ரசியப் புரட்சி எங்கள் புரட்சி – சென்னையில் மக்கள் விழா !

0
  • மாமேதை மார்க்ஸ் பிறந்த நாள் 200 – ஆம் ஆண்டு
  • ரசியப் புரட்சியின் 100 – ஆம் ஆண்டு
  • முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யூனிசமே!!

பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் பேராசான் காரல் மார்க்ஸின் 200-ம் ஆண்டு பிறந்த நாளையும், உலகெங்கும் உள்ள கோடானுக் கோடி உழைக்கும் வர்க்கத்தின் விடிவெள்ளியான ரசியப் புரட்சியின் 100-ம் ஆண்டு விழாவினை, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னை – சேத்துப்பட்டு பகுதியிலும்,  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டத்தின் சார்பில் கும்முடிப்பூண்டி பகுதியிலும் மற்றும் திருவள்ளூர் (மேற்கு) மாவட்டத்தின் சார்பாக பட்டாபிராம் பகுதியிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் வேலூர் – மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஐயங்கார் குளத்திலும் நிகழ்ச்சிகள் நடத்தினர்.

புரட்சியின் சித்தாந்தத்தை உருவாக்கிய மாமேதைக்கும், உழைக்கும் வர்க்கத்தின் அதிகாரத்தை நிலைநாட்டிய நவம்பர் –7-யும் நெஞ்சில் நீங்காத நெகிழவைக்கும் உணர்வை உண்டாக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் தொழிலாளர்களும், பகுதி வாழ் உழைக்கும் மக்களும், ஆதரவாளர்களும் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி.

NDLF East (2)திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டத்தின் சார்பில் கும்முடிப்பூண்டி பகுதியில் உள்ள GR திருமண மண்டபத்தில் நவம்பர் புரட்சி நாள் விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கூட்டத்தை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் விகந்தர் தலைமையில் நடைபெற்றது. தலைமை உரையில், ஆசான் காரல் மார்ஸ் வாழ்க்கையைக் குறித்தும், வரலாறுச் சிறப்புமிக்க அவருடைய ஆய்வும்,  மனிதகுல விடுதலைக்காக அவர் ஆற்றிய பங்களிப்பையும் விளக்கிப் பேசினார்.

சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சியில் பேச்சுப் போட்டி, கவிதை வாசிப்பு, திருக்குறள் ஒப்புவித்தல், பாடல்கள் என நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. SRF தொழிலாளர் கிளையின் தோழர்கள் கௌதமன், ரமேஷ் மற்றும் சதிஷ் ஆகியோர் புரட்சிகர பாடல்களை பாடினர். கவிஞர் திரு.சுரேஷ் ”புரட்சி தேவை” என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். விழாவில் கலந்து கொண்ட கடலூர் மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர்  “பகுத்தறிவுக்கு ஒவ்வாத மோடி அரசின் நடவடிக்கையை அம்பலப்படுத்தியும், அறிவுப்பூர்வமான சமூக அமைப்பை உருவாக்க வேண்டுமென” நிகழ்ச்சியை ஆதரித்து பேசினார். 06.11.16 தேதியில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர். சுப.தங்கராசு பரிசளித்தார்.

சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு-வின் மாவட்ட பொருளாளர் தோழர் செல்வகுமார், மாமேதை காரல் மார்க்ஸ் வகுத்தளித்த கம்யூனிச தத்துவத்தின் மகத்துவத்தையும், அதனை நடைமுறைப்படுத்திய ரஷ்ய சோசலிசப் புரட்சி மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தைப் பற்றியும், தற்போது நமது நாட்டில் நிலவும் பிரச்சனைகளை ஒப்பிட்டு புரட்சிக்கான தேவையை பற்றி விளக்கிப் பேசினார்.

200-க்கும் மேற்ப்பட்ட தொழிலாளிகள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்ட இந்த விழா, தொழிலாளிகளிடமும், அவர்கள் குடும்பத்தினரிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. விழாவில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. பு.ஜ.தொ.மு மாவட்ட இணைச் செயலாளர் தோழர். கோபாலக்கிருஷ்ணன் நன்றியுரையாற்றினார். இறுதியாக பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

(படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்)

திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம், பட்டாபிராம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் நவம்பர் புரட்சி நாள் விழா பட்டாபிராம் பகுதியில் KCS திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவினை திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை மாவட்ட செயலாளர் தோழர்.முகிலன் நடத்தினார். பாடல், கவிதை வாசிப்பு, மாறுவேடம், பேச்சுப் போட்டி ஆகியவைகளை குழந்தைகள் அற்புதமாக மழலை மொழியில் பேசி அசத்தினர். இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட குழந்தைகள் அனைவருக்கும் மாநிலப் பொருளாளர் தோழர்.விஜயகுமார் பரிசளித்தார். உள்ளூர் பகுதி மக்கள் மற்றும் தொழிலாளர்கள் குடும்பத்தினர் உட்பட  600 பேர் வரை கலந்துக் கொண்டனர்.

NDLF West (7)கிளை சங்கத் தொழிலாளர்கள் இராஜேஷ் மற்றும் இராஜா ஆகியோர் அவர்களே எழுதி இசையமைத்த மூன்று பாடல்களை பாடினர், பகுதி தோழர் நிலாஃபர் மற்றும் சாய்மிர்ரா கிளை பொருளாளர் தோழர்.மோகன் கவிதை வாசித்தனர். டிஐ மெட்டல் தொழிலாளர் கிளையின் சார்பில் கிரிமினல் இராமனின் இரட்டை கொலை வழக்கு குறித்த நாடகம் நடத்தப்பட்டது. தொழிலாளர்கள் பங்களிப்புடன் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிகள் அனைவர் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட எழுத்தாளர் மருதன், ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியர் திருமதி.தனபாக்கியம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட  தொழிலாளர்களுக்கு பரிசளித்து உற்சாகப்படுத்தினர்.

சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு மாநிலப் பொருளாளர் தோழர்.விஜயகுமார், எல்லா தத்துவங்களும் பிற்போக்குத்தனத்தையும், மக்களை அடிமைப்படுத்தவும் மட்டுமே செய்தன, மார்க்ஸிய தத்துவம் மட்டுமே உழைக்கும் மக்கள் விடுதலைக்கு வழிகாட்டியாக இருந்தது, அவர்காட்டிய ஒளியில் தோழர்.லெனின் தலைமையில் ரசியப் புரட்சியை நடத்தி மண்ணுலக சொர்க்கத்தை படைத்துக் காட்டினர். இன்றைய சூழலில் தொழிலாளி வர்க்கம் தன் முன் உள்ள தடைகளை தகர்க்க வர்க்கமாக அணி திரண்டு, மார்க்ஸிய – லெனினிய தத்துவத்தை வரித்துக் கொண்டு,  நம் நாட்டு நிலைமைகளுக்கு ஏற்ப புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்திட இந்நாளில் உறுதியேற்க வேண்டும் என கூறினார்.

மாவட்ட இணைச் செயலாளர் தோழர்.லட்சுமணன் நன்றியுரையாற்றினார். தோழர் யூஜின் பாட்டியரின் 200- வது பிறந்த நாளை போற்றும் வகையில் அவர் எழுதிய பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்தை முழுமையாக பாடப்பட்டது. இறுதியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் உணவருந்தி சென்றனர்.

(படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்)

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஐயங்கார்குளம், நடுத்தெருவில் நவம்பர் புரட்சி நாள் விழா நடத்தப்பட்டது. இவ்விழாவினை காஞ்சிபுரம் மாவட்டத் துணை தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கி உரையாற்றினார். இக்கூட்டத்தில் பகுதி மக்கள் மற்றும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் திரளாக 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளையாட்டுப் போட்டிகளில் சிறுவர்கள், இளைஞர்களை பங்கேற்க வைக்க போட்டி அறிவிப்பு பிரசுரம் தயாரித்து 04.11.2016 அன்று அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் விநியோகித்தும், விளையாட்டுப் போட்டிக்கான அறிவிப்பு பிளக்ஸ் பேனர் இரண்டு இடங்களில் வைக்கப்பட்டது. 06.11.2016 அன்று பகுதியில் உள்ள மைதானத்தில் கபடி, ஓட்டப்பந்தயம், செஸ், ஓவியம் வரைதல், சுலோ சைக்கிள், கோணிப்பை ஓட்டம், கலர்நீர் நிரப்புதல், தவளைத் தாண்டல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் கலந்துக் கொண்டனர்.

நவம்பர் புரட்சி நாள் விழாவில் உள்ளூர் பகுதி மக்களை திரட்டுவதற்காக சிறுவர்களின் சட்டையில் ஆசான்களின் படத்தை பொருத்தியும், பிரசுரத்துடன் சாக்லேட் கொடுத்து வீடுவீடாக சென்று விழாவில் கலந்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

NDLF Kanchi (6)தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் துவங்கிய தெருமுனைக் கூட்டம், குழந்தைகளின் பாடல் நிகழ்ச்சிகள், கவிதை வாசித்தல், கலைக்குழுத் தோழர்களின் புரட்சிகர பாடல்கள் மற்றும் “ஊதாரித் தொழிலாளி, போராளியான கதை” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட நாடகம் ஆகியவை காண்போரை கவரும் வகையில் அமைந்திருந்தது.

பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் சிறப்புரையாற்றினார். பாட்டாளி வர்க்க விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட மாமேதை மார்க்ஸின் பிறந்தநாள் உழைக்கும் மக்களின் திருவிழா என்று வர்ணித்தார். ஓட்டுக் கட்சி தலைவர்கள், நடிகர்களின் பிறந்தநாள்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இவர்கள் மக்களுக்கு செய்த நன்மை என்ன? வழக்கறிஞராக வாழ்க்கையை துவங்கிய மார்க்ஸ் தன் வாழ்க்கையில் பசி, பட்டினி, வறுமை ஆகிய கொடிய துன்பங்களை தாங்கிக் கொண்டு உழைக்கும் வர்க்க விடுதலைக்கான சித்தாந்தத்தை உருவாக்கி தந்துள்ளார். அதனை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டிய அவசியம் குறித்து பேசினார். அதனை தொடர்ந்து ரஷ்யப் புரட்சியின் 100-வது ஆண்டை உயர்த்திப் பிடிப்போம் என்ற தலைப்பில் பு.ஜ.தொ.மு-வின் மாநிலத் தலைவர் தோழர்.முகுந்தன் சிறப்புரையாற்றினார். அழுக்கு சட்டைகளின் தலைமையில் நடைபெற்ற ஆட்சி எவ்வாறு குறுகிய காலத்தில் மக்கள் பிரச்சனைகளை தீர்த்தது என்றும், மண்ணுலக சொர்க்கத்தை படைத்து, மக்கள் தலைமையில் ஆட்சி அதிகாரத்தை நிறுவியது, இதுப் போன்றதொரு புரட்சியை நாம் நமது நாட்டிலும் நடத்தி முடிக்க வேண்டும் என கூறினார்.

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பாடல் மற்றும் கவிதை வாசித்த சிறுவர்களுக்கும் பரிசளித்து ஊக்குவிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் பாட்டாளி வர்க்க கவிஞர் யூஜின் பாட்டியாவின் 200-வது பிறந்த நாளை போற்றும் விதமாக அவர் எழுதிய பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதம் முழுமையாக பாடப்பட்டது. கூட்டத்தில் கலந்துக் கொண்ட பகுதி மக்கள் உட்பட அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. இவ்விழா அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

(படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்)

சென்னை சேத்துப்பட்டு.

மாலை 5:10 மணிக்கு கூட்டம் தொடங்கப்பட்டது. கூட்டத் தலைமை தோழர் கார்த்திகேயன் (ம.க.இ.க.), மார்க்சின் அவசியம் என்ற தலைப்பில் ம.க.இ.க தோழர் பாரதிதாசன் பேசினார், நவம்பர் புரட்சியின் சாதனைகளை பு.மா.இ.மு தோழர் சாரதி விளக்கி பேசினார்.

அதைத் தொடர்ந்து பெண்கள் விடுதலை முன்னணியின் மாட்டுக்கறியின் மகத்துவம் பாடல்,  நாடகம் போன்றவை மக்களை மேடை அருகே கொண்டு வந்து நிறுத்தியது. பெ.வி.மு நிகழ்த்திய நாடகம் தனியார் கல்வி கொடுமையையும், லாபவெறியையும் எளிமையாக புரியும்படி விளக்கியது. சிறுவர்களின் பாடல் அனைவரையும் கலகலப்பாக்கியது. பு.மா.இ.மு. தோழர்களின் நாடகம் மாணவர்களின் போராட்ட குணத்தையும், கல்விகடன் வாங்கிய குடும்ப நிலைமையும் உணர்த்தி இந்த அவலங்கள் மாற போராட்டம் ஒன்றே தீர்வு என சுட்டிக்காட்டியது. ம.க.இ.க. கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆணாதிக்க திமிரை கேள்வி கேட்கும் “ஏன்னா நான் ஒரு ஆம்பள” பாடல் போன்றவை மக்களின் கவனத்தி ஈர்த்தது.

PALA Chennai nov 7 (11)இவ்வாறு நிகழ்ச்சி பரிசு பொருட்கள் அளிப்பதுடன் நிறைவேறியது. பெ.வி.மு. ம.க.இ.க. தோழர்கள் விளையாட்டு போட்டி, பேச்சு போட்டி, ஓவியப் போட்டி போன்றவற்றில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். தெருமுனை கூட்டத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு பகுதியில் உள்ள உழைக்கும் மக்களையும், ஜனநாயக சக்திகளையும் இந்நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தோம் அதனடிப்படையில் திரளாக வந்து கலந்துக் கொண்டனர். கூட்டம் இறுதியாக 9 மணிக்கு முடிந்தது. இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள். மேடையின் இருபுறங்களிலும், பகுதி உழைக்கும் மக்கள் நின்று கூட்டத்தை கவனித்தார்கள். பாட்டளி வர்க்க சர்வ தேசியகீதம் இயற்றிய யூஜியன் பர்டியரை பற்றி அறிமுகம் செய்யப்பட்டு இறுதியாக பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.

(படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்)

தகவல் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
9551869588, 9445112675, 8807532859, 9841658457

சந்தா செலுத்துங்கள்

அச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா? ஆதரியுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க