privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாஉங்கள் ஜனநாயகவாதிகளை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள் !

உங்கள் ஜனநாயகவாதிகளை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள் !

-

ங்களது தாராளவாதிகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதானம் அடையலாம்.

பாகிஸ்தானிய கலைஞர்களுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளார் சல்மான் கான். கலை என்பது பயங்கரவாதமில்லை என்றும், பயங்கரவாதமும் கலையும் மாறுபட்டது என்றும் இவற்றைக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

சல்மானின் கூற்று சிவ சேனையைக் கொதிப்படைய வைத்துள்ளது. ஆனால், சிவசேனை கொதிப்படையாத ஒரு விசயம் என்று ஏதாவது உள்ளதா என்ன? இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் விளையாடினால் அவர்களுக்கு  ஆத்திரம் வரும். தூதரக அதிகாரிகளின் மேல் ஆத்திரம் வரும். புத்தகங்களின் மேல் ஆத்திரம் வரும். ஈத் பண்டிகையின் மேல் ஆத்திரம் வரும். வெள்ளிக்கிழமைகள் ஏன் சனிக்கிழமைகளாகவோ ஞாயிற்றுக் கிழமைகளாகவோ இல்லை என்று ஆத்திரப்படுவார்கள்.

சிவசேனையின் உறுப்பினர்கள் பலருக்கு உயர் இரத்த அழுத்த நோயின் பாதிப்பு இருக்க வேண்டும். சல்மான்கானுக்கு பாகிஸ்தான் பிடித்திருந்தால் அவர் அங்கேயே போய் விடலாமே என அவர்கள் தெரிவித்துள்ளனர். சொல்லப் போனால், ‘பஞ்ரங்கி பாய்ஜான்’ படத்தில் அதைத் தான் செய்தார். ஆனால், உயர்ந்த லட்சியங்களைத் தேடிக் கிளம்பும் நம்மில் பலருக்கும் நடப்பதைப் போல் மல்யுத்த வீரரின் மகளுடைய காதல் அவரைத் திரும்ப அழைத்து விட்டது.

ஒருவேளை சல்மான் கான் பாகிஸ்தானுக்கே வந்து விட்டால் என்ன ஆகும்? எங்கள் நாட்டின் நாடகத்தனமான சீரியலில் சல்மான் கானை கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை. மூன்று பிள்ளைகளின் தகப்பன் ஒருவன் தனது மனைவியிடம் பிள்ளைகளின் பள்ளிக் கட்டணம் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போதே சட்டையைக் கிழித்து மழித்த மார்பைக் காட்டினால் கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருக்கும்.

சில நாட்களுக்கு முன் இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைவதைப் பற்றி பேசிய ஆமீர்கான் குறித்தும் இதே போன்ற கருத்தை சிவசேனை வெளியிட்டது. அவரைக் கன்னத்தில் அறைகிறவருக்கு பரிசுத் தொகை கூட அறிவிக்கப்பட்டிருந்தது. பி.கே (Pk) திரைப்படத்திற்கான எதிர்வினையாக அது இருக்குமோ என்று கூட நான் ஆச்சரியப்பட்டேன். சிவப்புத் தொப்பியும் நீல மேலங்கியும் போட்டுக் கொண்டு ஆடிப் பாடிய படியே ஆமீரும் சல்மானும் ஒரே பேருந்தில் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படுவதை நினைத்தாலே சிறப்பாக இருக்கிறது.

ஊரி தாக்குதலால் இந்தியா கடுமையாக வேதனை அடைந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதன் காரணமாக எழும் ஆவேசங்கள் தவறான திசையில் இருக்கின்றன. உங்களது தீவிரவாத இயக்கங்களில் ஒன்று நவாஸ் செரீபின் தலைக்கு ஒரு கோடி ரூபாய் அறிவித்துள்ளது. இங்குள்ள வெகுமதி வேட்டையர்கள் பலருக்கு அது நாவில் எச்சிலூற வைத்திருக்கும். ஆனால், எப்போதும் லண்டனில் அடைந்து கிடக்கும் நவாசை நெருங்குவது அத்தனை சுலபமில்லை.

arnab go sami
அர்னாப் கோஸ்வாமி

அர்னாப் கோஸ்வாமியை விட வேறு யாரும் கடுமையான வேதனை அடைந்திருக்க மாட்டார்கள் எனத் தெரிகிறது. சென்ற வாரம் பாகிஸ்தானின் பெயரை அவர் கடித்துத் துப்பிக் கொண்டிருக்கும் காணொளித் துண்டு ஒன்றைக் கண்டேன். அந்தக் காணொளியின் பிற்பகுதியில் ஹபீஸ் சயீதின் பெயரைச் சொல்லும் போது அவரது இரத்த நாளங்கள் தெறித்தே விட்டன. அனேகமாக அதற்கடுத்து அவர் கலந்து கொண்ட விவாத நிகழ்ச்சியை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தான் நடத்தியிருக்க வேண்டும். அவர் தூக்கத்தில் கூட கூச்சலிடுவாரோ என்று சில நேரம் நான் வியந்திருக்கிறேன்.

அவரும் பலரை பாகிஸ்தானுக்கு ஓடுமாறு சொல்லியிருக்கிறார்; அதில் சிலர் ஏற்கனவே இங்கே தான் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மோடியின் அரசு அமைந்த பிறகு இது பிரபலமான கூற்றாகி விட்டது. மாட்டுக்கறி தின்பவர்கள், பாகிஸ்தானுக்குப் போகலாம். காங்கிரசுக்கு ஓட்டுப் போகிறவர்கள், பாகிஸ்தானுக்குப் போகலாம். இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைவதாக கருதுகிறவர்கள் பாகிஸ்தானுக்குப் போகலாம்.

இந்தியா தான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. ஏனென்றால், அடுத்தவர்கள் அங்கே வாழ்வதா இல்லை வெளியேறுவதா என்பதைக் கூட மக்கள் தான் ஓட்டுப் போட்டுத் தெரிவு செய்கிறார்கள்.

ஆம் இந்தியாவே, எமது கலைஞர்களை வெளியேற்றி விடுங்கள். ஃப்வாத் கான் சென்றதிலிருந்து எங்களது ஒவ்வொரு திரைப்படத்திலும் ஹுமாயுன் சயீதிடம் மாட்டித் தவிக்கிறோம் நாங்கள். ஹுமாயுனைக் காணும் எங்கள் குழந்தைகளின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். தயவு செய்து எங்கள் நடிகர்களை திரும்ப அனுப்பி விடுங்கள்.

நீங்கள் திலீப் குமாரைத் திருப்பி அனுப்புவதில் இருந்து துவங்கலாம். அம்ரீஷ் பூரியின் சாம்பலையும், தேவ் ஆனந்தின் தலைக்கேசத்தின் வினோத வடிவம் கொண்ட அவரது தொப்பியையும் அனுப்பலாம். அதற்குப் பின் அலி ஜாபர், மஹிரா கான் மற்றும் பிறரையும் கூட அனுப்பி விடுங்கள்.

அட்னான் சாமியை வைத்துக் கொள்ளுங்கள். இந்தியா அவரைக் கருணையோடு நடத்துகிறது. தற்போது அவர் ட்விட்டரில் தெரிவிக்கும் கருத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டு வருகிறது. உங்கள் நாட்டில் குடியேற்ற நடைமுறைகளில் கொழுப்பு உறிஞ்சும் சிகிச்சையும் அங்கமா என்ன?

எப்படிப் பார்த்தாலும் ராஹட் ஃபதே அலிகானின் திறமையை நீங்கள் வீணடித்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள். ஹூமா குரேஷி அவருக்கு வாயசைப்பதைப் பார்த்தால் நம்பவே இயலவில்லை. ஹூமாவும் இங்கே தான் வந்தாக வேண்டும் என்று நினைக்கிறேன் – ஏனெனில் அவரும் முசுலீம் தானே. அருந்ததி ராயையும் அனுப்பி வையுங்கள் – உங்களை விட எங்களுக்கே அவரை மிகவும் பிடித்துள்ளது. நீங்கள் அவரை மதிப்பதில்லை. ஒரு பெண் எழுதுவதா? இதை விட சந்தேகத்திற்குரியது ஒரு வாசிக்கும் ஆணாகத்தான் இருக்க முடியும்.

அப்புறம் பாருங்கள், நாங்களும் நீங்கள் செய்வதையே இங்கே செய்து விடுகிறோம். பாகிஸ்தானைப் பற்றி நல்லவிதமாகச் சொல்லாதவர்கள், ஏன் இந்த நாட்டை விட்டு வெளியேறக் கூடாது? எங்கள் இராணுவத்தை ஆதரிக்காதவர்கள் ஏன் இந்தியாவுக்குப் போய் விட வேண்டியது தானே? நிறைய பாகிஸ்தானிய தாராளவாதிகளை இந்தியாவுக்குச் செல்லுமாறு சொல்கிறார்கள்.

சொல்லப் போனால், மனித உரிமை செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான அஸ்மா ஜஹாங்கீருக்கு இந்திய இராணுவ பட்ஜெட்டில் தனி ஒதுக்கீடு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறைந்தது 20 சதவீதமாம். அதே போல் இராணுவ விசாரணை மன்றங்களை எதிர்ப்பவர்கள் ரா ஏஜெண்டுகளாம். பாகிஸ்தானின் தாராளவாதிகளை இந்தியா ஏற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும். அதே போல், இந்திய தாராளவாதிகளை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ளலாம்.

இதை ஒரு அரசியல் பரிமாற்ற நிகழ்வாக ஏற்பாடு செய்து விடலாம். எங்களது தாராளவாதிகள் கொலை செய்யப்பட்டு உள்ளனர்; சுடப்பட்டுள்ளனர்;  மிரட்டப்பட்டுள்ளனர்; கிசுகிசுப் பிரச்சாரங்களின் மூலம் வில்லன்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இங்கிருப்பதை விட சிவசேனையிடம் பாதுகாப்பாக இருக்க முடியும்.

உங்களது தாராளவாதிகளும் பாகிஸ்தானை பாதுகாப்பான இடமாக உணர்வார்கள். எல்லையைக் கடந்ததுமே அவர்களுக்கு மாட்டுக்கறி உணவோடு நல்ல வரவேற்பு கிடைக்கும். தெரியுமா, நாங்கள் லாகூரில் எந்நேரமும் மாட்டுக்கறி தான் தின்கிறோம் – அட, தேனீருக்கு நொறுக்குத் தீனியாகக் கூட மாட்டுக்கறி தான். பாகிஸ்தானியர்கள் இரத்தத்தில் யூரிக் ஆசிடின் அளவே மாட்டுக்கறியால் அதிகரித்து இங்கே எல்லோரும் மூட்டு வலியால் அவதிப்படுகிறோம். பலருக்கு கீழ்வாத நோயும் கூட உண்டு. ஆனாலும் எங்களால் மாடு தின்னும் வெறியை அடக்கவே முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

bilawal-bhutto
பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ

ராகுல் காந்தி கூட பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சேர்ந்து உதவாக்கரை ஆவது எப்படி என்பதைப் பற்றி பிலாவல் பூட்டோவுக்குப் பாடமெடுக்கலாம். இந்த துணைக்கண்டத்தின் இரண்டு மூத்த கட்சிகளை ஒழித்துக் கட்டும் முயற்சியில் உள்ள அரண்மனை வாரிசுகள் என்ற முறையில் அவர்களுக்குள் பேசிக் கொள்ள நிறைய விசயங்கள் இருக்கும்.

ஒருவழியாக எங்களது (பாகிஸ்தானிய) தாராளவாதிகள் முக்காடின்றி உங்கள் ஊரில் சீமைச் சரக்கு வாங்க முடியும். என்ன, சமூக உறவுகளை பராமரிக்க சைவர்களாக இருந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. தங்களது புகுந்த நாட்டைப் பற்றி புத்தகம் எழுதலாம், யோகா வகுப்புகளுக்கு யோகா உடை (இறுக்கமாக பிடிக்கும் கால் சட்டை) போட்டுக் கொண்டு போகலாம்.

நமது தாராளவாதிகளை இடம் மாற்றிக் கொண்ட பின் இந்த பிராந்தியத்தில் கொதித்துக் கொண்டிருப்பவர்களிடையே அமைதி திரும்பும் என்று நினைக்கிறேன். அதன் பின் இறுதியில், பொருளற்ற போராட்டங்களில் இருந்து நமது கவனத்தை கும்பல் கொலைகள், பிரிவினை இயக்கங்கள், அணுகுண்டுகள் போன்ற பயனுள்ள அஹிம்சையான விசயங்களை நோக்கித் திருப்பி விடலாம்.

நன்றி: Haseeb Asif , Writer, journalist
மூலக் கட்டுரை – By Exchanging Their Liberals, India And Pakistan Can Make Peace
தமிழாக்கம் : இனியன்

குறிப்பு :

1) கட்டுரையாளர் ஹசீப் அஸீஃப் லாகூரைச் சேர்ந்தவர்.

2) இந்தி திரைப்படங்களில் பணிபுரியும் பாகிஸ்தானிய கலைஞர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று சிவசேனா, அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டவர்கள் நடத்திய வெறிப் பிரச்சாரத்திற்கு பதிலாக இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார் ஹசீப் அஸீஃப்

3) ஹூமாயுன் சயீத் பாகிஸ்தானின், சாம் ஆண்டர்சன் அல்லது பவர்ஸ்டார்!

4) திலீப் குமார், அம்ரிஷ் பூரி பாகிஸ்தானைப் பூர்வீகமாக கொண்டவர்கள்.

5) அட்னன் சாமி : பாகிஸ்தானைப் பூர்வீகமாக கொண்டவர். பாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இந்தியா வந்த பின் மிதமிஞ்சிய உடற்பருமனைக் குறைக்க கொழுப்பு உறிஞ்சும் சிகிச்சையை எடுத்துக் கொண்டவர். ஊரி தாக்குதலை அடுத்து தனது பிழைப்பைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவுக்கு ஆதரவான நிலையெடுத்து பேசி வருகிறார்.

6) இந்தியாவுடன் அமைதியான போக்கைக் கடைபிடிக்க வேண்டும் என பாகிஸ்தானிய தாராளவாதிகள் கோருகின்றனர். இவர்களை அரசியல் ரீதியில் எதிர் கொள்ள முடியாத பாகிஸ்தானிய கடுங்கோட்பாட்டுவாதிகள் மற்றும் போர் வெறியர்கள், இவர்களது மேற்கத்தியபாணியிலான தாராளவாத வாழ்க்கை முறை குறித்து பாகிஸ்தானிய பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

7) பாகிஸ்தானில் யோகா பயிற்சியில் ஈடுபடுவது மற்றும் அதற்காக அணியும் பயிற்சி உடைகள் கேலிக்குரியதாக அங்குள்ள கடுங்கோட்பாட்டுவாதிகளால் சித்தரிக்கப்படுகின்றது.