privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்நீர்நிலைகளை மீட்கும் வழித்தடம் போராட்டம்தான் - சென்னை உரை

நீர்நிலைகளை மீட்கும் வழித்தடம் போராட்டம்தான் – சென்னை உரை

-

நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும் !

சென்னை கருத்தரங்க உரைகள்

தோழர் . அமிர்தா
தோழர் . அமிர்தா

சென்னை பூந்தமல்லியில் மக்கள் அதிகாரம் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் மாணவரணி செயலர் தோழர் பிரின்ஸ் என்னரசு பெரியார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் தோழர் சுந்தரவள்ளி, மற்றும் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆகியோர் உரையாற்றினார்கள். இதில் திரளாக தோழர்களும், ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் கலந்துகொண்டார்கள். கருத்தரங்கிற்கு மக்கள் அதிகாரத்தின் சென்னை மண்டல குழு உறுப்பினர் தோழர் அமிர்தா தலைமை தாங்கினார்.

 இந்துத்துவாவிற்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும்
பிரின்ஸ் என்னாரசு பெரியார்

”இந்துத்துவாவிற்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும்.  நாம் ஒன்று சேர்ந்தால் இந்துத்துவாவிற்கு எதிராக மாறுவோம் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும் அதனால் திட்டமிட்டே கலவரங்களை உருவாக்குகிறார்கள். மேலும் நதிநீர் இணைப்பு பேசப்படுகிறது. ஆனால் இன்று நதிநீர் இணைப்பு சாத்தியமா? இல்லையா? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. இது யாருக்கு சாதகம், பாதகம் என்று நாம் ஆய்ந்து பார்க்க வேண்டும்.

முல்லை பெரியார் அணையில் நீர்ப்பிடிப்பு பகுதிகள் கட்டிடங்களாக மாறியுள்ளன. அந்த அணையினுடைய நீர் மட்டத்தை உயர்த்தினால் அந்த கட்டிடங்களில் முதலீடு செய்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள். பெரும் முதலாளிகளின் சொத்து பாதிக்கப்படும் என்ற காரணத்தால் முல்லை பெரியாறு அணையின்  நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என அவர்கள் பிரச்சினை செய்கிறார்கள். இது எல்லாவற்றையும் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இன்றைக்கும் நர்மதா அணை பிரச்சனை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

தோழர் . பிரின்ஸ் என்னாரசு பெரியார்
தோழர் . பிரின்ஸ் என்னாரசு பெரியார்

மூன்றாம் உலக நாடுகளில் உருவாக்கும் தொழிற்சாலைகளை நாம் தொழில் வாய்ப்பாக பார்த்தோம். ஆனால் திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளில் வரும் சாயப்பட்டறை கழிவுகளால் நாம் நம் நீராதாரங்களை இழந்திருக்கிறோம். ஒரு ஜீன்ஸ், ஒரு டி-சர்டை உருவாக்க ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் செலவாகிறது. வளர்ச்சி திட்டங்கள் என்று சொல்லப்படும் அரசின் திட்டங்கள் அனைத்தும் அரசின் புறம்போக்கு நிலத்தில் தான் கட்டப்பட்டிருக்கிறது. சென்னையைச் சுற்றிருந்த நீர்நிலைகளை தான் இன்று நாம் வாழ்விடங்களாக மாற்றியிருக்கிறோம். காரணம் மக்கள் தொகையும், பொருளாதாரமும் பெருகியிருக்கிறது. கடந்த 100 ஆண்டுகளில் 30 கோடியாக இருந்த மக்கள் தொகை 120 கோடியை தாண்டியிருக்கிறது.

மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப இடம் விரிவாகவில்லை. இடங்களை ஆக்கிரமிக்க வேண்டிய நிலையில் எளிதாக கிடைப்பது நீர்பிடிப்பு இடங்கள் தான். பல்லாயிரம் ஏக்கர்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கல்வி நிறுவனங்களை பற்றி பேசுவதில்லை. யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள். ஊடகமும் எழுப்பாது. அரசு நான்கு ஏக்கரில் ஒரு பேருந்து நிலையம் அமைத்தால் அதை ஊடகங்கள் குற்றஞ் சாட்டுகிறது. ஏனென்றால் தங்களின் முதலாளிகள் நடத்தும் கல்வி நிறுவனங்களை குற்றம் சாட்டமுடியாது என்ற நிலையில் தான் அவர்கள் இருக்கிறார்கள். ஆக நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தே நமக்கு மிக தாமதமாக வந்து சேர்கிறது. இந்த பிரச்சனை என்பது காவிரியோடு, முல்லை பெரியாரோடு, பாலாறோடு, கிருஷ்ணா நதியோடு, வைகையோடு முடிவதில்லை, ஆக்கிரமித்திருக்கிற நீர்நிலைகளோடு மட்டும் முடிவதில்லை. மிக பரந்துப்பட்டளவில் இதைப்பற்றிய பார்வை தேவைப்படுகிறது. இதை மக்களிடத்தில் பரவலாக கொண்டு செல்ல வேண்டிருக்கிறது” என பேசினார்.

நேர்மையான மக்கள் போராட்டத்தை  மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்போம் !
– தோழர் சுந்தரவள்ளி

”இயற்கை வளங்கள் அனைத்தும் மக்களுக்கே சொந்தம் என்ற அடிப்படையில் கருந்தரங்கம் நடந்து கொண்டிருக்கிறது. மிக குறுகிய காலத்தில் மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு விரைவாக வளர்ந்து வரும் இயக்கமாக உள்ளது. மக்கள் அதிகாரம் அமைப்பு இந்த சமூகத்தில் ஒரு முன்மாதிரியான அமைப்பாக நிற்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. நாம் தண்ணீர் வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகத்தில் தீச்சட்டி எடுத்து தெரு தெருவாக அம்மாவிற்காக காவடி எடுக்கிறார்கள். மீனவருடைய பிரச்சனையை மீனவருடைய பிரச்சனையாக பார்க்க பழகிவிட்டோம். ஒரு நெசவாளியின் பிரச்சனையை நெசவாளியின் பிரச்சனையாக பார்க்க பழகிவிட்டோம். ஒரு தொழிலாளியின் பிரச்சனையை தொழிலாளியின் பிரச்சனையாக பார்க்க பழகிவிட்டோம். அதே போலத்தான் ஒரு விவசாயினுடைய பிரச்சினையை கூட இத்தனை ஆண்டு காலம் விவசாயினுடைய பிரச்சனையாக மட்டுமே பார்த்தோம். விவசாயி கடன் கட்டவில்லை என்றால் கைது, ஆனால் பல கோடி கொள்ளையடித்த முதலாளியின் ரேசன் அட்டையை மட்டும் முடக்குகிறது அரசு. அவன் தான் தினமும் ரேசன் கடையில் நின்று பாமாயில், மண்ணெண்ணெய் வாங்க போகிறானா? எவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறது இந்த அரசு.

தோழர் . சுந்தரவள்ளி
தோழர் . சுந்தரவள்ளி

காவிரிப் பிரச்சினையை இரண்டு மாநிலங்களின் பிரச்சனையாக மட்டும் சுருக்கி பார்க்க முடியுமா? ஜல்லிகட்டு பிரச்சனையில் நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக சொன்ன மோடி அரசு, ஏன் காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பை அமுல்படுத்த மறுக்கிறது? காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த உடனே தண்ணீர் பிரச்சனை தீரும் என்பது மூட நம்பிக்கை. ஏற்கனவே கர்நாடகாவில் மாற்றி மாற்றி காங்கிரசும், பி.ஜே.பியும் தான் ஆட்சிக்கு வருகிறார்கள். அதனால் ஓட்டு வங்கியாக மக்களை பயன்படுத்த இரண்டு கட்சிகளும் செயல்படுகிறார்கள். அதனால் தான் இந்த பிரச்சனை தீர்க்கபடாமல் இருக்கிறது. தமிழகமே வறண்டு போய் கொண்டிருக்கிறது. பன்னாட்டு கம்பெனிகள் தெளிவாக சுரண்டுகின்றன. ஒரு பக்கம் கோக் கம்பெனி தண்ணீரை உறிஞ்சு எடுக்கிறான். கேரளாவில், ஒரு பிளாச்சிமடா என்ற கிராமத்தில் இருக்கும் பஞ்சாயத்து தலைவர் பிளாச்சிமடாவிற்குள் கொக்கோ கோலா கம்பெனி வர கூடாது என்று கூற முடிகிறது. ஆனால் இந்திய அரசால் தடைவிதிக்க முடியாது.

பன்னாட்டு கம்பெனிகள் நம்முடைய தண்ணீர் வளத்தை பல விதத்தில் சுரண்டுகின்றன. தாமிரபரணி தண்ணீர் கொள்ளையடிக்கப்படுகிறது. நீர் மேலாண்மை குறித்து இன்று இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அறிவில்லை, தமிழர்களுக்கு அறிவு உண்டு. கோயில்களுக்கு முன்பு குளம் இருந்தது. அது ஊரில் நீராதாரமாக இருந்தது. ஆனால் இன்று மதுரை நீதிமன்றமே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கிறது. ஏரி, குளங்களை அழித்துவிட்டோம். காவிரிக்காக போராடும் அதே நேரம் உள்ளூரில் இருக்கும் முதலாளிகளுக்கு எதிராகவும் போராட வேண்டியிருக்கிறது. நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள பெரும் முதலாளிகளை எதிர்த்து போராட வேண்டிருக்கிறது. நீரை ஒரு கருவியாக வைத்து நம்மை காலில் விழ வைக்கும் வேலையை பா.ஜ.க அரசாங்கம் செய்கிறது.

கர்நாடகாவை எதிர்ப்பதோடு நம்முடைய போராட்டம் சுருங்கி விட கூடாது. உள்ளூரில் நீராதாரங்களை காப்பாற்றுவதுடன் மத்திய அரசு நமக்கு எதிராக இருப்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் எல்லாம் தமிழர்களுக்கு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என்ற உண்மையையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிருக்கிறது. பன்னாட்டு கம்பெனிகளுக்கு எதிராக போராடும் அதே நேரத்தில் உள்ளூர் நீர்நிலை காப்பாற்ற போராடும் போது தமிழகத்திற்கான நீராதாரங்களை நாம் பெற முடியும். அத்துனை வேலைகளிலும் நாம் ஒன்றாட இணைந்து செயல்பட வேண்டிருக்கிறது. அதற்கான ஒரு வழித்தடத்தை உண்மையிலேயே மக்கள் அதிகாரம் தொடங்கியிருக்கிறது. இந்த அமைப்புடன் இன்னும் முற்போக்கு இயக்கங்களை ஒன்று திரட்டி கொண்டு ஒரு நேர்மையான மக்கள் போராட்டத்தை  மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்போம்”

ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் கிரிமினல்மயமாகியிருக்கிறது !
தோழர் ராஜு, மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர்

”தண்ணீர் விட மாட்டேன் என்கிறது கர்நாடக அரசு, மைய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டது. உச்சநீதிமன்றமும் சொன்னது சரிதான் என்று சொல்லிவிட்டது. இப்போது காவிரியில் இருந்து தண்ணீர் வருவது உத்திரவாதம் கிடையாது. விவசாயிகள் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படியே இழுத்தடித்தால் பருவமழை வந்துவிடும். இப்படி அவர்கள் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கட்சிகளை மக்கள் பிரச்சனையை தீர்ப்பார்கள் என்று அவர்கள் பின்னால் போக முடியாது. பிரச்சினை தீர்ப்பது என்பது காவிரியோடு முடிவதில்லை. நீர்நிலைகள் முழுவதும் நாம் பாதுகாக்க வேண்டும்.  யார் நீர்நிலைகளை அழித்தார்களோ, ஆற்றை கொள்ளையடித்தார்களோ, அவர்களை வைத்து கொண்டு அவர்களிடம் மனு கொடுத்து எப்படி காப்பாற்ற முடியும்? மணற் கொள்ளை சம்பந்தமாக பொதுப்பணித்துறை பொறியாளரிடம் பேசினால் காசு வாங்காத கட்சிகள் யாரும் கிடையாது.

தோழர் . ராஜூ
தோழர் . ராஜூ

இந்த மணற் கொள்ளை என்பது அதிகாரிகள் தான் செய்கிறார்கள், ஆட்சியாளர்கள் தான் செய்கிறார்கள், நீதிமன்றங்கள் அதை பாதுகாக்கிறது. நிலத்தடி நீர் பல மடங்கு குறைந்து விட்டது. இதை பார்த்து தான் மணற்கொள்ளைக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். ஆனால் சாதி கலவரத்தை தூண்டுவது, பொய் வழக்கு போடுவது, மத கலவரத்தை தூண்டுவது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு போடுவது என்று ஒடுக்குகிறார்கள். ஒரு தாசில்தாரோ, போலீஸ்காரர் ஒருத்தரோ உண்மையிலேயே பிடிக்க போனால் அவர்களை கொலை செய்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக எல்லா ஆறுகளும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆற்றின் மணல் மீண்டும் வந்த சேர எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று சொல்ல முடியாது. இது எல்லா அதிகாரிகளுக்கும் தெரியும். யாரை வைத்து இதை தடுக்க போகிறோம். நீராதாரங்களை காப்பாற்ற போகிறோம்.

இந்த கட்டமைப்பு பிரச்சனைகளுக்கு என்ன தீர்வை சொல்வது என்ற ஆற்றலை இழந்து நிற்கிறது. தோற்றுப்போய்விட்டது, மக்களுக்கு வேண்டாத சுமையாக மாறிவிட்டது. மக்களுக்கு எதிர்நிலை சக்தியாக மாறிவிட்டது. அதனால் இந்த அரசு கட்டமைப்பில் முறையிட்டு இவர்களிடம் நாம் பிரச்சனையை தீர்க்க முடியாது. இந்த கட்டமைப்பிற்கு வெளியில் தான் மாற்று இருக்கிறது.

காவிரி பிரச்சனை 100 ஆண்டுகளாக இருக்கிறது. விவசாயிகள் பிரச்சனையாக மட்டும் பார்க்கப்பட்ட இந்த பிரச்சனை இன்று ஒட்டு மொத்த தமிழகத்தின் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இது ஒரு சாதகமான விசயம்.

காவிரி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் உச்ச நீதிமன்றத்திற்கு கிடையாது, மத்திய அரசிற்கும் கிடையாது, கர்நாடக அரசிற்கும் கிடையாது, தமிழக அரசிற்கும் கிடையாது. வழக்கு போட்டால் முடிந்து விட்டது என்று தான் நினைக்கிறார்கள். இது என்ன ஜெ-வினுடைய சொத்து குவிப்பு பிரச்சனையா? தனியாக பார்ப்பதற்கு. தமிழகத்தினுடைய பிரச்சனை. அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டி  இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என ஏன் செய்யவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது, என்கிறான். பேச்சு வார்த்தை நடத்தி தீர்க்க முடியவில்லை என்பதால் தானே நீதிமன்றத்திற்கு 30 வருடத்திற்கு முன்பே இப்பிரச்சினை சென்றிருக்கிறது. பிரச்சினையை  மத்திய அரசு தான் தீர்க்க வேண்டும். ஆனால் அவர்கள் செய்ய மறுக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை குறைத்து கொண்டு வருகிறது. அரசியல் கட்சிகளுக்கு உண்மையாக இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற நோக்கமில்லை. ஆனால் கர்நாடகாவில் வெறித்தனமாக இருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் கருணை அடிப்படையில் ”வாழு வாழவிடு” என்கிறது. மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த கூடாது என்கிறார். காங்கிரஸ் அடிக்கடி கூடி உச்சநீதிமன்றத்திற்கு எதிராக தீர்மானம் போடுகிறது. உன்னுடைய தீர்ப்பு ஒன்றும் என்னை கட்டுபடுத்தாது என்கிறான்.

மக்கள் (1)இதில் கட்டமைப்பு நெருக்கடி என்பது, இந்த பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தீர்க்கணும் என்று நினைத்தாலும் மேலும் மேலும் பிரச்சனையை உருவாக்குகிறது. மோடி பிரச்சனையை தீர்க்கனும் என்று நினைத்தாலும் மேலும் மேலும் அதிகரிக்கிறது. சுவாதி கொலையில் ஏன் சி.சி டி.வி வைக்க வில்லை என்று நீதிமன்றம் கேட்கிறது. சி.சி.டி.வி வைக்காதது தான் சுவாதி கொலைக்கு காரணாமா? சேலம் வினுப்பிரியா போலிசிடம் போன பிறகும் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை, தற்கொலை செய்து கொண்டார். அதனால் போலீசிடம் போனாலும் அது தான் கதி. காவிரி பிரச்சனை லட்சக்கணக்கான விவசாயிகளின் பிரச்சனையாக பார்க்கப்படுவதில்லை.

பி.ஜே.பி  – ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய கொள்கையை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்வேன் என்று சொல்லி அதிகாரத்தை பிடிப்பதில்லை.  மற்ற கட்சிகளை போல் அதை செய்தேன், இதை செய்தேன் என்று பேசுவதில்லை. சாதி, மத, இன கலவரத்தை வைத்து பிணந்தின்னி கழுகை போல தான் அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள். அதை தான் அவர்கள் யுத்தியாக, சாதனையாக வைத்திருக்கிறார்கள். இது தான் அவர்களின் அடிப்படை சித்தாந்தம். கர்நாடகாவில் சிறுபான்மை தமிழர்களை எதிரியாக உருவாக்குகிறான். பெரும்பான்மை கன்னடர்களை வாக்குவங்கியாக மாற்ற முயல்கிறான்.

கர்நாடாகா அரசு விவசாய நிலபரப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.  பெங்களூருக்கு தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. பன்னாட்டு கம்பெனிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்கிறான். நீச்சல் குளத்திற்கு கொண்டு செல்கிறான். போராடும் விவசாயிகளுக்கு சாதாரண மக்களுக்கு போதுமான அளவு காவிரி நீர் போவதில்லை. அங்கு குடகுமலையில் கேளிக்கை விடுதிகள் கட்டுகிறான், காபி தோட்டங்களை போடுகிறான், தனியார்மய, தாராளமய கொள்கையின் இயற்கை அழிப்பால் பொதுவிலேயே மழை குறைந்துவிட்டது. அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.  பெங்களூரில் தண்ணீர் விநியோக உரிமையை பன்னாட்டு கம்பெனிகள் வைத்திருக்கிறான். எவ்வளவு பிரச்சனையிருந்தாலும் மத்திய மாநில் அரசுகளின் கொள்கை தனியாருக்கு தண்ணீர் தருவதாக தான் உள்ளது. எவ்வளவு தண்ணீர் இருக்கிறதோ தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை பற்றி பேச வேண்டும். ஆனால் உச்சநீதிமன்றம் பேசாது, மத்திய அரசு பேசாது. எந்த அமைப்பிடம் போய் கேட்பது. இதை தான் கட்டமைப்பு நெருக்கடி என்கிறோம்.

DSCN0286தமிழ்நாடு பார்ப்பன எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, இவையெல்லாம் வேறூன்றிய நாடு. அவனால் நம்மை அழிக்க முடியவில்லை. தமிழ் சமஸ்கிருதம் கலக்காமல் தனியாக நிற்கிறது. மலையாளம் உள்ளிட்ட மற்ற திராவிட மொழிகளில் சமஸ்கிருதத்தை கலந்து விட்டான். ராமனை செருப்பால் அடிப்பது தமிழ்நாட்டில் மட்டும் தான் சாத்தியம். பிள்ளையாரை புறக்கணிப்பது தமிழ்நாட்டில் மட்டும் தான் சாத்தியம்.

கெயில் குழாய் பதிப்பு பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கு எதிராக சொல்கிறான். கூடங்குளம் மக்கள் போராடுகிறார்கள் அங்கு மேலும் இரண்டு அணு உலைக்கு அனுமதி கொடுக்கிறார்கள். போராடுகிற மக்கள் மீது அரசுக்கு எதிராக போர் தொடுப்பது என்ற  வழக்கு போடப்படுகிறது. யாருக்கு ஆதரவாக இருக்கிறது மத்திய அரசாங்கமும் நீதிமன்றமும். காவிரியில் தண்ணீர் வந்தால் மணல் அள்ள முடியுமா? காவிரியில் தண்ணீர் வந்தால் மீத்தேன் வாயுவை எடுக்க முடியுமா? நிலக்கரி எடுக்க முடியுமா? விவசாயிகள் நிலங்களை விட்டு விரட்டப்படனும். தண்ணீர் விட்டாலும் கடைமடை பகுதிக்கு போகுமா? பாசன வசதி இருக்கிறதா? லட்சக்கணக்கான விவசாயினுடைய எதிர்காலம் குறித்து எந்த திட்டமும் இல்லை. தண்ணீர் என்பது மனிதர்களுக்கு மட்டும் உரியது இல்லை. ஒட்டுமொத்த ஜீவராசிகளுக்கு உரியது.  எதிர்கால  தலைமுறைக்கு உரியது. இந்த அரசு என்பது இயற்கை வளங்களின் காப்பாளர் தான். உரிமையாளர் கிடையாது. காப்பாளர் விற்க முடியாது. தண்ணீர் வந்து விவசாயம் செய்தால் விளைப்பொருளுக்கு பணம் தருவதில்லை. கரும்பு ஆலை முதலாளிகள்  கரும்புக்கு 850 கோடி பணம் தரவில்லை. எல்லா வகையான போராட்டங்கள் செய்தும் வரவில்லை.

எல்லா பிரச்சனைக்கும் இந்த கட்டமைப்பில் தீர்வு இல்லை. கல்வி பிரச்சனை, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, போலீசே திருடுவது, கொலை, கொள்ளையை தடுக்க முடியாததது என எல்லாவற்றையும் தொகுத்து பார்த்தால் இந்த முடிவிற்கு வர முடியும். ஆகவே ஜனநாய முற்போக்கு சக்திகள் இணைந்து  இற்றுப்போன எதிர்நிலை சக்தியாகிப்போன இந்த அரசுக் கட்டமைப்பை தூக்கியெறிவோம்.”

தகவல் : மக்கள் அதிகாரம்,
சென்னை. தொடர்புக்கு 91768 01656

Add to Anti-Banner

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க