privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்யாருக்கு மூடு ஜாஸ்தி ? - இந்து ஆன்மீக சொற்பொழிவு !

யாருக்கு மூடு ஜாஸ்தி ? – இந்து ஆன்மீக சொற்பொழிவு !

-

பரிமலை கோயிலுக்குள் 10 வயதிலிருந்து – 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கலாம் என கேரள அரசு 07-11-2016 அன்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருப்பது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகால பார்ப்பனிய அடிமைத்தனத்தில் ஆட்பட்டிருக்கும் பக்த கோடிகள் இதை சுயமரியாதை தன்மானம் தொடர்பான விவகாரமாக பார்க்கவில்லை. கோயிலுக்குள் நுழைந்தால் தெய்வக் குத்தம் ஆகிவிடும் எனும் மக்களை மிரட்டிப் பணிய வைக்கும் பார்ப்பனியத்தின் பொதுபுத்தி மக்களின் இத்தகைய உணர்வு நிலைக்கு பிரதானமான காரணமாக இருக்கிறது.

sun-news-vivatha-medaiஆனால் பொதுசிவில் சட்டம் தொடர்பாக இதுவரை பம்மாத்து காட்டி வந்த இந்துத்துவக் கும்பலோ கோயிலுக்குள் இந்துப் பெண்கள் ஏன் நுழையக்கூடாது என்பதில் புதுக் காரணம் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

07-11-2016 அன்று சன் செய்தி விவாத மேடையில் சாஸ்திர விரோதமா? சம(ய) உரிமையா? எனும் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆன்மீக சொற்பொழிவாளர்கள் என்று சீனிவாச சாஸ்திரிகள், குமரவேல் எனும் இருபார்ப்பனர்கள் வழங்கிய அருளுரை பார்ப்பனியம் பெண்களை எப்படி பார்க்கிறது என்பதை எடுத்துக்காட்டியது.

நெறியாளர் தமிழ்நாட்டில் மேல்மருத்துவர் ஆதிபராசக்தி கோயிலைக் காட்டி, பெண்கள் கருவறைக்குள்ளேயே பூசை செய்கின்றனரே! ஏன் சபரி மலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு சீனிவாச சாஸ்திரிகள் நச்சென்று ஒரு பதிலைச் சொன்னார். சாஸ்திரிகளின் கருத்துப்படி மேல்மருவத்தூர் இந்துதர்மத்தின்படி நடக்கும் கோயில் கிடையாதாம். காஞ்சி சங்கராச்சாரிக்கு இணையில்லை என்றாலும் ஓரளவு ரவுடியாக அம்மா பராசக்தி இருந்தாலும் அவர் ஆகமவிதியின் கீழ் வராத சூத்திரர் என்கிறார் சீனிவாச சாஸ்திரிகள்! ஆகமவிதிப்படி நடக்காத மேல்மருவத்தூர் கோயில் இந்து கோயில் அல்ல; பக்தர்களும் இந்துக்கள் அல்லர் என்பது சாஸ்திரிகளின் நிலைப்பாடு!

மற்றொரு ஆன்மீக சொற்பொழிவாளர் குமரவேல் சபரிமலைக்கு பெண்கள் செல்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்கிறது என்கிறார். ஆண்களின் உடலமைப்பைப் பார்த்து பெண்களுக்கு அவ்வளவு எளிதில் காமம் கிளம்பாதாம். ஆனால் பெண்களின் உடலமைப்பு அப்படிபட்டதல்ல என்கிறார். பார்த்தவுடனேயே ஆண்களுக்கு பற்றிக்கொள்ளுமாம்; மேலும் அவ்வாறு காமம் பற்றிக்கொள்வதை ஆண்களின் உடலைமப்பு காட்டிக்கொடுக்கும் என்கிறார். அதாவது விறைத்துவிடும் என்கிறார். இந்த காரணத்தினால் ஆண்களின் விரதம் தடைபடுகிறது. ஆகையால் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்றார்.

இதை மறுத்து பேசப்புகுந்த சியாமளா என்பவர் ஆண்களுக்கு அத்துணை எளிதில் டெம்ட் (‘அவர் கூறியபடியே’) ஆகிறது என்றால் ஆண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் யோக்கியம் என்ன? என்று மறுகேள்வி கேட்டார். இவ்விதம் சாஸ்திர விரோதமா? சம(ய) உரிமையா? எனும் விவாத நிகழ்ச்சியை ஆன்மீக சொற்பொழிவாளர்கள் யாருக்கு மூடு ஜாஸ்தி? என்பதை நிறுவுவதிலேயே பொழுதைக் கழித்தனர்!

குறிப்பாக ஆண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படும் அளவிற்கு பெண்களின் உடலமைப்பு இருப்பதால் விரதம் தடைபடுகிறது என்று குமரவேல் சொன்ன பொழுது சீனிவாச சாஸ்திரிகள் ஸ்திரிகளுக்குத்தான் காமம் அதிகம் என்று குமரவேலின் கருத்தை மறுத்தார்! மேலும் இது கலியுகம் என்பதால் காமம் மிகுதியாக இருக்கும்; வேறு யுகத்தில் கூட பெண்களை கோயிலுக்குள் அனுமதிப்பதைப் பற்றி பேசலாம்; ஆனால் கலியுகத்தில் கூடவே கூடாது என்றார்!

கிட்டத்தட்ட இதையேதான் முசுலீம் மதவாதிகளும் கூறுகின்றனர். பெண்கள் புர்கா போடவேண்டியதின் காரணமே ஆண்களின் காமப் பார்வையிலிருந்து தப்புவதோடு, ஆண்களை அவ்விதம் உணர்ச்சிவசப்படாமல் காப்பாற்றும் பொருட்டே என்கின்றனர். அய்யா ஜைனுலாபுதீனிடம் இது குறித்து கேட்டால் அவர் சாஸ்திரிகளின் பேச்சையே குர் ஆன் சொல்லும் உண்மை என  வலியுறுத்துவார். பெண்ணினத்திற்கு எதிராக கடவுளோடு இவர்கள் வைத்த கூட்டணியில் மதபேதம் கிடையாது.

விவாதத்தில் பங்கேற்ற ஸ்ருதி சுரஷ் என்ற மாணவி இந்த அயோக்கியர்களின் விவாதத்தைக் கேட்டுவிட்டு பதில் சொல்ல முடியாமல் ‘தவறாக பேசுகின்றனர்’ என்று வெட்கினார்.

சியாமளா எந்த வேத சாஸ்திரம் சபரி மலைக்குள் பெண்கள் செல்வதைத் தடுக்கிறது? என்பதற்கு ஆதாரம் கேட்டார். சீனிவாச சாஸ்திரிகளும், குமரவேலும் சாஸ்திரத்திற்கு ஆதாரம் கேட்டவுடன் சாஸ்திரம் அல்ல; ஐதீகம் காரணமாக போகக் கூடாது என்று அந்தர்பல்டி அடித்தனர். சீனிவாச சாஸ்திரிகள், ஐயப்பனின் பதினெட்டு படிகளும் புருஷ லட்சணத்திற்கு உரியது என்று அடுத்த பொய்யை அவிழ்த்துவிட்டார். இதன் படி ஒவ்வொரு படியும் ஒவ்வொரு புராணங்களைக் குறிப்பதாகவும் பதினெட்டு புரணாங்களின் குறியீடாக பதினெட்டு படிகள் இருப்பதாகவும் புருஷ இலட்சணம் படி ஆண்கள் தான் செல்ல வேண்டுமென அடித்துவிட்டார்! புருஷ இலட்சண இலக்கணத்தின்படி பெண் கணவனுக்கு பத்தினியாக பதிவிரதையாக இருப்பது அவசியம் என்றார்.

ready-to-wait
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது கூடாது என்பதை பெண்களே ஏற்கிறார்கள் என்று காட்டுவதற்கு “Ready to wait” என்ற ஹேஷ்டெக்குடன் இந்துமதவெறியர்கள் செய்யும் பிரச்சாரம்!

இங்கு மறுக்கப் புகுந்த சியாமளா, ‘பத்தினி ஒழுக்கம் பெண் படி தாண்டக் கூடாது என்று சொல்கிறது; இன்றைக்கு எந்த பெண் படிதாண்டாமல் இருக்கிறார்? வேலைக்கு பெண்கள் செல்லாமல் குடும்பத்தை நடத்த முடிவதில்லை’ என்று கூறினார். இவ்வளவிற்குப் பிறகும் பத்தினி விரதம் முக்கியம் என்று சாஸ்திரி உடும்பு பிடியாக நின்றார்.

சாஸ்திரியின் பதிலைப் பார்த்தபிறகுதான் வேலைக்குச் செல்லும் பெண்கள் மோசமானவர்கள் என்று காஞ்சி பெரியவா ஏன் சொல்கிறார் என்று புரிந்தது! படி தாண்டி பத்தினி விரதத்தை மீறுபவர்களை ஒழுக்கம் கெட்டவர்கள் என்று இந்துதர்மமே சொல்வதை காஞ்சிப் பெரியவா முதல் சீனிவாச சாஸ்திரிகள் வரை வலியுறுத்துவதை தெரிந்து கொள்ள முடிந்தது!

மேலும் விவாதத்தில் சீனிவாச சாஸ்திரிகள் கணவனை வணங்கி காலில் விழுந்தால் அது ஐயப்பனையே வணங்கியதற்கு சமம் என்று ஒரு பெண் கணவனைச் சார்ந்திருக்க வேண்டும் என்று கூறினார். தடாலடியாக இந்துமதத்தில் ஒரு பெண்ணுக்கு பாவமும் கிடையாது; புண்ணியமும் கிடையாது என்று மனு ஸ்மிருதியை எடுத்துக்காட்டி பெண்கள் சபரிமலைக்குப் போனாலும் புண்ணியம் ஏதும் கிடைக்காது; ஆகையால் சபரிமலைக்கு பெண்கள் போவதில் பிரயோசனம் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்!

இங்கு சியாமளா என்பவர் ஆண்கள் ஒரு நாள் மட்டுமே விரதம் இருந்து மாலையணிந்து போகிறார்களே அவர்களுக்கு மட்டும் புண்ணியம் கிடைக்குமா என்று கேட்டார். அதற்கு சாஸ்திரிகள் ‘இதென்ன பிரமாதம்? தைமாதம் போனால் சபரிமலையில் மலக்குவியல்களாக இருப்பதால் பெரும்பாலான பக்தர்கள் விரத மண்டலத்தை ஒருமாதம் முன்கூட்டியே சிப்ட் செய்துபோகின்றனர்’ என்று ஆண்களுக்கான அட்ஜெஸ்ட்மெண்ட் சரிதான் என்று பேசினார்.

சாஸ்திரியின் இந்தக் கருத்துக்கு ஆமோதித்தால் இந்துத்துவக் குட்டு உடைந்துவிடும் என்று நினைத்த குமரவேல் இதை மறுத்து சபரிமலையில் மந்திரம் ஓதி தகடுபொருத்தி சக்தி வரவழைக்கப்படுகிறது. இதை மீறி விரதத்தை முன்தள்ளுவது அல்லது முறையாக செய்யாமல் இருந்தால் தகடின் பாசிட்டிவ் பவர் ஆண்களுக்கு கிடைக்காது என்றும் விரதத்தில் குறைவைக்கும் ஆண்களுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்று சியாமளாவை மிரட்டி சமாதானப்படுத்தினார்!

மேலும் பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்ல அனுமதிக்கப்படுவதில்லை ஏன் தெரியுமா என்று குமரவேல் கேட்டார். காயத்ரி மந்திரத்தின் வீரியத்தை பெண்களால் தாக்குப்பிடிக்கும் அளவிற்கு பெண்களுக்கு வலுவில்லை என்பதால் மந்திரம் சொல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்றார்! (ஆனால் மனுஸ்மிருதியில் மனு, பெண்கள் அனைவரும் சூத்திரர்களாகவே கருதப்பட வேண்டும் என்பதால் மந்திரங்களும் வேதங்களும் பெண்களிடம் இருந்து விலக்கப்பட வேண்டும் என்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது).

மக்கள் தெய்வக் குத்தம் வந்துவிடுமோ என்று சபரிமலைக்குச் செல்ல பயப்படும் பொழுது, சாஸ்திரியும் குமரவேலும்

  • பெண்கள் அடிப்படையிலேயே இழிவானவர்கள்,
  • காமம் மிகுந்தவர்கள்,
  • பத்தினி விரதம் இருக்க வேண்டும்,
  • பெண்ணுக்கு பாவம் புண்ணியம் கிடையாது,
  • மந்திரங்கள், வேதம் ஓத அனுமதியில்லை

என்று காரணம் சொல்கிறார்கள். இந்த இந்துதர்மத்தின் படி பெண்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்கிறார்கள். இதுதான் காரணம் என்பது மக்களுக்குத் தெரியாது. அப்படி மக்களுக்குத் தெரிந்தால் தன்னை இழிவுபடுத்தும் பார்ப்பனிய இந்து மதத்திற்கு கண்டிப்பாக செருப்படி நிச்சயம் என்பது இவர்களின் வாக்குமூலத்திலிருந்து புரிந்தது!

– தமிழ்வேல்