privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திநீர் மீதான அதிகாரம் மக்கள் கையில் - தஞ்சை உரை

நீர் மீதான அதிகாரம் மக்கள் கையில் – தஞ்சை உரை

-

காவிரி நீர் தமிழக உரிமை என்பதை ஆழமான வகையில் உணர்த்தும் வண்ணம் அமைந்திருந்தது மக்கள் அதிகாரம் நடத்திய தஞ்சை கருத்தரங்கம்.

மக்கள் அதிகாரம் மண்டலக்குழு உறுப்பினர் தோழர்.மாரிமுத்து தலைமையில் 08-10-2016 அன்று தஞ்சை பெசண்ட் அரங்கத்தில் கானல்நீர் ஆகும் காவிரி நீர், தொடரும் துரோகங்கள், விடிவுக்கு வழிதான் என்ன? என்ற கேள்வியுடன் நதிநீர் சிக்கல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழக ஜனநாயக விவசாயிகள், தொழிலாளர்கள் சங்க மாநிலதலைவர் என்.குணசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ( சி.பி.ஐ ).மாவட்ட செயலாளர் ப.பாலசுந்தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ( சி.பி.ஐ. ( எம் ) ) மாவட்ட செயலர் சாமி.நடராஜன். தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் த.மணிமொழியன் வேளாண் வல்லுனர் வ.பழனியப்பன் ஆகியோர் உரையாற்றினர்.

காவிரி நீர் பிரச்சனை கடந்து வந்த பாதை, டெல்டா விவசாயிகளின் இன்றைய நிலை, மீத்தேன் நிலக்கரி எடுப்பு சதி செயல்கள் என்று விரிவாக தமது கருத்துக்களைப் பதிவு செய்து ஒன்றுபட்ட போராட்டத்திற்கு அனைவரும் அறைகூவல் விடுத்தனர்.

நிறைவுரையாற்றிய மக்கள் அதிகாரம் தலைமைக்குழு உறுப்பினர் தோழர்.காளியப்பன் ;  “காவிரி நீர் சிக்கல் என்பது ஓர் குறியீடு. அது பெருகிவரும் நீர் சிக்கலின் ஒரு பகுதி. தமிழகத்தின் தண்ணீர் தேவை 1700 டிஎம்சி  ஆகும். நாம் 185 டிஎம்சி  நீருக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். இது மொத்த நீர் தேவையில் 18 சதவிகிதம்தான்.

அன்றாடம் குடங்களை ஏந்தி குடிநீருக்காகப் போராடும் மக்களும், ரூ2-க்கு தண்ணீர் பாக்கெட் எங்கும் கிடைக்கும் என்ற நிலையும் ஒரே நேரத்தில் நாம் காண்கிறோம். இச்சிக்கலை விரிந்த பார்வையில் பார்க்க வேண்டிய தேவை உள்ளது. இதன் பொருள் காவிரிநீர் போராட்டத்தை மறுப்பது என்பது அல்ல. இதை குறுக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. வரலாற்று வழியாகவும், சட்டப்படியும் காவிரி நீரில் தமிழக உரிமை கேள்விக்கிடமற்றது. ஒன்றுபட்டுப் போராடி உரிமையை நிலைநாட்டும் அதேவேளையில் விரிந்த பார்வையில் இதனைப் பரிசீலிக்க வேண்டும்.

தஞ்சை கருத்தரங்கம்
தோழர் . காளியப்பன்

2012இல் உருவாக்கப்பட்ட புதிய தண்ணீர்; கொள்கை தண்ணீரை வணிகப் பண்டமாக்கி விட்டது. பெப்ஸி, கொக்ககோலா, சூயஸ் ஆகிய பன்னாட்டுக் கம்பெனிக்கு நீர் ஆதாரங்கள் தாரை வார்க்கப்பட்டு விட்டது. ஜார்க்கண்டில் ஆறு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. விவசாயிகள் காசுகொடுத்து நீரை வாங்குகின்றனர். கிணற்று நீரைகூட இனி பயன்படுத்த முடியாது என்ற நிலையை நோக்கிச் செல்கிறது.

இதற்குத் தீர்வு நீர் ஆதாரங்களை மக்கள் கைப்பற்றிப் பாதுகாப்பதுதான். தமிழகத்தில் மொத்தம் 2000 டிஎம்சி  மழை பெய்கிறது. நீர் ஆதாரத்தை நாமே பெருக்கிக் கொள்ள முடியும். காவிரியின் 150 கிளை ஆறுகளும் தூர்வாரப்பட வேண்டும். மணல்கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நீர்வழித்தடங்களை மக்களே பாதுகாக்க வேண்டும். கடந்த காலங்களில் மக்களே நீர்நிலைகளைப் பராமரித்து நிர்வகித்து வந்துள்ளனர்.

கர்நாடகத்தில் பெங்களுர் நகரில் 940 ஏரிகள் அழிக்கப்பட்டு ரியல் எஸ்டேட், கார்ப்பரேட்டுகள் ஆக்கிரமித்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டு பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. மழைகுறைவு, திடீர் மழை வள்ளம் என்று பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. தமிழகத்திலும் இதே நிலைதான். மதுரை சுளு மங்களம் ஏரி 38கி.மீ தொலைவைக் கொண்டது.  ஏரிகளுக்காக சண்டமாருதம் செய்யும் நீதிமன்றத்தின் மதுரை நீதிமன்றம் ஏரியில்தான் கட்டப்பட்டுள்ளது.

நதிநீர் சிக்கலில் தமிழகத்தைப் பொருத்தவரை விசேஷ சூழ்நிலை ஒன்று உள்ளது. மத்திய அரசும், வடமாநிலத்தவர்களும்,  பார்ப்பனஎதிர்ப்பு,  தமிழ்மொழிப்பற்று,  இந்தி சமஸ்கிருத திணிப்புக்கு எதிர்ப்பு ஆகியவற்றை தேசிய எதிர்ப்பு தீவிரவாதமாகக் கருதுகிறார்கள்.  பிற்போக்குத்தனத்திற்கு எதிரான நமது சிந்தனை மரபை தடையாகக் கருதுகிறார்கள்.  வழக்கறிஞர்களின் போராட்டத்திலும் இது வெளிப்பட்டது. மோடி அரசும் மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், உமாபாரதி ஆகியோரும் ஒரு தலைபட்சமாக கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி திட்டமிட்டு கலவரத்தை தூண்டுகிறது.

விரிந்த பார்வையும் ஒன்றுபட்ட போராட்டமும் இன்றைய தேவையாக உள்ளது. அதை நோக்கிச் செல்ல இக்கருத்தரங்கம் உதவும் என்று நம்புகிறேன்” என்றார். தஞ்சையில் பங்கேற்பாளர்கள் மத்தியில் ஆக்கப்பூர்வமான விவாதத்தையும், முன்முயற்சியையும் உருவாக்க இக்கருத்தரங்கம் உதவும் என்பது மிகையல்ல.

– வினவு செய்தியாளர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க