.

hinduism
வேத நாகரீகத்தை உருவாக்கிய மக்கள் பகுதியினரும், பிறகு இஸ்லாமிய, கிறித்துவ மதங்களை உருவாக்கியவர்களும் ஆரம்ப சரித்திர காலகட்டத்தில் ஒரே நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள் தான்!

எவ்வாறாயினும் ஆரிய ஆக்கிரமிப்பு – அழிவு வேலைகளை மறைத்து அல்லது அவர்கள் அவ்வளவு ஒன்றும் அழிவை ஏற்படுத்திவிடவில்லை. அதற்கு மாறாக ஆக்கப் பணிகள் புரிந்துள்ளனர் என்று சித்திரிப்பதே அவர்களின் நோக்கம். இந்த நோக்கத்தோடு ஆரியர்களின் புகழை ஏற்றிப் போற்றும் வகையில் இன்னொரு புளுகையும் அவிழ்த்து விட்டுள்ளார்.

இமாலயப் புரட்டு!

”மத்திய ஆசியாவிலிருந்து புறப்பட்ட ஆரிய பூர்வகுடியினர் கிழக்கில் இந்தியா, ஈரான் போன்ற நாடுகளுக்கும் மேற்கில் கிரீஸ் ரோம் போன்ற நாடுகளுக்கும் மேற்கு ஆசிய நாடுகளுக்கும் சென்றனர். இன்று இந்துவும் இசுலாமும், கிறித்தவமும் முற்றிலும் மாறுபட்ட முரண்பட்ட மதங்களாகக் காட்சியளிக்கின்றன. ஆனால், இவைகளைத் தோற்றுவித்தவர்களின் முன்னோர்கள் அனைவரும் ஒரே இடத்திலிருந்து புறப்பட்டு பல்வேறு திசைகளை நோக்கிச் சென்றவர்கள் தான் என்பது சிந்தனைக்குரிய செய்தியல்லவா?” தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரி பாட் அவர்கள் இதைப்பற்றி கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:
“வேத நாகரீகத்தை உருவாக்கிய மக்கள் பகுதியினரும், பிறகு இஸ்லாமிய, கிறித்துவ மதங்களை உருவாக்கியவர்களும் ஆரம்ப சரித்திர காலகட்டத்தில் ஒரே நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள் தான்!”

அரபு, செமட்டிக் பூர்வ குடியினத்தவர்களே இஸ்லாமிய கிறித்துவ மதங்களை உருவாக்கியவர்கள் என்பது உலகமறிந்த உண்மை. இருந்தபோதும், நாஜி இட்லரையும், அவரது சித்தாந்த குரு நீட்சேயையும் மிஞ்சும் அளவுக்கு, உலக மதங்களையும், பண்பாடுகளையும் உருவாக்கியவர்கள் தமது பூர்வகுடி முன்னோர்களான ஆரியர்களே என்று சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் உரிமை பாராட்டிக் கொள்கிறார்கள்.

– தொடரும்.

புதிய கலாச்சாரம் ஜூலை 94

  1. வரலாற்றை இயங்கியல் நோக்கில்பார்க்க மறுப்பது மார்க்சியருக்கு அழகா? இப் பொருள் குறித்த வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் அவர்களின் அண்மையக் கருத்துகளையும் காண்பது அவசியம்! அப்படியே தவறான பார்வை என்றாலும் அதை முன்வைக்கிறவர் உண்மையில் சாதியரா என்பதை அவரின் வாழ்முறை கொண்டு நோக்க வேண்டாமா? இங்கிருந்த எந்தவொரு “பார்ப்பன எதிர்ப்பு” அரசியல்வாதியையும்,சித்தாந்தவாதியையும் விடவும் உண்மையாகத் தங்களின் சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் பார்ப்பனியத்துக்கு எதிராக நடந்து காட்டிய மார்க்சியத் தோழர்களை வசைபாடல் மிகவும் கண்டிக்கத் தக்கது. மமதாவையும் , இந்து மத வெறியரையும் விட மோசமானவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர் என்பது எவ்வகைப் ‘புரட்சிகரப்’ பார்வையோ யாமறியோம்!

    • வினவின் புரட்சிகரப் பார்வையைப் பற்றி நீங்களறிவது இருக்கட்டும். இந்துத்துவ வெறியர்களைப் போன்று சிந்திக்கும் ‘மார்க்சிஸ்டுகளைப்’ பற்றி ஏதாவது அறிந்து கொள்ள முயலுங்கள் சாமிக்கண்ணு…..

      • அருள்கூர்ந்து அடுத்தவருக்கு உபதேசிப்பதை/அடுத்தவரை அர்ச்சிப்பதை நிறுத்திவிட்டுத் (தங்களின் வெற்று முழக்கங்களையும் ஓரங்கட்டிவிட்டு) கடந்த நாற்பதாண்டு காலமாக நாடாளுமன்றப் பாதையைப் புறக்கணித்த நீங்கள் மக்களை எவ்வளவு தூரம் “புரட்சிகரமானவர்களாய்” மாற்றியுள்ளீர்கள் என்பதை ஆய்வு செய்யுங்கள்! மார்க்சிஸ்ட் கட்சியைச்சாடுவதில் “சூனாமானா”ப் பகுத்தறிவுக் கூட்டத்துடன் போட்டியிடுவதை நிறுத்துங்கள்! மார்க்சியம் பேசிக் கொண்டே வெறும் இனவெறிப் பரப்புரையில் இறங்குவதால் யாருக்கு நன்மை? வரலாற்றை இயங்கியல் நோக்கில் பார்க்க முயலுங்கள்; அவ்வப்போது கிடைக்கும் புதுப்புது தரவுகளுக்கொப்ப முந்தைய முடிபுகள் மேலும் செழுமை பெறவோ அல்லது மாறுபடவோ கூடும் என்பதை உணருங்கள்! எல்லாவற்றுக்கும் மேலாகக் காவி நச்சரவம் படமெடுத்து ஆடுவதை–சிவப்பு, கருப்பு இரண்டையும்– ஒரு சேரக் கடிக்கப் பாய்வதைக் காணத் தவறாதீர்கள்!

    • /தங்களின் சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் பார்ப்பனியத்துக்கு எதிராக நடந்து காட்டிய மார்க்சியத் தோழர்களை வசைபாடல் மிகவும் கண்டிக்கத் தக்கது. /

      இந்த கட்டுரை தொடரிலேயே நம்ம சி.பி.எம் தோழர்கள் எழுதியதை எடுத்து போட்டிருக்கிறார்கள். சாமிக்கண்ணு அவர்களே,
      பார்ப்பனியத்திற்கு ஆதரவாக எழுதிய,பேசியவர்கள் சொந்த வாழ்க்கையில் எப்படி பார்ப்பனியத்திற்கு எதிராக செயல்பட்டிருக்க முடியும்.

  2. நம்பூதிரிபாடு, மாணிக்சர்க்கார் இவர்களை வைத்து ‘எளிமையாக’ வாழ்வதாக விளம்பரம், சில தோழர்களைக் காண்பித்து பார்ப்பன எதிர்பார்களாக வாழ்வதாக சொல்வது இருக்கட்டும் கட்சியில் குறிப்பாக பொலிட்பீரோவில் உள்ள தலைவர்களாவது நம்பூதிரிபாடு, சர்க்கார் போலவோ, அல்லது திரு.சாமிக்கண்ணு சுட்டிக்காட்டுவது போன்ற தோழர்களைப் போல வாழ்க்கை நடத்துகிறார்களா என்று கூற முடியுமா? சோம்நாத் சட்டர்ஜி என்ற பெருச்சாளியை கட்டுச்சோற்றில் வைத்து அவஸ்தைப்பட்ட கதையை மறந்துவிட்டாரோ?

  3. ஆரியர் என்பது அன்னியர் என்பதன் இன்னொரு வடிவம். எலியன் என்பது திரிந்து ஆரியன் என
    மருவியது.திராவிடர் என்பது ஒரு குருதி வகையை குரிப்பது. ஆகையால் அந்த சொல் ஒர் இன
    குழுவை அடையாலப்படுத்துவது.ஆனால் ஆரியர் எனும் சொல் அயலார் அனைவரையும் ஒட்டு
    மொத்தமாக குரிப்பது.அது ஒர் இனக்குழுவை சுட்டும் சொல் அல்ல!ஆனால் ஆரியர் என்பதை
    ஒர் இனக்குழுவுடன் குழப்பிக்கொவதால் வரலாரு குழம்பி விடுகிரது.

  4. Dravida is a sanskrit word. No tamil classical literature has the word Dravidam. Mother tongue of Dravidans is Sanskrit. Tamilians are from southern africa. They have african DNA. They migrated and settled in Kumari Kandam. After kumari kandam destroyed they came into India. They are not the natives of India. We need to send them back to africa.

  5. வாட்ஸாப்பில் வரும் தமிழர் பெருமை கட்டுரை படித்தது போல இருக்கிறது . மிகவும் தரம் குறைந்த கட்டுரை . ஆரியர் வருகை என்பதும் , சிந்து சமவெளியில் தமிழர் இருந்தனர் என்பதுவும் எல்லாம் ஒரு கருத்துரு மட்டுமே . நிரூபிக்க பட்டவை அல்ல .
    ஆதாரம் என்ன என்று கேட்பதையே அறிவிற்கு அப்பாற்பட்டது என்பது போல எழுதி இருப்பது மதவாதிகளை விட பெரிய பாசிசமாக இருக்கிறது .

    அடுத்து என்ன? குமாரி கண்டத்தில் மனிதன் தோன்றினான் என்பதை நவீன ஆரியர்கள் மாற்றி எழுதுகிறார்கள் என்ற கட்டுரையா ?

    • Renowned epigraphist Iravatham Mahadevan,Finnish specialist in Vedic philology Asko Parpola and renowned historian Romila Thapar are of firm opinion that only Dravidian civilization prevailed in Indus Valley.Especially,Asko Parpola focused his attention on deciphering the Indus script.He co-authored the books-“Corpus of Texts in the Indus script” in 1979 and “A coincidence to the Texts in the Indus script” in 1982.With the assistance from UNESCO and cooperation of the Archeological departments of India and Pakistan,Asko Parpola has painstakingly compiled photo albums and published two volumes of corpus of Indus seals and inscriptions in 1987 and 1991.The above mentioned books have already established themselves as standard reference works and indispensable tools for further research on the Indus script.In his latest book,Parpola has concluded that Indus civilization is Pre-Aryan and Non-Aryan.He sets out in detail the evidence for believing that the Harappans were Dravidian speakers.The complete absence of the horse among the animals so prominently featured on the Indus seals is good evidence for the Non-Aryan character of the Indus civilization.The wild relatives of the horse and donkey are not native to South Asia and the domesticated animals were brought into the region from the west and the north.
      Parpola concludes that Brahui (a Dravidian language spoken even today by large numbers of people in Baluchistan and the adjoining areas in Afghanistan and Iran)represents the remnants of the Dravidian language spoken in the area by the descendants of the Harappan population.
      Survival of place-names is generally a good indicator of the linguistic pre-history of a region.Parpola points out several place names in the north western region like NAGARA,PALLI,PATTANA and KOTTA with good Dravidian etymologies.
      “Nationalistic bias makes it difficult for some North Indians to admit even the possibility of the Indus civilization being Pre-Aryan:they deny the very concept of Aryan immigration and insist that the Harappan and Vedic cultures are one and the same.So the language chosen has usually been Sanskrit”-Parpola in his latest book (p-58).
      Why blame the North Indians?We have Tamil friends like Raman calling all the research carried out by Asko Parpola,Romila Thapar,Archeologist John Marshal and Iravatham Mahadevan and their finding that the Indus Civilization prevailed in 3250 BC and the Aryan invasion happened in BC 2000 as mere “opinion” and not proven.Raman,the genius will not accept all these findings and can’t you not call his opinion as fascist?
      Let Raman read this link-https;/www.harappa.com/script/maha15.html

  6. //வாட்ஸாப்பில் வரும் தமிழர் பெருமை கட்டுரை படித்தது போல இருக்கிறது . மிகவும் தரம் குறைந்த கட்டுரை . ஆரியர் வருகை என்பதும் , சிந்து சமவெளியில் தமிழர் இருந்தனர் என்பதுவும் எல்லாம் ஒரு கருத்துரு மட்டுமே . நிரூபிக்க பட்டவை அல்ல .// இராமன் அவர்களே ! அதிர்ச்சியாக இருக்கின்றது. ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் ஆதாரங்களுடன் இதனை நிருபித்து உள்ளன.

  7. //ஆதாரம் – நிரூபணம் என்பது வேறு , வாதம் – அனுமானம் என்பது வேறு// நான் மேற்கண்ட லிங்கில் சென்று பார்த்தேன். அஸ்கோ பார்பலோ, இதனை நன்றாக நிருபித்து உள்ளார். அதாவது, ஆதார்ங்கள், தரவுகள் உடன்.

Leave a Reply to சாமிக்கண்ணு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க