privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்முசுலீமைக் கொன்றால் 25 இலட்ச ரூபாய் பணம் கிடைக்கும் !

முசுலீமைக் கொன்றால் 25 இலட்ச ரூபாய் பணம் கிடைக்கும் !

-

ரு முசுலீமைக் கொன்றால் தேசபக்தர் பட்டமும் கூடவே சில பல இலட்ச பரிசுப் பணமும் கொடுக்கிறது இந்திய நாடு. மாட்டுக்கறி வைத்திருந்ததாக கிளப்பப்பட்ட புரளியினால் ஓராண்டிற்கு முன்பு உத்திரப்பிரதேசத்தின் தாத்ரியைச் சேர்ந்த முகம்மது அக்லக் இந்துத்துவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

அக்லக்கின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டது ஆட்டிறைச்சி தான் என்று உத்திரப்பிரதேச கால்நடைத்துறையின் விரிவான முதல்கட்ட ஆய்வு கூறியிருக்கிறது. பிறகு இரண்டாம் கட்டவேதியியல் பகுப்பாய்வின்படி அது மாட்டிறைச்சி தான் என்று சடுதியில் முடித்துக் கொண்டது. அந்த ஆய்வறிக்கையும் கடைசிவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அக்லக்கின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஒருவேளை அது மாட்டிறைச்சி என்பதாகவே வைத்துக் கொண்டால் கொலை தண்டனை சரிதானே என்கிறார்கள் பார்ப்பன இந்துமதவெறியர்கள். ஆம் என்று அங்கீகரிக்கின்றன அரசாங்க அமைப்புக்கள்.

mohammad-akhlaq
மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி படுகொலை செய்யப்பட்ட அக்லாக்

அக்லக் தான் மாட்டுக்கன்றை கொன்றார் என்பதற்கும் அவரது வீட்டில் தான் மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டது என்பதற்கும் சான்று எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறது காவல்துறை. அப்படி சான்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொன்றவர்களை கொலைகாரர்கள் என்று தண்டிப்பதற்கு இங்கே இடமில்லை.

உ.பி தேர்தல் மற்றும் பார்ப்பன இந்து பரிவார வானரங்களை திருப்தி படுத்த, 2016 – ஜூலை மாதத்தில் அக்லக்கின் குடும்பத்தின் மீது பசுவதை தடைச்சட்டம் பாய்ந்தது. இறந்து போன அக்லக்கும் அதில் சேர்க்கப்பட்டிருக்கிறார். கொலையாளிகளின் மீதான வழக்கை திரும்பப் பெற்றால் மட்டுமே உங்கள் மீதான வழக்கை திரும்பப் பெறுவோம் என்று அக்லக் குடும்பத்தினை இந்துத்துவ கும்பல்கள் அச்சுறுத்தியிருக்கின்றன.

இடையில் முசுலீம்களால் அச்சுறுத்தப்பட்ட ஷாமிலி மாவட்டம், கைரானா நகரத்தைச் சேர்ந்த 300 இந்து குடும்பத்தினர் அந்த நகரத்திலிருந்து வெளியேறி விட்டதாக குற்றஞ்சாட்டினார் பா.ஜ.க எம்.பியான ஹுக்கும் சிங். ஆனால் வேலையின்மையால் தான் அவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறியதாக காவல்துறை கூறுகிறது. அக்லக் கொலைக்கு பிறகு இத்தகைய ‘கற்பனை’யான இந்துக்கள் மீதான தாக்குதல் வந்த வண்ணமே இருக்கிறது. இதன் துவக்கம் என்று முசாபர் நகரத்தில் இந்து மதவெறியர்கள் நடத்திய கலவரத்தை கூறலாம். அதில்தான் ஆயிரக்கணக்கான முசுலீம் மக்கள் தமது வாழ்விடங்களை இழந்திருக்கிறார்கள்.

உத்திரப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் 2017 சட்டமன்ற தேர்தலை ஒட்டி இத்தகைய திரைக்கதைகளை அமலாக்கி அதிகாரத்தை கைப்பிடிப்பது என்று கொலை வெறியாக இருக்கின்றன ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்.

அக்லக்கை படுகொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டிருந்த கொலையாளிகளில் ஒருவரான ரவி சிசோடியா மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 2016, அக்டோபர் 4 ஆம் தேதியன்று உயிரிழந்தார். அவனைச் சிறைக்காவலர் ஒருவர் கொன்றுவிட்டதாகவும் அவரை பணிநீக்கம் செய்யவும், தண்டிக்கப்பட  வேண்டுமென்றும் அவரது உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டிருந்தனர்.

சிசோடியாவின் குடும்பத்திற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாயும், குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையும் வழங்கப்படும் வரை அவரது பிணத்திற்கு இறுதிச்சடங்கு செய்யப்போவதில்லை என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தனர் அவனது உறவினர்கள்.

அதுமட்டுமல்லாமல் பசுவதை தடைச்சட்டத்தில் அக்லக்கின் சகோதரர் ஜான் முகமதுவையும் கைது செய்யக் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் அறிவித்திருந்தனர். இதற்கு சிவசேனா, கௌ ரக்க்ஷா தள், பஜ்ரங் தள், இந்து மகா சபா உள்ளிட்ட அனைத்து இந்துத்துவா கும்பல்களும் துணை நிற்பதாக, உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட பெண் சாமியாரான சாத்வி ஹர்சிதி கிரி உசுப்பி விட்டார்.

அக்லக் குடும்பத்தினர் தான் பசுவின் கன்றைக் கொன்றார்கள் என்பதற்கான தடயச்சான்றுஎதுவுமில்லை என்ற காவல்துறையின் அதே வாய்தான் ஜான் முகமது மீதான குற்றச்சாட்டைவிசாரிக்க 11 பேர் கொண்ட குழுவை அமைக்க போவதாகக் கூறியிருக்கிறது.

முசாபர் நகரில் முசுலீம்களுக்கெதிராக வன்முறையை முன்னின்று நடத்திய கயவர்களில் ஒருவரானபா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம்-மும் தடையுத்தரவை மீறி அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அக்கூட்டத்தில் கலந்துகொண்ட விசுவ ஹிந்து பரிசத் ரவுடிக்கும்பலின் தலைவரான சாத்வி பிராச்சி, முசாபர் நகர் கலவரத்தில் முசுலீம்களுக்கு எதிராக ஜாட் சாதியினரைத் திருப்பிவிட்டதில் முக்கியமானசூத்திரதாரி. சுற்றிலும் காவல்துறை இருந்தபோதிலும், சிசோடியாவின் மரணத்திற்குப் பலி வாங்கப்போவதாக அங்கே கூடியிருந்த ஓநாய்கள் ஊளையிட்டிருக்கின்றன.

Sisodia body
சிக்கன்குனியாவால் செத்த சிசோடியா மீது தேசிய கொடி போர்த்தி நாயகனாக்கும் இந்துமதவெறி கும்பல்

சிக்கன்குனியாவால் மாண்டுபோன சிசோடியாவின் பிணத்தின் மீது இந்தியக்கொடியை போர்த்தி அவரை நாட்டிற்காக உயிர் துறந்த தியாகியைப் போல சித்தரித்தனர் இந்துத்துவ கும்பல்கள். இந்த கேலிக்கூத்துக்களை வைத்து தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதாக நீதிமன்றம் தானே முன்வந்து விசாரிக்கவில்லை.

பெல்லட் குண்டுகளால் காஷ்மீர் மக்களைத் துளைக்கும் ஒரு இந்திய இராணுவ வீரனுக்கு அளிக்கப்படும் மரியாதையை தாத்ரி கொலைகாரர்களுக்கும் கொடுக்கிறார்கள்.

சிசோடியாவின் குடும்பத்திற்கு 25 இலட்சம் இழப்பீடு வழங்கப்படுமென்றும், அவரது மரணத்தை சி.பி.ஐயைக் கொண்டு விசாரிக்க ஆவண  செய்வதாகவும் உத்திரப்பிரதேச அரசு உறுதியளித்த பிறகே இறுதிச்சடங்கு நடைபெற்றது. கொலை செய்யப்பட்ட அக்லக் குடும்பத்தின் மீது வழக்கு மற்றும் விசாரணை. கொலை செய்தவனுக்கு இழப்பீடு மற்றும் தேசபக்தன் என்ற பட்டம். இதுதான்பார்ப்பனியத்தின் நீதி.

சிசோடியாவுக்கு இழப்பும் தியாகி பட்டமும் அளித்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம்தான் அக்லக்கின் குடும்பத்திற்கு உத்திரப்பிரதேச அரசு அளித்த இழப்பீட்டை திரும்ப பெறச் சொல்லி ஊளையிட்டது.

முசாபர் நகர் கலவரத்தின் வரலாறு சிசோடியாவின் மரணத்தின் மூலம் மீண்டுமொருமுறை திரும்பவிருப்பதை உணர்ந்து கொண்ட முசுலீம் மக்கள் தற்போது தாத்ரியை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கொலைகாரனுக்கு இப்படி ஒரு பாராட்டும், வாழ்வும் கிடைக்குமென்றால் அந்த நாட்டை ஜனநாயக நாடு என்றல்ல, பிணநாயக நாடு என்றே அழைக்க வேண்டும்.

இறுநூறு இசுலாமியரைக் கொன்றால் முதலமைச்சராகலாம்; இரண்டாயிரம் இசுலாமியரைக் கொன்றால் பிரதமரே ஆகலாம் எனும் போது ஒரேயொரு முசுலீமைக் கொன்றவன் ஒரு தேச பக்தன் ஆவதில் என்ன தவறு?

–    சுந்தரம்.